உயர் பாவை 4

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

மாலதி


19.எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா!வாய்திறவாய்!

மைத்தடங்கண்ணினாய் நீ உன்மணாளனை

எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயேல்

தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

தத்துவார்த்தத்துக்குள் புகுந்து குழப்பாமல் மேலிடக் கிடைக்கிற அர்த்தத்திலேயே விரசம் இல்லாத விளக்கத்தைத் தர ஆண்டாள் இடம் வைத்திருக்கிறாள்.கூர்மையான கவிதையின் சக்தியே அது தானே!

ஒரு தகுதியுள்ள படைப்பாளிக்கு ஒரு அரிய வெகுமதியைத் தர வேண்டும் என்று நிச்சயித்து விட்டால் ‘விதிகளி ‘ல்[Rules and Regulations]எங்கெல்லாம் இடமிருக்கிறது என்று தேடுவான் ஆதிக்கத்துக்கு அணுக்கமான wellwisher.நடைமுறையில் எங்கெல்லாம் conventionபடி சிக்கலில்லாத வழியிருக்கிறது என்று பார்த்து அலைவான் மக்களுக்கு அணுக்கமான empathy உள்ள இன்னொரு wellwisher.இருவருமாகச் சேர்ந்து அருமையான படைப்பாளியைத் தூக்கிப் பிடிக்கப் பார்ப்பார்கள்.

அப்படி பகவத் ருசியுள்ள தகுதி பெற்ற ஒரு ஜீவனுக்கு அன்பு செய்ய பரமனும் பிராட்டியும் போட்டியிடுகிறார்கள். யார் முதலில் செய்வோம் என்பதில் இருவரும் சமமான ஆர்வம் காட்டுகிறார்கள்.அது மட்டுமன்றி இருவரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர்கள் என்பதால் இவன் சொல்கிறான் என்று அவளும் அவள் சொல்கிறாள் என்று இவனும் பூரணமாக விரும்பி ஒரு ஜீவனுக்கு அருளைச் செய்ய முன்வருகிறார்கள்.

அப்படி அறைக்கு வெளியே நிற்கும் பெண்களுக்குக் கதவு திறக்க நீயா நானா என்று போட்டி நடக்கிறது உள்ளே. ஒரு மல்லுக்கட்டு போல physical ஆக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கதவைத் திறக்க எழ முயன்றார்கள் தெய்வ தம்பதிகள். நப்பின்னை உடல்வலுவில் குறைந்தளாதலால் மார்போடு இறுக்கி அவளை எழவிடாமல் படுக்கையில் கிடத்தி அவள் மேல் தன் முழு பலத்தை வைத்து அவளிடமோ வெளியில் இருக்கிறவர்களிடமோ குரல் காட்டாமல் நேரம் கடத்தினான் கண்ணன். இது இயல்பான ஆண்தன்மை. என்ன செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று பார்க்கும் குறுகுறுப்பு.நப்பின்னைக்கோ பேச முடியவில்லை. நடப்பதைச் சொல்லமுடியவில்லை. தானும் எதுவும் செய்யவும் முடியவில்லை. மங்களகரமான தீபங்கள் எரிகின்றன. வீரபத்னியாகையால் குவலயாபீடத்து யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் அழகு,குளிர்ச்சி,மென்மை,பரிமளம்,மதிப்பு என்ற ஐந்தாலும் ஏற்றமுடைய படுக்கை [பஞ்சசயனம்]மீது படுத்திருக்கிறாள் நப்பின்னை.கொத்துகொத்தாய் மலரைச் சூடியிருக்கிறாள் அந்த நப்பின்னை.அந்த நப்பின்னையை அணைத்த அதனால் மலர்ந்த அழகிய மார்பையுடைய கண்ணன் அவள் மேல் தன் எடை அழுந்த படுத்திருக்கிறான்.அப்போது கண்ணன் குரலெடுத்துப் பேசவில்லை. இது தான் பாசுரத்தில் வைக்கப் பட்ட சித்திரம்.அதற்கு ஆய்ச்சியர்கள் ஒரு கண்டனத்தையும் வைக்கிறார்கள்.

இப்படிக் கண்ணனை வெளியில் இருப்பவர்களோடு பேசவிடாமல் எழுந்து கதவு திறக்கவிடாமல் பிடித்து வைத்திருக்கும் நப்பின்னையின் செயல் கண்டனத்துரியது என்று பெண்கள் நினைக்கிறார்கள்.கடைசியில் உன் மைத்தடங்கண் கண்ணன் விஷயத்தில் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டதே என்று சொல்கிறார்கள்.ஏனெனில் தான் எழ இருந்தபோது கண்ணன் மல்லுக் கட்டால் தடுத்து விட்டு, அந்த நிலையில் அவளிடம் தான் திறந்துவிடவா ? என்று சாடையால் அனுமதி கேட்க அவள் மைத் தடங்கண்ணினால் ‘கூடாது,நான் தான் திறப்பேன் ‘ என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள்.ஏனெனில் ‘வந்து திறவாய் மகிழ்ந்து ‘ என்று என்னைத் தானே சொன்னார்கள் ? ‘என்கிறாள்.அப்படியானால் நீயும் போய்த் திறக்க உன்னை விட மாட்டேன் என்று மேலேறிப் படுத்திருக்கிறான் கண்ணன். இதை வேறு மாதிரி யூகித்த கோபிகைகள், ‘ எங்களுக்குக் கருணார்த்தமாக நீ அணியும் மை எங்களுக்கே விரோதமாய்ப் போயிற்று பார்த்தாயா ?அங்கே என்ன வார்த்தை யில்லாமல் சதி செய்கிறாய் நீ ?இப்படிப் பிரியாமல்,கண்ணனையும் செய்யவிடாமல் எங்களை வதைக்கிறாய். இது உன் தன்மைக்கும் சேர்ந்ததல்ல.எங்கள் நோக்கத்துக்கும் இசைந்ததல்ல. ‘ என்று கடிந்து கொண்டார்கள்.

பதிம் விஸ்வஸ்ய என்றபடி உலக நாயகனை நீ உன் ஒருத்திக்கே சொந்தமாக்கிக் கொண்டு ‘இறையும் அகலகில்லேன் ‘என்று சொல்லிக் கொண்டு இருப்பது உன் கருணைக்கும் சேர்த்தியில்லை உன் புருஷகாரத்துக்கும் சேர்த்தியில்லை.என்றார்கள்.

கிருஷ்ணனும் நப்பின்னையும் ஒரு படுக்கையில் இருப்பது என்றால் என்ன ? பகவானும் பிராட்டியும் பரமபதத்தில் திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷப் படுக்கையிலிருக்கும் இருப்பையே இது காட்டுகிறது.கோபிகளே முக்தாத்மாக்கள். முக்த ஜீவன் அங்கு அந்த மண்டபத்தைக் கிட்டி ஆதிசேஷபடுக்கையை மிதித்து ஏறி பகவானுடைய மடியில் உட்கார்கிறான் என்று வேதம் சொல்கிறது.அதையே இங்கு ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.

பகவான் ஹிதபரன் பிராட்டி பிரியபரை. அபராதம் செய்த ஜீவனும் வாழ்ந்து போகவேண்டுமென்று நினைப்பவள். அபராதம் செய்யாத ஜீவனே இல்லை என்று நினைப்பவள். ‘மணற்சோற்றில் கல் ஆராய்வாருண்டா ? ‘என்று வினவுபவள். எனவே அகில ஜகன் மாதாவாகிய நீ வேறு புகலில்லாத எங்களுக்கு இப்படிச் செய்யலாமா என்கிறார்கள்.

வெளிப்படையாக பார்ப்பதற்கு சேர்ந்து படுத்திருப்பது போல இருந்தாலும் கிருஷ்ணன் நப்பின்னையை சுயமாக எதுவும் செய்யமுடியாதபடி மல்லுக்கட்டியிருப்பது வெளியில் இருப்பவர்களுக்குப் புரிய நியாயமில்லை. நப்பின்னைக்குச் சொல்லவும் முடியவில்லை.

இது தான் ‘குத்து விளக்கெரிய ‘ பாசுரத்தின் திவ்யமான சாராம்சம்.


20.முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்….

ஊரார் இசைவு வேண்டாதே,விடிகிறதே என்ற பயமின்றிக்கே,இருள் தேடவும் வேண்டாதே,பகலை இரவாக்கவும் வேண்டாதே,விளக்கிலே பஞ்ச சயனத்தில் படுத்து கண்ணனைப் பார்க்கக் கொடுத்துவைத்த நப்பின்னையை ‘தத்துவமன்று தகவு ‘ என்று கடிந்து சொல்லிவிட்டார்கள்.

அசோகம்,அரவிந்தம்,மா,நவமல்லிகை,மற்றும் கருநெய்தல் பூக்களால் ஆன படுக்கையாயிருக்கலாம் பஞ்சசயனம் என்பது..தளிர்,மலர்,பஞ்சு,பட்டு,மென்கம்பளம் சேர்ந்து பஞ்சசயனமாகலாம்.அன்னத்தூவி,இலவம்பஞ்சு,செம்பஞ்சு,வெண்பஞ்சு,மயில்தூவி,சேர்ந்து பஞ்சசயனமாகலாம்.

இப்படி வார்த்தை வார்த்தையாக விவரித்தால் திருப்பாவையை விடியவிடியச் சொல்லலாம்.

ஆனால் இந்தக் கட்டுரை வரிசையின் நோக்கமே திருப்பாவையில் இருக்கும் கட்டுமானத்தையும் எல்லாகாலத்துக்கும் எல்லா மேம்பாட்டுக்கும் அடியான முயற்சியுடைமையையும் தெரியப் படுத்துவது ஒன்றே. இந்து மதத்தைப் பரப்பு என்று எந்த கட்டளையும் இல்லை. அதைப் பரப்ப வேண்டிய அவசியமும் இல்லை.சும்மா இருந்தாலே போதும் என்று தான் சகலமும் புத்தி சொல்கிறது. மானிடம் எதையாவது ரசிக்கவேண்டுமே அதற்காக எதையாவது உருவகம் பண்ணி எதையாவது கற்பனையில் வளர்த்தி உணர்வு ரீதி சந்தோஷத்தை அடைகிறோம். அது நமக்கு பக்கவிளைவில்லாத ஒரு உல்லாச மார்க்கம். அவ்வளவே என்று எடுத்துக் கொண்டு ஆனந்தமாக இறைக் கற்பிதத்தையும் நெறிவகுபாட்டையும் மேற்கொள்ளலாம்.அல்லது படித்து விட்டுவிடலாம்.இவ்வளவு சுதந்திரமுள்ள மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்.அது தான் காட்டுச்செடி போன்ற வளர்ச்சிக்குத் தேவையானது.

கீழ்ப்பாட்டில் கட்டில் காலே முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தம் வைக்கிறார்கள். உட்பொருள்-குத்துவிளக்கெரிய-ஆசார்யோபதேசம் கோட்டுக்கால்கட்டில்-தர்மார்த்த காம மோட்ச நான்கு புருஷார்த்தங்களைப் பற்றிய பிரபஞ்சம் பஞ்சசயனம்-இச்சை,பிரயத்தினம்,லீலாரசம் அனுபவிக்கும் விருப்பம் என்ற அற குணங்களால் ஆன பிரபஞ்சம் மேலேறி-தேவ,திர்யக் மனுஷ்ய,ஸ்தாவர அப்ராணி ரூபமான ஜீவவர்க்கமாம் படிகள் மேலேறி அவற்றுக்கு மேற்பட்டவராய் கொத்தலர்பூ- குழாம் குழாமாய் மகிழ்ந்திருக்கும் நித்யசூரிகளுக்கும் மேற்பட்ட முக்தாத்மாக்கள் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக்கிடக்கும் மலர்மார்பன்….பிராட்டி மேலான புருஷோத்தமன். ஒரு உதாரணத்துக்காக கீழ்ப்பாட்டு தத்துவார்த்தம் சொன்னேன்.பிராட்டியின் roleஐப் புரிந்து கொள்வதில் இந்தப்பாட்டு முழுமை வைக்கவில்லை.

‘முப்பத்து மூவர் பாட்டில் ஒரு முழுமை கிடைக்கிறது.பெறப் படும் செய்தி என்னவென்றால் பிராட்டிக்கும் யதேச்சாதிகாரம் எதுவும் கிடையாது. அவளும் மற்ற ஜீவன்களைப்போல பெருமாள் கை பார்த்திருப்பவள் தான்.தானாக எதையும் செய்யக் கூடியவளல்ல வைணவத்து சம்பிரதாயப்படி.பின் ஏன் அவள் முன்னிலையில் தான் அருள் பெறவேண்டும் அவளின்றி இயலாது இத்யாதி…எனில் அவள் ஒரு இலக்கமாவது பெருமாள் சேர்த்தியில் தான். அவள் சேர்த்தியில்லை என்றால் பெருமாள் முழுமையற்றவன், அப்படியானால் பிராட்டி பூஜ்யமா ? இல்லை. அவள் இலக்கத்தை plus figure ஆக்குபவள். நான் முன்பே சொன்னபடி எங்கே தன் கடுமையான கட்டுத்திட்டத்தில் empathy factor ஐத் தொலைத்து விடுவோமோ என்று அஞ்சி பிராட்டி மூலம் விஷயங்களை vetting செய்வித்து[legal vetting,accounts vetting போல] ஏற்புடையதாக்குகிறான் பெருமாள்.அருகதை இல்லாத வழக்குகள் பிராட்டிவரை வராது. முழுசரணாகதிக்கு எவ்வளவு அகம் தொலையவேண்டும் ?லேசில் ஆகிற விஷயமா அது ?.எப்போதும் உடனிருப்பவள் என்பதால் கிட்டத்தட்ட NO.2 role ஐச் செய்கிறாள். பெரும்பாலும் NO2 இடத்துக்காரர்களின் அதிகாரம் பற்றி நமக்குத் தெரியும்.பிராட்டி அதிகாரத்துக்கு அலைபவளில்லை.ப்ரேமையில் அவள் பெருமாளோடும் ஜீவர்களோடும் சமமாக ஈடுபட்டிருக்கிறாள். ஆனந்தமாக இருக்கிறாள். முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்

செப்பம் உடையாய்!திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்

செப்பன்ன மென்முலைச் செவ்வாய்சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.[திருப்-20]

பகவான் கேட்பாரில்லாத சுயேச்சையாளன் ஆதலால் சமயம் பார்த்துச் சொல்ல வேண்டுமென்று நப்பின்னை ஆய்ச்சிகள் விஷயத்தில் மெளனமாக இருந்தாள். குழந்தை இடறி விழுந்து தாய் முதுகில் ஒரு குத்து வைப்பது போல கோபிகைகள் ‘தத்துவமன்று தகவு ‘ என்று கடிந்து பேசி விட்டார்கள். இந்தப் பாசுரத்தில் கண்ணனைப் புகழ்ந்து பாடிப் பின் அவன் மகிழுமாறு நப்பின்னையையும் வேண்டிப் பேசி மீண்டும் சிபாரிசுக்கு இழுக்கிறார்கள்.

அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ நீராட்டுதி என்று காலில் விழுந்தார்கள்.மீண்டும் இதிலும் கண்ணனின் இரு குணங்களான பக்தரைப் பேணும் தன்மையும் எதிரிகளை அழிக்கும் தன்மையும் சொல்லப்பட்டன.இரண்டுக்கும் வேண்டிய இரு அடிப்படைகள் செப்பமுடைமை,திறலுடைமை.செப்பம் என்றால் செவ்வி.[ஏறத்தாழ perfection என்று கொள்ளலாம்]அந்த செவ்வி வரவேண்டுமானால் திறல் என்ற தகுதி வேண்டும்.அதாவது சாது ரட்சணமும் சத்ரு நிக்ரஹமும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. இரண்டாவதின்றி முதல் தொழிலில் வெற்றிபெற முடியாது.[செப்பமுடையாய் திறலுடையாய்]சாது சம்ரட்சணை தான் அவனுடைய செவ்வி.

பகைத்தவருக்கு பகீர் என்னும்படி பயஜ்வரமாக இருப்பவன். அப்படி பயங்கரமானவன் விமலன்,அதாவது அப்பழுக்கற்றவன்.எனில் அநாவசியமாக யாரையும் பயமுறுத்துபவனல்ல என்பது பொருள்.

[செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா]பகத்தாரைத் தேவைப்பட்டபோது பயமுறுத்துவது செவ்விக்கான திறல்.

முப்பத்து முக்கோடி தெவர் கூட்டம் என்ற சொல் ‘த்ரயத் த்ரிம்சவை தேவா ‘ என்ற வேத வாக்கியப்படி தமிழ்மொழிபெயர்ப்பு.

ஏகாதச ருத்ரர் 11பேர்,துவாதச ஆதித்யர் 12 பேர்,அஷ்டவசுக்கள் 8 பேர்,அசுவினி தேவர்2 பேர்,இப்படி 33 தேவர்களின் வம்சாவளி தான் முப்பத்துமூன்று கோடி தேவர்.அந்த முப்பத்து முக்கோடி பேருக்கும் ஒரு ஆபத்து வரும்முன்னே ஓடிப்போய் அதைத் தீர்த்துவைத்து அவர்கள் நடுக்கத்தைத் தவிர்ப்பவன் திருமால். அது அவனுடைய கடமை என்பதால். அதை நக்கல் செய்கிறார்கள். வீடுகளில் பெண்கள் கணவன்மார் எப்போதும் ஊர் சேவையில் ஆர்வம் காட்டி வீட்டுக்காக நேரம் ஒதுக்காமலிருப்பதைச் சொல்லிக்காட்டுவது போல. தேவர்களுக்கும் தமக்குமுள்ள வித்யாசத்தைப் புரிய வைக்கிறார்கள். தேவர்கள் ஆண்புலிகள் நாங்கள் அபலைப் பெண்கள்.அவர்கள் மிடுக்குடையார்கள். நாங்கள் பலவீனர்கள்.

அவர்களுக்குக் குடியிருப்பு வேண்டும், அமிர்தம் வேண்டும்.மற்றிவையும் பதவியும் வேண்டும். எங்களுக்கு உன்னையன்றி வேறெதுவும் வேண்டாம். தேவர்கள் உன்னை எழுப்பி உன்னை அம்புக்கு இலக்காகி உன்னால் பிரயோசனம் பெற்று உன்னையே எதிர்த்துக் கொள்வார்கள்.

தேவமாதா குண்டலத்தை மீட்டுக்கொடுக்கவென்று நரகாசுரவதம் செய்து சத்யபாமையுடன் திரும்பும்போது பாரிஜாதத்தை பாமா ஆசைப்பட மானிடப் பெண் அதை அணியக்கூடாது என்று இந்திரன் சற்று முன் கிருஷ்ணன் செய்த உபகாரத்தை மறந்து பேசியிருக்கிறான்.

சீதையை இராவணன் தூக்கிப் போனதில் பிரபஞ்சமே சோகமயமாக இருக்க தேவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் அந்த நிகழ்ச்சியை. தங்கள் நோக்கம் நிறைவேறப்போகிறது,இராவண வதம் நடக்கப்போகிறது என்று. இப்படிப்பட்ட அயோக்கியருக்கா காரியம் செய்து கொடுப்பது ஓடி ஓடி ? இந்தக் கருத்தில் தான் முப்பத்து மூவர் அமரர்க்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய் என்றது. அமரர்கள் என்று வார்த்தை போட்டதற்கு அவர்களென்னவோ சாகாதவர்கள்,அவர்களை நீ என்ன அப்படித் தாங்கிப் பிடிக்கிறாய் ? என்கிறதாகும்.எங்களைப் பார்,எங்களைத் துயராற்ற வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா ? என்பது உட்கிடக்கை.

அடுத்து நப்பின்னையைக் கொண்டாடி இரு வார்த்தை சொன்னார்கள். செப்பன்ன மென்முலைச்செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் ஆபரணத்தைச் செப்பில் போட்டு வைப்பார்கள். அப்படி உன் மார்பில் கண்ணனை வைத்துப் பூட்டிக்கொண்டு கருவூலம் காத்து அமர்ந்திருக்கிறாய் நீ.உன் மிருதுவான் ஸ்தனமும் உன் அழகிய சிவந்த அதரங்களும் நுண்ணிய இடையும் உன் புருஷகார உறுப்பான ஸ்த்ரீத்வ பூர்த்திக்கு இயல்பான ஆதாரமாய் உள்ளன. சொல்லிச்சொல்லாத செளந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே,குணங்கள் அவளாலே,மேன்மை அவளாலே,நீர்மை அவளாலே,அப்படி திருவுக்கு நிகரானவளே!திருவே! நீ எழுந்து உக்கம்[ஆலவட்டம்]தட்டொளி[கண்ணாடி] போன்ற மங்கள உபகரணங்களை உன் கையால் கொடுத்து கிருஷ்ணனோடு எங்களை நீராட்டவேண்டும் என்று இறைஞ்சினார்கள். நப்பின்னையையும் எழுப்பிக் கொண்டாயிற்று.

இப்படி 20வது பாட்டோடு ‘நெறி ‘சொல்லி முடிக்கப்பட்டது. அடுத்து தங்கள் சித்தோபாய முனைப்பை இரு பாடல்களில் சொல்லி தங்கள் தகுதியை நிலை நாட்டப் போகிறாள் ஆண்டாள்.


21.ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி…. ஆச்சாரியனையும் பிராட்டியையும் கிட்டி அவர்களால் பூரணமாக அருள்செய்யப்பட்ட உயிர் அப்புறமும் பேறு என்பது பரமன் மனம் வைத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது என்று அறிகிறது.

இந்த நிலையில் அவனே supreme என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற சரணாகதியைச் செய்கிறது.

அதுவே ஸ்வரூபக்ருத தாஸ்யம் என்கிற வகைச் சரணாகதியாக 21ம் பாசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெருமாள் முன் நப்பின்னையும் ஆண்டாள் கோஷ்டியோடு சேர்ந்துகொண்டு சரணாகதி வழிபாட்டை ஏற்று நடத்திச் செல்ல வருகிறாள்.எல்லாரும் கண்ணனைப் போற்றிப்பாட ஆரம்பிக்கிறார்கள். கண்ணன் ஆய்ச்சியர் மனசைத் தெரிந்துகொள்வதற்காக கண்மூடிப் படுத்திருக்கிறான். ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதேபால் சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றமுடையாய்!பெரியாய்!உலகினில்

தோற்றமாய் வந்த சுடரே!துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்து அடிபடியுமாபோலப்

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர்எம்பாவாய்.[திருப்-21]

கோகுலத்தில் பால் கறக்க வைத்த கலங்களெல்லாம் நிரம்பி வழிந்தன.சிறியது,பெரியது என்று கடலையே பாத்திரமாக்கி வைத்தாலும் அதுவும் நிறைந்து,கறக்கிற பால்,பாத்திரத்துக்குள் புகுவதற்குப்பதிலாக மடிக்காம்புக்குத் திரும்பிப் பீய்ச்சும் அளவுக்கு ,வேகமாக எதிரோட்டம் செய்கிறது. ‘அந்த அளவுக்கு மலையருவிகள் போல இடைவீடு இல்லாமல் பாலைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் வள்ளல் தன்மைகொண்ட யானையொத்த பெரியபசுக்களை மிகப் படைத்த நந்தகோபன் மகனே! ‘என்று கண்ணனை அழைத்தாள் ஆண்டாள்.

அடிப்பாடல்களில் நந்தகோபனின் கொடையும் வீரமும் சொல்லப்பட்டது போலவே இப்போது பால்வளம் மெச்சிக் கூறப் படுகிறது. இதைத் தந்தைவழியாகப் பெறவன்றோ நீ பரமபதம் விட்டு இங்கு ஆய்ப்பாடி வந்து சேர்ந்தது ? ‘பதிம்விஸ்வஸ்ய ‘ என்ற ஐஸ்வர்யத்தைக் காட்டிலும் நந்தகோபன் ஐஸ்வர்யத்துக்கல்லவோ நீ இட்டுப் பிறந்தது ? கோபகுலமும் கோபாலத்துவமும் நந்தன் பெற்ற ஆனாயனுக்கல்லவா கிடைக்கும் ?நீபிறந்த பிறப்பை நினைத்துப்பார் என்பது தொனிக்க ‘ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்! ‘என்றார்கள்.

உன்னை யாராக நினைத்துக் கொண்டு இப்போது உறங்குகிறாய் ?உன் ஐஸ்வர்யத்தை நினைத்து எங்களை நீ அலட்சியப் படுத்தக்கூடும். ஆனால் உன் பிறவியை புத்தி பண்ணினால் நாங்கள் சொல்வது உன் காதில் ஏறும்.

நாங்கள் பரமபதத்தில் வந்தோமா ?வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமா ?ஆனாயனிடம் வந்தோம். உனக்கு விழிக்கவோ ஏன் என்று கேட்கவோ தடையேன்ன ?

பசுக்கள் ஊர் முழுக்க உண்டு கோகுலத்தில்.அதில் என்ன எனக்கு விசேஷ ஏற்றம் என்று பேசாமல் கிடந்தான் கண்ணன்.இப்போது உறைத்தது ஆண்டாளுக்கு.. இவன் காதில் போட்டுக் கொள்ளாவிட்டால் போய் புருஷார்த்தம் கொடு என்று கேட்க இன்னொரு புருஷன் இல்லையே என்பதும் இவன் கிட்டவில்லை என்று வந்தவழி திரும்ப முடியாது என்பதும் மனசில் அழுத்தி பாரம் கனத்தது.முதல் முறையாக அவனுடைய நிஜமான ஸ்வரூபத்தை மனசில் தியானம் செய்தாள். ஊற்றம் உடையாய்!பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் என்றாள்.

ஊற்றம் உடையாய் என்பதற்கு இரண்டு பொருள் சொல்லலாம். ‘அடியாரைக் காப்பதில் சிரத்தை உடையவனே! ‘என்று ஒரு பொருள். ‘வேதப்ரதிபாத்யனே!வேதத்தின்பருண்மையானவனே!வேதத்தின்பொருளாயிருக்கிற திண்மையுடையவனே! வேதத்தின் உள்ளீடானவனே! ‘ என்று ஒரு பொருள். அடுத்து பெரியாய் என்பதற்கு எல்லாரிலும் மேலானவன் என்று ஒரு பொருள் பெருமையுடையவன் என்று ஒரு பொருள்.ஆச்ரித ரட்சணத்துக்கு வேண்டிய முழுத் தகுதி உடையவன் .அப்ராப்ய மனஸா ஸஹ என்று மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத பெரியவன் ஆர்த்த ரட்சணத்தில் பட்சபாதம் உள்ளவன். எப்படி பட்ச பாதம் உடையவன் என்கிற அர்த்தத்தைப் பெரியாய் என்ற சொல் தருகிறது என்று கவனிப்போம்.

ஒருவன் supreme authority என்றால் என்ன அர்த்தம் ?அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டுவதில்லை என்பது தானே ?அவன் வைத்தது சட்டம் என்பது தானே ?

அவனே பல்கலைக்கழகம் என்ற போது அடிமுட்டாளுக்கு ஏதோ ஒரு பேர் சொல்லி டாக்டர் பட்டம் கொடுத்தால் அவனைக் கேட்பார் உண்டா ?நாலாம் வகுப்பு படித்தவனுக்கும் முழு மெட்ரிகுலேஷன் தகுதியை அவன் கொடுத்தால் கேட்பாருண்டா ?

இல்லை.

அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே ஏகாதிபத்தியன் என்று சொன்னதற்கு அவன் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல வல்லவன் என்பதும் அந்த ஒற்றைத் தகுதியை அவன் தன் அன்பர்களுக்கு எப்போதும் மிகச் சரியாகப் பயன்படுத்துகிறான் என்பதும் விளங்கும்.அது தான் ஆச்ரித பட்சபாதம்.

ஒரு பெரிய அவையில் மிகப் பெரியதொரு வேள்வி நடத்தப்பட்டது.ஒரு லட்சம் முறை அத்யயனத்துக்காக தங்கக்காசுகள் ஒரு பெரிய கோடாஸ்வரனால் வித்வான்களுக்கு அள்ளிஅள்ளி வழங்கப்பட்டன.அப்போது மிகுந்த ஊக்கத்தோடும் பக்தியோடும் ஒரு இளைஞன் குழறிய குரலில் நூறுக்கும் குறைவான அத்யயனத்தை அரங்கேற்றுகிறான்.அதுகண்டு மிக மகிழ்ந்து கோடாஸ்வரன் கைநிறைய பொன் நாணயங்களை அள்ளி அவனுக்குக் கொடுக்கிறான். லட்சம் அத்யயனம் பண்ணி சில காசுகளை வாங்கியவர்கள் உதறிக் கொண்டு போய் விடுவார்களா ? அல்லது நூறுக்கும் குறைவான அத்யயனத்துக்குக் கொள்ளைக் காசைக் கொடுத்ததற்காக கோடாஸ்வரனை நடுவர் நியமித்து வழக்கு செய்யக் கூண்டிலேற்றி விடுவார்களா ? மூச்சு விட மாட்டார்கள் அல்லவா ? அப்போது கோடாஸ்வரன் செய்தது என்ன ?ஆஸ்ரித பட்சபாதம். ஒருவனுக்கு ஒன்று இன்னொருவனுக்கு ஒன்று.

ஒரு சமயம் உதங்கர் ‘கிருஷ்ணா,நீ எல்லோருக்கும் பொதுவான தெய்வமாயிருக்க பாண்டவர்களைக் காப்பாற்றி கெளரவர்களை அழித்தது நியாயமாகுமா ?என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அவன் ‘பாண்டவர்கள் என்னைச்சரணடைந்தவர்கள்.ஆகையினால் காப்பாற்றினேன். ‘ என்றான். ‘அப்படி உன்னைச் சரண்புகும்படி தர்மபுத்தியை அவர்களுக்கு உண்டு பன்னினவன் நீ தானே ?ஏன் அது போல துரியோதனன் கூட்டத்துக்கு நல்ல புத்தியை நீ கொடுத்திருக்கக் கூடாது ? ‘என்று கேட்டார் உதங்கர்.இதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ கன வேலை கவனிப்பது போலப் போய்விட்டான் கிருஷ்ணன். அவ்வளவு ஆச்ரித பட்சபாதம் உள்ளவன் கிருஷ்ணன். வேண்டியவர்களுக்கு விதி எல்லாம் மீறியும் நன்மை செய்யக் கூடியவன்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்-என்கிறபடி பிறப்பேயில்லாதவன். தன் இச்சையினால் பல அவதாரங்களைச் செய்து பிறக்கப் பிறக்க ஓளி கூடி ஜோதி போலவே நிற்பவன் என்று ஒரு அர்த்தம். தன் ஆச்ரித பட்ச பாதம் என்ற திவ்ய குணத்தை உலகெங்கும் பிரபலமாக்கி அதன் கீழ் அன்பர்கள் ஒதுங்கும்படி ஜ்வலிப்பவன் என்பது இன்னொரு அர்த்தம்.

அப்படிப்பட்ட உன்னைப் புகழ்ந்து பாடிக் கொண்டு பெரியாழ்வாரைப்போல வந்தோம். உனக்கு நல்லாரைப் போல போற்றியாம் வந்தோம் புகழ்ந்து. அல்லாரைப் போலவும் வந்தோம். ஆற்றாது வந்து மாற்றார் வலிதொலைந்து உனக்கு அடிபணியுமா போலவும் வந்தோம்.

பகைவர் போல வந்தோம் என்று ஏன் சொன்னாள் ஆண்டாள் ?

கணவனைப் பார்க்க அலுவலகத்துக்கு ஒரு மனைவி வருகிறாள். அங்கு அவன் அறைக்குள் நுழைய அனுமதி இல்லை. ‘உள்ளே வரக்கூடாது ‘ என்று விளக்கு எரிகிறது. முக்கியமாக யாரிடமோ பேச்சு வார்த்தை நடத்துகிறான் என்று தெரிகிறது. அவனைக் குறை சொல்லும் கூட்டத்திடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது. மனைவி அவசரமாக தானும் அவனுடைய நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனிடம் பேசுகிறாள். உன்னை யார் விட்டது என்று கேட்க,அவள் சொல்கிறாள் உன்னைக் குறை சொல்லும் யூனியன் கூட்டத்தார் மத்தியிலாவது எனக்கு இடமில்லையா ?என்று கேட்கிறாள்.அதே தான் மேலே சொல்லப்பட்டது.

நீ அன்பரைப் பார்க்கமாட்டாயானால் அல்லாராக வருகிறோம்.உன்னைக் குறை சொல்லிக் கொண்டு அல்ல. உன் வலிமைக்குத் தோற்று உன்னை விட்டு எங்களால் தரிக்கமுடியாத தால் உன் பார்வையில் படவென்று எதிரிகள் போல வந்தோம் என்பது பொருள்பட,

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாதுவந்து அடிபணியுமாபோலப் போற்றியாம் வந்தோம் புகழ்ந்து. என்றாள் ஆண்டாள்.

பகவான் ஆண்டை நாம் அடிமை என்ற சம்பந்தத்தால் அன்பு பூணுவது ஸ்வரூப க்ருத தாஸ்யம்.அவன் குணவான் அதனால் அடிமை நான் என்று அடிபணிவது குணைர் தாஸ்யம். ஒரு சம்பெனியில் வேலை செய்யும்போது boss என்று அவ்வப்போது சலாம் அடிப்பது முன்னது கன்பெனியை விட்டு தனித் தொழில் ஆரம்பித்தபின்னும் அதே பழைய boss க்கு எப்போதும் வணக்கத்துடன் இருப்பது பின்னது. லட்சுமணன் சொன்னான் இவன் என் அண்ணனாக இல்லாதிருந்தாலும் இவனுக்கு நான் இப்படியே அடிமை செய்திருப்பேன் என்று.

சீதை அனசூயையிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ‘என் கணவனை நான் காட்டுக்குப் பின் தொடர்ந்து வந்தது அவர் குணத்துக்கல்ல. அவர் அழகுக்கல்ல. எல்லாரும் மெச்சும் அவர் மேன்மைக்கல்ல. அவர் என் கணவர். நான் அவரன்றி வேறு யாரைப் பின் தொடர்வேன் ? ‘ என்றாள்.

இந்த சம்பந்தத்தை நினைத்துத் தான் ஆண்டாள் இந்தப் பாசுரம் வைத்தாள்.கடியன் கொடியன் ஆகிலும் அவன் தான் அவன். அவன் பெரியான். அவனைத்தவிர யாருமில்லை என்று அவனுக்கு அடி பணிய வந்தாள். அடுத்து அவன் கைவிட்டு விட்டால் இன்னொரு இடம் தேடி போக முடியாதபடிக்கு தம் நிலை இருப்பதை உருக்கமாகச் சொல்லப் போகிறாள் ஆண்டாள்.


22.அங்கண் மாஞாலத்தரசர்….

ஆய்ச்சிகள் மனக்கிடக்கை இன்னும் பரிபூரணமாகத் தெரியவரவில்லை என்று கண்ணன் கண் மூடியே கிடக்கிறான். ஆண்டாள் தன் அநன்யார்ஹசேஷத்வத்தைப் பிரகடனம் செய்து விண்ணப்பிக்கிறாள்.

காதலிக்கிற பெண் காதலன் கை விட்டால் இன்னொருவனைக் கைபிடித்து விட மாட்டேன்.என்றைக்கானாலும் அவனே தான் கணவன் என்று சொல்வது தான் அநன்யார்ஹ சேஷத்வம்.

அந்தப்பிரகடனத்தை எப்படி செய்கிறாள் என்பதே இந்தப் பாசுரம்.

இங்கு நள்ளிரவில் உடுத்திய உடையோடு காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறின பெண் ஏதோ காரணத்தால் காதலனால் நிராகரிக்கப்பட்டால் எப்படி மீண்டும் வீட்டுக்குத் திரும்பிப் போக முடியாதவளாக இருப்பாளோ அந்த நிலையில் தான் இருப்பதை விவரிக்கிறாள்.

நாங்கள் உடலடியான [இரத்த சம்பந்த] உறவுகளை எல்லாம் விட்டு வந்தோம். நீ எங்களை ஏற்றுக் கொண்டால் புகழ் உன்னுடையது. இல்லாவைட்டால் நாங்கள் விட்ட இடத்திற்குத் திரும்பிப் போகப் போவதில்லை. என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறாள்.

எங்கள்பாபபலன்தொலைந்தது,மாயனை,வடமதுரைமைந்தனை,யமுனைத்துறைவனை,தாமோதரனை,போற்றிப்பாடியதால். எங்கள் மீது சாபமின்னும் தொடர்கிறதோ ?சாபம் நீங்க உன் பார்வை எங்கள் மேல் பட வேண்டும். நாங்கள் உன் காலடிக்கு வந்து சேர்ந்து விட்டோம். விழுந்தவர்கள் இனி எழுந்திருக்கப் போவதில்லை. ‘வந்து தலைப்பெய்தோம் ‘என்ற ஒரு வார்த்தையால் வந்தது வந்தது தான் இனி போகப் போவதில்லை என்பதைத் தெரிவிக்கிறாள்.

ஈ எறும்பு முதல் பிரம்மா வரை அனைத்துப் படைப்புகளுக்கும் அததற்கான இடத்தையும் உணவையும் வைத்திருக்கும் இந்த உலகத்தில் ‘தாம்,தமது ‘ என்ற கர்வத்துடன் அநேக அரசர்களாட்சி செலுத்தினார்கள்.அவர்கள் உயர உயர கர்வமும் வளர்ந்தது. கர்வம் வளர வளர எதிரிகள் அதிகரித்தார்கள்.எதிரிகள் துன்பம் கொடுக்கக் கொடுக்க அரசர்களின் கர்வம் அடிபட்டது.கர்வம் தொலைந்தபின் உயரத்திலிருந்து தாழ விழுந்த அவமானம் தாங்க முடியாமல் தாம் ஒருகால் அடைந்திருந்த பதவியையும் கர்வத்தையும் வெறுத்து இகழ்ந்து உன்னுடைய சன்னிதியில் உன் கட்டில்காலைக் கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக விழுந்து கிடக்கிறார்கள்.அவர்களைப் போலவே நாங்களும் எங்கள் ஸ்த்ரீத்துவ அபிமானத்தை விட்டு உன்னை வந்தடைந்து விட்டோம். இனி கலந்தாலும் விலக்கினாலும் போக முடியாதவர்களாகிவிட்டோம்.

அந்நலமுடையொருவனை அணுகினன் நாமே என்றபடி வந்து தலைப் பெய்தோம். இனி எங்களுக்குத் துயரில்லை என்று சொல்கிறாள். நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டு என்று நம்மாழ்வார் சொன்னது போல ஜீவ பரம சம்பந்தம் சரீர இருப்பினால் புலப்படுவதில்லை. அது புலப்பட்டு சரீரத்தோடு கண்ணனைப் பிரேமையினால் கிட்டி விட்டதை நினைத்து மகிழ்கிறாள் வந்து தலைப்பெய்தோம் என்ற வார்த்தையால். இனி அவன் பாடு நாம் செய்வதைச் செய்தாயிற்று, என்றபடி.

pursuit,persuasion என்பதெல்லாம் ஆண்டாளின் நிறப்புக் குணங்கள் ஆதலால் அத்தோடு நிறுத்தவில்லை அவள்.

உன்னைக் கிட்டும் அளவுக்கு எங்கள் தகுதி இல்லாதிருந்தும் உன் கருணையால் உன்னைக் கிட்டப் பெற்றோம்.அப்படி வந்தவர்களை நீ பார்க்கவேண்டும். ஒரேயடியாக கோடையோடின பயிர்மீது ஒரு பாட்டம் மழை கொட்டியது போலப் பார்க்கவேண்டாம். நாங்கள் நனைய நனைய மெதுவாக கிண்கிணி வடிவச் சதங்கைத் தாமரையின் இதழ்கள் விரிந்தும் விரியாமலும் சதங்கையிம் உள்பரலைக் கிலுக்கிக் கொண்டு கீழே நழுவவிடாமல் சிரித்து கலகலக்கும் அல்லவா அது போல அழகான உன் னிரண்டு கண்களால் நாங்கள் பொறுக்கப் பொறுக்கப் பார்க்கவேண்டும்.

அந்தப் பார்வை எப்படி இருக்கும் என்றால் திங்களும் செங்கதிரும் ஒரே சமயத்தில் உதித்தது போல இருக்கும். தாமரை சூரியனுக்கு அலர்ந்து சந்திரனுக்குக் கூம்பும். சூரிய சந்திரர் ஒரே சமயம் வந்துதித்தால் தாமரை என்ன செய்யும் ? அப்படி நீ எங்கள் குறைகளுக்காக மூடியும் உன் கருணைக்காகத் திறந்தும் உன்கண்களை அமைத்துக்கொள்.

கிண்கிணி போலத் தாமரை, தாமரை போல அங்கண், அது திங்களும் ஆதித்தியனும் எழுந்தக்கால் ஏற்படுத்தும் எதிர்விளைவு என்று உவமை அடுக்கு சொல்லப் பட்டிருப்பது இதில் சிறப்பு. உவமையிம் நீட்டம் நெடுக்கு குறுக்காகப் பாய்ந்திருப்பது ரசிக்கத் தக்கது.

யாராலும் சாபம் அழியக்கழியாது என்றிருப்பதை மாற்றி உன் பார்வையால் எங்கள் மீதான சாபம் ஏதும் உண்டேல் அதையும் கழியப் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

‘மறந்தும் புறந்தொழாள் ‘ என்றபடி அவன் கை விட்டால் வேறு அடைக்கலம் நாடாத முழு சரணாகதியைச் சொல்லி இந்தப் பாசுரம் முடிந்தது.

கர்வம் தொலைந்த அரசர்கள் கிருஷ்ணாவதாரத்தில் உண்டா அவர்கள் கண்ணன் வாசலில் வந்து நின்றார்களா என்று கேட்டால் ஆமாம். ஜராசந்தனால் அடக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட அரசர்கள் ஜராசந்தன் தோற்கடிக்கப் பட்டவுடன் விடுவிக்கப் பட்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் தங்கள் ராஜ்யத்துக்குத் திரும்ப மறுத்து கண்ணனின் தலைமையை முழுதுமாக ஏற்றுக் கொண்டார்கள். அதையே இந்தப் பாசுரத்தில் குறிப்பாக்கினாள் ஆண்டாள்.


23.மாரிமலைமுழைஞ்சில்…. பலமுறை பார்த்துப் பழகின கோபிகைகள் இந்த முறை நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது கண்ணனுக்கு.குழந்தைப் பெண்களாக இருந்தவர்கள் பெரிய பெண்களைப் போலப் பேசுகிறார்கள்.இன்னமும் குழந்தைத்தனம் மாறாத வார்த்தைகள் வருவது வேறு விஷயம். வெண்பல்தவத்தவர்,கிரிசைகள்,போதருமா போல, மேலயார் செய்வனகள்,இதைப்போல் எவ்வளவோ அசல் வெளிப்பாடுகளை அறியாச்சிறுமிகளுக்கே உரிய முறையில் ஆண்டாள் சொல்லியிருக்கிறாள்.இந்த முறை முதலிலிருந்தே பீடிகை பலமாக இருக்கிறது. காதலின் பேரால் எதைக் கேட்கப் போகிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது கண்ணனுக்கு, அப்படியே அவர்களின் பிரேமையின் உருக்கமும் கொல்கிறது. அவன் நிலையும் அதுவே அல்லவா ?எனினும் காட்டிக் கொள்ளாமல் ‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? ‘என்று கேட்டான்.

அத்தோடு அன்பர்களின் ரட்சணம் என்பது தன் தலையாய கடமை என்று நினைப்பவனாகையாலே தானாகப் பார்த்துச் செய்யவேண்டியதை அவர்களாக வந்த பிறகாவது பிற்பாடின்றி செய்யவேண்டும் என்கிற ஆற்றாமையுடன் என்ன தேவை என்று விசாரித்தான்.

அதை இந்தப் பள்ளியறையில் வைத்துச் சொல்லமுடியாது.எல்லாரையும் சாட்சி வைத்து பெரிய சபையில் அத்தாணி மண்டபத்தில் தான் சொல்வோம் என்றார்கள். நீ நடந்து வா அத்தாணி மண்டபத்து ஆசனத்தில் இருந்து நாங்கள் சொல்வதைத் தீர யோசித்து முடிவு செய்வதற்கு,என்றார்கள்.

இங்கே கிடையழகு பார்த்தோம். எங்கள் முன் நடந்து அத்தாணிமண்டபத்துக்குப் போ.உன் நடையழகு பார்க்கிறோம் என்றார்கள். மாரிமலை முழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரிமயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்

போதருமாபோலே நீபூவைப்பூ வண்ணா உன்

கோயில்நின்றிங்கனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்.[திருப்பாவை-23]

மாரிக்காலம். மழைபெய்து மலைப்பாதைகள் வழுக்கலுடன் புழக்கத்துக்கு சிரமம் கொடுப்பனவாக இருப்பதால் அரசர்கள் போர்ச்சவால் எதையும் ஏற்காமல் புதிதாக வந்த பகைகளைக் கூட கண்டும் காணாதது போல மழைக்காலம் போகட்டும் என்ற முடிவோடு படைவீடுகளை மூடிவிட்டு அந்தப்புறத்துக்குள் முடங்கும் காலம். சிங்கம் பிறப்பிலேயே ஆளப்பிறந்தது.காட்டுத் தலைவன்.ஒரே ஒரு கர்ஜனையில் அவ்வளவு மிருகங்களும் மூச்சின்றி அடங்கும் அளவு ஆளுமை வாய்ந்தது. அதுவும் தன் துணையோடு மழைக்காலத்தில் மலைக்குகைக்குள் பிணைந்து படுத்துத் தூங்கும்.பார்க்கும்போது பெண்சிங்கமும் ஆண்சிங்கமும் இருப்பது தெரியாது. ஒரே சிங்கம் என்று நினைக்கும்படி ஒன்றோடொன்று இணைந்து கிடக்கும்.பயமென்பது கிடையாது என்பதால் உறக்கத்திலும் பிற மிருகங்களைப் பயமுறுத்தும்படி வீரத்தோடு வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுந்திருக்காமல் படுத்திருக்கும்.காலையானதும் அல்லது மாலையானதும் அந்தந்த நேரத்துப் பூக்கள் மலர்வது போல மாரிக்காலம் முடிந்து மழையொழுக்கு நின்ற வுடனே அந்தச்சிங்கத்துக்கு விழிப்பு கண்டுவிடும்.எழுந்தவுடனேயே அது அருகாமைச் சத்தங்களைக் கிரகித்து நெருக்கத்தில் யானையோ வேறு மிருகமோ நடமாடுவது புரிந்தால் தீ உமிழும் பார்வையை வீசியபடி மேலெழும்.முதல் விழிக்கு அதன் பேடை கூடப் பக்கத்தில் நிற்காது பயந்து முடங்கும். உடம்பை சோம்பல் தீர ஒரு உலுக்கு உலுக்கி வாசனையுள்ள பிடரியின் உளைமயிர்களை உதறி முதுகை வாகாக ஒரு நிமிடம் ஒடுக்கிப்பின் எல்லாத்திசைகளிலும் அவயவங்களை நீட்டி இயக்கத்துக்கு ஏதுவாக்கி ஒரு கர்ஜனை வைக்கும்.அந்த கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் வனத்தில் வெவ்வேறு இடங்களில் அலைந்துகொண்டிருக்கும் எல்லா மிருகங்களும் கல்லாங்காயாக இருந்த இடத்திலேயே பயத்தால் அடங்கிவிடும்.

அரசனுக்கு எவ்வளவு ஆளுகைக்குள் இருந்தாலும் திருப்தி கூடாது. இன்னும் இன்னும் என்று ஆதிக்க வெறி இருந்தாகவேண்டும். அப்படியே சிங்கராஜனும் வேண்டுமோ வேண்டாமோ முடங்காமல் வேட்டையைத் தேடிக்கொண்டேயிருக்கும். அது மழைக்கால மலைக்குகையில் உறங்கி முடித்து எழும்போது அதன் வேட்டை மனோபாவம் இன்னமும் விரிந்து பரந்ததாய் இருக்கும். அதன் முன் எந்த மிருகமும் நிற்க முடியாது. அப்படி ‘சீரிய சிங்கம் ‘,மிருகராஜன்,மிருகேந்திரன், யசோதையிளஞ்சிங்கம்,சிற்றாயர் சிங்கம்,அறிவுற்று[அடியோடு அறிவில்லாததற்கு அறிவு புதிதாய் வந்தது போல,பொம்மைக்கு உயிர் வந்தது போல] ‘தீவிழித்து ‘ ஆய்ச்சியர் கூக்குரல் கேட்டு ‘என் பிரியமான கோபிகைகளை வதைத்தவர் யார் ? ‘என்று அனல் கக்கின பார்வையைப் பார்த்துக்கொண்டு குரல் கொடுத்தபடியே நப்பின்னையின் அறை விட்டு கண்ணன் வெளியே வரவேண்டும் என்றார்கள்.

நானென்ன சிங்கமா ? அப்படியா பயங்கரமாயிருக்கிறேன் ? என்றான் கண்ணன்.அல்ல அல்ல. உன் வலிமைக்கும் ஆளுமைக்கும் உதாரணமாகச் சிங்கத்தைச் சொன்னோம். மற்றபடி நீ காயாம்பூ வண்ணன் உன் வடிவழகும் நிறமும் சிங்கத்துக்கு உண்டா ? என்றார்கள்.

நரசிங்கத்தை நினைத்துக் கொண்டு விட்டார்களோ ? பல பேரை அழிக்க எப்போதும் ஒரு அவதாரம் எடுக்கும் நான் ஒரே ஒருவனை அழிக்கவென்று கடந்த,நிகழ் ,எதிர் என்ற முக்காலங்களிலும் நிற்கிற முடிவில்லாத எண்ணற்ற அவதாரங்களை கலந்துகட்டி சிங்க உருவில் எடுத்து ஒரே ஒரு சின்னக்குழந்தையை பிரகலாதனின் நம்பிக்கையை நிரூபித்தேன் அதைச் சொல்கிறீர்களா ? என்று கேட்டான்.

அதுவல்ல.இது சீரிய சிங்கம். அது கலந்துகட்டி சிங்கம். அந்தப் பல அவதாரத்தில் ஒரே ஒரு தூணில் இருந்தஒரே ஒரு நரசிங்கம் மட்டுமே வெளிவந்தது. மற்ற எல்லா நரசிங்கங்களும்,அன்று எந்தத் துரும்பை இரண்யன் தொட்டுக்காட்டிக் கேட்பானோ ‘எங்கே ஹரி ‘ என்று காத்திருந்த ,எல்லா நரசிங்கங்களும் அப்படியே உறைந்து இன்னமும் இருக்கின்றன. அது தெரியும் எங்களுக்கு. நீ சீரிய சிங்கமாக வா போதும். தேவராலும் மனிதராலும் மிருகத்தாலும் ஆயுதத்தாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டகத்திலும் புறத்திலும் எங்கும் எப்போதும் மரணமில்லாத வரமுள்ள ஹிரண்ய நிபந்தனைகளை மீறிச் செலுத்துகிற உன் அவதார தந்திரங்கள் இங்கு அவசியமில்லை. நரசிங்கத்துக்கு இங்கு தேவையில்லை. நீ வா சிங்க நடை நடந்து அத்தாணி மண்டபத் துக்கு வந்து சேர். அங்கு எங்கள் காரியத்தை ஆராய்ந்து அலசி ஒரு முடிவெடு என்றார்கள்.

எங்கள் ஆசாபாச யனையை அடக்கும் அற்புதச் சிங்கமாக,கோசலை குகை விடுத்த ரகு சிங்கமாக,பாற்கடல் பாம்பு விடுத்த யதுசிங்கமாக,அஹோபிலம் விடுத்த நரசிங்கமாக யோகநித்ரை விடுத்த பிரும்மமாக வா என்றார்கள்.வனமில்லாத இடத்திலே சிங்கமில்லை. பக்தரில்லாத இடத்திலே பகவான் இல்லை. இப்போது நீ வா.

உன் எதிரிகளும் கண்டு மயங்கும் பூவைப்பூ வண்ண வடிவத்தோடு கிளம்பி வா. உன் பேச்சு படுக்கையறைப் பேச்சாகப் போய்விடக்கூடாது. ஏதோ பெண்கள் வந்தார்கள் பள்ளியறையில் வைத்துப் பேசினார்கள். எதையோ பெற்றார்கள் என்கிறபடிபதிவு வரலாகாது. உன் முடிவு தேர்த் தட்டில் நின்று அர்ச்சுனனுக்குச் சொன்ன வார்த்தைகள் போல நிலை பெற்று நிற்கவேண்டும். கடற்கரையில் நின்று வானரர்கள் முன் விபீஷணனுக்குத் தந்த உத்தரவாதம் போல நிலை பெற வேண்டும். நீதிபதி ஆசனத்திலிருந்து சொல்லப்படும் ஆணை எப்படி அவராலேயே மாற்றப் பட முடியாதோ உன் வாக்கை நீயே மீற முடியாதபடி அமைந்த நியாயாசனத்திலிருந்து உன் முடிவைச் சொல்லு என்றார்கள்.

இந்தப்பாசுரம் முதல் 5 பாசுரங்கள் கைங்கர்யம் என்கிற இறைத் தொண்டு பற்றிச் சொல்பவை. அந்த ஐந்தில் முதல்படியாக கடவுள் அருளை வேண்டும் பாசுரம் இது.அவனருளாலே அவன் தாள் நினைந்து என்பது போல அவன் தன்னை அமைத்துக் கொடுத்தாலேயன்றி யாருக்கும் தொண்டு செய்யக் கழியாது என்பதை வலியுறுத்தி அதற்காவன செய்யும் பாசுரம் இது.


24.அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி கண்ணனைக் காணூம் வரை அது வேண்டும் இது வேண்டும் என்று நினைத்தார்கள்.கண்டபின்பு அவனுக்குப் பரிந்தார்கள்.இப்போது வேலை மெனக்கெட்டு என்றெல்லாமோ கண்ணனுக்கு நடந்த அசம்பாவிதங்களை இன்று நினைத்து அதற்குக் கவலைப்பட்டு வயிறு இறுக்கிக் கொண்டு பல்லாண்டு பாடுகிறார்கள். ‘கதே ஜலே சேது பந்தம் ‘ செய்கிறார்கள். கதையில் வந்த வெள்ளத்துக்கு நிஜத்தில் பாலம் கட்டுவது. எப்போதோ நடந்த விபத்துக்கு இன்று பரிகாரம் செய்கிறார்கள். அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்[திருப்-24]

பரமனுக்கு எல்லா மங்களமும் உண்டாகவேண்டுமென்று ஆதங்கப்பட்டு உரத்த வெளிப்பாடு செய்வது தான் மங்களாசாஸனம் செய்வது.தமிழில் போற்றி சொல்வது.பகவான் சர்வசக்தன்,சர்வக்ஞன்,அமங்களமென்பதே இல்லாதவன் அப்படியிருக்க அவனுக்குச் சிறியரான நாம் மங்களாசாஸனம் செய்வது என்பது பொருத்தமா ? என்றால் பொருத்தமே.பெரியதொரு அன்பின் காரணமாக அது நேர்கிறது.

