பரிமளவல்லி 22. தேறுதல்

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

அமர்நாத்



22. தேறுதல்

செவ்வாய் காலை, அறைக்கு வெளியில் நடமாட்டம் கேட்குமுன் சரவணப்ரியா எழுந்து, முதல்நாள் எடுத்துவந்த உடைக்கு மாற்றிக்கொண்டாள். பரிமளா கண்விழிக்கக் காத்திருந்தபோது கதவுதட்டும் சத்தம். எழுந்து திறந்தாள். உற்சாகமும் நம்பிக்கையும் தரும் முகத்தோடு ஐரீன்.
“ஹாய் சாரா!”
“ஹாய் ஐரீன்! என்ன இவ்வளவு சீக்கிரம்?”
“நான் இன்று ‘க்ரீன்ஹில்ஸ் அனிமல் கிளினிக்’கில் வேலைசெய்ய வேண்டும். அங்கே போவதற்குமுன் பார்த்துப்போக வந்தேன். பரி எப்படி இருக்கிறாள்?” என்று படுக்கை அருகில்சென்று பார்த்தாள். நிம்மதியாக அவள் தூங்குவதைப் பார்த்து, “நேற்றைக்கு இன்று எவ்வளவோ முன்னேற்றம்” என்று திருப்திப்பட்டுக் கொண்டாள்.
“சாலைகள் எப்படி?”
“சில இடங்களில் வழுக்கியது. இன்னும் ஒருமணி போனால் எல்லா பனியும் உருகிவிடும்.”
கதவைத் தட்டிவிட்டு ஒரு நர்ஸ் நுழைந்தாள். காலையின் புத்துணர்ச்சியைப் பரப்பவதுபோல் ரோஜாவின் நிறத்தில் சட்டையும் பான்ட்ஸ{ம். அவளே அந்த நிறம்தான். அவள் வருகைக்காக காத்திருந்ததுபோல் பரிமளா கண்களைத் திறந்தாள்.
“எக்ஸ்க்யூஸ் அஸ்!” என்றாள் நர்ஸ் பணிவாக.
“ஐரீன்! வெளியே சென்று காத்திருக்கலாம்.”
பொது இடத்தில் ஒரு சோஃபா. நாளின் முழு நடமாட்டம் இன்னும் தொடங்கவில்லை.
உட்கார்ந்ததும், “சாரா! நீ சரியாகத் தூங்காததுபோல் தெரிகிறதே. புது இடம். தூக்கம் வரவில்லையோ?” என்றாள் ஐரீன் அக்கறையாக.
“அதனால் இல்லை. பரி தூக்கத்தில் ஏதேதோ பேசினாள்.”
“கடும் ஜுரத்தில் அது இயற்கை. கனவுமாதிரிதான், பேச்சு ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கும்.”
“அவள் சொன்னதில் சில வார்த்தைகள் தெளிவாக என் காதில் விழுந்தன. அவள் எதிர்காலம் எப்படி அமையுமோ என்கிற பயம்போல் தெரிகிறது. அவளைக் கவனித்துக்கொள்ள கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை. உறவுசொல்ல அண்ணனின் மகள் ஒருத்தி. பெயரளவில்தான் உறவு. இனி யாருடைய ஆதரவு அவளுக்குக் கிடைக்கும் என்கிற கவலை அவளுக்கு. அது என்னையும் பற்றிக்கொண்டது.”
“இங்கே வரவழைப்பதற்கு முன்பே உனக்கு பரியைத் தெரியும்போல இருக்கிறதே” என்று தன் கவனிப்பை ஐரீன் வெளிப்படுத்தினாள்.
“எங்களுடன் கல்லூரியில் படித்தாள். அதைவிட அவள் சாமின் சிறுவயதுத் தோழி என்பதுதான் முக்கியம். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவளை மறுபடி சந்திக்கிறோம். ஆனாலும், அவளைப் பார்க்கும்போது விதி வேறுவிதமாக பகடை ஆடியிருந்தால் நாங்கள் இடம் மாறியிருப்போம் என்று நினைக்கத் தோன்றுகிறது.”
ஐரீன் முகத்தில் சிந்தனையின் கோடுகள்.
“தனியாக வாழவேண்டும் என்பது வாழ்க்கையின் போக்கில் அவள் எடுத்த முடிவு. அது சரியா என்று இப்போது விவாதிப்பதில் அர்த்தமில்லை. முன்னோக்கிப் பார்த்து நாம் எதையும் தீர்மானிப்பதில்லை, அப்போதைக்கு எது முடிகிறதோ அதைச் செய்கிறோம். இப்போது பரி உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. இன்னும் சில ஆண்டுகளில், ஓய்வு பெறும்போது விருந்துசாப்பிட்டு ஆறுதல் பரிசுகளோடு வீட்டிற்கு வருவாள். பிறகு? இத்தனைநாள் தனியாக இருந்தது வேறு, முதுமையின் தனிமை வேறு.”
“சாரா! நீ சொல்வது முற்றிலும் சரி. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் அம்மா தனியாகத்தான் வாழ்ந்தாள். நான் கல்லூரிக்குச் சென்று நான்குமாதம் கழித்து கிறிஸ்மஸ் விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது மனம்திறந்து, ‘இந்த வயதில்தான் நான் தனிமையை உணர்கிறேன். இளமையில் அது தெரியவில்லை’ என்றாள். நல்லவேளையாக அடுத்த கிறிஸ்மஸ{க்குள் அவளுக்கு ஒரு துணை கிடைத்தான்.”
“பரி அமெரிக்கப் பெண் இல்லையே. இந்த வயதில் அவள் யாரையும் தேடிப்போக மாட்டாள்.”
“முன்பே அறிமுகமான யாராவது கிடைக்கலாம். என் அம்மாவுடன் வாழ்ந்தவன் அவளுடன் பள்ளியில் படித்தவன். வியட்நாம் போரில் அடிபட்டுத் திரும்பிய அவனை யாரும் லட்சியம் செய்யவில்லை. ஓரிடத்திலும் தங்காமல் அலைந்து திரிந்து, பள்ளியின் ‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய மாணவர்களின் மறுசேரலி’ல் என் அம்மாவை சந்தித்தான். பிறகு, கடைசிவரை அவளுடன் வாழ்ந்தான்.”
சிறு மௌனம். கூடத்தில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தை பார்த்து ஐரீன், “நான் கிளம்ப வேண்டிய நேரம். எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதே! பை, சாரா!” என்று எழுந்தாள்.
“தாங்க்ஸ் ஐரீன்! உன்னால்தான் தைரியமாக இருக்கிறேன்.”
தனியாக விடப்பட்ட சரவணப்ரியா பின்னோக்கிப் பார்த்தாள். பரிமளாவும் சாமியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது நியாயமான வெளிப்பாடாகப் பட்டது. அந்த நட்பின் இலக்கணம் என்னவாக இருக்கும்? உறவுகளை, வளரமுடியாத ஒருசிறு பெட்டியில் போட்டு அடைக்கமுடியுமா? சாமியும் அவளும் சம்பிரதாய கணவன் மனைவியாக ஆரம்பித்தாலும் காலப்போக்கில் ஆராய்ச்சியில் துணைவர்களாக, டென்னிஸில் எதிராளிகளாக, உடற்பயிற்சியில் கூட்டாளிகளாக, சமைக்கும்போது ஒருவருக்கொருவர் சித்தாட்களாக மாறவில்லையா? சாமி-பரிமளாவின் நட்பும் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து…
“நீ இப்போது மிஸ் கோலப்பனைப் பார்க்கலாம்.”
நர்ஸ் பரிமளாவின் முகத்தைத் துடைத்து படுக்கையின் உறைகளையும் மாற்றியிருந்தாள்.
“எப்படி இருக்கு, பரிமளா?”
“நேத்திமாதிரி இல்லை” என்ற பலவீனமான பதில்.
கண்காணிப்புக்கு அவளை அழைத்துச் சென்றதும் சரவணப்ரியா தன் அலுவலக அறைக்குத் திரும்பினாள். சாமி சிவந்த கண்களும், தொங்கிய முகமுமாக இருந்தான். அவனுக்கும் சரியான தூக்கமில்லை போலிருக்கிறது.
