சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

சீதாம்மா


சுந்தரகாண்டம்

ஜெயகாந்தன் எழுதிய சுந்தரகாண்டம்.

“ஓ சீதே’’

என்றோர் அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல்.

ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் கால வெள்ளத்தில் நீந்தி வந்து மாறிவரும் சூழலில் எழுதிய ஓர் நவீனம் இந்த சுந்தர காண்டம் !

குங்குமத்தில் தொடராக வந்த காலத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று,
பின்னர் அது முடிவடைந்த பின்னர் அதே வீச்சுடன் கேள்வி -பதில் மூலமாகப் பல வாரங்கள் விவாதிக்கப்பட்டு, அத்தனை கேள்விகளுக்கும் ஜெயகாந்தன் பதிலிறுத்தார். பின்னர் இது புத்தகமாக வெளிவந்த பொழுது
வழக்கம்போல் அவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம்.

“இந்தக்கதையின் மூலம் நான் நமது பெண்களுக்கு என்னென்னனவோ
சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகளல்ல. அவற்றால் ஏதும் பயனிராது என்பதை நான் அறிவேன். ஆயினும் நமது பெண்கள் அறிய வேண்டிய நம்மைப் பற்றிய உண்மைகள் நிறைய உள்ளன.

அதாவது பெண் என்பவள் அவளே சில சமயங்களில் எண்ணி மயங்குவது போல அவள் தனிப் பிறவி அல்லள். அவள் ஆணின் பாதி. அவள் காதல் வயப்பட்டிருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந் தாலும், இந்தத் தளைகளில் தன்னைப் பிணைத்துக் கொள்ளாத சுதந்திரப் பறவையாக வாழ நேர்ந்தாலும் அவள் நமது சமூகப் பதுகாப்புக்கு உட்பட்டவள்தான். காதலும், கல்யாணமும், குடும்ப வாழ்க்கையும் ஏதோ தான் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் என்று எண்ணுகிற பெண்தான் பேதை. அது சமூகம் சம்பந்தப்பட்டது என்று அறிவிப்பதே இந்தக் கதையின் முதல் நோக்கம்..

பெண்களே !

நீங்கள் உங்கள் தந்தை யென்றும், காதலன் என்றும், கணவன் என்றும்
நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார் ? அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள்.

பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து அகழ்ந்து தூர்க்கிறவர்கள். உங்களை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கேயேனும் தள்ளிப் போடவே விரும்புகிறார்கள். தலையில் வந்து விடிந்து விட்டதாக இறக்கிப் போட்டு
ஏற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குகிற மரபு போல் உங்களை லட்சுமீகரமாக்கி அவர்கள் தொழுவார்கள். நேரம் வரும் பொழுது தெரியும், இந்த கசாப்புக் காரர்களின் காதல் லட்சணம்.

மதிப்புக்கும் அன்புக்கும் உரிய உங்கள் இனிய பாதியான ஆண்மகன்
இந்த வசை எய்து வாழ்வது எதனால் ? வசைக்குரிய ஒரு சமூகத்தின் அடிமையாக வாழ்கிறானே. அதுபற்றிய ப்ரக்ஞையற்றுத் தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒரு அடிமை அதிகாரியைப் போல்,
சுரண்டல் வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறானே அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும்.

சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவது மட்டுமல்ல, அது தந்தையாய், சகோதரனாய், சக்தி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகணித்துச் செய்யும் அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச் செருக்குடைய பெண்களேயன்றி வேறு யார் அறிவார் ?

இளம்பெண்களே ! காதல் என்ற பெயரிலும் கல்யாணம் என்ற பந்தத்திலும்
இந்த சமூக மனிதனிடம் மோசம் போய்விடாதீர்கள் என்று எச்சரிக்கிறது
இந்தக் கதை. அப்படிப்பட்ட பந்தங்கள், ஒரு சமூக விரோதியோடு ஏற்படுத்திவிடுகிற பட்சத்தில் அது உங்களைக் கட்டுப்படுத்தலாகாது என்று
உங்கள் சார்பில் அனைவரையும் போராடச் சொல்கிறது இந்தக் கதை.
உங்களை அந்த சமூக விரோதிகள் சிறையெடுப்பினும், சீர் கெடுப்பினும்
உங்களின் நிறையை அழிக்க அவர்களால் ஒண்ணாது என்று இக்கதை
எடுத்து ஓதுகிறது.”

ராவணன் என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் -பலவித உத்திகளுடன் சொல்லப் புகுந்த ஒரு கதை .. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னமே இந்த மாபெரும் எழுத்தாளனால் கையாளப்
பட்டது என்பதே இதன் பெருமை. ஒரு வேளை என்றோ இக்கதை படிக்கப் பட்டு விழுந்த விதை அப்படி ஓர் மரமாகியும் வந்திருக்கலாம். சில நேரங்களீல் வெவ்வெறு மனிதர்களிடம் வெவ்வேறு காலங்களில் ஒத்த
கருத்துள்ள படைப்புகளும் தோன்றலாம். ராஜ ராஜ சோழன் விருது
இக்கதைக்குக் கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமை.

இனி கதையினைப் பார்ப்போம்

“நீ எங்கிருக்கிறாய்?” என்ற சோகமான அலறல் பூமியிலிருந்து கிளம்பி
ஆகாசத்திலும் பூமியிலும் மோதி எதிரொலிக்க “மூர்ச்சையானான்’’ என்று
ஆரம்பமாயிற்று அந்தக் கதை.

அவள் கண்களில் கொப்பளித்துச் சுரந்த கண்ணீர்த் திராவகத்தில் அந்த எழுத்துக்கள் மறைகின்றன. காவிய சோகம் திரையிடுகிறது. மீண்டும் தொடர்ந்து படிக்கின்றாள்.

அவன் மூர்ச்சை தெரியாமல் வெறித்த விழிகளுடன் திசைகளை அளந்த பார்வை நிலைக் குத்திப் போக, விழுந்து புலம்புகின்றான்.

வைதேகி .. உன் அணிகலன்களெல்லாம் இந்த மண்ணில் விழுந்து கிடக்கின்றன. .. இரத்தினங்களும் முத்தும் வேண்டாமென்று உதறிப் பெண்மையின் அணிகலன்களை மட்டும் தரித்துக் கொண்டவளே, நீ எங்கிருக்கிறாய் ?

துயரமும், அச்சமும், கண்ணீரும், அவமானமும் கண்களில் தேங்க வானத்தை நோக்கித் தீனமாய், அவலமாய்ப் பெருமூச்செறியும்
கோடானு கோடிப் பாரதப் பெண்களில் நீ யாராக, எந்த காராகிருகத்தில்,
எவர் காவலில் எங்கு கட்டுண்டு கிடக்கிறாயோ ?

ஏ, பூமியின் புதல்வியே, உனக்குத் தாயில்லை, தந்தையில்லை, உடன் பிறப்பில்லை, உற்றார் உறவினர் இல்லை, உனக்குச் சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை, நாடு இல்லை மொழி இல்லை, எல்லையற்ற துன்பமே ! நீயே சீதை ! இறுதி காணாச் சோகமே,
நீயே சீதை !

புலம்பல் தொடர்கின்றது. தாயின் குரல் கேட்கவும் அவள் சுய நிலை அடைகின்றாள். காவியக் காட்சிகள் மறைந்து கண்ணீர் கொட்டுகின்றது.
இவள் தான் கதையின் நாயகி சீதா.

ஒரு ஜன ரஞ்சகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் பெண் சீதா.
கல்லூரிப் படிப்பு படிக்கும் இவள் முற்போக்கான எண்ணம் கொண்டவள்.
பெண்கள் ஏதோ ஆண்களின் போகப் பொருள் அல்லள் என்பதில் உறுதியாக இருப்பவள்.

பகலில் ஆசாரம், மாலையில் மது, என இரட்டை வாழ்க்கை வாழும்
தந்தையின் பணத்தாசைக்குப் பலியாகி மனைவியை இழந்த ஒரு தொழில் அதிபருக்கு மணமுடிக்கப்படுகிறாள் சீதா. முதலிரவன்றே “என் அனுமதியின்றி என்னைத் தீண்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’’ எனச் சொல்லிய அவள் முடிவை நாட்பட நாட்படச் சரியாகும் எனச் சிரித்துக் கொண்டே அனுமதித்து விட்டு மது அருந்திவிட்டு, தன் வயதானத் தாய்க்கு நர்ஸாகப் பணிபுரியும்
இளம் விதவையுடன் வழக்கம் போலப் படுக்கச் சென்று விடுகின்றான்.
சீதாவுக்கு ஒரு சில மாதங்கள் கழித்தே இது தெரிய வருகிறது.
கணவனுடன் விவாதங்கள், அதன் பின்னர் அப்பா ஏற்று நடத்திய பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்த ஆரம்பித்து விடுகின்றாள்.

கதைக்குள் கதையாக இன்னொரு கதை வேறு.

ருஷ்ய நாட்டில் ஒரு கிராமத்துப் பெண் காதலனால் வஞ்சிக்கப் பட்டு ஓடி ஓடிக் களைத்து உயிரை விடுவதும் வருகின்றது. சோகப் புலம்பல்.

கதையில் சில பகுதிகள்

“பொதுவாகவே நமது பெண்களை அசோக வனத்துச் சீதைகள் என்றுதான் நினைக்கிறான் கிரிதரன். அதிலும் உங்களைக் குறிப்பாக இராமனில்லாத
சீதை என்று இன்றைக்குக் கூடப் பேசும் பொழுது சொன்னான்” என்றான் ரரமதாஸ்.

ராமன் யார் என்று கேட்ட சீதையே தொடர்ந்து ராமனைப் பற்றிப் பேசுகின்றாள்.
“ஆயிரம் பிரதாபங்கள் இராமனுக்கு உண்டு ஆயினும் சீதைச் சிறை மீட்பவனே இராமன்.. அது ஏதோ ஒரு தனி மனித சாதனையல்ல.
இக்காலச் சமூகப் பொருளில் “சீதை சிறை மீட்சி’’ என்பது பெண் விடுதலையே ஆகும். “

ராமதாஸுடன் அடிக்கடி விவாதிக்கிறாள். ராமதாஸ் கிரிதரனைப் பற்றி
ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்.

இராமாயணத்தில் இராமனின் குணம் என்ன என்ற புதிர்க் கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே வந்த சீதை தனக்கான இராமன் யார் என்பதை உணரவும் அவனை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறாள்… அது என்னவாயிற்று என்று சொல்லாமலேயே கதையை முடித்து விடுகின்றார். வாசகர்களின் முடிவிற்கு விட்டு விடுகின்றார்.

என்றோ எழுதப்பட்ட கதை.

கொடிய கணவன் அமையுமானால், காலில், கற்பு என்ற கயிறு கட்டப்பட்டு வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண், விடுதலைப் பயணம் தொடங்கி விட்டாள் என்பதற்கு அடையாளம். இந்தக் கதை. தாலிக் கயிற்றின் மதிப்பு, அதைக் கட்டியவன் வாழும் ஒழுக்கத்தைச் சார்ந்தது. அவன் சரியில்லையென்றால் தாலி வெறும் கயிறுதான். அந்த பந்தம் பலஹீனமாகி
அறுந்து வீழும்.

தந்தை பெரியாரின் கடுமையான சாடல், ஜெயகாந்தன் எழுத்திலே காட்டும்
தீவிரம், பல ஆண்களின் மனங்களை வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.

குடும்பத்தில் அன்பு கொண்டு பண்புடன் வாழும் ஆண்களை நான் மரியாதையாக வணங்குகின்றேன். உங்களைச் சுற்றிப் பாருங்கள். எங்கள் வேதனைக் கொதிப்பைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வெளிப்படையாக சில தகவல்கள் மட்டும் சொல்ல விரும்புகின்றேன்.

ஆண்மையின் சக்தி ஆணின் மனத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்திருக்கின்றது. பலஹீனம் அடையும் பொழுது மனைவியைப் பக்குவமாகக் கையாள வேண்டியவர்கள் கொடூரமாக அடிப்பதுவும் கடிப்பதுவும் தாங்கிக் கொள்ளக் கூடியவைகளா? இதுவா செக்ஸ் இன்பம்? எத்தனை பெண்கள் என்னிடம் அழுதிருக்கின்றார்கள் தெரியுமா?

“நன்றாக இருந்தாரே, ஏனம்மா இப்பொழுது இப்படி நடந்து கொள்கின்றார். அவர் அருகில் வந்தாலே பயமா இருக்கு.’’

சிகரெட், மெழுகுவர்த்தி இவைகளைக் கொளுத்தி அந்த மென்மையான உடம்பில் சூடு போடுவதில் என்ன இன்பம் கிடைக்கின்றது?

பெண்ணை அடித்து அவள் துடிக்கும் பொழுது உடலுறவு கொள்வதில் என்ன மகிழ்ச்சி?

இவைகள் வக்கிரமாகத் தெரியவில்லையா?

வேலை செய்ய மாட்டான். ஆனால் குடிப்பான். தெருவோர தேவதைகள் வேண்டும். இதற்குக் காசு வேண்டி தன் மனைவியை அடிக்கும் ஆணை எதில் சேர்க்கலாம்?

படித்தவனும் வித்தியாசமாக பெண்ணைக் கையாள்கின்றான். சில சலுகைகளுக்கும், பதவி உயர்வுக்கும் கட்டியவளைக் கட்டாயப் படுத்தி பிற ஆண்களுக்குப் பலிகடாவாக அனுப்புவனை என்னவென்று சொல்வது? தன் ஆடம்பர வாழ்வுக்குத் தன் மகளையே பலியாக்கத்
தயங்குவதில்லை சில அப்பன்கள்.

அப்பனுக்கு ஆசைக் கிழத்தி அக்காவென்றால், அவன் மகனுக்கு அவள் தங்கையுடன் உறவு. என்னைய்யா வக்கிர வாழ்க்கை ?

கடவுள் பெயரைச் சொல்லிப் பெற்ற மகளையே, பதின்மூன்று வயதுச் சிறுமியை ஊருக்கு தாசியாய் அனுப்பும் அப்பனை என்ன சொல்வது?

ஆண்மட்டுமா பெண்ணுக்கு எதிரி ?

பணியிடங்களிலும், பொது வாழ்விலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவிப் பெண்களை பலிபீடம் அனுப்பும் பெண்களை என்ன சொல்வது ?

ஆக பாதிக்கப்படுவது பெண்.

இத்தகைய மிருகச் செயல்களுக்கு நீண்ட பட்டியலே என்னால் கொடுக்க இயலும். இவைகள் பத்திரிகைகளில் படித்து எழுத வில்லை. நான் கவுன்ஸ்லிங் செய்த பல குடும்பங்களில் பெண்களின் வலியைக் கேட்டறிந்ததில் சிலமட்டும் எழுதியுள்ளேன்.

என் வாழ்நாளில் லட்சக் கணக்கான குடும்பங்களைப் பார்த்துவிட்டேன். இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சுமார் 17000 கிராமங்கள், மூவாயிரத்துக்கு மேலான நகரச் சேரிகளுக்குச் சென்றிருக்கின்றேன். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கிராமங்களைப் பார்த்திருக் கின்றேன். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகள் போயிருக்கின்றேன். உலகில் பல பகுதிப் பெண்களிடம் பேசி யிருக்கின்றேன். ஆய்வும் செய்திருக்கின்றேன்.

தமிழ் மண்ணில் மட்டுமல்ல, உலகில் பெண் எங்கிருந்தாலும் வதைப் படுகின்றாள்.

எங்காவது போர், அல்லது ஒரு சிறு கலாட்டா வந்தாலும் ஒரு பெண்ணைப் பல பேர் குதறி அழிக்கின்றார்களே, இந்த நிலை ஆணுக்கு உண்டா? நாங்கள் வெறும் சதைப் பிண்டங்களா? உணர்வும் உயிரும் உள்ள மனிதப் பிறவிகள்.

கஷ்டம், பாதிப்பு இரு பாலாருக்கும் வரும். ஆனால் பெண்ணுக்கு நடக்கும் இந்தக் கொடுமை ஆணுக்கு உண்டா?

வெளியில் காணும் சில வளமான காட்சிகளை மட்டும் வைத்து பெண் நிலை உயர்ந்துவிட்டது என்று மதிப்பிடுதல் கூடாது. அதனால்தான் உண்மைகளைப் புரிந்த சில ஆண்கள் குரல் கொடுக்கின்றார்கள்.

லட்சக்கணகாக வருட வாழ்க்கையின் அனுபவத்தில் அவன் விதித்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்துவிட்டன. ஊடகங்களிலும் சூழலிலும் வன்முறைகள் வலுத்துவிட்டன. பாலியல் கொடுமை விளையாட்டாய்க் கருத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்துடன் கூடி வருகின்றது.

இந்த சமுதாயத்தில்தான் நாம், நமது சந்ததியினர் வாழ வேண்டும். நம் குழந்தைகள் வாழும் சுற்றுப் புறத்தைப் பாருங்கள். சட்டம் தடுக்கவில்லை யென்றால் நிர்வாணக் காட்சிகளை எங்கும் காணலாம். பெரியவர்களின் பேச்சு, அறிஞர்களின் எழுத்து இவைகளைக் கண்டு கோபப்படுவதைவிட நல்ல சிந்தையுடன் எண்ணிப் பார்ப்போம். சீர்திருத்த முயல்வோம்.
ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்திடல் வேண்டாம். இரு சக்திகளும் இணைந்து நடத்தும் இல்லறமே நல்லறமாக அமையும்.

குடும்பம் எனும் கோயில் அழிந்துவிடக் கூடாது. ஆணாதிக்கம், பெண்ணின் சம உரிமையென்று பேசித் திரிவதைவிட குடும்பத்தை எப்படி சேர்ந்து காப்பாற்றுவது என்ற சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

மனிதர்களுக்குத் துன்பம் வருமானால் “சுந்தரகாண்டம்” படியுங்கள் என்பார்கள். தொல்லைகள் நீங்குமாம். என் தொடரில் இறுதியில்
ஜெயகாந்தனின் சுந்தர காண்டத்தை இணைத்தது தற்செயல் நிகழ்வு.

அதுசரி, இராமாயணத்தில் அந்தப் பகுதிக்கு ஏன் சுந்தரகாண்டம் என்ற பெயர் வந்தது ? அசோக வனத்தில் அரக்கனாலும் அரக்கிகளாலும் அல்லல் படுத்தப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைக்குத் தள்ளப் படுகின்றாள் சீதை. ஆபத்பாந்தவனாக அனுமன் வருகின்றான். அனுமனின் வருகையில் தனக்கு சிறை மீட்சி வரும் என்ற நம்பிக்கை சீதைக்கு உண்டாகின்றது.

ஏனோ, என் மனம் இன்னொருவரையும் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தூண்டியது, எனக்கு தேவ் என்று ஒரு நண்பர். அவரிடம் கேட்க முடிவெடுத்தேன். ரிஷிமூலமும், சுந்தரகாண்டமும் கொடுத்துதவிய டாக்டர் சங்கரைப் போன்று தேவ் அவர்களும் அதுபற்றிய ஓர் அரிய விளக்கமே எழுதி அனுப்பினார். என்னால் அவரைப் போன்று எழுத முடியாது. எனவே அவர் எழுதியதை அப்படியே வாசகர்களுக்குத் தருகின்றேன்.

“ஸுந்தரே ஸுந்தரம் சர்வம் -சுந்தரகாண்டத்தில் எல்லாம் சுந்தரம்

அனுமன் தன் ஆற்றலை உரிய தருணத்தில் வெளிப்படுத்தும் அழகு.
பதறாமல் சிந்தித்து முடிவெடுக்கும் அழகு. மெல்லிய குரலில் சிம்சுபா விருட்சத்தில் மறைந்து கொண்டு எளிய நடையில் இராமர் காதை கூறும் அழகு. நம்பிக்கை குலையும் நிலையில் இருந்த பிராட்டியை அடையாளம் கண்டு அடையாளமான கணையாழியை சமர்ப்பிக்கும் அழகு. பண்டிதர் பாணியில் சீதையோடு உரையாடாமல் பாமரர் மொழியில் பேசுவது. சுத்த சம்ஸ்கிருதத்தில் பேசினால் ராவணன்தான் மாறுவேஷத்தில் நய வஞ்சமாக அணுகுகிறான் என்று சீதை சந்தேகப்படுவாள். ஏனெனில் ராவணன் மஹாப் பண்டிதன்.

பின்னர் அரக்கர் படையை சவால் விட்டு அழைத்து அநாயாசகமாக
அதை அழைக்கும் அழகு. ராவணனைச் சந்திக்க உபாயம் தேடும் அழகு. அரக்கனை எச்சரித்து சீதை அனாதையல்லள் என்று அச்சுறுத்தும் அழகு. சுருதிநாயகன் பெருமையை தாமஸர்களான அரக்கர் அவையில் நிறுவும் அழகு. உரிய தருணத்தில் இவர் கொடுக்கும் “jolt” ராவணன் கடைசிவரை தாயாருக்கு தொல்லை தராமல் இருக்கக் காரணமாகிறது.

அனுமனைத் தலை சிறந்த ஒற்றனாக, இராமபிரானின் நம்பிக்கைக்குரிய தோழனாக, சிறந்த தூதுவனாக, சொல்லின் செல்வனாக, மேலான தொண்டனாக, வேதாந்தக் கண்ணோட்டத்தில் தலை சிறந்த ஓர் ஆச்சாரியனாகக் காட்டும் பகுதியாதலால் “ஸுந்தரகாண்டம்” என்று பெயர் தரப்பட்டது.

தேவ் ஒரு இராமபக்தர். அவரின் பக்தி அவர் எழுத்திலும் தெரிகின்றது.

பெண்கள் துயர் துடைக்க யார் வருவார்?

பேசத் தெரிந்த பெரியவர்கள் பேசுகின்றார்கள்.

எழுத முடிந்தவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லிதயம் படைத்த நல்லவர்களுக்குப் பெண்ணுலகம் நன்றி செலுத்து கின்றது.

கல்வியும் பொருளாதார நிலையில் உயர்வும் அவளுக்கு உதவும். ஆனால் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்புகள் இல்லையே ! அதுமட்டுமல்ல, இன்னும் பல இன்னல்கள் அடியில் ஓடும் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கின்றதே அதனை எப்படி அழிப்பது?

நானும் புலம்புகின்றேன். என்னைத் தேடி வந்து என் தோள்களில் சாய்ந்து அழுத பெண்கள் எத்தனை பேர்கள்? அவர்களைக் காப்பாற்ற முயன்ற எனக்குத் தான் எத்தனை சோதனைகள் ?

சீதாம்மாவின் குறிப்பேடு முழுமையாக வந்தால் இதிகாசத்தைவிடப் பெரிதாக இருக்கும். அத்தனை மனிதர்கள் ! அத்தனை சம்பவங்கள் !
ஜெயகாந்தனின் எழுத்து, அவர் சிந்தனை, அவர் நட்பு இவைகள் என் பணிக்கு ஊன்று கோலாய் உதவியதால் என் அனுபவங்களுக்கு அவர் கதைகளில் சில பகுதிகளையும், உரையாடல்களையும் எடுத்துக் காட்டுகளாக உபயோகித்தேன்.

என் குறிப்பேட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் ஓர் திருவிழாக் கூட்டம் போல் இருக்கும். எழுத நினைக்கவும் அவர்களில் முதலாக முன் வந்தவர் ஜெயகாந்தன். என் மனம் எப்பொழுதும் சமுதாயத்தின் நன்மையைத் தான் சுற்றி வரும். எனவே அதற்குதவும் ஜெயகாந்தனின் படைப்புகளை இத்தொடரில் கையாண்டேன். முடமாகி ஒதுங்கி யிருக்கும் முதுமையில் என்னால் முடிந்தது இந்த எழுத்து. இதையாவது செய்ய முடிகின்றதே !

நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் ஒரு சாமான்யமான பெண்மணி.
என் எழுத்தும் சாமான்யமானவைகளாகவே இருக்கும். கிராமத்தாருடன்,
எளியவர்களுடன் பேசிப் பேசிப் பழகிவிட்டது. இலக்கியம் படித்தவளா யினும் எழுத்து எளிமையாகவே இருக்கும்.

வாழ்க்கையில் போராளியாக வாழ்ந்தேன். ஊதியம் பெற்றுத்தான் பணி செய்தேன். ஊதியம் வாங்கியதால் என் கடமைகள் இரட்டிப்பு உணர்ச்சியுடன் செய்தேன். வயதாகிவிட்ட படியால் பணியிலிருந்து ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் சமூக சேவைக்கு ஓய்வு கிடையாது. இன்னும்
முடிந்த அளவு ஏதோ செய்துவருகின்றேன்.

என் அனுபவங்களை, எண்ணங்களை எழுதி வருவதற்கும் ஓர் காரணம் உண்டு. இன்றைய இளைஞர்களுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நான் வழங்குவது இந்தக் குறிப்பேடு. ஜெயகாந்தன் பற்றிய தொடர் நிறைவுக்கு வரலாம். ஆனால் என் குறிப்பேட்டின் பல பக்கங்கள் அவ்வப்பொழுது பார்வைக்கு வரும். இப்பொழுது சில பக்கங்களையாவது பதிய முடிந்ததே என்பதில் மனத்தில் நிறைவு. அந்த மன நிறைவுடன் இத்தொடரை நான் முடிக்கின்றேன்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்,
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம் ;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா !
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா !
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ;
கலிய ழிப்பது பெண்க ளறமடா !
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறிகொரு தாழ்வில்லை ;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
கதலின்பத்தைக் காத்திடு வோமடா !

(இத்தொடரைப் பிரசுரித்த திண்ணை இதழுக்கும், என் எழுத்தினைப் பொறுமையுடன் வாசித்த வாசகர்களுக்கும் நன்றி.)

சீதாம்மா

(முற்றிற்று)

++++++++++++++++++++++++++++++++

“seethaalakshmi subramanian” ,

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

சீதாலட்சுமி



சீதாம்மா

காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது. அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு பிரமுகர் என்று அருகில் இருந்தவர் கூறினார். என்னை அந்த பிரமுகருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு அதிகாரி.

இந்த அம்மா பெயர் திருமதி சீதாலட்சுமி. நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்கற மகளிர் நல அதிகாரி

நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.

பிரமுகர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

“உங்க டிபார்ட்மெண்டுலே பொம்புள்ளங்க ஒழுங்கா வேலை பாக்க மாட்டாங்களா ?

ஏன் அப்படி சொல்றீங்க ?

எங்க ஊர்லே ஒருத்தி இருக்கா. அவ செய்யற வேலை என்ன தெரியுமா, ப்ராத்தல் ஹவுஸ் நடத்தறா .. எங்க ஊருக்கு வந்து பாருங்க ..

அங்கிருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தனர்.

எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும்.
அப்பொழுது நான் என்ன பேசினேன், அதன் தொடர்ச்சி என்ன என்பது தனிக்கதை.

ஐந்து கணவர்களுக்கு முன்னிலையில், நடுச்சபையில் அன்று திரெளபதி
அவமானப்படுத்தப்பட்டாள்.

அன்னிய மண்ணில் ஊர் கூடியிருக்க, தேவர்களும் பெரியவர்களும் கூடியிருக்கக் கட்டிய கணவரே தீச்சொற்களை வீசி அக்கினிக்கு விரட்டப்
பட்டாள் சீதை.

அய்யா, பெண்னை அவமானப்படுத்துவது இதிகாச காலத்தில் இருந்து வரும் தொடர் நிகழ்வு. பெண்ணாய்ப் பிறந்தது எங்கள் குற்றமா? இது போன்ற சம்பவங்கள் ஒன்றா இரண்டா ? மனம் வலிக்கும் பொழுது
நான் ஓடித் தஞ்சம் புகும் இடம் தேனம்பாக்கம் அல்லது கலவை.

தேனம்பாக்கம்.

இறைசக்தியை, தவத்தின் அருமையை உணரவைக்கும் அற்புதமான இடம். அங்கே ஆடம்பரம் கிடையாது. சத்தங்கள் இல்லாத ஒரு சத்திய பீடம். அங்கே தரிசிப்பதும் அமைதி. உணர்வதும் அமைதி. காஞ்சியில் இருக்கும் வரை நான் அடிக்கடி அங்கு போய் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவேன். யாருடனும் பேச வேண்டியதில்லை. அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் மகாப் பெரியவரை தரிசித்தால் போதும். எங்கும் கிடைக்காத நிம்மதி கிடைக்கும். சில சமயம் கலவைக்கும் தரிசனத்திற்குச் சென்றிருக்கின்றேன்.

என்னுடைய பணியில் சோதனைகள் அதிகம். ஆத்மார்த்தமாகப் பணியாற்றுபவர்களுக்கு போராட வேண்டிவரும். சாதாரணப் பிரச்சனை யென்றால் ஜெயகாந்தன் குடில் போவேன். என் மனத்தையே ஆட்டி வைக்கும் நிலை வரும் பொழுது தவக் குடிலுக்குச் சென்று விடுவேன். உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் கேள்விகள் கேட்பேன்.

இறைவா ஏன் பெண்ணைப் படைத்தாய்? மனித உணர்வுகளுடன் படைத்ததற்குப் பதிலாக ஓர் இயந்திரமாகப் படைத்திருக்கக் கூடாதா, வலியில்லாமல் இருப்போமே.

மனம் புலம்பிக் கொண்டே இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதி பிறக்கும். அத்துடன் எதிர்த்துப் போராட புது சக்தியும் பிறக்கும். இதனை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளில் வடிக்க முடியாது. இது எப்படி என்ற கேள்வி எழலாம். தவறல்ல.. என் அனுபவத்தைக் கூறுகின்றேன், அவ்வளவுதான்.

மகாப்பெரியவர் சில நேரங்களில் உட்கார்ந்திருப்பார். சில நேரங்களில் நடந்து கொண்டிருப்பார். சாதாரணத் தரையில் துணி விரித்துப் படுத்து மிருப்பார். அங்கே போகின்றவர்கள் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஏதோ கூண்டுக்குள் அவர் இருப்பது போன்று தெரியும். சில விநாடிகள் பார்த்துக் கொண்டு நாம் நின்றால் நாம்தான் உலகச் சிறைக்குள் இருக்கின்றோம் என்பதை உணர்வோம். பாச வலையில் கட்டுண்டு
ஏதோ ஒரு வாழ்க்கையை நிலை என்று கருதி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

சில நேரங்களில் பெரியவர் அங்கே வந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார். அருகில் வரச் சொல்லி கையசைப்பார். நம்மைப்பற்றி விசாரிப்பார். குழந்தையைப் போல் சிரிப்பார். அந்த தரிசனம், அந்த சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

யாராவது ஒருவர் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் நமக்கு குறு குறுவென்று உணர்வு தோன்றும். கூட்டம் இருந்தால் அங்கே அமைதி இருக்காது. அங்கே வருகின்றவர்கள் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற சிந்தனையின்றி ஓர் மாமனிதர் அமர்ந்திருக்கின்றார். அவருடைய புலன்கள் அவரின் கட்டுப்பாட்டில். மனம் அந்த முனிவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் நேரில் உணரலாம். நாமோ நம் மனத்திற்கு அடிமையாகி குரங்காட்டம் ஆடுகின்றோம். அதனால் எத்தனைத் தப்புத்தாளங்கள்.

விமர்சனத்திற்கு வீழ்ந்து விட்டால் நாளை புகழுக்கும் அடிமையாக வேண்டிவரும். கடமைகளைச் செய்யும் பொழுது பற்றற்று செயலாற்ற வேண்டும். இதுதானே கீதையும் சொல்கின்றது. அந்த தவச்சாலையில் சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டால் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மறைந்துவிடும். இதனை ஒருவர் அனுபவத்தால் தான் உணர முடியும்.

மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மகாப் பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அங்கே பேச்சில்லை. கண்மூடி தியானம் செய்தார்கள். பல பெரியவர்கள் அவர் முன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் தியானம் செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கின்றேன்.

திரு மணியனுடன் போகும் பொழுது மடத்திற்குப் போவோம். அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் நிறைய பேசுவார்கள்.

இந்துக்களின் மனங்களில் உயர்ந்த பீடத்தில் இருப்பவர். அவர் விரும்பியிருந்தால் அவருக்கு அத்தனை வசதிகளையும் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவரோ துவராடைக்குள் பொதிந்து, எளிய உணவு உண்டு, படுப்பது கூட ஒற்றைத் துணிவிரித்துத் துயில் கொள்ளும் அவரைப் பார்க்கும் பொழுது சன்னியாசத்தின் அர்த்தம் தெரியும். சில நாட்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கையில் அந்த மணித் துளிகள் கிடைத்ததைப் பெரிய பாக்கிய மாகக் கருதுகின்றேன்.

குரோம்பேட்டையருகில் ஒரு கோயிலில் இருந்த அன்னபூரணி விக்ரஹம்
சிதில மடைந்தது. பக்தர்கள் மகாப் பெரியவரை அணுகித் தெரிவித்த பொழுது அதனைக் கடலில் இட்டு விட்டுப் புதியதாக ஒரு சிலை செய்துவரச் சொல்லிப் பணித்தார். பக்தர்களும் அவ்வாறே செய்து புதிய சிலையுடன் காஞ்சிக்குச் சென்றனர். ஆனால் மகாப் பெரியவர் அங்கில்லை. இரவாகிவிட்டது. எப்படியும் அவரைத் தரிசிக்க விரும்பி அவர்கள் போன பாதையைக் கேட்டு பக்தர்கள் விரைந்தனர். நள்ளிரவாகி விட்டது.

ஆனாலும் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஆட்கள் அரவமில்லா இடமாக இருந்தது. தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. அங்கே சென்ற பொழுது மகாப் பெரியவரின் சிஷ்யர்கள் இருப்பதைக் கண்டனர். சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அங்கே ஓரிடத்தில் இருந்த பல்லக்கில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அமைதியாக
நகர ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் பல்லக்கிலிருந்து மகாப்பெரியவர்
வெளிவந்து அருகில் வந்துவிட்டார். யாரும் பேசக் கூட இல்லை. பக்தர்கள் மெய்மறந்து போய் பிரமித்து நின்றுவிட்டனர். ஸ்வாமிஜி அருகில் வந்து விபரம் கேட்டு புதிதாக செய்து கொண்டு வந்த அன்ன பூரணி சிலையைப் பார்த்தார். பிறகு தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கோயிலில் கொண்டு போய் இனி பிரதிஷ்டை செய்யலாம் என்று அருள் கூர்ந்தார்.

இதனால் நாம் என்ன தெரிந்து கொள்ளமுடிகின்றது?

திருமாலின் அனந்த சயனமும் சிவனின் மோனத் தவமும் காட்சிகள் தான்.
எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் சக்திகள். சிறிய அசைவு கூட அவனின்றி எதுவும் இல்லை. நமக்குத் தெரியாததால், உணர்ந்து கொள்ள முடியாததால் தவ வலிமையைப் பொய் என்று கூறுதல் சரியாகாது.

ஜெயகாந்தனின் :ஜெய ஜெய சங்கர “தொடர் சாதாரணமான கதையல்ல.
ஆன்மீகம், காந்தீயம், கம்யூனிசம் என்று அவர் ஆன்மாவின் விருப்பங் களை அருவியாய் ஓட விட்டிருக்கின்றார். அன்பே சிவம். மனித நேயமே அறம். அங்கே ஆதியின் வாழ்க்கை, அவர் கோட்பாடு இவைகள் மூலம் வாழும் தத்துவத்தைக் காட்டி இருக்கின்றார்.

ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர.

காஞ்சியில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவத்தையும் நான் கூற வேண்டும். மனிதன் என்றால் எல்லோருக்கும் சின்னச் சின்ன ஆசைகள், பெரிய ஆசைகள், ஏன் பேராசைகள் கூட இருப்பது இயல்பு. எனக்கும் ஒரு பேராசை இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு

திரு.கே.எம். ராஜகோபால்
காஞ்சிபுர ஊராட்சி ஒன்றியத் தலைவர்
சட்டமன்ற உறுப்பினர்.
திராவிடக் கழகத்தின் தீவிர உறுப்பினர்.

இலக்கியம் தெரிந்தவர். கம்ப ராமாயணம், பெரியபுராணம் புத்தகங்கள் கையில் இல்லாத நிலையிலும் எந்த கேள்விகள் கேட்டாலும் இடத்தையும் மேற்கோள்களையும் காட்டிப் பேசும் புலமை மிக்கவர்.

என் அண்டை வீட்டுக்காரர் என்று சொல்லும் அளவு அருகில் வசித்தவர்.
முப்பத் தெட்டு வயதில் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்து வந்தவுடன் காஞ்சிக்குத் தான் மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தேன். என் இலக்கிய பசிக்கு உதவியவர். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவர் இல்லத்திற்குச் செல்வேன். அவர் வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து காரசாரமான விவாதம் நடத்துவோம். வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள். ஆனால் எங்களுக்குள் மனக்கசப்பு வந்ததில்லை. ஒரு நாள் நடந்த உரையாடலைப் பதிய விரும்புகின்றேன்.

உங்கம்மா ஏன் காலையிலே எழுந்திருந்து லொங்கு லொங்குன்னு கோயிலுக்கு நடக்கறாங்க. பாவம் கிழவி, வீட்டுக்குள் இருக்கக் கூடாதா?

அவரைச் சில வினாடிகள் பார்த்துவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
ஆமாம், நீங்க இப்படி தொடர்ந்து சிகரெட் குடிக்கிறீங்களே, ஏன்?

எனக்கு சிகரெட் புகைக்கப் பிடிக்கும்

சிகரெட் புகை நுரையீரலைக் கெடுக்குமே. வியாதிவரும். இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா ?

எனக்குப் பிடிச்சிருக்கு. பழகிப் போச்சு. விட முடியாது. அதுசரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லல்லியே ?!

சொல்றேன். எங்கம்மா அதிகாலையிலே எழுந்திருப்பாங்க, குளிப்பாங்க.
அப்புறம் கோயிலுக்கு நடப்பாங்க. இதெல்லாம் உடம்புக்கு நல்லது.

நான் இதைச் சொல்லிவரும் பொழுது அவர் ஏதோ சொல்ல வந்தார். அதனைக் கையசைத்து நிறுத்திவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன்

எங்கம்மா, கோயில்லே சாமி கும்பிடுவாங்க. கடவுளைக் கும்பிட்டால் கஷ்டம் குறையும்னு நினைச்சு செய்யறாங்க. கஷ்டம் குறையுதோ என்னமோ, நம்பிக்கை இருப்பதால் மனசு லேசாகும். மன அழுத்தம் குறையும். B.P வராது. உடம்புக்கு எல்லா வகையிலும் ஆரோக்கியம்.
உடம்பைக் கெடுக்கற இந்த புகையைவிட உடம்புக்கு நல்லது செய்யற அந்த கல்லைக் கும்பிடப் போறதில் என்ன தப்பு.

அது மூடப் பழக்கம்.

நீங்கப் புகைக்கறது கெட்ட பழக்கம். அவங்க பழக்கத்துலே அவங்களுக்கு நல்லது கிடைக்குது. உங்க பழக்கத்துலே உடம்புக்கே கெட்டது நடக்குது.
உங்க குடும்பத்திலே யாரோ கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போனாங்களே, அப்போ நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க ?

இந்தப் பொம்புள்ளங்க எங்கே பேச்சைக் கேட்கறாங்க?

உங்க வீட்டைத் திருத்த முடியல்லே. ஊருக்கு உபதேசம். சாதியப் பத்திப் பேசினா ஒரு சாதியைத்தான் திட்டறீங்க. மூடப் பழக்கம்னு தாக்குதலும் ஒரு மதத்தில் மேல்தான். என்னய்யா சீர்திருத்தம் இது?

முதல்லே உங்க வீடுகள்ளே சொந்த சாதியிலே கட்டாதீங்க. உங்க வீட்டு மனுஷங்களைக் கோயிலுக்குப் போக விடாதீங்க.

பேசத் தெரிஞ்சவங்க பேசறீங்க.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிச்சவங்க நீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதிகள் பிடிக்காதுன்னு. நான் கடவுளை நம்பறவ. கோயிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எந்த மதத்தையும் திட்ட மாட்டேன்.

அவரால் பதில் கூற முடியவில்லை. கோபப்படவும் இல்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நல்ல மனிதர். நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள். அவரிடம் என் ஆசை ஒன்றைக் கூறியிருந்தேன். தந்தை பெரியார் அய்யாவைப் பார்க்க வேண்டும்.
பெரிய மனிதர்களைப் பார்ப்பது என் போன்ற அதிகாரிகளுக்குக் கஷ்டமில்லை. சாதாரண அறிமுகமும் ஓரிரண்டு வார்த்தைகளும் பேசிட முடியும். நான் விரும்பியது அதுவல்ல. என்னைப் பற்றி தெரிந்து, பின்னர் அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்.. அவர் என்னை என்ன கேள்வி கேட்பார், நான் என்ன பதில் சொல்வேன் என்று பார்க்க வேண்டும்.. எப்பேர்ப்பட்ட பேராசை பார்த்தீர்களா?

என் ஆசையை நிறைவேற்றி வைத்தார் திரு கே.எம்.ஆர் அவர்கள்.
காஞ்சிக்கருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஓர் திருமணம் அய்யாவின் தலைமையில் நடப்பதாக இருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்தது.
அய்யாவைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றேன். திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சேர்மன் என்னிடம் வந்து அய்யாவைப் பார்க்க அழைத்துச் சென்றார்.

அப்பப்பா, என்ன கம்பீரம்.! அந்த வெண்தாடிக் கிழவரை வணங்கினேன்.

என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே, “ஆமாம் நீ கோயிலுக்குப் போவியாமே, ஏன் போறே? “ என்று எடுத்த எடுப்பில் கேள்விக் கணையை வீசி விட்டார்.

ஏனோ பயமோ தயக்கமோ வரவில்லை. பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அய்யாவின் குரலை ரசித்துக் கொண்டிருந்தேன்.
பதில் சொல்ல வேண்டுமே, சொன்னேன்.

“எனக்குப் பிடிச்சிருக்கு, போறேன் “

அவ்வளவுதான், என் பேச்சைக் கேட்கவும் பலமாகச் சிரித்தார்.
“பாரய்யா, இவளுக்குப் பிடிச்சிருக்காம்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூர்ந்து பார்த்தார்.

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு, பொம்புள்ளைங்க இப்படித்தான் துணிச்சலாப் பேசணும். பயப்படக்கூடாது. பொண்ணுங்க படிக்கணும். துணிச்சலா இருக்கணும் “

அங்கே பாரதியின் நினைவு வந்தது. அய்யா அவர்கள் பாரதியைவிட பெண் விடுதலைக்கு உரத்த குரல் கொடுத்தவர். பெண்ணியம் பேசும் எனக்கு எப்படி அய்யாவைப் பிடிக்காமல் இருக்கும்.!

இந்தப் பதிவைப் படிக்கின்றவர்களுக்கு எழும் சந்தேகங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இடுகையில் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் எழுதி இருவரையும் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன். எங்கெங்கு சமுதாய நலனுக்கு, பணிசெய்ய ஊக்கம் கிடைக்கின்றதோ அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். மதிக்கின்றேன். எனக்கு முக்கியம் ஒவ்வொரு குடும்பமும் சண்டை சச்சரவின்றி அமைதியாக வாழ வேண்டும். இது பேராசையா? இந்த விஷயத்தில் நான் ஒரு செக்கு மாடு போன்றவள். படித்தாலும், பார்த்தாலும், பழகினாலும், எழுதினாலும் என் நோக்கம் ஒரே குறிக்கோளுடன் சுற்றிக் கொண்டிருக்கும். வயதாகி ஒடுங்கிப் போன காலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்துவருகின்றேன்.

அய்யா அவர்களை இன்னும் கொஞ்சம் அவசியம் பார்க்க வேண்டும்.
அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர் பேசியவைகள் அனைத்தும் எழுத முடியாவிட்டாலும் ஒன்றிரண்டாவது பார்க்கலாம்.

ராஜாரம் மோகன்ராய் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியயும் கொளுத்திட்டா அப்புறம் அவளை இந்த சமுதாயம் வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது?. எங்கேயோ சொர்க்கம் இருக்காமே அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடம் கஷ்டம் முடியும்.

அப்பப்பா, என்ன ஆத்திரம் ?

புள்ளை உண்டாயி கஷ்டப்படறதைக் காட்டிலும் கருப்பையை அறுத்து தூர எறியணும்..

“பெண்கள் மதிப்பற்று போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.”
குடியரசு இதழ் 15-6-1943.

இப்படிக் கூறுவதால் பெண் சுதந்திரம் பாதிக்கப் படுகின்றதா ? ஜெயகாந்தன் சொன்ன சுதந்திர அடிமைகள் இதுதான். பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்களைவிட ஆண்கள் வரிந்து கொட்டி எழுதுகின்றார்கள். இதனால் அதிகப் பயன் யாருக்கு ? சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையில் சீக்கிரம் சக்கையாகி விட வேண்டுமா?

அய்யா அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.

புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிட்டா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும் இதுவரை இப்படிச் சொன்னவர் யார்? அதற்காகப் பெண்களை அழிந்துவிடச் சொல்லவில்லை. அவருடைய் ஆத்திரம் எரிமலையாக வெடிக்கின்றது.

அய்யா அவர்களின் கொள்கைகளைப் பேசுகின்றவர்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான “பெண்விடுதலை” மேடைப்பேச்சில் கூட அதிகம் தொனிக்கவில்லை. அதுமட்டுமல்ல மேடையில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதைத் தடுப்பதும் இல்லை. பண்பாடு பற்றி நாம் நிறைய பேசுகின்றோம். எனவே வாழ்க்கையில் ஒழுக்க விதிகளை முன் மாதிரி யாகப் பின்பற்ற வேண்டும்.. எங்களுக்கு வெற்றுப் பேச்சும் வெறும் புகழ்ப்பாட்டும் வேண்டாம். எங்களை மரியாதையுடன், மனிதப்பிறவிகளாய் நடத்துங்கள். இதுவே என் வேண்டுகோள். சில நலத் திட்டங்களைத் தீட்டுவது மட்டும் போதாது. முதலில் அவரவர் குடும்பங்களில் பெண்கள் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும், எக்கட்சியினரையும் தனிப்பட நினைத்து இதனைக் கூறவில்லை. சமுதாயத்தில் ஒரு சக்தியாக இயங்கும் அரசியல் அமைப்புகளூக்கு இந்தக் கிழவியின் வேண்டுகோள்.

மதங்களிலும் நன்னடத்தை பேசப் படுகின்றது. நாங்கள் இறை பக்தி யுள்ளவர்கள் என்று கூறுபவர்களும் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று முடிவு எடுக்கட்டும்.

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் நன்னடத்தைக்கு வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டிப்பாக்கினால் எங்களின் பல குறைகள் குறையும். முற்றிலும் போகாது என்று தெரியும். ஏனென்றால் நாம் மனிதர்கள். சஞ்சலப் புத்திக்காரர்கள்.

பெண்ணைக் கெடுக்கின்றவன் கெட்டிக்கரத்தனமாகத் தப்பிக்கின்றான்.
அறையில் பட்ட அவலத்திற்கு மேலாக நீதி மன்றத்தில் வக்கீலின்
வாதங்களில் அவமானப் பட வேண்டும். அங்கம் அங்கமாக நடந்ததை விசாரிப்பார். என்ன கொடுமையடா ?

அனுராதாவின் “சிறை” கதை நினைவிற்கு வருகின்றது. அற்புதமான கதை. நெஞ்சக் கொதிப்பை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

இன்று பெண்னின் நிலையென்ன ?
கருவிலேயே பெண் சிசு கொலை.
பிறந்த பின்பும் கொலை.

பெண் குழந்தையென்றால் பெற்றவள் கூட சோற்றைக் குறைத்து விடுகின்றாள். இது பத்திரிகைச் செய்தில்ல. நான் ஆய்வு செய்திருக்கின்றேன்.

பள்ளிக்குச் செல்லும் பெண் வீடு திரும்புமா என்ற நிலை. பெண் என்றால் மனைவி படும் கஷ்டம், அவள் ஆடையலங்காரம் போன்றவைகள் தானா?

ஒரு சில பெண்கள் கல்வி, உயர்ந்த உத்தியோகம் என்றால் பெண் சமுதாயமே விடுதலை பெற்ற தாகுமா?

பெண்ணுக்கு ஆண் மட்டும் சோதனை கொடுக்கவில்லை. பெண்ணே பெண்ணுக்குத் தீங்கிழைக்கின்றாள். சுதந்திரக் காற்றின் மணத்திலே மயங்கி எத்தனை பேர்கள் தடம் மாறி அவல நிலைக்குப் போயிருக்கின்றார்கள்?!
தனக்குத்தானே அறியாமல் தீங்கு செய்து கொள்கின்றாள்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி “

என்று பாடினானே பாரதி. அதுதான் உண்மை. பெண்ணாகப் பிறந்தாலே
ஏற்படும் சோதனைகள், வேதனைகள் உலகம் முழுவதும் பொதுவானது.

துன்பம் நீங்க “சுந்தர காண்டம்” படிக்கச் சொல்லுவார்கள். நானும் இப்பொழுது படிக்கலாம் என நினைக்கின்றேன்

ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் பார்ப்போம்.

( இந்தத் தொடர் அடுத்த பதிவுடன் முடிய இருக்கின்றது.)

தொடரும்

++++++++++++++++++++++++++++++++

“seethaalakshmi subramanian” ,

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

சீதாலட்சுமி


நகரேஷு காஞ்சி

சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன்.

கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக பல்சமயத் தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமை பெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி.
அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை.
என் சில தேடல்களுக்கு விடைகள் கிடைத்த இடம்.
சில ஆசைகள் நிறைவேறிய இடம்.
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றம் கண்ட இடம்.
இன்றும் என் நினைவில் வாழும் இடம்.

காஞ்சியில் வாழ்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓர் கலைஞன். எழுத்தாளன். அவன் எழுதிய நகைச்சுவை நாடகம் போற்றி புகழப்பட்டது. கல்லை கலை வண்ணங்களாக்கி, புதுமை படைத்தவன். எதிரியையும் மயக்கிப் பரிவை ஏற்படுத்தி, பரிசளிக்க வைத்த கைலாசநாதர் கோயிலை கட்டுவித்த இராசசிம்மன் வரலாற்றில் புகழ் படைத்தவன் தமிழுக்கு ஓர் தண்டி மட்டுமல்ல, கலம்பகம் கேட்கத் தன்னுயரைத் தந்த நந்திவர்மன் கதையும் வரலாற்றில் பேசப் படுகின்றன. காஞ்சியில் இன்றும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்திய நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி கண்ட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, அரியணையில் முதலில் ஏறிய அறிஞர் அண்ணா தோன்றியதும் காஞ்சியில்தான்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும் காஞ்சி மண்ணில்தான். அறிஞர் அண்ணாவின் ஊரில்தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காஞ்சியில் பஜார் தெருவில் தேர்முட்டிக்கருகில் அறிவிப்பு செய்தார்.

காஞ்சிப்பட்டின் அழகு பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட காஞ்சியில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்தது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.

பிள்ளைப் பருவ முதல் இன்று வரை மாறாது இருக்கும் ஓர் குணம்
“தேடல்”. படிப்பது, அறிஞர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்பது, இடங்களைப் பார்ப்பது, விஷயம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பது, இவைகள் என் தேடலுக்காக நான் கடைப்பிடித்த முயற்சிகள்.

ஒரு கேள்வி

கடவுள் உண்டா இல்லையா?

ஷஷ்டி விரதம் இருந்து சங்குப்பால் குடித்து விரதமிருந்து என்னைப் பெற்றார்களாம் என்னைப் பெற்றவர்கள். எனவே குழந்தை மனத்தில் முருகனை விதைத்து ஆலயம் கட்டியது என் அம்மா. இன்று வரை அந்த ஆலயத்தில் முருகன் அழகாக வீற்றிருந்து புன்னகைக்கின்றார் .

பின் என்ன பிரச்சனை?
எனக்குள் நிறைய சந்தேகங்கள்
புராணங்கள் உண்மையா?

பிள்ளைப் பருவத்தில் படிக்க ஆரம்பித்தவுடன் நான் படித்தவைகளில் தந்தை பெரியாரின் உரைகளும், சின்னப் புத்தக வடிவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் அடங்கும். எங்கள் காலத்தில் அண்ணாவின் அழகுத் தமிழில் ஓர் மயக்கம். கடவுளைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் அவர் செய்த விமர்சனங்கள் இளம் உள்ளாங் களை ஈர்த்தன. முருகனை நெஞ்சிலே ஏந்திக் கொண்டு நானும் அந்த விமர்சனங்களைப் பேசிக் கொண்டிருந்தேன்.

நான் படிக்கச் சென்ற கல்லூரி கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒன்று.
அவர்களின் அன்புக் குரலிலும் மெய்மறந்தேன். ஏற்கனவே சுவாமி சிவானந்த மகரிஷியுடன் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அவர் அனுப்பி வைத்த புத்தகங்கள் அனைத்தும் படித்தேன். ரிஷிகேஷம் போய் துறவறம் பூண வேண்டுமென்ற ஆசையும் வளர்ந்தது.

கடந்த கால நினைவுகளில் புரளும் பொழுது ஒரு கதையின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஜெயகாந்தன் எழுதிய கதை “துறவு “,
இளவயது அதிலும் குறிப்பாக “டீன் ஏஜ்” என்று சொல்ல கூடிய இரண்டுங்கெட்டான் காலத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்கட்டுகின்றது. நாமும் காட்சிகளுடன் நகரலாம். ஜெயகாந்தன் வரிகளில் காண்பதுதான் சரியாக இருக்கும்.

சோமுவுக்கு வயது பதினைந்துதான். அதுதான் மனிதனுக்குப் பித்துப் பிடிக்கும் பருவம். சோமுக்குவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும் மனசிலும் சதா ஒரு
துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சமபந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம்
சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும் வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது.

சோமுவும் எதை எதையோ நினைக்க ஆரம்பித்தான் உற்றார், உறவினர், வாழ்வு அனைத்திலும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. தனிமையை நாடினான். வீடே வெறுத்தது. சோமுவுக்கு வந்தது வேதாந்தப் பித்து.
சுவாமி அருளானந்தரின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்டதில்
சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.

“ஆமாம், தாய், தந்தை, உடன்பிறந்தார், சுற்றம், செல்வம், உலகம் எல்லாம் பொய்தானே.. சாவு வரும். அதுமட்டும் தான் உண்மை.
அந்தப் பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்.
படிப்பு ஏண் ? சம்பாதனை ஏன்? முடிவில் ஒரு நாள் செத்துப் போவேனே .. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, .. என்ன எல்லாம் வெறும் பொய். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால் ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையலாம்..”

கடவுளைக் காண கைலாயம் புறப்பட்டுவிட்டான். வீட்டில் சொல்லவில்லை. அழகு சுருட்டை முடியைத் துறந்தான். நடந்தான் நடந்தான். நடந்தான். கால்கள் வலித்தன. பசியை அடக்க முடியவில்லை. போகும் பாதையில் காணும் நாவல் கனியைக் கூட ஆசையுடன் பார்க்க ஆரம்பித்தான். உடம்பு தளர தளர அவன் வைராக்கியமும் தளர ஆரம்பித்தது. அவன் நிலையைக் கண்ட ஓர் முதியவர் அவனிடம் பரிவுடன் நெருங்கினார். கனிவுடன் பேசி அவன் நிலையைப் புரிந்து கொண்டார். சுமைகளை உதறிவிட்டு வந்த சோமுவுக்கு சோறில்லாமல் வெற்றுடல் சுமையாக் கனக்கிறது. அவரிடம் அழுது கொண்டே பேசினான். பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் பிடிதளர்ந்தன.
வீடு திரும்பவேண்டும் என்று சொன்னான்.

“பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்” என்ற உண்மையை உணர்ந்தான். வீடு நோக்கித் திரும்பினான்.

சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட தத்துவத்தை
ஓர் சின்னப் பிள்ளையின் மூலமாகக் காட்டுகின்றார் ஆசிரியர்.

ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் இருபது வயதுக்குள் எத்தனை எத்தனை சிந்தனைக் குவியல்கள், குழப்பங்கள். நான் அனுபவ பூர்வமாக
அனுபவித்தவை. நல்ல வேளையாக நான் படிப்பைவிட்டு ஓடவில்லை. நினைப்புடன் நின்றுவிட்டேன்.

இக்காலமாக இருந்திருந்தால் துறவறத்திற்குப் பதிலாக வெள்ளித் திரையில் அல்லது சின்னத் திரையில் நடிக்கும் ஆசையில் ஓடிப் போயிருக்கலாம். இன்று நடப்பதைத்தான் கூறுகின்றேன்.

காலம் என்னை சமுதாய வீதிக்குக் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு இது போன்ற சிந்தனைகள் எதுவும் இல்லை. எப்பொழுதும் முருகன் மட்டும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் காஞ்சிக்கு வந்த பின்னர் என்னுடைய தேடல் என்னைத் தேடி வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று பிரிக்கப்படாத செங்கை மாவட்டத்தின் தலைநகர் காஞ்சி. நான் மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தத்தால் மாவட்டம் முழுவதும் பயணம் செல்ல வேண்டும். பல இடங்கள் சென்னை சென்று அங்கிருந்து
போவதும் உண்டு.

தமிழ்ப் பித்து காரணமாக இரண்டாண்டுகள் விடுப்பு எடுத்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அக்காலத்தில்தான் பல இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பத்திரிகை நிருபர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர்.

மயிலாப்பூர் கற்பகாம்பிகா கோயிலில் உதவி ஆணையாளராக திரு. நாகராஜன் பணியாற்றி வந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அவரும் ஒருவர். நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களிலும் சொற்பொழிவுகள் உண்டு. என்னையும் ஒருநாள் பேச்சாளாராகக் குறித்து அழைப்பு விடுத்தார்.

தலைப்பு : “காஞ்சி காமாட்சி – காசி விசாலாட்சி”

இப்பொழுது நான் புராணங்கள் பற்றிப் பேச வேண்டும். ஸ்தல புராணங்கள் படித்தேன். பல கேள்விகள் என்னை முட்டித் தள்ளின.
சங்கர மடத்தை சேர்ந்த ஒருவரை அணுகி என் சந்தேகங்களைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

கேள்விகளில் இருவகை உண்டு. ஒன்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் பிறக்கும் கேள்விகள். இன்னொன்று கேலியாக் கேட்பது.

என் தேடல் முயற்சியில் ஒர் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உபநிஷதமடம் என்று சொன்னார்கள். அது ஒரு அழகான நந்தவனம். அங்கே வயதான ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் போய் என் சந்தேகங்களைக் கேட்கச் சொன்னது ராஜம்மாள் என்ற ஒரு பெண்மணி. அவர் ஆன்மீகப்பற்று கொண்டவர்.

அந்தப் பெரியவரிடம் என் தவிப்பைக் கூறினேன். அவரோ முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்டு என் எல்லாக் கேள்விகளும் பதில் கொடுத்தார். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த பல குழப்பங்கள் நீங்கின. பின்னர் நம்பிக்கையுடன் கோயிலுக்குப் பேசச் சென்றேன். எல்லோரும் பேச்சு நன்றாக இருந்தது என்றார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு என் அணுகுமுறை பிடித்திருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என்னிடம் வந்து பேசினார்கள். அடுத்த வருடமும் பேசப் போனேன். மூன்றாவது முறை கூப்பிட்ட பொழுது நயமாக மறுத்து விட்டேன். காரணம் என் குறை எனக்குப் புரிந்து இருந்ததால் ஒதுங்கிக் கொண்டேன்.

என் சொற்பொழிவு அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் உருக்க மில்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகளில் உருக்கமும் இருக்க வேண்டும். எல்லோர் மதிப்பையும் பெற்ற உயர்திரு வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறப்பவள். அவர் ஒரு கடல். ஆன்மீக மேடைக்கு நான் பொருந்தாதவள் என்று என்னை உணரவைத்தவை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும்.
இயலாமை என்பது பெரிய குற்றமல்ல. நமக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலிதனம் தான் குற்றமானது.

“சுயதரிசனம்” என்று ஓர் கதை எழுதியுள்ளார் நம் ஜெயகாந்தன். அதில் வரும் கணபதி சாஸ்திரிகளீன் பாத்திரப் படைப்பு தனித்தன்மை வாய்ந்தது.

“எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறது கூட சுலபம். ஆனா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு”

கண்பதி சாஸ்திரிகளின் கடித்ததின் வாசகங்கள் இது.

அவர் யார்? எதைச் சொல்ல கஷ்டப்பட்டார்?

அவருக்கு மகன், மருமகள், பேரக் குழந்தைகள் எல்லோரும் உண்டு. ஆனால் அவரோ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ஊரைவிட்டுப் ஓடிப்போய்விட்டார். ஏன்? வேதம் கற்றவர். பெரிய சாஸ்திரிகளின் மகன். அவரின் ஓட்டம் உணர்ச்சியால் உந்தப்பட்டாலும் நடந்த அவமானத்தை விவேகத்துடன் எடுத்துக்கொண்டு விட்டார். அப்படியென்ன நடந்துவிட்டது ?

கனபாடிகள் அன்று அவரை மிகவும் கேலிசெய்து திட்டிவிட்டார்
“மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லத் தெரியாத நீ பிராமணனா?”
என்று பலர் முன்னிலையில் கேட்டுவிட்டு மேலும் கடும் சொற்களை வீசிக் காயப்படுத்தி விட்டார்.

கணபதி சாஸ்திரிகளை அந்தக் கேள்விகள் அப்படியே ஆட்டிப் படைத்தன. அவருக்கு அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. பூணூலை எறிந்துவிட்டு “நான் பிராமணன் இல்லை” என்று சொல்லிக் கொண்டு அந்த ஊரையேவிட்டு ஓடிப்போய் விட்டார்.

முதல் சில நாட்கள் அவருடைய மகன் அவர் இல்லாததைப் பொருட் படுத்த வில்லை. மருமகளும் அசட்டையாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் இல்லாதது உறுத்த ஆரம்பித்தது. அந்த தருணத்தில்தான் அவரிடமிருந்து கடிதம் வந்தது. சாஸ்திரி என்ற சொல்லை விடுத்து வெறும் கணபதியாக எழுதியிருந்தார்.

அவரின் சுய தர்சனம்.

“மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான,பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலே அதை நான் மனனம் பண்ணிட்டேன். “தாய்ப் பாலிலே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குடிக்கிறது ! அது அவசியம் இல்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன
ரசாயனம் கலந்து இருக்குங்கற ஞானம் அவசியமா என்ன? அது போல்தான் மந்திரம். உனக்கு அது தேவை. அதை ஜபிப்பதன் மூலம்
அதற்குரிய பலன்கள் உன்னை வந்தடையும் என்று ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப் படிச்சப்பறம்தான் எனக்கு ஆறுதல் பிறந்தது.
ஆனால் அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்துலே கைகொடுக்கல்லே. அறுபது வருஷமா அர்த்தமில்லாம பேத்திண்டே வாழ்ந்திருக்கேன். ..நான் இப்ப சாஸ்திரி இல்லே. எனக்கு, என் மனச்சாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன்
நான்.”

தன் பெயருடன் இணைந்த சாஸ்திரி பட்டத்தைத் துறந்து சாதாரண மனிதராக வாழத் தொடங்கிவிட்டார். தன் மாற்றங்களை, உலகப் போக்குகளை விரிவாக எழுதியிருந்தார். அவர் மகனும் மருமகளும் உருகிப் போய் நின்றனர்.

அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் கோபக்காரர். பயந்து கொண்டே அவரிடம் எந்தக் கேள்விகளும் கேட்க மாட்டார். அவர் சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டுவந்து விட்டார். இருந்தாலும் தன் குறை உணர்ந்த பொழுது பொருந்தாத சாஸ்திரிகள் பட்டத்தைத் துறந்தார்.. இப்பொழுது அவரிடம் எந்தக் குற்ற உணர்வும் இல்லை.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் ஏதாவது சின்னச் சின்ன சலனங்கள், சம்பவங்கள் இல்லாமல் இருக்காது. பெரிய பிரச்சனைகளில் உழலும் பொழுது இவைகளின் நிறம் மங்கிவிடும். அவ்வளவுதான்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு செயலை நான் கேலி பேசியிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பது பற்றித்தான்.

“பாவங்கள் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போய்விடுமா ?” என்று கேட்பேன்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அனுபவங்களில் நான் பக்குவப்பட்ட பொழுது பாவமன்னிப்பின் பலனை உணர முடிந்தது.
மனிதன் தன் குறைகளை, குற்றங்களை எண்ணிப் பார்க்க மாட்டான். அவைகளை அவன் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் கூட அவன் தவறுகள் செய்யும் பொழுது தயக்கம் ஏற்படும். வாய்விட்டு இன்னொருவரிடம் தன் தவறுகளைச் சொல்ல முடிந்தால் அவன் செய்யும் தவறுகளும் குறைய ஆரம்பிக்கும்.

மனிதனைச் செம்மைப்படுத்த, நல்வழிப்படுத்தத்தான் மதங்கள் தோன்றின.
சரியான அர்த்தம் கூறப்பட வில்லையென்றால் அது மூடப் பழக்கமாகக் கருத வழி வகுக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன்
விவேகத்துடன் நம்பிக்கைகளை விளக்கியிருக்கின்றார். அவர் ஓர் நாஸ்திகராக இருந்தவர். ஆத்திகராக மாறவும் தான் கிளப்பிய கேள்விகளுக்குத் தானே விடைகளை அருமையாக விளக்கிச் சொல்லுகின்றார்.

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. சின்னக் குழந்தைகள் கூட ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தியுடையவர்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயங்கக் கூடாது.

பண்பாடு பற்றி பேசுகின்றவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்பவரின் வார்த்தைகளை இக்காலப் பரம்பரை மதிக்காது. போலித்தனமும் பகட்டும் வெகுநாட்கள் நிலைக்க முடியாது. வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதாது. வழி காட்டுகின்றவர்கள் நெறியுடன் வாழ்ந்தால்தான் வழிகாட்டும் பொழுது இன்றைய தலைமுறை அவர்களை ஏற்றுக் கொள்ளும்

காஞ்சியில் எனக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. மகாப்பெரியவர் சன்னிதானத்தில் நான் உணர்ந்தவைகளை அடுத்துக் கூறுகின்றேன்.

தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

சீதாலட்சுமி


ரிஷி மூலம்

தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது.

ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த ஒரு பையன் மனநிலை மாறுதல்களால் பிறரிடம் சொல்ல முடியாத தன்னையே குறுகுறுக்கின்ற உணர்வலைகளில் சிக்கித் திண்டாடி தான் யார் என்பதைத் தான்மட்டும் உணர அதனை மற்றவரெல்லாம் கேலியாகப் பார்ப்பதை லட்சியம் செய்யாமல் எங்கெங்கோ திரிந்து அலைந்து தாடி மீசை வளர்த்துக் கொண்டு கஞ்சா திணித்த பீடியை மட்டுமே புகைத்துக் கொண்டு இக்கரையில் அமர்ந்துகொண்டு அக்கரையில் எரிகின்ற பிணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒவ்வொரு பிரேதமுமே தானாக உணர்ந்து தன்னைத்தானே எரித்துக் கொள்வதாக உருவகப்படுத்திக் கொண்டு பீடியால் தன்னையே புகையாக்கி மகிழ்கின்ற ஒரு மனோதத்துவக் கதை பலராலும் விமர்சிக்கப்பட்டதன் காரணம் அதில் அவன் கண்ட,செய்த இரு காட்சிகளும் நிகழ்வுகளுமே.

குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டு பிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். தினமும் அவனுக்கு தன் தாய் தன்னைக் கட்டி அணைத்துக் கொள்வதாக கனவுகள்! படிப்பதற்காகத் தன் அப்பாவின் நண்பர் வீட்டிற்குச் சென்றவன் அந்த வீட்டு மாமியே இப்போது அம்மாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள். நடக்கக் கூடாததும் நடந்துவிடுகிறது.

அன்று மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் தான் இப்பொழுது ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான்.

ஜெயகாந்தனின் எழுதுகோல் அழுத்தமாக எழுத்துக்களைப் பதிக்க
ஆரம்பிக்கின்றது. சில வரிகளையாவது அங்கும் இங்கும் கூர்ந்து பார்க்கலாம்.

“எல்லாருமே .. நானறிஞ்ச எல்லாருமே ..ஒருமாதிரியான மிருகங்கள் தான். இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு ..

மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கெல்லாம், நெறிகள், முறைகள் எல்லாம் கிடையாது அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம். ..

ஆத்திரம் காட்டாறாய் ஓடுகின்றது.

மற்ற மிருகங்களைப் பாக்கறச்சே எனக்குப் பொறாமையா இருக்கு. பறவைகளைப் பாக்கறச்சே ஏக்கமா இருக்கு . அதுகளெல்லாம் இயற்கையோடு சல்லாபமா இருக்கு. மனுஷன் மட்டுந்தான் இயற்கை யோடே சண்டை போட்டுண்டே இருக்கான். இதிலே இவனுக்குப் பெருமை வேறே ! அசட்டுப் பெருமை, வக்கிரப் பெருமை, இதை யெல்லாம் நினைச்சுப் பாக்கறச்சே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.”

“நான்” பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றார் ஆசிரியர்.

“நான் விலகி நின்னு ராஜாராமனைத் தனியா பார்க்கிற போதெல்லாம்
எனக்கு சிரிப்புதான் வருது. நான் இவனை இப்படிப் பார்ப்பேன். இவன் போட்ட வேஷத்தை யெல்லாம் ஒண்ணொண்ணா இவன் கலைச்சுப் போடறப்போ எல்லாம் “இது ஒரு ராஜாராமன், இது ஒரு ராஜாராமன்”னு நான் கணக்கு வச்சுண்டே வந்திருக்கேன்.என்னை மறைக்கத்தான் எத்தனை எத்தனை திரை போட்டான்! ..

என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்!
இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சுண்டிருந்த என்னை “நான்” பார்த்து பார்த்துச் சிரித்திருக்கேன்.”

தொடர்கின்றது.

“நான் என்பது ஈகோ என்பாரும், மாயை என்பாரும், பொய் என்பாரும், அநித்தியம் என்பாரும் .. என்னைப் பொறுத்தவரை நான் என்பது ஈகோ
எனின், இந்த ஈகோதான் மாயை எனின், இந்த மாயைதான் பொய் எனின், இந்த பொய்தான் அநித்யம் எனின் இந்த அநித்யம் தான் -சாசுவதமான, மெய்யான, உன்னதமான வாழ்க்கையின் அர்த்தமாகும் !

அஹம் பிரம்மாஸ்மி – நான்தான் பிரம்மம்.

நான் என்று பேசும் பொழுது நான் உன்னையோ, நம்மையோ மறுக்கவில்லை. உன்னையும் நம்மையும் மறக்காமல் இருப்பதற்கே
நான் என்னை நம்புகின்றேன். உன்னையும் நம்மையும் மதிக்கிறவன்
என்பதனாலேயே உன்னோடு பேசுகிறேன்.”

மனிதனின் தடுமாற்றத்தையும் காட்டி, தத்துவ மழை பொழிகின்றார் ஜெயகாந்தன்.

ஆடை கட்டிய மனுஷ மிருகங்கள் !
சுயப் பரிசோதனை செய்வோமா?

எங்கும் கொலைகள், வன்முறைகள் !
அப்பாவி ஜனங்கள் உயிர்ப்பலிகள் !

மிருகம் கூட பசித்தால் அல்லது தற்காப்புக்காகக் கொல்லும். ஆனால் கொலை செய்யப்படும் மனிதர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாருக்காக, எதற்காக இக்கொலைகள் செய்யப்படுகின்றன?

மிருகங்களை விடக் கொடியவர்களாக ஏன் இருக்கின்றோம்?

கலாச்சாரம், பண்பாடு என்று வாய் கிழியப் பேசுகின்றோம்! ஒரு ஆண் முகச்சவரம் செய்ய உதவும் பொருளின் விளம்பரத்திற்கு ஏன் பெண் உருவம்? சட்டம் மட்டும் இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் ஒட்டுத் துணியையையும் உருவி நிர்வாணக் காட்சிகளைக் காட்டத் தயங்குவோமா? பிஞ்சு உள்ளத்தில் நச்சுத் தன்மை வெறிக்கு வித்திடு பவர்களை மிருகங்களைவிட மோசமாகக் கூறுவது தவறா? இதற்குப் பெயர் ரசனையா? அப்படியென்றால் நம் அகராதியில் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லுகின்றோமே அதற்குப் பொருள் என்ன? வரலாற்று உண்மைகளைப் புதைத்து, பல புனைந்துரைகள் புத்திசாலித் தனமாகாச் சேர்க்கத் தெரிந்த மனுஷ ஜன்மங்கள் இனிமேல் புதிதாக இவைகளுக்கும் பொருள் எழுதலாமே!

‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சின்னஞ் சிறு சிட்டுக்களாய்த் திரிந்து வரும் பெண் குழந்தைகளை பருந்துகளாய்க் கொத்திச் சிதைத்து தூர எறிகின்றார்களே அந்த மனிதர்கள் மனிதனா மிருகமா? மகளையே சீரழிக்கும் தகப்பன் என்ற ஆண் மிருகம் ஏன் ஒரு நாள் தாயையும் ஒரு பெண் உடலாக நினைத்துக் கெடுக்க மாட்டான்?

விலங்கு உணர்வுகளை வளர்க்கும் காட்சிகளை, பேச்சுக்களை ஊக்குவித்து வந்தால் இக்கொடுமையும் நடக்கும்,

ஜெயகாந்தன் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? நாம் போகும் பாதை
காணும் பொழுது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இந்த அச்சம் வருவதில் என்ன தவறு இருக்கின்றது?

“சிரிப்பு, சிரிப்பாய் வருகின்றது”

ஆம் வேதனைச் சிரிப்பு.

ஆம் ஆத்திரச் சிரிப்பு!

ஆம் ஆதங்கச் சிரிப்பு!

சிரிக்கத்தான் முடிகின்றது. இப்படியே காலம் சென்றால் அந்தச் சிரிப்பும் செத்துவிடும்.

கடவுள் இருக்கின்றானோ இல்லையோ அந்த நம்பிக்கையில் ஒரு பலன் உண்டு. தவறுகள் செய்வது பாவம் என்று கருதி குற்றம் புரியத் தயங்குவான். கடவுளைக் கல்லாக்கி விட்டோம். அது மூட நம்பிக்கை என்று குப்பையில் போட்டு விட்டோம்.

நம் சிறந்த அறிவில் புதுக் கண்டுபிடிப்புகள் நிறைய. மனிதர்களுக்குச் சிலைகள் வைத்து ஆலயம் அமைக்கின்றோம். நம்மை குளிரவைக்கும் பெண் உருவங்களுக்கும் கோயில் கட்டுகின்றோம். நம் ரசனைகளை மாயத் தோற்றங்களில் செலுத்தி மயங்கி இருக்கின்றோம்.

கணவன் மனைவி உறவின் போது கூட அவரவர் ரசிக்கின்ற வேற்று மனிதர்களை, பொய்த் தோற்றங்களை மனத்தில் சுமந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கின்றோம். அந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது!

இது தான் இன்றைய நாகரீகப் பண்பாடு. மனிதனைப் போதையில் வைத்தால்தான் அவனைச் சுரண்ட முடியும். ஒருவருக்கொருவர் இப்படி முயன்றால் எங்கே மனிதன் வாழ முடியும் ? யாரை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் ?

‘நான் யார்’ என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆன்மீகம். இன்றைய மக்கள் இதனைத் தவறாது கடைப் பிடிக்கின்றனர். அவன் தன்னைப் பற்றி யோசிக்கின்றான்.

“ஆஹா, நாம் இப்படி இருக்கலாமா? எப்படி கோடீஸ்வரனாவது? எப்படி வித விதமாகப் பெண்களை அனுபவிப்பது?”

சுதந்திரம் ஆணுக்கு மட்டுமா, பெண்ணுரிமை என்னாவது? பெண்களும் ஆண்களுடன் சம நிலைக்கு வர வேண்டாமா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பார் சிலர். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பாரும் உண்டு. தொலைத் தூர நோக்கில் பார்த்தால் அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். என் மீதும் ஆத்திரம் வரலாம். பெண்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றவள் நான். இது போன்ற வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களின் உண்மை நிலை கண்டறிய வேண்டும். பெண்களின் நிலை பாதுக்காக்கப் படவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை, முறியடிக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.

எந்த அளவு சுதந்திரம் பேசப்படுகின்றதோ, அதைவிட பிரச்சனைகளில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
அரசு, தொண்டு நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாயுள்ளத்தின் தவிப்பின் குரல் இது.

எத்தனை வகை ஏமாற்றுதல் உண்டோ அத்தனையும் கற்கத் தொடங்கி, சுயநலமும் சுரண்டலும் பெருக்கி, உச்ச நிலை அடைய போட்டிகள் வந்து விடும். சரியான போட்டி ! இதுவா முன்னேற்றம்?

‘நான் யார்’ என்ற ஆராய்ச்சியில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

யாராவது ஓரிருவர் கண்களை இக்காட்சிகள் உறுத்துகின்றன.
அவன் எழுது கோல் எடுத்தால் அவனையும் மீறி அது நெருப்பைக் கக்குகின்றது. ஒட்டு மொத்த சமுதாயமும் இன்னும் கெடவில்லை. ஆனால் மன வக்கிரம் வளர ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியுமா? நல்லவர்கள் நடுங்கிப் போய்ப் பதுங்குகின்றார்கள். கோபத்தை விடுத்து நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளைப் பார்த்து, ஏதாவது செய்து நம்மை இந்த மிருகக் குணத்தினின்றும் காப்பாற முடியுமா என்று சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். ஒதுங்கக் கூடாது.

மனிதனின் தோற்றம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். ஆனால்
அவன் வகுத்துக் கொண்ட“உறவுகள்” தோன்றியது சில ஆயிர வருடங் களுக்கு முன்னர்தான். குடும்ப அமைதிக்கு அவன் போட்ட விதிகளை
அவனே உடைத்தெறிய ஆரம்பித்திருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சில விதிகளை, சில நியதிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் மனிதன். அதில் அடிபடும் பொழுது வலி தாங்காமல் புலம்புகின்றான். புலம்புவதை விடுத்து சிந்திக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்தில், ஒரு இனத்தில் மட்டும் நிகழும் பிரச்சனையல்ல. இது ஓர் சமுதாயத்தில் நிகழும் அசிங்கம். சம்பிரதாயங்கள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கே இந்த மனச் சலனம் ஏற்படுவ தென்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்பானேண் ? இது ஏதோ கதை யென்று எழுதப் பட்டதல்ல. புனைந்துரையல்ல. ஓர் அடையாளம். சமுதாய நோயை அடையாளம் காட்டும் ஓர் அபாய விளைக்கு. ஒவ்வொரு மனிதனும் சமுதாய அக்கறை கொண்டு விழித்தெழ வேண்டும். அவன் சந்ததிக்கு மட்டுமல்ல அவனுக்கே விரைவில் வீழ்ச்சி வரும். ஆசிரியர் என்னைப் புலம்ப வைத்துவிட்டார்.

சமுதாயத்தில் எங்கெல்லாம் ஊனம் காணப்படுகின்றதோ அங்கே ஜெயகாந்தனின் பார்வை ஊடுருவ ஆரம்பிக்கும். படுக்கை யறைக்
காட்சிகளைக் கூட கொச்சையில்லாமல் காட்டும் திறன் படைத்தவர்.
அவர் காட்டும் விலை மகளிடம் கூட வெறித்தனம் காட்ட மாட்டார்.
ஒவ்வொருவரையும் தனிப் பரிவுடன் நடத்துவார். ரிஷிமூலம் எழுதிய வரேதான் “ஜெய ஜெய சங்கர “தொடரையும் படைத்தார்.

அவர் எழுதிய கதைகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் பிம்பம்.
ஜெய ஜெய சங்கர அவரின் கனவுலகம். அது சத்திய பூமி. அங்குள்ளவர் குணக் குன்றுகள். மனவெளி இல்லம் என்ற பெயரிலேயே அங்குள்ளவரின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றார். அங்கு வாழ்ந்திருந்த உமா ஓர் லட்சியப் பெண். ஒரு இளைஞனுடன் தனித்து வாழ்ந்தாலும் எவ்வித சலனமும் இன்றி வாழ்கின்ற மன உறுதி படைத்த ஓர் பெண்ணாகத் திகழ்கின்றாள்.

இந்த சமுதாயத்தில் ராஜாராமனும் உண்டு, உமாவைப் போன்றவர்களும்
உண்டு.. இரு எதிர்த் துருவங்களில் நிற்பவர்கள்.

சமுதாயத்தில் எங்கே நோய் என்று தெரிந்தால்தான் சிகிச்சை யளித்து மேன்மையுறச் செய்ய முடியும். வெறும் ஜன ரஞ்சகமாக எழுதி உல்லாசப் படுத்துவது மட்டும் போதாது. பயனுள்ள பாதையில் மனிதன் செல்ல வழி காட்ட வேண்டும். மகாப்பெரியவர் சொன்ன அறிவுரையும் இதுதான். எழுத்தாளருக்கும் மட்டுமல்ல, எல்லோருக்கும் கடமையுண்டு.

இந்த இடத்தில் ஒருவரைப் பற்றிக் கூற விரும்புகின்றேன். டாக்டர் சங்கர்
அமெரிக்காவில் மருத்துவத் தொழில் செய்பவர். அவர் மனைவியும் ஓர் மருத்துவர். மனிதனின் உடல் நோய்கள் தீர்க்கும் மருத்துவர் மட்டுமல்ல, சமுதாய மருத்துவரும் கூட. சமுதாய நலனுக்கு நிறைய குழுமங்களில் எழுதி வருகின்றார். என்னிடம் ரிஷிமூலம் புத்தகம் இல்லையென்றவுடன் அவரிடமிருந்த புத்தகத்தைப் படித்து, அவர் கருத்துக்களுடன் எனக்கு ஒரு நீண்ட மடலே அனுப்பி விட்டார். அதுமட்டுமல்ல. தொலை பேசியில் அழைத்து நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். நானும் சமுதாயத்தில் உருண்டு புரண்டு முதுமையின் காரணமாக மகனிடம் அண்டி வாழும் ஓர்
மூதாட்டி. எங்கிருந்தாலும் மனித நலனில் எங்களுக்கு அக்கறையுண்டு. தாய்மண்ணை நினைக்காத நாளுமுண்டோ ?

அந்த மண்ணில் வாழும் மைந்தர்களுக்கு நாங்கள் செய்யும் சிறு தொண்டு. இருக்கும் சில நல்லவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி. எங்கள் பணி பத்திரிகைகளில் எழுதுவதல்ல. ஆனாலும் பலரையும் சேர்க்கும் பாலமாகக் கணினி இருக்கின்றது. எனவே எங்கள் குரலை அங்கே ஒலிக்கச் செய்கின்றோம். கோயில்களுக்குச் சென்று செய்யும் பூஜையை விட இந்தப் பணியே நான் இறைவனுக்குச் செய்யும் ஆராதனை.

ஜெயகாந்தனை இனி பார்க்கலாம். அவர் படைக்கும் பாத்திரங்களைப் பெற்ற குழந்தையைப் போல் நேசிப்பவர் ஜெயகாந்தன்..

“எனது நாவல்களில் வருகிற பாத்திரங்களெல்லாம் என் மூலமாய்ப் பிறக்கிறார்கள் என்பதனால் அவர்களை நான் சாமான்யர்களாகக் கருதவில்லை. அவர்கள் நான் வழிபடும் தெய்வங்களாகக் கூட உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு முன்னாலுள்ள அனுபவங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். என்னோடு வாழ்கின்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள், என்ன ஆவார்கள் என்பதை என்னுடைய இறுதியைப் பற்றித் தீர்மானிப் பதில் எனக்கு எவ்வளவு இயலாமை உண்டோ அவ்வளவு இயலாமை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் இறுதியை மற்றவர்களைப் போல் நானும் அனுமானிக்க முடிகிறது. அதுவும் இவ்விதமாக அவர்கள் ஓய மாட்டார்கள்; பணிய மாட்டார்கள்; தோல்வி அடைய மாட்டார்கள் ! இலக்கிய வாழ்வு பெற்றுவிட்ட அவர்கள் இறப்பின்றித் துலங்குவார்கள்”

“நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் உயர்த்த வேண்டும்”

மகாப் பெரியவரின் வாக்கை ஒவ்வொரு எழுத்தாளனும் பத்திரிகை யாளரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பொன்னான வரிகள்.

வாழ்க்கையின் அவலங்களைக் காட்டும் பொழுது கண்களை மூடிக் கொள்வதைவிட அதற்கு காரணம் கண்டு. மேலும் அந்தத் தீமை வளராமல் இருக்க முயல வேண்டும். இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் எல்லோருக்கும் பங்குண்டு.

ஜெயகாந்தனின் எழுத்தில் ஆபாசம் கிடையாது. மன வக்கிரங்களைக் காட்டும் பொழுது கூட வேகம் இருந்தாலும் விவேகம் காணலாம்.
கதைகளிலும் உரையாடல்களை வலுவாக அமைப்பார். அவர் எழுதும் கதைகள், கட்டுரைகளைப்போல் அவர் எழுதும் முகவுரைகளும் முடிவுரைகளும் கூட தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளைக் கூடத் தொகுத்து புத்தகமாக்கி வாசகர்களுக்குக் கிடைக்க வசதி செய்திருக் கின்றனர் பதிப்பகத்தார்.

நம் காலத்தில் வாழும் அறிவு ஜீவிகள் சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர்.

மகாப் பெரியவர் என்ற பெயர் கேட்டாலே காஞ்சியை நினைக்காமல் இருக்க முடியாது. மேலும் என் பயணத்தில் காஞ்சிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்தாண்டு காலம் வாடிப்பட்டி வாழ்க்கை என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததென்றால் காஞ்சியின் நான்கு ஆண்டு வாழ்க்கை, ஏற்றங்களையும், என்னுடைய தேடல்களில் பல கேள்விகளுக்கு விடைகளும் கொடுத்த இடம்.

அன்றும் இன்றும் என்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி வருகின்ற காஞ்சியைப் பற்றிச் சில செய்திகள் அடுத்துப் பார்க்கலாம்

தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

சீதாலட்சுமி


தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு.
ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத் தலையில்லா காந்திஜியின் சிலை சத்திய மூர்த்தியை உறுத்திக் கொண்டிருந்தது.

முழுமை பெறாதவைகள் சிந்தனைக்கு முள்வேலிகள்..

அந்தச் சிறையில் இன்னொரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
அந்தச் சிறையின் மேலதிகாரி மூர்த்தி, நம் சத்தியமூர்த்தியுடன் பள்ளியில் படித்தவன். இங்கே அந்த நட்பைப் பார்க்க முடியுமா? அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர், எனவே இருவரது சந்திப்புகளும் வினோதமாக இருக்கும். சில நேரங்களில் அனுசரணையுடன் இருக்கும். சில நேரங்களில் ஒதுக்கமும் இறுக்கமும் தென்படும். சத்தியமூர்த்தி சிரித்துக் கொள்வான்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே அவரின் தன்மைகளில் அவரின் உரையாடல் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, வலிமை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் உரையாடலில் சிறந்தவர் அவர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். கதைகளாயினும் கட்டுரையாயினும், அங்கே உரையாடலில் புகுந்து தன் எண்ணங்களைப் பதித்துவிடுவார்.

ஜெய ஜெய சங்கர தொடரில் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும்.
அதனை ஓர் கதை என்று சொல்வதைவிட வரலாற்றுச் சித்திரம் எனக் கூறலாம்.

சத்தியமூர்த்தி அந்தச் சிறைக்கு வரவிட்டுச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது . தனி மதிப்பைப் பெற்று வலம் வந்து கொண்டிருந்தான். சிறையில் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள் தானே என்று நினைத்துக் கொள்வான்.

நாட்டில் நெருக்கடி நிலைமை.
சுதந்திர நாட்டில் சுதந்திரக் காற்றில்லை. புழுக்கத்தால் மனிதர்கள் வெந்து கொண்டிருந்தனர். எங்கும் நிலவுகிற இருட்டுக்கும் இந்தச் சிறையில் நிலவுகிற இருட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. நாட்டில் நடக்கிற காரியங்கள் இந்தச் சிறையில் விஸ்தாரத்தைப் பெரிதாக்கி ஓரளவு தேசத்தையே சிறையாக்கி இருக்கின்றன.

சமீபத்தில் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேட்கும் முணங்கல்கள் அங்கே நடக்கும் சித்திரவதைகளின் கொடுமையை உணர்த்துகின்றன.

உமாவைப் பற்றியோ அவன் தந்தையைப் பற்றியோ எந்த செய்தியும் தெரியாது தவிக்கின்றான் சத்திய மூர்த்தி. அதிகார வர்க்கத்தைக் கூலிப் படையென்று கடுமையாகச் சாடுகின்றான்.. சிறை அதிகாரி மூர்த்தியைச் சந்தித்து உண்மை நிலையை அறியத் தோன்றுகின்றது. சந்திப்பும் நிகழ்கின்றது. அங்கே நடக்கும் உரையாடல்கள் மனக் கொதிப்பின் வெளிப்பாடுகள்.

சத்தியமூர்த்தி எழுதிய புத்தகத்தைப் படித்துவருவதாகக் கூறும் மூர்த்தியைப் பார்க்கின்றான். அது தடை செய்யப்பட்ட புத்தகம்.
படித்து என்ன பயன்? ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சியைக் கேட்க வேண்டிய கேள்வி.

“இங்கே துன்புறுத்தப்படும் அந்தக் கைதிகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட போராட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். .. அவர்களாவது போராடுவதாவது ?.. ராத்திரி யெல்லாம் ஒலிக்கிற அவர்களுடைய ஓலத்தில் வீரமோ ஆண்மையோ இல்லை .. ஆட்டுக் குட்டிகள் மாதிரி அவர்கள் அடிபட்டு அலறுகிறார்கள் .. கடவுளைக் கையெடுத்துக் கும்பிட மறுக்கின்றவர்கள் எல்லாம் கான்விக்ட் வார்டன்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறார்களாமே ! இதெல்லாம் ஏன் நடக்கிறது ? நாட்டில் நெருக்கடி என்றால் சிறையில் ஏன் இந்தக் கெடுபிடிகள் அதிகமாக வேண்டும் ?” தாழ்ந்த ஸ்தாயில் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தான் சத்திய மூர்த்தி.

