தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


கண்வழி நுழைந்தாய்..
உறுத்தல் அதிகம்தான்..
கண்ணீராய் வெளியேறினாய்..

******************************************************

முதுகில் இருக்கும் ஓடு
அவ்வப்போது ஒளிந்துகொள்ள..
சுமையாய் இருந்தாலும்
சுமைகள் ஏறாமலிருக்க ..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உலாவிகளில் உலாவி
நான் உன்னிடத்திலும்
நீ என்னிடத்திலும்..
யதாஸ்தானம் அடைந்தபின்
விரும்பிய விருப்பங்களில்
தெரிந்தது தேடியலைந்தது..

****************************************************

குடும்ப ஓடுகளை உடைத்து
வெளிவந்தேன்
நட்பு ஓடுகளை சுமக்க அல்ல..

****************************************************

மலை இருட்டில் உதைத்து
பாதாளத்தில் விழுந்தேன்
நல்ல வேளை .. கனவு..
தாய்வயிற்றுக்குள்.
மீண்டெழுந்தேன்..

***********************************************

இலைச் சிறகுகளை
அசைத்துப் பறக்கிறது
மரம்..

**********************************************

முட்களும்., கொம்புகளும்
கவசத்தை தேர்ந்தெடுக்கின்றன
ஒளியப் பிடித்தபடி பின்னே நான்..

*********************************************

குத்தினாய்..
கிளறினாய்..
தோண்டினாய்..

காய்ந்து போய்
எண்ண விதைகளால்
என்னை மூடினேன்..

மழையும்
வெய்யிலும்
தங்களைத் தெளித்துப் போக

வேர்பிடித்து விளைந்து
வெடித்திருக்கும் என்னை
இனிய கனி என்கிறாய்..

***************************************************

விரைவில் சந்திப்போம்
என்று கூறி
விடை பெற்றுக் கொண்டிருப்பாய்..

***********************************************************

பழுத்துக் கொண்டிருந்தாலும்
பயணப்பட்டுக் கொண்டிருப்போம்
பழுதாகி தேங்காமல்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


1. உயிர்த்தெழும் கண்கள்..
*****************************************
உடைக்கப்படும் பழைய லாரிகள்.,
ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட
விட்டுச் செல்கின்றன..
போல்ட்டுகளும் நட்டுகளும்
அடுத்த உபயோகத்துக்காய்..
உணர்விருக்கும் போதே
உயிலெழுதலாம்.. கண்ணை
அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்..

******************************************************************

2. சாயல்கள்..
**********************************

ஒன்பதினாயிரம் நாட்கள்
கடந்திருக்கும்..
அவளுக்கும் அவருக்குமான உறவில்..

முதல் சந்திப்பிலேயே
அவர் முழுமையாய்
அங்கீகரித்துக் கொள்ள..
அவளுக்கு சில கேள்விகளும்
ஆசைகளும் மிச்சமிருந்தன..

ஏதேதோ பிம்பங்களில்., விழைவுகளில்
இருவரும் மாயமானைத் துரத்தி..
திரும்பி ஒரு புள்ளிக்கோட்டில்
சந்தித்துக் கொள்வர். ,
இரண்டு பிள்ளை ரேகைகளின் ஊடே..

அவ்வப்போது இது நிகழ்ந்தாலும்
குளியலறையும்.,
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியும்.,
படுக்கும் அறையும் ஒன்றுதான்..

சுருக்கங்களும் நரைகளும்
இருவருக்கும் பொதுமையான போது
அவள் சாயலோ.,
அவள் அன்பின் சாயலோ படர்ந்து
அவர் அவளாயிருந்தார்..
அவரின் கம்பீரமும் கனிவும் படிந்து
அவள் அவராயிருந்தாள்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

தேனம்மை லஷ்மணன்


9. பங்கேற்பு.:-
*******************

பின்புறமிருத்தல்
சௌகர்யமாய் இருக்கிறது
மஞ்சள் வெளிச்சங்கள்
ஆக்கிரமிக்காத
மெல்லிய இருட்டு.
இருக்கிறோம்
ஆனால் இல்லை..

எல்லா ஆட்டங்களிலும்
பங்கேற்பாளராக
பரிசுக் கோப்பையை
நூலிழையில்
தவறவிட்டு.

மேடையில் ஒலிக்கும்
சங்கீதங்கள் சில
சோக ராகத்தோடு..
கரைந்து போகிறது
குளிர்பான பனிக்கட்டியாய்
இயலாமையோடு

துப்பு இருக்கிறது
உரித்தெரிந்து விட்டு
மேடையேறி
எல்லாவற்றையும்
கைப்பிடிக்குள் சுழற்ற..
காலடியில் அடக்க..

பின் தொடரப் போகிறதா
ஊத்தி மூடப் போகிறோமா
பித்தம் தெளியாமல்
என முற்றும் தெரியாமல்
எல்லையற்ற ஆட்டத்தில்..

*****************************************************

குறுங்கவிதைகள்..
******************************

1. மெல்ல திறந்த கதவிடுக்கில்
பாம்பாய் நெளிந்து வந்து
காலைக் கடிக்கிறது குளிர்..

**************************************************

2. கற்கள் நரகல் எல்லாம்
எச்சரிக்கையாய் தாண்டி.,
உனை தேடி வந்து
சொற்களால் மிதிபட்டு..

*****************************************************

3. மதர்போர்டு
————————

ஆயுள்வரை உழைத்து பழுதாகி
கழற்றிக் கோர்க்கப்பட்டு, தொடர்ந்தும்
புனர்ஜென்மப் பணியில் அம்மாவாய்..

*************************************************************

4. குளப்படிகளிலும் பூத்து
ஈரத்தாமரை…
உன் பாதச் சுவடு..

******************************************************

5. வாய் முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்
வார்த்தை நிறங்களை அப்பிச் செல்கிறது
பேசக் கற்ற குழந்தை..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

தேனம்மை லஷ்மணன்


1.சார்பு நிலை..
**********************

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..

வடக்கில் தலைவைத்து
வெட்டி ஒட்டிய முகத்தோடு

கண்ணாடியைக் காணும்வரை
பூனையின் சாயலோடு..

உற்ற இன்ன பிற
அசட்டுத்தனங்களோடு..

விளம்புதல்கள் முடித்து
உருமாற்றங்களோடு..

சார்பற்றதும் தெறிக்கிறது.
சிறுத்தையின் உறுமல்களோடு..

====================================

2. மண் சட்டிகளும்..ஆடுகளும்..
*******************************************

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..

அவரவர் பாரங்களை அப்படியே விட்டு
மெல்ல இறங்கி உன் மேல் துண்டால்
வீசிப் பிடித்தோம்..மீன் தின்னும் ஆசையில்..

சுழல் போல் காட்டாறு கணுக்காலிலிருந்து
முழங்காலேறி., பேய் போல ஆளடித்து
தலை சுழற்றி மூச்சு முட்ட..

அடித்துப் பிடித்து அவரவர் கரை சேர்ந்தோம்..
என் சுருக்குப் பை உன் கையிலும்.,
உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து.

என் சுருக்குப் பை உன் துரட்டியிலும்,
உன் மேல் துண்டு என் சும்மாடாய்.,
திரும்ப அவரவர் சந்தைக்கு..

இருந்தபடி இருந்தன
மண்சட்டிகளும் ஆடுகளும்..
மீன்கள் மட்டும் கையெட்டாமலே..

வெடவெடத்த பாதங்களின் பின்னே
தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
ஈர சாட்சியாய் தண்ணீர். ..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..

ஈழத்துக்கு.,
மீனவர்க்கு்.,
சாய(ந்த) மண்ணுக்கு.,
உரிமை மீறலுக்கு என
கவிதை எழுதித் தொலைக்கிறேன்..

ஒன்றையும் குணமாக்கும்
வழி தெரியாமல் விழிக்கிறேன்..
கையில் அடுத்த கோர்ஸை
தொடரச் சொல்லும்
மருத்துவக் குறிப்போடு..

———————
கலம்பகம் விரும்பி..
******************************

மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..

இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..

கோட்டை கொத்தளங்களும்
குலவிய அந்தப்புரங்களும்
கொடிகள் வேரோடி
மண்பாயக் கூடுமோ..

உப்பரிகையில்
தலை உலர்த்தி நான்.
சோகம் பாய்ந்த விழியோடு
உன் மேல் வெறுப்புற்று..

கலம்பகம் விரும்பி
காதலோடு விழுங்கி
கூர்ச்சூலம் பாய
புறமுதுகிடாத வீரனாய்

அருஞ்சொற்பொருள்
எப்படி அறிந்தாயோ..
என் அன்பழிந்த அக்கணம்
நீ மரித்திருந்தாய்..

————-

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


குறுந்தகவல் தூது..
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..
கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..

—————–
இறக்கைப்பயணத்தினூடே..
********************************************

அல்லாவுதீன் பூதமாய்
அடு்த்து அடுத்து
என்கிறது..
என்ன கொடுத்தாலும்..

இரை எடுக்கிறேன் அலகில்..
கூட்டுக் குருவிகளுக்காய்..
எனக்கான எதிர்கால
சேமிப்பாய்..

உருவம் மாறி
உலவிச் செல்கிறேன்
காற்றாயும்.,
நீராயும்.. நெருப்பாயும்..

கண்டுபிடித்த
ஆகாயமாயும் மெய்யாயும்
கலவிக் கிடக்கிறது
உள்ளெடுத்த என்னோடு..

பயணம் செய்கிறேன்
அதனோடு கம்பளத்தில்
கூட கோபுரங்களும்
மாடமாளிகைகளும் அருகில்..

உப்பரிகைகள் மட்டுமல்ல
உப்பளங்களும்
உணர்ந்தே பயணிக்கிறேன்..
உராயும் தென்றலோடு.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


உடைகள்..
****************

எத்தனையோ நிறங்கள்
கொண்ட உடைகளும்
அவ்வப்போது அணிகின்றன..
அழுக்கின் நிறத்தை..

ஒரு முறைதான்
உடுத்தப்பட்ட அவை
என்றும் இழப்பதில்லை
தான் ஊடுருவியிருந்த
உடலின் மணத்தை..

யார்யாருக்கோ
தானமளிக்கப்பட்டபின்
அவர்கள் அழுக்குகளும் சுமந்து..

எத்தனை வெள்ளாவிகள்.,
உலர்சலவைகள்
கண்டாலும்..

ஒரு போதும் அவை
திரும்புவதேயில்லை
உற்பத்தியின் புனிதத்துக்கு..

புண்கள் தேவை..
*********************************

எரிச்சலும் ரத்தமும்
வரும் வரை..
ஏதுமற்ற போதில்
சொறிந்து கொள்ள…

மூக்குமுட்ட குடித்து
மூத்திரச் சந்தில் நின்று
விரட்டும் மேலதிகாரியையோ
மடியாத பெண்ணையோ

குரங்கு சேஷ்டையாய்
காற்றை திட்டி..
குட்டிச் சுவரை
எட்டி உதைந்து.

சீழ் பிடித்து
ஈக்கள் அமரும் வரை..
அல்லது தடுமாறி விழுந்து
வாந்தி எடுக்கும் வரை..
==
முதல்மரியாதை..
***************************

கருப்பர்.,
முனியையா..
பாண்டி முனி
எனக்கு மட்டும் ஏன்
பழம் பெயர்..

கருக்கருவாள்சுமந்து
கண்கள் உருட்டி
நாக்கை நீட்டி
வெய்யிலில் காய்ந்து
இருத்தப் பட்டிருகிறேன்.

வருடம் ஒரு முறை
கண்காட்சி.,
பொருட்காட்சி.,
புத்தகத் திருவிழா போல்
எனைக் காண வருகிறாய்..

சிறிது நேரம் அமர்ந்து பார்
என் அமர்விடத்தில்..
சாராயம்., சுருட்டு.,
மிருக ரத்தம் தெளித்து
கோராமையாக்கிவிட்டு
உன் பேர் சொல்லி
பலர் உண்பது அறிவாய்..

விட்டுவிடு என
ஓடிவிடக் கூடும் நீ
யாருக்கு முதல் மரியாதை
என்ற கோபத்தில்
உன் கை அரிவாள்
பிடுங்கி வெட்டப்படும் போது.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


1. ஒளிதல்..
**************

எதிர் வீட்டு புஜ்ஜி
முந்தானை மூடி முட்டாச்சு..

பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..

ரெண்டும் சென்றபின்
முந்தானையும் திரையும்
ஒளிய இடமில்லாமல்..

2.. பழசு..
***********

காலம் துவைக்கும்
கிழமைத் துணிகள்..

உரிந்து விழுந்தும்.,
சாயம் போகாமல்..

அதே முகப்பு.,
அதே பட்டாலை..
அதே ஆல்வீடு..
அதே சுவற்றலமாரி..
அதே கண்ணாடி..

ஆற்றிலொரு கால்..
சேற்றிலொரு கால்..
விளையாட்டாய் நரை..

ஐஸ்பால்., டப்பா வாய்
முதுகிலடிக்காமல்
முகத்தில் அடித்தது
சுருக்கங்களுடன்
அவுட்டான நானாய்..

3. மாமிசக் கடை.
*********************

முதிர் ஆடுகள் சில
இளங்கோழிகள் பல..
அபூர்வமாய்
புறாவும் ., முயலும்..

எலியும் ., பூனையும்.,
காகமும் உடும்பும் கூட
உணவாகும் நரர்க்கு..

ரத்தம் தெறிக்க
வெட்டுப் படவே
சுயமற்றுப் பிறந்த
அப்பிராணிகள்..

சகதித் துணுக்காய்
தேய்த்தும் சத்தம்
அடங்காத
பூட்ஸும் துப்பாக்கியும்..

வெட்டப் படுவதும்
விற்கப்படுவதும்..
சந்தைப் பொருளாவதும் குறித்து
ஏதும் செய்ய இயலாமல்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


பிழைத்த சிலிர்ப்பு..:-
*********************************

வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின்
நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்..

ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு
படுக்கை விரிப்புகள் தினம்..

அறை மணத்திகள் தொடர்ந்து
ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள்

லிக்விட் சோப்புகளால் உடல் துடைத்து
பீட்டாடையீன் வாசத்தோடு

ஆபரேஷன் தழும்புகள்
பூரான் தடிப்பாய்..

ஆண்டிபயாட்டிக்குகள் சுமந்து
கை துளைத்த ஊசி ஓட்டையை

கடைசியாய்த் திறக்கும் போது
பஞ்சிட்டும் குளிர்கிறது..

பிழைத்த சிலிர்ப்பிலும்..
பில்லின் அதிர்விலும்..

—————————
வெளியுலக உயிர்மூச்சு..:-
*****************************************

சிகிச்சைக்கு உட்பட்டவர்களின்
நோவுகள் எல்லாம்..
காத்திருப்பவர் முகத்தில்
ரேகைகளாய் படிந்து..

நந்தவன கூட்டமாய்..
பிக்னிக் ஸ்பாட்டாய்.,
கேட்டது கிடைக்கும் ஷாப்பிங் மாலாய்..
ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்ரிகளும்..

