தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI)


ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும் இணைந்து எழுதிய தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியீட்டு விழா, ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் மினி ஹாலில் இனிதே நடைபெற்றது. தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) நடத்திய இந்நிகழ்வு மாலை 6 மணி அளவில் தொடங்கியது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆய்வாளர் நந்தர் என்கிற தங்கம் விஸ்வநாதன், விழாத் தலைவரையும், சொற்பொழிவாளர்களையும் அறிமுகப்படுத்தி மேடையில் அமரச் செய்தார்.

நூலாசிரியர்களுள் ஒருவரான அ. கணேசன், வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழகத்தின் சமூக வரலாற்றில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட காரணம் பற்றியும், இப்புத்தகத்தை எழுதத் தூண்டிய சூழ்நிலை பற்றியும் விரிவாகப் பேசினார். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் சில திண்ணை இணைய இதழில் வெளியிடப்பட்டமை பற்றியும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

பின்னர், நூலின் முதல் பிரதியைக் கேரள மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், முனைவர் தியாக. சத்தியமூர்த்தி வெளியிட, பரத நாட்டியக் கலைஞரும், முனைவர் பட்ட ஆய்வாளருமான ஸ்வர்ணமால்யா கணேஷ் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர்களுள் ஒருவரான எஸ். இராமச்சந்திரனின் ஆசானும், என். எஸ். பி. என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான பேராசிரியர் நாகர்கோயில் என். சுப்பிரமணியன் பிள்ளை அவர்களுக்கும், பிற அறிஞர்களுக்கும் SISHRI சார்பில் சிறப்புச் செய்யப்பட்டது. வரலாற்று ஆர்வலரும், வன்னியர் சமூகப் பிரமுகருமான உளுந்தூர்ப்பேட்டை சந்திரசேகர், நூலாசிரியர்களுக்கும் அறிஞர்களுக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்புச் செய்தார். ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனுக்கு, நெல்லை நெடுமாறன் சார்பில் கணையாழி அணிவிக்கப்பட்டது. புத்தகத்தின் அட்டைப் படத்துக்காக தோள்சீலைக் கலகக் காட்சி ஒன்றைச் சித்திரமாகத் தீட்டிய ஓவியர் ஆர். செல்வத்துக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

முனைவர் தியாக. சத்தியமூர்த்தி தம் தலைமை உரையின்போது கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுவதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசினார்.

பின்னர், வரலாற்று ஆய்வாளர் எஸ். டி. நெல்லை நெடுமாறன், புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி நீண்ட உரையாற்றினார். அது மட்டுமல்லாமல், தம்முடைய அரசியல் வாழ்வு பற்றியும், தாம் தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளராகப் பணியாற்றியது பற்றியும், வரலாற்று உண்மைகளை வெளிப்படையாகப் பேச முனைந்ததால் தாம் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது பற்றியும் எடுத்துரைத்தார். பெருந்தலைவர் காமராஜர், தம் ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்களைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாலேயே அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வர முடிந்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார். உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவதால் பெரும் இழப்புகள் ஏற்படும் என்றாலும், வரலாற்று ஆய்வில் உண்மைகளைப் பேசுவது அவசியம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

பரத நாட்டியக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ், தம் சிறப்புரையில் புத்தகத்தின் சிறப்பு அம்சங்களை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

ஆய்வாளர் செந்தீ நடராசன் தம் கருத்துரையில், புத்தகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டார். தோள்சீலைக் கலகத்தை, திருவாங்கூர் பகுதியில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும், மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும் இடையிலான போராட்டமாகவும் கருதலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

கருத்துரை வழங்கிய ஆய்வாளர் ஜெ. சிதம்பரநாதன், ஐரோப்பிய மைய நோக்கிற்கு மாறாக ஒரு புத்தகம் எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார். இந்தியர்களுக்கென்று சொந்தமாக இங்கு எதுவுமே இருந்ததில்லை என்றும், காலனியவாதிகள் வந்துதான் இந்தியர்களுக்குச் சகலத்தையும் கற்பித்தது போலவும் சில ஆய்வாளர்கள் எழுதி வருவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

ஆய்வாளர் ப்ரவாஹன், காலனியவாதிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் செல்வ வளங்களைக் கொள்ளையடித்துச் சென்றதைச் சுட்டிக் காட்டினார். ஐரோப்பிய மைய வாதத்திற்கு மாற்றாக இத்தகைய ஆய்வு நூல்கள் எழுதப்படுவதன் அவசியம் குறித்து விளக்கினார்.

பின்னர், நூலாசிரியர்களுள் ஒருவரான எஸ். இராமச்சந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். இந்த ஆய்வு நூல் தனி ஒருவரின் முயற்சியாக மட்டும் அமையாமல், கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது பற்றி எடுத்துரைத்தார்.

இறுதியாக, கவிஞர் ஓகை நடராஜன் நன்றி தெரிவிக்க, இரவு 9 மணி அளவில் விழா இனிதே நிறைவுற்றது.

புத்தக வெளியீட்டு விழா நிழற்படங்களைப் பின்வரும் இணையதளத்தில் காணலாம்:
http://picasaweb.google.com/reach.aasai/ThozhseelaikalagamBookRelease?authkey=Gv1sRgCJ7KhKiY5eXszQE#

புத்தக வெளியீட்டு விழா ஒளிப்பதிவினை, தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் இணையதளத்தில் (http://www.sishri.org/bkrlvdu.html) காணலாம்.

info@sishri.org

Series Navigation

author

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI)

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI)

Similar Posts