அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

அமீரகத் தமிழ் மன்றம்


அமீரகத்தில் முதன் முறையாக மகளிர் மட்டுமே மேடையில் தோன்றிய வித்தியாசமான நிகழ்ச்சியை 100வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவினர் அரங்கேற்றினர். ‘இனியொரு விதி செய்வோம்’ என்ற தலைப்பினில் ஏப்ரல் 23 ஆம் தேதி நிகழ்ந்த இந்த மகளிர் மட்டும் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோகினி கலந்து கொண்டார்.

மகளிர் மட்டும் மேடையேறிப் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஆர்த்திகா ஆசிபின் வரவேற்புரையை தொடர்ந்து நிவேதிதா குழுவினர் மற்றும் வர்ஷா குழுவினரின் நடனம் பார்வையாளர்களை சுண்டி இழுத்தது. நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளரென்று தனியாக யாருமில்லாமல் முழுக்க முழுக்க திரையில் தோன்றி விழாவைத் தொகுத்து வழங்கிய விதமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

தொடர்ந்து நிகழ்ந்த ‘என் மனதை நீ அறிவாய்’ நிகழ்ச்சி தாய்க்கும் மகளுக்குமான போட்டி நிகழ்ச்சியாக அரங்கேறியது. ஆறு அணிகள் குறிஞ்சி முல்லை மருதம் பாலை நெய்தல் எனத் தமிழின் ஐந்து திணைகளை அடிப்ப்டையாக வைத்து கலந்து கொண்டனர் ஆறவாது அணிக்கு தமிழின் ஆறாம் திணையான இணையம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை வழங்கிய திருமதி வகிதா நஜிமுதீனும் பெனாசிரும் தாயும் மகளும் என்பதும் இருவருக்குமே இம்மாதிரியான நிகழ்ச்சி முதன்முறை என்பதும் பார்வையாளர்களுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து செல்வி வித்யாவின் நளினமான விரல்களில் வழிந்தோடிய இசைச்சாரலில் அரங்கம் நிறைந்திருந்தது.


மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தினத்தின் சிறப்பைப் பற்றி திருமதி லட்சுமிப்ரியா சிறப்புரையாற்ற அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவு தயாரித்து வழங்கிய “இனியொரு விதி செய்வோம்’ என்ற குறுநாடகம் மிகச் சிறப்பாக் அரங்கேறியது. பொற்செல்வி கண்ணன், அனுஷ்யா கந்தநாதன், நிவேதிதா ஆனந்தன், பர்வீன் ஃபாத்திமா, பெனாசிர் ஃபாத்திமா, ஜெஸிலா ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்நாடகத்தினை ஜெஸிலாவே உருவாக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்த ’அரும்புகள்’ நிகழ்ச்சியில் தளிர்களின் பூனைநடையும் புன்னகையும் ஆடை அலங்காரங்களும் அரங்கத்தை ஆர்ப்பரிக்க வைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ‘மிஸ் ஏடிஎம்’மாக ஃபாத்தின் ஜுமானா தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேடையில் தொழிநுட்பத்தை சிறப்பாக நுழைத்து ஒருவரே இருவராகத் தோன்றி ஆடிய நடனத்தை செல்வி நிவேதிதா ஆனந்தன் நிகழ்த்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இத்தகைய நிகழ்வு அமீரக மேடையில் அரங்கேறியது இதுவே முதன்முறையும் கூட.

அமீரகத்தில் சமூக சேவைக்காக இயங்கும் பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களில் சிறந்தவர்களை இணைய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்து சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010 விருதை டாக்டர் சுப்புலெட்சுமி பாலாவுக்கு நடிகை ரோகினி வழங்கினார். இதைப்போன்றே சிறந்த சமையல் கலைஞருக்கான ‘சுவையரசி-2010’ பரிசை ஜெபீன் தாஜ் தட்டிச் சென்றார். விழாவில் ஹலோ எஃப் எம்மின் ரேவா, இந்தியத் தூதரகத்தின் மது சேத்தி, பேஷன் கோல்ட் ஜுவல்லரியின் ஹெலிஷா மற்றும் துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியின் எனிட் மார்ட்டின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் க்லந்து கொண்டு சிறப்பித்தனர்

விழாவில் பேசிய முதன்மை விருந்தினர் நடிகை ரோகினி ஆண்களைச் சாராமல் பெண்கள் வாழ்வதில் இருக்கும் சிரமங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் எடுத்துரைத்தார். விழாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்குபெற்றதைக் குறிப்பிட்டு மகிழ்ந்த அவர் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டுமெனப் பாராட்டினார். அதே சமயம் இத்தகைய விழாக்களுக்குப் பின்னால் உழைத்த ஆண்களையும் மறந்து விடக் கூடாதென பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார்.

நீண்ட 30 நிமிட உரையில் அவரது தெள்ளிய தமிழும் சமூகம் குறித்த அவரது அக்கறையும் பெண்கள் குறித்த தெளிவான பார்வையும் அவரது பன்முகப்பட்ட பார்வையும் புலப்பட்டது. பரிசளிப்பு விழாவை ஜெஸிலா தொகுத்து வழங்கினார். பெனாசிர் நன்றியுரை வழங்கினார்.

தொடர்புக்கு
ஜெஸிலா ரியாஸ்
இணைச்செயலாளர்
அமீரகத் தமிழ் மன்றம்
050 3445375

படங்கள்:
1. இடமிருந்து வலம்: ஜெஸிலா ரியாஸ், சுஜாதா வேனுகோபால், டாக்டர் பர்வீன் பானு, சந்திரா ரவி, ரேவா ஆனந்த், டாக்டர் சுப்புலட்சுமி பாலா, மது சேத்தி, நடிகை ரோஹினி, இனிட் மார்டின், ஹெலிஷா,
2. அரும்புகளின் தளிர் நடையில் பரிசுப் பெற்றவர்கள்: தஸ்லீம், ஜேவிஷா, ஃபாத்தின் ஜுமானா சிறப்பு விருந்தினர்களுடன்
3. சுவை அரசி 2010 பட்டம் பெற்ற ஜபீன் தாஜூக்கு பரிசுகளை அள்ளி வழங்குவது ’ஆச்சி மசாலா’ சுதந்திர செல்வி, சிவ்ஸ்டார் பவனின் பரிசுகளை வழங்குவது ரேவா மற்றும் நடிகை ரோஹினி.
4. பெண்களின் பல்வேறு பருவங்களை குறிப்பதாக அமைந்தது நிவேதிதாவின் நடனம்.

Series Navigation

அமீரகத் தமிழ் மன்றம்

அமீரகத் தமிழ் மன்றம்