இதைப் படிக்கும் பொழுது என் மனப்பறவை கூச்சலிட்டது. நெருக்கடி நிலைமை காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை நான் அறிவேன்.
அந்த வலியின் வேதனையைப் பாதிக்கப் படாதவர்களாலேயே சொல்லப்பட்டு நேரில் கேட்ட அனுபவமும் உண்டு.

மனம் விட்டுப் பேச ஆரம்பித்தான் மூர்த்தி. சிறை அதிகாரிப் பதவி ஒரு வெட்டியானைப் போன்றது. மரண தண்டனை விதிப்பது நீதி மன்றம். ஆனால் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியது சிறை யதிகாரி. தண்டனை விதித்த நீதிபதியே வந்து இந்தக் கொலையையும் செய்ய வேண்டும் என்று சலித்துக் கொண்டான்.

கைதிகளை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுகின்றான் சத்திய மூர்த்தி.

ஒவ்வொரு அதிகாரியும் தனக்குச் சம்பந்த மில்லாத ஓர் எஜமானத்துவத்துக்கு அடிமை என்று கூறத் துடிக்கிறான் மூர்த்தி. ஆனாலும் அதனைச் சொல்லாது “இனிமேல் அந்தக் கொடுமை நடக்காது. அதிகாரிக்கு என்ற சில உரிமைகளும், கைதிக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. தன் குறைகளைத் தீர்க்குமாறு கேட்க ஒரு கைதிக்கு உரிமை உண்டு. ஆனால் பிற கைதிகளுக்காகப் பரிந்து பேசும் உரிமை அவனுக்குக் கிடையாது” என்று கூறினான்.

அரசுப் பணியும் ஒருவிதக் கொத்தடிமை போன்று கட்டிப்போடுகின்றது.
இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியில் அமரும் அரசியல் வாதிகள் கூட சில நேரங்களில் அரசு நிர்ணயச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளிலும் மனிதன் நேர்மையில் உறுதியாக இருக்கவும் வாய்புண்டு.

மனித நேயமே குறிக்கோளாய் நேர்மையுடன் இருப்பவர்களிடம், நிர்ப்பந்தங்கள் வலிமையை இழந்துவிடுகின்றன.

“ஒருவனை அவனது லட்சியங்களே சுதந்திர மனிதனாக்குகின்றன” என்ற சத்திய மூர்த்தியின் கூற்றை ஒப்புக் கொள்கின்றான் மூர்த்தி.

சில தினங்களில் மூர்த்தி மன வெளி இல்லம் போகின்றான்.அந்த வீட்டில்
நெருக்கடி நிலமையை ஆதரிக்கும் ஒரு மனிதரையும் பார்க்கின்றான். உமாவின் தந்தை பண்டிதர் அங்கு வந்திருந்தார். அவர்தான் நெருக்கடி
நிலைமையில் நிர்வாகம் சீராக இருப்பதாகக் கூறிவருகின்றவர்.

கதாசிரியர் நிறைய கதா பாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் வாயிலாகத் தன் எண்ணங்களைக் கொட்டியிருக்கின்றார். தாங்கள் பேசுவது
நியாயமானது என்று ஒவ்வொருவரும் வலியுறுத்துகின்றனர். ஏனோ எல்லோரும் நல்லவர்களாக, மனிதர் நலனில் அக்கறை கொண்டவர் களாகக் காட்டிச் செல்லுகின்றார். எல்லோரும் தத்துவம் பேசுகின்றார்கள்.

‘தேசம் என்னவானாலும், தனி மனுஷ்யர்களான நாம், நம்மை நெறியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைப்பவன் மகாலிங்கம்” என்று அவன் தாயார் தேவி கூறுகின்றாள்.

உமாவுடன் அவன் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உலகத்தாருக்கு அவர்கள் தம்பதிகள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அண்ணன், தங்கை யாக வாழ்கின்றனர். ஏதோ ஒரு குறிக்கோளுக்காக வாழ்வதாகச் சொல்லுகின்றார்கள். ”மனிதன் சுயநல மகிழ்ச்சிக்காக வாழக் கூடாது” என்று அவர்கள் ஆசிரியர் சத்திய மூர்த்தி சொல்லிக் கொடுத்ததை ஏற்று, சமுதாய நன்மைக்காக திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்மகனுடன் ஓர் பெண் தனிமையாக வாழும் பொழுது மன உறுதியுடன் இருக்க முடியுமா? முடியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

லட்சியப் போராட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டுகின்றார். இதுதான் உண்மை.. ஓர் குறிக்கோளுடன் மனிதன் இயங்கும் பொழுது அவன் நினைவெல்லாம்
நிறைந்திருப்பது அந்த லட்சியங்களே. அங்கே சலனங்களுக்கு இடமில்லை.

மகாலிங்கம் கொடுத்தனுப்பிய கடித்தத்தின் சில வரிகள் பெற்றவர்களைப் பெருமையில் ஆழ்த்துகிறது.

“நமது மக்கள் எந்த யுகமாற்றத்தினாலும் அழிந்து போய்விட முடியாத மகா சத்திய நெருப்பை வளர்த்து, இந்த பூமினியில் உள்ள எல்லா உயிர்களின் மேன்மை கருதிப் பாதுகாத்து வருகின்றார்கள். அந்த மகா யக்ஞத்தில் தோன்றியவர்கள்தான் எனது பெற்றோரும், எனது பிதுர்க்களும், நானும், நமது சந்ததியினரும் ..ஆசாரிய ஸ்வாமிகளின் பாஷையில் சொன்னால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் பிரிவோ தனிமையோ இல்லை.”

ஜெய ஜெய சங்கர தொடரில் ஒரே தத்துவ மழைதான் கதை என்றால் அதற்கு ஏதோ ஒரு முடிவு காட்ட வேண்டுமே.
ஆற்றங்கரையில் அவர்களின் எல்லைகளைத் தாண்டாமல் இரண்டு சிறுவர்களிடம் நட்பு பிறக்கின்றது. அப்பொழுது இனம் காரணமாக
ஆதியால் கிராமத்திற்குள் வருவது முடியாது. ஆனால் கதை முடிவில் அதே ஆதி சங்கர புரத்தில் நுழைய முடிகின்றது.

கால வெள்ளத்தில் சில நியதிகள் மாறத் தொடங்கிவிட்டன.

ஓர் சிறுகதையாய் இதனை முடித்திருக்கலாம் ஆனால் மூன்று பாகங்கள்
தொடர்ந்தன. அதற்கு அவர் கூறும் பதிலை அவர் வார்த்தைகளில் காண்போம்.

“ஓர் சிறுகதை என்று அழைப்பதே எனக்கும் விருப்பமாய் இருந்தது. அவ்விதமே அமைந்திருந்தால் இதன் கலைத் தன்மை உயர்ந்து நின்றிருக்கும் என்று உரைப்பாருமுளர். அவர்கள் அவ்விதமே நிற்கக் கடவர். இன்பம் எங்கெங்குண்டோ அங்கங்கே இருந்துவிடுதல் சிலரது இயல்பு. துன்பம் எங்கே எங்கே என்று துரத்திப் பிடித்து அத்துடன் துவந்தம் செய்வதே தர்மத்தின் இயல்பு. அப்படிப்பட்ட கால நிர்பந்தத்தால் தர்மங்களையே சார்ந்து நிற்கும் ஓர் அடிமையான வாழ்க்கையில், எப்படி அதன் சந்ததியினராலேயே பிரச்சனைகள் மூளும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் எழுந்த பொழுது மூன்று பாகங்கள் விளைந்தன. கட்டுக்கோப்பு கச்சிதமாக விழுந்துவிடுகிற பொழுது மேலே குவித்துச் சிகரம் கட்ட ஆசைபடுவதுதான் எழுதுபவனுக்கு ஏற்படுகிற
பேராசை”

இந்த நாவலை எழுத ஆரம்பித்த காலத்தில் தேசிய வாழ்க்கையில் என்ன சூழ்நிலை இருந்ததோ அந்தக் காலக் கட்டத்தை இறுதியாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும் பின்னாலும் சிந்தனைகளைப் படரவிட்டு
இத்தொடரைப் படைத்திருக்கின்றார். அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட தொடர்.

இத்தொடரில் வரும் பாத்திரங்கள் நல்ல நோக்கம் படைத்தவர்களாக, லட்சியத்துடன் வாழ்கின்றவர்களாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை அவர் எழுத்துக்களில் காண்போம்

“எனது புரட்சிக்காரன் எவ்வளவு உத்தமமானவனோ அந்த அளவு உத்தமமானவனே எனது போலீஸ்காரனும். நான் தீயவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனேயொழிய அவர்களைக் கண்டதில்லை. அவர்களை இலக்கியக்கண் கொண்டு நான் கண்ட மாத்திரத்தில் அவர்கள் நல்லவராக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுதான் என்னிடமுள்ள மத நம்பிக்கை, இறை நம்பிக்கை என்று நம்புகிறேன்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும
தீமை இலாத சொலல்”

என்பது நமது இலக்கிய தர்மம்.அந்த நோக்கு நான் எழுதிய பலவற்றுள் இதில் நன்கு சமைந்தது.”

மகாப் பெரியவரின் அறிவுரைப்படி ஆன்மீகமும் சமுதாயநலனும் கைகோத்துக் கொண்டு எழுதும் பாக்கியத்தைப் பெற்றவராகப் பெருமை கொள்கின்றார் ஜெயகாந்தன்.

புரட்சி யென்றால் அது வன்முறை நோக்கிச் சென்றுவிடும் என்ற அச்சம்
பலருக்கும் உண்டு. காந்திஜியின் சத்தியாகிரஹப் புரட்சியை நாம் பார்த்திருக்கின்றோம். அவர் தன்னை வருத்தி இயக்கத்தினை முன்னின்று நடத்தினார். இன்றைய இயக்கங்களில் தொண்டர்களே மரிக்கின்றனர்.
தலைவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் காண்கின்றோம். எந்த ஒன்றையும் பொது நிலைப்படுத்த முடிவதில்லை.

தொழிற்சங்கத்தில் 32 ஆண்டுகள் இருந்தேன். கீழே பணியாளராக நுழைந்து துறையின் மேலதிகாரியாக ஆனேன். இரட்டைக் குதிரை சவாரி செய்தேன். தொழில் சங்கத்தில் இருந்ததால் எத்தனை சாதிக்க முடிந்தது என்று அனுபவ பூர்வமாக அறிந்திருக்கின்றேன். இந்தத் தொடர் படிக்கும் பொழுது என் வாழ்க்கைப் பாதையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் படிக்கின்ற எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே விமர்சனங்கள் பல
திக்குகளிலிருந்தும் வந்தன.

இதற்கு விமர்சனங்கள் வந்த பொழுது அவர் கூறியவை :

“ஆர்வத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் விமர்சகர் எனப்படுவோர் புகழ் குவிக்கவும், புழுதி இறைக்கவும் செய்வர் என்பது நாம் எதிர்பார்த்ததே. அவர்களுக்கு நன்றியல்லாமல் வேறு ஏதும் நாம் உரைப்பதற்கில்லை. இந்நூலுக்கு விமர்சனக் காற்று சற்று மிகைதான். அந்தக் காற்றின் கதையிலேதான் எத்தனை லயங்கள் .. எத்தனைவிதங்கள் .. ரசித்தோம், ரசிப்போம்.”

விமர்சனக்காற்றுக்கு ஓர் கவிதையில் சில வரிகள்

தென்னையின் கீற்றுச் சல சல வென்றிட
செய்து வரும் காற்றே !
உன்னைக் குதிரை கொண்டு ஏறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம் ..

ஜெயகாந்தனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. சொல்லப் போனால் அவர் வளர்ந்ததே அந்தக் காற்றின் வேகத்தால்தான்.

அவர் எழுதிய பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளானவை. அவைகளில் அவர் எழுதிய ரிஷிமூலம் பலரின் கோபத்திற்கும் கூட காரணமாயிற்று. சமுதாயமென்பது நல்லதும் கெட்டதும் கலந்ததே. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் பண்படுத்த சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வர முயல்கின்றான்.. சிலரால் மட்டும் மனத்தை வெல்ல முடிகின்றது. பலர் அதன் வேகத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றனர்.

ரிஷிமூலத்தின் கதா நாயகன் மனவக்கிரம் கொண்டவன். இதைப் போன்று
அவர் எழுதிய குருபீட நாயகனிடமும் இக்குறையைக் காணலாம். அவன் பித்தனாய் வந்து பின் சித்தனாக்கபடுகின்றான். இங்கே ஒரு செய்தியைக் கூற விழைகின்றேன்.

திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரில் ஓர் பித்தன் தோன்றி அவனைச் சித்தனாக்கி வழிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்தது. அது செவிவழிச் செய்தியாகப் பரவி எழுத்துக்குக் கருவாகி இருக்கலாம். அல்லது தனித்தனியே இப்படி ஒத்துப் போகும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். பலருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் உணர்ந்து கொள்ளாமல் இருப்போம்.

ஏதோ ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கேள்விப்படும் பொழுதோ ஏற்கனவே எங்கோ நிகழ்ந்ததாக அல்லது கேள்விப்பட்டதாகத் தோன்றும். இது இயற்கையின் விளையாட்டு. சம்பவங்கள் எங்கேங்கேயோ எப்படியோ பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது பதிவானவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் புரியாத புதிர்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய “ரிஷிமூலம் “ கதையைக் கொஞ்சம்
தெரிந்து கொள்வோமே

தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

சீதாலட்சுமி


ஜெய ஜெய சங்கர

இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே
பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த பயணம் “மகாயக்ஞம்” நடத்தி நிறைவுறுகின்றது.

ஆம் இத்ததனையும் ஜெய ஜெய சங்கரின் தொடர்ச்சிகள்.

“ஒரு கிராமம், ஆ ! எப்பேர்ப்பட்ட கிராமம்! .. ஒரு குடும்பம் , எவ்வளவு உன்னத ஆரிய லட்சியக் குடும்பம் ! அதன் உறவுகள் என்னும் சரட்டில் ஒரு அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கோர்த்து ஆரமாக்குகிற உத்தியில் அறுந்து போவதற்கோ, முடிந்து போவதற்கோ இடமில்லாமல் போயிற்று”

ஜெயகாந்தன் தன் முடிவுரையில் வெளிப்படுத்தும் கூற்று. கதையாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து கொண்டே வரலாற்றை வட்டமிட ஆரம்பித்துவிட்டது. அக்காலத்திற்கே சென்று விட்டார் ஆசிரியர். .எத்தனை பாத்திரங்கள் ! எத்தனை சம்பவங்கள் !
ஆசிரியரின் கனவுலகம் படிப்பவரை மிரள வைக்கின்றது. ஆன்மீகம், காந்தீயம், அரசியல், வரலாறு, இன்னும் பல கோணங்களில் தன் எண்ணங்களைப் பதிந்திருக்கின்றார். நாமும் முடிந்த மட்டும் தொடர்வோம்.

ஆதி தன் மகனை வீட்டைவிட்டுப் போகச் சொன்னதைக் கேட்ட ஆசாரிய ஸ்வாமிகள் ஒரு நீண்ட பிரசங்கமே செய்கின்றார்.

“சமூக விஷயம் என்பது எதுவுமே ஓர் நல்ல தனி மனுஷ்யனுக்கு அப்பாற்பட்டது அல்ல; உலகில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பேரண்டம் அடங்கியிருக்கிறது. நமது சமூகங்கள் என்று நாம் நினைக்கிற அவை நம்மிலிருந்து விலகி நிற்கின்றன என்பதால் நாமும் அவையும் வேறாகிவிட முடியுமா? அதன் நடுவில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பற்றற்று, அல்லது தனி நெறி வகுத்துக் கொண்டு நாமிருந்த போதிலும் அதன் நடுவில்தான் அதன் ஒரு அங்கமாகவே நாமும் இருக்கிறோம். நாம் வேறு அது வேறு என்று என்றாகிவிட முடியுமா? .. உன் தலையில் உனக்குகந்தது என்கிற ஒரு நெறியைச் சுமந்து திரிகிறாய். இப்படித்தான் ஒவ்வொருவரும் .. பறவையின் சுதந்திரத்தை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிற மனத்தை வளர்த்த மனிதர்கள் தங்களுக்குச் சொந்தமான மக்கள் விஷயத்தில் இழந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது ..”

ஓர் ஆத்மாவின் சுதந்திரத்தைப் புரிய வைக்கிறார். மீண்டும் தொடர்கிறார்.

“முரண்பாடுகளும், மோதல்களும் தவிர்த்த வாழ்க்கை .. கோபமற்று
குளிர்ந்த மனத்தோடு அவரவர் கொள்கையின் பொருந்தி நின்று போரிட்டுக் கொள்வது .. ஆமாம் ; போரிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கொள்கையும் நெறியும் என்னாவது? போரிடலாம்; வாதிடலாம்; கோபமும் ஆத்திரமும் எந்தப் போராட்டத்திற்கும் உதவா .”

சத்தியமான வார்த்தைகள் !

மாறுபட்ட கருத்துக்கள் வரலாம். வாதிடலாம். தங்கள் கொள்கைகளுக் காகப் போரிடலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடக் கூடாது. அது சமுதாய அமைதியைக் கெடுத்துவிடும்.

ஆதி மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிடுகின்றது. மகனைப் பார்க்கும் ஆவல் துளிர்க்கின்றது. பாசத்திற்கும் குரோதத்திற்கும் இடையில் ஒரு சிறு கோடுதான் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் அன்பு மயம். அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். அமைதியை இழக்கும் வழிகளில் செல்லலாமா?

ஆதியின் அமைதிக் குடிலில் பிறந்து வளர்ந்தவன் மகாலிங்கம். அவன் ஓர் அச்சமற்ற ஆண்மகன். அவன் எண்ணங்கள் போன பாதை வித்தியாச மானது.

“ஒரு குடும்பத்தின் அடிமையாக நடைவண்டி பிடித்து நடந்து கொண்டிருப்பதைவிட இந்த சமூகத்திற்கோர் அடிமையாகித் தன்னிச்சையாய்க் கைகளை வீசி நடக்கலாம் என்று தோன்றுகிறது.”

புதிய தலைமுறை தோன்றிவிட்டது. பிறரிடம் வேலைக்குப் போவது அடிமைத்தனம் என்று கூறும் தந்தைக்கு இந்தப் பேச்சு பிடிக்காமால் மகனை வீட்டைவிட்டு அனுப்பச் செய்துவிட்டது. ஸ்வாமிகளின் பேச்சு ஆதியின் மனக் கண்களைத் திறந்துவிட்டது. சுதந்திர வாழ்க்கையில் சுற்றித் திரியும் மகனைக் காண முடிவு செய்துவிட்டார்.

மனவெளி இல்லம் நோக்கிப் புறப்படுகின்றார் ஆதி. அவர் மகன் மகாலிங்கம் சென்றிருக்கும் இடம்பற்றி அவர் மனைவி தேவியிடம்
விசாரித்து அறிந்து கொண்டவுடன் தாமதிக்காது புறப்பட்டு விட்டார்.
ஸ்வாமிஜியின் அன்புக் கட்டளைக்காக மட்டுமல்ல, தன் மகனைக் காண வேண்டுமென்ற துடிப்பும் அவரைத் தூண்டிவிட்டது. மனவெளி மனிதர்களுடன் அவர் மகன் மகாலிங்கம் வசிக்கின்றான்.

தலைப்பைப் பாருங்கள்.
‘மனவெளி மனிதர்கள்.’
அந்த வீட்டின் பெயர் மனவெளி இல்லம்.

அங்கே ஒளிவு மறைவு கிடையாது.

போலித்தனமில்லா புனித இடம். அவரவர் கொள்கையுடன் சுதந்திரமாக வளைய வர முடிந்த இடம். கொள்கைகள் வேறாயினும் அன்பும் பண்பும் கலந்த ஓர் குடில். மாற்றுக் கொள்கை யென்றால் மற்றவரைத் தாக்கித்தான்
ஆக வேண்டுமென்ற தற்கால குணக்கேடு அங்கே இல்லை. புரட்சிக்கார னும் புன்னைகையுடன் தன் உறுதியில் எப்படி நிற்க முடியும் என்று காட்டும் ஓர் உன்னதமான இடம்.

நாமும் அந்த அன்புக் குடிலுக்குள் செல்வோம்.

குடிலுக்குச் சொந்தக்காரர் சிங்கராயர். ஒரு காலத்தில் ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவரின் தோற்றம் தாடி இல்லாத தாகூர் போலவும், தலைப்பாகை இல்லாத பாரதி போலவும் பிறருக்குத் தோன்றும்.
சுதந்திரம் பெற்ற பின் திருமணம் என்றிருந்து கொஞ்சம் வயதாக விட்டு செல்லம்மாளை மணக்கின்றார். அவருடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி ஓர் புரட்சிக்காரன். அவன் ஓர் ஆசிரியராக இருந்தான் என்றாலும் மகாலிங்கத்தைவிட வயது வித்தியாசம் அதிகமில்லை. மகாலிங்கம் புரட்சிக்ககரன் இல்லாவிட்டாலும் இருவரையும் நட்பு பிணைத்திருந்தது. சத்தியமூர்த்தி புரட்சிகரமாக புத்தகம் எழுதுகிறான் என்றும் சில காரியங்கள் புரட்சிகரமாய்ச் செய்து வருகின்றான் என்று கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் இருக்கின்றான்
சிங்கராயரின் பேச்சுக்கள் மூலம் அக்காலச் சூழல், சிந்தனைகள், செயல்பாடுகளை படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

மகனைப்பற்றி பேசும் பொழுது மாணவர்களைப் பற்றி விளக்குகின்றார்
மாணவர்கள் இந்தக் காலத்தின் அடையாளங்கள். அவர்கள் நம்பிக்கைகளும், லட்சியங்களும் மிக உயர்ந்தவை. அதைப் புரிந்து கொள்ளளதவர்களை, அவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள். அது தப்பு என்று பெற்றோர்கள் புலம்புகின்றார்கள். புலம்புகிற மனிதர்களை ஒரு போதும் இளஞர்கள் மதிப்பதில்லை.

தனி நபர் சத்தியாகிரகம், காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டம்
இவைகளில் ஈடுபட்டவர்களைப் பற்றியும் பேசுகின்றார்

“அந்தக் காலத்தில் தாயும் தகப்பனும் பெற்றோராகவே நமக்குத் தெரியவில்லை. .. காந்திஜியும் கஸ்தூரிபாயும் தான் நமக்கெல்லாம் சொந்தத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்கள்.”

இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் குடும்பத்தில் என் தந்தையும் ஒருவராக இருந்தாரே ! எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த நிலை!

வீட்டை மறந்து, சொந்த உறவுகளின் நினைப்பின்றி போராடிப் பெற்றது சுதந்திரம். தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதை யெல்லாம் நாட்டு சுதந்திரத்திற்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள். அவர்கள் அரசியல்வாதிகளல்ல. இந்த மண்ணின் மைந்தர்கள்.
சுயநலமற்ற மனிதர்களைக் காண்போமா என்று மனம் ஏங்குகின்றது.

அந்தத் தியாகியின் மனைவி செல்லம்மளும் மற்றும் சோசப்பு என்ற ஓர் உதவியாளரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். சிங்கராயர் காந்தீயவாதி யென்றால் அவர் ஒரே மகன் சத்திய மூர்த்தி ஓர் புரட்சிக் காரன் . மார்க்ஸிய சித்தாந்தக் கொள்கையுடையவன். சத்தியமூர்த்தி சிறைக்குச் செல்லவும் மகாலிங்கம் இவர்களுடன் தங்க ஆரம்பித்து விட்டான்.

ஜெயகாந்தன் அவர் இளமைக் காலத்தில் கம்யூனிசத்தில் இருந்தவர்.
எனவே காந்தீயமும் கம்யூனிசமும் அவர் எழுத்தில் கைகோர்த்துக் கொண்டு வருகின்றது. கதை என்பதைவிட உரையாடல்களே அதிகம்.

மகன் தீவிரவாதியாக இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார் சிங்கராயர்.
“இவர்கள் மட்டும் காந்திஜி சொன்னதைக் கேட்க மாட்டார்கள். இளைஞர் கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் இது என்ன நியாயம் ? ..
இளைஞர்கள் பலாத்காரத்தை நம்புகிறார்கள். அதை எப்படி தடுக்க முடியும் ?”

நிறைய பேசுகின்றார்கள். இனி பேச்சு பேச்சு பேச்சு தான்

பாரதியுடன் பழகிய காலத்து நடந்தவைகளை யெல்லாம் விவரிக்கின்றார். பாரதிதான் சமதர்மம், பொதுடமை ஆகிய கருத்துக்களை பரிச்சயம் செய்து வைத்த முதல் புரட்சியாளர் என்கிறார்.

காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை எழுத்தில் படிக்கும் பொழுது இப்பொழுதும் மனம் கலங்குகின்றது. அந்தக் காலத்திற்கு மீண்டும் பறந்தேன். அந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது நானும் என் தந்தையும் ஒரே அறையில்தான் இருந்தோம். செய்தி கேட்டவுடன் என் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். நானோ ஓவென்று கத்தி அழுதேன். அங்கே இருந்த மற்றவர்கள் என் தந்தையைக் கவனித்தார்கள்.
ஏனோ மரணச் செய்திகள் கேட்கும் பொழுதெல்லாம் நான் அதிர்ந்து போய்விடுவேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மையம் ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் திருமதி இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து துடித்துப் போனேன்.

மாரடைப்பு வந்து கைகால்கள் அசைவின்றி இருந்த என் தாயாரைக் கவனித்துக் கொண்டு பங்களூரில் வாழும் பொழுது முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்தேன்.

இந்த மண் எத்தனை உயிர்களைக் காவு வாங்கி இருக்கின்றது.
ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர் தொடர் என்னைப் பல வகையிலும் ஆட்டி வைத்தது.

மனவெளி இல்லத்திற்குச் செல்வோம்.

இவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவள் இன்னொருத்தியும் கூட. அவள்தான் உமா. அந்தப் பெண்ணும் ஓர் புரட்சியாளர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒருத்தி புரட்சிக் கொடி பிடித்து பெற்றோரையும் விட்டு வெளிவந்து இந்த இல்லத்தில் குடிபுகுந்து விட்டாள். சத்தியமூர்த்தியின் கொள்கை ஈர்ப்பில் வந்து மனவெளி இல்லத்தில் ஒட்டிக் கொண்டவள்.

மனவெளி இல்லத்தில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் இருந்தனர். கொள்கைப் பிடிப்பிலும் இருந்து கொண்டு பிறர் மனத்தைக் காயப் படுத்தாமல் ஒன்றி வாழும் தன்மையுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

காந்திஜியும் பாரதியும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அரசியல் அதிகமாகப் பேசினார்கள். இந்த உரையாடல்கள் பற்றி எழுதாமல் கதையைத் தொடர விரும்புகின்றேஎன்.

ஸ்வாமிகளைப் பார்க்கப் போவதாக மகாலிங்கம் ஒப்புக் கொள்ளவும் ஆதிக்கு மகிழ்ச்சி. மனவெளி மனிதர்களிலிருந்து “எந்தையும் தாயும்” போகின்றார் ஆசிரியர்.

மனவெளி இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது சிங்கராயர் ஒரு புத்தகம் ஆதிக்குக் கொடுக்கின்றார். ஆதியின் வீட்டில் படிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆதிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்.

“ஒரு மனிதனால் சாப்பிடாமலும் தூங்காமலும் கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க முடியும் என்றால் உணவின் மூலமும், ஓய்வின் மூலமும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய சக்தியும் போஷாக்கும் அந்தப் புத்தகத்திலிருந்தே கிடைத்துவிடும். படிப்பதும், தியானம் செய்வதும் வேறு வேறு அல்ல ..”

ஆதியின் வாயிலாக வரும் ஆசிரியரின் கருத்து.

புத்தகங்களைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவையும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முதுமையில் முடங்கிக் கிடக்கும் எனக்கு நண்பர்கள் புத்தகங்கள்தான்.

மகாலிங்கமும் உமாவும் ஆதியின் வீட்டிற்கு வந்தார்கள். உமாவும் வேதமும் சீக்கிரம் தோழிகளாகி விட்டனர். அங்கும் ஒரே உரையாடல் மயம். மகாலிங்கம், உமா, வேதம் மூவரும் ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்கப் புறப்பட்டு விட்டார்கள்.

மகாலின்கத்தின் வாழ்க்கை ஒருவிதமாக அமைந்துவிட்டது. தந்தையுடன் இருக்கும் பொழுது கட்டுப்பாடுகள் அதிகம். பின்னர் சத்தியமூர்த்தி தொடர்பினால் பல புத்தகங்கள் படித்து, தன்னை ஒரு நாஸ்திகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும் அளவுக்கு நவீன மனிதனாய் வளர்ந்திருந்தான். அந்தவிதத்தில் எள்ளளவும் குறைவில்லாதவள் உமா.
அதே உமா இப்பொழுது கையில் பிரசாதத் தட்டுடன் நெற்றியில் குங்குமம் திகழ நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வேஷதாரிகளல்ல. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புடையவர்கள்.

ஆசாரிய ஸ்வாமிகளை மூவரும் சந்தித்தனர். எல்லோரைப் பற்றியும் விசாரித்துவிட்டு அவர் கூறிய அறிவுரை ஒன்றுதான்.

ஆதி விரும்பும் ஆஸ்ரமப் பணிகளில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும். தனித்தன்மையை இழக்காது ஒருங்கிணந்து சேவைகள் புரியலாம்.

அந்தப் பரபிரம்மம் இல்லாத இடம் ஏது ? அவன் படைத்த உயிர்களுக்குத் தொண்டு செய்வது அவனுக்குச் செய்யும் ஆராதனை
அங்கே எந்த விவாதங்களும் நிகழவில்லை.

மூவருக்குள்ளூம் ஏதோ ஓர் மன நிறைவு. அங்கே அர்த்தங்களை அனர்த்தமாக்கும் மனிதக் கூட்டம் இல்லை. சுதந்திரமாகச் சிந்திக்க முடிந்தது. இன்றைய இளைஞர்களுக்கும் வேண்டியதும் அதுதானே!

கடந்த காலத்திற்கு என் மனம் பயணம் சென்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அறிந்தவர்களுக்கு நான் சொல்வது தெரிந்த விஷயம். அவருக்குத் தன் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களீல் தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய தொடங்க வழி காட்டினார். சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி விருந்தளித்து உட்காரவைத்து என்னென்ன நலத் திட்டங்கள் இருக்கின்றன என்று விசாரிப்பார். பள்ளிக்கூடங்கள் முதல் பல வசதிகளைப் பற்றிப் பேசுவார். வெறும் பேச்சுடன் இருக்கவில்லை. அவரால் குன்றக்குடியைச் சுற்றி இருந்த பல கிராமங்களுகு நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக தொழில் மையங்களும் கூட்டுறவு மையங்களும் ஏற்பட வழி செய்து கொடுத்தார்.

காவியுடை உடுத்தியவராயினும் அவருக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைகள் இருந்தன. “மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின் றேன். இப்பொழுது பலரும் சமுதாய நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வழி நடத்துகின்றனர். எனவே நம் கதையில் ஆஸ்ரமம் ஆரம்பித்து சமூக நலப் பணிகள் செய்வதை ஆசாரிய ஸ்வாமிகள் ஊக்குவிப்பது ஆச்சரிய மில்லை. காஞ்சி மடத்தின் கீழ் பல சேவை இல்லங்கள் இயங்கி வருகின்றன.

இதுவரை சந்தித்தவர்களை விடுத்து சத்திய மூர்த்தியிடம் கூட்டிச் செல்லுகின்றார். சத்தியமூர்த்தி தற்போது வாழும் இடம் ஓர் சிறை. அங்கும் பல மனிதர்கள், பல சிந்தனைகள் என்று கதையை நகர்த்துகின்றார்.
சிறை சீர்திருந்த வேண்டும், அதன் நிலை மேன்மைப்படவேண்டுமென்று நினைக்கின்றான். அங்கும் வாழ்பவர்கள் மனிதர்கள் தானே. அவர்கள் விஷயத்தில் கொடுமையாக இருப்பவர்கள் மனுஷ குலத்தின் வெறுப்புக்கும் நிந்தனைக்கும் ஆளாகத் தகுந்தவர்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் எங்கிருந்தாலும் மனிதர்களின் நலனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன்.

அங்கே ஒரு சிறைக் கைதி, அதாவது தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒருவரைக் காட்டி அங்கும் ஒரு காட்சியை வரைந்துவிடுகின்றார்
கதாசிரியர். சுதை மண்ணிலிருந்து சிற்பம் செய்யத் தெரிந்தவன். அவனுக்கு ஒரு விருப்பம். தூக்கில் தொங்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் சுதை மண் கிடைத்தால் காந்தி சிலையொன்று செய்துவிட முடியும் என நினைக்கின்றான். அவன் ஆசையை சத்திய மூர்த்தியிடம் கூறுகின்றான். சாகும் வரை மவுன விரதம் காத்து மகாத்மா காந்திக்கு ஓர் சிலை எடுக்க விரும்பும் சிறைக் கைதியைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

சாவு நெருங்கும் பொழுதும் நினைப்பில் காந்தி வருகின்றார் என்றால் அக்காலத்தை நினைக்கும் பொழுது இப்பொழுதும் சிலிர்க்கின்றது.
காந்திஜி .. காந்திஜி ..காந்திஜி.

ஏனோ இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக, சில கொள்கைகள் உள்ளவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார் ஜெயகாந்தன். அவர் கற்பனையுலகு அமைதியும் ஆனந்தமும் கலந்த ஓர் சுவர்க்க பூமி.
ஆசைப்படுவதாவது அர்த்த முள்ளதாக இருக்கட்டுமே!

பிறக்கும் பொழுது மனிதன் கெட்டவன் இல்லை.

அந்தக் கைதியின் கோரிக்கையைக் கேட்டவுடன் சத்தியமூர்த்திக்குப் பாடத் தோன்றுகின்றது.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே.’

இந்தப்பாடலைப் பாடிக் கொண்டே தன் இருப்பிடம் செல்லுகின்றான் சத்தியமூர்த்தி.

இங்கிருந்து பயணம் “மகாயக்ஞம்” நோக்கிச் செல்லுகின்றது.

(தொடரும்.)

+++++++++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -19

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

சீதாலட்சுமி


சங்கரபுரம்

காலச் சக்கரம் வேகமாக உருண்டோடினாலும் அந்த குக்கிராமம்
தனக்குரிய வரலாற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தது.

மகாலிங்க அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காசிக்குப் போனவுடன் அரச்சகர் தனியே நின்றார். இப்பொதும் நிற்கிறார். எல்லாம் கெட்டுப் போன இந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றையும் சமமாகப் பாவிக்கும் அத்வைத சிந்தாத்தத்தின் அடையாளமாக, இவர் வயோதி கத்தால் கூன் விழுந்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஞானமும் அறிவும் மனுஷனுக்கு எவ்வளவு சொந்தமோ, இயல்போ, அதே அளவு அஞ்ஞானமும் அவனுக்குத்தானே சொந்தம் ! கிராமம் சின்னதாயினும் ஏதேதோ நடந்து முடிந்துவிட்டது. என்றாவது நல்லது நடக்காதா என்ற நம்பிக்கையில் அய்யர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

அப்பைய குருக்களின் தவம் பலித்தது. ஆச்சார்ய ஸ்வாமிகள் திக்விஜயம் செய்யப் போகின்றார். இந்த சின்ன கிராமமும் புண்ணியம் செய்திருக்கின்றது. சுவாமிஜி இங்கு வந்து சிறிது காலம் தங்கப் போகும் செய்தி அறிந்தது முதல் குருக்களின் மனத்தில் ஓர் சமாதானம்.

இந்த இடம் ஸ்வாமிஜியின் பூர்வாஸ்ரம பூமி.

யானை மீது அம்பாரி கட்டி ஆரோஹணித்து ஊருக்குள் பட்டண பிரவேசம் செய்கின்றார் ஸ்வாமிகள். திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தில்
அவருடைய பார்வை பரவி வரும் பொழுது அந்தப் பெரும் திரளின் நடுவேயிருந்து உயர்ந்தெழுந்து நேருக்கு நேர் வந்து நிற்பன போல்
இரண்டு விழிகளை அவர் ஒரு நொடியிலே அடையாளம் கண்டு கொண்டார்.

“பகவன் முதற்றே உலகு”, என்ற குறளின் பாதி அடிகளை அவரது திருவாயின் செவ்விதழ்கள் முணுமுணுத்தன

ஆதியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவருடன் பேச விரும்பி, மடத்தில் வசித்துவரும் கிருஷ்ணனை ஆதியிடம் அனுப்பு கின்றார்.

ஜெயகாந்தன் இதனைக் கதை என்றும் தன் கனவென்றும் சொன்னது மிகவும் பொருத்தமானது. அவர் கற்பனைச் சிறகுகள் வெகு உயரத்தில்
பறக்கின்றன. எங்கெங்கோ வட்ட மடிக்கின்றன ஒருவரின் கனவை விமர்சிப்பதை என் மனம் ஏற்கவில்லை. ஆனாலும் அப்படியே விட்டு விலகவும் முடியவில்லை. சில இடங்களையாவது பார்த்தல் வேண்டும்.

மகாலிங்க அய்யர் காசிக்குப் போனதும், சதாசிவம் அய்யர் கோயிலில் ஹரிஜனங்களை ஆலயப் ப்ரவேசம் செய்ய வைத்தது, அதனால் அவர் சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டு, தன் குடும்பத்துடன் அவர் மூங்கில் குடிக்கே போனது எல்லாம் கடந்த காலச் செய்திகள். அவர் ஆரம்பித்த ஆஸ்ரமத்தில் ஆதியும் ஒரு மாணவன். முதல்தர மாணவன். அவரது கொள்கைகளை அப்படியே உள்வாங்கி காந்தீய வாதியாக, சத்தியப் பிரதி நிதியாக வாழ ஆரம்பித்தவன் ஆதி.

ஸ்ரீராமானுஜர் செய்தவைகள் ஆசிரியரின் கருக்குக் காரணமாக இருந்திருக்குமோ?!

சதாசிவ அய்யர் பல முறை சிறைக்குச் சென்றார். அலிப்புரம் ஜெயிலைப் பற்றிய குறிப்பு வரவும் எங்கள் குடும்பத்தின் கடந்த கால நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.

என் தந்தை மும்முறை ஜெயிலுக்குப் போயிருக்கின்றார். அலிப்புரம் ஜெயிலுக்கும் சென்றிருக்கின்றார். எட்டயபுரத்திற்குச் சென்ற பிறகும் என் தந்தை வெளியூர்களுக்கெல்லாம் செல்லும் பொழுது. சில சமயங்களில் என்னையும் கூட்டிச் சென்றதுண்டு.

தூத்துக்குடி சந்திப்பில். ஏ.பி. சி வீரபாகு அவர்கள் இருந்தது நினைவிற்கு வருகின்றது. அதே போல் நெல்லையில் திரு சோமயாஜலு அவர்களைப் பார்க்க முடிந்தது. கூடிக் கூடிப் பேசுவார்கள். அப்பொழுது அதன் அர்த்தம் எனக்குத் தெரியாது. கொஞ்ச நேரம்தான் இருப்பேன். பிறகு என்னை இன்னொரு அறைக்குத் தூங்க அனுப்பிவிடுவார்கள்.
எல்லோரிடமும் ஒரு வேகம் ஒரு துடிப்பு. நான் சிறுமியாக இருந்தாலும்
அந்தத் துடிப்பின் தாக்கம் என்னிடமும் வந்தது. காங்கிரஸ் ஊர்வலத்தில்
முதலில் கொடி ஏந்தி போயிருக்கின்றேன். ராட்டினம் நூற்று, அந்தச் சிட்டங்களைக் கதர்க் கடையில் போட்டு துணி வாங்கி உடுத்தி யி ருக்கின்றேன். அந்த வயதில் நான்கதராடைதான் அணிந்தேன்.

கதராடை பள்ளிச் சீருடையல்ல. அதை அணிகின்றவர்கள் காந்திஜியின் உணர்வுகளைச் சுமந்து வாழ்ந்தோம்.

“பாபுஜி என்ற ஒரு மகா புருஷர் சூத்திரதாரியாக நின்று வெறும் பிண்டங்களாக இருந்த மனிதர்களை, உயிரும் ஆத்மாவும் கொடுத்து லட்சியப் பொம்மைகளாக மாற்றி ஆட்டினார். இதுவரை மாமூலாயிருந்த வாழ்க்கையிலிருந்து கிளப்பி ஒரு புதிய வாழ்க்கையோடு பொருத்தி வைத்தார். சரித்திரம் உருவாக்குகிற செயல்களும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மிக விரைவாய் நடந்து கொண்டிருந்தன. மனத்தில் துன்பப் படுகின்ற பொழுதிலும் கூட தொடர்ந்து ஒரு நிறைவு ததும்பிக் கொண்டிருந்தது. மகத்தான செயலில் ஈடுபட்டிருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சரித்திரத்தை உருவாக்குகின்ற அணியின் முன்வரிசையில் சிந்தனையும் செயலும் ஒன்றாய் இணைந்து சென்று கொண்டிருந்தோம்.
காந்திஜி எப்பொழுதும் முன்னே நடந்து கொண்டிருந்தார்.”

ஜெயகாந்தனின் இந்த வரிகளின் அர்த்தத்தைப் பூரணமாக அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேசிய உணர்வின் ஆக்கிரமிப்பைக்
காணலாம்.

உதாரணமாக ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியும்.

தியாக ராஜ கீரத்தனைகளைச் சொல்லிக் கொடுக்க வந்த பாட்டு வாத்தியார் கூட, வைஷ்ணவ ஜனதோ என்றும் சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடல்களை முதலில் தான் அறிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார். காந்தீய அலை பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களிடமும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியிருந்தது. கதையில் சில நிகழ்வுகள் வரும் பொழுது அக்கால நிகழ்வுகள், அனுபவங்கள் இவைகளின் நினைவுகள் வந்து அப்படியே மெய்மறக்கச் செய்வதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

கதைக்களன் போய்ப் பார்க்கலாம்

கிருஷ்ணனிடம் தான் ஒரு ஹரிஜன் என்று சொல்லுகின்றார் ஆதி. இதைக் கேட்கவும் முதலில் திகைப்பை அடைகின்றான் கிருஷ்ணன். சுற்றுப் புறத்தைப் பார்க்கின்றான். காரல்மார்க்ஸ், காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகாநந்தர், வள்ளலார், ஆச்சார்ய சுவாமிகள், கவி பாரதி ஆகியோரின் நூல்கள் நிறைந்த ஷெல்ப்கள் இருந்தன அந்த வீட்டில் ஓர் அபூர்வ அமைதியை அவனால் உணர முடிந்தது. இருக்காதா பின்னே!

சதாசிவ அய்யரின் மனைவி மறைந்தார். பல முறை ஜெயிலுக்குச் சென்று வந்த அய்யர் ஒரு முறை போனவர் திரும்பி வரவில்லை. அவர் அன்பு மகள் சுதந்திர தேவியின் திருமணம் நடந்தது. அவள் கை பிடித்த கணவர் நம் ஆதிதான். தோழனாய் இருந்தவர் துணைவனாய் ஆனார்.
அக்கிரகாரத்துப் பெண்ணை சேரிப் பையன் ஒருவனுக்கு மணமுடித்து
அவர்களை ரசிக்கின்றார் ஆசிரியர். அக்காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து அழகு பார்க்கின்றார். அதுமட்டுமா, அவர்களின் இல்லறத்தைப் பற்றிப் பேசும் பொழுது நம்மை வியக்க வைக்கின்றார். லட்சியங்களுக்கேற்ப நம்மால் வாழ முடிகின்றதோ இல்லையோ ஆதி தம்பதிகள் எடுத்துக்காட்டாக வாழ்வதை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார். அந்த இல்லறத்தின் பயனாக இரு மகன்களும் ஒரு மகளும் அவர்கள் பெறுகின்றனர்.

காலம் ஓடியது. அவர்கள் ஆஸ்ரமத்தை அரசு எடுத்துக் கொண்டு ஓர் அனாதை ஆஸ்ரமமாக்கி விட்டது. அதே மூங்கில் குடியில் கொள்கைகளைச் சுமந்து கொண்டு வேறு இடத்தில் வாழ்ந்துவந்தார்.
.
கிருஷ்ணனின் வருகையின் அர்த்தம் புரியவும் தன்னைப் பற்றிய உண்மையை உடனே தெரிவித்துவிடுகின்றார். உண்மையின் வெளிச்சத்தால் தாக்கப்பட்ட கிருஷ்ணன் ஸ்வாமிகளிடம் திரும்புகின்றான். ஸ்வாமிகள் விபரம் அறியவும் ஆதியை மீண்டும் வரச்சொல்லி அதற்குரிய வழிகளையும் கூறுகின்றார்.

மீண்டும் கிருஷ்ணன் திரும்பி வருகின்றார் அப்பொழுது ஆதி மனம் திறந்து பேசுவதில் ஜெயகாந்தனைக் காணலாம்.

“சாமி, ஒரு சேரிக்குள் நுழைவதற்கு உங்களுக்கு எப்படி கூசுமோ, அதைப்போலவே இம்மாதிரியான இடங்களுக்கும், சனாதினிகள் கூடியிருக்கும் சபைக்கும் போக என் உடம்பும் ஆத்மாவும் கூசுகிறதே.
இது ஏதோ என் பிறவி குறித்து எனக்கிருக்கிற தாழ்வுணர்ச்சி என்று நினைத்து விடாதீர்கள். இப்போது என்முன் நிற்கும் உங்களுக்கு இல்லா விட்டாலும் என்னைப்போல் உள்ள யாரையோ பற்றி அப்படி ஓர் உணர்ச்சி யாருக்குமே இல்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா?

