கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது நிழல்..
Published December 12, 2010 • By
கலாசுரன்
கலாசுரன்

கடமையில் கட்டுண்டு
கசங்கிக் கிடந்திருந்தது
ஒரு காக்கிச் சட்டை
பார்வையில் பட்டதும்
சுற்றும் ஒளிந்திருந்த
வரலாற்றுக்கனவுகள்
சுற்றிச் சுற்றிப் பறந்தன
சிப்பாயிகள்
தோட்டா நிறைத்த
துப்பாக்கிகளுடன்
வரிசையாக அணிவகுக்க
ஒரு யுத்தத்தின் ஆரவாரம்
காட்சிகளின்றி கேட்டது
சடலங்களை
முத்தமிட்டுக்கொண்டு
நாட்டுப் பெருமையை
பேசிக்கொண்டிருந்தது
காய்ந்துபோன இரத்தத் துளிகள்
உடலிலிருந்து
அகற்றப்பட்ட கைகள்
ஊர்ந்து ஒன்று சேர்ந்து
ஒரு கொடியை ஏற்றின
அதில்
சுதந்திரம்
என்று எழுதப்பட்டிருந்தது
பின்னர்
வந்த கனவுகள்
கண்முன் போட்டி போட்டு
மிதந்தன
கண் கசக்கி
கனவுகள் முற்றிலும்
கலைந்து போனது
இன்னொரு
போராட்டத்தின்
தொடக்கமென்பதுபோல்
சந்திர போசின் நிழல்
அடர்ந்த இருளில்
கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது …
——————————————-