“ட்ராஃபிக் ஒழுங்காப் போறதுன்னு ரேடியோலே கேட்டேன். வீட்டுக்குப் போயிட்டு வரலாம்.”
கார் நிறுத்துமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
“பரிமளாக்கு எப்படி இருக்கு?”
“ஒருநாள் ஆன்ட்டை-பயாடிக் உடம்பிலே ஏறினதும் நல்ல வித்தியாசம். நாளைக்கே டிஸ்சார்ஜ் செய்வாங்கன்னு தோணுது.”
“இங்கே சௌகரியமா இல்லை. இன்னிக்கி ராத்ரி நான் வீட்டுக்கேபோய்த் தூங்கறேன்.”
“அப்போ நாளை காலைலே இங்கே வரதுக்குமுன்னே என்னைக் கூப்பிடு!”
தெருவிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் பனி குவிந்துகிடந்தது. அதில் குழந்தைகள் சறுக்கிவிளையாடிய அடையாளங்கள். காரை அதில் ஏற்றிச்செல்ல இயலாதென அதைத் தெருவோரத்தில் நிறுத்திவிட்டு பனியில் காலை ஊன்றி நடந்தார்கள்.
“இன்னிக்கி மத்தியானம் கொஞ்சம் உருகினா மிச்சத்தை நான் பெருக்கித் தள்ளறேன்” என்றான் சாமி.
இருவரும் குளித்து, சாப்பிட்டு, மதியஉணவைக் கையில் எடுத்துக்கொண்டார்கள்.

திரும்பிவந்து சரவணப்ரியா வேலையைத் தொடங்குமுன் ஹிக்கரி அழைத்தான்.
“ஹாய், மிசஸ் நாதன்!”
“ஹாய், ஹிக்! சிறுநீரின் முடிவுகள் இன்றுமாலைக்குள் தெரிந்துவிடும். அப்போது நானே உன்னை அழைக்கலாம் என்றிருந்தேன்.”
“தாங்க்ஸ். நான் அதைக் கேட்பதற்காக உங்களைக் கூப்பிடவில்லை. நான் தொழிலாளர்களிடமிருந்து இரத்தமும் சிறுநீரும் எடுத்தது மார்க்ஸ் நிர்வாகத்திற்குத் தெரிந்துவிட்டது. அதனால் நேற்று அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.”
“ஐ’ம் சாரி, ஹிக்!”
“எனக்கு இன்று காலையில்தான் தெரிந்தது. அவர்களை சந்தித்துப் பேச நான் இன்றே ஹியுஸ்டன் திரும்புகிறேன்.”
“அதுவும் நல்லதுக்குத்தான். அவர்களின் உணர்வின் வீரியத்தை அளந்தால் சோதனைகள் முற்றுப்பெறும். உங்கள் வழக்கிற்கும் உதவியாக இருக்கும். ஜேசன் உன்னுடன் வந்தால் ஒருநாளைக்குள் அதைச் செய்துவிடலாம். அவனை அழைத்துச் செல்கிறாயா?”
“நிச்சயமாக.”
“எப்போது கிளம்புகிறாய்?”
“பகல் ஒன்றரை.”
“அவனுடன் பேசியபிறகு உன்னை திரும்ப அழைக்கிறேன். அந்த எண்களும் கிடைத்தால் ஆராய்ச்சிக் கட்டுரையை முடித்துவிடுவேன்.”
“எழுத எவ்வளவு நாளாகும்?”
“முதல்படிக்கு இரண்டுநாள் இருந்தால் போதும்.”
“தயாரானதும் எனக்கு அதை அனுப்பமுடியுமா?”
“முதலில் உன் பார்வைக்குத்தான். ரைடர் சீட்ஸ் மேனேஜர் திடீரென்று காலைவாரியதும் 1-ப்ரோமோப்ரோபேனால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் கிடைக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ என்று கவலைப் பட்டேன். உன்னுதவி இருந்ததால்தான் கட்டுரை புதுவடிவம் பெறப்போகிறது.”
“நானும் இந்த வழக்கில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறியபோது நீங்கள் கைகொடுத்தீர்கள்.”
அன்றும் பகலில் வேலை முடிந்ததும் சரவணப்ரியா இரவில் பரிமளாவுடன் தங்கினாள். முந்தைய இரண்டு இரவுகளுக்கும் சேர்த்து ஆழமான, இடைவெளியற்ற நீண்டநேரத் தூக்கம்.

புதன்காலை சரவணப்ரியா விழித்தபோது பரிமளா படுக்கையில் அசைந்தது தெரிந்தது. எழுந்து படுக்கையருகில் வந்து அவளைக் கவனித்தாள். முகத்தில் ஒருதெளிவு. இரண்டுநாள் நடந்த யுத்தத்தில் அவள் உடல் வெற்றியடையப் போகிறது. ஆனால் அவள் தரப்பில் நிறைய சேதம். பார்த்துக்கொண்டிருந்த போதே பரிமளா கண்களைத் திறந்தாள்.
“ஜுரம் குறைஞ்சிட்டமாதிரிதான் இருக்கு. ராத்ரி இருமல்கூட அவ்வளவா இல்லை.”
பரிமளாவை சோதனைக்கு அழைத்துச் சென்றபோது சரவணப்ரியா காத்திருக்கும் கூடத்தில் உட்கார்ந்து வார்த்தைப் புதிர்களை விடுவித்தாள். நான்காவது முடிந்தபோது டாக்டர் ஸோஸ் அவளைத்தேடி வந்தார். முகத்திலேயே நம்பிக்கை தெரிந்தது. சரவணப்ரியாவின் பக்கத்தில் அமர்ந்து, “மிஸ் கோலப்பனின் இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நுரையீரலின் திரவம் இறங்கியதாக எக்ஸ்-ரேயில் தெரிகிறது. அவளை அழைத்துச் செல்லலாம்” என்றார்.
“தாங்க்ஸ் டாக்டர் எஸ்ஓஎஸ்!”
அவர் சிரித்தார். ஆனால் குரலின் கம்பீரத்தைக் குறைக்காமல், “அதனால் அவள் குணமடைந்துவிட்டாள் என்று அர்த்தமல்ல. நிமோனியா உடலின் தடுப்புசக்தியை அழித்துவிடுகிறது. அவளை பத்து நாட்களாவது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
“எங்களால் முடியும்.”
“நோயாளியை வீட்டில் பராமரிக்கும்போது சாதாரணத்தைவிட அதிக வெப்பம் தேவைப்படும். அவள் தங்கப்போகும் அறையில் நீராவியைப் பரப்பும் இயந்திரம் வைக்கவேண்டும். காற்றை வடிகட்டும் சட்டங்களை மாற்றுவதும் நல்லது. அவள் ஆடைகளை தனியாக வெந்நீரில் துவைக்க வேண்டும். இந்த மருந்தை மூன்றுவேளை தரவேண்டும்” என்று கையெழுத்திட்ட ஒரு மருந்துச்சீட்டைத் தந்தார்.
“நீங்கள் சொல்கிறபடியே செய்கிறோம்.”
“நீங்கள் அவளுக்கு உறவோ?” என்று கேட்டு, கேள்வியின் குறுகிய பார்வையை உடனே உணர்ந்து, “நாம் எல்லோருமே ஆஃப்ரிகாவிலிருந்து உலகெங்கும் பரவிய ஒருமனித குடும்பத்தின் அங்கத்தினர்கள்தான்” என்று திருத்திக்கொண்டார்.
வில்பர்ட் பள்ளியின் விவரங்கள் அடங்கிய ஒரு காகிதத்தை சரவணப்ரியா அவரிடம் தந்து, “பரிமளாவின் மருத்துவ அறிக்கையை இவர்களுக்கு அனுப்பமுடியுமா?” என்றாள்.
“இன்றே செய்கிறேன். பரிமளா இன்னும் அரைமணியில் இங்கு வருவாள்” என்று எழுந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி சரவணப்ரியா சாமியை அழைத்து செய்தி சொன்னாள், பரிமளாவின் சிகிச்சைக்கான செலவில் அவள்பங்கை செலுத்தினாள்.