உடல் துடைக்கும் ட்ராலி
உருட்டுபவளின் கரத்தில்
ஓராயிரம் உடல்களின்
நோவுத் துகள்கள்..

கழுவிக் கரைத்தும் போகாமல்
துப்புரவுப் பெண் வீட்டிலும்
அவளின் மருந்து வாடை
கைக்கவசம் அணிந்தும்..

சோர்வுறுவார்களா..
தூங்குவார்களா எனத் தெரியாத
ஷோகேஸ் பொம்மை
சிரிப்பில் மருத்துவர்கள்..

இருபத்துநாலு மணிநேரமும்
எரிகிற விளக்குகளில்
எல்லா கிருமிகளும்., அழுகைகளும்
துக்கங்களும் படிந்து..

மனைவிக்காய்க் காத்து
மாதக்கணக்கில் தாத்தா எழுதும்
குறுக்கெழுத்துப் புதிர்..
கோமாவாய் முடிவுறாமல்..

எப்போதோ நிமிர்ந்து
பார்க்கும்போது வந்து சென்ற
எல்லாரும்., எப்போதும்
பார்ப்பவராய் முறுவலித்து..

எங்கோ வெளியேறும்
திணறல் மூச்சு..
ஏதோ ஒரு கர்ப்பத்தின்
வெளியுலக உயிர்மூச்சாய்..
—————
ஓவியங்கள்..:-
*********************

அவசியமா..அலங்காரமா..
விலையையுயர் சட்டங்களில்
விநோத ஓவியங்கள்..
உயிர்த் திரவ
பாண்ட்டேஜுகளுடன் உலவும்
என்னை நிகர்த்து..

விரிந்த கிளைகளூடே
கூர் மூக்கு இறக்கை பறவை..
இரட்டைக் குணாதிசயமான
முன் பின்னாக
உருவேறிய நானாய்..

நீர்ச்சொட்டு இல்லா
பிரபஞ்சப் பசுமை பருகி.,
ஊசிகளும் தையல்களும்
குறுக்குநெடுக்காக்கிக் கிழித்த
கோட்டோவியமாய் நான்..

இனம் தெரியா
நிறப் பூவிலிருந்து விழுந்த
தேன் சொட்டொன்று..
என் கைப்பக்க ஐவி ட்யூபில் சிதறி..
கண் திறக்கும் போதெல்லாம்
இதய பலூனை இயக்கி..
உயிர்ப்பிக்கச் செய்து..
—–

நீர்க்குமிழ்கள்..
***********************

அப்பாவுக்கு நான்கு..
அம்மாவுக்கு மூன்று…..
அரசில் முப்பத்து மூன்று..

எல்லாம் சமரசம்..
உரத்துப் பேசவும்..
உள்ள(த்)தை எழுதவும்..

குமிழ்களின் வாழ்நாள்
ஒன்றோடொன்று
மோதும்வரை..

காற்று அனுமதிக்கும் வரை..
வெளிப்பொருள் உறுத்தும் வரை..

ஒப்பீட்டுச் சுதந்திரம்..
ஒவ்வாத கருத்துக்களோடு..

வரையப்பட்ட விட்டம்
கட்டிய மாடாய்..
கயிற்றோடு சுற்றி..
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு..
—–
இதய பலூன்..
************************

என் இதய பலூனைப்
பிடித்தலைகிறாய்..

உயரப் பறக்க விழையுமதைக்
கைப்பிடிக்குள் அடக்கி.,

பட்டத்தைப் போல்
பிடித்திழுத்துக் கொண்டு..

கேளிக்கைகள்., போட்டிகள்.,
கூச்சல்கள் முடித்து.,

ஓரமாய்ப் போட்டுவிட்டு
ஓய்ந்து உறங்குகிறாய்..

உன்னைத் தாலாட்டும்
விசிறிக் காற்றில்
தடுமாறி விழுந்து..

உன் கேசக் குழலாய்
தத்தித் தத்திச் சுருங்கியவாறே..
ஒரு மூலையில் நான்..

உன் ரேகை படர்ந்த
லாலிபாப்பின்
முத்தப் பிசுக்கோடு..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தேனீர் தாகம்
************************

சுப்ரபாதத்தோடு
கணவரோடு ஆறு மணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு..

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு..
மாலை நாலுக்கும்..
பின் ஆறுக்கும் கூட ..

எப்போது ஆரம்பிதது
என்று தெரியாமல்
நேரமற்றுத் தொடர்ந்து..

நீர்ச்சத்தோ., சர்க்கரையோ
குறையும் போதெல்லாம்..
கிடைக்கும் போதெல்லாம்..
மாற்றம் வேண்டும் போதெல்லாம்..

எழுதத்துவங்குமுன்
எழுதி முடித்தபின்
எல்லாரோடும்
தனியாயும்..

சிந்தனையின் போது
கவலையின் போது..
மகிழ்ச்சியின் போது..
காரணமற்றும்

குடிகாரர்களை திட்டும்
போதெல்லாம் உள்கேலி,
”நீ யாராம்..போடீ
தேனீர் குடிகாரி..”என்று..