ஆதிக்கு முன்னரே தேவியும், அவர்களின் மகள் வேதவல்லியும்,
சின்ன மகன் சதாசிவமும் ஸ்வாமிகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.
ஸ்வாமிகளின் தரிசனம் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அக்காவின் அறிவுரைக் கேற்ப குழந்தை சதாசிவம் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு,

“கஜானனம் .. பூதகணாதி .. ஸேவிதம் …
கபித்த .. ஜம்பூபல ..ஸார ..பக்ஷிதம் ..
உமா .. ஸுதம் ..சோக .. விநாச .. காரணம் ..
நமாமி .. விக்னேஸ்வர .. பாத ..பங்கஜம்

என்று மழலை மொழியில் திக்கித் திக்கி பக்தியுடன் சொல்லக் கேட்ட ஸ்வாமிகள் பரவசமுற்று கற்கண்டு கட்டிகளைக் குழந்தைக்குக் கொடுக்கின்றார்.

நற்குணங்களைக் குழந்தையிடம் விதைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. மனம் வளமாயிருந்தால் வாழ்க்கையும் செம்மையாக இருக்கும்.

குடும்பக்கதை அனைத்தும் அவர்கள் கூற எல்லாம் அறிந்து கொண்டார்
ஸ்வாமிகள். தந்தை போன பிறகு தோழர் ஆதியை மணந்து கொண்டிருக் கின்றார். வேத பிராமண குடும்பத்துப் பெண்ணை சேரியில் பிறந்த ஓர் செம்மலுக்கு கலப்புத் திருமணம் நடத்தி உவகை கொள்கின்றார் கதாசிரியர்.

அரசாங்கத்தால் இவரது தியாகத்துக்கு, மானியம் கொடுக்க வந்த பொழுது மறுத்துவிட்டார்.

மீண்டும் என் குடும்ப நினைவு

தியாகிகளுக்கு ஆரம்பகாலத்தில் அரசு நிலம் கொடுக்க முன் வந்தது.
என் தந்தை அதனை வாங்க மறுத்துவிட்டார். அப்படி உதவி பெற்றால் தன் நாட்டுக்காகச் செய்த பணிக்குக் கூலி வாங்கியது போலாகும் என்றார். அதுமட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அறிவுரையின் படி கிராம சேவைக்குச் சென்ற பொழுது என் தந்தை எனக்குக் கூறிய
அறிவுரை :

“நம்மூர் ஜனங்களுக்கு வேலை செய்யப் போறே. இதுக்கு அரசாங்கத்தி லிருந்து சம்பளம் வாங்கறதே சரியில்லே. ஆனாலும் நாம மனுஷா. ஜீவனம் நடத்த வேண்டியிருக்கே. சம்பளம் வாங்கறதனாலே உனக்கு பொறுப்பு இரட்டிப்பாறது. நேரம் காலம் பாக்காம அக்கறையுடன் வேலை செய்யணும்.”

தீமைகளைக் காணும்பொழுது இந்த வயதிலும், இந்த உடல் நிலையிலும் கொதித்து எழுவேன். எப்படி இந்த உணர்வு வந்தது ?

காந்தியின் சத்திய வாழ்க்கையின் வேகம் ஒரு இடத்துடன் முடங்கியதல்ல. நாடு முழுவதும் பரவியிருந்த காலத்தில் வளர்ந்தவள். பாட்டிக் கதை, வடைக் கதை என்று கேட்டு வளரவில்லை. சோறு ஊட்டும் பொழுதே என் தாயார் நாட்டுப்பற்றையும் ஊட்டி வளர்த்தார்கள்.

இன்று எங்கும் பிரிவினைகள்
எங்கும் வன்முறைகள்
காழ்ப்புணர்ச்சி
சுயநலமும் சுரண்டலும்
மாறிவரும் சூழலைப் பார்த்து மனம் பதறுகின்றது

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
சர்வேசா ! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்
கருகத் திருவுளமோ ?

பாரதியின் பாடலை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் பட்டம்

“பிழைக்கத் தெரியாத பைத்தியங்கள்.”

ஜெயகாந்தனும் நானும் சம காலத்தவர்கள். சரித்திரத்தின் சாட்சிகளாக இருக்கின்றோம்.

தேவி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்.

“எங்களது லட்சியமும் அனுபவமும் எங்கள் பிள்ளைகள் கூட நம்ப முடியாத பழங்கதை யாகிவிடுமோ என்கிற அச்சம் நாளும் எனக்குப் பெருகி வருகின்றது.”

ஆசிரியர் அன்று தேவியின் வாயிலாக காட்டிய அச்சம் உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. அன்பை விதைக்க வேண்டியதற்குப் பதிலாக காழ்ப்புணர்ச்சியை வளர்த்து, பிரிவினை உண்டாக்கி விட்டார்கள் என்று காட்டி பல நூறுகளாகப் பிரிவினைகளை வளர்த்து, பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பதை மறைமுகக் கொள்கையாக்கி வருபவர்களைக் காணும் பொழுது “நெஞ்சு பொறுக்குதிலையே” என்று கத்தத் தோன்றுகின்றது. உண்மைகளைப் புதைத்து புதிய வரலாறுகளை எழுதி இளைய சமுதாயத்தைத் திசை திருப்புவர்களைக் கண்டால் மனம் வேதனைப் படுகின்றது.

நான் அரசியல் வாதியல்ல. எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. சாதி, மதங்கள் வலைக்குள் கூட என்னைப் பிணித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த சமுதாயத்தின் மீது ஆழமான பாசம் கொண்டவள். பெரியவர்களின் மீது மரியாதை கொண்டவள். தியாகத்தைப் போற்றுகின்றவள். என் மனக் குரலைப் பதிய வேண்டியது என் கடமையாக உணர்கின்றேன்.

“இளைய சமுதாயமே, மனிதனின் சுயநலத்தால் உண்மைகள் புதை குழிக்குள் புதைக்கப்பட்டு வருகின்றன. தேடுங்கள் உண்மைகளை! மனித நேயம்தான் வாழ்க்கையில் அமைதி கொடுக்கும்.”

நண்பரே, என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் முகத்தில் புன்னகை காண்கின்றேன். உங்கள் நோக்கமும் இதுதானே. உங்களுடைய இந்தக் கதையைப் படிக்கும் பொழுது ஒவ்வொருவரும் சத்தியப் பாதையைப் பார்க்க வேண்டும் என்பதுதானே. உங்கள் எழுத்தைப் படிக்கவும் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளையும் பதிந்துவிட்டேன்.

ஜெயகாந்தனின் “ஜெய ஜெய சங்கர” நான்கு பகுதிகளிலும் அவர் இதயக் குரலைப் பதிந்திருக்கின்றார். அவர் எண்ணங்களுக்காகப் பரிசு கிடைத்தது.

ஆஸ்ரமத்திற்கு நாமும் செல்வோம்.

ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மறுநாள் அவரைத் தரிசிக்க வந்தார் ஆதி உடன் குழந்தை சதாசிவத்தையும் கூட்டி வந்திருந்தார். கண் மூடி அமர்ந்திருந்த ஸ்வாமிகளைப் பார்க்கவும் “ஜெய ஜெய்ய சங்கல..ஹலஹல சங்கல” என்று குழந்தை முணங்கிற்று. குரல் ஒலிகேட்டு கண்விழித்த ஸ்வாமியின் பார்வை ஆதியில் மேல் வீழ்ந்தது.

வேலிக்கு அப்பால் வாய்க்கால் கரை மேட்டில்சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்த ஆதியின் தோற்றம்.

கையில் தொறட்டிக் கொம்புடன் பதினைந்து வயது தோற்றத்தில் அவன் நிற்பதாய் ..

அரச மரத்தடி மேடையில் கதை சொல்லிக் கொண்டு,பிரபஞ்சம் சார்ந்த எல்லாப் பொருட்களிலும் பிரம்மத்தையே தரிசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பிராமணச் சிறுவனாய் ..

பரஸ்பரம் தோற்றங்கொள்ள ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்து இருவரும் மாறிமாறிப் புகுந்து இதயம் எய்த ..

இதைப்படிக்கும் பொழுது கம்பனின் நினைவு வருவதைத் தடுக்க முடியாது.

இடையில் முள்வேலி நின்று கொண்டிருந்தது.

பக்தி, பரவசம் என்கிற மிகச் சாதாரண உணர்ச்சிகளை எல்லாம் கடந்து வியவகார ஞானத்தோடு தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார் ஆதி.
முன் தினம் தேவி உரைத்த சம்சார சரித்திரத்தின் இன்னொருபகுதியை ஆதி கூறலுற்றார். முதல் மகன் மகாலிங்கம் தன் பிறப்பைக் காட்டி அரசின் சலுகை பெற்றதைக் காணவும் மகனையே வீட்டை விட்டுத் துரத்தியதையும் விடவில்லை.

ஆதியின் கொள்கைப் பிடிப்பு நடை முறை சாத்தியமா இல்லையா என்று
ஆராய வேண்டியதில்லை. இது கதாசிரியரின் ஆசை. அவருடைய கற்பனை. நல்லவைகளை நினைத்தாவது பார்ப்போமே!

ஸ்வாமிகள் பேசப் பேச தான் அப்படி செய்தது தவறென்பதை உணர ஆரம்பித்தார். மகாலிங்கத்தைப் பார்க்க விரும்புவதைக் கூறி அவனைத் தேடி அனுப்பும்படி அன்புக் கட்டளையும் பிறப்பித்தார் ஸ்வாமிஜி.

தொடரும்

+++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

சீதாலட்சுமி


ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது?

வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்குச் சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில் சுனாமியைச் சந்தித்துதானே ஆக வேண்டும். தத்துவங்களைக் குப்பையில் போட்டு விடு என்று சொல்லவும் ஒரு கூட்டம். மனிதன் அமைதியை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு அவனே காரணியாகும்.

ஆற்றிலே நீந்திக் கொண்டிருந்த சங்கரனுக்கு ஆதியின் குரல் கேட்டும்
திசை தெரியாமல் போகக் கூடாத பக்கமே சென்று கொண்டிருந்தான். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக் கொண்டு போனது.

சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை அப்போது நினைவுக்கு வந்தது. “ஈசனை இறுகப்பற்றிக் கொள்வாரை எமன் நெருங்குவதற்கு அஞ்சுவான்”

ஈசன் எங்கே? அவன் எங்குதான் இல்லை? நீக்கமற எங்கும் நிறைந்தி ருப்பவன். இந்த நீர்ச்சுழலில் இல்லாமல் போய்விடுவானோ?

நம்பிக்கை
இறை நம்பிக்கை
இந்த நம்பிக்கை சொல்லைச் சரியாகப் புரிந்திருக்கின்றோமா?

இறை நம்பிக்கையுள்ளவன் அவன் வாழ வேண்டிய மனத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,

இறை நம்பிக்கையுள்ளவன் அவன் படைத்த உயிர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

பிள்ளைப்பருவத்தில் சங்கரன். தாயின் வார்த்தைகளைப் பெரிதும் மதிப்பவன். அந்தத் தாயும் தன் மகனுக்குச் சொல்ல வேண்டியவைகளை நல்ல கதைகள் வடிவில் சொல்லி இருக்கின்றாள்.

இன்றைய காலத்தில் தாய்க்குக் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த நேரமில்லை. பல வேலைகள் இருப்பது உண்மைதான். ஆனால் தொலைக்
காட்சிக்கு அடிமையாகி மூன்று வயது குழந்தையைக் கூட ட்யூஷன் என்ற பெயரில் அனுப்பிவிடும் கொடுமையைப் பார்க்கும் பொழுது வேதனை எழுகின்றது.

சங்கரனின் தாயாரால் ஒரு ஞானி உதயமாகின்றார். பல தாய்மார்களின் சினிமா மோகத்தால் சாத்தான்கள் உருவாகின்றன.

நல்லவை கடவுள், கெட்டவை சாத்தான்கள்

சுழலில் அகப்பட்டு நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை நினைவிற்கு வந்தது. சங்கரன் நம்பிக்கை ஆழமானது. அர்த்தமுள்ளது.

இரு கரங்கள் அவனைத் தழுவின. மரணத்திலிருந்து இரண்டு உயிர்களும் தப்பிக் கரை ஏறின.

ஒரு உயிர் இன்னொன்றைச் சுமந்தது.

அங்கே பிரிவினைகள் கிடையாது.

உயிருக்கு ஆண் என்றோ பெண் என்றோ பேதம் கிடையாது. உடலை விட்டு உயிர் நீங்கின் அது எங்கு வேண்டுமானாலும் மீள் குடியேறும். அது புழு, பூச்சியாகக் கூட இருக்கலாம்.

பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது குணத்தால், அவன் வாழும் முறையால்
வருவது. மனக்கோயிலில் சாத்தானைக் குடியேற்றினால் அதற்குக் கொத்தடிமை யாகி நாமும் கூத்தாட வேண்டியதுதான்.

சங்கரனின் உயிரை மீட்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான் ஆதி. சாதி பார்த்துக் கொண்டு தொலைவில் நின்றிருந்தால்..

பிழைத்து எழுந்த சங்கரன் எதிரே வந்து நின்ற ஆதியைப் பார்க்கின்றான்., மரணத்திலிருந்து மீட்ட சிவனைப்போல் ஆதி தோன்றினான். தூரத்தில் அக்கரையில் தெரிகின்ற அக்ரகாரத்தையும், சிவன் கோயில் கோபுரத்தையும் சங்கரனின் கண்கள் வெறித்தன.

“ஆதி, உன் கையால் அந்தத் துணிகளை ஜலத்திலே போட்டுடேன்… நான் பிழிஞ்சு எடுத்துண்டுறேன்’, என்றான் சங்கரன்.

சில நேரங்களில் சில சம்பிரதாயங்களை விட்டு விட முடிவதில்லை
ஒதுக்குவது, ஒதுங்குவது என்பதெல்லாம் மனம் செய்யும் கூத்து.

சங்கரனும் ஆதியும் அன்பிலே கட்டுண்டவர்கள். தங்கள் எல்லைகளைப் புரிந்து கொண்டே அவர்களால் அன்பு செலுத்த முடிந்தது. எனவே யார் மனமும் காயப்படவில்லை.

அன்றிரவு அம்மாவிடம் நடந்த அனைத்தும் கூறுகின்றான் சங்கரன். அதைக் கேட்டுவிட்டு சங்கரனுக்கு ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் அவன் தாயார். பரமேஸ்வரனே ஓர் புலையனாக வந்த சம்பவத்தைக் கேட்கவும் நம் சங்கரனுக்கு அவன் உயிரைக் காப்பாற்றிய ஆதியும் அந்த ஈஸ்வரனாகத் தோன்றுகின்றான்.
ஒரு தீண்டத்தகாத சிறுவனை தெய்வமாக வணங்கத் தோன்றியது என்று
கதாசிரியர் எழுதுவது சம்பிரதாயங்களில் ஊறியவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். பரம்பொருள் இல்லாத இடம் ஏது? எல்லா உயிர்களிலும் அவன் உறைகின்றான். முழுப் பொருளை உணர்ந்தவர்கள் முணங்க மாட்டார்கள்.

நியதிகள் எப்பொழுதும் நிர்ப்பந்தமல்ல.
எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.

இந்துமதம் ஒரு கடல். அங்கே காணும் தத்துவங்கள் அர்த்தமுள்ளவை.
ஆனால் தோலை மட்டும் காட்டித் திரிந்தால் சக்கையாகத்தான் பார்ப்பார்கள். கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம் “பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மட்டும் போதாது. வேதம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் சொந்தம் என்பதில்லை. வாழ்க்கையின் வழி நூல். இது கேள்வி யுகம். இக்காலத்து மக்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் விரிவான விளக்கங்கள் நிறைய எழுதப் படவேண்டும்.

இறைவன் எல்லோருக்கும் சொந்தம். அவன் ஒரு ஏகன். யாரும் அவரவர் விருப்பப்படி பெயர் வைத்து அழைத்துக் கொள்ளட்டும். எல்லாப் பெயர்களும் அந்தப் பரம்பொருளைத்தான் குறிக்கின்றன. காழ்ப்புணர்ச்சி விடுத்து மனித நேயம் வளர்ப்போம அன்பில்லாத இதயத்தில் ஆண்டவன் இருக்க மாட்டார். அன்பே சிவம்.

ஜெயகாந்தன் சொல்லுவதைப் பார்ப்போம்

ஒரு தீண்டதகாத சிறுவனை வணங்குகின்றான் சங்கரன்.ஈஸ்வரனே புலையனாக வருவான் என்கிறாள் அம்மா. அந்தப் புலையனை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்கிறார் சித்தப்பா. அதை எதிர்த்து உயிரைக் கொடுத்தேனும் தடுப்பேன் என்று உறுதியாக நிற்கின்றார் அப்பா.

சங்கரன் ஆதியுடன் மனம் விட்டுப் பேசுகின்றான்.

தான் கோயிலுக்குள் போகப் போவதில்லை என்று கூறுகின்றான் ஆதி.
அவன் கொடுக்கும் விளக்கம்தான் புதுமையானது. சிந்திக்க வைப்பது

“என்னைத் தொடறதுக்கு உனக்கு எவ்வளவு கூச்சம் இருக்கோ அதேமாதிரி உன்னைத் தொடறதுக்கும் எனக்குக் கூசுது சாமி”

உரையாடலில் ஜெயகாந்தன் சிறந்தவர் என்பதற்கு ஒரு சான்று.

ஊரில் குழப்பம் நீடிக்கின்றது. மகாலிங்க அய்யர் சங்கரனைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகள் முன் நிற்கும் பொழுது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் மகாலிங்க அய்யர்.

“என்ன நடந்துவிட்டது? என்னதான் நடந்துவிடப்போகின்றது? எதைத் தடுத்துவிட முடியும்? எது தடுக்கத் தக்கது? என்றெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாயா? ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கால எல்லை உண்டு. சநாதன தர்மத்துக்கு இவற்றாலெல்லாம் ஏதும் பங்கம் நேர்ந்து விடாது. ஓர் அத்வைதி சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை அறிவாய், அல்லவா? அப்படி என்றால் உனது சமஸ்காரங்களும் சடங்குகளும் கூட ஒரு கால எல்லைக்கு உட்பட்டவையே . எங்கும் நிறைந்திருக்கும் ஈசன் எவருடைய எந்தச் செய்கையால் எங்கிருந்து எங்கு போய்விடுவான்? எல்லாவற்றையும் ஈஸ்வரார்ப்பணம் என்று கருதிக் கொண்டு உனது கடமைகளை மகிழ்ச்சியோடு செய்”.

ஜெயகாந்தனின் இந்த வாசகங்கள் என்னைக் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்று சங்கர மடத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அன்று நான் மணியனுடன் மடத்திற்குச் சென்றிருந்தேன். யாரிடமும் தயங்காமல் பேசும் நான் மணியனிடம் முணங்கினேன். அவர்தான் எனக்காக ஸ்வாமிகளிடம் பேசினார்.

மற்றவர்கள் பல கேள்விகள் எழுப்புவதும் கேலி செய்வதும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

என் பயத்தை மணியன் கூறவும் மகாப் பெரியவர் என்னைப் பார்த்தார்.

மனுஷாள் தானே பேசறா. ஈஸ்வரன் தன்னைப் பாத்துப்பான். நீ கவலைப்படாதே.

எப்பேர்ப்பட்ட உண்மை.

அன்று அதன் முழு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவில் வாழும் பொழுது புரிகின்றது. உலகெங்கும் யோகா
என்றும் தியானம் என்றும் பரவி சகல மதங்களும் அவரவர் இஷ்ட தெய்வங்களை நினைத்து நிஷ்டையில் உட்காருவதைப் பார்க்கின்றேன். பல இடங்களில் ஓம் என்றும் ஒலிக்கின்றது.

யோகாவும் தியானப் பயிற்சியும் மனிதனின் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றது என்று மருத்துவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். உறக்கத்திற்கு வேறு எதையும் நாட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கித்திற்கு இந்த இரண்டும் பெரிய உதவியாக இருக்கின்றன என்று மருத்துவ உலகத்தின் ஒப்புதல் ஒலிக்கின்றது.

இந்த யோகாவும் தியானமும் எப்பொழுது தோன்றின.?
நாட்டுக்கு நாடு வெவ்வேறு பெயரில் இயங்கினாலும் இதன் மூலக்கரு உதித்த இடம் எது?

பெயர் எதுவானால் என்ன, இறைவன் தன் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றான். ஆம் அவனுக்கு அவனைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.

மேடையில் கடவுள் இல்லை என்று கர்ஜித்தவனும், பத்தி பத்தியாய் எழுதுகின்றவனும் மரண பயம் எட்டவும் மனத்திற்குள் இறைவனை நினைக்காமல் இருக்க முடியாது. அவன் வீட்டுப் பெண்கள் அவனுக்காகக் கோயிலுக்குப் போகும் பொழுது “இது வீட்டு விஷயம்” என்று சொல்லி விடுகின்றார்கள். அப்படியென்றல் இவர்கள் யாருக்காகச் சொல்லித் திரிகின்றார்கள்.?

தியானத்தில் முதல்படி அவர்கள் பிரபஞ்ச சக்தியை நினைக்க வேண்டும். ஆங்கிலத்தில் energy என்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அந்த பிரபஞ்ச சக்தி பெயரில் தியான மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த பிரபஞ்ச சக்தி எது?

மஹாப் பெரியவரின் வார்த்தைக்கு அர்த்தம் இப்பொழுது புரிந்தது.

“வளைந்தால் என்ன? நிமிர்ந்தால் என்ன? இந்த மதம், இந்த மார்க்கம் , இந்த நெறி, இந்த கலாச்சாரம், இந்த நம்பிக்கை – கால மாற்றத்துக்கும் அவரவர் பாண்டியத்துவத்திற்கும் ஏற்ப என்ன பெயரில் அழைத்தாலும் – இது சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருகின்றது! வாழும்”

இது ஜெயகாந்தன் தன் தொடரில் அன்றே எழுதியது.

வேத வித்து சக்தி வாய்ந்தது. பெயர் எதுவானால் என்ன? தத்துவம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகளின் உரை மகாலிங்க அய்யரை நோக்கிக் கூறப்பட்டாலும் அந்த வாசகங்களைக் கேட்டுக் கொண்டு நின்ற சங்கரன் பரவசம் கொண்டு நின்றான்.

சில மனிதர்களின் வாழ்க்கையில் திடீரென திருப்புமுனை வந்துவிடும்.

மகாலிங்க அய்யர் தன் மனைவியுடன் காசிக்குப் போய் வாழ ஆசி கிடைக்கின்றது.

சங்கரனின் மேல் ஸ்வாமிகளின் பார்வை விழுகின்றது.

இனி சங்கரனை அவன் இவன் என்று பேச முடியாத உயரத்திற்குக்
கொண்டு போய்விடுகின்றது. இனி சங்கரனின் வாழ்க்கை ஸ்ரீமடத்தில் தான்
பீடத்திற்குரியவராகி விடுகின்றார்

துறவியாவது எளிதல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும்.

இந்த எளியவளின் அனுபவத்தை இங்கிடுவதைப் பொறுத்தருள வேண்டுகின்றேன். நான் சாமான்யமானவள். என்னைப்போன்ற சாமான்யமானவர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனவே என் முயற்சி பிழையல்ல.

நான் படித்த கல்லூரி தூய மேரி அன்னை கல்லூரி. விடுதியில் தங்கிப் படித்தேன். சுற்றிலும் கிறிஸ்தவ சன்னியாசினிகள். அதிலே எங்களுக்குத் தமிழ் ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர். எமெரென்சியாமேரி அவர்கள். அவர்களுக்கு ஒரு ஆசை. நானும் அவர்களைப் போல் துறவறம் பூண்டு
கன்னி மாடத்திற்கு வர வேண்டுமென்று எப்பொழுதும் ஏசுபிதாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் அவர்களிடம் கேலியாக, “என் முருகனுக்கும் ஏசுபிரானுக்கும்
இடையில் போட்டியை உருவாக்கியிருக்கின்றீர்கள் யார் வெல்லுகின் றார்கள் பார்க்கலாம்” என்று கூறிவந்தேன். ஆனாலும் உள்ளத்தில் துறவியாகும் ஆசை மெதுவாக வளர ஆரம்பித்தது.

ஏற்கனவே ஓர் சூழலில் சுவாமி சிவானந்த மகரிஷிக்கும் எனக்கும் இடையில் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி கடிதங்கள் அனுப்புவதுடன் நிறைய புத்தகங்களும் அனுப்பிவந்தார். அவைகளைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் மேலும் வளர்ந்தது. ஆரம்ப காலத்தில் எனக்கு வரும் புத்தகங்களைச் சரியாகக் கொடுக்காமல் நிர்வாகத்தினர் வைத்துக் கொண்டனர்.

கல்லூரியில் நுழைந்த பொழுது தூத்துக்குடியில் இருந்த பிஷப் மேதகு
உயர்திரு ரோச் அவர்கள் ஆனால் ஒருவருடத்திற்குப் பின் மேதகு உயர்திரு தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் வந்துவிட்டார். என்னை இருவருக்குமே பிடித்திருந்தது. என் புத்தகங்கள் பிரச்சனையைக் அவரிடம் கூறவும் எனக்கு வரும் புத்தகங்கள் தடை செய்யப்படவில்லை

என் துறவற ஆசையை சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். ரிஷிகேசம் வருவேன் என்று அடம்பிடித்தேன். ஒரு அப்பாவிடம் உரிமையுடன் சண்டை போடுவதைப் போல் அவருடனும் சண்டை போட்டேன். ஆனால் சுவாமிஜி என்னைப் படிக்கச் சொன்னார். படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டுமென்று கூறிக்கொண்டே வந்தார்

எங்கள் பிஷப்பிடம் என் துறவற ஆசையைச் சொன்ன பொழுதெல்லாம் அவரும் என்னைப் படித்து வேலைக்குப் போகச் சொன்னார். இரு துறவிகளும் என்னை வழி நடத்தி பட்டதாரியாக ஆகும் வரை பக்கத் துணையாக இருந்து வந்தனர்.

பின் இரு வருடங்கள் என்னைப் படிக்க வைத்ததே நான் படித்த கிறிஸ்தவ நிர்வாகம் தான். என்னை யாரும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்த வில்லை. என் முருக வழிபாடு எல்லோருக்கும் தெரியும்.

எப்படியோ என் படிப்பு முடிந்து நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாகச் சேர்ந்தேன். அதே பள்ளியில் தான் சுவாமிஜி படித்திருந்தார். பாரதியும் அந்த பள்ளி மாணவர்தான். பணியில் சேரவும் சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். அவரிடமிருந்து பதிலும் வந்தது. ஏனோ அந்தக் கடிதத்தில் ஓர் மறை முகச் செய்தி இருப்பதாக உணர்ந்தேன்.
அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள் இவைதான்

31st july 1956

Blessed Divinity, Salutations. Om Namo Narayanaya.

Thy kind letter. I am very glad to know you have passed the B.A. and you have joined as a teacher, it is very good. Kindly be brave and fight the battle of daily life. Be strong in mind. Be joyful and calm at all times. Have faith in the Lord at any cost. He gives you some experiances to give you more strength and will to face the life more bravely. Be sure of His Divine Living presence at all times with you. Then you will be filled with joy and strength. Be sure of His grace and do your best. He will guide you and inspire your path.

Sd sivananda

ஆம். நான் வேறு திசையில் பயணம் போகப் போகின்றேன் என்று அப்பொழுது தெரியாது.

என் தந்தை என்னை அழைத்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரைப் பார்க்க புறப்பட்டு விட்டார். அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட தொண்டர். தன் தலைவரிடம் மகள் பட்டம் பெற்ற பெருமையைக் காட்ட அழைத்துச் சென்றார். அக்காலத்தில் ஒரு பெண் பட்டதாரியாவது பெரிய சாதனை.
கர்ம வீரருக்கோ எல்லோரும் கல்வி கற்க வேண்டுமென்ற லட்சியம்.

அந்தப் பெருமகனார் ஆசிகள் கூறுவதற்குப் பதிலாகக் கோபத்துடன் பேசினார். அவரின் வார்த்தைகளைப் பாருங்களேன்.

“படிச்சவங்க எல்லாம் இப்படி சுகமான வேலைக்குப் போனா கிராமம் என்னாகறது. அங்கே இருக்கற ஜனங்களுக்கு ஒரு வசதியும் இல்லே.
லைட் இல்லே. அவுக ஊருக்குப் போக சரியான ரோடு இல்லே. பள்ளிக்கூடம் இருந்தாலும் புள்ளங்களை அனுப்பறதில்லே. ஆஸ்பத்தி ரிக்குக் கூடப் போகத் தெரியல்லே. முதல்லே அவங்களுக்கு உலகம் போற போக்கு தெரியணும். அவங்களுக்கு வசதி செய்து தரணும். அவங்க புள்ளங்க பள்ளிக்கூடம் போகணும். கிராமத்துலே போய் வேலையைப் பாரு. கட்டின துணி அழுக்குபடும்னு சொகுசு வேலை தேடாதே. மணிமகள் பார்க்க வேண்டிய வேலை அதுதான்.”

நானும் சரி என்று கூறிவிட்டு வந்தேன். என்ன வேலை, எப்படி கண்டு பிடிப்பது என்றெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் ஒரு மாதத்தில் பத்திரிகை விளம்பரம் எனக்கு இறைவன் பணித்த பணியைக் காட்டியது.
சுவாமிஜியின் கடிததத்தின் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் அப்பொழுது புரிந்தது.

நான் விரும்பிய துறவற வாழ்க்கை எனக்கு அமையவில்லை. தெய்வத்தின்
கட்டளை வேறு. மகான்களால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ப எனக்கு வழிகாட்டினர்கள்.

சமுதாயப்பணிக்குச் சென்றேன்.

பல வருடங்கள் கழித்து இன்னொரு அனுபவம் கிடைத்தது. நான் உதகை மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊட்டிக்கு ஒரு மகான் வந்தார். அவர் தியானப் பயிற்சி கொடுக்க வந்தார். நானும் அப்பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலில் குண்டலினி எழுதுப்பியவர் அந்த மகான் தான். பயிற்சி வகுப்பு முடியவிட்டும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வார காலத்தில் அவரின் நன்மதிப்பைப் பெற்றென். அவர் பல ஊர்களுக்குச் செல்கின்றவர். அவர் பணியில் என்னைச் சேரச் சொன்னார். என் இயலாமையைக் கூறி மறுத்து விட்டேன். அந்த மகான் பெயர் உயர்திரு பரஞ்சோதி அடிகளார். சமீபத்தில்தான் ஒரு உண்மை அறிந்தேன். அவர்தான் வேதாத்ரி மகரிஷியின் குருநாதர் என்று.

மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. சுவாமி சச்சிதானந்த அடிகள் சென்னைக்கு வந்திருந்தார். அப்பொழுது அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஹிப்பிகளை நேர்வழிக்கு மாற்றி சிறப்பு பெயர் பெற்றிருந்தார். அவர் சென்னைக்கு வரவும் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. என் நண்பர் பகீரதன் அவர்கள்தான் ஏற்பாடு செய்திருந்தார். என்னையும் வரச் சொன்னார். அன்றைய கூட்டத்தில் அவர் செயல்பாடுகளைக் கண்டு பிரமித்தேன். கூட்டம் முடிந்தும் அவருடன் தனியாகப் பேசிக் கொண்டி ருந்தேன். அவருடன் அமெரிக்கா வந்து சேவை செய்யச் சொன்னார். என் இயலாமை கூறி மறுத்தேன்.

துறவற வாக்கையை நான் தேடினேன். எனக்குக் கிடைக்கவில்லை. ஆன்மீகப் பனிகளுக்கு அழைப்பு வந்தன நான் மறுத்துவிட்டேன்.

இறைவன் எனக்கென்று ஒதுக்கிய பணி, வாழ்க்கையில் நலிந்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது. வரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி, நல்ல முறையில் செயல்பட என் குருந்தார் சிவானந்த சுவாமிஜியின் கடித வரிகள் எனக்கு வலிமை கொடுத்துவந்தன. இப்பொழுதும் அக்கடித்தத்தை என் குருநாதராக மதித்துப் பாதுகாத்து வருகின்றேன்.

எல்லாம் இறைவன் சித்தப்படிதான் நடக்கும்.

என் தாயார் கூறுவார்கள்

“திருப்பதி கோயிலுக்குப் போக வேண்டுமென்று வேண்டினாலும் அவர் கூப்பீட்டால்தான் போக முடியும் என்று”.

என் வாழ்க்கையில் அவர் திருவிளையாடலால், பல முறை கோபித்து அவரை நிந்தித்திருக்கின்றேன். ஆனாலும் அவர் இல்லை என்று எப்பொழுதும் நான் நினைத்ததில்லை. சொல்லப் போனால் அவர்தான் நிச்சயம், உண்மை என்பதையும் என் மனம் அறியும்..

தெய்வத்தின் அருளால் நம் சங்கரன் ஸ்ரீமடத்தின் ஆச்சாரியரானார்.
ஜெய ஜெய சங்கர கதையினைப் பார்ப்போம்.

தொடரும்

+++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

சீதாலட்சுமி


“ஜய ஜய சங்கர” கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை.

நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்யத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான். இதன்பொருட்டு நானும், என் சமகாலத் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவது இயல்பு.

இந்த “ஜய ஜய சங்கர” ஒரு கதை; கற்பனை; கனவு; ஆனால் பொய் அல்ல: சத்தியம். உங்கள் நடைமுறை வாழ்க்கையை விடவும், நமது நிதர்சனங்களைவிடவும், எனது கனவுகளும் கற்பனைகளும், கதையும், மேலான அர்த்தமும் ஆக்கசக்தியும் உடையவை. நான் எழுதுவதுதான் முக்கியமே தவிர எந்தப் பத்திரிகையில் அல்லது பனை ஓலையில் எழுதினேன் என்பதால் எழுத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவ தில்லை. எழுத்தின் தலைவிதி எழுதப்படுவதாலேயே தீர்மானமாகிறது. விளைவுகள் நம் அனைவரையும் மேன்மையுறச் செய்யட்டும்

“ஜய ஜய சங்கர” ஒரு கதை என்று ஆசிரியரே சொல்லிவிட்டார். அது கற்பனையென்றாலும் அவரது கனவு என்றும் ஒப்புதல் தருகின்றார்.
அவரது காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு சாட்சியாக எழுத்துடன் செல்கின்றார். அவர் மட்டுமா? நானும்தான். நானும் ஒரு நேரடி சாட்சி. எங்கள் குடும்பம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. இப்படி எத்தனை பேர்கள்
வாழ்க்கையோ ? இந்தக் கதை வந்த பொழுது எழுந்த விமர்சனங்களும் மிக அதிகம். அர்த்தமுள்ள ஆசை. மறுப்பதிற்கில்லை

கதையைப் பார்ப்போம்.

கதையின் கரு உணர்ச்சி பூர்வமானது. கம்பி மேல் நடப்பது போன்று கழைக் கூத்தாடியாக இருந்து கதையை நகர்த்தியிருக்கின்றார்

இறந்த காலத்தின் எலும்புக் கூடாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமம் சங்கரபுரம்.

அவருடைய எரிச்சலை ஆரம்பத்திலேயே பதிந்திருக்கின்றார்.

நாஸ்திகம் என்னும் நிர்மூடவாதம் ஓர் நாகரீகமாய்க் கவிந்திருக்கின்றது. கோயிலுக்கு முன்னாலுள்ள மைதானத்தில் கால மழையில் கரைந்து போகிற ஒரு சிலையை எழுப்பி அதன்கீழ் “கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்றும் அது மாதிரியான இன்னும் ஏதேதோ மொழிகளையும் செதுக்கிவைத்திருக்கிறது.

ஊர் எத்தனை வகைப்பட்டுப் பகைகொண்டு பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றது என்பதற்கடையாளமாய்ப் பல கம்பங்களில் பல கொடிகள் அங்கு பறந்து கொண்டிருக்கின்றன

(இதை எழுதும் பொழுதே என் நெஞ்சம் பதைக்கின்றது. எத்தனை எத்தனை பிரிவினைகள்! எவ்வளவு காழ்ப்புணர்ச்சி! இதற்கா சுதந்திரம் வேண்டிப் போராடினோம் ? நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் அலறுகின்றது)

அந்த ஊரில் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் “சங்கராபரணம்”

கதையின் நாயகனின் பெயரும் சங்கரன்.

ஆசிரியரை அந்த “சங்கரன்” பலமாகப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகின்றது !

அகண்ட காவிரிபோல் இருக்கும் ஆற்றின் இரு கரைகளுக்கிடையில்
பாலம் அமைத்து கதையை நகர்த்துகின்றார். என்னே கற்பனை!

அங்கே இரு சிறுவர்கள்
ஒருவன் பெயர் சங்கரன்
அக்கிரஹாரத்துப் பிள்ளை
இன்னொருவன் பெயர் ஆதி
சேரிப் பையன்.

சங்கரன் ஒரு கரையில் இருந்து கொண்டு தூரத்தே தெரியும் பறைச் சேரியையும் சுடுகாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம் சார்ந்த எல்லாவற்றிலும் அவன் பிரம்மத்தையே தரிசனம் செய்து கொண்டிருந்தான்.

ஆதி என்ற பெயர், குறளில் வரும் ஆதி பகவனைக் குறிப்பது என்று ஆசிரியர் சொன்னாலும் என் மனம் நினைப்பது வேறு.

ஆதி சங்கரரை இரண்டு பாகமாக்கி ஆதியாகவும் சங்கரனாகவும் படைக்கும் உணர்வு அவரையும் அறியாமல் தோன்றியிருக்குமோ?

பிள்ளைப்பருவ நட்பிலே அப்படி ஒரு லயிப்பு, இணைப்பைக் காண்கின்றோம்!

மகாலிங்க அய்யர் ஓர் அந்தணர். சிவன் கோயில் குருக்கள். சாஸ்திரங்களை நன்கு பயின்றவர். அவருடைய தம்பி சதாசிவ அய்யர்.
அவரும் சாஸ்திரங்களைப் படித்திருந்தாலும் பக்கத்து ஊருக்குச் சென்று ஆங்கிலம், இன்னும் சில மொழிகளையும் கற்றவர். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. காந்தி பக்தரானார்.

மகாலிங்க அய்யரின் புதல்வன் சங்கரன்
சதாசிவம் அய்யரின் புதல்வி சுதந்திர தேவி

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைபட்டாலும் ,
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் ராலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைதனை அழித்திட் டாலும்,
சுதந்திர தேவி 1நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.

சதாசிவ அய்யரின் மனத்தில் மந்திரமாய் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரம் இது. எனவே அவருக்குப் பெண் குழந்தை பிறக்கவும் சுதந்திர தேவி என்ற பெயரையே சூட்டினார்.

ஜெயகாந்தன் போற்றித் துதிக்கும் கவிஞன் பாரதி. அவனை இங்கே எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.

இந்தியா அடிமையாக இருந்த காலத்தில் இந்த சுதந்திர தாகம் எங்கும் இருந்தது. நானும் அக்காலத்து மனுஷி. சுதந்திரம் கிடைக்கும் முன்னரேயே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று கூத்தாடினான் பாரதி. நாங்களும் அதைப் பாடி ஆடினோம். பாரதி பிறந்த வீட்டில் அவரின் தாய்மாமன் சாம்ப சிவ அய்யர் பாட நிஜமாகவே நான் ஆடியிருக்கின்றேன்.

சதாசிவ அய்யர் தேச சேவையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
காந்திஜியின் சிந்தனைகளைப் பற்றி பிரசங்கம் செய்யத் தொடங்கினார். “வந்தேமாதரம்”. “ஹரிஜன்” என்ற சொற்கள் அடிக்கடி புழங்கலாயின. அவர் அத்துடன் நிற்காது சேரிக்கும் போய்ப் பழக ஆரம்பித்தார். அங்கே பள்ளி தொடங்கி எல்லோருக்கும் கற்றுத்தர விரும்பினார். அந்த மூங்கில் குடியிலேயே ஆஸ்ரமம் அமைத்துத் தங்கவும் ஆசைப்பட்டார். சிவன் கோயிலில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் செய்யப் போவதாகக் கூறவும் மகாலிங்க அய்யர் துடித்துப் போனார்.

சில நம்பிக்கைகள், வழக்கங்களுக்குப் பழக்கமாகிப் போன பின்னர் ஏதாவது மாற்றங்கள் வருவதானால் அவைகளைக் கண்டு மனிதன் நடுங்குகின்றான். அதனை எற்க அவன் மனம் மறுக்கின்றது.

மகாலிங்க அய்யரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆலயப் பிரவேசத்திற்கு ஹரிஜனங்களைக் கூட்டி வந்தால் கோயிலில் குறுக்கே படுத்து உயிரை விட்டுவிடுவதாகக் கூறினார்.

இந்த இடத்தில் என் கடந்த கால நினைவுகள் வருகின்றது. என் தாய்க்கு பதினெட்டு வயது, எனக்கு ஒரு வயதாகி இருக்கும் பொழுது என் தந்தை எங்களை விடுத்து சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொள்வதாய்க் கூறிவிட்டுச் சென்றவர்தான். வீட்டிற்கு வரவில்லை. பல ஆண்டுகள் எங்கள் குடும்பம் எதிர் கொண்ட சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

மதுரையில் நடந்த ஓர் வரலாற்று நிகழ்வின் பொழுது நானும் ஒரு சாட்சியாக இருந்தேன்.. ஆனால் குழுந்தை சாட்சி

என் தாயார் வீட்டைவிட்டு வெளியில் செல்வது கோயிலுக்கு மட்டும். தான். கணவன் இல்லாத வீடு. சின்னப் பெண். எனவே என் பாட்டி அதற்கு மட்டும் தான் அனுமதி கொடுத்திருந்தார். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவதாகச் சொல்லித்தான் என் தாயார் என்னை கூட்டிச் சென்றார்கள். நாங்கள் குடியிருந்தது தளவாய் அக்கிரஹாரம் என்ற தெருவில். கோயில் பக்கத்தில்தான் இருந்தது. ஆனால் அன்று அம்மா என்னைக் கூட்டிச் சென்ற இடம் எனக்குக் கோயிலாகப் படவில்லை. ஒரு ஓலைக் கொட்டகை. அங்கே மேடை அமைத்து அதில் ஒரு அம்மன்
சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் அந்த அம்மனைத்தான் கும்பிட்டார்கள். நான் ஏதோ கேட்க வாய் திறந்த பொழுது அம்மா என்னைப் பேசவிடவில்லை. வெளியில் வந்த பிறகுதான் பேச அனுமத்திதார்கள்

உம்மாச்சி கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொன்னியே, இங்கே ஏன் வந்தோம்.?

இப்போ இதுதான் உம்மாசி இருக்கும் இடம்.

ஏன்?

அந்தக் கோயில்லே ஹரிஜனங்கள் நுழஞ்சுட்டாளாம். அதனால் உம்மாச்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்.

ஹரிஜனன்னா யாரு? அவாளும் மனுஷாள் தானே. உம்மாச்சி எப்படி கோவிச்சுப்பா?

நேக்கு அதெல்லாம் தெரியாது. பெரியவா சொன்னா. அதைத்தான் நானும் சொன்னேன்.

புரியாத வயது. ஏதோ தப்புன்னு மட்டும் தெரிந்தது. என் குழந்தைப் பருவக் கதைகளை என் தாயார் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பவம் இது.

அதாவது தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன ஆலயப் ப்ரவேசம் நடந்தது. அதை எதிர்த்தவர்கள் நடேசய்யர் தலைமையில் அவசரமாக ஒரு கோயிலை உண்டு பண்ணிவிட் டார்கள். ஆனால் அந்த அமைப்பு வந்த வேகத்திலேயே போயும் விட்டது.

ஹரிஜனங்களுக்குத் தலைமை வகித்தவனும் ஒரு பிராமணன் எதிர்த்தவனும் ஒரு பிராமணன்.

வைத்தியநாத அய்யர் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே சுதந்திரப் போரரட்டத்தில் கலந்து கொண்டது. கையிலிருந்த காலணாவையும் போராட்டத்தில் செலவழித்த மனிதர். அரசியலை வியாபாரமாக்கி கோடிப் பணம் சேர்த்தவர் இல்லை.

அவருக்குச் சிலை எழுப்பினார்கள். ஆனால் அது காக்காய்க்கு கழிப்பிடமாக மாறியது. வருடத்திற்கு ஒரு நாள் கூட மாலை மரியாதை கிடையாது. தியாகத்திற்கு மனிதனிடம் கிடைக்கும் மதிப்பு இவ்வளவுதான்.

சதாசிவம் அய்யர் ஒரு நாள் இரவு மூங்கில் குடியில் தங்கி விட்டார்.
அவ்வளவுதான். அக்கிரஹாரத்தில் ஓர் புகைச்சலை உண்டுபண்ணிவிட்டது.

ஒரு பிராமணன் சேரியில் தங்கி அவர்களுடன் பழகுவதும் அவர்களுடன் உண்பதும் சாதிக்குப் பாதகமாகத் தெரிந்தது. சாதிப் பிரஷ்டம் செய்து விட்டால் என்செய்வது என்று கவலைப்பட்டார் மகாலிங்க அய்யர்.

எங்கள் குடும்பத்தில் அந்தக் கொடுமை எட்டிப் பார்த்தது.

