முள்பாதை 17

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மறுநாள் அல்லாமல் அதற்கும் அடுத்த நாள்.
அன்று காலையில் எழுந்ததும் ராஜஸ்வரி வழக்கம்போல் வீட்டில் நடமாடவில்லை. அத்தை எனக்காக காபி கொண்டு வந்தாள்.
எழுந்துபோய் காபி டம்ளரை வாங்கிக் கொண்டே “ராஜி எங்கே அத்தை?” என்று கேட்டேன்.
“கொல்லையில் இருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு அத்தை போய் விட்டாள்.
நான் காபியை குடித்துக் கொண்டே சமையலறை பக்கம் போனேன். அங்கே அத்தை தனியாக சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். அத்தைக்கு உதவி செய்யாமல் காலை வேளையில் கொல்லைப்புற திண்ணையில் உட்கார்ந்து கொண்டு துணியில் எம்பிராய்டரி செய்து கொண்டிருந்த ராஜியைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது.
“இதென்ன? இளவரசியார் இங்கே சாவகாசமாக உட்கார்ந்திருக்கீங்களே, யார் மீதாவது கோபமா என்ன?” ராஜேஸ்வரியின் பக்கத்தில் உட்காரப் போனேன்.
ராஜேஸ்வரி சட்டென்று தொலைவுக்கு நகர்ந்து கொண்டு “தொடாதே என்னை” என்றாள்.
நான் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.
“இந்த மூன்று நாட்களும் நான் விரதம் மேற்கொண்டிருக்கிறேன்” என்¡றள் முறுவலுடன்.
எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் அவளைத் தொடக்கூடாது என்றும், அவள் யார் மீதும் பட்டுவிடக் கூடாது என்றும் அவளைத் தனியாக ஏன் உட்கார்த்தி வைக்கணுமோ அது மட்டும் எனக்குப் புரியவில்லை. இயற்கையாக ஒரு பெண்ணின் உடலில் ஏற்படக் கூடிய மாற்றம் இது. இதைப் போய் பத்து பேருக்கும் தெரியும் விதமாக பறைச்சாற்றுவானேன்? நினைக்கும் போதே எனக்கு அருவருப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது. கிராமங்களில், ஆசாரம் மிகுந்த குடும்பங்களில் இந்த வழக்கம் இருக்கிறது என்று தெரியுமே ஒழிய கண்கூடாகப் பார்த்ததில்லை. ஏனோ எனக்கு இந்த வழக்கம் பிடிக்கவில்லை.
இந்தக் காலத்தில் கிராமத்துவாசிகள் பட்டணத்தில் இருப்பவர்களை விட எதில் குறைந்து போய் விட்டார்கள்? விவசாயத்தில் புதுப்புது வழிகளைப் பின்பற்றுகிறார்கள். நடை, உடை விஷயங்களில் புதுமையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அப்படி இருக்கும் போது இது போன்ற மூடப்பழக்கங்களிலிருந்து வெளியே வர ஏன் மறுக்கிறார்கள்?
நம் நாட்டு மனிதர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். புது பழக்கங்களைச் சட்டென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆயிரத்தில் ஒருத்தரோ இரண்டு பேரோ துணிந்து செயல்பட்டால் அவர்களை குத்திக் காட்டி பேசி, வாய்க்கு வந்தபடி விமரிசனம் செய்து, கடைசியில் ஒரு நல்ல நாளில் இவர்களும் அந்த பாதைக்கு வந்து விடுவார்கள்.
ராஜேஸ்வரி வயிற்று வலியால் அவஸ்தைப் படுவதை கவனித்த நான் அத்தையிடம் சென்றேன். “ராஜிக்கு மாத்திரை ஏதாவது கொடுத்தீங்களா அத்தை?” என்று கேட்டேன்.
“இதுக்கு மருந்து மாத்திரை எதுவும் இல்லையாம். கல்யாணம் ஆனால் தன்னால் சரியாகி விடுமாம்” என்றாள் அத்தை. அந்த மூன்று நாட்களும் ராஜேஸ்வரி சரியாக சாப்பிட மாட்டாளாம். முகம் வாடிப் போய் பிடுங்கிப்போட்ட கீரைத்தண்டாய் துவண்டு போய் விடுவாளாம்.
மதியம் ஆகிவிட்டது. எல்லோருடைய சாப்பாடும் முடிந்து விட்டது. கிருஷ்ணனுக்காக எதிர்பார்த்து எதிர்பார்த்து அத்தையும் சாப்பிட்டு விட்டாள்.
கிருஷ்ணன் வரவே இல்லை. சாமிகண்ணு ஏதோ காரியமாக அடுத்த ஊருக்குச் சென்றிருந்தான். ராஜேஸ்வரி வீட்டுக்குள் வரக்கூடாது. மது மற்ற குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டார்கள். இரண்டு மணி ஆகிக் கொண்டிருந்தது.
கிருஷ்ணன் வரும் ஜாடையே தெரியவில்லை. அத்தை குட்டி போட்டப் பூனையைப் போல் வாசலுக்கும் உள்ளுக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
“ராஜீ! இப்போ என்ன செய்வது? அடுத்த வீட்டு கோபாலனும் எங்கேயோ போயிருக்கிறானாம். மதியம் வீட்டுக்கு வருவானோ மாட்டானோ தெரியாதுன்னு அவனுடைய அம்மா சொல்லிவிட்டாள். இருந்தாலும் வரவர உங்க அண்ணனுக்கு வீட்டு நினைப்பே இருப்பதில்லை. நீ வீட்டுக்குள் வருவதற்கு இல்லைன்னு அவனுக்குத் தெரியும் இல்லையா. நேரத்திற்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போனால் என்ன? வேலையில் இறங்கிவிட்டால் அவனுக்கு உலகமே மறந்து போய் விடும்.” வருத்தமும், சலிப்பும் கலந்த குரலில் அத்தை சொன்னாள்.
அத்தை வருத்தப் படுவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருந்தது. கிருஷ்ணன் அத்தையின் சொந்த மகன் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். இங்கே வந்தது முதல் நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். அத்தைக்கு தன் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்ற பாரபட்சம் இல்லாததோடு, கூர்ந்து கவனித்தால் கிருஷ்ணனிடம்தான் பிரியம் அதிகமோ என்று நினைக்கத் தோன்றும்.
ராஜேஸ்வரியின் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் திருமணம் முடிந்து அத்தை புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது கிருஷ்ணன் ரொம்ப சின்னக் குழந்தை. குடித்தனம் தொடங்கிய நாலைந்து வருடங்களுக்குப் பிறகுதான் ராஜேஸ்வரி பிறந்திருக்கிறாள். அதனால் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் கிருஷ்ணன்தான் அத்தைக்கு மூத்த குழந்தை. பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் உயர்ந்தது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். சொல்லப் போனால் வளர்க்கும் போதுதான் பெற்றவர்களுக்குக் குழந்தைகளிடம் பாசம் ஏற்படுமாக இருக்கும்.
கிருஷ்ணன் வரவே இல்லை. நேரம் ஆகஅக அத்தையின் தவிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடைசியில் ஏமாற்றமடைந்தவள் போல் “இந்த வேளை அவனுக்கு சாப்பிடும் யோகம் இல்லை போலும். என்ன மனிதன் இவன்? அம்மா காத்திருப்பாள் என்ற நினைப்பாவது இருக்க வேண்டாமா? இன்னிக்குன்னு பார்த்து அவனுக்குப் பிடித்த அவியல் செய்திருக்கிறேன்” என்றாள் பெருமூச்சு விட்டுக்கொண்டே.
அத்தையின் வேதனையைப் பார்க்கும்போது என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ராஜேஸ்வரியுடன் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தவள் எழுந்து நின்று “அத்தை கேரியரில் எடுத்து வைய்யுங்க. நான் போய் கோடுத்துவிட்டு வருகிறேன்” என்றேன்.
“நீயா!” என்றாள் அத்தை.
“ஏன்? நான் போகக் கூடாதா? நான் எடுத்துக் கொண்டு போனால் உங்கள் மகன் சாப்பிட மாட்டானா?”
“அதென்ன பேச்சு? சாப்பிட மாட்டான் என்பதற்காக இல்லை. ஆனால் நீ எதுக்கு? வந்தால் சாப்பிடுகிறான். இல்லாவிட்டால் போகட்டும் விடு.” விருப்பம் இல்லாததுபோல் சொன்னாள் அத்தை.
“பரவாயில்லை அத்தை. வீட்டில் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்கும் போர் அடிக்கிறது. சும்மா ஜாலியாக போய் வருகிறேன். கொஞ்சம் தூரம் நடந்து விட்டு வந்தாற்போலவும் இருக்கும்.”
அத்தை அரைமனதுடன் கேரியரை எடுத்து வைத்தாள். “வழி உனக்கு நினைவு இருக்கிறதா?” சந்தேகத்துடன் கேட்டாள்.
“என்ன அத்தை? ராஜேஸ்வரியுடன் ஒரு தடவை போய் விட்டு வரவில்லையா என்ன? வழி மறந்து போவதற்கு இதென்ன பெரிய பட்டணமா? சென்னையிலேயே ஒரு தடவை போய்விட்டு வந்தால் பாதையை மறக்க மாட்டேன். அப்படி இருக்கும் போது கால்வாய் பக்கத்தில் ஒற்றையடிபாதை நினைவு இருக்காதா என்ன?”
“அவன் என்ன சொல்லுவானோ?” அத்தைக்கு தயக்கம் இன்னும் போகவில்லை.
“ஒன்றும் சொல்ல மாட்டான். பட்டினிக் கிடக்காமல் சாப்பாடு கொண்டு வந்ததற்கு எனக்கு நன்றியைத் தெரிவிப்பான். சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் பொருட்படுத்த மாட்டேன்.”
“ராஜி! நீ வேண்டுமானால் துணைக்குப் போகிறாயா?”
“அத்தை காலை முதல் அவள் வலியால் அவஸ்தை பட்டுக் கொண்டு இருக்கிறாள். எனக்கு ஒன்றும் ஆகாது. என்னை யாரும் தூக்கிக் கொண்டு போய்விட மாட்டார்கள். பயப்படாதீங்க” என்று சொல்லிக்கொண்டே அத்தையின் கையிலிருந்த கேரியரை வாங்கிக் கொண்டேன்.
“அண்ணீ! ஜாக்கிரதை. காலுக்கு செருப்புகூட இல்லை. வழியில் முட்செடிகள் இருக்கும். பார்த்து போகணும்.” ராஜேஸ்வரி எச்சரித்தாள்.
ராஜேஸ்வரி செருப்பு விஷயத்தில் ஏற்கனவே எச்சரித்து இருந்தாள். அவள் சொன்னதைக் கேட்காமல் நான் பாட்டுக்கு சேற்றிலும் சகதியிலும் செருப்புப் பேட்டுக் கொண்டே நடமாடியதில் செருப்பின் வார் அறுந்து போய்விட்டது. நேற்றிலிருந்து செருப்பு இல்லாமல்தான் நடமாடிக் கொண்டிருந்தேன். செருப்பை ரிப்பேர் செய்வதற்கு சக்கிலியனுக்கு அத்தை சொல்லிவிட்டிருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை.
கேரியரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். கையில் ஜர்மன் சில்வர கேரியருடன், கால்களுக்கு செருப்பு இல்லாமல் ஒற்றையடி பாதையில் நடந்து போகும்போது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. அம்மா எங்கே இருக்கிறாளோ? ஒரு தடவையாவது என்னைப் பற்றி நினைக்கிறாளோ இல்லையோ? நான் இப்படி இந்த நிலையில் இருப்பேன் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டாள். அம்மாவின் கற்பனைக்கு எட்டாத காரியத்தைச் செய்கிறேன் என்ற நினைப்பே எனக்குப் பெருமையாக, சந்தோஷமாக இருந்தது. வயல்வெளி வழியாக வீசும் காற்றை சுவாசித்துக் கொண்டே, வானத்தில் தெரியும் வெண் மேகங்களை, இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே நிதானமாக நடந்தேன். அத்தை வேதனை படுவதைக் காண சகிக்காமல் வந்தேனே தவிர கிருஷ்ணன் பட்டினியாக இருந்தால் எனக்கென்ன கவலை?
நான் போகும் போது கிருஷ்ணன் வாழைமரங்களுக்கு பாத்தியைக் கட்டிக் கொண்டிருந்தான். வேலையாட்கள் யாரும் கண்ணில் படவில்லை. சாப்பிட போயிருப்பார்களாக இருக்கும். கொட்டகையின் முன்னால் காய்கறி நிரப்பிய கூடைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
“சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.” உரத்தக் குரலில் சொல்லிக் கொண்டே கேரியரை சத்தமாக திண்ணையின் மீது வைத்தேன்.
திடுக்கிட்டாற்போல் கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் வியப்பு வெளிப்படையாகத் தென்பட்டது. “நீ எதுக்கு வந்தாய்?”
“சுவாமீ! தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்பீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும். தங்களுக்காகக் கொண்டு வரவில்லை. மைந்தன் சாப்பிடவில்லையே என்று அத்தை வேதனைப்படுவதைக் காண சகிக்காமல் கொண்டு வந்தேன்.”
கிருஷ்ணன் ஒரு வினாடி கண்ணிமைக்காமல் என் பக்கம் பார்த்தான். பிறகு கையிலிருந்து மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு சீரியஸான குரலில் “ரொம்ப சிரமப்பட்டு விட்டாய். எங்க அம்மாவுக்காக இவ்வளவு கஷ்டப்பட்ட மனுஷியை இதுவரையில் நான் பார்த்ததில்லை. நல்லது… அங்கே வைத்துவிட்டுப் போகலாம்” என்றான்.
எனக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. “நான் உனக்காக சாப்பாடு கொண்டு வந்தேனே ஒழிய உன் ஆணைகளை மேற்கொள்ள வரவில்லை. போகணும் என்று தோன்றிய போது போய்க் கொள்கிறேன். நீ ஒன்றும் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை” என்று சொல்லிவிட்டு திண்ணையின் மீது உட்கார்ந்து கொண்டேன்.
இதழ்களில் மலரப்போன முறுவலை அடக்கிக் கொண்டு கிருஷணன் மறுபக்கம் தலையைத் திருப்பிக் கொண்டதை நான் கவனிக்காமல் இல்லை. என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. மறுபேச்சு பேசாமல் கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து உட்கார்ந்து கேரியரைத் திறந்தான்.
நான் அவன் பக்கம் பார்க்கவில்லை. என் கவனம் முழுவதும் தோட்டத்தின் அழகை ரசிப்பதில் இருப்பதுபோல் உட்கார்ந்திருந்தேன்.
அவனும் என் பக்கம் பார்க்கவில்லை. சாப்பாடு சாப்பிடுவதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதுபோல் கர்மசிரத்தையுடன் வாழையிலையில் உணவை பரிமாறிக் கொண்டிருந்தான்.
அவன் சாதம் பிசைந்து கொள்ளும்போது சொன்னேன். “நீ இவ்வளவு பண்பு தெரியாதவனாக இருப்பாய் என்று நான கனவில்கூட நினைக்கவில்லை.”
உணவை வாயில் வைக்கப் போன கிருஷ்ணன் அப்படியே நிமிர்ந்தான். கண்களை அகல விரித்து, புருவங்களை உயர்த்தி வியப்புடன் பார்த்தான்.
கால்மீது கால் போட்டுக் கொண்டு முழுங்காலைச் சுற்றிலும் கைகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டே, எதிரே கொட்டகையின் மீது மலர்ந்திருந்த பீர்க்கையின் பூக்களை பார்த்துக்கொண்டே சொன்னேன்.
“இத்தனை வெயிலில் கால்கள் வலிக்க வலிக்க, கை மரத்துப் போகும் அளவுக்கு கேரியரை சுமந்து கொண்டு வந்திருக்கிறேன். குறைந்த பட்சம் நீ எனக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்லவில்லை. இது பண்பற்றச் செயல் இல்லாமல் வேறு என்ன?”
கிருஷ்ணன் சுற்றிலும் பார்த்தான். தலையை உயர்த்தி மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானத்தைப் பார்த்தான். “இது வெயிலா? வீட்டிலிருந்து இங்கே வருவது ஒரு தூரமா? இந்த கேரியரைச் சுமந்து கொண்டு வருவதற்குள் உன் கை மரத்துப் போய்விட்டதா?” வியப்பு அடைந்தவன்போல் கேட்டான்.
“அப்படி என்றால் உன் உத்தேசம்?” அவன் பக்கம் திரும்பி நேராக பார்த்தேன்.
கிருஷ்ணன் அரை வினாடி என்னைக் கூர்ந்து பார்த்தான். பிறகு தோள்களை குலுக்கிவிட்டு “ஐ யாம் சாரி. இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து ஸ்திரப்பட்டு விட்ட பிறகு பட்டணத்து மரியாதைகளை முற்றிலும் மறந்து போய்விடேன். ஐ யாம் ரியல்லி வெரி வெரி சாரி. தாங்க்யூ” என்றான்.
எனக்கு அவன் கண்களில் குறும்புத்தனம் தென்பட்டது. குரலில் லேசான கிண்டலும் இருந்தது. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னேன். “நீ இப்படி தாங்க்ஸ் சொல்வதைவிட சொல்லாமல் இருப்பதே மேல்.”
“அதென்ன?”
“தாங்க்ஸ் சொல்லச் சொன்னால் கிண்டல் செய்தால் என்ன அர்த்தம்?”
“நான் கிண்டல் செய்தேனா? உன்னையா?”
இந்த முறை சிரிப்பு அவன் கண்களில் மட்டுமே அல்லாமல் இதழ்கள் மீதும் லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் முகத்தைப் பார்த்கும் போது எனக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு “இல்லையா பின்னே? நன்றியை இப்படித்தான் சொல்வார்களா? ஒரு வார்த்தையைச் சொல்லும் முறையில், உச்சரிக்கும் விதத்தில் அர்த்தமே மாறிவிடும் என்று உனக்குத் தெரியாதா?” என்றேன்.
“போச்சுடா சாமி.” கிருஷ்ணன் பெருமூச்சு விட்டபடி சாப்பிட ஆரம்பித்தான்.
நான் சுற்றிலும் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன் வழக்கம்போல் மளமளவென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் தயிரை பரிமாறிக் கொண்டே “தங்களுடைய டேரா இங்கே இன்னும் எத்தனை நாட்களுக்கு?” என்று கேட்டான்.
இந்த முறை திடுக்கிடுவது என் பங்காயிற்று.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே தங்குவதாக அம்மையாரின் உத்தேசம்?” என்று கேட்டான். இந்த முறை அவன் முகம் சீரியஸாக இருந்தது.
என் முகத்தில் திடீரென்று ரத்தம் வேகமாகப் பாய்ந்தது. ரோஷம் பொங்கிக் கொண்டு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு “நான் இருப்பது உனக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தால் இன்று மாலையே கிளம்பிப் போய் விடுகிறேன்” என்றேன்.
“என் தங்கமே! நீ மட்டும் அப்படி செய்தாய் என்றால் இந்த முறை மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன். வெண்பட்டுப் புடவையை காணிக்கையாக சமர்ப்பித்து விட்டு மகராஜியாக இரு என்று ஆசிர்வாதமும் செய்வேன்.”
அவன் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தேன். இவன் என்னை போகச் சொல்லி முகத்திற்கு நேராக சொல்லிக் கொண்டிருக்கிறான். இது பரிகாசமா அல்லது உண்மைதானா? கிருஷ்ணன் ஊறுக்காய்க்காக தேடுவதுபோல் தலையைக் குனிந்து கொண்டிருப்பதால் அவன் முகத்தில் என்ன உணர்ச்சிகள் இருந்ததோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் பார்வையுடன் தன் பார்வை சந்தித்து விடாமல் ரொம்ப கவனமாக இருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
நான் அவன் பக்கம் பார்த்துக் கொண்டே “நானும் வந்தது முதல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ தெரியவில்லை. நீ மட்டும் என்னைப் பார்த்தது முதல் முள்மீது இருப்பது போல் ரொம்ப வெதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். என் வருகையால் உனக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டதோ கொஞ்சம் விவரமாக எடுத்துச் சொன்னால் சந்தோஷமாக இன்று மாலையே வண்டியில் போய் விடுகிறேன்.” கொஞ்சம் நிஷ்டூரமாகவே சொன்னேன்.
“நஷ்டம் எனக்கு ஒன்றும் இல்லை. நஷ்டமோ வேதனையோ அப்படி ஏதாவது இருந்தால் உனக்குத்தான் ஏற்பட்டிருக்கணும்.”
“எனக்கா?”
“ஆமாம்.”
“அப்படி என்றால் உன் உத்தேசம்?” குற்றம் முழுவதும் அவன்மீது சாட்டுவதுபோல் வேகமாக கேட்டேன்.
“நீ இங்கே வந்திருப்பது எந்தச் சூழ்நிலையிலும் உங்க அம்மாவுக்குத் தெரிவது உனக்காகட்டும், எங்களுக்காகட்டும் யாருக்குமே அவ்வளவு நல்லது இல்லை என்பதுதான் என்னுடைய உத்தேசம்.”
“என்ன?” திகைத்துப் போய்விட்டேன்.
“உங்க அம்மா டார்ஜிலிங் சென்றிருப்பதால் சாரதியிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீ இங்கே வந்திருப்பது எனக்குத் தெரியும். நீ நினைத்தது போல் சாரதி சென்னைக்கு வரவில்லை. அவனுடைய பயணம் கான்சல் ஆகிவிட்டது. கூடிய சீக்கிரத்தில் நீ இங்கிருந்து கிளம்புவது நல்லது என்னுடைய அறிவுரை மற்றும் எச்சரிக்கையும்.”
பதில் பேச முடியாதவள் போல் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணிமைக்கவும் மறந்து போனவளாக அவனையே ஏதோ அதிசய மிருகத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் என்ன பேசுகிறான்? இதைவிட அவமானம் வேறு இருக்க முடியுமா? அசல் இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்? தெரிந்ததாகவே இருக்கட்டும். தயக்கம் கியக்கம் எதுவும் இல்லாமல் முகத்திற்கு நேராக சொல்லுவதாவது? எரிமலைக் குழம்பாக கொந்தளித்துக் கொண்டே கடினமான குரலில் கேட்டேன். “எங்க அம்மாவுக்குத் தெரியாமல் வந்தேன் என்று நீ எப்படி நினைத்தாய்? சாரதி வரப்போவதால் நான் இங்கே ஓடி வந்து விட்டேன் என்று உன்னிடம் சொன்னது யார்?”
சாப்பிட்டு முடித்துவிட்டு கேரியரை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைகாரியத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் கண்கள் என் கண்களுக்குள் ஊடுருவது போல் பார்த்தன. பதிலுக்கு உடனே ஏதோ சொல்லப் போனவன் கட்டுப்படுத்திக் கொண்டு மௌனமாக இருந்தான். ஒரு நிமிடம் கழித்து மென்மையான குரலில் சொன்னான்.
“பொய் சொல்லணும் என்று நீ தீர்மானித்துக் கொண்டு விட்டால் எனக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் நம்மைப் பற்றி எல்லா விஷயங்களையும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்களிடம் பொய் சொல்லி சமாளிக்க நினைத்தால் அது வெறும் கேலி கூத்தாகி விடும்.”
செயல் மறந்தவளாக அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மீண்டும் அவன் குரல் கம்பீரமாக ஒலித்தது. “எங்களைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனால் உன்னைப் பற்றிய எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். அந்த விஷயம் உனக்குத் தெரியாது என்று இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. எப்படி தெரியும் என்று மட்டும் கேட்காதே. எனக்கு எல்லாமே தெரியும். உனக்கும் உங்கள அம்மாவுக்கும் நடுவில் வளர்ந்து வரும் இடைவெளி எனக்குத் தெரியாதது இல்லை. உங்க இருவருக்கும் நடுவில் பதில் சொல்ல முடியாமல் சிலசமயம் மாமா நலிந்து போவதும் எனக்குத் தெரியும்.”
அவன் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கக் கேட்க என் முகம் வெளிறிப் போய்விட்டது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். என் வாழ்க்கையின் ரகசியங்களை அறிந்து கொண்டு என்னை பிளாக்மெயில் செய்து கொண்டிருப்பவனை பார்ப்பதுபோல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்ப சாதாரணமான, எந்த விதமான தனித்தன்மையும் இல்லாத மனிதன் என்று நான் முடிவு செய்திருந்த நபர் இந்த கிருஷ்ணன்தானா என்று தோன்றியது.
பேசிக் கொண்டே இருந்தவன் என் முகத்தைப் பார்ததும் திடீரென்று நிறுத்திவிடான். என் கையைப் பற்றிக் கொள்வதற்காக தன்னையும் அறியாமல் நீண்ட அவன் கை அதற்குள் கட்டுப்படுத்திக் கொண்டதுபோல் பின்னால் நகர்ந்து விட்டது.
லேசான வருத்தம் கலந்த குரலில் மன்னிப்பு கேட்டுக் கொள்வது போல் சொன்னான். “சாரி மீனா! இதெல்லாம் உன்னிடம் சொல்லணும் என்று நான் நினைக்கவில்லை. நீ இங்கே அதிக நாள் தங்குவதோ, எங்களிடம் வந்திருக்கிறாய் என்று உங்க அம்மாவுக்குத் தெரிந்து போவதோ அவ்வளவு நல்லது இல்லை என்ற எண்ணத்தில் உன்னை எச்சரிக்கை செய்ய நினைத்தேன். அவ்வளவுதானே தவிர ….”
சட்டென்று நான் எழுந்து கொண்டேன். என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் அவனுக்குத் தெரியும் என்ற உண்மை தெரிந்த போது பைத்தியம் பிடித்து விட்டதுபோல் இருந்தது எனக்கு. என்ன பேசுவது என்நு தெரியாத நிலையில் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டேன்.
“நீ … நீ இப்படிப்பட்டவன் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. நான் ரொம்ப அபூர்வமாக நினுத்திருந்த இந்த பயணத்தை அபசுரமாக நீ மாற்றிவிடாய்.”
“மீனா!”
“எனக்கு இப்போ புரிந்து விட்டது. நீ வேண்டுமென்றே மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரவில்லை. ராஜேஸ்வரி வீட்டிற்குள் வரக்கூடாது. அத்தை வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள். சாமிகண்ணு ஊரில் இல்லை. நான் கட்டாயம் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவேன் என்று உனக்குத் தெரியும். என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்வதற்காக, இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக வீட்டுக்கு வராமல் இங்கேயே இருந்து விட்டாய். நீ ரொம்ப புத்திசாலி. புத்திசாலிகள் திட்டம் தீட்டினால் குறி தப்பாது இல்லையா. நீ எதிர்பார்த்தது போலவே நானும் வந்து சேர்ந்தேன் பார், என்னைச் சொல்லணும்.”
“மீனா!” தடுப்பது போல் அழைத்தான்.
நான் அவன் மறுப்பை கொஞ்சம்கூட லட்சியப்படுத்த வில்லை. எரிந்து விழுவதுபோல் மேலும் சொன்னேன். “இவ்வளவு பேசுவானேன்? ஒரே வார்த்தையில் நேராக சொல்லிவிட்டால் முடிந்து விட்டது. பெண்ணே! உங்கள் வீட்டிற்குள் எங்கள் யாரையும் வரவிட்டது இல்லை. எங்கள் வீட்டிற்கு வெட்கமில்லாமல் எதற்காக வந்தாய் என்று என்னை நேராகவே கேட்டிருக்கலாமே? மேலும் இதெல்லாம் என்னிடம் சொல்லணும் என்று நினைக்கவில்லையாம். என்ன நடிப்பு! என்ன நடிப்பு! பாவம், பெரிய மனிதன் என்ற பெயர் வேறு. பொய் சொன்னது யாரு? நீயா நானா?”
கிருஷ்ணன் என்னைத் தடுப்பதுபோல் ஏதோ சொல்ல வந்தான். ஆனால் நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“எங்க வீட்டு விஷயங்கள் எல்லாம் உனக்குத் தெரிந்தால் மட்டும் என்னை நீ அவமானப்படுத்த வேண்டுமா? அம்மாவுக்குத் தெரியாமல் நான் இங்கே வந்ததாகவே இருக்கட்டும். அந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டி கேலி செய்வதற்கு நடுவில் நீ யார்?
“மீனா! நான் உன்னைக் கேலி செய்தேனா? என் வார்த்தைகளை நீ அந்த விதமாக எடுத்துக் கொண்டாயா?” கிருஷ்ணன் திகைப்புடன் பின் வாங்குவது போல் சொன்னான்.
என்னைச் சொல்லிக் காட்டியதற்கு பழி வாங்குவதுபோல் அவனையும் வார்த்தைகளால் காயப்படுத்தினால் தவிர நிம்மதி இருக்காது போல் இருந்தது. அதனால் கடைசி அஸ்திரத்தைத் தொடுப்பது போல் ஏளனமாகச் சொன்னேன். “ஆமாம். எங்க அத்தையின் கையில் வளர்ந்தால் மட்டும் அவளுடைய நல்ல குணம் உனக்கு எப்படி வரும்? இருவருடைய ரத்தம் ஒன்றாகி விடுமா என்ன? என்னதான் மறுத்தாலும் அத்தையின் குடும்பத்தில் நீ வேற்று ஆளாகத்தான் தென்படுகிறாய்.”
மென்மையான இடத்தில் காயம் பட்டுவிட்டது போல் வேதனை அவன் கண்களில் பிரதிபலித்தது. அடுத்த நிமிடம் அவன் முகம் செக்கச் சிவந்துவிட்டது. வாயடைத்துப் போனவனாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். போகும் முன் நின்று அவன் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“உன் எச்சரிக்கைகளுக்கு என்னுடைய தாங்க்ஸ். விருப்பப்பட்டுத்தான் நான் இங்கே வந்தேன். அம்மாவுக்குத் தெரியாமல் நான் வந்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் வெட்கப்படவில்லை. இதொன்றும் மறைக்கப்பட வேண்டிய ரகசியம் இல்லையே. போனதும் நானே அம்மாவிடம் தெரிவிப்பேன். நான் இங்கே எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அத்தனை நாள் இருப்பேன். நான் உன் வீட்டுக்கு வரவில்லை. உன் எச்சரிக்கை, அறிவுரை எதுவும் எனக்குத் தேவையில்லை. இனிமேல் என்னிடம் பேசவேண்டும் என்றால் மரியாதையுடன் பேசு. இல்லாவிட்டால் பேசுவதையே நிறுத்திவிடு.”
சட்டென்று திரும்பி வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டடேன். பின்னாலிருந்து அவன் “மீனா! மீனா!” என்று அழைப்பது எனக்குக் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால் நான் லட்சியப்படுத்தவில்லை. பின்னால் திரும்பிப் பார்க்கவும் இல்லை.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்