—————-
நானென்ற கம்பீரம்..
*****************************

புதைக்கப்பட்டதற்காய்
புதையாமல்
வெடித்து வேர்விட்டுத் தேடு..

முளை விரல் நீட்டி
சூரியக் கரம் பிடித்து
மேலேறு..

புல்லாகவோ.,
பெருமரமாகவோ
நானென்ற கம்பீரத்துடன்..
——-
டெஃப்லான் தோசைகள்..:-
**************************************

தாமரைத் தண்ணீர்
நீர்மேல் எண்ணெய்
உறவுற்று., உறாமல்..

நிலவொட்டிய வானம்
ஒட்டில்லை
உறவு உண்டு..

பேனாக் கத்திகளாய்
பேனாக் கடத்திகள்..
ஆளற்ற அனைத்தும் தூக்கி..

விக்கிலீக்ஸ் காட்சி
சுவிஸ் வங்கி ஆட்சி..
அசாங்கே சாட்சி..

தொலையும் தொடர்பில்
ஆளுமைகள் மாற..
ஆசையர்கள் மாற..

இரும்பு., இண்டாலியம்.,
டெஃப்லானாய் தேய

ப்ளாஸ்டிக் வீச்சத்துடன்
டெஃப்லான் தோசைகள்..
எல்லார் தட்டிலும்..
—–
நிசிப் பறவைகள்…….
****************************

நிசியில் பறவைகள் சடசடக்க
நெஞ்சக் காடு தேடி
ரோமக்கூட்டுக்குள்
முகம் தத்தி அமர்ந்து
முத்த முட்டைகள் பொரித்து..
விடிந்ததும் தெரிகிறது
பறவைகள் அமர்ந்த இடம்
விலகிய ரோமச் சுள்ளிகளில்
கால்களின் நகக்கீறலோடு.

==================================

ஈரப் பூக்கள்..
***********************

ஈரம் கசியும் கன்னங்களை
திரும்ப துடைக்கிறேன்..
கனவில் முத்தமிட்டாயோ..
முகமருகே குனிந்து
கண்ணீர் சிந்தினாயோ
உன்னை நினைத்துக்
கிடந்த என் கண்ணீரோ..
மழை பெய்த சுவர்த்தடமாய்
ஈரப்பூக்கள் கன்னமெங்கும்

====================================

குழந்தைப்பூ..
******************

நானும் கறுப்பு..
மனைவியும் கறுப்பு..
குழந்தைக்கு ஏன் குங்குமப்பூ..

======================================

மழைக்கேள்விகள்:-
*******************************

குழந்தையின் கேள்விகளாய்
தொறுதொறுத்துக்கொண்டே மழை..
விடை தெரியாது ஓடுபவளாய் நான்..

சுவற்றில் ஆக்டோபஸ்களாகவும்
அமீபாக்களாகவும் ஈரக் கால் பரப்பி..
சிலந்தியில்லா தண்ணீர் வலைகள்..

பயிர்களைப் போல
சுவர்களும் அழுகி பூசணங்கள்..
மாவுகளில் குளமற்ற ஆம்பல் பூத்து..

வகுப்பறை மேசைகள் ஈரம் கசிந்து..
புழுக்கமாய் வியர்வையா..
கருணையாய் ஊற்றா..

சில்வண்டுகளாய் ரீங்கரித்த மழை
தவளையாய் தவ்விச் சென்றபின்
கேட்பது அற்ற காதுகளுடன் நான்
———————–
பரமபதப் பாம்புகள்:-
******************************

மோட்டுவளையைப்
பார்த்துக் கொண்டே
கவலையற்றுப்
படுத்திருக்க.,

தொட்டில் குழந்தையாய்
இன்னுமொரு
பிறப்பு வேண்டி..

விடியலில் எழுந்து
காலைக் கடன்
கழித்தும்., கழிக்காமலும்

டப்பி சோறும்.
ஓட்டமும் நடையும்
மின் வண்டித்தடமும்
பேருந்துப் புகையும்

வருடக்கணக்காய்
பல கை மாறி
சரிப்படுத்தப்படாத
தணிக்கை கணக்கும்

நாளைக்கு வந்து
நச்செறியப் போகும்
தணிக்கை அதிகாரியும்

கிடைக்கப் போகும்
குறைந்த நட்சத்திரங்களும்
குடும்பக் கவலையும்
கண்ணுக்குள் குழம்ப

பள்ளிப் பருவக்
குழந்தையாய்
குறைந்த மதிப்பெண் கனவில்
விழுந்ததாய் விதிர்த்து எழுந்து

பரமபதப் பாம்புகளால்
சொர்க்க வாசல் அடைந்த நான்
மீண்டும் முதலில் இருந்து
அதன் வால் பிடித்து..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


கருவேலம் :
**********************

ஈரப்பதம் உறுஞ்சி
உள் துப்பும் இயந்திரங்கள்..
சமையற்கட்டிலும்..
சயனத்திட்டிலும்..
வரவேற்பறையிலும்..
வாகனத்திலும்..

வெந்நீர் வளையங்கள்
பொங்கித்தரும்
தொட்டில் ஜலக்ரீடை..

பாலிவினைல் புட்டிகளில்
நன்னீரும்..
டப்பர்வேரில் நல்லுணவும்..
துகளானவை தொண்டைக் குழாய்க்குள்..

ஓசோன் டார்பாலின் கிழிய
கந்தகமாய் தீயும் பூமி..
முடங்கிப் போன முழங்காலாய்..

எஞ்சியவை
இடையறாத இருமலோடு
எண்டோஸ்கோப்பியிலும்
கண்டு பிடிக்க இயலாமல்..

எடுத்து ஊன்றிக் கொண்ட
கருவேலங்களாய்
வேரோடு வெட்டியும் கிளைவிட்டு..

——

பெட்டகம்..
*****************

இரும்புக்கம்பு அடைத்து
இரட்டைப் பூட்டிட்ட
தேக்கு மரக்கதவின் பின்னே

கைமுஷ்டியாய் இறுகின கைப்பிடியோடு
பித்தளைத் தகடு மறைத்த பூட்டோடு
பலவர்ணத்தில் அசைக்க முடியாமல்..

ஒரு காலத்தில் கன்னமிட்ட நீ
உள்ளே வெள்ளைத்துணி சுற்றிய
வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை…

உன்னுரிமையாய் எண்ணி..
களவாட முயன்று…
கை நோக தோற்று…

வங்கி லாக்கருக்குப்பின்
வேண்டுவாரற்று
வெளியில் கிடக்கிறது..

வரும்போதெல்லாம்
முகம் திருப்பிச் செல்லும்
உன்னைக் கண்டு வருத்தமுற்று..

====
எழுத்துவாகனம்..:-
*******************************

ஏறும்வரையில்
தீர்மானிக்கப்படுவதில்லை..
எங்கு எதில் செல்வதென..

ஏறியபின்
சிறகு முளைத்த அன்னமாகவோ..
பிடறி சிலிர்க்கும் சிங்கமாகவோ.,
கொம்பு கிளைத்த எருதாகவோ..

எடுத்துச் செல்கிறது
குவளைகள் கொட்டிய குளத்துக்கோ.,
அரவுகள் நெளியும் காட்டுக்கோ.,
மனிதர்கள் முட்டும் ஜல்லிக்கட்டுக்கோ…

நகர்ந்தோ., சிலிர்த்தோ., பொருதியோ
பரிமாறியதெல்லாம்
பார்வைக்குப் பார்வை
உருமாறுகிறது..

காவியணிந்த நபராகவோ.,
காவியடித்த சுவராகவோ.,
காவி படிந்த பல்லாகவோ..

எந்தத் தேடுதலும் அற்று
பயணித்து முடிகையிலும்
சிதறிக் கிடக்கிறது..

வெள்ளை இறகோடு நீர்ச்சொட்டுக்களும்.,
மஞ்சள் பிடறி முடியோடு பாம்புச் செதில்களும்..
கருன்கொம்பின் வர்ணத்தோடு சரிந்த குடல்களும்..

எச்சப்புள்ளிகள்..
**********************

பறவை எச்சப் புள்ளிகளோடு
நிழலைக் கோலமாக
வரைந்து கொண்டிருந்தது மரம்..

மொட்டை மரங்களிலும்
நீர்ப்பூக்கள்..
உதிர்த்துக் கொண்டிருந்தது மழை..

மண் பாளமாய்
வெடித்திருந்தன…
நீரற்ற மரத்தின் காய்ந்த கிளைகள்..

தானியத் தட்டை
கொத்தும் பறவைகளாய்..
சூரியத்த்ட்டில் கதிரைக்
கொத்திக் கொண்டிருந்தன மரங்கள்..

மஞ்சள் உமியோடு
வெய்யிலைத்
தூற்றிக் கொண்டிருந்தது சூரியன்..

—–
தினசரி..:-
**************

சுமைதாங்கிக் கல்லாகவோ.,
சிலுவைக் கட்டையாகவோ
அலுவலகச் சுமைகள்
அசைய முடியாமல்
அடித்து வைக்க.,

களைத்துக் கைகோர்த்துப்
பின்னே சாய்கிறாய்…
குழந்தையாகும் வேட்கையில்
என் வரவை எதிர்பார்த்து..

உன் பதவி பாவனைகளோடு
கம்பீரத்தையும்., கடுமையையும்
கழற்றி எறிகிறாய்..
உயரப் பறக்கும் மின்விசிறி மீதோ.,
காலடியில் திறக்கும் குப்பைத்தொட்டியிலோ..

மாடிப்படியடியில்
செருப்புப் போடும் ஸ்டாண்டிலோ.,
துவைக்கும் யந்திரத்தின் அழுக்குத் துணிகளோடோ.,
நானும் உரித்துப் போடுகிறேன்.,
என் கோபத்தையும் சலிப்பையும்…

ஊறவைத்த தானியங்களைப் போல
முளைத்துக் கிடக்கிறோம்..
மூழ்கிய அன்பில்….
மறுபடி முளைக்கும்
மற்றொரு நாளை எதிர்நோக்க…

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தீட்டு
**************

பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை.

தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..

தனி நாடு கேட்காத
எனக்கு தனியிடம்..
துண்டு நிலம்..
தோல் தலையணை..

கிணறு வற்றிவிடும்.,
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்.

கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது,..

சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..

பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுக்களற்று..

——————–
மழை…
****************

* பெயிண்ட் அடிப்பவனைப் போல
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை….

* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..

* இரண்டும் கோர்த்து
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்…

********************************************

மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்..
மெசெஜ் மழை பொழியும் காதலி பார்த்து..

************************************************

குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..

***********************************************

பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..

———————————————————————-
கல்யாணமுருங்கை:-
***********************************

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்…

சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..

விஷம் கக்கும் பூதனை., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..

வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒருமுறையாவது வாயேன்..

உறைபனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ…
தொட்டிலில் இருந்து தத்தாகவோ…

————————————————————————–
நசிகேதன் அக்னி..:-
************************

முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்…

மண்ணில் பிறந்ததும்.,
மண்ணை பேர்த்ததும்..
தீக்குள் நுழைந்ததும்..
மண்ணில் புதைந்ததும்..

எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..

மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..

உந்தன் யாகத் தீ..
என்னை ஆ(க்)குதீ…
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


விட்டுப் போனவை:-
******************************

ஒரு கோப்பைக்குள் பாதரசமாய்
ஏந்தி இருந்தாய் உன் கனவை..
காலம் தீர்ந்த அவகாசத்தில்
கையளித்துச் சென்றாய் என்னிடம்..

குழியாடிக் குவியாடிக்
கண்களாடிக் கலந்தேன்…
நகரும் வெள்ளிக் கண்ணாடியில்..

அதிகமசைந்து
தங்கம் துளைந்தாடியது அது..

இன்ப அதிர்ச்சியோ என்னவோ..
கை தவறிப் போட்டுடைத்தேன்..
குன்றிமணிகளாய்த் தரையில் சிதறி..

அமில ஓட்டைகள்
கத்தரித்திருந்த
சோதனைச்சாலை அங்கியோடு.,
தவழ்ந்தேன் தரை முழுதும்..
ஒன்று சேர்த்துக் கோர்த்துவிடலாமென..

வெறுப்பு..:-
******************
கொலைக்கத்திகளும்
கொம்பின் முனைகளும்
முத்தமிடும் உலகில்
தாவரமாகவோ
காய்கறியாகவோ வாழ்வது..

கத்திரிக்கோல்களால்
நறுக்கப்படவே தினம்
செய்வதறியாது சிரிக்கும்
செந்நிற ரோஜாவாய் பூத்திருப்பது..

வீட்டின் மேல் பழையதும்
வேண்டாததும் போட்டு
அடைக்கும் பரணாயும்.,
ட்ரங்குப் பெட்டியாயும் இருப்பது..

காலடி எடுத்து
வாசலில் வைத்தாலே
திருவிழாவோ., தெப்பமோ,
தேரோ., உலாவோ செல்லும்
அம்மனாய்த் தோன்றுவது..

பூப்பல்லக்குகளும்., வாகனங்களும்.,
கோமடங்களும்., செங்காவியும் சூழ.,
வணக்கத்திற்குரிய சிலையாய்
சிறையுண்டிருப்பது..

===
கனவு..:-
*************

ஓவிய வகுப்பில்
ஓயாமல் பென்சில் திருகி
முனை ஒடித்துக்
குட்டு வாங்கிய
குழந்தையின் இரவில்….
சாபமிட்டு விரலமுறிக்கும்
கொடுந்தேவதைகள்
முளைத்துக் கிடந்தார்கள்
கனவெங்கும்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


அன்ன பட்சி:-
**********************

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்..

கடலில் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது..
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..

புன்னகைக் கையெழுத்தோடு
பூங்கொத்தாய் என்னைத்தர..
பூக்கும் இதழ் கிள்ளும்
பிள்ளை விளையாட்டில் நீ…

மொக்காய் இருந்த
வார்த்தைப் பூக்கள்..
நாம் பேசியபின்
போதவிழத் தொடங்கி
பூக்காட்டுக்குள் நாம்..

இழுத்துச் செருகின
திரைச்சீலையாய்..
இறுகிக் கிடந்த இமைகள்
உன் வருகைக் காற்றில் படபடத்து..

வெட்கத்தில் தாழத் தொங்குகின்றன
திரைகளைப் போல இமைகள்
திரும்ப அடங்கி..

என்னன்னவோ எழுதினேன்
உன்னைச் சந்திக்குமுன்..
பின் உன்னை மட்டும் எழுதினேன்..
உன் அல்லதையும் நல்லதாக்கி
அருந்தும் அன்னபட்சி நான்..


ப்ரக்ஞை:-
****************

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்…
இருப்பற்றுக் கிடப்பது ..
எதாகவாவது..

யாதுமாய்., அற்றதாய்.,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்
வெளியற்ற வெளி…

யானெதற்கு..
இறையெதற்கு.,
இருப்பதெற்கு.,
உணவெதற்கு..
சலிப்புற்றுக் கவிழ்தலில்
சகலமும் நின்று…
ஞானமுற்றதாய் ..
ப்ரம்மையில்..

ப்ரக்ஞையற்ற
நிகழ்வெளியில்..
வெளி., உள்ளில் துழாவி..
எல்லையற்ற அதாகி.
ஆவியடங்கி
அதை சேரத்துடிக்கும்
அதற்ற அதுவாகி..

உயிர்க்க உண்ணும் யானாகி
உயிர்த்து உறையும் நானாகி
பிழையுற்றுக் குறையுற்றுக்
கிடக்கும் ப்ரக்ஞை..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


தாம்பத்யம்
==============
என்றுமே புரிந்துகொள்ளாத தன்மைக்கு
என்ன பெயரிடாலென்ன..?

வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல..
வருடல்கள் மட்டுமேயும்..

வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு.,
ஒரு புரிவு., பரிவு..

எனக்கான பிரபஞ்சத்தில் நானும்..
உனக்கான பிரபஞ்சத்தில் நீயும்..

அவ்வப்போது விண்கற்களாய்
தவறாய் முட்டிக்கொண்டு..
தவறாமல் மோதிக்கொண்டும்.

அவரவர் இலக்கில் அநாமதேயமாய்..
எரிந்து எங்கோ வீழும் வால் நட்சத்திரங்களாய்..

பால் வீதியின் சிதறல்களில்தான் இருக்கிறோம்..
நான் மட்டும் உன் நினைப்பில் சிறுகோளாய்…
உன்னை மட்டுமே சுற்றி..

இருக்கட்டும் எல்லாம்.. .,
அவரவர் ஹீலியப் பந்து எரியும்வரை..
முழுமையும் வெண்சாம்பலாய் மாறும்வரை,,

கிரகணங்களும் அமாவாசைகளும்
நம் உயிர்ப்பையும் இருப்பையும் உணர்த்த.,
எப்போதோ பௌர்ணமிகளும் ப்ரகாசமாய்..

கடல் அடையும் விளையாட்டு..:-
==============================

அலங்காரத்தோடும் .,
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது ,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள் .,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..

வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது
பல மணி நேரம்..வீடே
அனல் கோப்பையாய்..

துணிகள் ., பாத்திரங்கள்
குப்பைகள் போல் சோர்ந்து
சுவற்றோரம் முடங்கி..

ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடு வந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் வாழ்வும்..


தேன்சிறகு முத்தம்
———————————
தாலாட்டுன் ரயில்
தாய் போலெனக்கு..

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசை போட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்.
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப்பார்த்தபடி..

ஒரு முத்தம் கொடுடா என்றேன்.
என் குழல் கற்றையை
விரலால் சுழற்றினாய்..

தோடை., காதை தடவினாய்..
கன்னத்தோடு கன்னமிழைத்தாய்..
காது கேட்காதது போல்..

தடதடத்து வந்தது ரயில்…
என் கோபம் போல்…

ஒழுங்கய் சாப்பிடு.,
சமர்த்தாய்த் தூங்கு
இந்தா என் கைக்குட்டை ..

இம் என்று வாங்கினாய்…
முத்திரை இடாத தபாலாய்
தளதளப்பாய் ஒரு வாரம் ஆகும் என்றேன் ,,

இம் என்றாய்
பொய்க்கோபம் மிக
போயமர்ந்தேன்..
உன் முகம் ஏக்கமாய்ப் பார்த்து..

இதழ்களில் பிஞ்சுக் கரம் பதித்து
பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
பட்டாம் பூச்சியாய் அது
கன்னம் அப்பியது..
தேன் சிறகுகளோடு..

உன் அப்பா கையிலிருந்து..
இன்னும் இன்னும் அள்ளியிறைத்தாய் ..
அட படவா முன்பே கொடுப்பதற்கென்ன.

நிகழவே இல்லை நம் சந்திப்பு
————————————————–
நான் உன் பின்னே வர
நீ எதன் பின்னோ விரைய.
குதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..

பாம்புகளும் பூரான்களும்
அடைசலாய் நெளியும்
கெட்ட கனவொன்றில் முழித்து..

வேர்வைச் சுரப்பிகள்
அமிலக் கண்ணீராய் அரிக்க
இன்மையின் திரையில்…

பூக்கள் இருப்பதாய்
உணர்ந்த இடத்தில் ..
தொட்டுப் பார்க்க
உறுத்திய முட்களும் இல்லை..

பூநாகமும் திருநீற்றுப் பச்சையும்
மணத்துக் கிடக்க.. நிலவைப்
பலமுறை பின்னுருட்டினேன்..

உராய்ந்த தடமறியா
வலியுணராமல் பின்னோக்கி
பாதச் சுவடுகள் தேயத்தேய..

கொடுத்ததெல்லாம் திருப்பி
நேர்த்திக் கடனை நேர் செய்தேன்..
சந்தனமும் மிளகாயும் அரைத்துப் பூசி..

குழப்பம் இல்லா
குழந்தைச் செடியாய்
மொக்குகள் சுமந்தேன்..

பூக்கள் மணக்கும் நாளில்
நானும் நீயும் சந்திக்கவேயில்லை..
இனி சந்திக்கப் போவதுமில்லை..

Series Navigation