தீர்வும்.. தெளிவும்!!!
அமைதிச்சாரல்

சிக்கித்தவிக்கும் நினைவுகள்
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு
இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,..
துரத்திக்கொண்டிருக்கும்
இன்னவென்று புரிபடாத பதில்களை..
புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.
கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..