ஐந்தாண்டுகள் கழித்து என் தந்தை எங்கள் வீட்டிற்கு வந்தார். என் தாயாருக்கு அப்பொழுது இருபத்தி மூன்று வயது. கணவனைப் பார்க்கவும் மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்கு கிடையாது. அதாவது தந்தை மடியில் உட்கார்ந்து கொஞ்சி விளையாடுவதுதான். அன்றுதான் உட்கார்ந்து அவரைத் தொட்டுப் பார்த்து, கட்டிப்பிடித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

என் தந்தை வந்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது. வீட்டுக்கார மாமி வந்தார்கள். என் தந்தையை முறைத்துப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்கள்.

“அங்கிச்சி, இதான் உன் ஆம்படையானா? ஜெயிலுக்குப் போனவர் தானே. அங்கே எல்லா ஜாதிக்காராளோடேயும் தங்கினவர். அவாளோடே அவா சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிட்டவர். அவர் இந்த ஆத்தில் இருக்கப்படாது. இது ஆச்சாரமான குடும்பம். அவரை உடனே அனுப்பிடு. அவர் ஆத்துக்குள்ளே வந்திருக்கக் கூடாது. சாந்தி செய்யணும்”

நாங்கள் ஒண்டுக் குடித்தனக்காரர்கள்.

பல ஆண்டுகளாய்ப் பிரிந்திருந்த கணவனுடன் ஒரு நாள் கூடச் சேர்ந்திருக்க முடியாமல் துரத்திய சாதிக் கொடுமையை அனுபவித்தவர்கள் நாங்கள். எங்களுக்குச் சமாதானம் கூறிவிட்டு என் தந்தை புறப்பட்டு விட்டார். மீண்டும் மூன்று மாதங்கள் அவர் இருக்கும் இடம் தெரியாது.
பின்னர் ஒரு நாள் எட்டயபுரத்திலிருந்து கடிதம் வந்தது. எங்கள் குடும்பம் எட்டயபுரம் சென்றது. இச்சம்பவத்தால் என் தாயும் சாதியை வெறுக்கத் தொடங்கினார்.

வீடு திரும்பின சதாசிவம் அய்யரிடம் அவர் நோயுற்ற மனைவிதான் கரிசனத்துடன் விசாரித்தாள். பழம் சாப்பிட்டதாகக் கூறினார். அவர் பேசியது மகாலிங்க அய்யருக்கும் காதில் விழுந்தது. அந்த நேரத்தில் கவலை ஒழிந்தாலும் பிரச்சனை முற்றிலும் நீங்கவில்லை

சதாசிவ அய்யர் எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. அவருக்கு காந்திதான் எல்லாம். காந்தி சொல்தான் அவருக்கு வேதம். எனவே மூங்கில் குடிக்குப் போவதை அவர் நிறுத்தவில்லை. அங்கே இருந்தவர்களுகுக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அண்ணன் தம்பி கதை இப்படியென்றால் அந்த நதிக் கரையோரங்களில் இன்னொரு நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இடைவெளி அதிகமாயினும் இதயப் பரிமாற்றம் இயலுமா?

எல்லைகளைத் தாண்டாமல் இருந்து, தனித் தனியாய் நின்று, ஒன்றாகிப் போகும் விந்தை அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆதி ஒரு அனாதை. ஹரிஜனப்பையன் மாமன் தான் அவனுக்குப் பாதுகாப்பளித்தான் சும்மா அல்ல. மாமனின் ஆடுமாடுகளை அவன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆதியும் மன மகிழ்வுடன் தன் கடமையாகக் கருதி செய்துவந்தான்.

ஆடுமாடுகளுடன் வருகின்றவனை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்பான் சங்கரன். அவன் வரவும் பேச ஆரம்பித்துவிடுவார்கள் ஆதியும் சங்கரனும். சங்கரனுக்காக ஆதி மரத்தில் ஏறி நாவற்பழம் உலுக்குவான்.. பனங்காய்ப் பறித்துக் கொண்டு வந்து சீவி நுங்கு எடுத்துத் தருவான். முந்திரித் தோப்பிலிருந்து முந்திரிக் கொட்டைகளைக் கொண்டு வந்து தீ மூட்டிச் சுட்டுத் தருவான்.

சங்கரன் நிறைய கதைகள் சொல்லுவான். ஆதியும் நிறைய கேள்விகள் கேட்பான். ஆதி சங்கரரின் கதையையும் சொன்னான் சங்கரன்.

ஒரு கிராமத்தின் நதிப்புறத்தில் அந்த இரண்டு குழந்தைகளும் தம் நடுவே காலங் காலமாய்க் கிழிக்கப் பட்டிருக்கும் கோடுகளைத் தாண்டாமலேயே ஒரு நதியின் இரண்டு கரைகளிலும் – விலகி உறவு கொண்டு நிற்கும் அக்கிரகாரத்தையும் சேரியையும் போல் – விலகி நின்றே விளையாடினர்.

ஒரு நாள் ஆற்றங்கரையில் ஆதியைச் சந்தித்த பொழுது சங்கரன் வேட்டியை வரிந்து கட்டி நின்றான். சங்கரன் நீரில் பாயவும் ஆதியும் குதூகலத்துடன் நதியில் பாய்ந்தான் இருவரும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஆதி கத்த ஆரம்பித்தான்.

“சாமி, அந்தப் பக்கம் போகாதே, சுழல்.. உன் சோத்துக்கைப்
பக்கத்துக்கு வா. சாமி அந்தப் பக்கம் போகாதே … சாமி ..”
என்று தீனமாய் அலறினான் ஆதி.

ஜலப் பிர்வாகத்தின் நடுவே இடம் எது ? வலம் எது ?

திசை தெரியாமல் எந்தப்பக்கம் போகக் கூடாதோ அந்தப்பக்கம் போய்க் கொண்டிருந்தான் சங்கரன். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. நீரின் அலைகள் மலைப்பாம்புக் குவியல் மாதிரி அவன் மீது கவிந்து மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக்கொண்டு போயின.

தொடரும்

+++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -16

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

சீதாலட்சுமி


நிலாரசிகனும் சஹாராத் தென்றலும் குழுமம் கொடுத்த செல்லப் பிள்ளைகள். இருவரும் கவிஞர்கள். எங்கு சென்றாலும் இக்கவிதைகளைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். ஜெயகாந்தன் இல்லத்திற்கும் அப்படியே சென்றேன். ஏற்கனவே ஒரு முறை நிலாரசிகனை அங்கு அனுப்பியிருக்கின்றேன். எத்தனை முறையானாலும் அவர் வீட்டிற்குச் செல்லுவதில் தனி மகிழ்ச்சி என்று கூறுவான்.

ஜெயகாந்தனே வரவேற்றார். உடல்நலம் மோசமாகி சிகிச்சைபெற்று உயிருடன் மீண்டவர். அவரைப் பார்க்கவும். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். அவர் உட்கார்ந்த நாற்காலிக்கடுத்து நான் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் பக்கவாட்டில் இருந்த சோபாவில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தனர்.

வழக்கம்போல் டீச்சரம்மா உடனே வந்து சில வினாடிகள் பேசிவிட்டு
விருந்தோம்பலுக்கு வேண்டியன செய்ய உள்ளே சென்றுவிட்டார்.

அறிமுகம் செய்து கொண்டிருக்கும் பொழுது கவுசல்யா வந்து, அந்த அறையின் வாசலை யொட்டி இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
திடீரென்று ஜெயகாந்தன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

சீதாலட்சுமி, நாம் எந்த வருடம் முதலில் சந்தித்தோம்?

1970 இல்

அதற்குப் பிறகு நான் பேச வில்லை. அவரே எங்கள் சந்திப்புகள், சேர்ந்து
போன பயணங்கள் போன்றவற்றை வந்தவர்களிடம் கூறிக் கொண்டிருந் தார். விபரங்கள் ஒருவர் வாய்வழிமட்டும் வரவில்லை.. கவுசல்யாவும் சேர்ந்து விளக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றிற்கும் பிறகு தொடர்ந்து வந்த கதைகள், கதைகளில் அவர் காட்டிய காட்சிகளை கவுசல்யாதான்
விளக்கிக் கொண்டிருந்தார். ஒன்றையும் விடாமல் மனைவியிடம் கணவர் கூறியிருக்கின்றார். ஜெயகாந்தனின் குறிப்பேட்டைப் போல் காட்சி யளித்தார் கவுசல்யா. ஒரு கணவனுக்கு மனைவி தோழியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது தெரியும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு வைத்துக் கொண்டு ஜெயகாந்தனின் மனக்குரலாய் ஒலித்துக் கொண்டிருந்தார் கவுசல்யா. குற்றாலத்தில் கசாப்பு கடைக்குப் போக வேண்டும் என்று சொன்ன பொழுது நான் தவித்த தவிப்பைக் கூடச்
சொல்லி யிருக்கின்றார். அந்த அதிசயத் தம்பதிகளை வியப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்

இப்பொழுது அவருக்கு முதுமையும் நோயும் வந்துவிட்டது. பேச வருகின்றவர்கள் கூட கவுசல்யாவிற்குத் தெரிந்து வரவேண்டும். கண்ணை இமை காப்பது போல் காத்து வருவதையும் உணர்ந்தேன்.

திடீரென்று ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வந்தது.

எனக்கு நாராயணன் என்று ஒரு நண்பர் உண்டு அவர் பெண்களைப் பற்றி எழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளின் நிருபர். நானும் அவரும் நடிகர் ஜெமினி கனேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். எங்கள் உரையாடல் காரசாரமான விவாதத்திற்குப் போய்விட்டது. நேரம் பறந்து கொண்டிருந்தது. நான் போக வேண்டும் என்றேன். ஏனெனில் ஜெயகாந்தனைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தேன். எனக்கு எதுவும் சொன்ன நேரப்படி நடக்க வேண்டும்.

ஜெயகாந்தன் பெயரைக் கேட்கவும் அவரைச் சில நிமிடங்கள் புகழ்ந்தார். அதன்பின் கவுசல்யா பற்றி ஒரு கதாகாலக்ஷேபமே செய்துவிட்டார். அவர் ஒரு சிறந்த நடிகையென்றும் அவர் நடிப்பதை நிறுத்தியது கலை உலகிற்கு நஷ்டம் என்றும் சொன்னார். அவர் நடித்த தனிக்குடித்தனம் நாடகம்தான் திரைப்படமாகியது. கவுசல்யா மாதிரி கே.ஆர் விஜயா கூட அப்படி நடிக்கவில்லை. அந்த அளவு அற்புதமாக நடிக்கும் திறன்பெற்ற ஒரு பெண்மணி என்று புகழ்ந்தார்.

அத்தகைய திறன் பெற்ற ஓர் பெண்மணி, சிவத்துடன் சேர்ந்த சக்தி ஐக்கியமானதைப் போல் ஜெயகாந்தனுடன் எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் ஐக்கியமாகி இருப்பதைக் கண்டு பிரமிப்பு அடைந்தேன். அந்த அளவு கணவரின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்திருந்தார். அந்தக் கணங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றார்.

பெண்ணுக்கு மரியாதை தருகின்றவர் ஜெயகாந்தன்.

பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜெயகாந்தனின் மகன் வந்து சேர்ந்து கொண்டார். பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. ஜெயகாந்தனும் கவுசல்யாவும் பேசவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பேசினேன். பிறகு கருத்தாடல் போன பாதை பிடிக்கவில்லை. இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனை நான் பார்த்த பொழுது “gossip”
என்று சிரித்துக் கொண்டே மெதுவாகச் சொன்னார்.

“நாம் இருவரும் சேர்ந்து கலைஞரைப் போய்ப் பார்க்கலாமா?”
என்று அவர் கேட்ட பொழுது தலையாட்டி என் இயலாமையைத் தெரிவித்தேன். ஒரு காலத்தில் நான் விரும்பியதை நினைத்துதான் அவர் இப்பொழுது என்னைக் கேட்டார். அரசியல் வட்டத்திலிருந்து விலகி இப்பொழுது அமைதியாக இருக்கின்றேன். என் முகத்தில் எழுந்த கேள்விக் குறியைப் பார்த்து, “நான் இப்பொழுதும் அதே ஜெயகாந்தன் தான்”என்றார்.

நான் புறப்பட எழுந்தேன். மெதுவாக நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு கார் நோக்கிச் சென்றேன். ஜெயகாந்தனும் கேட்வரை தொடர்ந்து வந்தார். காருக்குள் ஏறும் முன் அவரைப் பார்த்தேன்.

ஊருக்குப் போகும் முன் வருவீர்களா?

நிச்சயம் வருவேன்

காரில் ஏறிவிட்டேன். எங்களையே பார்த்துக் கொண்டிருந்த இரு கவிஞர்களும் “நட்புக்கு இத்தனை சக்தியா?” என்று கேட்டனர்.
பதில் கூறாமல் கண்கலங்க உட்கார்ந்திருந்தேன். எனக்கும் வயதாகி விட்டது. உயிருக்கு யார் உத்திரவாதம் அளிக்க முடியும்? ஏதோ அவரும் கேட்டார், நானும் பதில் சொன்னேன்.

எதேதோ சிந்தனைகள் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன. சிங்கம் வீட்டுக்குள் அடங்கிவிட்டதா?

ஒரு ஜன்னல் இருந்தாலும் அது வழியே சென்று உலகைக் காட்டும்
திறமை பெற்றவர். அவர் ஜன்னைப்பற்றி எழுதிய கதை நிழலாடியது

“இந்த ஜன்னல் வழியாக யார் மொதல்லே பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பாத்துருப்பா. எனக்கு ஞாபகம் இருக்கற மொதல் நெனவே
இந்த ஜன்னல் வழி பாத்ததுதான். ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார்தான் உட்கார்ந்திருந்தார். பிள்ளையாரைப் பாத்துண்டு நானும் உக்கந்திருக்கேன் பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷ்யப் பிள்ளையார்”

ஆழ்வார் பேட்டைக் குடிலுக்குக் கீழே ஒரு கோயிலும் உண்டு. இந்த ஜெயகாந்தன் பிள்ளையாரும் குட்டைச் சுவருக்கருகில் உட்கார்ந்து கொண்டு அந்த சின்னத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருப்பார். அங்கே மனிதர்கள் நடமாட்டம் உண்டு. சத்தம் உண்டு. இங்கே கே. கே நகர் வீட்டில் அமைதி.

“இந்த வீடு ஒரு ரயில் மாதிரி. நான் பிரயாணம் போறேன். எல்லாம் ஓடறது. ரயில்லே போகச்சே நாம் ஓடிண்டிருக்கோம். ஆனா தந்திக் கம்பமும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ. ஜன்னல் வழியா பாத்தா அவா ஓடற மாதிரி இருக்கு. யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான்”

‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’.

இப்பொழுது இவருக்குப் பொருந்தும் தலைப்பு

இப்பொழுதும் அவர் மனத்தில் உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்தமான கதை ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்.’ புத்தகம் இப்பொழுது என் கையில் இல்லை. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர் இன்னும் நீண்டுவிடும்.

மனத்தில் ஓர் சுமை இருப்பது போன்று உணர்வு. வீட்டிக்குச் சென்ற பொழுது கோமதியும் அவள் கணவன் சந்துருவும் வந்திருந்தார்கள். கோமதியைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சி பொங்கியது. திடச் சித்தம் உள்ளவள் இந்த சந்துரு என்னமா ஆடினான். எப்படி யிருந்தவன் இப்படி மாறிவிட்டான் என்பதில் வியப்பு. அவன் ஒரு காலத்தில் சபல புத்திக்காரன். மனைவியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
சட்டென்று ஜெயகாந்தனின் கதை ஒன்றில் வரும் காட்சி நினைவில் தோன்றியது.

ஓர் கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் உரையாடல் :

“நீ என்னைப்பத்தி என்ன நினைக்கறே ?”

“என்னோட புருஷன்னு நினைக்கறேன்.”

“என் மேலே உனக்கு ஏதாவது கோபம்.”

‘இல்லே”

“வருத்தம்”

“ம்ஹம்”

“கவலை”

“இல்லை”

“ஏன் இல்லை ?”

“ஏன் இருக்கணும் ?”

அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல முடிந்தது.
அவனது கேள்விகளுக்குப் பதிலாய் ஒரு கேள்வியையே திருப்பி போட்ட பொழுது அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

(கேள்விக்குக் கேள்வி விடையாய்த் தருவது ஜெயகாந்தன் வழக்கம். நான் அனுபவித்திருக்கின்றேன்.)

அவன் ஆர்வத்திற்கு ஓர் அடி.

பதில் கூறமுடியாத நிலையில் தன் இயலாமையில் அவளிடம் ஏதோ உயர்வை உணர்ந்தான். அவளை அவன் ரசிக்க ஆரம்பித்தான்.
இந்த ரசனைகளைப் பற்றி எத்தனை எழுதினாலும் போதவில்லை.
ஒரு வழக்குச் சொல் உண்டு. ஓடுகின்றவரைத்தான் விரட்டுவார்கள். எதிர்த்து நின்றால் அடங்கி விடுவார்கள். மனிதன் இல்லறத்துக்கும் இது பொருந்துமோ? பொதுப்படையாகக் கூறிவிட முடியாது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில நேரங்களில் சில மனிதர்கள்!

அப்பப்பா போதும். கொஞ்சம் ஜெயகாந்தனைப் பற்றிய நினைவுகளி லிருந்து ஒதுங்கி வந்தவர்களைக் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் ஊருக்குப் புறப்படும் முன்னர் அவர் வீட்டிற்குச் சென்றேன். இம்முறை என் கணவரும், என் தோழி புனிதவதி இளங்கோவனும் உடன் வந்தார்கள். முதலில் டீச்சரம்மா வந்து கொஞ்ச நேரம் எங்களுடன் பேசினார்கள். பின்னர் ஜெயகாந்தனும் என் கணவரும் பேசினார்கள். கவுசல்யா வரவும் புனிதத்தின் முகம் மலர்ந்தது.

என் தோழி புனிதவதி இளங்கோவன் அவர்கள் வானொலியில் வேலை பார்த்து, பின்னர் ஓய்வு பெற்றவர்கள். நாடகப் பிரிவில் இருந்ததால் அவர்களுக்கு கவுசல்யாவை நன்றாகத் தெரியும். அவ்வளவுதான் இருவரும் மலரும் நினைவுகளில் எங்களை மறந்துவிட்டனர். ஆனால் நாங்களும் அந்த நினைவுகள் சென்ற திசையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். என் கணவர் அந்த உரையாடலை மிகவும் ரசித்தார்.
எனக்கும் பல புதிய செய்திகள் கிடைத்தன. இந்த சந்திப்பில் ஜெயகாந்தனுடன் அதிகம் பேச முடியவில்லை. பார்த்ததில் ஓர் மன நிறைவு.

வெளியில் வந்தவுடன் என் கணவர் கவுசல்யாவைப் பற்றிக் கூறியது.

Very intelligant … sharp

ஜெயகாந்தன் இப்பொழுது ஏன் எழுதுவதில்லை?

பலரும் நினைப்பதுதான்

எந்த எழுத்தாளனுக்கும் ஒரு காலக் கட்டத்தில் ஓட்டம் நின்று விடுகின்றது. ஒரு சிலர் தான் விதிவிலக்கு. எழுதுபவன் மாறிவிடுகின்றானா அல்லது அந்த எழுத்தைப் படிக்கும் மனிதர்களின் ரசனைகளின் மாற்றங்களா ?

என் கணவருக்குப் பதில் சொல்ல வேண்டும்

இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நையாண்டி அரசியல், சினிமா, ஆன்மீகம் இப்படியெல்லாம்தான் வருகின்றன. சிறுகதைகள் ஒன்றிரண்டு வந்தாலே அதிசயம். தொடர்கதை படிக்கும் பெண்கள் தொலைக் காட்சிப் பெட்டிக்குமுன் ஐக்கியமாகி விட்டார்கள். மற்றவர்களை கணினி தன் பக்கம் ஈர்த்துவிட்டது. மிச்சமுள்ளவர்களுக்கும் வெட்டிப் பேச்சும் சினிமாவும் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது.

கலைஞனுக்கு ரசிகர்கள் தேவை.

எழுத்தாளனுக்கு வாசகர்கள் தேவை.

அப்பொழுதுதான் உற்சாகமாக அவர்கள் தங்கள் திறமையைக் காட்டும் ஆர்வம் பெறுவர். இப்பொழுது சூழல் மாறிவிட்டது.

பிரபலமான ஒன்றை கேலியாக விமர்சனம் செய்தால், கேலி செய்பவரும் பிரபலமாகி விடுவர். எழுத்து, பேச்சு, அரசியல் எல்லாவற்றிலும் இதே நிலைதான்.

இப்பொழுதும் ஜெயகாந்தனின் புத்தகங்களுக்கு மவுசு உண்டு. எழுதியது போதும் என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டு எழுத்தாளர்கள் ஒதுங்கி விடுகின்றார்கள். அவர் எழுதுவதில் ஏன் தேக்க நிலை என்று நான் கேட்டதில்லை.

இந்த நாட்டில் பத்திரிகையில் எழுதுகின்றவன் பணக்காரனாக முடியாது.

என் கணவரிடம் ஒரு பெரிய விளக்கமே கொடுத்தேன். அவரும் அதனை ஒப்புக் கொண்டார்.

ஜெயகாந்தன்

அவருடன் நடந்த உரையாடல்களில் பெரும் பகுதி என் பணியிடத்துப் பிரச்சனைகள்தான். ‘அக்கினி பிரவேசம்,’ அதனைத் தொடர்ந்த கங்காவின் கதை பற்றி பேசியிருக்கின்றோம். அவர் பத்திரிகை உலகில் உச்சத்தில் இருந்த பொழுது எனக்கு அவர் பழக்கமில்லை. பழகிய பிறகு அவர் தன் எழுத்தில் அதிகமாக உரையாடியது அவர் எழுதிய ‘ஜெய ஜெய சங்கர’ பற்றித்தான். அதற்குப் பல காரணங்கள் உண்டு

அவர் அதனை எழுதி வரும் பொழுது நான் காஞ்சியில் இருந்தேன். சங்கர மடத்திற்குப் பக்கம் வீடு. செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாக இருந்தேன். காஞ்சிக்கு வருகின்ற பார்வையாளர்களில் பலர் மடத்திற்கும்
செல்வதுண்டு. நானும் உடன் செல்ல வேண்டியிருக்கும். மஹாப் பெரியவ
ரைப் பார்க்க தேனம்பாக்கமும், கலவைக்கும் செல்வதுண்டு

அந்தத் தொடரை எழுதும் பொழுது எழுந்த விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அதுபற்றி எதுவும் அவரிடம் நான் பேசியதில்லை. உணர்ச்சிப் பிரவாகமாக ஓடிவரும் சிந்தனையை தடுக்கவோ, அல்லது திசை மாறிச் செல்ல வைப்பதோ எனக்கு உடன்பாடில்லை. எப்பொழுதும் நான் பேசுவேன். அவர் பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே கேட்பார். இப்பொழுது அவர் பேசிய பொழுது நான் மவுனம் காத்தேன். அவருக்கும் பல விமர்சனங்கள் தெரியும். இந்தக் கதை எழுதும் பொழுத்துதான் அவரிடம் ஓர் தவிப்பைக் கண்டேன். அவர் நினைத்தவை, சொன்னவை யெல்லாம் எழுத்தில் முழுமையாகக் கொண்டு வரவில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ நேரம் வந்தவுடன் இடுப்பு வலி எடுக்கவும் ஒரு தவிப்பு இருக்குமே அது போன்று ஓர் நிலையை அவரிடம் கண்டேன். பலருக்கும் அவர் எழுத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். மாற்றுக் கருத்து என்பது உலகில் இயல்புதானே.

‘ஜெய ஜெய சங்கர’ ஜெயகாந்தனின் ஆத்ம ராகமாய் உணர்ந்தேன்.

அவருடைய புத்தகங்கள் நான்கும் எப்பொழுதும் என்னுடன் இருக்கும்.
எனவே அதைப்பற்றி எழுதாமல் ஜெயகாந்தன் தொடரை என்னால் முடித்தல் இயலாது.

புத்தகத்தைத் திறந்தேன்

முன்னுரைக்கு முன்னே முதன்மையாகக் காணப்பட்ட வரிகள் என்னை அங்கேயே தங்க வைத்தது. மஹாப் பெரியவரின் வாசகங்கள். எக்காலத்திற்கும் பொருந்தும் அறிவுரைகள்.

மனித நேயமும், உலக நன்மையும் ஒவ்வொருவரின் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஈஸ்வரோ ரக்ஷது!
————————

பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பெளராணிகர்கள். சூதரும் பெளராணிகர்களும் எப்படி பிரச்சாரம் செய்தார்களோ அவ்விதமே செய்ய வேண்டியது இன்றையப் பத்திரிகைகாரர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததையே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.

வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மா விருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். “நம்மையும் உயர்த்திக்
கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும்.”

-ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

தொடரும்

++++++++++++++++
seethaalakshmi subramanian

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

சீதாலட்சுமி


ஒரு சமயம் ஆழ்வார்ப் பேட்டைக் குடிலுக்கு நானும் என் கணவரும் சென்ற பொழுது என் மகனையும் கூட்டிச் சென்றிருந்தேன். என் மகனுக்கு அப்பொழுது பதினான்கு வயது. ஆனாலும் அவனும் என்னைப் போல் படிக்கத் தெரிந்த நாள் முதலாய் வாரப் பத்திரிகைகள், மாத இதழ்களுடன் கதைப் புத்தகங்களும் படிப்பான். அவன் ஜெயகாந்தனிடன் கேட்ட ஒரு கேள்வி என்னையும் என் கணவரையும் தூக்கிவாரிப்போட வைத்தது.

“மாமா, உங்க கதை ஒண்ணும் புரியல்லே எங்களுக்குப் புரியற மாதிரி எழுதினா என்ன?”

“நீ ரொம்பச் சின்ன பையன். உன் அம்மாகிட்டே கேட்டிருந்தா அவங்க உனக்கு அர்த்தம் சொல்லி இருப்பாங்களே”

என் மகன் பேச வாயைத் திறந்தான். ஆனால் அதற்குள் என் கணவர் அவனைத் தனக்கருகில் இழுத்து சைகையால் அவனைப் பேச விட வில்லை. ஜெயகாந்தன் கவனித்தாரா என்று நானும் பார்க்கவில்லை. அப்பொழுதே என் மகன் கல்கி, சாண்டில்யன் கதைகள் படிக்கின்றவன். அவனுடைய மகன், அதாவது என் பேரன் தன் பதினாறு வயதில் ஜெயகாந்தனின் மேடைப்பேச்சுக்கு அர்த்தம் சொன்னான். கால இடைவெளியில், மனிதனின் சிந்தனாசக்தி எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டது என்று வியந்தேன்

Frustration

பேரன் சொன்ன முதல் வார்த்தை.
தமிழில் சொன்னால் விரக்தி
பின்னால் நீண்டதொரு விளக்கமே கொடுத்தான்.

“பலவிஷயங்களுக்கு அடிமையாகி விட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை”

இது ஆற்றாமையில், ஆதங்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. பெண் வெளி வருவதும், விருப்பம்போல் அலங்காரம் செய்து கொள்வதும் மட்டும் பெண்ணின் நிலை முன்னேறிவிட்டதாகாது. இது ஒரு சோடாபுட்டி திறக்கப்படுவது போல். இத்தனை நாட்கள் அடைபட்டுக் கிடந்தவர்கள் சுதந்திரக் காற்றை நுகரவும் மகிழ்ச்சியில் கொஞ்சம் அதிகமாகவே தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். கவனமின்றி சோடா பாட்டிலைத் திறந்தால் முகத்தில் அடிபடும். அதே போல சுதந்திரத்தையும் புரிந்து கொண்டு நடக்கா விட்டால் பாதிக்கப்படுவது பெண்களே. கிடைத்த சுதந்திரத்தில் தன்னிலை மறப்பது ஆபத்தானது. இத்தகைய சுதந்திரத்திற்கு அடிமையாகி விடுவது கொடுமை. இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருக் கின்றார். இன்றைய போக்கு எந்த சிந்தனையாளனையும் வருந்தச் செய்வதே.

நானும் பேரனும் நிறையப் பேசி விவாதித்தோம். அவனும் பல நாடுகளைப் பார்த்துவிட்டான். அமெரிக்கா ஒரு சுதந்திர பூமி. இப்பொழுதெல்லாம் வயதுக்கு மீறிய வளர்ச்சியும் காண முடிகின்றது. அவன் உறவுகள் இந்தியாவில் இருக்கின்றனர். அந்த உள்ளம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றது. அதனால்தான் இப்படி பேச முடிந்தது.

பெண்கள் முழுமையாக சுதந்திரம் பெற்று விட்டார்கள் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் “சுதந்திர அடிமை “என்ற
சொல்லின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நானும் ஓர் போராளி. பெண்ணியம் பேசுகின்றவள். இன்று காணும் காட்சிகள்தானா முன்னேற்றத்தின் அடையாளங்கள்?

கல்வி கற்பதில் கொஞ்சம் முன்னேற்றம். வீட்டுக்குள்தான் பெண் என்ற நிலையிலும் சிறிது மாற்றம். பெண் என்று சொல்லும் பொழுது அது நகர்ப் புரம் மட்டும் பார்த்து பேசுதல் சரியல்ல. நம் நாட்டில் கிராமங்கள் அதிகம். விவசாயத்தில் வேலை பார்க்கும் பெண்கள், கட்டட வேலை போன்ற பணிகளில் தினக்கூலி பெறும் பெண்கள், மில்களிலும், உடைகள் தைப்பது போன்ற சிறு கைத்தொழில்களிலும் வேலை பார்க்கும் பெண்கள், சொல்லிக் கொண்டே போகலாம்.. எண்ணிக்கையில் அதிகமானவர்கள் இவர்கள்தான். இவர்கள் நிலை என்ன?

சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவைகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி பார்த்தால் மிகவும் குறைவு. விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல் கவர்ச்சிக்குப் போய் எத்தனை பெண்களின் வாழ்க்கை ஏமாற்றத்திலும், நிம்மதியற்ற வாழ்க்கையிலும் முடிந்திருக் கின்றது. பட நாயகர்களைப்போல் நாயகிகள் வாழ்க்கை கிடையாது.. சிறிது காலமே பிரகாசிக்க முடிந்த தொழில். அதிலும் எத்தனை பிரச்சனைகள் !

பெண்களின் இன்றைய வாழ்க்கையைத் தொகுத்து விளக்கி எழுதப் பட வேண்டும். உழைக்கும் பெண்கள் சார்பிலே நான்காண்டுகள் பன்னாட்டு அமைப்பில் இருந்த பொழுது பல நாட்டுப் பிரச்சனைகளையும் ஆய்வு செய்திருக்கின்றேன். சுருங்கச் சொல்ல முடியாதது.

ஒன்று மட்டும் என்னாலும் கூற முடிகின்றது

Exploitation

சூழ்நிலையில் சுருட்டல் அல்லது சுரண்டல் என்று சொல்லலாமா?

இது யாரால் என்ற கேள்வி தேவையில்லை. முதலில் பெண்ணே உணர வேண்டும். அவளுடைய தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அமைப்புகளும் ஆரம்பத்துடன் தங்கள் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து கண்காணித்து ஆவன செய்ய வேண்டும். உடனுக்குடன் போராடி உரியவர்களிடம் பிரச்சனைகளை எடுத்துப் போய் தீர்வு காண முயல வேண்டும்.

முதலில் அரசியலில் பெண்கள் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். மனம் கொதிக்கின்றது. அரசியலில் பெண்களின் தலைமை எத்தனை சாடல்களுக்குள்ளாகின்றது. அரசியல் என்றால் தாக்குதல் இல்லாமல் இருக்காது, தெரியும். கொள்கைகளைக் குறை சொல்லட்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டட்டும். நன்றாகத் திட்டிக் கொள்ளட்டும். ஆனால் ஒரு பெண்ணை ஆணுடன் சேர்த்து கொச்சைத்தனமாகப் பேசுவது சரியா? அழகுத் தமிழில் ஆபாசத்தை விஷமாகக் கலக்கின்றார்களே!

ஒரு சம்பவம் கூறியாக வேண்டும். 1990 ஆம் ஆண்டு. ஒரு அரசியல் பிரமுகர் ஒரு பெண்னை மிகக் கேவலமாகப் பேசினார். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

அப்பொழுது நான் பங்களூரில் இருந்தேன். என் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமாகிக் கட்டிலில் கிடந்தார்கள். அவர்களை முழு நேரம் கவனித்து வந்தேன். இந்தச் செய்திகளைப் படித்தவுடன் என்னால் இருக்க முடியவில்லை. என் தாயாரைக் கவனிக்க ஒருவரைத் துணைக்கு வைத்து விட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். வந்தவுடன் திருமதி சரோஜினி வரதப்பனிடம் குமுறினேன். இன்னும் பல பெண்களைச் சந்தித்தேன். மவுனமாக இருக்கக் கூடாது என்று கூறினேன். உடனே ஒரு கண்டனக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. கூட்டம் சிறியதுதான் ஆனாலும் பெண் அரசியலுக்கு வந்தால் இப்படி கேவலப்படுத்தக் கூடாது என்று ஒருமித்துக் கூறினோம். நாங்கள் நடத்தியது அரசியல் கூட்டமல்ல. அது போதாது என்று தோன்றிற்று. ஒரு மகளிர் மன்ற சார்பில் ஓர் அறிக்கையும் கொடுத்தோம். “நீயா சொன்னாய்?” என்று அறிக்கையில் எங்கள் மன வலியை விளக்கமாக எழுதி அனுப்பியவள் நான் தான். இன்றும் அந்த பத்திரிகை அலுவலகத்தில் அதன் நகல் இருக்கும்.

இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் பெண்களை அவச்சொல்லால் பழிக்கப்படும் பொழுது பெண் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அரசியல் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் கீழ்த்தரமான பேச்சை அனுமதிக்கக் கூடாது

ஒரு அரசியல்வாதி தன் கட்சியைச் சேர்ந்த பிரமுகரிடம், “அவனுக்கு சரியாகப் பேசத் தெரியவில்லை” என்று புகார் சொன்ன பொழுது பிரமுகர் கூறிய பதில். “இப்படிப் பேசுகின்றவர்களும் வேண்டும், அப்படிப் பேசுகின்றவர்களும் வேண்டும்” என்பதுதான்.

நடுத்தெருவில் அரசியல் மேடைகளில் பெண்ணை வார்த்தைகளால் நிர்வாணப்படுத்திப் பேசுவதும் அதைக் கேட்டு மக்கள் கைதட்டிச் சிரிப்பதுவும் கொடுமையாகப்பட வில்லையா? இதுவா நாம் கற்ற நாகரீகம்? இது ஒரு வகையான விபச்சாரமாகத் தெரிகின்றதே! அசிங்கப் பேச்சை ரசித்தவன் அவன் முகத்தை தன் மனைவியிடன், மகளிடம், ஏன் தாயிடம் எப்படி காட்ட முடிகின்றது?!

ஓர் பெண் அரசியல்வாதி , ஒரு ஆணை விமர்சிக்கும் பொழுது, “உனக்கு எத்தனை சொந்த வீடுகள்? எத்தனை சின்ன வீடுகள்? எத்தனை ஒட்டு வீட்டுகள்?” என்று கேட்டால் அந்த ஆண்கள் தன் முகத்தை எப்படி மறைப்பார்கள்? பெண்கள் இப்படி பேசுவதில்லை என்பது அவர்களுக்கு ஆதாயமாகிவிட்டது.

பெண் அமைப்புகள் அரசியலுக்கப்பால் இது போன்ற பிரச்சனைகளைக் கண்காணித்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.

ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர் பேசியது சரியில்லை என்று துடிக்கின்றோமே !

அரசியல் மேடை ஆபாசப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருப்பது சரியா?

திருமதி இந்திராகாந்தி அம்மையாரையும் செல்வி ஜெயலலிதா அவர்களையும் இதே தமிழகத்தில் எப்படியெல்லாம் பேசினார்கள் ?
வெளிப்படையாக எழுத முடியவில்லை. கூசுகின்றது.

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல. அரசியல்வாதிகள்
எல்லோரையும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். இந்த முதியவள் ஓர் தாயாய் இருந்து வேதனையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

“பெண்மேல் இது போன்று சேற்றை இறைக்காதீர்கள்”

“ஒரு பெண் நள்ளிரவில் தெருவில் தனியாகப் போய்விட்டு என்று பத்திரமாகத் திரும்புகின்றாளோ அன்றுதான் சுதந்திரநாடு என்று சொல்ல வேண்டும்.”

சொன்னவர் யாரென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். எட்டு வயதுச் சிறுமிகூட பாலியல் கொடுமைக்காளாகிp படுகொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்படூம் கொடுமை தொடர்கின்றதே.! பெண் சிசுக்கொலை இன்னும் நிற்கவில்லையே!?

எல்லாத்துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டார்கள்.

உண்மை. மறுக்கவில்லை. ஆனால் எத்தனைப் பேர்கள் இப்படி உயர் நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அடையாளப் பொட்டுகள்.

முன்னேற்றப்பாதையில் பெண்போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம். இதுவே நான் அதிகமாகச் சொல்லிவிட்டேன். தனி அரங்கத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும்.

ஜெயகாந்தன் இதுவரை எழுதிய கதைகளில் பெண்களை அனுசரணையுடன் தான் பார்த்திருக்கின்றார். விபச்சாரிகளைக் கூட வெறித்தனத்தில் அதை செய்யவில்லை, வயிற்று பிழைப்புக்காக
செய்வதாகக் காட்டுகின்றார்.

‘ஓர் நடிகை நாடகம் பார்க்கின்றாள்’ என்ற கதையில் கல்யாணியை
ஒரு பெண்ணின் நிலையில் இருந்து பாத்திரைத்தை நகர்த்துவார். ரங்கணையும் யதார்த்தமாகக் காட்டுவார்.

கதைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பெண்களிடம் அவர் காட்டும் மரியாதையைப் பார்த்திருக்கின்றேன்.

சிலரின் எழுத்துக்கும் பேச்சுக்கும் வாழ்க்கை நடமுறையில் நடந்து கொள்வதற்கு வித்தியாசங்கள் இருக்கும். ஜெயகாந்தன் குடும்பத்துடன் பழகியவள் நான். ஜெயகாந்தனும் என் குடும்பத்துடன் பழகியவர். எங்கள் இருவரின் குறைகளும் நிறைகளும் இருவரும் அறிவோம். அவரைபற்றி அறிய சில காட்சிகளைக் காட்ட விரும்புகின்றேன்

எனக்கு ஒரு தோழி. கேரளத்து அழகி. சமுதாயப் பணியில் சிறந்தவள்.
ஆனால் அவளின் தோற்றம் பல ஆண்களின் கவனத்தை ஈர்த்து அவளைத் தவறாக நினைக்க வைத்தது. வெறும் நினைப்புடன் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவள் போகுமிடங்களில் அவளத் தவறாக அணுகினர். அவள் வருத்ததுடன் என்னிடம் கசப்பு அனுப்பவங்களைக் கூறுவாள். இவைகளுக்குக் காரணமும் அவளே. மேடை நாடகத்திற்குச் செல்வது போன்ற ஒப்பனை. நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் “இதற்கு எனக்கு சுதந்திரம் கிடையாதா” என்று கேட்பாளே தவிர தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிரச்சனைகளும் தொடர்ந்தன.

ஜெயகாந்தனிடம் எல்லாம் கூறி அவளை அழைத்து வருவேன் புத்திமதி கூறுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அவர் மவுனமாக இருந்தார். அவளைக் கூட்டிச் சென்றேன். அவளும் அவரிடம் மனம் விட்டுப் பேசினாள். ஆனால் அவர் பதிலே கூறவில்லை. எனக்கு அவர் மீது கோபம் வந்தது. அங்கிருந்து அவளைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

பின்னால் அவரைச் சந்திக்கும் பொழுது சண்டை போட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “அலங்காரம் செய்து கொள்வது அவர்கள் விருப்பம். ஒருவர் சுதந்திரத்தைப் பற்றி இன்னொருவர் விமர்சனம் செய்யலாமா” என்று கேட்டார். அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அடுத்து அவர் கேட்ட ஒரு கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.

“சீதாலட்சுமி ! என்றாவது உங்கள் தோற்றம் பற்றி யோசித் திருக்கின்றீர்களா? முரண்பட்ட மனிதர்களிடம் பழகுகின்றீர்கள் நீங்கள். யார் யாரிடம் பழகுகின்றீர்கள் என்பதும் அவர்களுக்கும் தெரியும். உங்களை ஏன் மதிக்கின்றார்கள்?”

என் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களும் கேள்விகளே..
நான் எறிந்த அம்பு என் மேலேயே திரும்பப் பாய்ந்தது.

என் நெருங்கிய உறவினர் ஒருவர் என் தோழியிடம் அவள் அலங்காரத்தைப் பற்றி விளக்கினார்.

விழாக்களுக்கு, திருமண வைபவங்களுக்கு போகும் பொழுது அலங்காரங்கள் செய்வது தவறில்லை. செய்யும் பணி சமுதாயப்பணி. அப்பொழுது அலங்கரித்துக் கொண்டு சென்றால் ஆளைக் காட்டிப் பணம் கேட்பது போலத்தான் நினைப்பார்கள். அணுகலும் மோசமாகத்தான் இருக்கும். அதில் சுதந்திரம் பேசுவது சரியா?

எதுவும் அந்தச் சூழலுக்குப் பொருந்தி இருக்க வேண்டும். ஒன்று தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது வருவதை எதிர்கொள்ள வேண்டும். புலம்புவதில் அர்த்தமில்லை.

அவர் என் தோழியுடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. என்னைப்பற்றி யும் பேச ஆரம்பித்தார்.

“இப்பொழுது கூட இந்த சீதாவைப் பாருங்கள் புடவையும் ரவிக்கையும் பொருத்தமான நிறத்தில் இருக்கின்றதா? அவளுக்குத் தன்னைப்பற்றிய சிந்தனையே கிடையாது. அதுவும் சரி என்று சொல்ல மாட்டேன். அலுவலகங்களுக்குப் போகும் பொழுது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிய வேண்டும். நான் அலங்காரத்தைச் சொல்லவில்லை. ஆனாலும் அவள் பழகும் முறையும் அவள் பேச்சும் அவள் குறையை மறந்து அவளுடன் எல்லோரும் பழகுகின்றனர்.

தோற்றத்தால் மரியாதையும் பெறலாம் மரியாதையையும் இழக்கலாம். எப்படி தோற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அனுபவத்தில் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் என்று எதையும் செய்தல் கூடாது. கடல் சுதந்திரம் வேண்டிக் கரையைத் தாண்டினால் என்னவாகும்?

இந்த சந்திப்பில் என் தோழி மாறி விட்டாள். ஆனால் என்னால் மாற முடியவில்லை. இப்பொழுதும் பல நாடுகள் சுற்றிய பொழுதும் உடைகள், அலங்காரத்தில் எனக்கு அக்கறை வரவில்லை. இது என் சுபாவம்

நான் கேட்டுக் கொண்டும் ஒரு பெண்ணுக்குப் புத்திமதி கூற அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் என்னைக் கேள்விகள் கேட்டு
அதையே பதில்களாகக் காண வழிவகுத்து விட்டார். பெண்மனத்தைப் புண்படுத்தமாட்டார்.

அவரது வாழ்க்கைத் துணைவிகள் இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் மூவரிடமும் பேசிவிட்டுத்
தான் வீட்டைவிட்டுப் புறப்படுவேன். தனித்தனியாகச் சில வினாடிகளாவது அரட்டையடிக்க வேண்டும். என் தோழி ருக்குமணி அவர் வீட்டுக்கருகில் குடி இருக்கின்றாள். இப்பொழுது அவளும் அந்தக் குடும்பத்துடன் பழக ஆரம்பித்திருக்கின்றாள். அவள் எப்பொழுது சென்றாலும் மூவரும் என்னைப்பற்றி விசாரிப்பதைக் கண்டு அவளுக்கு வியப்பு. உடனே எனக்கும் தகவல் அனுப்பிவிடுவாள்.

சென்னையில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த நாடக் குழுக்களில் ஒன்றான சேஷாத்திரி குழு நாடங்களில் ஜெயகவுசல்யா நடித்துவந்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். படித்தவர். ஜெயகாந்தனுக்கு உதவியாளராக வந்தார்.

கவுசல்யாவும் சிறந்த சிந்தனையாளர். அவர் பேசினால் சில நேரங்களில் ஜெயகாந்தனுடன் பேசுகின்றோமோ என்று தோன்றும். அந்தப் பெண்ணைத் துணைவியாக வரவேண்டும் என்று விரும்பினார் ஜெயகாந்தன்.. நினைப்பு வந்த அதே வினாடியில் தன் எண்ணத்தை கவுசல்யாவிடம் வெளியிட்டார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கொடுத்துவிட்டார். ஒரு நொடியில் நடந்த ஒப்பந்தம். உறவிலும் இணைந்தனர்.

ஜெயகாந்தனுக்கு காதல் செய்வது, அதற்காகக் காத்திருப்பது, பின்னால் ஓடுவது இவைகளில் பொறுமை கிடையாது. எண்ணத்திற்கு முரணாகத் தெரிந்தால் விலகி விடுவார். மனத்தில் சுமையாக்கி அல்லல்பட மாட்டார்.

அவர் முதல் திருமணத்தைப் பற்றியும் பேசியிருக்கின்றார்.

மாமன் மகள். அதாவது அவருக்கு முறைப்பெண். மாமனோ
இவருடைய கல்விக் குறையையும், நிலையான வேலையின்மையையும் அடிக்கடி சுட்டிக் காட்டிப் பேசி இருக்கின்றார். எப்படி இவனுக்குத் தன் மகளைக் கொடுப்பது என்றும் சொல்லி இருக்கின்றார். நம் ஜெயகாந்தான் நேராக தன் முறைப் பெண்ணிடம் சென்றார்.

“இங்கே பாரு, உங்கப்பா சொல்றது சரி. எனக்கு நிலையான வேலை இல்லை. அதனால் நீ படித்து சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிக் கொள் உனக்கு வேலை கிடைத்தவுடன் நமக்குக் கல்யாணம்”

மனத்தில் நினைத்து விட்டால் அதைச் சொல்லிவிட வேண்டும். அத்தை மகன் சொல்லிவிட்டாரே! முறைப்பெண்ணும் படித்து டீச்சராகி விட்டார். மாமனுக்குப் பாசம் இல்லாமல் போகுமா? உடனே திருமணத்தை நடத்தி வைத்தார்.

கவுசல்யாவை நடிக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. அவருக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நாடகத்திற்கு கவுசல்யா நடிக்கப் போகும் காலங்களில் இவரே கொண்டுபோய் விடுவார். கவுசல்யாவாகவே நடிப்பதை நிறுத்தினார். வீட்டில் பெண்களை மரியாதையுடன் நடத்துவார்.
சுதந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரிந்த குடும்பம்.

அவரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவைகளை எழுதுகின்றேன்.

கடைசியாக அவர் வீட்டிற்குச் சென்ற பொழுது என்னுடன் நிலாரசிகணும் சஹாராத் தென்றலும் வந்திருந்தனர். அப்பொழுது நடந்த சுவையான காட்சிகள் சில காணலாம். அடுத்துப் பார்ப்போம்.

தொடரும்

++++++++++++++++++++++++++
“seethaalakshmi subramanian” seethaalakshmi@gmail.com

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

சீதாலட்சுமி


குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை? அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம்.

ஜெயகாந்தனை முதலில் ஏன் தேர்ந்தெடுத்தேன்? என்னைப் புரிந்து கொண்ட நண்பர். சமுதாயத்தில் அல்லல்படும் மக்களிடம் பரிவு கொண்டவர். அவரைப்பற்றி எழுதும் பொழுது சமுதாயத்தின் பல கோணங்களை என்னால் உடன் காட்ட முடியும். அதனால்தான் அவர் பெயர் மட்டும் எழுதித் தொடங்காமல் என் குறிப்பேடு பெயரையும் இணைத்துக் கொண்டேன். பல செய்திகளைத் தர முடிகின்றது.

பேராசிரியர் அரசு அவர்கள் ஜெயகாந்தனின் உரையாடலைப் பற்றி எழுதச் சொன்னார். சந்திப்புகளின் போது நடந்தவைகளுடன், அவர் கதைகளில் வருபவைகளையும் எடுத்துக் காட்டினேன். மக்களிடம் அவர் அணுகுமுறையைப் பயணத்தில் பார்க்க முடிந்தது.

“அக்ரஹாரத்தில் பூனை” எழுதிய பல ஆண்டுகளூக்குப் பிறகு ஆடு வெட்டப் படும் களம் சென்றாரே, ஏன்? எண்ணியதை ஒப்பிட்டுப் பார்க்கவா? அல்லது அக்காட்சியை முழுமையாக நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பா?

அவர் ஆய்வுகள் செய்வதில்லை என்று ஒரு சிலர் கூறுவர். அவருக்கு அவைகள் தேவையில்லை. எங்கோ பார்த்து, உணர்ந்தவைகள் அவர் எழுத்தில் வந்து கலந்துவிடுகின்றன. ஏதாவது கற்பனையில் எழுதி விட்டாலும் அக்காட்சியைத் தேடிச் சென்று பார்க்கின்றாரே? இதற்கு மேல் என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும்?

பிராமணர்கள் எழுதும் பத்திரிகைகளில் எழுதவதால் அவர் அந்த பேச்சு வழக்கில் எழுதுகின்றார் என்று சொல்வதையும் கேட்டிருக்கின்றேன்.

ஒரு சம்பவம் கூற வேண்டும்.

ஜெயகாந்தன் நான் வேலை பார்க்கும் ஊர்களுக்கு வந்தால் என் வீட்டிற்கு வராமல் போகமாட்டார். வீட்டுக்கு வந்தால் என் அம்மாவுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். என்னுடன் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கும் பொழுது பேசலாமாம். என் அம்மாவுடன் பேசுவது அப்படி முடியுமா?
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டால் அதுவே ஒரு கதையாகிவிடும்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

“பாப்பா, இவர் அக்கிரஹாரத்துப் பிள்ளையா?”

“இல்லேம்மா, இவர் அக்கிரஹாரத்தில் வளர்ந்த பிள்ளை”

அப்படியென்றால் குப்பத்து பாஷை பேசுகின்றாரே? குப்பத்தில் வளர்ந்தவரா?

“புதுச்செருப்பு கடிக்கும்” கதையில் ஓர் கலப்பட பாஷை பேசுகின்றாரே, அங்கே எப்படிப் போனார்?

முஸ்லீம்களின் உரையாடல்கள் சரளமாக வருகின்றதே, அங்கும் வாழ்ந்திருப்பாரோ?

ஓர் எழுத்தாளன் ஒன்றை எழுதும் பொழுது அந்தப் பாத்திரத்துடன், அவன் வாழும் சூழலுடன் ஒன்றிப்போய் விடுவான். எழுதும் பொழுது என்றோ பதிந்தவைகள், அவன் உணர்வில் கலந்தவைகள் அவனையும் அறியாமல் குதித்தோடிவந்துவிடும். உதாரணத்திற்காகச் சிலவற்றைமட்டும் எடுத்துக் காட்டினேன். இன்னும் பல கதைகள்பற்றி எழுத முடியவில் லையே என்ற குறை எனக்குண்டு. அவரைப்பற்றி எழுதியவர்கள் அதிகம்.
அந்த விமர்சனங்களே கூட இலக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

“இந்தம்மா என்ன ஒரே அடியாகப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!”
என்று தோன்றினால் அது தவறில்லை. மீண்டும் சொல்லுகின்றேன். எங்களுக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக அரசியலில் நாங்கள் ஒத்துப் போனதில்லை. ஆனாலும் சில தருணங்களில் ஒத்த உணர்வு வந்ததையும் மறுக்கவில்லை.

காங்கிரஸ் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தகாலம், அரசியலை வைத்து ஒருவரை விமர்சிப்பார். நானோ அந்த அரசியல் வாதியிடமும் ஏதாவது நல்லது தெரிந்தால் அதைக் குறித்துப் பேசுவேன். அரசியல் காரணமாக ஒட்டு மொத்தமாக ஒருவரைக் கண்டனம் செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படித்தான் பேச வேண்டும். நான் அரசியல்வாதியல்ல. சுதந்திரமாக எண்ணலாம், எழுதலாம்.

ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும் கூறவிரும்புகின்றேன்

எமெர்ஜென்சி காலம். மறைந்த திருமதி. இந்திராகாந்தியை அவர் போற்றிப் புகழ்ந்த காலம். அவருக்குள் பெருந்தலைவர் காமராஜர் மீதும் பாசம் உண்டு. சிறிது காலம் அவர் வெளியில் வராமல் இருந்த பொழுது இவர் தவித்த தவிப்பை நான் நேரில் கண்டிருக்கின்றேன். “வீட்டுச் சிறையாக இருக்குமோ?” என்று நான் கேட்டதற்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பக்கம் அம்மையார். இன்னொருபக்கம் பெருந்தலைவர். என்ன சொல்ல முடியும்!?

தர்ம சங்கடம் இதுதான்.

திராவிடக் கட்சியைப் பெரிதும் விமர்சித்தவர்.

கலைஞரைப் பற்றி அப்பொழுது பேசிய பேச்சுக்கள் எல்லாம் தெரிந்த கலைஞர் எப்படித்தான் கூப்பிட்டு பணமுடிப்பு கொடுத்தாரோ!?

கலைஞர் அவர்களின் அரசியலில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனாலும் அவரின் வேறு சில தன்மைகளைப் பார்த்து ரசித்தவள் நான். எனவே ஜெயகாந்தனுடன் அந்தக்காலத்திலேயே வாக்குவாதம்
செய்திருக்கின்றேன்.

ஜெயகாந்தன் பணமுடிப்பைப் பெற்றதும், அவர் மகனுக்கு வேலை பெற்றதும், அவர் கலைஞரிடம் விலை போய்விட்டார் என்ற கடுமையான விமர்சனங்களுக்காளானார். உடல் நிலை மோசமாகவும் அவருடைய மருத்துவச் செலவு முழுவதும் கலைஞர் அவர்கள் மேற் கொண்டார். அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன். உடனே இதுபற்றிய என் கருத்தை அன்றே பதிவு செய்தேன்

கலைஞர் செய்த உதவிகளால் ஜெயகாந்தன் திராவிடக் கழகத்திற்குப் பிரச்சார பீரங்கியாகிவிட மாட்டார். இது எனக்குத் தெரியும். ஏன் கலைஞருக்கும் தெரியும். அவர் ஏன் உதவிகள் செய்தார்? அவரும் ஜெயகாந்தனின் ரசிகன். இதை அன்றே எழுதினேன்.

சமீபத்தில் கலைஞர் ஒரு இடத்தில் சொன்னது “விரைவில் ஓய்வு பெற்று அதன் பின் ஜெயக்காந்தனுடன் பேசிப் பொழுதைக் கழிக்க விரும்பு கின்றேன்” என்று கூறியது பத்திரிகைகளில் வந்தது. அதே போன்று கவிஞர் வைரமுத்துவுடனும் பேசிக் காலம் கழிக்க விரும்புவதையும் சொல்லி இருக்கின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பன் முகங்கள் உண்டு.

கலைஞர் தமிழை ரசிப்பார்

கலைகளை ரசிப்பார்

சினிமாவை ரசிப்பார்

அரட்டையை ரசிப்பார்

அவரும் ஓர் சாதாரண மனிதன்.

அதைப்புரிந்து கொண்டுதான் அன்றே அவரை ஜெயகாந்தனின் ரசிகண் என்றேன்.

இன்னொரு தகவல் கூற வேண்டும்

குமுதம் பத்திரிகையில் அரசியல் நிருபராகப் பணியாற்றியவர் பால்யூ அவர்கள். கழகத்திற்கு அந்த பத்திரிகை ஒத்துவராத ஒன்று. பால்யூ ஓய்வு பெற்றபின் நோய்வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு நாள் அவரைக் காண திரு வீரமணி அவர்கள் சென்றிருந்தார். எல்லா அரசியல் தலைவர் களிடமும் நல்ல பெயர் எடுத்தவர் பால்யூ. எனவேதான் திரு வீரமணி, வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்துச் சென்றார். அதுமட்டுமல்ல, பால்யூவின் உடல் நிலைபற்றி கலைஞரிடம் கூறியிருக்கின்றார். உடனே கலைஞர் அவர்கள் பால்யூவுடன் தொலை பேசியில் நலம் விசாரித்திருக் கின்றார். அத்துடன் நிதி உதவியும் செய்திருக்கின்றார். இது பத்திரிகையில் வராத செய்தி. பால்யூவே என்னிடம் கூறிய செய்தி.

ஆதனால்தான் சொல்லுகின்றேன். ஒரு மனிதனை ஒட்டு மொத்தமாக என்னால் வெறுத்து ஒதுக்க முடியாது. தவறு காணும் பொழுது நிச்சயம் சொல்லத் தயங்கியதும் இல்லை.

சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார்.

“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள், போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை.”

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது
எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே! அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள்.

தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்.”

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமதி வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜெயகாந்தனை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு..

அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி
ராமாத்தாள் அவர்கள். அரசு சார்புடையது.

நான் இருப்பது அமெரிக்கா. தமிழகத்தில் வரும் செய்திகள் பல உடனே
எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜெயகாந்தன் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம்.
நானும் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவள். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். ஆனால் சமுதாயப் பணிக்கு ஓய்வில்லை. ஏதோ ஒரு வடிவில் இப்பொழுதும் என்னால் முடிந்ததைச் செய்து வருகின்றேன். அந்த அக்கறையில் அவர்கள் நிலையைக் கவனித்து வருகின்றேன்.

பணி செய்யும் காலத்திலேயே ஒரு பிரச்சனையை ஆய்வு செய்யும் முறைகளுக்குப் பயிற்சி பெற்றவள்.

பெண்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்ன கருத்து சரியல்ல.
அது ஒரு மாயத் தோற்றம். பெற்றவர்களே தங்கள் மகளை ஊர்ப் பொதுமையாக ஆக்கும் கொடுமை மாறவில்லையே! பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு ஊருக்குப் பொது மகளாகக் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். சம்பவம் நடக்கும் பொழுது எங்கும் பரபரப்பு. ஏதேதோ
நடவடிக்கைகள். ஆனால் முடிவு என்ன என்று எத்தனை பேர்கள் தொடர்ந்து பார்த்தார்கள்? எங்கோ இருக்கும் எனக்குத் தெரிந்த உண்மை
அதே மண்ணில் இருப்பவர்களில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
இப்பொழுது அந்தச் சிறுமி பொது மகளாகிவிட்டாள்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நடத்திய போராட்டம், வாங்கிக் கொடுத்த சட்டம், அதன் பயனை இழந்து நடை முறையில் வேறு வடிவில் நடக்கின்றதே! சாதியை ஒழிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இந்தப் புது சாதியை ஒழிக்க என்ன செய்தார்கள்? மூடப்பழக்கத்தை ஒழிக்கின்றோம் என்று கூறி வலம் வருபவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஆரம்பத்தில் பத்திரிகை செய்திகளில் விளம்பரம் வந்தால் போதுமா? இதுதான் சமுதாயச் சீர்திருத்தமா?

எங்கள் பாதுகாப்பு இல்லங்களும் சேவை இல்லங்களும் நிறைந்து வழிகின்றதே, ஏன்? கணவன் மனைவிச் சண்டைகளைக் கவனிக்க ஒரு தனிப் பிரிவே இப்பொழுது எங்கள் துறையில் இயங்கி வருகின்றது. எத்தனை பிரச்சனைகள் எங்களைத் தேடிவருகின்றன. இன்னும் பெண்ணின் நிலைமை ஓர் சோதனைக் களமாக இருக்கின்றது. ஒரு சிலரின் முன்னேற்றத்தை வைத்து மொத்தக் கணக்காகக் காட்ட முடியாது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பெண்கள் கூட சுடிதார் போட்டுக் கொண்டு வலம் வரும் பொழுது அவர்கள் வசதியாக வாழ்வது போல் இருக்கும் தோற்றம் ஒரு மாயத் தோற்றம்.

அரசுப் பணியிலோ, தனியார் துறையிலோ பெண்களின் நிலை பல இடங்களில் ஊதிய வித்தியாசம், பதவி உயர்வு பெற பல தடுப்புச் சுவர்கள் இவைகள் இருப்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

சினிமா, தொலைக்காட்சி, மாடலிங் இவைகளில் பெண்கள் ஆடம்பரமாகத் தெரிகின்றார்கள். இவர்களில் எத்தனை பேர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கின்றது? நடிகைகளும் பெண்கள் இல்லையா? மனித உணர்வுகள் பொதுவானது.

பொருள், போகம், புகழ் இவைகளுக்கு ஆண்கள் அடிமையாக இருக்கின்றார்களே! இது மனிதனின் புத்தி. வீட்டுக்குள் இருக்கும் வரை
அவளை இது அண்டவில்லை. அவளும் மனித ஜாதி. அந்த பலஹீனம் அவளிடமும் வருவது இயல்பு. ஆனாலும் எல்லோரையும் அந்த வளையத்துக்குள் கொண்டு வந்தது சரியல்ல.

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இது சரியான களம் அல்ல.
அதுமட்டுமல்ல. இதுபற்றிப் பேச நிறைய இருக்கின்றது. தனி மேடை அமைத்து செய்ய வேண்டிய கச்சேரி.

ஜெயகாந்தனின் முழுப்பேச்சும் தெரியாது. ஆனாலும் இந்தக் கருத்துக் களுக்கு மற்றவர்கள் கொடுத்திருக்கும் மறுப்புகளையும் படித்து
என் கருத்தைத் தெரிவித்தேன். தமிழகம் செல்லும் பொழுது அவரிடம் நிச்சயம் இதுபற்றிப் பேசுவேன்.

சமீப காலமாக அவர் வெளியில் அதிகம் செல்ல முடியவில்லை.
பார்வையாளர்களையும் தவிர்த்து வருகின்றார். முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதும், முக்கியமானவர்களிடம் பேசுவதும் மட்டும் தொடர்கின்றாது. அவர் உடல் நிலைக்கு ஓய்வு தேவை. இந்த இடை வெளியால் மாற்றங்களின் தோற்றத்தை அவரால் சரியாக உணர முடியவில்லையா?

இப்பொழுது எங்களுக்குள் மோதல்.

அது சரி, சுதந்திர அடிமை என்று ஏன் கூறியிருக்கின்றார்? இந்த வார்த்தையால் அவரின் முழுக் கூற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது.

சிந்தித்தேன். அதுமட்டுமல்ல, ஒருவனிடம் இதைக் கூறி அவன் அபிப்பிராயத்தைக் கேட்டேன். ஜெயகாந்தன் கூறியதில் தவறில்லை
என்று கூறி, விளக்கமும் கொடுத்தான். அவன் வேறு யாருமல்ல.
அமெரிக்க மண்ணில், சுதந்திரக் காற்றில் வளரும் என் பேரன் தான் விளக்கம் கூறியது. அதுமட்டுமல்ல. அந்த விளக்க உரை என்னைச் சிந்திக்க வைத்தது.

அடுத்து அதன் விபரங்களைப் பார்க்கலாம்.

தொடரும்

++++++++++++++++
seethaalakshmi subramanian

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

சீதாலட்சுமி


மணி பெயருக்கேற்றவன்.

நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாகச் சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயாகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம்.

இப்பொழுது கிராமத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசினோம். நாங்கள் செல்ல வேண்டிய கிராமமும் வந்தது

மாலை நேரம். மஞ்சள் வெய்யில். நல்ல இதமான காற்று. ஊரின் நுழை வாயிலில் ஒரு மண்மேடு இருந்தது. அங்கே இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிக் காரை நிறுத்தினோம். ஜெயகாந்தன் மெதுவாக நடந்து சென்று அந்தப் பெரியவர்கள் பக்கம் போனார். இவர் வருவதைப் பார்த்த பெரியவர்கள் எழுந்திருக்க முயன்றனர். உடனே ஜெயகாந்தன் “உட்காருங்கோ” என்று கூறிவிட்டு அவரும் அவர்களுடன் மண் மேட்டில் உட்கார்ந்துவிட்டார்.

“என்னய்யா எங்க ஊர்ப்பக்கம், ஏதாவது விஷேசுமுங்களா?”

“இல்லே இல்லே. அந்தம்மா பெண்கள் குழந்தைகள் நலத்தில் வேலை பாக்கறவங்க. தடுப்பூசியெல்லாம் குழந்தைகளுக்குப் போடறாங்களாண்ணு கேட்க வந்திருக்காங்க.”

ஜெயகாந்தன் சாமர்த்தியமாக என் பணியைக் காரணம் காட்டிவிட்டார்

“பொம்புள்ளங்க வர்ர நேரம் தான்”

ஆமாம் கூலி வேலை முடித்து கிராமத்து ஜனங்கள் திரும்ப ஆரம்பித் திருந்தனர். (அதற்காகத்தானே இந்த நேரமாகப் பார்த்து வந்தது) காலித் தூக்குச் சட்டியைத் தோளில் தொங்கவிட்டு, சுள்ளிகள் கட்டைத் தலையில் சுமந்து கொண்டு வரும் பெண்களைப் பார்த்தேன்.

நான் ஜெயகாந்தனை விடுத்து மெதுவாக அவர்கள் பின்னால் போக ஆரம்பித்தேன். 25 ஆண்டுகள் அனுபவம். என்னால் மிகவும் எளிதாகப் பழகிட முடியும். உழைப்பிலே அசதி இருந்தாலும் அவர்களுடன் கூட நடந்த என்னிடமும் சரளமாகப் பேசிக் கொண்டு சென்றனர். மணியன், சாவி, பகீரதன் இன்னும் பலருடன் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். காருக்கருகில் நிற்கும் தோரணையில் மற்றவர்கள் ஒதுங்கி நின்றே பேசுவர். ஆனால் ஜெயகாந்தனோ அவர்களில் ஒருவராக உடன் உட்கார்ந்து விடுவார். அவர்கள் கொடுப்பதை முக மலர்ச்சியுடன் வாங்கிச் சாப்பிடுவார். அங்கே எந்த வேற்றுமையும் இருக்காது. அவருடன் சென்ற அனுபவங்களை நான் நேரில் பார்த்தவள்.

போகும் பாதையிலும் கண்ணில் படுவதை உடனே மனத்தில் படம் பிடித்து வைத்துக் கொள்வார். இது அவர் முயற்சியல்ல. அவர் இயல்பு. அந்த ஒன்றுதலினால்தான் உயிர்ப்புள்ள உரையாடல்களைக், காட்சிகளைக்
காட்ட முடிகின்றது. இவர் எழுத்துக்கு ஆய்வுகள் தேவையில்லை. மனித மனத்துடன் இணைய வேண்டும். அனுபங்களில் உளவியல் தானே புரிந்து விடும். ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் அவரைப்பற்றி எழுத வேண்டும். ஆனால் எழுதுபவர்கள் சரியான புரிதல்தன்மை கொண்டவராக இருத்தல் அவசியம்.

ஜெயகாந்தன் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சில வீடுகளுக்குச் சென்று பேசிவிட்டு அவர்கள் சமையல் முடிக்கவும்
பேசலாம் என்று கூறிவிட்டு மண் மேட்டுப் பக்கம் வந்தேன். அதே நேரம்
பஸ்ஸிலிருந்து இறங்கிய இருவர் அங்கே வந்தனர். ஜெயகாந்தனைப் பார்க்கவும், ‘ஐயா, நீங்களா?” என்று ஜெயகாந்தனிடம் கேட்டுவிட்டு அவ்வூர்ப் பெரியவர்களிடம், “இந்த ஐயா கதை எழுதறவரு. அதுவும் நம்ம ஏழை ஜனங்களைப் பத்தி அதிகமாக எழுதறவரு” என்றார்கள்.
(ஜெயகாந்தன் கதை படித்திருந்தவர் ஒருவர் வந்தது மிகவும் உபயோகமாக இருந்தது. வாலிபர்களையும் வசீகரம் செய்யும் ஓர் எழுத்தாளர்)

“ஓ, அப்படியா, சந்தோஷம் ஐயா. கொஞ்ச நாளா பத்திரிகைக்காரங்க தொல்லை அதிகமா போச்சு. அதான் ஊருக்குப் புதுசா வர்ரவங்ககிட்டே பேசக் கூட யோசிக்க வேண்டியிருக்கு.”

பேசும்பொழுது உங்க தயக்கத்திலேருந்து புரிஞ்சுகிட்டேன். அந்தம்மா பேசிட்டு வரவும் நாங்க கிளம்பிடறோம். உங்களுக்குக் கஷ்டம் வேண்டாம்

ஐயோ, அப்படி இல்லேங்க. அதுவும் எங்க மேலே இரக்கப் பட்டு, எங்க கஷ்டத்தை எழுதறவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவோமா?

எப்படியோ பேச்சு சரளமாக ஆரம்பித்துவிட்டது. மனம் விட்டுப் பேச ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நடந்த கதையையும் கூறிவிட்டனர். இளைஞர்களின் ஆத்திரம் புரிந்தது.

கலந்துரையாடலின் சுருக்கம் இதுதான்.

அந்த ஊரில் தாழத்தப்பட்ட வகுப்பினர் மட்டும் வாழ்ந்து கொண்டி ருந்தனர். சில இளைஞர்கள் வெளியூர் சென்று படித்து இப்பொழுது வெளியூரில் வேலையும் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒருவன்
கொஞ்ச தூரத்தில் இருந்த ஊரில், உயர் குலப் பெண் ஒருத்தியைக் காதலித்துவிட்டான். மறைமுகச் சந்திப்புகள் தொடர்ந்தன. கொஞ்சம் எல்லை மீறிப் பழகியதில் அந்தப் பெண் கர்ப்பவதியாகிவிட்டாள்.
(இந்தச் செய்தி மட்டும் நான் பெண்களிடம் அறிந்தது.)

அந்த ஊர்க்காரர்களுக்கு இவர்கள் காதல் விஷயம் தெரிந்ததவுடன் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. பையனைப் பிடித்து கொன்றுவிடத் துடித்தனர். சூழலைப் புரிந்து கொண்ட இளைஞன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஆனால் அந்த ஊர்க்காரர்கள் கிராமத்தில் வைத்துக் கொண்டு மறைக்கின்றார்கள் என நினைத்து கூட்டமாக வந்து, “அவனை எங்களிடம் கொடுக்க வேண்டும். அல்லது ஊரையே கொளுத்தி
விடுவோம்,” என்று கூச்சலிட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். இதனால் மிரட்டலும் அடிதடிக் கலாட்டாவும் தொடர ஆரம்பித்திருக்கின்றது. செய்தி வெளியே கசியவும் பிரச்சனை பெரிதாகப் பேசப்பட ஆரம்பித்துவிட்டது.

சம்பந்தப்பட்டவன் கிராமத்தில் இல்லை. செய்தியும் வெளிவந்துவிட்டது. விஷயத்தை ஆறப்போட்டுச் செய்யலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம்.
ஆனால் என்றோ ஒரு நாள் பிரச்சனை பெரிதாகும் என நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த வழிகளைச் செய்து ஊரை அடக்கி வைத்துவிட்டனர். இப்பொழுது இதுவரை எங்கும் பிரச்சனை இல்லை. ஒரு காதல், இரு ஊர்களின் சாதிச் சண்டையானது. நீறு பூத்த நெருப்பாக அவ்வப்பொழுது புகைந்து கொண்டிருக்கின்றது. யாரும் ஊதிவிடாமல் இருந்தால் புகை அடங்கிவிடும்

ஜெயகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி நான் உட்கார்ந்திருந்தேன். அவருக்கு முதலில் ஓர் குவளையில் டீகொண்டு வந்து கொடுத்தார்கள். பின்னால் ஓர் கலயத்தில் சுடு கஞ்சியும் வந்தது. அவரும் மறுக்காமல் அவர்கள் கொடுப்பதை வாங்கி ருசித்துச் சாப்பிட்டார்.

ஜெயகாந்தன் ஏழைகளுடன் கலந்துறைபவர். அவர்களில் ஒருவராக
ஆகிவிடுவதால் எந்த தயக்கமும் இல்லாமல் அவர்கள் அவருடன் மனம்விட்டுப் பேசுவதும் சிரிப்பதுவும் இயல்பாகின்றது. குடிசைகளுக்குள் போவதில் அவர் தயங்கியதே இல்லை. விளம்பரத்திற்காக ஏழைகளைப் பார்க்கப் போகவில்லை. அதனால்தான் அவர் கதைகளில் பிச்சைக்காரன், இடுகாட்டுப் புலையன், கசாப்புக் கடைக்காரர் போன்றவர்களை அப்படியே காட்ட முடிகின்றது.

கற்பனைக் குதிரையில் போய்க் கொண்டிருந்த என்னை அருகில் நடந்த ஒரு பேச்சு இழுத்துவிட்டது.

இளைஞன் ஒருவன் ஆத்திரத்துடன் முணங்கிக் கொண்டிருந்தான். அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.

மனுஷன் புறக்கும் போது சாதி கிடையாதுன்னு சொல்லுவாங்க. எப்படியோ வந்தாச்சு. அப்போக் கூட இப்படி சண்டை வல்லே. இப்போ நல்லது செய்யறதா நினைச்சு தப்பு பண்ணிகிட்டு வராங்க. அதனாலே சாதிச் சண்டை இப்போ அதிகமாய்டுத்து.

நாம சும்மா இருக்கறதா ?

சாகறது நல்லதாப்பா ? அவங்க பண பலம், ஆள்பலம் எல்லாம் உள்ளவங்க. நாமதான் நிறைய சாவோம். நீங்க நல்லா படிங்க. படிப்பு ஒண்ணுதான் நம்ம கஷ்டத்தைப் போக்கும். பள்ளிக் கூடத்திலே ஒண்ணத்தானே உட்காருதீங்க. எல்லாம் காலப் போக்கில் சரியாகும். கட்சிக்காரங்க விளையாட்டுலே மனுஷன் சாகக் கூடாதுப்பா.

அவர் படித்தவராகத் தெரியவில்லை. படிப்பைவிட அனுபவங்கள் மனிதனுக்கு எப்படி தெளிவைக் கொடுக்கின்றது! கிராமத்து மண்மேட்டில் உபதேசப் பொன் மொழிகள்!

மீண்டும் ஜெயகாந்தனின் கதையில் வரும் ஓர் காட்சி மனக் கண்முன் தோன்றியது.

பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மாந்திரிகத் தொழில் செய்யும் ஓர் பாபா, ஒரு கிராமத்தானிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.

“மந்திரம் மாயம் எல்லாம் ஒருபக்கம் தள்ளுய்யா. வாக்கு சுத்தம் வேணும்.
சுத்தமான வாக்குதான் மந்திரம். மனசு சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, இவனே அழிச்சுடணும், அவனெ ஒழிச்சுடணூம்னு நெனக்கிற மனசு இருக்கே – அதான்யா ஷைத்தான். ஷைத்தான் இங்கே கீறான்யா
இங்கே.! வேறே எங்கே கீறான்? ஆண்டவனும் இங்கேதான் கீறான். நல்ல நெனப்பூ ஆண்டவன். கெட்ட நெனப்பூ ஷைத்தான், என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.

“துட்டுக்கோசரம் வவுத்துக்காக அக்குரமம் பண்றது நம்ம தொயில் இல்லே”

தன் தொழில்பற்றி விபரம் கூறிவிட்டு மேலும் தொடர்கிறார்.

இன்னொருத்தனுக்கு கெடுதி நெனக்காதே.நீ கெட்டுப்பூடுவே. நல்லதே நெனை. ஆண்டவனைத் தியானம் பண்ணு. எதுக்கோசரம் ஆண்டவனைத் தியானம் பண்ணூ சொல்றேன். ஆண்டவனுக்கு அதினாலே லாபம் வருரது இல்லேடா, இல்லே. உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனக்கறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே. ஆண்டவனை நெனச்சுக் கிடான்னா மேலேயும் கீழேயும் பாத்துக்கினு யோசனை பண்றே. எல்லாத்துக்கும் நல்ல மனசு வேணும்.

ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகான்களையும் வேத வித்துக்களையும் நீதி நூல்களையும் நாடிச் சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம், அது மூர்மார்க்கட் நடைபாதையில் கூட வினியோகிக்கப்படுகிறது.

இந்த பாபா ஒரு ஞானவான் தான் “1972ல் ஜெயகாந்தன் எழுதிய “நடைபாதையில் ஞானோபதேசம்” கதையில் சில வரிகள் இப்போது நினைவில் வந்து மோதின. கிராமத்து மண்மேட்டிலும் உபதேசங்கள் வினியோகிக்கப்படும் வித்தை கண்டேன்.

இது காலத்திற்கேற்ற புது உபதேசம்

காரில் திரும்பும் பொழுது எங்களால் பேச முடியவில்லை. மனங்கள் கனத்துப் போயிருந்தன. இருவருக்கும் காரணங்கள் தெரிகின்றன. தெரிந்து என்ன பயன்?

மனிதன் தோன்றி இரண்டு லட்ச ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்பொழுது அவனுக்கு மொழி கிடையாது. ஆடையின்றித் திரிந்தான் உறவுகள் என்று ஒன்றில்லை. புலம்பெயர்ந்து சென்று கொண்டே இருந்தான். கூட்டம் பெருகப் பெருக அதிகார ஆசைகள் முதல் பல ஆசைகள் வந்தன. உழைக்கும் கூட்டம் பிரிக்கப் பட்டது.

காலச் சக்கரம் பல பிரிவினைகளைத் தோற்றுவித்தது. இப்பொழுது சலுகைகள் என்ற பெயரில் நூறாக இருந்தது நானூறாக ஆகிவிட்டது.

இது யார் குற்றம்?

படித்தவர்களும் சாதி வேண்டும் என்கின்றார்கள். நிர்வாகத்தில் இடங்களைக் குறுக்கினால் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்று நினைத்தனர். அதே அடிப்படையில் சாதிகளைப் பிரித்து நல்லது செய்ய முடியுமென நினைக்கின்றனர். இரண்டும் ஒன்றா?

பள்ளியில் எல்லா சாதிக் குழந்தைகளும் தான் படிக்க வருவார்கள். குழந்தைகள் என்றால் விளையாடுவது போல் சண்டைகளும் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பிஞ்சு மனங்களில் சாதி நினைத்து இவைகளைச் செய்ய வில்லை. மேல்வீட்டுக்காரன் பிள்ளை அடிபட்டுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும். ஒரு காலத்தில் குருகுலத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பு இன்று ஆசிரியர்களுக்கு இருக்கின்றதா? மேலை வீட்டுக் காரன் அதனைப் பெரிய சாதிச் சண்டையாக்கிவிடுவான். பிள்ளைச் சண்டை ஊர்ச் சண்டையாகிவிடும்.

ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிப் பள்ளி வர வேண்டும்.

கோயில் மரியாதையிலும் சண்டை வரும். எனவே ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கோயில் வேண்டும்.

தனித்தனி சுடுகாடும் வேண்டும்.

இத்தனைக்கும் இடம் வேண்டும்.

ஏற்கனவே விளை நிலங்கள் வீடுகளாகிக் கொண்டிருக்கின்றன.
விவசாயத்திற்கும் இடம் வேண்டும். என்னதான் பணம் இருந்தாலும் உணவுக்குத் தானியம் வேண்டாமா?

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?

இப்பொழுது ஒரு ஊர் என்று எடுத்துக் கொண்டால், பல கட்சிகள், பல ரசிகர் மன்றங்கள், பல சாதிகள் என்று இருக்கின்றன. யாரோ இருவருக் கிடையில் சண்டை வந்தால்கூட மேலே சொன்ன ஓர் குடைக்குள் வந்து அது பெரிதாகி, பக்கத்தில் பரவி, பல இடங்களிலும் கொந்தளிப்பு ஏற்படுகின்றதே?

இதுதான் சாதி ஒழிப்பா?

கடவுள் வேண்டாம். அவன் கல்லாகவே இருக்கட்டும். ஆனால் மனிதனுக்கு அமைதி வேண்டாமா? ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் சில தவறுகளைச் செய்து வருகின்றோம். நம்மை நாம் உணர வேண்டாமா?

மகாத்மா காந்திஜி எழுதிய சில வரிகள் நினைவிற்கு வருகின்றன

மகாத்மா காந்தியின் சரிதை . அதில்

“அவனோ பிடிவாதமாக இருந்ததோடு என்னையும் எதிர்த்து மிதமிஞ்சிப் போகப் பார்த்தான். கடைசியாக இருந்த ரூல் தடியை எடுத்து அவன் கையில் ஓர் அடி கொடுத்தேன். அவனை அடித்த போதே என் உடம்பெல்லாம் நடுங்கியது. பையன்கள் எல்லாருக்குமே இது புதிய அனுபவம். அந்தப் பையன் கதறி அழுதான். தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். அடிக்க வேண்டிய நிலமை எனக்கேற்பட்டதைக்
குறித்து நான் அடைந்த மன வேதனையை அவன் அறிந்து கொண்டான்.
அன்று நான் ரூல் தடியை உபயோகித்தது சரியா தவறா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாதவனாகவே இருக்கிறேன். ஒரு வேளை அது தவறாகவே இருக்கலாம். என்றாலும் பலாத்காரத்தை உபயோகித்ததற்காக நான் இன்னும் வருத்தப் படுகின்றேன். என்னுள் இருக்கும் ஆன்ம உணர்ச்சிக்குப் பதிலாக மிருக உணர்ச்சியையே காட்டிவிட்டதாக நான் அஞ்சுகிறேன்.”

தன் தவறை உணர்வது அரிய செயல். அதிலும் அதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது மிகவும் அரிய செயல். இதிலும் நாம் என்ன செய்கின்றோம்?

நாம் தவறே செய்வதில்லை என்று சாதிக்கின்றோம். அத்துடனும் நிற்கவில்லை. காந்திஜிக்கு “மகாத்மா” என்ற பெயர் சரியா என்று கேலி பேசுகின்றோம். அவரவர்க்கு அவரவர் தலைவர்கள், பிடித்தமானவர்கள் என்றிருக்கின்றார்கள். தாராளமாக வானளாவப் புகழ்ந்து கொள்ளட்டும். பிறரைத் தூற்றி இன்பம் காண்பது சரியா? எந்த அளவு காழ்ப்பு உணர்ச்சிகளை வளர்த்து வருகின்றோம் ?

இதே சமுதாயத்தில்தான் நம் குழந்தைகள் வளர வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ வேண்டிய சமுதாயம் இது. பணமும் அதிகாரமும் இருந்தால் போதும் என்று நினைப்பது சரியா?

புத்தியைத் தீட்ட வேண்டியவன் கத்தியைத் தீட்டப் பழகுவான். வன்முறையும், வக்கிர புத்தியும், செக்ஸ் வெறியும் பிள்ளைப் பருவத்திலேயே ஊட்டுவது கொடுமையில்லையா? ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

பிறர் மீது பழி சுமத்தித் திரிவதைவிட ஒவ்வொருவரும் தன்னைச் சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அழிந்துவரும் மனித நேயத்தைக் காக்க வேண்டும்.

காட்டுத்தீ போல் காழ்ப்புணர்ச்சி பரவி வருவதைக் கண்டால் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவனும் கவலைப் படுவான்.

கவலைப்படவேண்டும்.

கார் மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் நெஞ்சங்களில்
எண்ணங்கள் அழுத்தியதால் இருவராலும் பேச முடியவில்லை. வெகு நேரம் கழித்துப் பேசினோம். அப்பொழுதும் சமுதாயத்தைப் பற்றி பேசவில்லை. மதுரைப் பயணம் முடிந்து சென்னைக்குப் புறப்படும் வரை நாங்கள் சாதாரணமாக எங்கள் குடும்பங்களைப் பற்றித்தான் பேசினோம்.
பின்னால் என்றோ ஒரு நாள் இந்த அழுத்தம் வெடிக்கும்.

(தொடரும்)

++++++++++++++++++++++++++++++

seethaalakshmi@gmail.com

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

சீதாலட்சுமி


“இதயம் பேசுகிறது” மணியன்.

என் அரிய நண்பர்.

அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது.

கரும்பு தின்னக் கூலியா என்ற பழமொழிக் கேற்ப இருந்தது அந்த கட்டளை. ஆம் எங்கள் நண்பர் ஜெயகாந்தன் மதுரைக்கு வருகின்றார். அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் போகும் இடங்களுக் கெல்லாம் நானும் உடன் செல்ல வேண்டும். அவர் சென்னைக்கு ரயில் ஏறும் வரை அவர் வசதிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மணியன் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் டி.வி.எஸ் விருந்தினர் இல்லத்தில்தான் தங்குவார். அப்பொழுது டி.வி. எஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் திரு.தேசிகர். சாமர்த்தியசாலி. நான் அப்பொழுது மதுரையில் உலக வங்கித் திட்டத்தில் உதவி இயக்குனராக
வேலை பார்த்து வந்தேன். தேசிகர் எனக்கும் நன்றாகத் தெரிந்தவர்.

இது நடந்த வருடம் 1981.

ஜெயகாந்தனுக்கு அதே விருந்தினர் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிறுவத்தினரே காரும் கொடுத்திருந்தார்கள்.

ஜெயகாந்தனுடன் சில நாட்கள்.

இந்த சிங்கத்தை எப்படிச் சமாளிக்கப் போகின்றேன் என்று மணியனிடம் கேட்ட பொழுது, “ரொம்ப அலட்டிக்காதே. அந்த சிங்கத்தைச் சமாளிக்கும் சாமர்த்தியம் உனக்குண்டுன்னு தெரியும்” என்று கூறி என்னை அடக்கி விட்டார்.

ஜெயகாந்தனை வரவேற்க ரயிலடிக்குச் சென்றிருந்தேன். அவருடன் இன்னொருவரும் வந்தார். பெயர் மறந்துவிட்டேன். மணி என்று வைத்துக் கொள்வோம். அடையாளத்திற்கு ஒரு பெயர். ஜெயகாந்தனின் தேவைகளைக் கவனிக்க ஒருவர் உடன் கூட்டிவந்தது கண்டு நான் புன்னகைத்தேன். அவரும் என் பார்வை போன திக்கையும் பார்த்து என் எண்ணங்களின் ஓட்டத்தையும் புரிந்து கொண்டு ஒரு சிரிப்பைக் காட்டினார். இருவரும் சிரிப்புகளால் எண்ணங்களைப் பறிமாறிக் கொண்டோம்.

விருந்தினர் இல்லத்தில் அவரை விட்டு விட்டு மதிய உணவு நேரம் வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். எனக்குக் காலையில் கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடன் இருக்க முடியவில்லை.

என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய பொழுது அதற்குள் சிலர் அங்கு கூடி அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.. ஜெயகாந்தன் வருகையைச் சிலருக்குத் தேசிகன் கூறியதன் விளைவு. பெயரில் காந்தம். அவருடன் கலந்துரையாட எத்தனை ஆர்வம். இக்காட்சியை அவர் எங்கு சென்றாலும் கண்டிருக்கின்றேன்.

நாங்கள் கிளம்பியாக வேண்டும்.

ஒரு கிராமத்துப் பிரச்சனை

அந்தப் பிரச்சனை காட்டுத் தீயைப்போல் பரவிவிடும் போல் இருந்தது. பத்திரிக்கைக்காரர்கள் பிரச்சனைக்குப் பல வர்ணங்கள் தீட்டிக் கொண்டி ருந்தனர். மணியனுக்கும் ஆர்வம். அதன் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்கு ஜெயகாந்தனே பொருத்தமானவர் என்று நினைத்து அனுப்பியிருந்தார். அவர்கள் இருவரும் நண்பர்கள். எனவே அவரும் மறுப்பு கூறாமல் புறப்பட்டு விட்டார்.

மதிய உணவு சாப்பிட்டுப் புறப்படப் பிற்பகல் மூன்று மணியாகி விட்டது.

கார் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அவரவர் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரமல்ல. சில மணி நேரம்
அப்படி அமர்ந்திருந்தோம். இருவரும் சுயநிலைக்கு வந்த பின்னரும் அவர் என்னுடைய புதிய பணிகளைப் பற்றித்தான் விசாரித்தார்.

சில குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றி பேசினோம்.

நாங்கள் போக வேண்டிய முதல் இடம் வந்தது. அங்கே சந்திக்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு நேராகக் குற்றாலம் சென்றோம்.
அங்கே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இரவு 8.30 மணி.

இறங்கியவுடன் ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வைத்தார். முன்னதாக இது பயணத்தில் சேர்க்கப்பட வில்லை. திடீரென்று கேட்கவும் அப்படியே அதிர்ந்து போனேன்

“சீதாலட்சுமி, காலையில் நான் ஒரு கசாப்பு கடைக்குப் போக வேண்டும். ஆடு வெட்டும் முன் போக வேண்டும். சாயபுவிடம் முன்னதாகப் பேச வேண்டும். ஆடு வெட்டும் பொழுதும் இருக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்.”

அவர் இதனைக் கேட்ட நேரத்தைப் பாருங்கள். இதற்கு மேல் நான் தேடிப்போய் ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரையிலேயே சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா? அவரை எப்படித் திட்டுவது? மணியனைத் திட்ட நினைத்தாலும் அவரும் சென்னையில் இருக்கின்றார். மறுக்கவும் மனமில்லை. பெண்ணால் முடியவில்லை என்று நினைத்துவிட்டால் என் தகுதி என்னவாகிறது? வீராப்பு பேசும் பொம்புள்ளையாச்சே.

அவரை மணியுடன் அவர் அறைக்கு அனுப்பிவிட்டு நான் கசாப்புகடை பற்றி விசாரிக்கச் சென்றேன். கண்டு பிடிக்காமல் இருப்பேனா? தமிழ் நாடே என்னுடையது போல் ஒரு திமிர். எப்படியோ எல்லா ஏற்பாடு களையும் செய்துவிட்டு தங்கும் இடம் வந்தேன்.

அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டவும் மணி திறந்தான். நான் உட்காரவில்லை.செய்த ஏற்பாடுகளைக் கூறிவிட்டு,
“கார் டிரைவருக்கும் சொல்லிவிட்டேன். மணியைக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வாருங்கள்” என்றேன்

“நீங்கள் வரவில்லையா?”

அவரை முறைத்துப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே,” சரி சரி,
நான் போய்விட்டு வருகின்றேன்,” என்று சொன்னார்.

நான் என் அறைக்குச் சென்றேன். வெளியில் அன்று நல்ல மழை. அருவிச் சத்தம் வேறு. ஏனோ இயற்கையே பேயாட்டம் போடுவது போன்று ஓர் உணர்வு. என் உணர்விற்கேற்ற பின்னணி இசை ‘மேஏஏஏஏ.’