எல்லா உயிருக்கும் சரீர குணங்களும் ஆத்ம குணங்களும் உண்டு.அப்படியே பரமனுக்கும் உண்டு.கருப்பு,சிவப்பு,உயரம் பருமன் என்பதெல்லாம் ஜீவனுக்கு சரீர குணங்கள்.நல்லவன்,கெட்டவன்,அறிவாளி,ஆத்திரக்காரன் என்பதெல்லாம் ஆத்மகுணங்கள். பரமனுக்கும் ரூபம்,செளந்தர்யம்,லாவண்யங்களாதி சரீர குணங்களும் ஞானம்,சக்தி வாத்சல்யாதி ஆத்ம குணங்களும் உண்டு.ஞானிகள் தெளிந்த நேரத்தில் பரமனின் ஸ்வரூப குணங்களை அனுபவித்து ரட்சகம் கேட்பார்கள்.அதே ஞானிகள் அவன் ரூப குணங்களைப் பார்த்து மயங்கும்போது அவனுடைய சக்திகளை மறந்து இந்த அழகிய திருமேனிக்கு என்ன தீங்கு வருமோ என்று பல்லாண்டு பாடுவார்கள்.ஏனெனில் அவனுக்குக் குறையொழிந்ததேல் நமக்குக் குறையொழிந்தது.அப்படித்தான் தண்டகாரண்ய ரிஷிகள் இராமனுக்கு மங்களாசாஸனம் பாடியது.பெரியாழ்வார் கருடாரூரருக்குப் பல்லாண்டு பாடியது.பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்றபேர் என்றபடி மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடிசென்னி திருக்காப்பு என்றது. ‘அஹம் வேத்மி மஹாத்மானம் ‘ என்று தனக்கு இராமனின் பெருமை முழுக்கத்தெரியும் என்று சொல்லிக்கொண்ட விஸ்வாமித்திரர் தாடகை வரும் சப்தம் கேட்டதும் ‘ஸ்வஸ்தி ராகவ ‘என்று பதறினார்[பார்த்து,பார்த்து,செளக்கியமாக இருப்பா,என்கிறது போல].புத்ரகாமேஷ்டி பண்ணி பிள்ளை பெற்ற தசரதன் எல்லா அற்புதங்களையும் கண்ணால் பார்த்திருப்பினும் பரசுராமன் வழிமறித்தபோது ‘நான் வருகிறேன் சண்டைக்கு என் பிள்ளையை விட்டுவிடு ‘ என்று அபயம் கேட்டிருக்கிறான்.வசுதேவரும் சங்குசக்கரத்துடன் பிறந்த பிள்ளையை மறைத்துக்கொள்,திவ்யாயுதங்களை வெளியில் பாமரருக்குக் காட்டாதே என்றார்.ஜடாயு மரணத்தறுவாயில் ராகவனுக்கு ‘ஆயுஷ்மான் பவ ‘என்று ஆசி வழங்கியிருக்கிறார்.இதெல்லாம் அபரிமிதமான அன்பின் விளைவாகச் செய்யப்பட்ட செயல்கள்.அப்படித்தான் இங்கு கண்ணன் அத்தாணி மண்டபத்துக்கு பத்தடி தூரம் இந்தப்பெண்களுக்காக நடந்து வரவும் அவன் தமக்காக வருந்தி நடந்ததைத் தாங்கமுடியாமல் மங்களாசாஸனம் என்ற போற்றி பாடினார்கள். வெண்ணையுண்டு வளர்ந்த மேனியாதலால் பாதங்கள் சிவந்து போய்விட்டன.அப்படி வருந்திய பாதங்களைப் பார்த்துச் சொன்னார்கள்,அன்று நடந்தது இரண்டடிகள் இன்று பத்தடி நடக்கவைத்து விட்டோம்.உலகை அளக்க வைத்த தேவர்களைப் போல நாங்களும் செய்துவிட்டோமே!நடந்தகால் நொந்தவோ!இசையவோர் மூவடி வேண்டிச் சென்று அழகுக்கு இலக்காக்கி உருக்கினாய் அது முடியாதபோதுஅம்புக்கு இலக்காக்கி ஒடித்தாய்.பரற்பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே!எவ்வாறு நடந்தனை!எம்மிராமா!ஓ!புலியை அதன் குகைக்குப் போய்க் கொல்வது போல சென்றவாறே கர தூஷண விராதன் ஆதி அரக்கரை அழித்து ஜலவேலி தாண்டி ஊரரண் கடந்து இலங்கை செற்றவனே!தீமனத்தரக்கர் திறலழித்தவனே!பிறந்த எழு திங்களில் அறிகையின்றி ஆயுதம் பிடிக்கும் திறலின்றி [கள்ளச்சகடத்தை நாங்கள் நினைத்து வயிறெரியும் படி வருந்தி]உதைத்து அழித்தாயே!இராமன் கையில் வில் பிடித்த தழும்பு.கண்ணன் காலில் சாடுதத்த தழும்பு.பெற்ற தாயும் உதவாத சமயத்தில் பச்சைக்குழந்தையாய் செய்த வீரம்,திருக்காலாண்ட பெருமாளின் புகழ் தான் என்னே!கன்றையும் விளங்காயையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடித்து இரு அசுரர்களை ஒன்றாக மாளச்செய்த கழலின் பெருமை என்ன!முதல் அடியில் உலகளந்த ஓரடி இருந்தபடியே மலர்ந்த ஒற்றைஅடி சிறப்பிக்கப்பட்டது.அடுத்த அடியில் பல அடிகள் வைத்து இலங்கை பாழாளாகப் பொருதது சொல்லப்பட்டது. அந்த காலடிகளின் திறல் என்று சிறப்பிக்கப்பட்டது. சகடம் உதைத்தது புகழ் ஏனெனில் பச்சைக்குழந்தையாகச் செய்தது அதுவும் அதே காலடியால்.இப்போது கன்றின் இரு கால்களைச்சேர்த்துப் பிடித்துக்கொண்டு ஒரு சுழற்று சுழற்றி விளங்காய் இருந்த மரத்தின்மீது வீசி எறிந்தபோது வீச்சின் வேகத்தில் ஒரு கால் மேலே தூக்கிப் பாதத்தின் உள்சிவப்பு தெரிந்தது அந்தக் காட்சியில்.எனவே கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்றார்கள். கன்றை எறிதடியாக்கி விளங்காயை விழச்செய்ததில் கழலுக்கு என்ன சம்பந்தம் பாருங்கள்.கன்றில் ஆவேசித்த அசுரனையும் விளங்காயில் ஆவேசித்த அசுரனும் ஒக்க விழும்படி சுழட்டின கையோடு அனுசரணையாக தூக்கிய பாதமானதே[குஞ்சிதபாதம்]அந்தக் கழலணிந்த பாதத்துக்கு ஒரு போற்றி.மாரீசன் சூர்ப்பணகை போலத் தப்பவிடாமல் வத்ஸாசுரனை எறிந்து விளங்காய் அசுரனைக் கொன்ற கழலுக்குப்போற்றி.[இரு அசுரர்களுமாக உன் மேல் விழுந்திருந்தால் நீ என்ன ஆகியிருப்பாய் ? என்று அஞ்சி வயிறுபிடிக்கிறார்கள்]கோவர்த்தனத்தை 7 வயதில் 7 நாள் களைப்பின்றி ஒற்றை விரலால் தாங்கி நின்றது பலம் காரணமாக அல்ல. குணம் காரணமாக.ஒரு தாயாருக்கு 10மாத வித்தியாசத்தில் இரு குழந்தைகளாயின. சிறியதைத் தாய் எடுத்துச் சீராட்ட சவலைக்குழந்தை தன் தாயைக் கை ஓயும் மட்டும் அடித்தது. தாய் மூத்த குழந்தையைப் பொறுத்துக் கொள்வது போல குணம் கொண்டு கண்ணன் கோவர்த்தனம் எடுத்தான். இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கிடு என்று சொன்னது கண்ணன்.இந்திரன் பட்டினி காரணமாகக் கோகுலத்தில் கல்மழைபொழிவித்தான். அவனை எதுவும் செய்யாமல் மலையைக் குடையாகப்பிடித்து இடையர்களைக் காப்பாற்றினான் கண்ணன். அதுவல்லவா குணம் ?பொன்றச்சகடம் என்றதில் எப்படி முடிந்த முடிவாக அசுரர்களை வதைத்தது புலப்பட்டதோ [இராமாவதாரத்தில் மாரீசனைக் குற்றுயிராக்கி அனுப்பினது தப்பாயிற்று என்று புரிந்து கிருஷ்ணாவதாரத்தில் வெட்டு ஒன்று துண்டிரண்டாக எல்லாம் முடித்ததை]அப்படி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்பதிலும் சிறப்பான அழுத்தம் இருக்கிறது. எல்லாம் இவனே செய்தான் என்றால் கண்ணேறு விழும் என்று இதெல்லாம் இவன் வேல் செய்தது என்று வேலின் மீது வெற்றிகளை ஏற்றுகிறார்கள்.சக்ரவர்த்தி வில் பிடித்தான் இராமனும் கோதண்டம் ஏந்தினான்.நந்தகோபன் வேல் பிடித்தான்[கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்]கிருஷ்ணனும் வேல் பிடித்தான்.தந்தை எடுத்ததே மகனுக்கும் பழக்கம். வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்றது போல அந்த வேலுக்கு ஒரு போற்றி சொன்னர்கள்.என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கு என்றார்கள். இதிலும் விசேஷமான பொடி வைத்திருக்கிறார்கள். உனக்கு அடிமை செய்வதல்லால் வேறு பலன் வேண்டாம் என்று பறை கொள்ள வந்திருக்கிறோம். பறையோடு உன்னை எங்களுக்குக் கொடுத்து இரங்கு என்பது பொருள்.

உன்னுடைய விக்கிரமமொன்றழியாமலெல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் எழுதிக்கொண்டேன் என்றது போல என்றென்றுன் சேவகமே ஏத்தினோம் என்றார்கள். ஒன்று நூறும் ஆயிரம் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வான் என்றது போல அவன் செய்த தொண்டூழியங்கள் பெரிதல்லவே!அர்ச்சுனன் சொன்ன இடத்தில் தேரை நிறுத்திய சாரதி இவர்கள் சோன்னபடி அத்தாணி மண்டபம் வந்து உட்கார்ந்தானே! அதற்குத்தானே பல்லாண்டு பாடினார்கள்!

இன்னமும் அன்று அவன் அமரருக்கு நோவு தீர்க்கச் செய்ததை இவர்கள் ஞாபகப் படுத்தியது இன்று இவர்களின் நோவுக்கு அவன் இரங்கவேண்டும் என்ற உத்தேசத்தில் தான். அன்றையும் இன்றையும் ஒரேநேர்க்கோட்டில் நிறுத்தி தங்கள் பக்கத்து நியாயம் இன்னமும் அதிகமாகவே இருப்பதாக எடுத்துச் சொல்கிறார்கள். மஹாபலியை ஆண்ட அன்று ,எங்களை ஆண்டுகொள்ளவா இன்று, தேவர்க்காக நீ நோவு பட்ட அன்று உனக்காக நாங்கள் நோவு பட்ட இன்று என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.

மிக உயர்ந்த போற்றி பாடல் என்ற தொண்டூழியம் ஆத்மார்த்தமாக கோபிகைகளால் வைக்கப்பட்டது, ஆண்டாள் கைங்கர்யத்தின் அடுத்த படிக்கு போகிறாள்.


25.ஒருத்தி மகனாய்ப்பிறந்து–

தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் வளர்ந்து என்று சொல்லாமல் பெற்றதொருத்தி வளர்த்ததொருத்தி என்று ஏன் மறைத்து மறைத்துப் பேசுகிறார்கள் ?ஒளிந்து வளர்ந்த அதே சூழலை மனசில் வைத்து இப்போதும் ஏதாவதொரு கம்சன் ‘ஓஹோ கண்ணன் தேவகிக்குப் பிறந்து பின் யசோதையிடம் தான் வளர்கிறானா ‘என்று தெரிந்துகொண்டு google searchல் தேடிக் கண்டு பிடித்துக் குழந்தையாக இருக்கச்செய்தே கொன்றுவிடுவானோ என்று அஞ்சுகிறமாதிரி பூடகமாய் ஒருத்தி ஒருத்தி என்கிறார்கள்.அது தான் காரணமா ? இருக்கமுடியாது.பெற்றவள் தேவகி.

அவள் தன் திருமண நாளன்று அண்ணன் திருமண உலாவில் சாரத்தியம் செய்ய அசரீரி கேட்ட துர்ப்பாக்கியவதி.அன்று ஆரம்பித்தது அவளது துயர். அவள் பட்ட துன்பம் இன்னொருபெண் பட்டிருக்கமுடியாது. அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்தி இல்லை.பின் அண்ணனே எதிரியாக அவள் சிறைச்சாலையில் குடும்பம் நடத்தினாள்.அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்தி இல்லை.புத்திரகாமேஷ்டி செய்து நாலு புத்திரர்களைப்பெற்ற மூன்று தாயர் போலின்றி ஒரே கோபாலரத்தினத்தைத் தான் ஒருத்தியே தரித்தாள்.அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்தியில்லை.பிரபஞ்சத்துக்கே காரணபூதனும் அதைக் காக்கவும் போரவும் நியமிக்கவும் கடமைப்பட்டவனுமான ஒருவனைத் தான் காத்துப் போர நியமிக்கக் கருவில் தாங்கினாள்.அவள் ஒருத்திஅவளைப்போல் இன்னொருத்தியில்லை..அப்படி அவன் ஒருவனைப் பெற தன் கண்முன் ஆறு குழந்தைகளைக் கல்லிடைமோதி அண்ணன் கொன்று குவித்த காட்சியைச் சகித்தாள்.அவள் ஒருத்தி. அவளைப்போல் இன்னொருத்தி உண்டா சொல்லுங்கள்.எந்தப் பெண்ணுக்கும் கிடைக்கும் சாதாரண பேறுகால போஷணையுமின்றி சிறைச்சாலை யில் ஒரு விளக்கின்றி ஒரு பால்பழமின்றி மங்கலப் பொருட்களின்றி பிரசவித்தாள். பிள்ளையை வரவேற்க சுத்தம் செய்யப்பட்ட அறையில்லை,கோலமில்லை,சூடாக வென்னீரில்லை,மங்களம் சொல்ல உறவினரில்லை,சோபனம் பாடப் பெண்களில்லை,மானிடக்குழந்தைக்கும் கிடைக்கும் எந்த உபச்சாரமுமில்லாமல் கண்ணனைப் பெற்ற அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்தி யில்லை.கர்மவச்யன் பட்டதைக் க்ருபாவச்யன் பட்டான், கர்ப்பத்திலிருந்து விழுந்த குழந்தை நாளெல்லாம் தூங்கும் அலுத்துக்களைத்திருக்கும் கண்ணனோ உடனே ஒரு பிரயாணம் மேற்கொண்டு கோகுலம் கிளம்பினான்.பிறந்த குழந்தையை உடனே வழி அனுப்பிவைத்த தாய் தேவகி. அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்தியைக் கண்டார்களா ? காலப்பரிமாணமில்லத வஸ்துவை ஒரு குரூரமான இரவில் மழையிருட்டில் கடவுள் என்று அறிந்தபின்னும் சங்கு சக்கரத்தை மறைத்துக் கொள் என்று கட்டளையிட்டு அனுப்பிவைத்தாளே அவள் ஒருத்தி.இதெல்லாம் இன்னொரு பெண்ணுக்கு நடந்ததுண்டா ? தேவகி ஒருத்தி தான்.அவளைப்போல் இன்னொருத்தியில்லை.அதனால் ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்றார்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தேவகியை ஒருத்தி என்றது சரிதானே ?

பெற்றவளைப் போலவே வளர்த்தவளும் ஒருத்தி.ஞாலத்தில் புத்திரனைப்பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை என்று சொல்லிக்கொண்டவள்.கட்டவும் அடிக்கவும் கோல் கொண்டு ஆட்டிவைக்கவும் கடவுளை வத்திருந்த அவள் ‘பெருங்குடிப்பிறந்து பெரும்பிள்ளை பெற்ற யசோதை ‘என்று கொண்டாடப்பட்டாள்.அங்கு அவதாரரசம் இங்கு லீலாரசம்.அங்கு திருப்பிரதிஷ்டை இங்கு ஜீரணோத்தாரணம். ‘யசோதா,உன்பிள்ளையைக்கூப்பிட்டுக்கொள், ‘உருக வைத்த குடத்தொடு வெண்ணை உறிஞ்சி உடைத்திட்டுப்போந்து நின்றான் ‘என்று அயல் பெண்கள் முறையிட ‘அஞ்சனவண்ணா,அயலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் காகுத்த நம்பி,வருக இங்கே ‘ என்று துடித்தவள்.குச்சியைக்கொடுத்து மாடு மேய்க்க அனுப்பிவிட்டு ‘கன்றின்பின் எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் ? ‘என்று கதறினவள். ‘கண்ணா,நாளை தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலஞ்செய்திங்கேயிரு ‘என்று இறைஞ்சியவள்.நாவழித்து வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்றபடி மாயம் எல்லாவற்றுக்கும் சாட்சியானவள்.

இடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளும் மங்கை இறுத்திடும்

ஒடுங்கிப்புல்லில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கில்லாமையால் நான் மெலிந்தேன் நங்காய்

[எனக்குத் தெம்பில்லைம்மா ரொம்ப படுத்தறான்]

என்று தாய்மையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தும் புலம்பியும் தீர்த்தவள்.தொல்லையின்பத்து இறுதி கண்டவள் அவளும் ஒருத்தியல்லாமல் என்ன ?ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பாக்கியவதி அவள் ஒருத்தி.அவளைப்போல் இன்னொருத்திகிடையாது.அதனால் ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஒருத்திமகனாய் ஒளித்து வளர்ந்ததை அது பொறுக்காத கம்சன் துன்பம் தந்ததை அவன் கெட்ட எண்ணத்தை முற்றிலும் முறியடித்து அவன் வயிற்றில் மரணபயமாக கண்ணன் உறைந்ததைப் புகழ்ந்து பாடினார்கள் ஆண்டாளும் அவள் தோழிமார்களும்.

நாட்டார் செய்வதெல்லாம் செய்யப் பெறாதே கள்ளர் பட்ட பாடு பட்டான் ஒளித்து வளர்ந்தவன்.அவதரித்தபின்னும் அந்தர்யாமி பட்ட பாடு அது.நிலவறைகளில் [underground]வளர்ந்தான். லோபாமுத்திரை காவேரியாகி தலக்காவேரியில் பிறந்து ஒளிந்து குப்தவாகினியாகி குடகில் வெளிப்பட்ட மாதிரி.

அந்தியம்போது அங்கே நில்லேல் வானிடைத்தெய்வம் காண என்று தேவர்கள் பார்க்கும்படி கண்ணனை நிற்கவிடவும் சம்மதிக்க மாட்டாள் யசோதை. போய்ப்பாடுடைய உன் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன்கடியன் காப்பருமில்லை கடல்வண்ணா உன்னை என்று தாயைப்புலம்பவிடும்படி கம்சன் நலிந்தான். எத்தனை அசுரர்கள்!எத்தனை ஆபத்துகள்! கண்ணனுக்கு! தனியே போயெங்கும் திரிதி என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ?ஏதுமோர் அச்சமில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயம்பூ வண்ணம் கொண்டாய் என்று யசோதையை வயிறெரிய விட்டு கம்சன் பகையுடன் கண்ணன் வளர்ந்தான். தாயின் வயிற்று நெருப்பை கம்சன் வயிற்றுக்கு மாற்றினான்.

பெண்களே மிக வருந்தி வந்தீர்கள் பல்லாண்டு பாடினீர்கள்.நாம் பிறந்ததும் வளர்ந்ததும் சொன்னீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டான் கண்ணன்.

உன்னை அர்த்தித்து வந்தோம் நெடு மாலே என்றார்கள்.உன்னையன்றியும் இன்னொன்று வேண்டி நாங்கள் வந்திருப்போம் என்று நினைத்தாயா ? இவ்வளவு நாளும் உன் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாமலிருந்தது. இப்போது நன்றாகத்தெரிந்து விட்டது. உனக்கு எம் மேலான வ்யாமோஹத்தை ஒரே பார்வையில் புரிந்து கொண்டோம் என்பது விளங்க நெடுமாலே என்றார்கள்.[மால் என்றால் அபரிமிதமான காதல்.மயக்கம் சேர்ந்த மறைக்கமுடியாத பித்துப்போன்ற பெரிய காதல்.ஜொள் என்று இப்போது புதிய அகராதியில் சேர்ந்திருக்கும் தமிழ் வார்த்தையின் இலக்கணமே இந்த ‘மால் ‘ தான். மீதி விளக்கம் மாலே மணிவண்ணா வில் தொடரும்] கண்ணன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு சுதாரித்தான்.

நெடுமாலே!திரு விரும்பத்தக்க செல்வமும் தொண்டூழியம் என்ற கைங்கர்யமும் கொள்ளவென்று வந்தோம். நீ மனது வைத்து பறையோடு உன்னையும் சேர்த்துத் தருவாயாகில் எங்கள் வருத்தம் தீர்ந்து போகும். என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத்தந்த கற்பகம் என்றபடி காதலின் மகோன்னதமான ரசாயனம் இருக்கிறதே ஒருவருக்கொருவர் நீ நான் மறந்து ஒன்றாகுதல் அதை அடைய வந்தோம்.ஏற்கனவே நெடுமாலான உன்னை அர்த்தித்து பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் என்றார்கள்.

வழியெல்லாம் மிக வருந்தினீர்களோ என்ற கண்ணன் கேள்விக்கு இல்லை உன் ஐஸ்வர்யத்தையும் ஆண்மையையும் பாடிக்கொண்டு வந்தோம்.அதில் வருத்தமே தெரியவில்லை என்று சொன்னார்கள். ஒருத்திமகனாய்ப்பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்துவளரத்

தரிக்கிலனாகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்தன்னை

அர்த்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.[திருப்-25]

இங்கே ஒரு முக்கியமான திருப்பம். ஆண்டாளின் திருப்பாவை ஒரு மிகப்பெரிய மாஜிக் ஷோ.கிட்டத்தட்ட ‘ஸர்க்கராமா ‘[multi projectorfilm] என்று புரிந்து வைத்திருப்பீர்கள். இவ்வளவு நாளும் நடந்த இருபத்தைந்து பாசுரப் பொழிப்புரையிலும் ஒரு சின்ன வரியை miss பண்ணியிருந்தாலும் புரிதலில் சறுக்கல் நேருமளவுக்குத் திட்பமும் சொன்னதைச்சொல்லல் இன்மையும் கவனித்திருப்பீர்கள்.அதில் என் சாமர்த்தியம் எதுவுல் இல்லை. கவிதையைச் செய்தவளின் சாமர்த்தியம்.எப்படியெனில் காலத்தை விழுங்கி செயல்படுவதுடன் பலபேரா ஆண்டாள் ஒருத்தியா கூட்டத்தில் நாம் உண்டா கூட்டத்தில் இனி பிறக்கப்போகிற பிற்கால சந்ததியும் உண்டா நிகழ்வு நடப்பது பூமியிலா வைகுந்தத்திலா அங்கும் ஜீவ பரம சந்திப்பில் யத்தனம் உண்டா என்று பல கேள்விகள் வைக்கக் கூடியது திருப்பாவை. எல்லா கற்பிதத்துக்கும் ஆம் ஆம் என்று ஆமோதிப்பு வரும் திருப்பாவை வரிகளில்.பரம் என்ற பொருளின் தன்மை சொல்லி ஜீவன் என்ற வஸ்துவைப் பத்து படிகளில் எழுப்பி ஆச்சாரியனிடம் ஞானஸ்நானம் செய்வித்து பிராட்டி மூலம் அருள்வித்து தொண்டில் ஈடுபடுத்தித் தொண்டின் கடைசிப் படியான ‘தொண்டுக்காகத் தொண்டு ‘ தத்வத்ரயம் என்ற நிலையை அடைவித்து நிறுத்தியாயிற்று இங்கு.தொண்டுக்காகத் தொண்டு என்றால் என்ன அர்த்தமெனில் எந்தப்பிரயோசனத்தையும் கருதாமல் சேவையை அதில் இருக்கும் சந்தோஷத்துக்காக மட்டும் செய்வது.எப்படியெனில் ஒரு பெண் தன் கணவனை அந்தஸ்துக்காகவோ அறிவுக்காகவோ குணத்துக்காகவோ நேசிக்காமல் அவனுக்காகவே அவனை நேசிப்பது.காதலின் ஒரு கட்டத்தில் இது நேர்ந்து விடும்.முதல் சந்திப்பில் பண்பு,அன்பு அந்தஸ்து,அறிவு எல்லாம் பரவசம் ஏற்படுத்தும்.காதலில் கலந்தபின் அவன் என்னவாகிப்போனாலும் அவனுக்காகவே அவனை மிக விரும்புகிற கட்டம் வந்து விடும். அது வந்துவிட்டது ‘உன்னை அர்த்தித்து வந்தேன் ‘என்ற வரியில். இனிமேல் ரஸானுபவத்துக்காக மட்டுமின்றி ஆண்டாளின் ஆன்ம விருப்பத்தை கெளரவிக்கும் விதமாக ஆண்டாள் ஒருத்தியே நிற்பதாகக் கற்பனை செய்வோம். உண்மையில் ஆண்டாள் கவிதை செய்தது அப்படித்தான். வீட்டின் உக்கிராண அறைக்குள் இருந்த ஒரு பெண்ணெழுதித் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டது தானே திருப்பாவை! அஞ்சு லட்சம் பேர் கோபிகள் எல்லாம் பொய் அல்லவா ? இப்போது நிற்கிறவள் ஆண்டாள். 25 படிகளில் ஸ்புடம் போடப்பட்டு பரிபக்குவமாக நிற்கிறாள். காதலின் உன்னதமான கட்டத்தை அடைந்தும் விட்டாள். இப்போது அவளும் அவனும் ஒன்று. திருமணச் சடங்கில் சிலர் வழக்கப்படி ‘அம்மாங்கோலம் ‘ செய்வதுண்டு. பெண்ணுக்கு ஆண் வேஷமும் மணப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள்.romance ல் கூட ஆடை மாற்றிக்கொள்வது மிகப்பெரிய sensation என்று சொல்லப்படுகிறது.அந்த இருவரும் சமம்,அல்லது ஒருவர் இன்னொருவராக மாறினோம் என்கிற நிலை அடுத்த பாசுரத்தில் சொல்லப்படப்போகிறது.ஆன்மீக ரூபமாக அதை பகவத்சாம்யம் என்று சொல்கிறார்கள். அதாவது பரமனோடு ஜீவன் சமத்துவம் கோருவது.எனவே இனி கூட்டம் இல்லை.ஆண்டாள் கண்ணன் அவ்வளவே தான் அடுத்த ஐந்து பாட்டிலுமென்று அறிக.

அதற்கு முன் கீதை வரி ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். ‘தத்வத்ரயம் ‘ என்ற ‘ஒருத்தி ‘ பாசுரக் கருத்துக்கு விளக்கமாக. சதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுன!

ஆர்த்தோ ஜிக்ஞாசு:அர்த்தார்த்தீ ஞானீச பர்தர்ஷப!

இழந்த ஐஸ்வர்த்தை விரும்பியும்,புதிய ஐஸ்வர்யத்தை விரும்பியும் தன் ஆத்மானுபவத்தை விரும்பியும் பகவானான என்னையே பற்றி என்னிடம் கைங்கர்யத்தை விரும்பும் ஞானி என்றும் என்னை பஜிப்பவர் நான்கு வகைப்படுவர்.

