வாங்க, மரபணு சாப்பிடுவோம்!!

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

Dr. செந்தில் மணியன்



__1__

நான் உங்க‌ளைப் பார்த்து குர‌ங்கு என்று சொன்னால் என்ன‌ செய்வீர்க‌ள்? சிம்ம‌ன்ட்ஸ் ஹ‌ர்ப‌ஜ‌ன் மேல் கொடுத்த‌ மாதிரி புகார் கொடுப்பீர்க‌ளா? ஹ‌ர்ப‌ஜ‌ன் ஸ்ரீசாந்தை அறைந்த‌ மாதிரி அறைவீர்க‌ளா? நீங்க‌ள் என்ன‌ செய்தாலும் நான் சொன்ன‌து 96% உண்மை. ஆம். ந‌ம‌து ஆதிமூல‌மும், சிம்ப‌ன்சி குர‌ங்குக‌ளின் ஆதிமூல‌மும் 4% ம‌ட்டுமே வேறுப‌டுகிற‌து. நான் ஆதிமூல‌ம் என்ப‌து ந‌ம‌து ம‌ர‌ப‌ணுக்க‌ள் (DNA/டி.என்.ஏ). சரி, மரபணு என்றால் என்ன? மனிதன் உள்பட எல்லா உயிரினங்களும் செல்களால் ஆனவை; வீடுகள் எப்படி செங்கல்லால் ஆனவையோ அது போல! எல்லா உயிரினங்களின் செல்களிலும் மரபணு உள்ளது. ஒவ்வொரு உயிரின‌த்துக்கும் ம‌ர‌ப‌ணு என்ப‌து சமையல் குறிப்பு மாதிரி. அதை ப‌டித்து பார்த்து ஒவ்வொரு உயிரின‌மும் த‌ன‌க்கு தேவையான‌ ப‌ல‌ மூல‌க்கூகறுக‌ளை உற்ப‌த்தி செய்து கொள்கின்ற‌ன‌. எப்ப‌டி மாமி வீட்டு வ‌த்த‌ல் குழ‌ம்பு ரெசிப்பியும் செட்டியார் வீட்டு க‌றி குழ‌ம்பு ரெசிப்பியும் மாறுப‌டுமோ அது போல‌ சில‌ மாற்ற‌ங்க‌ள். எந்த‌ அள‌வுக்கு ம‌ர‌ப‌ணு மாறுபடுகிறதோ அந்த அளவுக்கு அந்த உயிரினங்கள் பார்க்கவும், பழக்கத்திலும் வித்தியாசமாக இருக்கும். அப்ப என்ன குரங்கும் மனிதனும் வித்தியாசமாக இருக்க பழக இந்த 4% மூலக்கூறுகளும், அதற்கான மரபணுக்களும் தான் காரணமா? நம்ப முடியாவிட்டாலும் அது தான் உண்மை. மாமி வீட்டு விருந்தும், செட்டியார் வீட்டு விருந்தும் எப்பிடி வித்தியாசமா இருக்கு? அடிப்படையில பயன் படுத்துற மசாலாவும், பொருளும் ஒன்று தான்; ஆனால் சுவை வித்தியாசமா இருக்க காரணம், சமையல் குறிப்பு தானே! அது போல தான். இன்னும் பற்பல உயிரினங்களில் வித்தியாசங்கள் இருக்க அடிப்படை காரணம் இந்த மரபணு எனும் மூலக்கூறு தான். ஒவ்வொரு குருவியும் (நிஜ குருவி, விஜய் இல்லை) ஒவ்வொரு கலர்ல இருக்க காரணம், அதுங்க உற்பத்தி செய்யுற வித விதமான மூலக்கூறுகள் தான். அவை வித்தியாசமான மூலக்கூறுகளை உற்பத்தி செய்ய காரணம், மரபணு வித்தியாசம் தான். எனவே தான் நான் மரபணுவை ஆதிமூலம் என்று சொன்னேன்.

ஒரு உயிரினம் தானே உற்பத்தி செய்ய வேண்டிய எல்லா மூலக்கூறுகளுக்கும், அதன் மரபணுவில் செய்தி (சமையல் குறிப்பு) உள்ளது. எல்லா உயிரினங்களின் செல்களும் தனக்கு தேவையான மரபணுவை தேவையான நேரத்தில் படித்து தேவையான மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும். உதாரணமாக, நம் வயிற்றில் உள்ள செல்கள் உணவு இருப்பதை அறிந்தவுடன் சரியான மரபணுவை படித்து செரிமானத்துக்கு தேவையான மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும்.பள்ளியில் படிக்கும்போது செரிமான நொதி அல்லது என்ஸைம் என்று படித்திருப்பீர்கள். இதில் விந்தை என்னவெனில், நம் உடலின் எல்லா செல்களிலும் உள்ள மரபணு ஒன்று தான். ஆனால், வயிற்றில் உள்ள செல்கள் மட்டுமே நொதிக்கான மரபணுவை படித்து நொதியை உற்பத்தி செய்கிறது. கையில் உள்ளவை அதை படிப்பதில்லை. நம் தோலில் உள்ள செல்கள் அடி பட்டால் உடனே அதை சரி செய்யவும், பாதுகாக்கவும் தேவையான மூலக்கூறூகளை உற்பத்தி செய்யும். இதற்கெல்லாம் முழுமுதற்காரணம், மரபணு தான். பார்த்தீர்களா இயற்கையின் விந்தையை!

சரி, மரபணு வித்தியாசம்னா என்ன? அதுவும் சமையல் குறிப்பு வித்தியாசம் மாதிரி தான். எழுதியிருக்கிற மொழி ஒரே மொழி தான். விஷயம் மட்டும் தான் வேற. அதாவ‌து மாமி விட்டு ரெசிப்பியும் த‌மிழ்ல‌ தான் எழுதியிருக்கு, செட்டியார் வீட்டு ரெசிப்பியும் த‌மிழ்ல‌தான் எழுதியிருக்கு. இவ‌ங்களால‌ அத‌ ப‌டிக்க‌ முடியும், அவ‌ங்க‌ளால் இத‌ ப‌டிக்க‌ முடியும். அது போல எல்லா உயிரினங்களிலும் மரபணுவின் வேதியல் அடிப்படை ஒன்று தான். அது சொல்லும் விஷயம் தான் வேறு படும். ஒரு உயிரினத்தின் மரபணு வை மற்றொரு உயிரினத்தால் படிக்க முடியும். ப‌ல‌ அடிப்ப‌டை மூல‌க்கூறுக‌ள் எல்லா உயிரிக‌ளிலும் ஒன்றே! ச‌ர்க்க‌ரை உங்க‌ள் உட‌லில் இருந்தாலும் ச‌ர்க்க‌ரை தான், க‌ரும்பில் இருந்தாலும் ச‌ர்க்க‌ரை தான், எறும்பில் இருந்தாலும் ச‌ர்க்க‌ரை தான். அதே போல‌ வேதியிய‌ல் அடிப்ப‌டையில் எல்லா உயிரின‌ங்க‌ளின் ம‌ர‌ப‌ணுவும் ஒன்றே! மாமி நினைத்தால் செட்டியார் வீட்டு ரெசிப்பிய படிச்சு கறி குழம்பு செய்ய முடியும். இல்லையா? அது போல ஒரு உயிரினத்தின் மரபணுகூற்றை இன்னொரு உயிரினத்தில் புகுத்தினால் அந்த உயிரினம் அதை படித்து அதற்கான மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும். இது தான் ம‌ர‌ப‌ணு புகுத்த‌ல் (genetic engineering) என்ப‌து.

மரபணு புகுத்தலுக்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வியாதிக்காரர்கள் பயன் படுத்தும் இன்சுலின் ஊசி. முன்னர் இன்சுலின், இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள், மற்றும் பன்றிகளிலிருந்து எடுக்கப்பட்டு சுத்திகரித்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது (பல நாடுகளில் இப்போதும்). இப்போது, மனிதனின் இன்சுலின் உற்பத்தி செய்யும் மரபணுக்கூற்றை பிரித்து ஒரு பாக்டீரியா நுண்ணுயிரியில் புகுத்தினர். பாக்டீரியா அதைப்படித்து இன்சுலினை உற்பத்தி செய்தது!! பாக்டீரியா எங்கே? மனிதன் எங்கே? மனித மரபணுவை பாக்டீரியா படிக்க முடிகிறது. பார்த்தீர்களா? எனவே, இப்போது மரபணு மாற்றம் மூலம் உருவான இன்சுலின் பல சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் பயன் படுத்தப்படுகிறது.சரி, மரபணு புகுத்தல் என்பது நல்லதா? இல்லையா? பன்றி ஜீனையும் தவளை ஜீனையும் தக்காளியில புகுத்துறதா செய்திகள் வருதே! இதெல்லாம் சாத்தியமா? சரியா? மரபணு மாற்றிய உணவுகளை சாப்பிடலாமா? பார்க்கலாம்!

__2__

என்னது தவளை தக்காளியா? அருவருப்பாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! இது ஒரு பொய் பிரசாரம். தவளை ஜீனை தக்காளியில் புகுத்துவது சாத்தியம் தான். ஆனால், யாரும் இன்னும் அவ்வாறு புகுத்த வில்லை. புகுத்தினாலும், தக்காளி தவளை ஆகி விடாது. எப்படி? நான் முன்னால் சொன்னது போல, மரபணு மூலக்கூறு என்பது வேதியல் அடிப்படையில் எல்லா உயிரினத்திலும் ஒன்று தான். மாமி போய் செட்டியார் வீட்டு ரெசிப்பியை வாங்கிட்டு வந்ததாலேயே அபச்சாரம் ஆகிடுமா? கறிகுழம்பு தான் மாமிசமே ஒழிய, கறிகுழம்பு ரெசிப்பி மாமிசம் அல்ல. மாமி கறிகுழம்பு ரெசிப்பியை வாங்கிட்டு வந்து தன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சமைத்தால், அது அபச்சாரம் இல்லையே! அது போல தவளையின் செல்கள் ஒரு மரபணுக்கூற்றை படித்து உற்பத்தி செய்யும் மூலக்கூறு, தவளையின் மூலக்கூறு. ஆனால், தவளையின் மரபணுக்கூற்றை படித்து தக்காளி உற்பத்தி செய்யும் மூலக்கூறு, தக்காளியின் மூலக்கூறு தான்; தவளையின் மூலக்கூறு அல்ல. மனித இன்சுலின் மரபணுவைப் படித்து பாக்டீரியா உற்பத்தி செய்யும் இன்சுலினை மருந்தாக ஏற்றுக்கொள்கிறோமே. அது போல. எனவே தான் ஒரே ஒரு மரபணுக்கூற்றை புகுத்துவதால் தக்காளி தவளை ஆகி விடாது!

ஓ.கே! மாமி எதுக்குய்யா கறி குழம்பு செய்யணும்? அதனால என்ன பயன்? ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேச‌ப்ப‌டுகிற‌ பி.டி. க‌த்திரி, பி. டி. ப‌ருத்தி இவ‌ற்றையே எடுத்துக் கொள்வோம். பி.டி என்ப‌த‌ன் விரிவாக்க‌ம், பேசில்ல‌ஸ் துரிஞ்ஞிய‌ன்ஸிஸ் (Bacillus thuringiensis) என‌ப்ப‌டும் ஒரு பாக்டீரியா (நுண்ணுயிரி). இது க்ரை (cry1Ab) என‌ப்ப‌டும் ஒரு புர‌த‌த்தை உருவாக்குகிற‌து. இந்த‌ புர‌த‌ம் குறிப்பிட்ட‌ வ‌கை புழுக்க‌ளை ம‌ட்டும் கொல்லும் ச‌க்தி கொண்ட‌து. இந்த‌ புர‌த‌த்தால் வில‌ங்குக‌ளுக்கோ, ம‌னித‌ர்க‌ளுக்கோ எந்த‌ தீங்கும் இல்லை என்ப‌து திட்ட‌வ‌ட்ட‌மாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து. பி.டி பாக்டீரியா இந்த‌ புர‌த்த‌தை ஒரு குறிப்பிட்ட‌ ம‌ர‌ப‌ணுக்கூற்றை ப‌டித்து உற்ப‌த்தி செய்கிற‌து. முன்னால் சொன்ன‌ மாதிரி எல்லா உயிரின‌த்தின் ம‌ர‌ப‌ணுவும் வேதிய‌ல் அடிப்ப‌டையில் ஒன்றே! என‌வே க்ரை புர‌த‌த்தின் ம‌ர‌ப‌ணுக்கூற்றை க‌த்திரி செடியில் புகுத்தினால் க‌த்திரி செடியும் இந்த க்ரை புரதத்தை உற்பத்தி செய்ய முடியும். மாமி எப்ப‌டி செட்டியார் வீட்டு ரெசிப்பியை படித்து க‌றி குழ‌ம்பு வ‌க்கிற‌ங்க‌ளோ, அது போல‌, க‌த்திரி செடி பாக்டீரியாவின் மரபணுவை படித்து க்ரை புர‌த‌த்தை உற்ப‌த்தி செய்கிற‌து. அவ்வ‌ள‌வு தான். சரி மாமி ஏன் கறி குழம்பு வைக்கணும்? கத்திரி செடி ஏன் க்ரை புரதத்தை உற்பத்தி செய்யணும்? கத்திரி செடி க்ரை புரதத்தை உற்பத்தி செய்தால் அதுவும் புழுக்களை கொல்லும் ஆற்றல் பெறுகிறது. எனவே பி.டி கத்திரி செடியை புழு அடிக்காது. சாதா செடியை விட குறைந்த அளவே பூச்சி மருந்து தெளித்தாலே போதும்.அடுத்த கேள்வி,
மாமிக்கு க‌றிகுழ‌ம்பு ஆகுமா? அது போல க‌த்திரி செடிக்கும், அதை சாப்பிடுற‌வ‌ங்க‌ளுக்கும் க்ரை புர‌த‌ம் ஆகுமா? இதை விஞ்ஞானிக‌ள் ந‌ன்றாக‌ சோத‌னை செய்து விட்டார்க‌ள். இதுவ‌ரை இத‌னால் எந்த‌ பாதிப்பும் இல்லை.

சரி, வேறு என்ன பாதிப்பு வர வாய்ப்புள்ளது? உதார‌ண‌மாக‌, பி.டி க்கு எதிர்ப்பு திற‌ன் கொண்ட‌ புழுக்க‌ள் உருவானால் என்ன‌ செய்வ‌து? முத‌லில் எதிர்ப்பு திற‌ன் வ‌ர‌ என்ன‌ கார‌ண‌ம்னு பார்ப்போம். சைக்கிள் ட‌ய‌ர்ல‌ காத்து நிக்க‌ மாட்டேங்குதுன்னா பஞ்சரா? வால்வு போயிருச்சா? என்ன‌ கார‌ண‌ம்னு பாத்தா தானே எப்ப‌டி ச‌ரி ப‌ண்ற‌துன்னு முடிவு செய்ய‌ முடியும்? நோய் எதிர்ப்பு திற‌ன் உருவாக‌ முக்கிய‌ கார‌ண‌ம், கொஞ்ச‌மா க்ரை புர‌தத்‌தை சாப்பிட்டு சாகாம‌ இருக்கிற‌‌ புழுக்க‌ள் தான். இந்த‌ புழுக்க‌ள் ரொம்ப‌ வ‌லுவிழ‌ந்து இருந்தாலும் ம‌த்த‌ புழுக்க‌ள் இற‌ந்து விடுவ‌தால் இவை ம‌ட்டும் போட்டியில்லாம‌ல் அடுத்த‌ ப‌யிரையோ, வேறு செடிக‌ளையோ சாப்பிட்டு உயிர் வாழும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு திறன் பெற்றுவிட வாய்ப்புள்ளது. இப்ப‌டி ஆகாம‌ இருக்க‌ ரெண்டு வ‌ழி இருக்கு. ஒன்று, நில‌த்தில‌ ஆங்காங்கே பி.டி அல்லாத‌ சாதா ப‌யிரை விதைக்க‌ணும். புழுவெல்லாம் அந்த‌ ப‌யிரை சாப்பிடும், பி.டி ப‌யிரை விட்டு விடும். பி.டி ப‌யிரை சாப்பிட்டு வ‌லுவிழ‌ந்து ஆனால் சாகாம‌ இருக்கிற‌ புழுக்க‌ள் போட்டி இருக்கிற‌தால‌ தொட‌ர்ந்து போராட‌ முடியாம‌ அழிந்துவிடும். இந்த‌ முறை அறிவிய‌ல் முறையில் ஆராய்ந்து உறுதி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ம்ம‌ முன்னோர்க‌ளும் இந்த‌ மாதிரி முறைக‌ளை ப‌ய‌ன் ப‌டுத்தியிருக்காங்க‌. கோயில்ல‌ அன்ன‌தான‌ சாப்பாட்டில் எறும்பு வ‌ராம‌ இருக்க‌ சுத்தி ச‌ர்க்க‌ரை தூவி வைப்பார்க‌ள், பார்த்திருக்கிறீர்களா? எல்லா எறும்பும் ச‌ர்க்க‌ரையை சாப்பிடும், அன்ன‌த்தை விட்டு விடும். அதே போல‌ தான் இதுவும். ரெண்டாவ‌து முறை என்ன‌? ஒரே ஒரு க்ரை புர‌த‌த்துக்கு ப‌தில் இர‌ண்டு மூன்று வ‌கை க்ரை புர‌த்த‌தை க‌த்திரியில் புகுத்த‌லாம். ஒரு புர‌த‌த்திற்கு எதிப்பு ச‌க்தி வ‌ந்தாலும், ம‌ற்ற‌ புர‌த‌ங்க‌‌ள் புழுவை அழித்து விடும்.ஒரே க‌த‌வுக்கு ரெண்டு மூணு பூட்டு (மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள், ந‌டு தாழ்ப்பாள்) போடுற‌ மாதிரி விஷ‌ய‌ம் இது. இது போல சரியான சில‌ பயிரிடும் முறைகளைப் பற்றினால் பி.டி பயிர்களால் நன்மையே! பி. டி கத்திரி தானே புழுக்களை அழித்து விடுவதால் எந்த அளவு குறைவான பூச்சி மருந்து தேவைப்படும் என நினைத்துப் பாருங்கள். மற்ற பூச்சி மருந்துகள் பி.டி போல அல்லாமல், பெரும்பாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பவை. க்ரை புரதத்தால் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் எந்த பங்கமும் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

நமக்கு இந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்த இஷ்டமா இல்லையா என்பதை முடிவு செய்ய நமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அந்த முடிவை அறை குறையான புரிதலுடன் செய்யாமல், தொழில்நுட்பத்தை முழுமையாக புரிந்து கொண்டு முடிவெடுப்போம். இது எல்லா புது விஞ்ஞான‌ உத்திக‌ளுக்கும் பொதுவான‌து. மின்சாரம் முதற்கொண்டு எல்லா புதிய கண்டுபிடிப்புகளையும் பாருங்கள். பெரும்பாலும் ஆபத்தானவையே! சரியான பாதுகாப்பு முறைகளுடன் உபயோகித்தால் பலன்கள் நிறையவே உண்டு. மரபணு புகுத்திய உயிரினங்கள் மின்சாரம் அளவு அபாயகரமானவை அல்ல. ஆனால், அதிக பலன் தரும் வாய்ப்பு உள்ளவை. அப்படியென்றால் மரபணு புகுத்திய உயிரினங்களால் என்னென்ன பயன்கள் அடையலாம்? என்னென்ன பிரச்சனைகள் உண்டு? சற்று விரிவாகவே உதாரணங்களுடன் பார்ப்போம்.

__3__

மரபணு புகுத்தல்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டோம். அவற்றின் பலனுக்கு ஓரிரு உதாரணம் பார்த்தோம்.வேறு என்னென்ன மரபணு மாற்றிய உணவுகள் உள்ளன?
உலகிலேயே அதிக அளவில் மரபணு புகுத்திய பயிர்கள் பயிரிடப்படும் நாடு அமெரிக்கா தன். இது வரை அமெரிக்காவில் மரபணு புகுத்தல் மூலம் எந்தெந்த பயன்களுக்கு பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

1. பூச்சி எதிர்ப்பு திறன் (பெரும்பாலும் பி.டி புரதங்கள் மூலம்): மக்காச்சோளம், பருத்தி, உருளை, தக்காளி. இவற்றில், உருளையும் தக்காளியும் தற்போது பயன் சந்தையில் இல்லை.

2. களைக்கொல்லி தாங்கும் திறன் (நான்கு வகை களைகொல்லிகள்): சோயா, மக்காச்சோளம், பருத்தி, கனோலா, நெல், பீட்ரூட். களைக்கொல்லிகள் தாவரங்களின் ஒரு குறிப்பிட்ட புரதத்தை செயலிழக்கச் செய்து கொல்கின்றன. விஞ்ஞானிகள் ஒரு நுண்ணுயிரியில் (பாக்டீரியா) அதே புரதம் களைக்கொல்லி தாங்கும் திறனுள்ளதாக இருப்பதைக்கண்டு, அதை கொண்டு களைக்கொல்லி தாங்கும் திறனுள்ள பயிர்களை உருவாக்கினர். இப்பயிர்களும், பி.டி பயிர்கள் போல ஒரு பாக்டீரியாவின் மரபணுக்கூற்றை புகுத்தி உருவாக்கப்பட்டவையே.

அமெரிக்க விவசாய முறையில் மண் அரிப்பை தடுக்க உழுதல் அற்ற விவசாய முறை (no tillage) அதிகமாக பயன் பாட்டில் உள்ளது. இதனால் களைக்கொல்லி உபயோகம் அவசியமாகிறது. களைக்கொல்லி தாங்கும் திறன் கொண்ட பயிர்களை பயிரிடும்போது களைக்கொல்லி பயன் படுத்துவது எளிது. இம்முறை களைக்கொல்லி பயன் பாட்டை அதிகரிப்பது நல்லதல்ல. விவசாயிகள் இதனை உணர்ந்து அளவுக்கதிகமாக களைக்கொல்லி பயன் படுத்தாமல் இருத்தல் அவசியம். மண் அரிப்பு தடுக்கப்படுவது இதில் பெரும்பயன் ஆகும்!

3. வைரஸ் எதிர்ப்பு திறன்: பப்பாளி, சுரைக்காய், உருளை. இவற்றில், பப்பாளி உறவாயி (Hawaii) மற்றும் கொர்னெல் (cornell) பல்கலைகழகங்களால் உருவாக்கப்பட்டு இலவசமாக விவ்சாயிகளுக்கு அளிக்கப்பட்டது. வைரஸ்கள் தாவரத்தில் புகுந்து இனப்பெருக்கம் செய்கின்றன. வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்தை மட்டும் தாவரத்தில் உற்பத்தி செய்தால் அதற்கு எதிர்ப்பு சக்தி வருகிறது என விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர் (கிட்டத்தட்ட மழுங்கடிக்கப்பட்ட வைரஸை வைத்து நமக்கெல்லாம் தடுப்பூசி போடுவது போல). இம்முறையில், வைரஸின் ஒரு மரபணுக்கூற்றை பயிரில் புகுத்தி அதன் மூலம் வைரஸ் எதிர்ப்பு திறன் கொண்ட பயிர்கள் உருவாக்கப்பட்டன. வைரஸ் நோய்களுக்கு மற்ற தீர்வுகளை விட மரபணு புகுத்தலே இன்று வரை மிக சிறந்த தீர்வாக அறியப்பட்டுள்ளது.

4. மெதுவாக பழுக்கும் பழங்கள்: (தக்காளி) – பழங்கள் பழுக்கும் போது எத்திலீன் எனப்படும் வாயு மூலம் அவற்றின் தோல் மிருதுவாகிறது (நம்மூர்ல வாழை பழுக்க புகை போடுவதும், எத்திலீன் வாயு உபயோகிப்பதும் இதனால் தான்!). தக்காளி போன்ற பழங்கள் பறிக்கப்படும் போதும் சந்தைக்கு கொண்டு செல்லும் போதும் சேதம் அடைவதால், பாக்டீரியாவின் மரபணு மூலம் எத்திலீன் வாயு குறைந்த தக்காளி உருவாக்கப்பட்டது. மேலும், தோல் மிருதுவாவதை தடுக்க தக்காளியின் மரபணுவே தலைகீழாக பயன் படுத்தப்பட்டது (anti-sense technology). தற்போது, மரபணு புகுத்தல் இல்லாமலே இவ்வகை தக்காளிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. எனவே மரபணு புகுத்திய தக்காளிகள் சந்தையில் இல்லை.

5. எண்ணெய் மாற்றம்: (சோயா, கனோலா) தாவர எண்ணெய்கள் சமையலுக்கும், சோப்பு தயாரிக்கவும் பயன் படுகின்றன. இந்த எண்ணெய்களின் உட்பொருட்கள் பயிரிலிந்து பயிருக்கு மாறுபடும். அதனால் தான், நல்லெண்ணெயை சமையலுக்கும், தேங்காயெண்ணெயை சோப்பு தயாரிக்கவும் பயன் படுத்துகிறோம். அமெரிக்காவில் சோப்பு தயாரிப்புக்கு பனை எண்ணெயும், தேங்காயெண்ணெயும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதற்கு பதில் வேறொரு தாவரத்திலிருந்து, ஒரு மரபணுக்கூற்றை எடுத்து அதை கனொலாவில் புகுத்தி சோப்பு செய்ய தகுந்த எண்ணெயயை உள்நாட்டிலேயே தயாரிக்க மரபணு புகுத்தல் பயன் பட்டது. இவ்வகை கனோலா சோப்பு தயாரிக்க மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

இவை தவிர மேலும் பல பயன்களுக்கு பயிர்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை பயன் பாட்டில் இல்லை. பயன் பாட்டில் இல்லாததற்கு முக்கிய காரணங்கள், இவற்றில் சில விஞ்ஞானிகள் நினைத்த அளவு பயன் தரவில்லை, பிற சில சற்றே தீங்கு விளைவிக்குமோ என சந்தேகம் எழுந்தது.

1. உறைபனி தாங்கும் தக்காளி – ஆர்க்டிக் கண்டத்தில் வாழும் ஒரு வகை மீனிலிருந்து உறைபனி தாங்கும் மூலக்கூற்றை உற்பத்தி செய்யும் மரபணுகூற்றை விஞ்ஞானிகள் அறிந்தனர். அம்மீனின் மரபணுவை தக்காளியில் புகுத்தி உறைபனியை தாங்கும் தக்காளி உருவாக்க முடியுமா என பரிசோதித்த போது, அது எந்த பலனும் தரவில்லை. எனவே அந்த தக்காளி சந்தைக்கு வரவே இல்லை. வெறும் ஆராய்ச்சி நிலையிலேயே ஆய்வுக்கூடத்திலேயே அதன் ஆயுள் முடிந்து போனது.

2. மித்தயோனின் கொண்ட சோயா – சோயா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் புரதச்சத்து அளிக்கும் பயிராகும். சோயாவில் மித்தயோனின் என்ற புரதச்சத்து குறைவாக இருப்பதால், பிரேசில்கொட்டை (Brazilnut) எனப்படும் தாவரத்தின் மரபணு மூலம் மித்தயொனின் அதிகம் கொண்ட சோயா உருவக்கப்பட்டது. ஆனால், சோதனைகளின் போது இது சிற்சிலபேருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உருவாக்கலாம் என சந்தேகம் வந்தது. உடனடியாக அந்த ஆராய்ச்சி நிறுந்தப்பட்டு இவ்வகை சோயா சந்தைக்கு வராமலே போனது. தானே முன்வந்து ஆராய்ச்சியை கை விட்ட விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகத்தின் (FDA) பொறுப்புணர்ச்சிக்கு இந்த ஆராய்ச்சி ஒரு மிக சிறந்த முன்னுதாரணம்.

