விடுபட்டவைகள்-5 கவசவாகனம்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மதியழகன் சுப்பையா


வளர்ச்சி என்ற வார்த்தைக்கு ஆதரமானது உணவு. எல்லா உயிர்களுக்கும் உணவு தேவை. எல்லா உயிர்களும் உணவாகி விடுகிறது ஒரு நிலையில். உடலுக்கு உஷ்ணத்தையும் சக்தியையும் கொடுப்பது உணவு. ஒவ்வொரு உயிரின் அன்றாடத் தேவை, தேடல் உணவாக இருக்கிறது.அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவே. மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் உணவு தேடுவதையும் இனப்பெருக்கம் செய்வதையும் தலையாய பணியாகக் கொண்டுள்ளது.

ஆதியில் தொடங்கி இன்று வரை உணவு தேடுதல் ஓய்ந்த பாடில்லை. இனியும் ஓயாது. பசிக்கு உண்ணுதல், சுவைக்கு உண்ணுதல் இரண்டும் மனித முறை.வாழ்தல் வேண்டி உண்ணும் பழக்கம் அனைத்து உயிர்களுக்கும் பொது.

முதன் முதலில் ஒற்றைச்செல் உயிரி தேடித்தின்றிருக்கும் ஊனவை. உணவாக எதைத் தின்றிருக்கும் என்பது பற்றி சிந்தித்து பயனில்லை. மனிதர்களாகிய நாம் இதுதான் உணவென எப்பொழுது தெளிந்தோம் என்பது பற்றிய தெளிவான விபரம் இல்லை.

உலகச் சந்தையில் முதல் கொடுக்கல் வாங்கல், ஏற்றுமதி இறக்குமதி அனைத்தும் உணவுப் பொருட்களே. பசியைப் போக்குவது மட்டுமல்ல உணவின் வேலை இன்னும் பல செயல் புரிகிறது. நட்பை பலப் படுத்துகிறது. அன்பை வெளிப்படுத்துகிறது, உறவிற்கு உறுதுணையாய் இருக்கிறது. நல்லதோ கெட்டதோ உணவு பரிமாறாமல் விழாக்கள் இல்லை உலகில்.

இத்தனை முறை உண்ண வேண்டும் . அளவு இவ்வளவாக இருக்க வேண்டும் என முறைப் படுத்தியவர்கள் நிச்சயமாக முட்டாள்கள் என்று சொல்லலாம். அதையே பின் பற்றி வாழ்பவர்களை என்ன சொல்லி அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப் பட வேண்டும்.

சுணடப் பசித்தப்பின் நல்லுணவு என்றவனுக்கு மாணிக்கங்களை மாலையாக்கித் தரலாம். பசியோடு தொடங்கி பசியோடு முடித்தலே உணவு உண்ணுதலின் அளவு. உண்ண உகந்தது எல்லாம் நல்ல உணவாகி விடுவதில்லை. சுவை மிகுந்தவையெல்லாம் சுவைத்து விழுங்க ஏற்றதல்ல. எதிர்மறை எண்ணங்களை எழுப்பும் அமிலங்கள் அடங்கிய உணவை தவிர்த்தல் நலமாம். காமத்தை கூட்டும் காய்கறி நீக்குதல் நீண்ட இளமைத் தருமாம். மண்ணுக்கடியில் மறைந்து காய்க்கும் காய்களை தவிர்த்தால் காலன் எட்டிப் போவானாம். உணவு சாத்திரம் கொடுக்கும் சூத்திரங்கள் இவை.

உணவை உண்னத் தெரியவில்லை நமக்கு. சமைத்து உண்ணென சான்றோர் கூற அதன் பொருள் புரியாமல் அவர் புலமை விளங்காமல் அவித்து உண்ணுதலுக்கு ஆட்பட்டு விட்டோம். சமை என்ற சொல்லுக்கு பக்குவப் படுத்தல் என்றே பொருள். சமைத்தல் என்ற சொல்லுக்கு பக்குவப் படுத்தல் எனவே பொருள் படும். பச்சைப் பொருளை உண்ணும்படி பக்குவப் படுத்தல் வேண்டும். அதன் ஆற்றமிகு அமிலங்கள் மென்மையான நம் இரைப்பையை பாதிக்காத வண்ணம் அவற்றை பக்குவப் படுத்தி உண்ண வேண்டும் அவ்வளே. சமயம் என்பதும் அப்படியே . உணவு சமைத்தலும் மனிதன் சமைதலும் அவசியமான ஒன்றுதான். குமுகாயம் சிறக்க இதுவே இறுதி வழி.

இன்று உணவுகளின் பற்றக்குறை பெருகிக்கொண்டே வருகிறது. உலக மக்கள்ட் தொகைப் பெருக்கத்தின் காரணமாக விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு அடுக்கு மாடி வீடுகளும், கனரக தொழிற்சாலைகளும் அமைக்கப் பட்டு விட்டன. மேய்ச்சல் நிலங்கள் காங்கிரட் மாடுகளால் மேயப்பட்டு விட்டன. பயிர்கள் அனைத்தும் வேதியல் அரிவாளால் அறுவடை செய்யப் பட்டு விட்டன. இறுதியாய் உணவுகள் அழிக்கப் பட்டு விட்டன. உணவுகளான உயிர்களும் அழிக்கப் பட்டு விட்டன. இன்று நாம் பார்ப்பது உணவுகள் போன்ற எதோ ஒன்றைத் தான்.

உலகெங்கிலும் இன்று மிக லாபகரமானத் தொழில் உணவு விற்பது தான். இன்று உணவின் தரம் சுவையை சுவையை வைத்தே நிர்ணயிக்கப் படுகிறது. அதிவேக உணவு அங்காடிகள் அதிகரித்து விட்டன. கூடவே அஜீரணமும் அதைத் தொடர்ந்த உபாதைகளும்.

உணவு பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இலக்கியம் தவிர்த்து நம் வாழ்வு இல்லை. அற இலக்கியங்கள் தொடர்ந்து அனைத்திலும் உணவு குறித்து கூறப் பட்டுள்ளது. வள்ளுவத்திலும் இதற்காக அதிகாரம் ஒதுக்கப் பட்டுள்ளது.

எத்தனை முக்கியமான விஷயம் இது. ஆனால் ‘ எங்கப்பா நேரம் கிடைக்கிறது ? ‘ என்று ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு உணவை உதாசினப் படுத்தி வரும் இந்த்த தலைமுறையும் இதை தொடர இருக்கும் அடுத்த தலைமுறையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

( தேடுவோம்.)

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா