This entry is in the series 20100326_Issue

கே ஆர் மணி


சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம்

பக்கங்கள் புரட்டி
அதன் பெயர் தேடல்
அனிச்சையாய் நடந்தது.

கழிப்பறை
சமையலறை
மசானம்

ஆண், பெண், குழந்தை
வியர்வை, விந்து, வாந்தி
சளி, ரத்தம்
வாசனை திரவியங்கள்
திண்பண்டம்

இல்லை என்ற பதில் பெற்று
பறக்கின்றன பக்கங்கள்.

அப்பா இறந்தபோது
எறிந்து கொண்டிருந்த ஊதிபத்தி
பணம் பறித்து திட்டி அனுப்பிய
அவள் தலையின் அழுகிய ரோசா
தற்கொலை வாத்தியார்
பிண ஊர்தியின் டெட்டால்

களைப்படைகிறது தேடல்.

அதுவல்ல இது
என்று எல்லாம் கழித்தபின்னரும்,
பதிவுகளில் இதுவரை படாத
பெயரிடப்படாத எதுவோ ஒன்று
என முடிவு செய்த பின்னரும்,
பதிய மறுக்கிறது.

மறுபடி நிகழும்போதே
மட்டுமே அதற்கு
பெயர் வேண்டுமாம்.

அதுவரை பெயரின்றியே
செத்தபடி.

Series Navigation