ஐயோ, ஆடு அழுவது போன்று ஓர் எண்ணம். யாருக்காவது காயம் பட்டால் கூட அந்த இரத்தத்தைப் பார்க்க மாட்டேன். இப்பொழுது
ஓர் ஆட்டை யாரோ வெட்ட வருவது போலவும், அந்த ஆடு அழுவது போலவும் காட்சிகள் வந்து என் நிம்மதியைக் கெடுத்துவிட்டது. இப்படி ஒரு கோரிக்கை வைப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ கிராமத்திற்குச் செல்லப் போகின்றோம் என்று நினைத்து வந்தவளுக்கு இப்படி ஒரு இம்சையா?

இரவு நகர்ந்து பொழுதும் விடிந்தது.

நான் தூங்கவே இல்லை. சீக்கிரம் குளித்துவிட்டு மழையையும் மலையையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கற்பனை வரவில்லை.

ஜெயகாந்தனின் கதைகளை நினைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.
அவர் கதையொன்றின் காட்சி மனத் திரையில் ஓட ஆரம்பித்தது.

ஆண் குருவி பேனில் அடிபட்டு செத்து விழ, அதைப் பார்த்த பெண் குருவி பதைபதைத்ததை எழுதியிருந்தது நினைவிற்கு வந்தது.

ஜெயகாந்தன் காட்டும் காட்சி.

அந்தப் பெண் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே ..

“கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடைகெட்ட அரக்கனுக்கு மில்லாத சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படச்சவன்னு இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும் பொழுது பாசம்னும் ஒண்ணை உண்டாக்கு வானா ?”

இப்படி எழுதின ஜெயகாந்தன் ஏன் கொலைக் களத்துக்குப் போயிருக் கின்றார்? நானும் பல முறை கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன்.

ஜெயகாந்தன் ஏற்கனவே எழுதிய அக்கிரஹாரத்துப் பூனை கதையும் நினைவிற்கு வந்தது.

அக்கிரஹாரத்தில் ஒரு பூனை நிறைய சேட்டைகள் செய்து வந்தது. ஒருவனுக்கு அதன் கொட்டத்தை அடக்க வேண்டுமென்ற ஆத்திரம்.
கொன்றுவிடவும் நினைத்தான். ஆனால் கொல்ல முடியவில்லை. எனவே ஓர் கோணிக்குள் அடைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஓர் சாயபுவைப் பார்க்கின்றான்.

“பூனை ரொம்பவும் லூட்டி அடிக்கறது. அதுக்காக அதைக் கொன்னுடற துக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.”

“நீங்கதான் ஆடெல்லாம் வெட்டுவேளே. அதனாலே நீங்களே இதை வெட்டணும்”

“பூனையை இதுவரை நான் வெட்டினதில்லே. ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே. நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா ?”

“உவ்வே ! வெட்டிக் குழியிலே புதச்சுடலாம்.”

“நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் ? எல்லாரும் அதைத் தின்றாங்க.
அவங்க சாப்பிடல்லேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறீயா.”

“ஓ, பார்த்திருக்கேனே ! ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க.. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.”

“மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி.. ஒரு தொளிலை ஆரம்பிக் கறப்போ ஆண்டவனைத் தொழுவறது இல்லையா ? அதுதான். வெட்றது விளையாட்டில்லே. தம்பி. அதுதான் என் குடும்பத்துக்குக் கஞ்சி ஊத்தற தொழில். அதுக்காவ உங்கிட்டே காசு, கீசு கேக்கல்லே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே?”

“இன்னிக்குமட்டும் விளையாட்டுக்காக இந்த பூனையை வெட்டுங்களேன்”

“வெளையாட்டுக்குக் கொலை செய்யச் சொல்றியா ..த்சு த்சு ! வெளையாட்டுக்குக் கொலை செய்ய ஆரம்பிச்சா, கத்தி பூனையோடு நிக்காது. தம்பி, நான் உண்ணைக் கேட்கறேன், வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன ?”

எப்பேர்ப்பட்ட தத்துவம்!
எவ்வளவு எளிதாகக் காட்டிவிட்டார்!
புதிதாக இனி என்ன பார்க்கப் போகின்றார்?

இந்தக் கதை எழுதிய வருடம் 1968

மணி வந்து கூப்பிட்டான்.

ஜெயகாந்தன் ஏதோ யோக நிஷ்டையில் இருப்பது போன்று கண்மூடி அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்க்கவும் என் கோபம் பறந்துவிட்டது. அதுமட்டுமல்ல. அவர் முன்னால் பவ்யமாக உட்கார்ந்துவிட்டேன். அவராகப் பேசும்வரை காத்திருக்க வேண்டும் என்று என் மனக்குரல் அறிவித்தது.

அவர் கண்விழித்தாலும் அவர் மனம் எங்கோ சஞ்சரிப்பதை உணர முடிந்தது. குற்றாலத்தில் இன்னொரு பேரருவியைப் பார்க்கப் போகின்றேன் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது.

அருவி கொட்ட ஆரம்பித்தது.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்த விருந்து. அன்று பதிவு செய்ய என்னிடம் சாதனங்கள் இல்லை. நினைவிலே இருப்பதின் சுருக்கம் மட்டுமே தர முடிகின்றது.

சாயபுவுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். முதலிலேயே சொல்லி வைத்திருந்ததால் உரையாடல் திருப்திகரமாக நடந்திருக்கின்றது.

அவர் கண்ட காட்சியும் அவர் உணர்வுகளும்.

“சீதாலட்சுமி, ஆடு வரும் பொழுது கண்களைப் பார்த்தேன். அதன் அசைவுகளைப் பார்த்தேன். அதற்கு தான் சாகப் போகின்றோம் என்று தெரிந்திருக்கின்றது. ஆனால் பயமில்லாமல் மெதுவாக வந்து நின்றது.
“உனக்கு என் உயிர் தானே வேண்டும் எடுத்துக் கொள்” என்று சொல்வதைப் போல் நின்றது. அதற்கு ஐந்தறிவு என்கின்றார்கள். ஆனால் அதன் உள்ளுணர்வு மனிதனைப்போல் இருக்கின்றது. மனிதன் கூட மரணம் வரும் பொழுது பயப்படுவான். ஆனால் மிருகம் தயாராகிவிட்டது.
பற்றற்ற துறவியாய், ஞானியாய் கண்டேன்.”

உயிர் எடுக்கப் போகும் மனிதனிடம் கொலை வெறி இல்லை. சாத்வீக நிலை. கடமை வீரனாகத் தெரிந்தான். தன் தொழிலைத் தொடங்கும் முன்
இறைவனை வேண்டிய பொழுது அவனும் ஞானியாகவே தோன்றினான்.

அது கொலை பூமியல்ல. ஞான பூமி.

உயிர் கொடுப்பவன் யார் ?

உயிர் எடுப்பவன் யார் ?

உயிர் எங்கே போகின்றது?

விலகும் உயிரைப் பிடித்து நிறுத்த முடியுமா ?

உயிர் என்று வந்து விட்டால் அது மிருக உயிர், மனிதர் உயிர் என்று பேதம் உண்டா ?

தெளிவு பிறந்துவிட்டால் உயிர் உடலில் இருந்தாலும் அது வெளியில் பறந்தாலும் ஒன்றே என்ற நிலை வந்துவிடுகின்றது.

அது ஆடானாலும் புரிந்து கொண்டு அமைதி காத்தது.

“ஆட்டின் கண்கள் பேசின சீதாலட்சுமி. புல்லரித்துப் போனேன். வெட்டுண்ட தலை கீழே விழுந்த பொழுதும் அதன் விரிந்த கண்கள் வாழ்வின் அர்த்தத்தைக் கூறின.”

தன் கடமையை முடித்தவன் முகத்திலும் சாந்தம்

அந்த சூழல், அந்த நிகழ்வு அதிசயத்தைக் காட்டியதே யொழிய அச்சத்தைக் கொடுக்கவில்லை.

ஜெயகாந்தன் பேசிக் கொண்டே இருந்தார். ஏதோ ஞானோபதேசம் கேட்பதைப் போன்று அடக்கமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றைய பேச்சு போல் என்றும் அவரிடம் நான் கேட்டதில்லை. சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி விடுவார். திடீரென்று பேசுவார். பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்று நிறைய பேசினார். அலைபாயும் மனித உணர்வுகள் பற்றிக் கூறினார்.

வாயாடிப் பெண் நான். ஆனால் வாய்மூடி உட்கார்ந்திருந்தேன்.

அன்று அரங்கம் எடுத்துக் கொண்டது ஐந்து மணி நேரம்.

அவர் மட்டுமே பேசினார்.

அது ஒரு சுகானுபவம். அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கத் திறனில்லாப் பெண்மணி.
அற்புதங்கள் எப்பொழுதாவதுதான் நடக்கும்.

இன்றும் என் மதிப்பில் உயர்ந்தவர் ஜெயகாந்தன்.

அவருடைய பன்முகங்களைக் கண்டிருக்கின்றேன்.

(தொடரும்)

*****************************************
“seethaalakshmi Subramanian”

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

சீதாலட்சுமி


என்னை ஈர்த்த இன்னொரு கதை

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

சத்திரத்தில் ஓர் பிச்சைக்காரனைக் காட்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்தார், இப்பொழுது இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். மனிதன் இறுதியில் மண்ணிலே தானே கலந்து மறைகின்றான்.

ஜெயகாந்தனின் உலா, பட்டினங்களில் பங்களாக்களைச் சுற்றுவதைவிட குப்பத்துக்கும், இது போன்ற இடங்களுக்கும் போவதில் ஓர் தனி ஆர்வம். தெரிகின்றது. பொதுவாக ஒதுக்கப் பட்டவர்களிடத்திலும் ஒடுக்கப் பட்டவர்களிடத்திலும் தனி அக்கறையைக் காண்கின்றோம்.

இந்தக்கதை படித்தவுடன் ஏதோ ஓர் தாக்கம். அப்படியே அமர்ந்து விட்டேன். மனத்தை யாரோ பிசைவது போன்ற ஓர் அவஸ்தை.

கதைக்களன் ஓர் இடுகாடு.

என் முதுமை காரணமா? வெறுப்பும் சலிப்பும் என்னை ஆட்டிப் படைத்தது. பேசாமல் படுத்துவிட்டேன். அப்பொழுதும் மனம் சிந்தனையிலிருந்து வழுவவில்லை. கதையின் ஒவ்வொரு வரிகளும் என் நினைவில் வந்து மோதின.

ஏன் இப்படி எழுதுகின்றார்?

எப்படி இதனை இப்படியாகக் காணமுடிகின்றது?

ஜெயகாந்தனின் அக்கறை சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களையே சுற்றிவரும். சிக்கலான உணர்வுகளையும் கூட யதார்த்தமாகக் காண்பார்.

அவர் படைக்கும் பாத்திரங்களுடன் உறவு கொண்டு ஒன்றிவிடுவார். அவரைக் குறை சொன்னால் கூடப் பொறுத்துக் கொள்வார். அவர் படைத்த பாத்திரங்களைக் குறைகூறப் பொறுக்க மாட்டார்.

சம்பவங்களைவிட தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

உரையாடல்கள் அவரின் இதயக் குரல். பிச்சைக்காரனின் திண்ணையும்

தொழுதற்குரிய கோயிலும் இரண்டிலும் அவரால் தத்துவங்கள் காண முடியும். இடுகாட்டில் மனித மனத்தைச் சித்திரமாக வரைந்த ஓவியமே நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

தூரத்துப் பார்வைக்கு அது ஓர் நந்தவனம் போல் தோன்றும். ஆனால்

அது ஒரு இடுகாடு. ஆண்டியின் உழைப்பில் அது ஓர் நந்தவனம்.

அவன் பெயர்தான் ஆண்டி. அவனுக்கும் மனைவி உண்டு. மேற்கு மூலையில் பனை ஓலைகளால் வேய்ந்த ஓர் சிறு குடில் அவன் இல்லம்.

ஆண்டி ஒரு வெட்டியான். அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழிவெட்டுவது அவன் தொழில். அதற்காக அவன் முனிசிபாலிட்டி

யிலிருந்து பெறும் கூலிப் பணம் ஏழு ரூபாய். அந்த வீடும் கொடுத்திருக்

கின்றார்கள். அவனுக்கு சோகம் தெரியாது. குழிகள் வெட்டும் பொழுதும் கூடப் பாடிக்கொண்டே வேலை செய்வான். அவனைபற்றிக் கதாசிரியரின் எழுத்திலே பார்ப்போம்.

ஆண்டி ஒரு வித்தியாசமானவன். மகிழ்ச்சி என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக் கொண்டே இருக்கும் அவனை “ஒரு மாதிரி” என்று நினைத்தார்கள்.

மனிதர்களின் நினைப்புகளைக் குருபீடத்திலும், இடுகாட்டிலும் அவர் சுட்டிக் காட்டுவது, யதார்த்தம் ஆயினும் சிலருக்கு ஆத்திரம் கொடுத்து விடுகின்றது. ஜெயகாந்தனின் உரையாடல்களும், அவர் தீட்டும் காட்சிகளும், காட்டும் உள்ளுறைத் தத்துவங்களை சிலர் விமர்சிப்பதுண்டு. இறைவனையே விமர்சிப்பவர் நாம். ஜெயகாந்தன் சாதாரண மனிதன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளத்தில் உணர்வதை முலாம் பூசாமல் எழுதுபவர்.

கதைக்குச் செல்வோம்.

ஆண்டி கடுமையான உழைப்பாளி. பாடிக்கொண்டே வேலை செய்வான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்

கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி !

இந்தப் பாட்டிற்கு அவனுக்குப் பொருள் தெரியாது.

எப்பொழுது இந்தப்பாட்டை யார் கற்றுக் கொடுத்தது என்பதெல்லாம் அவனுக்கு இப்போது நினைவில்லை. ஆனாலும் எப்பொழுதும் அவன் இதனை உற்சாகத்துடன் பாடிக் கொண்டிருப்பான்.

நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக் கொண்டு முதன் முதலில் உச்சரித்தோம் என்று கூற முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷ வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோ மானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லிவிடுவோம்.

அந்த இடுகாட்டிற்கு வருவது குழந்தைகளின் பிரேதங்கள். குழி வெட்டுவது அவனுக்கு சிரமமில்லை. மற்ற நேரத்தில் அவன் உழைத்ததில் உருவானது அந்த நந்தவனம்.

பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் துக்கத்துடன் வரும் பொழுது இவன் மட்டும் அதன் தாக்கம் எதுவுமின்றி மலர்ச்சியுடன் இருப்பான். எனவே மற்றவர்களுக்கு அவன் ஒரு மாதிரியானவன்தான்.

ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை. ரோஜாச் செடிக்குப் பதியன் போடுவது போல பாட்டுப் பாடிக் கொண்டே குழி

பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சிளங் குழந்தையின் பிரேதத்தைப் பார்த்தும், குழந்தையைப் பறிகொடுத்தவன் குமுறிக் கொண்டிருப்பதைப் பார்த்தும் இவன் பதறாமல் பாடிக் கொண்டிருப்பான். சீ இவனும் மனிதனா என்று நினத்து “இவன் ஒரு மாதிரி” என்று சொல்லுவார்கள்.

ஒரு நாள் அவன் மனைவி முருகாயி சொன்ன செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் சொன்ன கனவை அவன் புரிந்து கொண்டுவிட்டான். அவர்களிடையே புது ஜனனம் ஒன்று தோன்றப் போகின்றது.

அவன் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் பொழுது தெருவில் போன ஓர் பண்டாரம் பாடிய பாட்டுதான் இது. அப்படியே அவன் மனத்தில் பதிந்துவிட்டது. ஆனால் அவனுக்கு அதன் பொருள் தெரியாது.

இருளன் மகனாய்ப் பிறந்தான். மகிழ்ச்சியில் திளைத்தான். தனது மதலையை மார்புறத் தழுவிய ஆண்டியின் கரங்கள் ஊராரின் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன. குழி பறித்து முடிந்த பின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் தூங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான். கூத்தாடுவான்.

எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு கனவுகளுக் கெல்லாம்

புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து

ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் கொண்டிருந்த ஆண்டியின்

வாழ்விலும் இழப்பு நேர்ந்தது.

காலம் போன ஒரு நாளில் எதிர்பாராமல், நினைவின் நப்பாசை கூட

அறுந்து போன காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை

காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன் எதிர்பாராமல்

திடீரென்று இரண்டு நாள் கொள்ளை நோயிலே விழுந்தது போல் போய்விட்டான்.

வேப்ப மரத்தடியில் கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே முழங்கால்களில் முகம் புதைத்து குந்தி இருக்கிறான் ஆண்டி..

எங்கோ வெறித்த விழிகள்…என்னென்னமோ காட்சிகள்…

எல்லாம் கண்டவை .. இனி காண முடியாதவை.

வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும் ..தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தூளிக்கு வெளியே தலையை நீட்டி தள்ளி தொங்க விட்டுக் கொண்டு

கன்னங்குழியும் சிரிப்புடன் அப்பா என்ற அழைத்ததும் ..

செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவனறியாமல் பின்னே வந்து திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்க வைத்து மகிழ்வித்ததும் ..

எதிரிலிருக்கும் தட்டத்து சோற்றில் வேகமாய்த் தவழ்ந்து வந்து தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி கைதட்டி சிரித்ததுக் களித்ததும் ..

நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் கிடந்து உறங்கியதும் ..

பொய்யா..? கனவா..? மருளா..? பித்தா..? பேதைமையா..?

ஆண்டியின் சித்தம் மட்டுமல்ல படிப்பவரையும் சிலையாக்கும் இரத்த வரிகள்! குழந்தை செத்த வீட்டில் மனம் ஒலிக்கும் ஒப்பாரிப் பாட்டு இது.

இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம், ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. தாய்மையின் துடிப்பு. இடுகாட்டு வாழ்க்கையில் அவன் கண்ட ஒரே சொர்க்கம் வீழ்ந்துவிட்டது. இழப்பின் மதிப்பு மிக அதிகம்.

அவன் இருப்பது இடுகாடு. அவன் வீட்டிலேயும் ஒரு சாவு. அபூர்வமாகக் கிடைத்த பரிசைக் காலம் அவனிடமிருந்து பறித்து விட்டது. மனம் பேதலிக்காமல் என்ன செய்யும். இனி அவன் உணர்வில் காணும் காட்சிகளை அவர் வருணிக்கின்றார்.

மார்பை அழுத்திக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான்.கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி

பூமியில் புதைத்தான்.

நந்த வனத்தில் ஓர் ஆண்டி

அந்தப் பாட்டை … அவன் பாடவில்லை.

ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும் போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்துவருமே அந்தப் பாட்டு.

பாடியது யார்?

மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

மீண்டும் அந்தக் குரல்

யாரது .. ?

புலன்களையெல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.

மீண்டும் ஒரு குரல்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

ஐயோ, அர்த்தம் புரிகிறதே !

மண்வெட்டியைத் வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

தூணைப் பிளந்து கிளம்பிய நரசிம்ம அவதாரம் போன்று பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னன்சிறு

பாலகன் வெளிவந்தான்.

கைகளைத் தட்டி தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துக் கொண்டே பாடியது சிசு.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

குரல்கள் ஒன்றாகிப், பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன்பு புதையுண்ட

முதல் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை

எல்லாம் உயிர் பெற்று உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து விம்மிப் புடைத்து விகஸித்த குரலில், மழலை மாறாத மதலைக் குரலில்

பாடிக் கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின.

வான வெளியெல்லாம் திசை கெட்டு தறி கெட்டுத் திரிந்து ஓடின.

ஆண்டி தன்னை மறந்து சிரிக்கின்றான்.

அவன் ஆசை மகனும் அந்தக் குழாமில் இருக்கின்றான். தாவி பிடிக்க ஓடுகின்றான். ஆனால் அவனோ கைக்கெட்டவில்லை.

அவன் இல்லை. அவன் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர்.

ஜீவ ஆத்மாக்களின் சங்கமம். அங்கே பேதமில்லை

என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும், இதுவென்றும் பேதம் காண முடியாத அந்த சமுத்திரத்தில்

இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்?

ஆண்டி தவித்தான்.

அவன் சாதாரணமான மனிதன்

புனரபி ஜனனம் புனரபி மரணம்

மயான பூமியா ?

இல்லை.

அது ஞான பூமி !

தினம் தினம் மரணங்களைப் பார்த்தும் மனிதன், ஆசைகளுக்கும் பாசத்திற்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டு அல்லாடுகின்றானே!.

ஆம். மனிதன் அப்படித்தான்.

ஆண்டியோ தினம் தினம் குழந்தைப் பிணங்களைப் பார்த்திருந்தாலும் ஆசைக்கு மகன் கிடைத்து, பாசத்தையும் காட்டி அவனை மோசம் செய்து இருந்த ஒன்றையும் பறித்துக் கொண்டது காலம். அவனால் என்ன செய்ய முடியும் ? அழத்தான் முடியும்.

இப்பொழுதெல்லாம் குழந்தைப் பிணம் வரும் பொழுது அழுகின்றான். மற்றவர்களுக்கு இப்பொழுதும் அவன் “ஒரு மாதிரி” தான்.

நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

அன்று அவனை நினைத்ததிலாவது ஓர் அர்த்தம் கூற இயலும்.! இப்பொழுதும் இதென்ன கேலிச் சொல்?

நாம் எல்லோருமே ஒரு மாதிரிதான்.

ஆண்டவனையே நம் வியாபாரத்தில் கூட்டாளியாக்குகின்றோம்

சொல்லாலும் செயலாலும் படைத்தவனையே கல்லாக்கிவிட்டோம்

இவனை ஏன் படைத்தோம் என்று திகைத்து நிற்கின்றான்.

நாம் ஒரு மாதிரிதான்.

நினைத்தால் ஒருவனைக் கோபுரத்தில் ஏற்றுகின்றோம். பிடிக்கவில்லை யென்றால் அவனையே குப்புறத் தள்ளுகின்றோம். இயக்கம் என்றும் இலட்சியம் என்றும் தத்துவம் பேசுவோம். கோடி கோடியாய் நாம் சம்பாதிப்போம். உணர்ச்சி சொற்களை வீசி எளியவனைத் தீக்குளிக்கச் செய்வோம். உடனே அந்தப் பிணத்திற்கு மாலை சூட்டி அதிலும் வரவு பார்ப்போம்.

நாமும் ஒரு மாதிரிதான்.

சுயநலமும் சுரண்டலும் கொடிகட்டிப் பறக்கின்றது.

பித்தனைச் சித்தனாக்குவோம். அப்பாவியைப் பித்தனாக்குவோம்.

ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தும் ஏமாறுகின்றோம்.

ஏமாற்றுபவனும் ஒரு மாதிரி.

ஏமாறுகின்றவனும் ஒரு மாதிரி.

ஒவ்வொருவரும் தம்மை சுயதரிசனம் செய்து கொள்வோம்.

இக்கதை என்னை அழவைத்தது கொதிப்படைய வைத்தது. நானும் அழமட்டும்தானே செய்கின்றேன்

நானும் ஒரு மாதிரி.

தொடரைமட்டும் நிறுத்த முடியவில்லை. அவருடன் பயணம் செல்லப் போகின்றோம்.

தொடரும்

+++++++++++++++++

seethaalakshmi subramanian

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

சீதாலட்சுமி


“ லிவ்விங் டுகெதெர்” பற்றி என்ன நினைக்கிறீங்க?

இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும்.

மேல் நாடுகளில் இது வேகமாப் பரவி வரும் கலாச்சாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ் வச்சுக்கறது, பிள்ளை பெறுவது சகஜமா போச்சு. அப்படி பிறக்கிற குழந்தைங்கள ஓர் அவமானச் சின்னமா பாக்குறதில்லே. அவளை யாரோ ஒருவன் கல்யாணம் செய்துக்கற போதும் அந்தப் பிள்ளையையும் ஏத்துக்கறான். இங்கே என்ன நடக்கும்? அப்படி சேர்ந்து வாழ்ந்தா எப்படி சொல்லுவாங்க.. “ஒரு பெண்ணை வச்சுக்கிட்டிருக்கான்” அடுத்து அவளை “வப்பாட்டி”ன்னும் சொல்லுவாங்க. கவுரவமா சொல்ல மாட்டங்க. குழந்தை பிறந்துச்சோ அவ்வளவுதான், கேலி பேசியே சாக அடிப்பாங்க. ஆரம்பத்திலே தைரியமா இருக்கறவனும் மானம் போச்சுன்னு அவளையும் குழந்தையையும் வெறுக்க ஆரம்பிச்சுடுவான். முதல்லே தெரியாது. வீராப்பு பேசும் வாய் அப்போ அடைச்சுடும். நம்ம நாட்டுக்கு இது அவ்வளவு சரியில்லே. ஏதோ அங்கும் இங்கும் நடக்கறதை வச்சு முடிவுக்கு வரக்கூடாது.

தொலைபேசி சிறிது நேரம் மவுனமாக இருந்தது

அம்மா, உங்களைப் பார்க்க எப்போ வரலாம்?

அவன் என்னைப் பார்க்க வந்தான். கால்களில் விழுந்து நமஸ்காரமும் செய்தான். அவன் முகத்தில் வெட்கம் கலந்த ஓர் சிரிப்பு.

அம்மா, வேறு யாராவது இருந்தா திட்டி இருப்பாங்க. நானும் கிழவின்னு
பதிலுக்குச் சொல்லி இருப்பேன். பொறுமையாக நீங்க சொன்னது எனக்குப்
பிடிச்சது. அது உண்மைதான்மா.

நான் திட்டியிருந்தால் அவன் அது போன்ற வாழ்க்கையைத் தேடியிருப்பான். தயங்கும் இளம் உள்ளங்களுக்கு சொல்லும் விதத்தில் உணமைகளைக் கூறினால் அவர்கள் சிந்திக்க முயல்வார்கள்.

எப்படி எனக்கு இந்தப் பக்குவம் வந்தது?

படித்ததாலோ, பயிற்சிகள் பெற்றதாலோ வந்துவிடவில்லை. அனுபவங்களால் மெருகேற்றப்பட்ட மனம். சில சமயம் சிலரின் சந்திப்புகளும் நம்மிடையே மாற்றத்தை வரவழைத்துவிடும். திட்டம் ஏதுமின்றி நடக்கும் நிகழ்வுகளில் மனித மனம் புதைந்து உருமாறி விடுவதுமுண்டு.

மனத்தில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டால் நான் ஓடி ஒதுங்கும் இடம் ஆழ்வார்ப்பேட்டை குடில். அங்கே நான் செலவழிக்கும் நிமிடங்கள் பதினைந்து முதல் முப்பது நிமிடங்களாகத்தான் இருக்கும். எனக்கு நேரம் கிடைப்பதுவும் அரிது. அதே நேரத்தில் மனத்தைச் சீர் செய்து கொள்ள
நான் சந்திப்பவர் ஜெயகாந்தன். எதற்காக வருகின்றேன் என்று சொல்லுவதும் கிடையாது. அவரும் காரணம் கேட்கமாட்டர். எங்களிடையே ஓர் புரிதல் உண்டு அவ்வளவுதான். பேசி முடியவிட்டு அவர் உதிர்க்கும் சில சொற்களில் ஏதோ உண்மை கண்டு விட்டதைப் போல் திரும்பிவிடுவேன். இது எப்படி?

ஜெயகாந்தனின் குருபீடம் அருமையான அர்த்தமுள்ள சிறு கதை. ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

ஓர் பிச்சைக்காரன். சோம்பேறி. சுயமரியாதை இல்லாதவன். நாற்றமடித்து வீதிகளில் அலைபவன். ஒரு குழந்தை சாப்பிடுவதைக் கூட நாயைப் போன்று பார்ப்பவன். குடித்து முடித்து வீசி எறியும் பீடிகளைப் பொறுக்கி புகைப்பவன். சந்தைக்கு வரும் தாய், தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பொழுது வெறித்தனமாகப் பார்த்து ரசிப்பவன். ஆடையை விலக்கி அலங்கோலமாகப் படுத்துக் கொண்டு பார்ப்பவரைப் பயமுறுத்துபவன். சத்திரத்தில் ஒதுங்கிய ஒருத்தியிடம் சுகம் கண்ட பின் அவள் குஷ்டரோகி என்று தெரிந்தும் அலட்சியமாக நினைத்து அவளை மீண்டும் தேடிப் போய் அவளைப் பயமுறுத்தி ஓடச் செய்பவன்.

இவன் தான் கதையின் நாயகன். இப்படிப்பட்ட ஒருவனை முன்னிறுத்தி படிப்பவரையும் மிரள வைக்கின்றார் ஜெயகாந்தன்.

இங்கே அழகை வருணிக்கவில்லை. அருவருப்பைக் கொடுக்கும் ஓர்
மனிதனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகின்றார். படிப்பவர் மனத்திலும் ஓர் வெறுப்பை ஊட்டிய பின்னர் கதையின் கருவுக்கு வருகின்றார்.
பிச்சைக்காரன் எதிரில் யாரோ ஒருவன் வந்து “சுவாமி “ என்று அழைக்கின்றான்.

இந்தக் காட்சியை ஜெயகாந்தன் மூலமாகப் பார்ப்பதே சிறந்தது.

புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்க்கின்றான்.எதிரே ஒருவன் கைகளைக் கூப்பி உடல் முழுவதும் குறுகி,இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்து கொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான். இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான். பைத்தியமோ? என்று நினைத்து உள்சிரிப்புடன் “என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே? இது கோயிலு இல்லே – சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்ககாரன்” என்றான் திண்ணையில் இருந்தவன்.

“ஓ! கோயிலென்று எதுவும் இல்லை. எல்லாம் சத்திரங்களே! சாமியார்கள் என்று யாருமில்லை, எல்லாரும் பிச்சைக்காரர்களே!” என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.

தெருவில் நின்றவனை திண்ணையில் இருந்தவன் பைத்தியக்காரன் என்று நினைத்தான். வந்தவனோ மேலும் இவனை, “சுவாமி, என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேறு கேட்டுக் கொண்டான்

இவனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. இருப்பினும் அடக்கிக் கொண்டு வந்தவனை டீ வாங்கி வரச் சொல்லுகின்றான். அவனிடம் காசு இருப்பதைப் பார்க்கவும் பீடியும் வாங்கி வரச் சொல்லுகின்றான்.

வந்தவன் முருகன் கோயிலில் மடப்பள்ளிக்குத் தண்ணிர் எறைச்சுக் கொண்டு வருபவன். அவனுக்கு மூணு வேளைச் சாப்பாடும் நாலணவும் கிடைத்து வந்தது. அவன் சொல்வதைக் கேட்போம்.

“எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்த மில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியல்லே. துன்பத்துக்கெல்லாம் பற்றுதான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒருவிதப்பற்றும் இல்லே. ஆனாலும் நான் துன்பப்படறேன். என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே. நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி” இந்த சத்திரந்தான் குருபீடம். அங்கே வா”ன்னு எனக்கு கட்டளை இட்டீங்க குருவே! நீங்க இதெல்லாம் கேட்கறதணாலே சொல்றேன். தாங்கள் அறியாததா ? விடியற்காலை யிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.

அப்போது குரு சொன்னான் “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான். ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரி பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.

அன்று முதல் தினமும் நின்றவன் வர ஆரம்பித்தான். இருந்தவனுக்கு சேவை செய்தான். இப்பொழுதெல்லாம் அவன் வீதியில் திரியவில்லை..
வந்தவன் குளிப்பாட்டி, உணவு படைத்து தனிமையில் விடாமல் உடன் இருந்தான். சூழ்நிலை மாறத் தொடங்கிவிட்டது.

அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிலர் குருவை அடையாளம் கண்டு, இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்பொழுதே நினைத்ததாகவும் அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும் அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள். அதில் சிலர் இப்படியெல்லாம் தெரியாமல் இந்த சித்த புருஷனைப் பேசியதற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாகவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள். இவனுக்குப் டீயும், பீடியும், பழங்களும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தனர். பக்தர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தனர். இவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பேசினர். இதுவரைப் பாராமலிருந்ததைப் பாவமாகக் கருத ஆரம்பித்தனர்.

என்னடா உலகம்!
இதுதான் உலகம்!
யாருக்காவது காரணம் தெரியுமா?
இருந்தவனோ நின்றவனோ காரணங்களா?
யாரை யார் குறைக் கூறுவது?
அருள்வாக்கு நாயகர்கள் பெருக்கத்திற்கு யார் காரணம்?!
அவர்களைப் பேராசைக் குழிகளில் தள்ளுவதும் யார்?
யாரையும் மோசம் செய்ய இந்த நாடகம் நிகழவில்லை. இயல்பாக நடந்த
ஒரு நிகழ்வு. அப்பொழுதும் இப்பொழுதும் வர்ணம் தீட்டுவது மனிதனே!

காட்சியிலிருந்து கதைக்குப் போவோம். கதாசிரியன் அல்லவா? கதை முடிக்க வேண்டுமே. தொடங்கியவன் முடிக்கட்டும்

இவன் கனவிலே ஒரு குரல்.

உனக்கு சிஷ்யனாக வந்திருக்கின்றானே அவன்தான் உண்மையில் குரு. சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கின்றான். அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கின்றான். எந்த பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகின்றானோ அவன் குரு. கற்றுக் கொள்கின்றவன் சீடன். பரமசிவனின் மடிமீது உட்கார்ந்து கொண்டு, முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு.

சிஷ்யன் போய் விட்டான். தேடியும் காணவில்லை.

இவன் சுற்றித் திரிகின்றான். இப்பொழுது எல்லோரும் இவனை வணங்குகின்றனர். மரியாதை செலுத்துகின்றனர்

பித்தன் இங்கே சித்தனாகிவிட்டான்!

எப்பேர்ப்பட்ட தத்துவத்தை கதையில் காட்டிவிட்டார். எத்தனைபேர்கள் புரிந்து கொள்வார்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் வாழ்வில் இத்தகைய உபதேசங்கள் கிடைக்கின்றன. ஆனால் மனிதன் அசட்டை செய்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றான். கடவுளே நேரில் வந்தாலும் அவரைப் பகல் வேஷக்ககரன் என்று உள்ளே தள்ளிவிடுவோம். அல்லது எள்ளி நகையாடுவோம். நமது பாட்டுக்கு எவன் இசைந்து தாளம் போடு கின்றானோ அவனைத்தான் நாம் ஏற்றுக் கொள்வோம். நம்மை ஏமாற்றுபவரைக் கூடப் புரிந்து கொள்ள அக்கறையில்லை. ஏமாளியாய், பைத்தியக்காரனாய் நடமாடிக் கொண்டிருக்கின்றோம்.

குருபீடம் மதிப்பு வாய்ந்தது. அது உண்மைக்கும் சக்திக்கும் உரிய இடம். இப்பொழுது போலித்தனத்திற்குரிய இடமாக ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை பல தோற்றங்களில் எங்கும் வியாபித்திருக்கின்றன. மனிதனின் முக்கிய வியாபார கேந்திரமாகி விட்டது. காலம்தான் மனிதனுக்குப் புத்தி புகட்ட வேண்டும். உணர்ந்து திருந்தினால் வாழ்வான். அல்லது வீழ்வான்.

என்னுடைய தேடல் என் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ஒன்றா இரண்டா, மனத்தில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடித் திரிந்தேன். பலரைச் சந்தித்தேன். சிலரிடம் விடை கண்டேன்.
என் வாழ்க்கையில் புற்றீசல் போல் கேள்விகள் பிறந்து கொண்டே இருந்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் வியப்பைத் தரும் அளவில் அமைந்தன. தேடிப் போனதும் உண்டு. தானாக வந்ததும் உண்டு.

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பிலேயே ஓர் சிந்தனைச் செல்வரைச் சந்தித்த மன நிறைவு ஏற்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை, ஆமாம், அமெரிக்கா வந்த பிறகும் உள்ளம் குமுற ஆரம்பித்தால் அவருடன் பேசுவேன். சில நாட்களுக்கு முன் நடந்த உரையாடல்.

முதுமையும் நோயும் என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இத்தனை அனுபவங்கள் இருந்தும் மனக் குரங்கு அப்படி ஓர் ஆட்டம் போடுகின்றது. யாருக்கும் என் மீது பிரியம் இல்லை, அக்கறையில்லை என்ற நினைப்பு. எல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற குறை. என்னை என்னால் அடக்க முடியவில்லை. உடனே ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் புலம்பினேன்.

சீதாலட்சுமி, ஏன் மற்றவர் ஒதுக்கிவிட்டார்கள் என்று நினைக்கின்றீர்கள்? நாம்தான் ஒதுங்கி இருக்கின்றோம். இப்படி நினையுங்கள். விருப்பம் நம் கையில் என்று நினைத்தால் இழப்பு என்று தோன்றாது

எப்பேர்ப்பட்ட உண்மை

அடுத்த கேள்வி.

யாரையும் பார்க்க முடியவில்லை.

குரலையாவது கேட்க முடிகின்றதல்லவா?

பொங்கி எழுந்த மனம் அடங்கியது. புன்னகையும் வந்தது.

ஜெயகாந்தன் இப்பொழுது எழுதுவதில்லை. முன்பு போல் கலந்துரை யாடல்கள் அதிகம் இல்லை. அவர் ஒதுங்கி வாழ்கின்றார். ஆனால் அவர் எழுத்து மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் அவரிடம் சொல்வளம் இருக்கின்றது. கூரான சிந்தனை இருக்கின்றது. ஒற்றைச் சொல், மந்திரச் சொல் இன்னும் இருக்கின்றது. தோற்றத்தில் முதுமை இருக்கின்றதே யொழிய சிந்தனையில் இன்னும் இளமையின் துள்ளல் இருக்கின்றது.

எனக்கு இத்தகைய நட்பு கிடைத்தது என் அதிருஷ்டம்.

சிறுகதை மன்னன் என்றால் அது ஜெயகாந்தனே.

அவரைபற்றி பேச இன்னும் நிறைய இருக்கின்றது.

தொடரும்

+++++++++++++++++
seethaalakshmi subramanian

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

சீதாலட்சுமி


கங்கா

அக்கினிபிரேவசத்தில் குளித்து எழுந்தவள்.

சில நேரங்களில் சில மனிதர்களால் பாதிக்கப்பட்டவள் பாதையில் வந்த கார் சவாரியால் வாழ்வைப் பறி கொடுத்தவள்.
அவளைக் கொஞ்சம் பார்க்கலாமே

கதையை ஆய்வு செய்தவர்கள் நடந்த சம்பவத்தை கங்கா வெறுக்கவில்லை, அவன் கொடுத்த சுயிங்கத்தைக் கூடத் துப்பவில்லை என்று நுண்ணியமாக அலசி இருக்கின்றார்கள். அவள் ரெண்டுங்கெட்டான் நிலைக்கு எத்தனை விமர்சனங்கள்!

அக்கினி பிரவேசம் சிறுகதையின் நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள். எழுத்துலகில் இத்தகைய அமைப்பு புதிதல்ல. ஆங்கிலத்தில் நிறையவே உண்டு. தமிழில் கொஞ்சம் வித்தியாசமானது

கல்கியின் பார்த்திபன் கனவிலிருந்து பூத்தவை சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும். பார்த்திபனின் கனவிலே பொன்னியின் புதல்வர் தன்னைப் புதைத்துவிட்டார். தன் மண்ணின் கதையை தமிழனின் பொற்காலமாகக் காட்டி மகிழ்ந்தார்.

இராஜ இராஜன் ஓர் சிறந்த மன்னன் என்பதில் கருத்து மாறுபாடு யாருக்கும் கிடையாது. ஆனால் அடுப்பங்கரை மாமி கூட வரலாற்றை நிமிரிந்து பார்க்க வைத்தவர் கல்கி.

சிற்பக் கூடத்தில் சிலைகளோடு சிலையாகி, அந்த மன்னனின் மனிதக் காதலுக்கு அப்பொழுதே வித்திட்டு சிவகாமியின் சபதம் பிறக்கச் செய்தார்.

அக்கினி பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்களாகி , பின்னர் கங்கா எங்கே போகின்றாள் என்று கங்காவுடன் பயணம் செய்தவர் ஜெயகாந்தன். அந்த அளவு கங்கா பாத்திரம் அவரை ஆட்கொண்டிருந்தது.

வீதியில் நடந்தது ஓர் விபத்து. உடன் பிறந்தவன் அவளைக் கீழ்த்தனமாகப் பேசி விரட்டுகின்றான். “சொல்” என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓர் ஊர்தி. மனிதன் அதனை எப்படியெல்லாம் கையாளுகின்றான்! கார்லாவின் அப்பாவால் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனம் காயப் படுகின்றது. வழி நடத்த வேண்டிய கன்னிமார்களும் காயத்தைப் புண்ணாக்குகின்றார்கள். அந்தப் புண் புரையோடவும் புத்தியின் தெளிவு பாதிக்கப்பட்டு விடுகின்றது.

துறவறம் போயும் அவள் உணர்வுகள் அவளைத் துரத்துகின்றன. அன்பு காட்டும் கணவன் கிடைத்தும் நல்ல வாழ்க்கையில் மனம் ஒட்டவில்லை. அந்த அளவு சொற்களாலும் காட்சிகளாலும் சுழற்றப்பட்டு, சமுதாயத்தால் வெறுக்கப் படும் ஓர் குழியில் விழுகின்றாள். மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு நிலையிலும் அவள் அமைதி காண முடியாது அச்சத்தின் பிடியில் சிக்கியதில் அவள் வாழ்க்கை சிதைகின்றது.

கங்காவுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றார். அவள் மாமன். அந்த மாமனோ சபலப் புத்திக்காரன். அவன் பார்வையால் அவளை நிர்வாணப் படுத்தி ரசிக்கும் ஓர் கிழவன். அவன் தொடலிலும் தடவலிலும் உடல் நெளிந்து மனம் குமைந்து வாழ்ந்து எப்படியோ படித்து முடிக்கின்றாள். உரம் வாய்ந்த பெண். அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததே!

அவளுக்கு நல்லதொரு வேலையும் கிடைத்துப் பெரிய பதவியிலும் அமர்கின்றாள்.

ஓர் நிர்வாகிக்குத் தெளிவும், உறுத்திப்பாடும் தேவை. குழப்ப மன நிலையில் உள்ளவர்களால் சீரிய முறையில் நிர்வாகம் செய்தல் இயலாது. நான் ஒரு நிர்வாகியாக இருந்தவள்.

கங்கா எப்போது, எப்படி முட்டாளானாள்?

பிரபு மணமாகி, தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றான். அவனுடன் பழக்கம் ஏற்பட்டால் பாசம் வளரும். ஆனால் வாழ்வு கிடைக்காது. இப்பொழுது வெறும் வடு மட்டும் இருக்கின்றது. ஆனால் பிரிவும் ஏமாற்றங்களும் ஏற்படும் பொழுது ஆழமான புண் ஏற்படுமே! இது தெரியாத முட்டாள் பெண்ணா கங்கா? துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா? கங்கா அந்த எல்லைக்கு எப்படி தள்ளப்பட்டாள்?

சபல மாமாவின் அசிங்கப் பார்வையும், அடிக்கடி அவர் தொடல், தடவல்களும் தாங்கிய காலத்திலும் மனம் படிப்பில் ஒன்றி இருந்தது.

பஸ்பயணத்தில் வக்கிரமனம் படைத்த ஆண்களின் சேட்டைகளில் அவள் படும் அருவருப்பும், உடன் பிறந்த அண்ணனையும் அந்த வரிசையில் சேர்த்து நினைக்கும் கங்கா , சபல மாமாவின் செய்கைகளால் உடலில் பூரான் ஊறும் உணர்வுகளோடு அவ்வீட்டில் வாழ்கின்றாள். மனம் தளராது படித்து முடிக்கின்றாள். அப்படிப் பட்டவள் ஏன் தோல்வி நோக்கிப் போகின்றாள்?

மனித மனம்

கரைப்பாற் கரைத்தால் கல்லும் தேயும்

சபல மாமாவின் கொடிய நாக்கு அவளைச் சீண்டுகின்றது. சொற்கள் கத்தியைவிடக் கூர்மையானது. “உன்னைக் கெடுத்தவனைத் தேடி கண்டு பிடி” என்ற எகத்தாளமான சொற்கள் அவளை விரட்டி விடுகின்றது. அவள் தேடலில் கெடுத்தவனையும் கண்டு பிடித்து விடுகின்றாள். அப்புறம் என்ன செய்ய? அதற்கும் மாமனின் சீண்டலும் குத்தலும் சொற்களாக வந்து அவளைத் துரத்துகின்றது.

நீ அவனுக்கு பொண்டாட்டியாக முடியுமா? கான்குபைனாகத்தான் இருக்க முடியும். கெட்டிக்கார கங்காவை அவர் சொற்களால் கொன்று விடுகின்றார்.

பிரபுவுடன் பழகுகின்றாள். அலுவலகத்தில் “மை மேன்” என்று கூறி மகிழ்கின்றாள். அவன் பிரிய முடிவு செய்த பொழுது வலுவில் அவள் தன்னையே கொடுக்கத் தயாராகி விடுகின்றாள். தடுமாற்றம். பிரபுவோ அவளை நெருங்காமலேயே பிரிந்து சென்று விடுகின்றான். அவன் குடித்து வைத்துச் சென்ற கப் முன்னால் இருக்கின்றது. “கல்ப்” என்ற ஒற்றைச் சொல்லில் மலைத்து நின்று விடுகின்றாள்.

மனித பலஹீனங்களை மறுக்கவில்லை.

கெடுத்தவனைத் தேடிப் போவதும், தெரிந்தும் ஏமாறுவதும் , கங்காவின் பாத்திரப் படைப்பை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் காலம் என்று மிகவும் பின் செல்லக் கூடாது. 1956ல் நான் சமுதாயப் பணிக்கு வந்து விட்டேன். ஆனால் முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை

என் குடும்பத்திலேயே ஓர் அவலம் நடந்தது

அவளுக்கு 17 வயது. தந்தை கிடையாது. தாயோ மாமன் வீட்டிற்குச் சென்று விட்டாள். இவள் தன் சித்தியின் வீட்டில் தங்கி இருந்தாள். அப்பொழுது ஒருவன் அவளுக்குக் காதல் கடிதம் எழுதிவிட்டான்
கோபக்கார சித்தப்பா அவளை அடித்திருக்கின்றார். அந்தப் பெண் மனமுடைந்து கிணற்றில் விழுந்துவிட்டாள். உடனே அவளைத் தூக்கி காப்பாற்றி இருக்கின்றார்கள். ஊரார் முன் கேவலப் படுத்திவிட்டாள் என்று இனிமேல் வைத்துக் கொள்ள முடியாது என்று அவளை என் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்று விட்டார்கள்..

அவளை அதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது. அவள் 18 வயது முடியாத நிலையில் வேறு ஒரு விதிப்படி ஒரு வேலையில் அமர்த்திவிட்டேன். இது நடந்தது 63ல். அவள் சோதனைக் காலம் முடிந்தது. திருமணமாகி இப்பொழுது பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றாள்.

காலம் மாறிக் கொண்டே இருக்கின்றது

கங்கா நன்றாகப் படித்து, உயர் பதவியிலும் அமரவிட்டு தன் மன உறுதியை இழப்பது என்பது என் மனத்திற்குப் பொருந்தவில்லை

இந்தக் காலத்துப் பெண்கள் வேறு வழியில் வாழ்க்கையைத் தேடிக் கொள்வார்கள். அவள் படிப்பிற்கும் பதவிக்கும் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்க முடியும். .

கதையின் உரையாடல்கள் சக்தி வாய்ந்தவை. இப்படியும் மனிதர்கள் என்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படியும் இருக்கலாம்!

ஜெயகாந்தனுக்கு கங்காவின் மீது ஓர் ஈடுபாடு அக்கினி பிரவேசம் விரிந்து, சில நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்து கங்கா எங்கே போகின்றாள் என்று தொடர்ந்தார். ஆனால் மூன்றவதில் அத்தனை சுவாரஸ்யம் இருக்க வில்லை

சொற்கள்

ஜெயகாந்தனின் சொற்கள் சுடுகின்றன. அவருடைய வேகத்தில் பாத்திரங்களை வைத்து பொம்மலாட்டம் ஆடுகின்றார்

அழிக்க முடியும் சக்தி வாய்ந்த சொற்களால் ஆக்கவும் முடியும்.

‘ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.’

மனிதன் நா காப்பதில்லை

இரு சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன்

அமெரிக்காவிற்கு முதன் முறை சென்ற பொழுது நடந்த ஒரு சம்பவம்

மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மார்ஷல் என்ற ஒரு சிறிய இடம். அங்கு என் மகன் வேலை பார்த்து வந்தான். அவர்கள் குடியிருந்த இடம் அடுக்கு கட்டத்தில் ஒரு பகுதி. அதே கட்டடத்தில் அலீசியா என்ற ஓர் அமெரிக்கப் பெண் என் மருமகளுக்கு சிநேகிதியானாள். அவள் கணவர் பிராட் ஒரு பத்திரிகை நிருபர். எங்கு சென்றாலும் நிருபர்களின் சிநேகம் எனக்குக் கிடைத்துவிடும். அவர்களுக்கு சேய்ரா என்று இரண்டு வயது பெண் குழந்தை. அலீசியா ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தாள்.

ப்ராட் மாலை நேரத்தில் தன் மகளுடன் வீட்டிற்கு முன் இருக்கும் புல் வெளிக்கு வருவான். குழந்தை அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். நாங்கள் இருவரும் அங்கே உடகார்ந்து உலகச் செய்திகளை அலசுவோம்

திடீரென்று ஒரு நாள் என் மருமகள் கவலையுடன் அலீசியா தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகக் கூறினாள். இருவரும் நல்லவர்கள். எங்கே இந்த பிரச்சனை முளைத்தது? காதலும் திடீரென்று வரும். கல்யாண முறிவும் அப்படியே.

அன்று மாலை பிராடுடன் பேசும் பொழுது எங்கள் இலக்கியம் என்று ஆரம்பித்து சிலப்பதிகாரம் கதை சொன்னேன். கண்ணகியின் வாழ்க்கை அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வேறொரு பெண்ணுடன் சென்று பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டுத் திரும்பிய கணவரை ஏன் ஏற்றுக் கொண்டாள் என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.

தமிழர் வாழ்வில் காதல், கற்பு பற்றி விளக்கினேன். பார்வைகளின் சங்கமமோ, ஈர்ப்போ காதலாகி விடாது என்றேன். அது காதலின் தொடக்கம். ஆழமான காதல் கொண்டவர்கள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து , ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வார்கள் என்றேன்.

சின்னப் பிரச்சனைக்கும் பிரியும் தம்பதியர் பெரிதாக எந்த வாழ்க்கையைப் பெற்றுவிட முடியும்? அப்படி ஓடுகின்றவர்களும் ஓரிடத்தில் நின்று விடுகின்றார்கள். அப்பொழுது சமரசம் செய்து கொள்ள முடிகின்றவர்கள் ஆரம்ப வாழ்க்கையிலேயே ஒத்துப் போய் வாழ்ந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு சீராக இருக்கும். இந்திய மண்ணில் தம்பதிகளுக்குள் பிணக்கு இருப்பினும் ஓர் பாசப்பிணைப்பில் கட்டுண்டு வாழ்வார்கள். நான் சொல்லச் சொல்ல என்னைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்

காதலுக்குப் புதுப் புது விளக்கங்கள் கூறினேன். சொற்களை வைத்து விளையாடினேன். காதல் அற்புதமானது. அதைப் பேணிக் காப்பத்தில்தான் அதன் வலிமை வளரும். உதறிக் கொண்டிருந்தால் காதல் நைந்துவிடும். பாதுகாக்கப்படும் காதலின் சுகமே தனி. அப்பப்பா, என்னவெல்லாமோ பேசினேன். என் இலக்கு அவர்கள் பிரியக் கூடாது. அவ்வளவுதான்.

இருட்டவும் இருவரும் எழுந்து சென்றோம்.

இரவு ஏழு மணிக்கு அலீசியாவும் பிராடும் வந்தார்கள். அவளிடம் ஏதோ ஒரு படப்படப்பு இருந்தது. என்னிடம் கண்ணகி கதை கேட்டாள். அத்தனை ஆண்டுகள் கணவன் வரவில்லையென்றால் டைவர்ஸ் செய்திருக்கலாமே என்றாள்.

கண்ணகி கோவலனை டைவர்ஸ் செய்வது

கற்பனையில் மகிழ்ந்தேன்

பத்தினிக்குக் காப்பியம் எழுதிய அடிகளார் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திலகவதி கதை சொன்னேன். திருமணம் மட்டும் நிச்சயிக்கப் பட்டிருந்தது. போருக்குச் சென்ற இடத்தில் மாண்டு போனார். மணமாகாவிட்டாலும் மணம் பேசி முடித்தவரை எண்ணி திலகவதி தனித்தே வாழ்ந்த கதை கூறவும் அவர்களுக்குப் பிரமிப்பு வந்தது. காதல் என்பது உதட்டளவில் ஏற்படுவதல்ல. ஒருவரையொருவர் உண்மையாகக் காதலித்திருந்தால் அவர்களால் பிரிய முடியாது என்றேன். ஏதேதோ சொன்னேன்.

எனக்கு இலட்சியம் எப்படியாவது அவர்கள் பிரிந்துவிடாமல் இருக்க
ஓர் முயற்சி செய்ய வேண்டும்..

மவுனமாக எழுந்து சென்றனர். மறு நாள் மீண்டும் வந்தனர். முகத்தில் ஓர் தெளிவு. அவர்கள் விவாக ரத்து செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானத்தைக் கூறினார்கள்.

இந்தத் தீர்மானம் நிரந்தரமாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. முடிவு ஒத்தி போடப்பட்டது. அவ்வளவுதான். இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தைக்கு அப்பா, அம்மா சேர்ந்து இருப்பார்கள் இங்கே சொற்களின் விளையாட்டு ஆக்க பூர்வமான ஓர் காரியத்திற்கு உதவியது.

மூன்று வருடங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த பொழுது ஓர் சம்பவம் நடந்தது. கணினி அனுபவம் கிடைத்த பிறகு எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் சென்னைக்குச் செல்லவும் தொலை பேசியில் கூப்பிட்டான்

“அம்மா, உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்கவேண்டும்.
லிவ்விங் டுகெதெர் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? “

கேள்வி கேட்டவனுக்கு வயது இருபத்தி மூன்று. பதில் கூற வேண்டியவரின் வயது எழுபத்திரண்டு.

இது கிண்டல் கேள்வியா?

இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பிறகு கிழவி எப்படி பதில் சொல்லுவாள்?

பாவி, நீ உருப்படுவியா? இந்த வயசுக்கு இப்படி ஒரு புத்தியா?

நான் இதை எப்படி அணுகினேன் என்பதை அடுத்து கூறுகின்றேன்

சொற்களின் அருமை தெரிந்து நல்லபடியாகப் பேசலாமே!

தொடரும்-9

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

சீதாலட்சுமி


சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன்.

சிட்னி

ஒரு காலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை.

பல்லாயிரக் கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கே பணி செய்ய மட்டுமல்ல, வேலை செய்பவர்கள் முதல் கைதிகள் வரை அங்கே இருந்த ஆண்களின் இச்சையைத் தீர்க்கவும் பணிக்கப்பட்டு விபச்சாரிகள் என்ற ஒரு புதிய சமூகத்தையும் உண்டு பண்ணிய வரலாற்றுச் செய்தியை சிட்னி பெற்றிருக்கின்றது. இச்செய்தியை மறுப்பவரும் உண்டு. பெண்களை அதற்காகத் தருவிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. எதுவானால் என்ன, வந்த
பெண்களின் வாழ்க்கை மாறியதென்னவோ உண்மை. கலங்க வைக்கும் கதைகள் நிறைய உண்டு.

ஒரு நாட்டை அடைந்தவுடன் நான் போக விரும்பும் இடம் நூலகம். அந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன். சமுதாயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் தெளிவு வேண்டும் என நினைப்பவள் நான்.

வழக்கம்போல் சிட்னியிலும் நூலகம் சென்றேன். புத்தகங்களைப் பார்த்து வரும் பொழுது என்னைக் கவர்ந்து இழுத்தது ஓர் புத்தகம். அதன் தலைப்பு என்னைத் திடுக்கிட வைத்தது. புத்தகத்தை கையில் எடுக்கவும் சட்டென்று நான் அக்கம் பக்கம் பார்த்தேன்.

சே, நானும் அவ்வளவுதானா?

இது ஒரு அனிச்சை செயல் என்றாலும் என் செயல் எனக்குப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரில் நானும் ஒருத்தியாய் உணர்ந்தேன்.

கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து சிலர் மதிப்பீடு செய்வார்கள்.
அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது அங்கிருந்த நூலகம் சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர் என்னை அழைத்துச் சென்ற இடம் இறைவன், தத்துவங்கள் பற்றிய புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு. என் வயதைப் பார்த்து நான் படிக்க வேண்டியவைகளை அந்த அம்மா தீர்மானித்தது.

ஒரு பூங்காவிற்கு என் மருமகள், பேரக் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் பார்ப்பதும், கொஞ்சம் வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தேன். அப்பொழுது என்னருகில் ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தார். என் கையில் இருந்த புத்தகம் டேனியல் ஸ்டீல் எழுதிய புத்தகம். அதைப் பார்க்கவும் அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை. தொடர்ந்து டேனியல் ஸ்டீல் பற்றி ஒரே புகழாரம்.

இன்னொரு இடத்தில் வேறு புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். யாரும் அந்த புத்தகம்பற்றி எதுவும் பேசவில்லை. நம்மூர் எழுத்தாளர் லட்சுமி போல் குடும்பக் கதைகளால் பெண்கள் மனத்தைக் கவர்ந்தவர் டேனியல் ஸ்டீல். ஆக உலகத்தில் எப்பகுதியாயினும் அவர் வாசிக்கும் புத்தகத்திலிருந்து ஒருவரை மதிப்பீடு செய்யும் புத்தி மட்டும் பொதுவாக இருப்பதைப் பார்த்தேன். அந்த நினைப்பில்தான் சிட்னியில் புத்தகத்தை கையில் எடுக்கவும் என்னையும் அறியாமல் அக்கம் பக்கம் பார்க்கத் தோன்றிவிட்டது. அந்தப்புத்தகம் தான் ‘GODS CALL GIRL’.

வீட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் படிக்க ஆரம்பித்தவள் அதனில் அப்படியே ஆழ்ந்து போனேன்.

கார்லா என்ற ஓர் விலைமாதின் சுய சரிதை. தங்கு தடையின்றி நடை சென்றது. சொல்லியிருந்த விதம் எவரையும் ஈர்க்கும். கொச்சையாக எதையும் எழுதவில்லை. சரியா தவறா என்று வாசகர்களைக் கூட நினைக்க விடாமல் சேர்ந்து பயணம் செய்ய வைத்து முடிவில் அவளுடன் உட்கார வைத்து விடுகின்றாள்.

கதையின் சுருக்கம் பார்ப்போம்.

கான்வென்ட்டிலுருந்து பாலியல் தொழிலுக்குச் செல்லும் ஓர் பெண்ணின் பயணம். ஹாலண்டில் பிறந்து பன்னிரண்டு வயதில் மெல்பர்ன் வந்த ஒரு பெண்ணின் கதை.

உடன்பிறந்தவர்கள் பலர். தாய் ஒரு ஆசிரியை. கத்தோலிக்க மதம். அவளுடைய ஆறு வயதில் அவளைப் பெற்றவனால் அவள் கெடுக்கப்படுகின்றாள். கெடுத்தபின் அவளிடம் “ யாரிடமும் சொல்லாதே. ஜீசசுக்குப் பிடிக்காது. “என்று கூறி பயமுறுத்தினான். இது ஒரு நாள் கூத்து இல்லை. இது தொடர்ந்து நடந்தது.
பெற்றவள் வாழ்ந்த உலகம் வேறு. அவளுக்கு அவள் கணவனைத் திருப்திப் படுத்த வேண்டும். அதுதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குச் சொல்லப் பட்டிருந்தது. குழந்தைகள் கூட பாவத்தின் சின்னங்கள் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. கணவனைத் திருப்தி படுத்துவது ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவள் அம்மா வாழ்ந்த வழி அது.

நாம் தமிழ் கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்வது உலகத்தில் பெண்ணுக்குப் பொது விதி. காலம் மாற மாற பல இடங்களில், அவள் நிலையில் மாற்றங்கள் சிறுகச் சிறுகத் தோன்றி விட்டன.

இப்புத்தகத்தில் எழுதப் பட்டிருந்த இன்னொரு செய்தி கூட வியப்பை அளித்தது. ஆண், பெண்ணின் கூடல், பிள்ளை பெறுவதற்காக மட்டும் என்ற கொள்கை பற்றியும் எழுதியிருக்கின்றாள். அமெரிக்காவிற்குப் பின் தான் ஆஸ்திரேலியாவின் உதயம். புலம் பெயர்வது என்பது மனிதனுக்கு மட்டுமல்ல. அவன் வரும் பொழுது அவன் தங்களிடம் உண்டாக்கிய கலாச்சார மூட்டைகள், நம்பிக்கை எல்லாம் கொண்டு சென்றிருக்கின்றான்.

கார்லாவின் அம்மாவைப் பார்க்கலாம். அம்மாவின் அன்போ அரவணைப்போ இல்லை. தன் கணவன்தான் உலகம் என்ற வாழ்க்கை. இத்தனைக்கும் படித்தவள். பள்ளி ஆசிரியை.

சின்ன வயதில் சீரழிக்கப்பட்ட பெண் கார்லா. படிக்கப் போன இடம் கான்வென்ட். அங்கும் அவளுக்கு கிடைத்த அனுபவம் கசப்பானது. கண்டிப்பு நிறைந்த ஆசிரியை. அவரும் ஓர் கன்னியாஸ்த்ரி. வகுப்பறையில் சில கண்கள் வரையப் பட்டிருந்தன. ஜீசசின் கண்களாம், பாவம் செய்கின்றார்களா என்று பார்க்கும் கண்களாம். கடவுளின் பார்வை கூட அவளுக்கு அச்சமளித்தது. அன்பே உருவான கடவுளை அச்சப்படுத்துபவராக அவளுக்கு அடிக்கடி காட்டப்பட்டது.

முத்தமிட்டால் கர்ப்பம் தரித்துவிடும் என்றார் ஒரு சிஸ்டர். கார்லா தன்னைக் குற்றவாளியாக நினைத்தே ஒவ்வொரு வினாடியையும் கழித்தாள். அச்ச உணர்வில் அமைதி இழந்தாள். எதற்காக ஈடன் தோட்டத்தையும் தோற்றுவைத்து, அங்கு சாப்பிடக் கூடாத கனியையும் ஏன் இறைவன் தோற்றுவித்தான்? அத்தனை கேள்விகள் பிறந்தன. ஆனால் பதில் கிடைக்கவில்லை. கேள்விகள் மட்டும் கூடிக் கொண்டிருந்தன.

அன்பையும் அமைதியையும் தேடி அவள் கன்னி மாடத்தில் சேர்ந்தாள்.

அங்கும் அமைதி கிட்டவில்லை. அந்த வாழ்க்கையில் ஒட்டவில்லை.

அங்கிருந்து ஓடுகின்றாள். புகலிடம் தந்தவனை மணக்கின்றாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இந்த நிலையில் அவளுக்கு ஒருவனிடம் காதல் பிறக்கின்றது. கணவனைப் பிரிந்து காதலனுடன் வாழ்கின்றாள். அந்த வாழ்வும் நிலைக்கவில்லை. ஓர் விபத்தில் காதலன் மரிக்கின்றன். மனமுடைந்து போகின்றாள்.

விபச்சாரத் தொழிலில் இருக்கும் ஓர் ஏஜண்டிடம் வேலைக்குச் சேர்கின்றாள். நாளடைவில் அவளும் அத்தொழிலில் இறங்கி விடுகின்றாள். அதன் பின் அவள் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. வயதாகும் வரை அத்தொழிலில் இருந்து பின்னர் தன் மகள் குடும்பத்துடன் தங்கி இருக்கும் ஊருக்கே வந்து வாழத் தொடங்கு கின்றாள்.

எச்சூழ்நிலையிலும் அவள் மனம் மட்டும் கேள்விகள் கேட்பதை நிறுத்தவில்லை. அவள் உணர்வுகளை அவள் சொல்லுவதிலிருந்து பார்ப்போம்.

அவள் விரும்பிய அன்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.

“நான் இயல்பானவளாக மாறுவேனா? என்ன முயன்றும் என் உணர்வுகளை மூளையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அது எலாஸ்டிக் போன்று திரும்பத் திரும்ப வந்து ஆட்டிப் படைக்கின்றது.”

ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுக்க அறிவுரைகள் கிடைக்கின்றன. அவளும் மனத்தைத் திருப்ப நினைக்கின்றாள். ஆனால் மனமோ அவள் கட்டுப்பாட்டில் இல்லை.

தன்னை ஏதோ ஒர் கெட்ட சக்தி இப்படி இழுத்து வந்ததாக நினைக்கின்றாள். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களின் தாக்கம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அவள் பயணத்தில் இறைவனின் எண்ணத்தையும் உடன் சுமந்தாள். உள்ளுக்குள் இருக்கும் சின்னப் பெண் எழுந்து அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள். இந்த மனப் போராட்டத்தில் காலம் ஓடிவிடுகின்றது. ஆனால் எப்படியோ பக்குவம் வந்துவிடுகின்றது. எழுத ஆரம்பிக்கின்றாள்.

ஜெயகாந்தனின் ராசாத்திக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் கிடையாது. ஒரு பிடி சோறு வேண்டும். வேலை கிடைத்த நேரம் கல்லைச் சுமந்தாள் . அது கிடைக்காத போது மனிதனை நாடினாள். அவள் ஒரு குடிசை வியாபாரி. தத்துவங்கள் அவள் நினைவில் தோன்றாது. அது ராசாத்திக்கு வியாபாரம்.

கிரிஜாவின் நிலை வேறு. கொஞ்சம் படித்தவள். செங்கல் வீட்டில் குடியிருக்கின்றாள். அவளுக்குத் தேவையான பொழுது மட்டும் போதும்.
அவள் மனம் அவளுக்குக் கட்டுப்பட்டது.. சிந்திக்க முடிகின்றது. சிந்தனைச் சிதறல்கள் பார்க்க முடிகின்றது.

கார்லாவின் வாழ்க்கை வித்தியாசமனது. சின்ன வயதில் பெற்றவனே கெடுத்து அவள் மனத்தைக் குதறிவிட்டான். அரவணைக்க வேண்டிய அம்மாவோ அவள் கணவனே உலகம் என்று இருந்து விடுகின்றாள். ஒதுங்கிய கன்னி மாடமும் உதவவில்லை. எனவே அவள் தன் உணர்வுகளுக்கு இடமளித்து ஓட ஆரம்பித்தாள்.

ஆசிரியையின் மகள். ஆஸ்ரமத்தில் படித்தவள். கொஞ்ச நாட்கள் துறவி வேஷங் கட்டியவள். அதனால் மனம் அலைபாய்கின்றது. அவள் எழுத்துக்களில் அவளைக் காண முயல்வோம்.

உள்ளமும் ஆத்மாவும் வேறானவை. அவற்றின் அதிர்ச்சி அலைகள் வெவ்வேறான‌வை. உள்ளத்தின் கட்டமைப்புகள் அவள் வாழ்க்கைப் போக்கில் நேரிய முறையில் பேணப்பட வில்லை. இந்த உணர்ச்சிகளின் ஈடுபாட்டில் திருப்திப்படும் ஆசையை அவள் தவிர்த்தால், கடவுளோடு அவள் ஐக்கியமாக முடியும். வாழ்வில் தனிமை உணர்ச்சியின்றி எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியும்.

ஷேக்ஸ்பியர் சொன்னது நினைவிற்கு வருகின்றது.

“எதுவும் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. சிந்தனைதான் அப்படி எண்ண வைக்கிறது” என்று சொல்கிறார்

காலம் ஓடுகின்றது.

“உண்மையை நீ அறிந்து கொள்ளும் போது உனக்கு விடுவிப்புக் கிடைக்கிறது.” ‍‍‍‍‍‍
‍‍‍- ஏசு கிறிஸ்து.

முதுமையில் இந்த வலையினின்றும் விடுபட்டு மகள் தன் குழந்தைகளுடன் வசிக்கும் இடம் புறப்பட்டு விடுகின்றாள். அப்பொழுது அவளிடம் எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது.

மெய்யான பாடத்தைக் கற்றுக் கொண்டாள் அவள்.

சுயத்தன்மையை ஏற்றுக் கொள்வது (நேர்மைப் பண்பே தீயவற்றை முற்றிலும் நீக்க வல்லது). கடவுளின் (படைப்புப்) பெண்ணைக் காண‌‌ அவள் கடவுளின் அழைப்புப் பெண்ணை நோக்கினாள்.

அவள் வாழ்க்கை வண்டி, நிலைக்கு வந்து அமைதியாக நின்றுவிட்டது. இப்பொழுது எழுதுவதில் இன்பம் காண்கின்றாள்.

ஒரே செயல். அதற்கு எத்தனை கோணங்கள்!

குடிசை வாழ் பாலியல் தொழில் பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிப் பெண்களைச் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். தொழில் செய்யும் பொழுது சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிக்க அவர்கள் வைக்கப் பட்டிருக்கும் சிறைகளுக்குப் போய் பேசி இருக்கின்றேன். உளவியல் ரீதியாக அவர்கள் உணர்வுகளை, அவர்கள் வாழ்க்கையினைக் கண்டேன். அவர்களை எப்படி வழி நடத்துவது?

1990 இல் தமிழக அரசு பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான பெண்களை விடுவித்து வந்து புனர்வாழ்வு கொடுக்க முயன்றது. எத்தனை பிரச்சனைகள் ! எத்தனை சிக்கல்கள் ! விமர்சனம் எளிதாகச் செய்துவிடலாம். பாலியல் பிரச்சனை உலகியலில் நிரந்தரமாக
இருக்கின்றது.

அப்பப்பா , இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு!

கார்லா கதை சொன்னதற்கு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. அதனைக் கூறியாக வேண்டும். ஓய்வுக்கு ஒதுங்கிய நிலையிலும் எழுபது வயதான காலத்திலும் அவளைச் சில வாடிக்கைக் காரர்கள் வந்து பார்ப்பதும் சில நாட்கள் தங்கிச் செல்வது பற்றியும் எழுதி யிருக்கின்றாள்.

அப்பொழுது அவள் ஆண் மனத்தைப் பற்றி கூறுகின்றாள். அவளைத்தேடி வருகின்றவர்கள் உடல் சுகத்தைத் நாடியல்ல. மனத்திற்கு இதம் தேடி வந்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை எப்பொழுது உதயமானது ? உடலுறவுக் காலங்களில் உள்ளம் எங்கே, எப்படி இயங்குகின்றது ? சில பெண்களிடம் இருக்கும் அந்த அலைவரிசயை ஆண் புரிந்து கொண்டு விட்டால் அவளை எப்பொழுதும் ஆண்மனம் நாடுகின்றது. சரியா தப்பா, எப்படி என்ற வாக்கு வாதத்தில் இப்பொழுது இறங்க விரும்பவில்லை.

கார்லாவின் கதையின் முடிவில் ஆண்மனத்தை ஓரளவு தொட்டுக் காண்பிக்கின்றாள்.

ஜெயகாந்தன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. கூறவும் மாட்டார்.

கார்லா ஆண் மனத்தை, குணத்தை படம்பிடித்துக் காட்டுகின்றாள். அவளே கதையின் நாயகி. அவளே கதையின் ஆசிரியை. அவளால் முடியும்.

மனம் விட்டுப் பேச ஓர் தோழமை வேண்டும். ஏன் ஆணைத் தேடிப்போகக் கூடாதா ? பெண்மையுடன் கூடிய தோழமை வேண்டியிருக்கின்றது. பெண் என்ன செய்வாள் ? அவளுக்கு ஆறுதல் வேண்டாமா ? தாய்மையின் சுகம் ருசித்தவள். அது அவளுக்குத் தெம்பு கொடுக்கின்றது. ஏற்கனவே மூளைச் சலவை செய்யப் பட்டவள். குடும்பத்துடன் கட்டிப் போடப் பட்டவள். அது அவளுக்குப் பழகிப் போய்விட்டது.

இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா? சொல்ல முடியாது. வீட்டுப் பறவைக்கு இப்பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவளும் ஆறுதலைத் தேடி வெளியில் செல்லலாம். அத்தகைய கதைகளும் வரும்.

வர ஆரம்பித்துவிட்டன.

நல்ல குடும்பத்தில் பிறந்தவள், வசதியானவள் ஏன் விலைமாதாக மாறினாள்? அவள் உள்ளுணர்வு மட்டும் காரணமா? அந்த உணர்வைத் தூண்டியது , அவளை அந்த முடிவிற்கு ஓட்டியது எது?

படித்த தாய். அதுவும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையின் மகள். பல சகோதர சகோதரிகள். கிறிஸ்தவ பள்ளி அதுவும் கன்னியாஸ்த்ரீகள் ஆசிரியைகள். கன்னி மாடத்தில் துறவியாகவும் ஒண்டுகின்றாள். ஏன் இந்தத் தொழிலில் தள்ளப் பட்டாள்? அவள் எழுத்தைப் பார்த்தால் முட்டாள் பெண்ணாகத் தெரியவில்லை. பெற்ற தகப்பன் ஆரம்பித்து அவள் போன இடங்களில் எல்லாம் சொல்லாலும் காட்சிகளாலும் அவள் அச்சப்படுத்தப் பட்டாள்.

சூழ்நிலைத் தாக்குதலில் தடம் புரண்டு போய்விட்டாள்.

‘சில நேரங்களில் சில மனிதர்களில்’ கங்கா முதலில் அப்பாவிப் பெண். ஆனால் பின்னால் படித்து நல்ல உயர் நிலைக்கு வந்துவிடுகின்றாள். அந்தஸ்துள்ள உத்தியோகம். அப்படி யிருந்தும் கெடுத்தவனை ஏன் தேடுகின்றாள்? அவனுடன் பழகுவதால் வாழ்வு கிடைக்காது என்று தெரிந்தும் பழகுகின்றாள் ஏன்?

அடுத்து நாம் கங்காவை அலசுவோம்.

(தொடரும்)

+++++++++++++++++++++++++++++++
seethaalakshmi@gmail.com

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

சீதாலட்சுமி


வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும்.

தாம்பத்தியத்தின் இனிமையைப் ‘பிணக்கில்’ அருமையாகக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன்.

பிணக்கின் கணக்கைப் பார்க்கலாம்

மருமகள் சரசா தன் கணவன் அறைக்குப் பால் எடுத்துச் செல்லும் பொழுது கைலாசம் பிள்ளையின் பார்வையும் தொடர்ந்தது. அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடவும் அவர் பார்வையும் கதவில் முட்டி நின்றது.

வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம். பக்தி, அன்பு இத்தனையும் கொண்டு வடிவம் பெற்ற ஒர் அழகுப் பெண் அங்கிருந்து அருகில் வரவும் கைலாசம் தாவி அவளை அணைக்கப் பார்க்கின்றார்.

அவர் பத்தினி தர்மாம்பாளின் வாலைக் குமரியின் தோற்றம்.

கற்பனையில் மிதக்கும் கைலாசம் பிள்ளைக்கு அறுபதுக்கு மேல் வயதாகின்றது. ஆச்சி தர்மாம்பாள் தன் பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது கைலாசம் தன் வாலிபப் பிராய நினைவுகளில் மனத்தை மேயவிட்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார்.

பால் தம்பளரை தர்மாம்பாள் நீட்டிய பொழுது சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

“பிள்ளை இல்லாத வீட்லே கெழவன் துள்ளியாடறானாம்..கையை விடுங்க”.

“யாருடி கெழவன்?” என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.

“இல்லே, இப்போத்தான் பதினேழு முடிஞ்சு பதினெட்டு நடக்கு. பொண்ணு பாக்கவா”

“எதுக்கு நீதான் இருக்கியே” அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்.

“ஐயே, என்ன இது ?”

மறுபடியும் சிரிப்புதான். கிழவர் பொல்லாதவர் கற்பனைக் குதிரை வேகமாகப் பறக்கின்றது. கைலாசம் தன் மனைவியைக் காணும் பொழுது தன்னையும் கண்டார்

கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரித்தது.

அந்த தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. “சீ எட்டி நில்”, என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாக்கு தாங்காது.
சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கை கழித்துவிட்டார்கள். இதுவரை ஆரோக்கியமான தம்பத்யம் நடந்தது.

கைலாசம் நாவில் சனி உட்கார்ந்தது.

ஆரம்ப காலத்தில் தர்மாம்பாள் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது தாசி கோமதியுடன் நீலகிரிக்குச் சென்றதைச் சொல்லுகின்றார். அதுவும் எப்படி?

“அந்தக் காலத்துலே அவளுக்குச் சரியா யாரு இருந்தா.. தாசின்னா தாசிதான். “ இது அவர்.

“நானும் எத்தனியோ பேரைப் பார்த்திருக்கேன். ஆம்புள்ளைனா நீங்க தான் “

கைலாசம் பிள்ளைப் பேசப் பேச தர்மாம்பாள் பொடிப்பொடியாக சிதைந்து கொண்டிருந்தாள்.

தர்மாம்பாள் கிழவிதான். கிழவி பெண்ணில்லையா ?

அன்று முதல் அவள் அவருடன் பேசுவதில்லை. அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றாலும் பிறர் மூலம் அவைகளைச் செய்தாள். உயிர் ஒடுங்க ஆரம்பித்தது. கடைசி நிமிடங்களில் கூட அவர் அவள் வாயில் விட்ட பாலை விழுங்காமல் பல்லை இறுக மூடி உயிரை விட்டாள்.

எத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த இன்ப வாழ்க்கை ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்துவிட்டது.

ஏன்?

இது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனாலும் விஷ வார்த்தைகள் தாம்பத்தியத்தை அழித்துவிட்டது. அறிவுரை கூறும் நீதிக் கதையல்ல. ஆனாலும் படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் அவலக் காட்சி. பல குடும்பங்களில் வேண்டு மென்றே நடைபெறும் துன்பியல் நாடகம். பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் இந்த ஆசை வரலாமா?

இளமைக் கால அனுபவங்களாக செய்திகள். வெளியூர் சென்று வந்தால் வித விதமான கற்பனை பொய்ப் மூட்டைகள். அடுத்தவன் பொண்டாட்டியின் சிறப்பைக் கூறி “பொண்டாட்டின்னா அவளைப் போல் இருக்கணும்” என்ற ஒப்பீட்டு வருணனைகள், ஒன்றா இரண்டா? பிணக்கு வராது. காயப் படும் பெண் மரத்துப் போவாள். அவள் ஜடத் தன்மை பார்த்து வெறுப்பு கொண்டு பரபரப்பைத் தேடி மனம் அலைந்து அவனும் தொலைந்து போவான்.

இப்படி நினைத்துப் பார்க்கலாமே.

ஏங்க, உங்க சின்ன வயசுக் கதை நன்னா இருக்கு. எல்லாருக்கும் சின்ன வயசே ஜாலிதான். நான் படிக்கும் போது குமார்னு ஒரு பையன். என்னைச் சுத்தி சுத்தி வருவான்.

அவள் சொல்ல ஆரம்பிக்கவும் அவன் முகம் முதலில் சுருங்கும்.

நாங்க ஊரைச் சுத்துவோம். கோயில்லே உட்கார்ந்து அரட்டை..

சரி போதும். அவன் பொறுமையை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

நாங்க சினிமாவுக்கும் போவோம். அவன் பொல்லாதவன். நிறைய சேட்டை செய்வான்.

போதும்டி நிறுத்து. இவ்வளவு கேவலமானவளா? முன்னாலே தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருக்க மாட்டேன்

அவன் பேசினால் அவள் கல்லாய் இருக்கணும். அவள் பேசினால் அவன் மட்டும் எரிமலையாகலாம். பெண்ணும் மனுஷ ஜன்மம்தானே.

பெண்ணச் சீண்டிவிட வேண்டும். அவளுக்குக் கோபம் வரவேண்டும். என்ன வக்கிரமான ஆசை!

அழகு மனைவியை மறந்து பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த மாதவியை விட்டுப் பிரிந்து கோவலன் சென்றதற்கும் இது போன்ற பாடிய வரிப் பாடல்கள்தானே காரணம்.

இல்லறம் நல்லறமாக நடக்க நாவையும் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தனக்கு உரிமையானவரை அடுத்தவர் பார்ப்பதைக்கூடத் தாங்காது மனம். இது இருபாலாருக்கும் பொருந்தும். என் பணிக்காலத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டைகளுக்கு உளறல்கள் காரணமாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன்.
உடலும் உள்ளமும் உரமாக இருக்க, எழுபதிலும் இளமையாக இன்பம் நேராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் விரிசல் வந்தால் துன்பம் அவர்களுடன் நிற்காது. கோபத்தில் அவள் குழந்தைகளை அடிப்பாள். அவர்கள் தேவைகளைக் கவனிப்பது கூடப் பாதிக்கப் படும். சிலவினாடி உளறல்கள் குடும்ப அமைதியைச் சாகடிக்கும் விஷப்பூச்சிகளாகி விடும். பிணக்கு கதை நமக்குணர்த்துவது பெரிய படிப்பினை.

இருபத்து நான்கு வயதில் அறுபது வயது வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் ஜெயகாந்தன்.

இளமையில் முதுமையின் துள்ளல்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். என் தோழி ஒருத்தியின் கணவர் அடிக்கடி வெளி நாடு செல்வார். வந்த பின் வகை வகையாக அவர் பல நாட்டுப் பெண்களை அனுபவித்ததாக நிறைய அளப்பார். அவளோ சண்டை போடாமல் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாளாம்.. அவள் கணவருக்குக் கோபம் வந்து விட்டது. ஏன் தெரியுமா? அவர் சொன்னதைக் கேட்டு அவள் சண்டை பிடிக்கவில்லையாம். அவளுக்கு அவர் மேல் ஆசை இல்லையாம். இப்படியும் புருஷ மனம் இருக்கின்றது!

மனக்குரங்கின் மகிமையே மகிமை. அது எப்படியெல்லாம் தாவும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

புதுச் செருப்பு கடிக்கும் கதையிலும் இன்னொரு குணத்தையும் சொல்லாமல் காட்சியாகக் காட்டுகின்றார்.

அவர் கதைகளில் அவர் உரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நேரடிச் சந்திப்புகளிலும் நடக்கும் உரையாடல்களும் அப்படியே. சில நேரங்களில் அவர் காட்சிகளைப் பேச வைத்துவிடுவார்.

ஆறு மாத காலம் ஒருத்தியுடன் இருந்து பார்த்தும் ஏமாற்றம், அதனால் ஏற்பட்ட புகைச்சலில் திணறி வீட்டை விட்டு இன்னொரு பெண்ணிடம் ஓடி வருகின்றான். கிரிஜா அவனுக்குப் புதியவள் அல்ல. வந்தவன் உடனே அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. குமுறுகின்றான். புலம்புகின்றான். எதற்காக வந்தான்? ஒடிந்து போன நிலையில் அவன் சாய ஓர் இடம் வேண்டும். பரிவுடன் அவனைத் தேற்ற ஓர் தோழமை வேண்டும். காயப் பட்ட மனத்திற்கு ஒத்தடம் பெற வேண்டும். இப்படியும் மனிதன் ஆறுதல் தேடுகின்றான்.

வெளிப்படையாக ஜெயகாந்தன் எதுவும் கூறவில்லை. ஆனால் வேறு ஒரு கதையில் இது கூறப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் கூற்று. அதுவும் ஓர் விலைமாதின் கூற்று. அந்தக் கதையின் பெயர்.

GOD’S CALL GIRL

கார்லா என்ற ஓர் விலைமாது தன் சுய சரிதையில் எழுதியிருக்கின்றாள்.

கதையின் தொடக்க முதல் கடைசி வரை கடவுளையும் சுமந்து செல்கின்றாள். கடவுளின் விலைமகளாக இருந்தவள் கடவுளின் பெண்ணாகின்றாள். தெள்ளிய நீரோட்டமாக தங்கு தடையின்றி கதை செல்லுகின்றது. சம்பவங்களைவிட உள்ளத்தின் உலாவைக் காணலாம். அடுத்து அந்தக் கதையைப் பார்க்கலாம். நம் ஜெயகாந்தன் கோபித்துக் கொள்ளமாட்டார்.

தொடரும்

+++++++++++++++++++++++++++++++
seethaalakshmi@gmail.com

Series Navigation

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

சீதாலட்சுமி


இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப் பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ?

என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள் பெற்றவள் நான். எப்பொழுதும் மனத்தில் சிந்தனைகள் தோன்றி என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும். பிறர் எழுதும் கதைகளுடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

புதுமைப்பித்தன்.

நான் ரசித்தவர்களில் அவரும் ஒருவர்.

புதுமைப் பித்தன் எழுத்துக்களில் வேகமும் ஆத்திரமும் உணர்ந்திருக்கின்றேன். தான் எழுதும் பாத்திரத்துடன் ஒன்றிப்போய் சமுதாயத்தின் மீது அக்கினிக் குழம்பை வாரி வீசுவார். நானும் சீக்கிரம் உணர்ச்சி வயப்பட்டு விடுவேன். அதன்பலன் வேகத்தில் விவேகம் வீழ்ந்துவிடும். பக்குவம் ஏற்பட பல ஆண்டுகளாயின. பிறர் எழுத்தைப் படிக்கும் பொழுதும், சிலர் பேச்சுக்களைக் கேட்கும் பொழுதும் நிஜத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்.

“கதை அளக்கின்றார்கள் “ என்று ஒரு சொல் வழக்கில் வரும். புதுமைப்
பித்தனிடமோ, ஜெயகாந்தனிடமோ அந்த சமரசம் கிடையாது. அவர்கள் எண்ணியது எழுத்தில் வந்துவிடும்.

எழுத்துலகில் ஜெயகாந்தன் வந்த காலத்தில் புதுமைப்பித்தன் நினைவும் உடன் வந்ததை மறுக்க இயலாது. ஜெயகாந்தனிடம் சிறிது வித்தியாசத்தைக் கண்டேன்.” வாழை ப் பழத்தில் ஊசி சொருகுவது போல் “ என்று சொல்வார்களே , அந்த தன்மையை சில கதைகளில் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் கடுமை எள்ளளவும் குறைந்திருக்காது. அவர் கதைகளை மேலெழுந்தவாறு படித்துவிட்டுப் போட்டு விடமுடியாது. மனத்தை ஆழ்ந்து செலுத்திப் படிக்க வேண்டும். அல்லது முத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடியாது. அழுத்தம் கொடுத்து எழுதிய உரையாடல்கள் வரும்.

புதுச்செருப்பு கதையினைப் பார்ப்போம்.

நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டன
ஆனாலும் கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை.
அவன் விருப்பத்திற்கு அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா?

ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.

பிள்ளைப் பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில்
வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும் , அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும்.. பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப் படைக்கின்றன.

“பெற்றோர்கள் சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப் படுத்தின” இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம். ஆனால் இது யதார்த்தம். என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்த காலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்தின.

அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்த காலம்.

திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.

“ நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது” இது ஜெயகாந்தன். ஒருத்தியல்ல, ஆயிரக் கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன்.

நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று. வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான். சொல்லப் போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது.

“பாருங்கோ, வய்பா வர்ரதற்கு டிரெய்ண்ட் ஹாண்டா கேக்குறாங்க.? நான் டிரைண்ட் ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன் “

இதைவிட ஓர் சாட்டையடி இருக்க முடியுமா” ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால் , அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள்.

அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஓர் பாடம்.

“செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ ! அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?!”

இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச் செருப்பு கடிக்கும்” கதை தாம்பத்தியத்தின் நாடியைப் பிடித்துக் காட்டுகின்றது. அவளிடம் அவன் எதை எதிர்பார்த்தான்? அவளுக்கு மட்டும் அது முதல் இரவு. அவனுடைய அணுகல் அவளை மிரட்டி விட்டதா? அல்லது விருப்புடன் இணங்க வேண்டியவளிடம் எரிச்சலையும் கசப்பையும் உண்டு பண்ணிவிட்டானா? குற்றம் யார் பக்கம்?

இந்தக்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? இந்தக் காலத்திலும் நடக்கின்றது. ஆரவாரமின்றி மவுனமாக வந்து அமைதியை அழித்து விடும் பிரச்சனை இது. ஒரு நாளில் முடிந்துவிடக் கூடியதுமில்லை

நம்மைச் சுற்றி நடப்பவைகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பொழுது போக்கிற்காக எழுதுபவர் அல்லர் ஜெயகாந்தன். புத்திமதிகள் கூறுவதும் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அவர் உரையாடல், கதையில் வரும் உரையாடல், காட்சிகளைக் காட்டும் பொழுது மவுனமாக நடத்தும் உரையாடல். எல்லாம் நம்மை கொஞ்சமாவது சுயதரிசனம் செய்ய அழைத்துச் செல்லும்.

மூன்ரு வருடங்களுக்கு முன்னால் கணினியில் ஒரு நட்பு. அவன் பெயர்
ராஜு ( பெயர் மாற்றியிருக்கின்றேன் ). அவன் திருமணமாகி விவாக ரத்தும் செய்து விட்டான். யாரவது ஒரு பெண்ணைப் பார்க்கச் சொன்னான். விவாகரத்திற்குக் காரணம் கேட்டதற்கு , மணம் முடிந்த பிறகே அவளுக்குப் பைத்தியம் என்று தெரிந்தது என்று கூறினான். உடனே அவனிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் பழகப் பழக அவனாக நடந்தவைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவன் அணுகல்களுக்கு அவன் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காததால் எரிச்சலில் அவளைப் பைத்தியம் கிறுக்கு என்று திட்டியிருக்கின்றான். ஒரு நாள் அடித்திருக்கின்றான். திட்டும் அடிகளும் தொடர்ந்தன. இன்பமாக இருக்க வேண்டிய மணித்துளிகள் அந்தப் பெண்ணிற்குத் துன்பமாக மாறவும் மன நோயாக மாறி இருத்தல் கூடும். இது என் அனுமானமே.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்ற சொல் வழக்கில் உண்டு.

ஆனால் அதனால் பலரின் தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுகின்றதே!
காம சாஸ்திரம் தோன்றியது இந்த மண்ணில்தான். பொதுப்படையாக
எதுவும் கூற முடியாத பிரச்சனை. திருமணத்திற்குப் பின் சிறிது காலமாவது இருவரும் ஒர