கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

பா. ரெங்கதுரை


நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு எழுத்தாளரும் தீம்தரிகிட பத்திரிகையின் ஆசிரியருமான ஞாநி சென்ற வாரம் கடிதம் பகுதியில் அளித்த பதிலைக் கண்ணுற்றேன். (www.thinnai.com/le0106058.html).

நான் வசிக்கும் சியாட்டல் பகுதியில் தீம்தரிகிட, இந்தியா டுடே போன்ற தமிழ்ப் பத்திரிகைகள் கிடைப்பதில்லை. தம் மகள் அல்லது மருமகளின் மகப்பேறு காலத்தில் உதவுவதற்காக தமிழகத்திலிருந்து வந்து சில மாதங்கள் தங்கிச் செல்லும் சென்ற தலைமுறைகளைச் சார்ந்த பழங்கால மனிதர் மட்டுமே படிக்கத் தக்கதாக விளங்கும் ‘தென்றல் ‘ போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகளே கிடைக்கின்றன. இதன் காரணமாக ஞாநி திண்ணை தவிர பிற பத்திரிகைகளில் என்ன எழுதுகிறார் என்பதை அறிய முடிவதில்லை.

சில வாரங்களுக்கு முன் சுந்தர ராமசாமி அவர்களின் அறிக்கை பற்றி சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். (http://www.thinnai.com/le1125046.html). அதை ஞாநி கண்ணுற்றது போலத் தெரியவில்லை. அதை அவர் படித்துப் பார்த்தால் நான் சுந்தர ராமசாமியின் சார்பாக எழுதுபவன் அல்லன் என்பது தெளிவாகும்.

நான் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளிக்க சுந்தர ராமசாமி ஏனோ முன்வரவில்லை. ஆயினும் ஞாநி அங்ஙனம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனாலும் அவர் நான் கேட்ட கேள்விகளுக்குத் தகுந்த விளக்கங்களைத் தராமல் ஏதோ பொதுப்படையாக பதில் சொல்லியிருக்கிறார். நான் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பான பதில்களைத் தரும்படி அவரை வலியுறுத்துகின்றேன்.

ஞாநி குறிப்பிட்டுள்ளதைப் போல எழுத்தாளர்களைப் பாதிக்கும் விடயங்களிலாவது சுந்தர ராமசாமி தன் கருத்தை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். குறைந்தது அப்படித் தெரிவிப்பதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பதையும், குமுதம் குழுமத்துடன் கொள்கைச் சமரசம் செய்து கொண்டு தீராநதி பத்திரிகையில் எழுதுவதால் தமிழ் சமூகத்துக்கோ அல்லது இலக்கியத்துக்கோ ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா என்பதையும் அவர் என் போன்றவர்களுக்கு விளக்க வேண்டும். அவர் இதற்கு ஏற்கனவே வேறு எங்கேனும் விடையளித்திருப்பின் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என் முந்தைய கடிதத்தையும், அவரது பதிலையும் ஞாநி தீம்தரிகிட இதழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி நான் எழுப்பிய கேள்விகளையும், இந்தக் கடிதத்தையும், இதற்கான அவரது விளக்கத்தையும் கூட அவர் தீம்தரிகிடவில் வெளியிட வேண்டும்.

பா. ரெங்கதுரை

rangaduraib@rediffmail.com

Series Navigation