3. பூச்சி எதிர் திறன் கொண்ட உருளை – புழுவுக்கு பி.டி போல வண்டு பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, மற்றொரு தாவரத்திலிருந்து லெக்டின் எனப்படும் ஒரு புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுக்கூறு, உருளைக்கிழங்கில் புகுத்தப்பட்டது. இக்கிழங்குகள் சந்தைக்கு வரவேஇல்லை. இவற்றை ஆராய்ந்த புட்ஸாய் எனும் விஞ்ஞானி இவை எலிகலின் குடல்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாக பரபரப்பு ஏற்படுத்தினார். இவரது ஆராய்ச்சி மரபணு புகுத்தலை எதிர்ப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சந்தைக்கே வராத ஒரு பயிரின் மீதான ஆராய்ச்சி முடிவுகள் ‘மனிதர்களை பாதிப்பதாக’ பிரசாரம் செய்யப்பட்டது. பிறகு புட்ஸாயின் சோதனை முறைகளில் எக்கச்சக்க தவறுகளை நடுநிலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது வேறு கதை! லெக்டின் புரதங்களுக்கு இவ்வகை விஷத்தன்மை இருக்கலாம் என்பது எற்கெனெவே அறியப்பட்டதால், இவ்வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, அதாவது சோதனைகளில் விஷத்தன்மை இல்லை என்று முடிவானால் மட்டுமே, அந்த உருளை சந்தைக்கு வந்திருக்கும். ஆனால் எதிர்ப்பாளர்கள் இவ்வகை சோதனைகளில் விஞ்ஞானிகளின் பொறுப்புணர்ச்சியை கவனிக்காமல் மரபணு மாற்றத்தை எதிர்க்க பயன் படுத்திக்கொண்டனர்.

சந்தைக்கு வராத மரபணு புகுத்தல் பயன்பாடுகளிலேயே மிகவும் பரபரப்பையும், உலகலாவிய எதிர்ப்பையும் உருவாக்கியது ‘டெர்மினேட்டர் விதைகள்’. கேக்கவே பயமா இருக்கா?

__4__

கேட்கவே பயம் உண்டாகும் பெயர் ‘டெர்மினேட்டர்’. பயம் வேண்டாம்.
உண்மையில் இது போல ஒரு விதை உருவாகப்படவேயில்லை.இவ்வகை விதை பற்றி ஒரு சிறு கம்பெனியில் ஆய்வு, விவாதம் நடந்தது மட்டுமே உண்மை. இந்த ‘டெர்மினட்டர்’ விதைகள் பற்றி அறியுமுன் மரபணு மாற்றிய விதைகள் பற்றி ஒரு விஷயம் தெரிந்து கொள்வது அவசியம்! எந்த மரபணுக்கூறு எந்த புரத்தத்தை உருவாக்குகிறது, அதை புகுத்தினால் வேலை செய்யுமா? பலன் இருக்குமா? இதெல்லாம் ஆராய்ச்சி மூலமே கண்டறிய முடியும். இவ்வகை ஆராய்ச்சிக்கு தற்காலத்தில் மிக அதிக செலவாகிறது (கோடிக்கணக்கில்). அதே சமயம், செய்யும் ஆராய்ச்சியில், 5% மட்டுமே சந்தைக்கு வரும் அளவு பலன் கொடுக்கிறது. எனவே கம்பெனிகள் அந்த செலவை மீறி லாபம் பார்க்க வேண்டுமெனில், விதைகளுக்கு காப்புரிமை பெற வேண்டும்; சினிமா மற்றும் சாஃப்ட்வேர் போல. காசு கொடுத்து காப்புரிமை பெற்ற சாஃப்ட்வேரோ, டி.வி.டியோ வாங்கும் ஒருவர் அதை காப்பி போட்டு பயன் படுத்தினால், அது எப்படி பைரஸி அல்லது திருட்டு வி.சி.டி ஆகிறதோ அது போல காப்புரிமை பெற்ற விதைகளை வாங்கும் விவசாயிகள் சாதா விதை போல தன் நிலத்திலிருந்து எடுத்து பயன் படுத்த முடியாது! எப்படி திருட்டு வி.சி.டி மற்றும் பைரசியால் சினிமாவும் சாஃப்ட்வேர் கம்பெனியும் பாதிக்கப்படுமோ அது போல காப்புரிமை பெற்ற விதையிலிருந்து விதை எடுத்து விவசாயி பயன் படுத்தினால் விதை கம்பெனி பாதிக்கப்படும்!! எனவே மரபணு மாற்றிய விதைகளை விவசாயி வாங்கும்போது காப்புரிமை ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டியிருக்கும். மரபணு மாற்றிய விதையை கம்பெனியிலிருந்து வாங்கினால் அதிலிருந்து விதை எடுத்து பயன் படுத்த விவசாயிக்கு உரிமை இல்லை! ஜீரணிக்க முடியவில்லை எனினும் நிதர்சனம் இது தான்!! நெடுங்காலமாக தன் வயலிலிருந்து விதை எடுத்து பழகிய விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.

டெர்மினேட்டர் விதைக்கு வருவோம். மரபணு மாற்றிய விதைகள் மூலம் கம்பெனி லாபம் அடைய “விதை காப்புரிமை” அவசியம். ஆனால் அதை நிர்வாகம் செய்வது அமெரிக்கா போல தொடர்பு கட்டுமானமும், சிறிதளவே விவசாயிகளும் உள்ள நாட்டில் சாத்தியம்.அதற்கே அவர்கள் விவசாயி நிலத்தில் சோதனை அது இது என நடத்த வேண்டும். அதை சுலபமாக்க விதை கம்பெனிகள் சிந்தித்த மாஸ்டர் ப்ளான் யுக்தி தான், ‘டெர்மினேட்டர் விதைகள்’ (வேடிக்கை என்னவென்றால், இந்த பெயரை கொடுத்தது கம்பெனிகள் அல்ல, இயற்கை ஆர்வலர்கள்). இந்த வகை விதைகளை விதைத்தால், பயிர் வளரும், மகசூலில் எந்த மாற்றமும் இராது, ஆனால் அறுவடை செய்த மணிகளை விதைத்தால் ஒன்றும் முளைக்காது! கம்பெனி விசே_ஷமாக உருவாக்கிய விதைகளோ, அதே கம்பெனியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்கி தெளித்தாலோ மட்டுமே முளைக்கும். இப்படி செய்வதன் மூலம் கம்பெனிகள் விவசாயிகள் விதையிலிருந்து விதை எடுத்து பயன் படுத்துவதை தடுக்க முடியும். டி.வி.டி.யில் “காப்பி ப்ரொடெக்ஷன்” என ஒரு தொழில்நுட்பம் உண்டு. அந்த டி.வி.டியை காப்பி போட்டு திருட்டு வி.சி.டி உண்டாக்க முடியாது. அது போல தான் இது. மீண்டும் சொல்கிறேன், இது போல விதைகள் உருவாக்கப்படவில்லை – ஆராய்ச்சியும் விவாதமும் மட்டுமே நடந்தது!

ஆனால், எல்லா மரபணு மாற்றிய விதைகளும் இது போல இல்லை. உதாரணமாக நான் மேல சொன்னமாதிரி அமெரிக்க பல்கலையில் உருவாக்கப்பட்ட வைரஸ் எதிர்ப்பு திறனுள்ள பப்பாளி இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது! அந்த பப்பாளியிலிருந்து விதை எடுத்து விவசாயிகள் மீண்டும் விதைக்கலாம். கலப்பு செய்து வேறு பப்பாளிக்கு மாற்றலாம். இந்த ஆராய்ச்சி மட்டும் நடக்காமல், இந்த வகை பப்பாளி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் வைரஸ் மூலம் உறவாயி (Hawaii) மாகாணத்தில் பப்பாளியே இல்லாது போயிருக்கும்.
இவ்வகை பப்பாளியை உருவாக்கிய விஞ்ஞானியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரது கருத்து; மரபணு மாற்றிய விதைகளால் பல நல்ல விஷயங்களை சாதிக்க முடியும். அதற்கு அதிகம் செலவும், ஆராய்ச்சியும் தேவை. பல்கலைகள் இவ்வகை ஆராய்ச்சி செய்யவும், விதைகளை வழங்கவும் அரசு உதவ வேண்டும். அல்லது கம்பெனிகளுடன் சேர்ந்து பல்கலைகள் இவ்வகை ஆராய்ச்சிக்கு முன் வர வேண்டும். இது பற்றி பிறகு விவாதிப்போம். அதற்கு முன், இவ்வாறு கம்பெனி அல்லாத நிறுவனங்கள் மரபணு மாற்றிய விதை உருவாக்கினால், விவசாயிகள் அதை முன் போலவே விதையிலிருந்து விதை எடுத்து பயன் படுத்த முடியுமா? நிச்சயம் முடியும்! வளர்வதிலும், விதை தருவதிலும் மரபணு மாற்றிய பயிர்களில் எந்த வித்தியாசமும் இல்லை. காப்புரிமை பெறுவதும், அதை காப்பாற்ற விதை ஒப்பந்தம் போடுவதும் கம்பெனிகள் மட்டுமே. மரபணு மாற்றம் செய்யும் தொழில் நுட்பமோ, லாபநோக்கின்றி இதை செய்யும் பல்கலைகளோ அல்ல. ஆனால் இதில் கம்பெனியை குறை சொல்லி பலன் இல்லை. காசு போட்டு ஆராய்ச்சி செய்து விதை உருவாக்கும் கம்பெனி அதை வைத்து லாபம் பார்க்காமல் இலவசமாக கொடுக்க முடியுமா? காசு போட்டு படம் எடுக்கும் ‘ஜக்குபாய்’ திருட்டு வி.சி.டியாக வரும்போது எப்படி திரைஉலகமும், அரசும் கொதித்து எழுகிறது? அது போல தான். நாம் போய் அந்த கம்பெனி உருவாக்கிய மரபணு மாற்ற விதையை தான் வாங்க வேண்டும் என்பதில்லை, நமக்கு விவசாய பல்கலையில் உருவாக்கிய மரபணு மாற்ற விதையும் இருக்கிறது. பாரம்பரிய விதையும் இருக்கிறது. டிக்கெட் விலையெல்லாம் தியேட்டர்ல ரொம்ப அதிகம் என்று நினைத்தால் இரு வழிகள் உண்டு. ஒன்று திருட்டு வி.சி.டியில் பார்க்கலாம் (என்ன? குண்டர் சட்டத்துல உள்ளே போக வேண்டிவரும்!) அல்லது டி.வி யிலோ, திரைப்பட விழாவிலோ திரையிடப்படும் குறும்படங்களையும் மற்ற நல்ல படங்களையும் பார்க்கலாம். அதே போல கம்பெனி விதையும், அதன் ஒப்பந்த விதிகளும் நமக்கு சரிவர வில்லையெனில், பலகலை உருவாக்கும் மரபணு மாற்ற விதைகளையோ பிற விதைகளையோ பயன் படுத்தலாம். பல்கலை உருவாகும் மரபணு மாற்றிய விதைகள் லாபநோக்கற்றவை!

மேலும், கம்பெனி விதையை மட்டுமே பலகாலம் பயன் படுத்தினால், நமது பாரம்பரிய விதைகளும் பயிர்களும் என்ன ஆகும் போன்ற கவலைகள் எழலாம்? இவை எல்லாம் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய, சிந்திக்கப்பட வேண்டிய விஷயங்கள் தான்! கம்பெனி கையில் விவசாயி குடுமி மாட்டாமல் இருக்க என்னென்ன விதிமுறைகள் உண்டோ அரசு வழி வகுக்க வேண்டும்.சரி, இவ்வளவு வேலை செய்து பயன் படுத்த வேண்டிய அளவுக்கு மரபணு மாற்றிய பயிர்கள் அவசியமா? அவசரமா? முன் சொன்னது போல நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த முடிவை நல்ல புரிதலுடன் எடுப்போம். அவசரமாக பரபரப்பு பத்திரிக்கை கட்டுரையை படித்து விட்டோ, ஒரு தலையான கருத்துகளை கேட்டு விட்டோ எடுக்க வேண்டாம். அவசரப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்தால் மரபணு மாற்ற தொழில் நுட்பத்தின் பலன்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாது. என்னய்யா நீ! இவ்வளவு பலன் இருக்குங்கிறே, ஆனால் ஐரோப்பாவில் இதை ஏன் தடை செய்திருக்கிறார்கள்? பல காரணங்கள் உண்டு. அவை எல்லாம் தீர சிந்தித்து எடுக்கப்பட்டதா? தேவையற்ற பயமா? இவ்வகை மரபணு மாற்றிய விதைகளால் என்னென்ன பிரச்சனைகள்? ஒவ்வொன்றாக பார்க்கலாம்!

__5__

மரபணு மாற்றிய உணவுகளின் பலன்கள் பற்றியும், விதையிலிருந்து விதைஎடுப்பதில் காப்புரிமை இல்லாத பட்சத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் பார்த்தோம். அப்புறம் ஏன் ஐரோப்பாவில் இத்தனை தடைகள்? மரபணு மாற்றிய உணவுகளுக்கு எழும் எதிர்ப்புகள் என்னென்ன? இவற்றில் முக்கியமானவை…

1. பிற தாவர கலப்பு: மரபணு மாற்றிய விதைகளின் மரபணு ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கு (அதாவது விதையிலிருந்து வளர்ந்து அந்த பயிரில் உண்டாகும் விதைக்கு) மகரந்தம் மூலம் செல்கிறது. பூக்களில் மஞ்சள் நிறத்தில் ஒரு பவுடர் போல இருக்குமே அது தான் மகரந்தம். இந்த மகரந்தம் காற்றிலோ, வண்ணத்துப்பூச்சிகள் மூலமோ, வண்டுகள் முலமோ இன்னொரு பூவையும் சென்றடையும். இதன் மூலம் மாற்றம் செய்த மரபணு வேறொரு வயலுக்கோ, செடிக்கோ செல்லுமா? ஆம்! இது சாத்தியமே!! இதற்கு எவ்வளவு சாத்தியம்? விளைவுகள் என்ன? தடுக்க முடியுமா? சற்றே விரிவாக பார்ப்போம்.

பயிர்களில் பல வகை கலப்பு உண்டு. நெல் போன்ற சில பயிர்களில் மகரந்தம் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு செல்ல மிக மிகக்குறைவான சாத்தியமே உண்டு. மக்காசோளம் போன்றவற்றில் ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாக வளரும். எனவே இங்கே ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு மகரந்தம் செல்லும் வாய்ப்பு அதிகம். பி.டி. மக்காசோளத்திலிருந்து பக்கத்து விவசாயியின் சாதா மக்காசோளத்திற்கு பி.டி. மரபணு செல்லுமா? அப்படி சென்றால் என்ன ஆகும்? பி.டி. மக்காசோளத்திலிருந்து பக்கத்து விவசாயியின் சாதா சோளத்திற்கு பி.டி. மரபணு செல்ல வாய்ப்புள்ளது. அப்படி சென்றால் அந்த மகரந்தம் மூலம் உண்டான விதை மட்டும் பி.டி. பூச்சி எதிர்ப்பு திறனுடன் இருக்கும். இதே மகரந்தம் வெறொரு களை செடிக்கு சென்றால்? அந்த களை செடியும் பி.டி எதிர்ப்பு பெற வாய்ப்புள்ளது. களை செடி பூச்சி எதிர்ப்பு திறன் பெற்றுவிட்டால், அதை அழிப்பது கடினமாகி விடுமா? களை செடி களைக்கொல்லி எதிர்ப்பு பெற்றால் என்னாவது? இதெல்லாம் சந்தேகங்கள், கவலைகள். ஆனால், பல தாவரங்களில் ஒரு தாவரத்தின் (species) மகரந்தம் மற்றொரு தாவரத்தின் பூவில் விதை உண்டாக்க முடியாது! வெண்டை செடியையும் கத்திரி செடியையும் கலப்பு செய்ய முடியாதில்லையா? அது போல! எனவே பயிர்களிலிருந்து களைகளுக்கு மரபணுக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. பயம் கொள்ளத் தேவை இல்லை.

இவ்வகையில் மாற்றம் செய்த மரபணு மகரந்தம் மூலம் பரவ வாய்ப்பு மிக மிக குறைவெனினும், அதை தடுக்கவும் வெகுவாக குறைக்கவும் வழிமுறைகள் உண்டு. உதாரணமாக, விவசாயிகள் பயிர் செய்யும்போது ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு தேவையான இடைவெளி விடுதல். இருக்குறதே கொஞ்ச நிலம் இதுல இடைவெளி விட்டா என்ன செய்யுறது? இடைவெளின்னா தரிசா விட வேண்டாம். அங்கே கலக்காத வேறு பயிர்கள் விதைக்கலாம். பி.டி. கத்திரியை சுத்தி வெண்டை போடலாம். இது அவசியமா? இப்படி எல்லாம் வழிமுறை பண்ணி செய்யுற அளவுக்கு மரபணு மாற்றிய பயிரால் பலன் உண்டா? இந்த கேள்வி விவாதத்துக்குறியது! என்னைக்கேட்டால் “பயிரைப்பொருத்து நிச்சயம் உண்டு” என்று சொல்வேன். உதாரணமாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால் நம்மிடம் அதிக அளவில் மனித வளம் உண்டு. எனவே மண் அரிப்பின்றி களை எடுக்க முடியும். எனவே, நம்ம ஊருக்கு கலைகொல்லி எதிர்ப்பு பயிர்கள் அவசியமில்லை. ஆனால், பி.டி. கத்திரியால் பலன் இருக்கும் என்பதே எனது கணிப்பும், கருத்தும். எப்படி? நம் ஊரில் கத்தரி விவசாயிகள் சராசரியாக 12 முறை பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்! நினைத்துப்பாருங்கள். மனைவி சொல்லை தட்டாமல் பூச்சி இல்லாத நல்ல கத்திரி ஒவ்வொரு முறையும் நீங்கள் கடையில் பொறுக்கி எடுக்கும் போது அதில் எவ்வளவு பூச்சி மருந்து இருக்கும் என? பி.டி. கத்திரியில் 4 முறை மருந்து தெளித்தாலே போதும். எவ்வளவு பூச்சி மருந்து உபயோகம் குறையும்? எவ்வளவு பலன் நமக்கு? சுற்று சூழலும் மேம்படும்!! திறந்த மனதுடன் சிந்தித்து பி.டி. கத்திரியை சோதனை முறையில் பயிரிட முயற்சி செய்வது மிக அவசியம்.

பி.டி பருத்தி பொய்த்து விட்டதே? என்ன ஆச்சு? நான் படித்ததும் அறிந்ததும் பல விஷயங்கள். துரதிருஷ்டவசமாக பி.டி. யின் பலனுக்கு இந்தியாவில் அறிமுகமான பருத்தி சரியான உதாரணமில்லை. சிலரின் பொறுப்பற்ற தனத்தால் விளைந்த தவறாக இருக்கலாம். பி.டி. என்பது குறிப்பிட்ட புழு வகை பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். வேறு எந்த பலனையும் அளிக்காது. அந்த பி.டி மரபணுவை ஒரு பகுதியில் நன்கு விளையும் பருத்தி ரகத்தில் புகுத்தினால் அதே நன்கு விளையும் பருத்திக்கு புழு எதிர்ப்பு திறன் உண்டாகும். பி.டி. என்பதாலேயே அமெரிக்க பருத்தி விதையை ஆந்திராவில் விதைத்தால் பலன் தருமா? பி.டி. நெல் என்பதால் சம்பா ரக நெல்லை குறுவையில் பயிரிட்டால் என்ன ஆகும்? சம்பா நெல் குறுவையில் பலன் தராமல் போக பி.டி. காரணமா? தவறான பருவத்தில், தவறான பகுதியில் தவறான விதை பிரயோகம் காரணமா? சிந்திப்போம். அவசரப்பட்டு லாபத்திற்காக சிலர் தவறான பகுதிக்கான பி.டி. விதையை விற்றிருக்கலாம். விவசாயிகளிடம் “பி.டி. புழுவை மட்டுமே கட்டுபடுத்தும்; வெள்ளை ஈ போன்ற பூச்சிகளுக்கு மருந்து அடிக்க தான் வேண்டும்” என கம்பெனியார் ஒழுங்காக சொல்லாமலிருக்கலாம். ஏனெனில், பஞ்சாபிலும் அரியானாவிலும் விவசாயிகள் பி.டி. பருத்தி மூலம் நல்ல பலன் அடைந்துள்ளனர் (http://www.indianexpress.com/news/bt-cotton-gives-punjab-record-yield/12653/). ஆனால், பத்திரிக்கைகள் விவசாயிகள் பலன் அடைந்த செய்தியை இந்த அளவு வெளியிடவில்லை. விவசாயி தற்கொலை செய்தால் பரபரப்பு செய்தி, பலனடைந்தால் அது செய்தியில்லை. சுஜாதா இருந்திருந்தால் “இந்த ஜீன் சமாசாரமெல்லாம் சரி தான்! சோதனை அடிப்படையில் நிச்சயம் பயிரிடலாம். சும்மா தவளை தக்காளின்னு ஜல்லியடிக்காதீங்க”ன்னு வெட்டிவாதிகளுக்கு குட்டு வைத்திருப்பார்.

2. விதை கம்பெனி கையில் விவசாயி சிண்டு? பன்னெடுங்காலம் கம்பெனி விதையை மட்டுமே பயன்படுத்தினால் அப்புறம் விதைக்கும் உணவுக்கும் கம்பெனியிடம் கையேந்தும் நிலை வருமா? நாம் அன்றாடம் பயன் படுத்தும் விண்டோஸ் கணினி பிரபலமடைந்த போது சொன்னார்கள்; எல்லா கம்பியூட்டர்லயும் ஒரு ரகசிய விஷயம் வச்சிருக்காங்க; உலகமே அப்பறம் பில் கேட்ஸ் கையில் போயிடும் அப்படின்னு. விண்டோஸ் பயன் படுத்தாத ஆள் உண்டா? நானும் உபுன்டு, ஆப்பிள்னு பயன் படுத்துறேன். ஆனால், ஆபிஸ் போனால் பல இடங்களில் விண்டோஸ் கணினி தான். யாராவது விண்டோஸ் உபயோகிக்க பயப்படுறோமா? இது ஒரு தேவையற்ற பயம். எனினும், இவ்வாறு நடவாதிருக்க அரசு தான் காக்க வேண்டும். மரபணு மாற்றிய விதை தான் விதைக்க வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த வில்லை. நம் பாரம்பரிய விதைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு பாதுகாப்பும், பிற விதை இனங்கள் அழியாதிருக்க நடவடிக்கையும் எடுப்பது அவசியம். மைக்ரோசாஃப்டுக்கு எதிராக மோனோபொலி விதிகள் செயல் பட்டது போல அவசியம் செய்ய வேண்டும்; விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இந்த காரணத்துக்காக மரபணு மாற்றும் தொழில்நுட்பத்தை எதிர்க்க தேவை இல்லை. இந்த பயம் கம்பெனி விதைக்கு மட்டுமே பொருந்தும். பல்கலைகள் உருவாக்கும் மரபணு மாற்றிய விதைகளை விவசாயிகள் பயன் படுத்தலாம். நமது பாரம்பரிய ரகங்களுடன் கலப்பு செய்து தேவையான ரகங்களில் தேவையான மரபணுவை புகுத்தலாம். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் போல.

3.மனிதர்களுக்கு தீங்குகள்? பிற தாவரங்களிலிருந்தும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் மூலக்கூறுகளையும் புரதங்களையும் உணவுப்பயிர்களில் புகுத்தினால் மனிதர்களுக்கு தீங்கு நேருமா? இதுவரை முறையாக செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படியும், சோதனைகளின் படியும் ஒரு சில மரபணு மாற்றிய உணவுகளால் வெகு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என அறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால் பால், கோதுமையால் உண்டாகும் ஒவ்வாமையை விட இவ்வகை உணவுகளில் அறியப்பட்ட ஒவ்வாமை மிகக் குறைவு. ஆனால், சோதனையில் ஒவ்வாமை என அறியப்பட்ட உணவுகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கூட அளவிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. சந்தைக்கு வரவில்லை. எனவே, இதில் ஆராய்ச்சியாளர்களின், கம்பெனிகளின் பொறுப்புணர்வு மிக முக்கியம். கம்பெனிகள், மற்றும் விஞ்ஞானிகளை நம்பி இவற்றை ஏற்கலாமா? மருந்து கம்பெனிகளை நம்பி மருந்து வாங்குவது போல தான். அரசு இவ்வகை சோதனைகளுக்கு தனி ஆய்வுக்கூடங்களையும், இவ்வகை சோதனைகளில் திறன் பெற்ற விஞ்ஞானிகளையும், தொழிளாலர்களையும் உண்டாக்குதல் அவசியம்.

மரபணு புகுத்திய உணவை உண்டால் அந்த மரபணு மனிதருக்குள்ளும் புகுந்து விடும் என சொல்லி, அதற்கு ஒரு ஆராய்ச்சி முடிவையும் மேற்கோள் காட்டும் “சீட்ஸ் ஆஃப் டிசப்ஷன்” (seeds of deception) எனும் புத்தகம்/வலைதளம் பார்த்தேன். அவர்கள் சொல்வது உண்மையா? வெறும் பரபரப்பு!! எப்படி? சொல்கிறேன்.

__6__

மரபணு புகுத்திய உணவை சாப்பிட்டால் மரபணு நமக்கும் புகுந்து கொள்ளுமாம்? ஆராய்ச்சி முடிவு சொல்கிறதாம். சிரிப்பு தான் வருகிறது! யாராவது பேய் நமக்குள்ளே புகுந்துக்கும்னு சொல்ற மாதிரி (http://www.seedsofdeception.com/).
நான் முதன் முதலில் கூறியது போல, எல்லா உயிரினங்களிலும் மரபணு உள்ளது. நாம் வெண்டைக்காய் சாப்பிடுகையில் வெண்டையின் மரபணுவையும், சிக்கன் சாப்பிடுகையில் சிக்கனின் மரபணுவையும் சேர்த்து தான் சாப்பிடுகிறோம். அவை எல்லாம் நம் உடம்பில் புகுந்து நம்மை வெண்டைக்காயாக மாற்றுகிறதா? சிக்கனாக மாற்றுகிறதா? ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு சாப்பிடுகிறான்? அந்த மரபணு எல்லாம் மனித உடலில் புகுவதற்கும் மாற்றம் உண்டாக்குவதற்கும் ஆதாரம் உண்டா? இரு புறமும் இது மாதிரி பல வெத்து ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டுவதே மக்களுக்கு தெளிவு இல்லாமல் இருக்க காரணம். நடுநிலையான விஞ்ஞானிகளையும், தெளிவான ஆராய்ச்சிகளையும் மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்.இவ்வளவு ஏன்? பி.டி. பி.டி. என குதிக்கும் பி.டி புரதம் வந்ததே ஒரு மண்ணில் வாழும் நுண்ணுயிரிலிருந்து தான். இந்த நுண்ணுயிரி கீரை போன்ற தாவர இலைகளில் இயற்கையாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது (குறிப்பாக இந்திய விஞ்ஞானிகளால்). கீரை சாப்பிடும் போது இவ்வாறு பல நுண்ணுயிரிகளையும் சேர்த்து தான் உண்கிறோம், பல காலமாக உண்டு வருகிறோம். இப்படி சாப்பிடுவதால் நம் உடலில் பி.டி. புகுந்து விட்டதா? எனவே இது போன்ற பயமுருத்தல்கள் அர்த்தமற்றவை.

4. நீண்ட கால விளைவுகள்?

மரபணு புகுத்துவதால் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் பற்றி எதுவும் தெரியுமா? இதற்கு பொதுவான பதில் இல்லை. ஒரு செல்லில் மரபணு புகுத்தல் நிகழும்போது அது வேறு தெரியாத விளைவுகளை ஏற்படுத்துமா? மரபணு புகும் இடத்தை அறியும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. எந்த இடத்தில் மரபணு புகுந்தது அதனால், விளைவு இருக்குமா? என்பதை கணிக்கவும் சோதனை மூலம் அறியவும் முடியும். எள்ளளவு சந்தேகம் ஏற்படினும் ஆராய்ச்சியை நிறுத்த வேண்டியது தான். மரபணு புகுந்த இடம் தெரியாத போதோ, நீண்ட கால விளைவுகளை நினைத்து பயம் வந்தாலோ இன்னும் அதிக சோதனைகள் செய்வது தான் ஒரே வழி. சரி எத்தனை சோதனைகள் செய்வது? முடிந்த வரையில், அறிந்தவரையில்! அவசியம் உண்டாகும் வரை செய்ய வேண்டியது தான். இந்த சோதனைகள் பிற்காலத்திற்கு மிக உதவிடும். நீண்டகால விளைவுகள் பற்றி கவலைப்படாமல் பல பல மருந்துகளை சாப்பிடுகிறோம் (மரபணு மாற்றத்தால் உருவான இன்சுலின் முதற்கொண்டு). மரபணு மாற்ற உணவுகளை எதிர்க்கிறோம். ஏன்? மருந்துகள் உயிர் காப்பவை! மிக அவசியம். செல்ஃபோன் பயன் படுத்தினால் கேன்சர் வரும் என ஒரு பரபரப்பு கிளம்பியது. ஆனால், இப்போது செல் அவசியமாகிவிட்டதால் அதை பற்றி யாரும் கவலை படுவதில்லை. நிண்டகால விளைவுகளுக்காக காத்திருக்காமல் எல்லோரும் உபயோகம் செய்கிறோம். அதிலும் ஒரு சிலர் காதிலேயே தோடு போல செல்லை தொங்க விடாத குறை தான். புதிய கண்டுபிடிப்புகள் வளர வளர அவற்றின் நிறை குறைகளுக்கேற்ப வழிமுறைகளும் விதிமுறைகளும் மாறினால் எவ்வித நீண்டகால விளைவுகளையும் குறைக்கலாம். இணையம் தோன்றிய போது, நல்ல விதமாக எல்லோரும் பயன் படுத்தினர்; பேஸ்புக்கையும், ஆர்குட்டையும் ஆகா ஓகோ என்றனர். அப்புறம் வந்தது சைபர்க்ரைம் செல்லுக்கு வேலை. இதுபோல விஞ்ஞான தொழில்நுட்பங்களில் பிரச்சனைகள் வரின் தக்க வழிமுறைகளும் விதிமுறைகளும் உருவாக வேண்டும். இந்த வெப்பமயமாதல், நீர் தட்டுப்பாடு இவற்றால் பின்னாளில் மரபணு மாற்றிய பயிர்கள் அவசியம் எனும் நிலை வரலாம். இப்போதே சோதனைகள் செய்தால் தான் பின்னாளில் பயமின்றி இருக்கலாம். எனவே சும்மா முறையான ஆராய்ச்சியின்றி பயமுருத்தும் வீணர்களை நம்பாமல் சிந்தித்து முடிவு செய்வோம்.

இயற்கைவிவசாயிகள் ஏன் மரபணு மாற்ற விதைகளை எதிர்க்கிறார்கள் என்பதே ஒரு புரியாத புதிர்! பி.டி பாக்டீரியாவை அப்படியே பயிரில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தினால் இயற்கை விவசாயம். அந்த பாக்டீரியாவின் க்ரை புரத்ததை செடியிலேயே உற்பத்தி செய்து பாதுகாப்பது மரபணு மாற்றம். இரு வகை தொழில் நுட்பங்களாலும் பூச்சி மருந்து உபயோகத்தைக் குறைத்து இயற்கையை காக்க முடியும். சொல்லப்போனால், இரு முறைகளையும் கலந்து பயன் படுத்தினால் பலன் அடைய அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை, பருவ நிலை மாற்றம், நீர் ஆதார சுருக்கம் இவற்றுக்கு வெறும் இயற்கை முறை விவசாயமோ, மரபணு மாற்றம் மட்டுமோ தீர்வு கொடுக்க முடியுமா? தெரிய வில்லை. நிலப்பகுதிக்கும் பயிருக்கும் எற்ப மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

பசுமை புரட்சி போன்ற புதிய தொழில்நுட்பங்களால் விளைநிலம் பாழ்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதில் உண்மை இருப்பினும், வெறும் தொழில்நுட்பத்தை குற்றம் சாட்டுவது முறையல்ல. நம் ஊரில் ஒரு பழக்கம் – ஏதாவது நடந்தால் உண்மையான காரணம் அறிய முயலாமல் அதற்கு யாரையாவது குற்றம் சாட்டிவிட்டால் பிரச்சனை முடிந்தது! ஒருவன் குற்றம் செய்தால் மூல காரணம் அறியாமல் அவனை ஜெயிலில் போட்டு விட்டால் போதுமா? விளைநிலம் பாழாக விகிதாசாரமின்றி உரங்கள் பயன் படுத்தப்பட்டது ஒரு பெரும் காரணம். அறியாமை அதிகமுள்ள விவசாயிகள் இருக்கும் சூழலில், வெறும் யூரியாவை மட்டும் வயலில் போட்டு பசேலென்று வளரும் பயிர் நன்றாக விளையும் என நினைக்கும் எத்தனையோ விவசாயிகள் உண்டு. யூரியா கொடுப்பது தழைச்சத்து மட்டுமெ; இன்னும் சாம்பல் சத்து, மணிச்சத்து போன்றவை வேர் பிடிக்கவும், கதிர் பிடிக்கவும் அவசியம். உரக்கடைகாரர்கள் பேச்சை கேட்டு உரம் போடுவது, பார்மசியில் மருந்து வாங்கி சாப்பிடுவது போல. அறியாமை தீர்த்து புதிய தொழில் நுட்பத்தின் பலன்கள், பங்கங்களை அறிந்து செயல் படுத்தவும் பயன் படுத்தவும் நம் விவசாயிகளை தயார் செய்ய வேண்டும்.

பி.டி பருத்தி போல புதிய இரகங்கள் அதிக காசு கொடுத்து வாங்கி பொய்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விதை கம்பெனிகள் விவசாயி நிலத்தில் குறைந்தது மூன்று போகம் சோதனை பயிர் செய்து காட்ட வேண்டும். விவசாயிகள் அதன் பின் முடிவு செய்யலாம் இந்த மரபணு மாற்றிய விதை வேண்டுமா இல்லையா என. அதற்கு முன், இவ்வகை பயிர்கள் பற்றி ஓவ்வாமை, பிற தாவர கலப்பு போன்ற ஆராய்ச்சிகளை அரசோ விவசாய பல்கலைகழகங்களோ செய்யலாம். அல்லது முன் சொன்ன மாதிரி இதற்கென தனி நிறுவனங்கள் உருவாக்கலாம்.

மரபணு மாற்றத்தில் இவ்வளவு கவனிக்க விஷயம் இருக்கு, புது விதிமுறைகள் உருவாக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்.ரொம்ப ரிஸ்க் இருக்கும் போலிருக்கே? உயிர் காக்கும் மருந்தும், பி.டி. கத்திரியும் ஒன்றா? இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் இதை செய்ய வேண்டும்? Is it worth the risk? நிச்சயமாக! ஒரு சின்ன உதாரணம் சொன்னால் வியப்படைவீர்கள். மரபணு மாற்றிய தாவரங்கள் மூலம் கண்ணி வெடிகளை கண்டறிய முடியும் என்றால் நம்புவீர்களா?

__7__

செடிகளை வைத்து வெடிகுண்டை கண்டறிய முடியும் என்று சொன்னேன். எப்படி?

பல வருடங்களுக்கு முந்தைய போர்களில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளால் இன்றும் கை, காலையோ, உயிரையோ இழக்கும் மனிதர்களும், விலங்குகளும் எராளம், நம் ஈழதமிழ் மக்கள் உட்பட. கண்ணி வெடிகளை கண்டறிவது நெடுநேரம் பிடிக்கும், ஆபத்தான செயல். தாவரங்கள் மூலம் கண்ணி வெடிகளை கண்டறிந்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்? கண்ணிவெடிகளில் இருக்கும் வெடி மருந்து வேதிப்பொருட்களை கண்டறிந்து தன் இலையின் நிறங்களை பச்சையிலிருந்து கருஞ்சிவப்பாக மாற்றிக்கொள்ளும் தாவரம் ஒன்று டென்மார்க் விஞ்ஞானிகளால் மரபணு மாற்றம் மூலம் உண்டாக்கப்பட்டுள்ளது. இவ்விதைகளை விமானம் மூலம் தூவி விட்டு 2 – 3 வாரம் கழித்து பார்த்தால் கண்ணிவெடி உள்ள இடங்களில் தாவரங்கள் கருஞ்சிவப்பாக மாறி இருக்கும். அங்கே சென்று சோதனை செய்து கண்ணிவெடியை அகற்றலாம். இவ்வகை செடிகள் இயற்கையில் பரவாதிருக்க அவை பூ பூக்காதவகை தாவரத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. விதை வேண்டும்போது ஆராய்ச்சிகூடத்தில் மருந்து தெளித்து உண்டாக்கிக்கொள்ளலாம். இயற்கையில் அவை கண்ணி வெடியை காட்டிக்கொடுத்து விட்டு மடிந்து விடும். தற்போது டென்மார்க் ராணுவத்துடன் இணைந்து இவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன (http://news.bbc.co.uk/2/hi/3437019.stm). என்ன ஒரு கண்டுபிடிப்பு? என்ன மாதிரி பலன்? மரபணு மாற்றம் இல்லாமல் நினைத்துப்பார்க்க முடியுமா?

மரபணு மாற்றிய உணவுகள் உயிர் காப்பவை என்பதற்கு இன்னும் உதாரணங்கள் உண்டு. நம் குழந்தைகள் எல்லோருக்கும் போலியோ தடுப்புசியோ சொட்டு மருந்தோ கொடுக்கிறோம். சில கிராமங்களில் இவ்வகை மருந்துகள் சரியான குளிர்பதன நிலையில் வைக்கப்படாமல் குழந்தைகளுக்கு மோசமான பின்விளைவுகள் (துரதிருஷ்டவசமாக மரணம் உட்பட) ஏற்பட்டுள்ளன. குளிர்பதன வசதி தேவை இல்லாத தடுப்பு மருந்தை உண்டாக்க முடியுமா? முடியும் என்கிறது மரபணு மாற்ற ஆராய்ச்சி! வாழை ஆப்பிள் போன்ற குளிர்சாதன வசதி தேவையற்ற பழங்களிலும், காய்கறிகளிலும் பிற தாவரங்களிலும் மரபணு மாற்றம் மூலம் சொட்டு மருந்தை உண்டாக்கலாம்!! வியப்பாக இருக்கிறதா? சொல்லப்போனால் ஆராய்ச்சி இன்னும் முன்னேற்றம் அடைந்தால் இவ்வகை வாழையை சாப்பிட்டாலே தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு சமமாகி விடும் (http://www.nsf.gov/od/lpa/nsf50/nsfoutreach/htm/n50_z2/pages_z3/16_pg.htm). அப்புறம் எந்த குழந்தையாவது தடுப்பூசிக்கு பயப்படுமா? எத்தனை கிராமங்களுக்கு எளிதில் தடுப்பு மருந்துகள் சென்றடையும்? என்ன ? மரபணு மாற்றிய உணவுகள் உயிர் காக்கும் மருந்துக்கு சமம் தானே? சரி – மருந்து வாழையையும் சாதா வாழையையும் எப்படி வேறுபடுத்திக் கண்டறிவது? முன்னர் கண்ணி வெடி கண்டறியும் தவரங்களுக்கு சொன்ன மாதிரி இவ்வகை வாழைகள் சும்மாகவே ஊதா நிறத்திலோ, கருஞ்சிவப்பு நிறத்திலோ இருக்குமாறு செய்ய முடியும். அது எப்படி கலர் உண்டாக்குவது? அந்த கலர் வாழையை சாப்பிடலாமா? இந்த நிறம் வேறொன்றுமில்லை. கத்திரி தோலிலும், திராட்சை தோலிலும் இருக்கிறதே. அதே மூலக்கூறு தான். இன்னும் சொன்னால் வாழைப்பூ மடலில் கூட இருக்கும். அதை கொஞ்சம் மாற்றி பழத்தில் வர வைக்க வேண்டியது தான். ஆச்சர்யமாக இருக்கிறதா?

இன்னொரு விஷயம் தெரிந்தால் ஆச்சர்யம் மட்டுமல்ல? மரபணு மாற்ற உணவுகளை காரணமின்றி எதிர்க்கும் கூட்டத்தை நினைத்து கோபமும் வருத்தமும் அடைவீர்கள்! லட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்துக்கும், நிரந்தரமாக கண் பார்வை இழப்பதற்கும் காரணம் விட்டமின் ஏ குறைபாடு. இவை பெரிதும் நிகழ்வது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் (இந்தியா உட்பட). விட்டமின் ஏ குறைபாட்டை உணவின் மூலம் எளிதில் தீர்க்கலாம். கேரட், பப்பாளி, மாம்பழம் போல விட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் மூலம் தீர்க்கலாம். அன்றாட உணவுக்கு அரிசி கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களிடம் கேரட் சாப்பிடு என்று சொல்ல முடியுமா? எல்லோருக்கும் விட்டமின் மாத்திரை கொடுப்பதும் அவற்றை சரியாக சாப்பிட சொல்வதும், கண்காணிப்பதும் சாத்தியமா? அவர்கள் தினமும் உண்ணும் அரிசியில் விட்டமின் சத்தை சேர்த்து விட்டால்? பிரச்சனை தீர்ந்தது!! சிறிதளவு அரிசி சாப்பிட்டாலும், சத்துள்ள அரிசியாக சாப்பிடுவர்; விட்டமின் சத்தை பெறுவர். எப்படி சாத்தியம்? இருக்கவே இருக்கிறது மரபணு மாற்ற தொழில் நுட்பம்! இதன் மூலம் ஸ்விஸ் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியது தான், “தங்க அரிசி” (கோல்டன் ரைஸ்; golden rice). மரபணு புகுத்தல் மூலம் சாதா அரிசியை விட பல மடங்கு அதிக விட்டமின் ஏ சத்துடைய தங்க அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. பில் & மெலின்டா கேட்ஸின் நன்கொடை மூலம் ஆராய்ச்சி தொடர்கிறது (http://www.goldenrice.org/). தற்போதைய கணிப்புகளின் படி வெறும் 150 கிராம் தங்க அரிசி சாப்பிடுவதன் மூலம் ஒருவர் தேவையான விட்டமின் ஏ பெற முடியும். எவ்வளவு உயிர்கள் பிழைக்கும்? எத்துனை குழந்தைகள் பார்வை இழக்காமல் இருக்கும்? 2000ம் ஆண்டிலேயெ உருவாக்கப்பட்டு 2005ம் ஆண்டில் செழுமை படுத்தப்பட்ட தங்க அரிசி இன்னும் பயன் பாட்டுக்கு வரவில்லை. முக்கியமான காரணம் வீணர்களின் எதிர்ப்பும் பொய் பிரசாரமும் தான்.

நம் ஊரிலும் எதிர்ப்பாளர்கள் சும்மாவெனும் ‘சமுதாய வித்தியாசம், உணவு பொருட்களை சரிவர பகுந்து கொடுப்பது, கீரை சாப்பிடுவது மூலம் விட்டமின் ஏ குறைபாட்டை தீர்க்க முடியும். தங்க அரிசி தேவையில்லை’ என பிரசாரம் செய்கின்றனர். இவ்வளவு காலம் நம் ஊரில் கீரை இல்லையா? ஏன உணவுகள் சரிவர பகிரப்படவில்லை? இரண்டில் எது நல்ல தீர்வு? ஏன் இரண்டையும் செய்ய முடியாதா? எதிர்ப்பாளர்களிடம் பதில் இல்லை. அவர்களின் நோக்கம் விட்டமின் குறைபாட்டு மக்களுக்கு உதவுவதா? இல்லை சும்மாவெனும் எதோ காரணம் சொல்லி மரபணு மாற்றத்தை எதிர்ப்பதா? நினைத்துப்பாருங்கள். மற்ற கம்பெனி மூலம் உருவாகும் மரபணு மாற்றிய உணவுகளைப்போல விதை காப்புரிமை பிரச்சனைகள் இதில் இல்லை. இது அதிக அளவில் சோதனை செய்யப்பட்டுவிட்டது. என்ன சொல்கிறிர்கள்? பிடிவாதமாக தங்க அரிசியையும் எதிர்த்து பல லட்சம் மக்களின் இறப்பையும், பார்வை இழப்பையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்பொகிறோமா? சொல்லுங்கள். அப்படி செய்தால் பார்வையை இழந்து துன்புறுவோரைப் பார்த்து சும்மா இருக்கும் நாமும் பார்வையிழந்ததற்கு சமமே!

இவை எல்லாம் வளர்ந்து முன்னேறிய ஆராய்ச்சி முடிவுகள். இன்னும் பல பல பல்கலை ஆராய்ச்சி சாலைகளில் சிறு சிறு ஆய்வுகள் நடக்கின்றன; அவற்றிலிருந்து இன்னும் பல உயிர் காக்கும் கண்பிடிப்புகள் வரலாம்; மரபணு மாற்றம் மூலம் சாத்தியமாகலாம். நடு நிலையுடன் சிந்திப்போம். முடிவெடுக்குமுன், எதிர்க்குமுன் தெளிவடைந்து செய்வோம். மரபணு மாற்றிய உணவுகளைப்பற்றி கொஞ்செமேனும் தெளிவு பெற இந்த கட்டுரை உதவியிருக்குமென நம்புகிறேன். உங்கள் ஆர்வத்துக்கும் நேரத்துக்கும் மிக்க நன்றி. வழக்கம் போல விவாதத்துக்கோ கேள்வி/சந்தேகங்களுக்கு பதில் தரவோ நான் தயார் (marabanu.manian@gmail.com). அது வரைக்கும், வாருங்கள் போய் கொஞ்சம் மரபணு உண்போம்!!

——————————————

Series Navigation