முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
Published February 12, 2010 • By
இளங்கோ
இளங்கோ

*
மரணித்து விடுவதாக..
முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..
ஏனோ..
பட்டென்று..
வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து
விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..
விடியற் சூரியனின்
இள மஞ்சள் பூசிய மழைத் துளிகள்
அபூர்வமாய் அவ்விலையின் மீது
முத்தமிட்டு நழுவியபோதே..
செய்தி எழுதப்பட்டுவிட்டது என்பதையும்..
முன்னறிவிப்பாகவே..
பழுத்த மஞ்சள் நிறம் வெளிறிவிட்டதையும்..
பூக்கள் தங்களுக்குள்
ரகசியமாக முணுமுணுத்ததை..
ஒட்டுக் கேட்டுவிட்ட வண்டொன்றின்..
ரீங்கார அலையில்..
மரம் ஒரு முறை..
மொத்தமாய் சிலிர்த்து அடங்கியதில்..
கூடுகளை இறுகப் பற்றிக் கொள்ள நேர்ந்தது..
பறவைகளுக்கும்
இரைக்காக வாய் பிளக்கும் குஞ்சுகளுக்கும்..!
*****
—