பணிப்பெண் பரிமளாவை சக்கர நாற்காலியில் தள்ளிவந்தாள். டாக்டர் ஸோஸ் பரிமளாவிடம், “மிஸ் கோலப்பன்! சரியான நேரத்தில் கவனித்ததால் விரைவில் நலம்பெறுவாய் என எதிர்பார்க்கிறேன். ஒன்றிரண்டு நாள் தாமதித்திருந்தாலும் இடதுபக்க நுரையீரல் முழுவதையும் ஸ்ட்ரெப் தாக்கியிருக்கும்” என்றார்.
பிறகு ஒருநீண்ட அறிவுரை. “நீங்கள் இருவருமே நான் சொல்வதை கவனத்தில் வைக்கவேண்டும். ஓய்வு மிகமிக அவசியம். கிருமிகளின் தாக்குதல் மட்டுமில்லை, மூன்றுநாள் உணவு செல்லவில்லை. உடல் மிக பலவீனமாக இருக்கும். முதலில் ‘என்ஷ{ர்’ மாதிரி கொடுக்கலாம். பிறகு சூப். உடலில் வலி வந்தால் ஆஸ்ப்ரின் இல்லையென்றால் டைலினால், எது ஒத்துக்கொள்கிறதோ அது. கொஞ்சம் சரியாகிவிட்டதென்று கஷ்டமான தினப்படி காரியங்களில் ஈடுபடக் கூடாது. மூன்று வாரங்களுக்காவது கனமான சாமான்களைத் தூக்கக்கூடாது. ஆன்ட்டை-பயாடிக்கை பத்துநாட்கள் தவறாமல் சாப்பிட்டு முடிக்க வேண்டும். கூடியமட்டிலும் ஒவ்வொரு நாளும் அதேநேரத்தில் உட்கொள்வது நல்லது. முழுகுணம் அடைய ஒருமாதம் ஆகலாம். உடலில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் உடனே என்னைக் கூப்பிட வேண்டும். இந்தக் காகிதத்தில் எல்லா விவரமும் இருக்கிறது.”
“தாங்க்ஸ், டாக்டர்!” என்று சரவணப்ரியா அதை வாங்கிவைத்துக் கொண்டாள்.
பணிப்பெண் பரிமளாவின் மணிக்கட்டிலிருந்த பிளாஸ்டிக் அடையாளத்தை எடுத்துக்கொண்டு வண்டியைத்தள்ள, சரவணப்ரியா பின்தொடர்ந்தாள். நடைவழிகளைத் தாண்டி வாசலுக்கு வந்தார்கள். சரவணப்ரியா பரிமளாவின்மேல் தடிபோர்வையை சுற்றினாள். அவள் முகத்தில் களைப்பைத் தவிர எந்த உணர்ச்சியும் இல்லை. சாமி காரில் காத்திருந்தான். பரிமளாவை காரில்ஏற்ற பணிப்பெண் உதவினாள். அவளுக்கு நன்றி தெரிவித்ததும் கார் நகர்ந்தது.
“எங்களை வீட்டிலே விட்டதும் இந்த மருந்தை வாங்கிக்கொடுத்துட்டு அப்புறம் நீ வேலைக்குத் திரும்பிப்போ!” என்று சீட்டையும் இன்ஷ{ரன்ஸ் அட்டையையும் சாமியிடம் தந்தாள்.

பரிமளா படுத்திருக்கிறாள்.
எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. குளியல் அறைக்குப் போகக்கூட, ‘ப்ரியா!’ என்று அழைக்க வேண்டும். அவள் தோளில் தாங்கிச்செல்ல வேண்டும். அவள் இப்போது பக்கத்து அறையில் கணினியில் வேலைசெய்கிறாள். போக வேண்டிய நேரம்தான். கைகளைத் திருப்பிப் பார்த்தாள். தோல் வாடி சுருங்கி உரிந்து வெயிலில் வதங்கிய கத்திரிக்காயை நினைவூட்டியது. சிரமப்பட்டு எட்டி குட்டிமேஜைமேல் இருந்த மூக்குக்கண்ணாடியை அணிந்து முதுகை நிமிர்த்தி சுவரில்பதித்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். பிரிந்த தலைமயிர் எண்ணெய் காணாமல் தேங்காய் நார்போல் ஒட்டிக்கிடந்தது. பாத்திரம் தேய்க்கத்தான் சரி. முகத்தில் உயிர்க்களை கொஞ்சமும் இல்லை.
