தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

பா. ரெங்கதுரை


பிப்ரவரி 19ஆம் தேதி, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 157ஆவது பிறந்த நாள்.

எவர் கண்ணிலும் அவ்வளவு சுலபமாகத் தென்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள் நிறுவப்பட்டிருக்கிறது அன்னாரின் உருவச் சிலை. அவரை “உஞ்ச விருத்திப் பார்ப்பனர்” என்று வசை பாடிய தமிழக அமைச்சர் க. அன்பழகன் போன்றவர்கள், வேண்டா வெறுப்பாக அந்தச் சிலைக்கு வருடா வருடம் மாலை அணிவிப்பார்கள். வாய்ப்புக் கிடைத்தால், ஜாதி அடிப்படையில் உ.வே.சா.வை மறைமுகமாகப் பழித்துப் பேசவோ அல்லது அவரை மட்டும் கொஞ்சமாகப் புகழ்ந்துவிட்டு, அவருடைய ஜாதியை வெளிப்படையாகப் பழித்துப் பேசவோ தயங்காத வக்கிரம் மிகுந்தவர்கள் அன்பழகன் போன்றவர்கள்.

சமஷ்டி உபநயனம் எனப்படும் பூணூல் அணிவிக்கும் சடங்குகளை நடத்துவதிலும், சுஜாதா போன்ற பிராமண மசாலா எழுத்தாளர்களைக் கௌரவிப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் போன்ற அமைப்புகளின் இன்றைய நிர்வாகிகளுக்கு உ.வே.சா. என்று ஒருவர் இருந்ததே தெரிந்திருக்காது.

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் போன்றவர்களுக்கு, தமக்கு எதிரான வழக்குகளை ஆட்சி மாற்றம் வருவதற்குள் எப்படி நீர்த்துப் போகச் செய்வது என்பதுதான் உடனடிக் கவலை. மடத்து அக்காரவடிசலில் நெய்யின் அளவைப் பற்றி இவர்கள் காட்டும் அக்கறையைக்கூட உ.வே.சா. பற்றிக் காட்ட்மாட்டார்கள்.

சோ போன்ற அறிவு ஜீவிகளுக்கோ, ஹிந்து மகா சமுத்திரத்தில் ராமாயணம், மகாபாரதம் தவிர வேறு எதுவும் கண்ணில் படுவதில்லை. சோவைப் பொருத்தவரை, சங்க இலக்கியச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பிப்பது போன்ற வெட்டி வேலைகளில் வாழ்நாளை வீணடித்த ஓர் அசட்டு பிராமணர் உ.வே.சா.

முக்குலத்தோர், ஆதிக்கம் செலுத்தும் தமிழக இடதுசாரிக் கட்சிகளுக்கோ கார்ல் மார்க்ஸைவிட முத்துராமலிங்கத் தேவர் முதன்மையான தெய்வமாகி விட்டார். அவருடைய குருபூஜையை மறக்க மாட்டார்கள். ஆனால், உ.வே.சா.வின் பிறந்த நாள் நினைவுக்கு வராது.

ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவர் என்று பீற்றிக் கொள்ளும் தமிழக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் இல. கணேசன் போன்ற்வர்களுக்கோ, கருணாநிதி கையால் தரப்படும் மலர்ச் செண்டுதான் வாழ்வின் முதன்மையான லட்சியமே. உ.வே. சாமிநாத ஐயருக்குச் செலுத்தும் மரியாதை எல்லாம் நேர விரயம்.

வாழ்க செம்மொழி!

http://rangadurai.blogspot.com

Series Navigation

பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை