தா
யூசுப் ராவுத்தர் ரஜித்

வீழ்கின்ற நாள்வரை
வியர்வை தா
பூக்களாய் வார்த்தை தா
நுகராத நாசியை
நோக்காத விழிகளை
நேசிக்கும் ஞானம் தா
பள்ளிக் கூடமாய்
பகைவரைக் காணும்
பக்குவமும் பலமும் தா
பதர்களையும்
பொத்திக் கொள்ளும்
கதிர்களின் இணக்கம் தா
வெள்ளத்தை வெயிலை
சுகிக்கின்ற பொறுமை தா
சப்பிப் போட்டாலும்
மரமாகும் திறனைத் தா
வாழும் நாளெலாம்
உனைத் தொழுகின்ற
உள்ளம் தா
பேச்சறிவு உள்ளவரை
குளராத சொற்கள் தா
இயற்கையாய் விழும்வரை
வலிக்காத பற்கள் தா
உணவுகள் செல்ல
உபாதைகள் கழிய
குடலுக்கு வலிமை தா
மழையாக ஞானம் தா
மலையாக மௌனம் தா
எனக்காக அழுவோரைக்
குளிப்பாட்ட கண்ணீர் தா
யூசுப் ராவுத்தர் ரஜித்