கண்ணாடியில் அவள் உருவம் மறைந்து வேறொரு காட்சி. முதியோர் இல்லத்தின் சக்கர நாற்காலியில் நகர்கிறாள். வெகுதூரம் போய்விடவில்லை. அவளுடைய அறையிலிருந்து தொலைக்காட்சி தொங்கும் சாப்பாட்டுக்கூடம் வரைதான். அதன் மேஜைகளைச் சுத்தம் செய்துவிட்டால் அதுவே விளையாட்டு அறை. செக்கர்ஸ் காய்களை நகர்த்தவே அரைமணி யோசிக்கும் வயோதிகக் கும்பலில் அவளுடன் செஸ் விiயாட ஒருவரும் கிடையாது. சீட்டு என்றால் போகர் ஒன்றுதான் தெரியும். கையில் சீட்டை வைத்துக்கொண்டு அடுத்த ஆளின் முகத்தைப் பார்த்தபடி முழிப்பார்கள். இதற்கு என்ன திறமை வேண்டும்? தொலைக்காட்சியில் எப்போதும் ஃபாக்ஸ் நியுஸ். ஏன் எல்லோரும் இப்படி கோபத்தில் கொதிக்கிறார்கள்? ‘துவேஷம் அன்றுகொல்லும், கோபம் நின்றுகொல்லும்’ என்று தெரியாதா அவர்களுக்கு?
உணவும் அவளுக்கு பழக்கமில்லாத ஒன்று. மாமிசம் இல்லாத சாப்பாடு என்பது பெயருக்குத்தான். எல்லாப் பண்டங்களிலும் மிருகக்கொழுப்பை தீயில் சுட்ட நாற்றம். அதைத்தின்று எதற்காக வாழ்நாளை நீட்டிக்க வேண்டும்? சாத்தமுது சாப்பிட்டு வருஷக் கணக்காகிறது. யாராவது தளிகைசெய்து எடுத்துவந்தால்தான் உண்டு. அப்படி யார் இருக்கிறார்கள்?
அவளுக்கு என்று ஒரு அறை. அதற்கு வருகிறவர்கள் இருவர்தான். சுத்தம்செய்ய வரும் ஒரு ஹிஸ்பானியப் பெண். பரிமளாவால் முடியவில்லையென்றால் அவளை சாப்பாட்டுக்கூடத்திற்கோ, நர்ஸ்களின் அறைக்கோ தள்ளிச்செல்ல குண்டான ஒரு கறுப்புப்பெண். முன்னவளுக்கு ஆங்கிலம் தெரியாது, பின்னவள் பேசும் ஆங்கிலம் புரியாது. ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் இரண்டுமணி ‘விசிடிங் அவர்ஸ்’. அவளைப் பார்க்க யாரும் வந்ததில்லை. வருவதற்கு யார் இருக்கிறார்கள்? கமலாவைப் பார்த்து ஒரு மாமாங்கமே ஆகியிருக்கும். அனிடா வருவாள், ஆனால் அவளுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை.
அவளுடைய மூளை உடலின் மற்ற பகுதிகளை இயக்கும் ஒரு எஞ்சின், அவ்வளவுதான். அதைத் தவிர உருப்படியாக அது வேறொருவேலையும் செய்வதாகத் தெரியவில்லை. ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ பற்றி யாரிடமாவது விவாதிக்கலாம் என்றால் யாருக்கும் புரிவதில்லை. சான்ஸ் என்ற வார்த்தையை எடுத்தாலே பாதிபேர் அவள் கடவுளை அவமதிக்கிறாள் என்று முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தி ஒவ்வொரு சனி இரவும் மறுநாள் பாஸ்டரின் சேவைக்கு வரவேண்டும் என்று பரிமளாவை வற்புறுத்துகிறாள். அவள் சொல்லும் கடவுளை ஏற்றுக்கொண்டால் முடிவற்ற வாழ்வு கிடைக்கும் என்று ஆசைகாட்டுகிறாள். இன்ஃபினிடி கணக்கில்தான். நிஜவாழ்வில் பரிமளாவுக்கு முடிவு வேண்டும். சீக்கிரம் வேண்டும். பட்டென்று உயிர் போய்விட்டால் சிலாக்கியம். அந்த அளவு அவள் புண்ணியம் செய்திருக்கிறாளா? அவளுக்கு இன்னுமொரு கட்டம் பாக்கியிருக்கிறது, கட்டடத்தின் மேல்தளத்தில். எதுவும் ஞாபகம் இல்லாதவர்களுக்கான சிறை. எங்கும் செல்லமுடியாது, அவள் யாரென்றுகூட மறந்துவிடும். மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆல்ஸைமர் வந்தபிறகும் பெண்கள் பத்தாண்டுகாலம் உயிர்வாழ்கிறார்களாம். வேறு வேலையில்லை.
இனி அவள்வாழ்வில் என்ன மிச்சமிருக்கிறது?

கட்டுரையின் விவாதப்பகுதியில் சில வாக்கியங்கள் சரவணப்ரியா சொல்லவிரும்பியதை வெளிப்படுத்தாமல், அடங்காத குழந்தையைப்போல், போக்கு காட்டின. வார்த்தைகளை மாற்றிப்போட்டும் பயனில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு தொடரலாம் என எழுந்தாள். பரிமளாவுக்கு க்ளின்டாமைசின் கொடுக்க வேண்டிய நேரமாயிற்றே. ஒருக்களித்திருந்த கதவைத்தள்ளி திறந்தாள். சாமி வாங்கிவந்த மருந்து பாட்டிலை நன்றாகக் குலுக்கி, குப்பியில் அளந்து, படுக்கையின் தலைச்சட்டத்தில் சாய்ந்திருந்த பரிமளாமுன் நீட்டினாள். உடனே, பரிமளா புறங்கையால் அதைத்தட்ட மருந்து அவள் ஆடையில் கொட்டிச் சிதறியது. நல்லவேளை, போர்வை தப்பியது. சரவணப்ரியா அதை எதிர்பார்க்கவில்லை. படுக்கையிலிருந்து ஒருதப்படி விலகி நின்றாள்.
“என்னை ஏன் பிழைக்கவைச்சேள்? குடுகுடுன்னு திங்களே ஆஸ்பித்திரிக்கு போயிருக்காட்டா நான் சீரியஸாகி மண்டையை போட்டிருப்பேன். இன்னேரம் வைகுண்டத்திலே இருந்திருப்பேன். சௌத்வெஸ்ட்லேதான் ஒன்வே டிக்கெட் பாக்கி இருக்கே. அதுவே அங்கே போனாலும் போகும்.”
அதைக்கேட்டு சிரிப்பு வராமலிருக்க சரவணப்ரியா பெருமுயற்சி செய்தாள்.
“ஒருநாள் காத்திருந்தா என்ன குடிமுழுகியிருக்கும்? உங்காத்து ‘ட்ரைவ்-வே’லே ஸ்னோ பெஞ்சா கார் இறங்காதா? இன்னும் சௌகர்யம். எல்லாத்தையும் கெடுத்துவச்சேள். உங்களுக்கு நான் என்ன தப்புசெஞ்சேன்? நான் எதுக்காக வாழணும்? போ! எனக்கு மருந்தும் வேண்டாம், மாயமும் வேண்டாம். மறுபடி நிமோனியா வரட்டும். அப்போ உங்களோட நான் ஹாஸ்பிடலுக்கு வரேனா பாருங்கோ!”
சரவணப்ரியாவுக்கு கண்களில் நீர் திரண்டது. அது கீழே விழாமல் துடைத்துக்கொண்டாள்.
“நான் எதுக்கு இருக்கணும்? இன்னும் எனக்கு என்ன மிச்சமிருக்கு? நான் வாழறதுக்கு ஒரு காரணம் சொல்லு பாப்போம்” என்று பரிமளா ஆள்காட்டி விரலை வீசினாள். சரவணப்ரியா பேசவில்லை. “நீ சொல்லலை, ஏன்னா சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. நிக்காதே போ!”
தான் எதுசொன்னாலும் அது பரிமளாவுக்கு எரிச்சலைத்தான் தருமென்று சரவணப்ரியா மௌனமாக வெளியேசென்று கதவை மெல்ல சாத்திவிட்டு அங்கேயே நின்றாள். அவள் எதிர்பார்த்ததுபோல் வாழ்க்கையை முடிக்கும் கோபமான வார்த்தைகள், பிறகு நீண்ட நிசப்தம், கடைசியில் விசித்துவிசித்து அழுகை. அதற்காகக் காத்திருந்ததுபோல் கதவைத்திறந்து அறைக்குள் நுழைந்தாள். கண்ணீர் பெருகி பரிமளாவின் கன்னங்களில் வழிந்து ஆடையை நனைத்தது. அழுகையின் விக்கலொலி குறைந்ததும் படுக்கையில் அவளருகில் அமர்ந்து அவள்கையை தன்கையோடு பிணைத்தாள்.
சரவணப்ரியாவுக்கு இந்த அனுபவம் புதிதல்ல. டென்னிஸ் கோர்ட்டில் பந்து இடறி விழுந்ததால் காலில் அடிபட்டு மருந்தகத்திலிருந்து கால்கட்டுடன் வந்ததும் களைப்பில் சூரன் தூங்கிவிட்டான். மறுநாள் எல்லாவற்றையும் இழந்துவிட்ட சோகம். மூன்று மாதங்களுக்கு டென்னிஸ் ஆடமுடியாது என்பதால் தாயைக் கண்டபோதும் எரிந்துவிழுந்தான். அவன் கோபம் அடங்கியதும் அவனுக்கு ஊக்கமளித்து சமாதானப்படுத்தினாள். பதினாறுவயதுப் பையனுக்கு நம்பிக்கையளிப்பது எளிதாக இருந்தது. இப்போது அறுபதை நெருங்கும், தனியாக வாழும் ஒருபெண்ணுக்கு எந்த எதிர்காலத்தைத் தருவது?
“ப்ரியா! என்னை மன்னிச்சுக்கோ! நான் என் ஆற்றாமையை உன்கிட்டே காட்டியிருக்கக் கூடாது. நீங்க செஞ்சதுக்கு நான் இப்படி நடந்துண்டது ரொம்பரொம்ப தப்பு” என்று பரிமளா விக்கினாள்.
“பரி! நீ அப்படி நினைக்காதே. ஆற்றாமையை என்கிட்ட வெளிப்படுத்தினதே என்மேலே உனக்கு அன்பும் நம்பிக்கையும் இருக்குன்னு காட்டுது. என்னாலே ஒருத்திக்கு உபயோகமிருக்கு என்கிற நம்பிக்கைலேதான் உனக்குச் செய்யறேன். எனக்கு என் அம்மாவும் அக்காவும் செய்யாத தியாகமா? இப்போ நான் அவங்களைக் கூப்பிட்டுவச்சு திருப்பிச்செய்ய முடியாது. உனக்காக இல்லாட்டியும் எங்களுக்காக நீ உடம்பை தேற்றிக்கணும். ப்ளீஸ்!”
அவள் பேசியபோது, பரிமளா அவளுடைய முகத்தைப் படிப்பதுபோல் உற்றுப்பார்த்தாள்.
“வாழ்க்கையின் கடைசி கட்டம் சும்மா உக்காந்துகிட்டு நடந்துபோனதை திரும்பிப் பாக்கறதுக்கு மட்டுமில்லை. சாதிக்கவும் செய்யலாம். உனக்கில்லாத அறிவா? நிதானமா யோசிச்சுப் பார்! நீ இன்னும் எதாவது செய்யமுடியும்.”
பரிமளா அமைதியடைந்ததும் சரவணப்ரியா எழுந்து தரையில் கிடந்த குப்பியை எடுத்து, சுத்தம்செய்து மறுபடி அதில் க்ளின்டாமைசினை அளந்தாள்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்