இது அர்த்தம். இந்த நாலாவது வகை தான் தத்வத்ரயம்.இப்படி சர்வேஸ்வரனை விரும்பிப்பெறுகிறவர்களுக்கு எல்லா புருஷார்த்தங்களும் அதிலேயே அடங்கியுள்ளன. மற்றவர்களுக்கு அவரவர் விரும்பிய பலனே கிடைக்கும். பகவதனுபவ ஆனந்தத்தில் மட்டும் எல்லா அனுபவங்களும் அடங்கியிருக்கும். கடலில் குளம்படி போலவும் நூறில் ஒன்று போலவும் மற்றெல்லா ஆனந்தமும் அறம் சார்ந்த இந்த ஆனந்தத்தில் அடங்கிவிடும்.

உன்னை அர்த்தித்து வந்தேன் உன்னைத்தவிர எதுவும் வேண்டாம் என்று நின்று அவனுக்காகவே அவனை நேசித்துத் தான் அவனாகும் நிலைக்கு வந்து விட்டாள் ஆண்டாள்.


26.மாலே!…

என் மேல் மயக்கம் கொண்டவனே! என்று அழைத்தாள் ஆண்டாள்.உனக்கு எப்படித்தெரியும் ? நான் சொல்லவேயில்லையே என்றான் கண்ணன்.சொன்னால் தானா ? பார்த்தாலே தெரிகிறதே!கண்ணாடி போல் உன் உருவத்து மணிஒளியில் தகதகவென்று பித்துப்பிடித்த காதல், மால் வடிவில் மறைக்கப்பட முடியாமல் தெரிகிறதே!மணிவண்ணா! என்றாள்.இவ்வளவு நாளும் என் காதல் ஒருதலைக்காதலோ என்று நினைத்தேன்.ஒரு முயற்சியும் நீ எடுக்கவில்லையே என்று சந்தேகப்பட்டேன்.உனக்கிருந்த தடைகள் இப்போது தான் தெரிய வந்தன. என்னைப்போலவே உனக்கும் வெளியில் வர இருந்த தயக்கங்களும் கூச்சங்களும் நிபந்தனைகளும் நம்மைப்பிரித்தன என்று தெரிந்து கொண்டேன்.உனக்கிருக்கிற அன்பு என் அன்பில் துளியும் குறைவில்லை என்று தெரிந்துகொண்டேன் என்பதை மாலே!என்கிற விளியிலேயே அறிவித்து விட்டாள்.

அன்பே உருவான பரமே!அபரிமிதமான அன்புடையவனே மாலே!நீலரத்னம் போன்ற வடிவையுடையவனே!மார்கழி நீராட்டத்துக்காக முன்னோர்கள் செய்யும் கிரியைகளுக்கு வேண்டும் உபகரணங்கள் என்னவென்று கேட்பாயாகில் அவை பின்வருமாறு.ஒரு சிறு ஆலிலைக்குள் உலகமெல்லாம் அடக்கிப்படுக்கும் சாகஸம் அறிந்த பரமே!உன்னால் ஆகாதது ஏதுமில்லை.பூமி முழுதும் நடுங்கும்படி ஒலிக்கக்கூடிய பால் போன்ற நிறமுடையதான ஸ்ரீபாஞ்சசன்னியம் போன்ற சங்கங்களையும் புகழுடைய மிகப்பெரிய பறைமேளங்களையும் திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் மங்கள தீபங்களையும் கொடிகளையும் மேற்கட்டிவிதானங்களையும் அளித்தருள வேண்டும்.இது தான் பாசுரத்தின் பொருள். மாலே!மணிவண்ணா!மார்கழி நீராடுவான்

மேலயார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே

கோலவிளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.[திருப்-26]

சரணாகத வத்சலன் என்றபடி எல்லாருக்கும் புகலிடம் ஆவது இராமாவதாரத்தின் உள்ளீடு.மால் என்றபடி அத்தனை பேரையும் அபரிமிதமாக நேசித்தது கிருஷ்ணாவதாரத்தின் உள்ளீடு.வ்யாமோஹம் என்கிற கட்டுக்கடங்காத காதலே கிருஷ்ணாவதாரத்து சாரம்.மாலாகி இருப்பவனை மறுக்கமுடியாதபடி மணிவண்ணன் வேறு.காதலிக்க இன்னொரு பெரிய தகுதி இந்த வடிவழகு.கடூரமான மனம் கொண்டு விரக்தியாய் மறுக்க நினைக்கிறவர்களையும் காலைக்கட்டிக்கொண்டு சிறைப்பிடிக்கிறது இந்த அழகு.

மாலாய்ப்பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை என்றபடி பைத்தியமாய்க் காதலிக்கும் பரத்தை ஜீவன் கண்டு கொண்டது.

மோஹமே ஸ்வரூபமானவனே!முந்தானையில் முடிந்து கொள்ளலாம்படி கையடக்கமாய் அமூல்யமாய் இருப்பவனே!என்றாள் ஆண்டாள்.[மணி என்ற வார்த்தை பகவானை இப்படித்தான் ஒப்பு நோக்க வைக்கிறது.மணியை உடையவர் மதிக்கப்படுவர். மணி கிடைத்தால் பாக்கியம். கிடைக்காமல் போனால் துயரம்.மணி கைப்பட்டால் செல்வம் எல்லாம் தாமே வரும்.அவனுடைய மோஹ வடிவம் மணி போல் உள்ளிருப்பதை வெளிக்காட்டும் அவன் தேகத்தில் தெரிகிறது]

இப்படிப்பட்ட பித்துப்பிடித்த காதல் பக்தி என்று அடையாளப்படுகிறது ஆன்மீகத்தில்.பக்திஎன்பதை நாம் சுலபமாக உச்சரிக்கிறோம்.நமக்கு பக்தி இருப்பதாகவும் இல்லாததாகவும் சொல்லிக்கொள்கிறோம் அந்த பக்தி எது என்பதை அறியாமலே.இல்லை என்பவர் மனதிலும் பக்தி யிருக்கிறது அந்த உணர்வுக்கான படிகளை அவர்களறியாமல் மேலெடுத்து வந்திருப்பார்களேயானால்.இருப்பதாகச் சொல்லும் பலருக்கு பக்தி முதலிரு படிகளைக் கூட தாண்டவில்லை என்பது விசித்திரமான உண்மை.

பக்தி என்பதற்கு முதல் படி பிறப்பு. தப்பாகச் சொல்லவில்லை. பிறப்பினால் யாருக்கும் உயர்வில்லை செயல்களால் தான் உயர்வு என்பதை எல்லாரும் ஒப்புக்கொண்டிருக்கிறோம். வைணவத்திலும் ஆழ்வார் வரிசையைப்பார்த்தாலே தெரியும்.குலசேகரர் அரசர்,திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்டவர்,எல்லாக்குலமும் எல்லா அந்தஸ்தும் உண்டு ஆழ்வாருக்குள்.ஆனால் அதைத் தொட்டு வித்தியாசமில்லை.கருவிலே வந்த திரு என்கிறபடி நமக்கு முதல் வெகுமதியாக நாம் மதிக்கக்கூடிய பெற்றோரோடும் நமக்கு ரோல்மாடலாகக்கூடிய முன்னோர்களையும் முன் படைத்துப் பிறப்பது நம்மில் சிலருக்கே வாய்த்த ஒரு சிறப்பு.அதை ஜாயமான கடாட்சம் என்கிறார்கள்.எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின்றி சூழலில் இணக்கமின்றி பின்பற்ற ஆளின்றி பிறக்கின்றன.அப்படியில்லாமல் பின்பற்ற ஒரு பற்றுகோலோடு பிறப்பது முதல்படி.அதன்பின் சத்வகுணம். குறிப்பிட்டவனுக்கு இயல்பாகவே அமைந்த அறம் சார்ந்த பண்புகள் இரண்டாவது படி.எப்போதும் சோம்பலுக்கு இடம் தராமல் அராஜகத்தை நம்பாமல் அமைதியை இறுதி நன்மையாக விரும்பும் தன்மையைக்கொள்வதே ஸத்வகுணம்.மூன்றாவது அத்வேஷம்.சத்வகுணம் தலையெடுத்த உடனேயே அறம் விரும்பிகளை எதிரிடாத நல்ல குணம் அமைந்து விடும். த்வேஷம் என்கிற விரோதம் அறம் விரும்பிகள் மேல் மட்டுமில்லை ஏதாவது ஒரு வகையில் எதிராளி அறம் விரும்பியாக இருக்கக்கூடும் என்று benefit of doubt கொடுத்து வெளிப்படையாக தர்ம விரோதியாக இருப்பவனைக்கூட த்வேஷிக்காமல் இருத்தல் அத்வேஷம். அப்படியிருக்க வெளிப்படையாக தர்மாதிக்கங்களில் இருப்பவர்களை அயோக்கியராக இருப்பரோ என்று சந்தேகித்து வாய்க்கு வந்ததைச் சொல்லாமலிருப்பதும் அத்வேஷம். சிலர் சொல்வார்கள்,நான்கோயிலுக்கெல்லாம்போவதில்லை,கோயிலுக்குப் போகிறவன் ஆதாயத்துக்குப் போகிறான் கொள்ளையடிக்கப் போகிறான் என்கிறமாதிரி சொல்வார்கள்.தனிமனித இழிவுக்கெல்லாம் நிறுவனம் பொறுப்பில்லை.தீர அறியாமல் த்வேஷம் செய்யாமல் இருக்கும் பண்பு சத்வகுணத்தினால் இயல்பாக வரும்.நான்காவது ஆபிமுக்யம்.ஆபிமுக்யம் என்பது ஒருவனுக்கு மனமுகந்து வரும் priority வரிசை. ஒருவனுக்கு உறவு சார்ந்த கடமையும் புலன் சார்ந்த செயலும் மனம் சார்ந்த பிடித்தமும் இழுக்கும்போது அவன் அறம் சார்ந்த கடமையை முதல் மூன்றையும் தாண்டி முன்னெடுப்பானேயாகில் அவனுக்கு ஆபிமுக்கியம் வந்துவிட்டது.[ஒரு மாலையில் புதுவருடக்கொண்டாட்டமும் உறவு விருந்தும் ஒரு கேளிக்கையும் போகக் கட்டாயம் வாய்த்த போது எல்லாம் விட்டு ஒரு சமூக சேவை செய்தாலோ திருப்பாவை கட்டுரை வாசித்து அசைபோட்டாலோ ஆபிமுக்கியம்]அடுத்த கட்டம் நல்லவர் அறிமுகம்.நல்லவரை அடையாளம் கண்டுகொள்வதே ஒரு பெரிய வரம் சில பேருக்கு மட்டும் தான் நல்லவர் நல்லவராகக் கண்ணுக்குப் படுவர். தீயவர்களுக்கு நல்லவரைக்கண்டவுடன் பிடிக்காமல் போய் விடும்.அப்படி சத்சங்கம் கிடைப்பது ஐந்தாவது படி. அவர்களெல்லாம் ஒத்த மனசுள்ளவர்களாய் முதல் ஐந்து படிகளை ஒன்றாகக் கடந்து நின்றவர்களாய் இருப்பார்கள்.இந்த நிலையில் சத்சங்கத்திலிருந்து ஒரு கனவான் தன் organisational skill காரணமாக தலைவனாக அறியப்படுவான்.அந்தப்படி ஆசார்யசமாஸ்ரயணம்.அதன் பின் கண்டெடுக்கப்பட்ட ஆசார்யனுக்கு குறிப்பிட்டவன் நெருக்கமாவான்.அந்த 7ம்படி ஆசார்ய கடாட்சம்.ஆசார்யன் எது உன்னதமான பொருள் என்பதை அடையாளம் காட்டுவான் அது பகவத் ஞானம்.9ம் படி பகவத் கடாட்சம்.10ம் படியில் பரபக்தி ஏற்படும் மேற்படி சேதனனுக்கு.பரபக்தி அதிகமாகி காதல் போல இயக்கமெல்லாம் ஆக்கிரமித்துப் பரிமளிக்கிறதும் ஜீவ பரம இரு முனைகளிலும் சமமாக இருப்பதும் மால். அது ஆண்பெண் உறவில் ஏற்படும் தன்னிலை மறந்த ஐக்கியபாவத்தை ஒத்தது.

அதையே மாலே!என்று விளித்தாள் ஆண்டாள்.

உன்னை அர்த்தித்து வந்தேன் என்று சொன்னதும் கிருஷ்ணன் நான் எப்படி உனதாக முடியும் ?நான் தர்ம சாஸ்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறவன்.பலரின் joint property.நிறைய விதி சார்ந்த விஷயங்களைப் பின்பற்றி நான் சாம்ராஜ்யத்தை நடத்துகிறேன். எல்லா விதியாலும் என்னைக் கிட்டுகிறவர்களையே நான் ஏற்கமுடியும் என்கிறது போலப் பேசாமல் இருக்க போன பாட்டிலேயே நெடுமாலே என்கிற வார்த்தையால் தம்தமக்குள் இருந்த மனஸ் சம்பந்தத்தைச்சொல்லி உன் பிரியம் என்னவாயிற்று என்றாள். அதை இன்னொருமுறை ஞாபகப்படுத்த மாலே என்பதை விளியாக்கினாள்.இதற்கு முன்பெல்லாம் கிருஷ்ணனிடம் பரிமாற்றம் ஊர்ஜிதமாகவில்லை.கோபிகையாகக் கற்பனை செய்துகொண்ட இவளை வரவழைப்பான்.போனால் எதிர்விழி கொடுத்துப்பேச மாட்டான்.இவளிருக்குமிடம் வருவான், ‘உன்னைவிட்டு இனி பிரியேன் பிரியில் தரியேன் ‘என்பான் அடுத்த நிமிடம் மறைந்துவிடுவான். ‘சொல்லாதொழியீர்,சொன்ன போதாக வாரீர் ‘என்றபடி இவளை அழவைப்பதே அவன் வேலை.அப்படி இவளுடைய அன்பைப்பெருக்கடித்து இப்படி ஓடி வரும்படி செய்து விட்டான்.இப்போது கிட்டத்தில் பார்க்கும்போது தான் தெரிகிறது அவன் இவளுக்காகக் காத்திருப்பதும் கண்ணிலேயெ அன்பைத் தேக்கியிருப்பதும்.

ஜீவனின் அன்பு அணு என்றால் பரமன் ஜீவத்தின் மேல் செலுத்தும் அன்பு விபு. சீதா ஒரு மாதம் தான் ஜீவித்து இருப்பேன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினாள் அனுமனிடம். அதைக்கேட்ட இராமன் சொன்னான். ஒருமாதம் காத்திருப்பாளாமா ? என்னால் ஒரு நொடி இருக்க முடியாது போலிருக்கிறதே! என்று புலம்பினான்.

இவ்வளவு நாளும் வீணாகிவிட்டது ஆண்டாளுக்கு.அந்தப்பக்கத்தை அறிந்துகொள்ளாமல். ‘இராவணன் பின்னே பிறந்த நம்மை ரகுகுலத்திலே பிறந்தார் கைக்கொள்ளுவரோ!என்றிருந்தான் விபீஷணன். ‘இராவணனை ஆசைப்படுகிற நமக்கு இராவணன் பின்னே பிறந்தவன் சித்திக்கப்பெறுமோ!என்றிருந்தான் இராமன்.அப்படி ‘நாராயணனை நமக்குக் கிடைக்குமோ என்பது ஆண்டாள் நினைவு.யதுகுலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப்புகுகிறதோ என்பது அவன் நினைவு.ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தது கம்சனுக்குப்பயந்து மட்டுமல்ல.வேறு சில காரணத்துக்கும் அல்லவா ?

நம்மாழ்வார் பக்தி பெருக்கெடுத்துச் சொன்னார். தாகத்தினால் தபிக்கும் ஒருவன் ஒரு குளத்தைக்கண்டால் அதிலுள்ள தண்ணீர் பூராவும் குடிக்க ஆசைப்படுவதைப்போல ‘வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் ‘ என்று நினைத்தாராம்..ஆனால் நேரில் வந்ததும் ‘என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் ‘ என்று முடித்தார்.அவன் பிச்சாய் இருந்து நம்மையும் அவனிடம் பிச்சாக்கிவிடுகிறான்.காதலில் ஆண் பெண்ணுக்கு நேர்வதும் இதே! யார் முதலில் என்பது போட்டிக்குரிய விஷயமாகும்.

காதலுக்குத் தோற்காத விரக்தியாளர்களை வடிவழகில் தோற்பிக்க எடுத்துக்கொண்ட பேர் மணிவண்ணன். பீஷ்மன் வீரத்தில் இணையாகி காதலில் சிக்காமல் சண்டையிட கண்ணன் சக்ராயுதத்துடன் பீஷ்மனை நோக்கி பாரதப்போரில் நடந்து வந்து அந்தத் தோற்றத்தில் மயங்கி ஆயுதம் கீழே போட்டு ‘லோக நாத!உன்னை நான் அடி பணிகிறேன் ‘ என்று பீஷ்மனைச் சொல்ல வைத்தான்.அவன் மணிவண்ணன். பனிமலராள் வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன் என்றபடி அந்த வடிவுக்காகத்தான் தாமரையாள் மயங்கி வந்தாள்.

கீதையில் மாமேஹம் சரணம் வ்ரஜ என்று சொல்லிக்கொண்டதில் ‘மாம் ‘ ஆண்டாள் வார்த்தையில் மால் ஆயிற்று. ‘அர்ஜுனா!நான் யார் தெரியுமா ? என்னைக் கேவலம் சாரதி என்று நினைக்காதே நான் சர்வ்க்ஞன் சர்வசக்தன் அந்தப்பரமன் என்பது தொனிக்க ‘அஹம் ‘ என்றான்.அந்த அஹம் என்ற வார்த்தையின் முழுப்பொருளை அவனுடைய அகடிதகடினா [அடாவடி]சாமர்த்தியத்தை ஆலினிலையாய் என்ற வார்த்தையில் அடக்கினாள் ஆண்டாள்.நீ சாக்கு போக்கு சொல்லாதே உன்னால் எதுவும் முடியும் என்பது எனக்குத் தெரியும் என்பது அந்த விளியின் பொருள்.மாலாய் ஆலிலை வளர்ந்து என்பது பெரிய திருமொழி.அதை அப்படியே இங்கு நீர்மைக்கும் உன்னதத்துக்கும் குறிப்பாக வைத்து விட்டாள் ஆண்டாள்.

‘அருளாதொழியுமே ஆலிலை மேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்….என்றபடி வடபத்ர சாயி,வடதள சாயியைக் கேட்காமல் வேறு யாரை அருளக்கேட்பது ?

அதென்ன மார்கழி நோன்பு ?கேள்விப்படாததாக இருக்கிறதேஎன்று கண்ணன் புருவம் நெரித்தான். ‘ஜ்யோதிஷ்டா ஹோமாதி விதிகள் போல பிரசித்தமோ ? மார்கழி நோன்பு என்பது ? ‘என்று கேட்டான். ‘பிரயோசனம் வேண்டி நான் நோன்பு செய்யவில்லை.என்னைப்போய் விதி கேட்கிறாயே! ‘என்றாள் ஆண்டாள். ‘அப்படியானால் முமூட்சுக்களின் தியான விதி போல பிரசித்தமா அந்த நோன்பு ? ‘என்று கேட்டான் கண்ணன். ‘நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இருக்கிறவர்களுக்கு எந்த நீதி சாஸ்திரங்கள் விதி சொல்லியிருக்கின்றன ?பெரியவர்களின் வசனமும் நடைமுறை ஞானமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை அல்லவா ? ‘ என்றாள் ஆண்டாள்.சிஷ்டாசாரமே ஸ்திர விதி. ‘யாதொன்றை யாதொன்றை சிரேஷ்டர்கள் ஆச்ரயித்தார்களோ யாதொரு அளவு செய்தார்களோ அவ்வளவும் லோகம் அநுவர்த்திக்கும் ‘ என்று நீ தானே தேர்த்தட்டில் நின்று சொன்னாய் ?சாஸ்த்ரம் விதித்திருந்தாலும் அனுஷ்டானத்தில் இல்லாத ஒன்றைத் தவிர்க்க வேண்டுமென்றல்லவோ சொல்லியிருக்கிறது ? ‘என்று கேட்டாள் ஆண்டாள்.Rules ஐ விட convention பெரிதல்லவா ? சிஷ்டாசாரம் என்று மேலயார்[பூர்வர்கள்] செய்திருந்தால் அது விதிக்கு ஒப்பாகுமே என்றாள் ஆண்டாள்.

அந்த விரதத்துக்கு சங்கு வேண்டும்,[பாலைத்திரட்டினாற்போல பல சங்கு]எங்கும் த்வனிக்க பறைமேளம் வேண்டும்,மங்கள தீபம் வேண்டும்,திருப்பல்லாண்டு பாடிக்கொண்டு போவார் வேண்டும்,திருக்கொடி வேண்டும்,மேல்கட்டி[பந்தல் உபகரணங்கள்]வேண்டும் என்றாள். அதாவது உனக்கு இருப்பவை எல்லாம் வேண்டும். தன் கொண்டை,கிளி சூடிக்கொடுத்த மாலை,இத்யாதி எதையும் தந்ததாகத் தெரியவில்லை.அவன் அடையாளங்களை எல்லாம் உரிமையுடன் கேட்கிறாள்.

பெருமாள்திருப்பள்ளியெழுச்சிக்குசங்குவேண்டும்.புறப்பாட்டுக்குப்பறை வேண்டும்.புறப்படும்போது திருப்பல்லாண்டுக்கு அரையர் வேண்டும்.அவர்களின் முகம் தெரிய விளக்கு வேண்டும்.நெடுந்தூரத்திலேயே சிலர் கண்டு உகக்கும்படி கொடி அசைய வேண்டும்.பனி தலை மேல் விழாமல் மேற்கட்டி வேண்டும்….என்ற ஆண்டாள் ‘மாரிமலை ‘ பாசுரத்தில் ஹ்ருத்யாகத்துக்கு அழைத்தது போல இங்கு பாஹ்யாகம் என்ற இன்னொரு பூஜாவிதியைக் குறித்து அதற்குப் பெருமாளை அழைக்கிறாள் என்பதும் ஐதீகம்.சங்கூதுவது மந்தஸனம் என்றும் பறையடித்தல் திருமஞ்சனம் என்றும் பல்லாண்டிசைப்பது அலங்காரம் என்றும் விளக்கேற்றுவது நைவேத்தியம் என்றும் கருடக் கொடி வருவது புனர்மந்த்ராசனம் என்றும் மேற்கட்டியாக ஆதிசேஷன் வருவது பள்ளியறைபூஜை என்பதாகவும் அர்த்தப்படும்.

உன் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள்… போலவே உன் பறையே,உன் பல்லாண்டிசைப்பாரே,உன் விளக்கே,உன் கொடியே,உன் விதானமே என்று எல்லாவற்றுக்கும் உனது போலவே எனக்கும் என்று பொருள் கொண்டால் ‘பகவத் சாம்யம் ‘கேட்கிறாள் என்கிற கூற்று புரியும்.உன்னிடம் இருப்பதெல்லாம் எனதாக வேண்டும்.உனக்கும் சுலபமல்லவா ?Delegate your powers,decentralise them என்கிறபடி. அல்லது உனக்கும் எனக்கும் ஒரே தன்மை வேண்டும்.அதல்லவோ ஐக்கியம் ? என்கிறபடி.

ஒப்பில்லாத இந்தப் பாசுரத்தைக்கேட்டு கண்ணன் பாஞ்சசன்னியத்தை அனுப்பிவைத்தான், கோகுலத்தில் பறைகரங்கக் குரவையாடியபோது அரையில் கட்டியிருந்த பறையைக் கொடுத்தனுப்பினான்.பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான்.மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான்.கொடியாக கருடன் வந்தான்.விதானமாக ஆதிசேஷன் வந்தான்.

எல்லாவற்றோடும் பரமனுக்குச் சமமாகியது ஜீவன். அடுத்து சாயுஜ்யம் பெற காத்திருக்கிறது ‘கூடாரை ‘ பாசுரத்தில்.


27.கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா… —-

பகைவரை வெற்றி காணும் சிறப்புடையவனே!கோவிந்தனே!என்று ஆரம்பிக்கிறது பாசுரம். பகைவரைத்தான் வெல்லுவார்கள் அதிலென்ன சிறப்பு இருக்கிறது ? பகைவனுக்குத் தோற்றால் துப்புவார்களே!கூடவே ஒரு கோவிந்தா போடுவது எதற்கு ? கோவிந்தன் எளியவன்.மாட்டிடையன் பசுமேய்ப்பவன் என்று பொருள். அவனா பகைவனை வென்றெடுப்பவன் ? இல்லை.கோவிந்தப் பட்டம் அவன் பெற்றது பகைவரை ஜெயித்ததற்கு அல்ல.அன்பரிடம் தோற்றதற்கு.தோல்விச்சிறப்புடையவன் தான் கோவிந்தன். ஊடலில் தோற்றாரே வென்றார் என்பது போல நண்பரிடம் அவன் தோற்றுத் தோற்று வெற்றி காண்பவன்.

என் அன்பான பசு மேய்ப்பானே!என்னை ஜெயிக்க நான் என்ன பகையா உனக்கு ?உன்னால் என்னிடம் ஜெயிக்க முடியாது. நீ தோற்கத்தான் போகிறாய். என்றாள் ஆண்டாள்.நீ கொடுத்த பொருட்களையெல்லாம் அள்ளிக் கொண்டு சங்கு,பறை,பல்லாண்டிசைப்பார்,விளக்கு,கொடி,விதானம் எல்லாம் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன் என்று நினைத்தாயா ?உன்னைப் பாடிப் பறைகொண்டதற்கு அடையாளமாக நாடடங்க கொண்டாடும்படி எனக்குப் பரிசில் வேண்டும்.எனக்குச் சூடகம் என்ற தலையணி வேண்டும்,தோள்வளை என்ற வங்கிவேண்டும் தோடு வேண்டும் செவிப்பூ வேண்டும் பாடகம் என்ற பாத அணி வேண்டும் இன்னும் நிறைய அணிகலன்கள் வேண்டும். அதெல்லாம் நீ அணிவிக்க நான் அணிவேன் என் புத்தாடையை நீ தர நான் உடுத்துவேன் அதன்பிறகு நெய் முழுக சமைக்கப்பட்ட பால் சோற்றை நெய்யொழுகி முழங்கை வழியே வழியும்படி உன் சன்னிதியில் உன்னைப்பார்த்தவாறே சேர்ந்திருந்து மகிழ்ந்து சாப்பிட்டுக் குளிர்ந்து திருப்தியடைவேன் என்றாள் ஆண்டாள். இவ்வளவு தான் பாடல்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்

பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடைஉடுப்போம் அதன்பின்னே பால்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.[திருப்-27]

ஸ்ரீராமன் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளும்போது ‘அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி ‘என்கிறபடி அயோத்திவாசிகள் எல்லாரையும் தன்னுடன் அழைத்துப்போனான்.ஆனால் அனுமன் போக மறுத்துவிட்டான். ‘நான் கட்டளையிடுகிறேன்.நீ வந்து தான் ஆக வேண்டும் ‘என்றான் இராமன். அப்போது அனுமன் என்ன சொன்னான் தெரியுமா ? ‘பக்திஸ்ச நியதா வீர!பாவோ தாத்யத்ர கச்சதி ‘என்று முகத்தில் அடித்தாற்போல பதிலைச்சொன்னான். ‘உன்னுடைய இந்த இராம விக்ரஹத்தில் என் பக்தி மிக உண்டு.உன் வைகுந்த மற்றும் வேறு வடிவங்களில் மனசு செல்லாது எனக்கு.வீரா![உன் வீரத்தை என்னிடம் வைத்துக்கொள்ளாதே!] ‘என்றான். சொல்லின் செல்வன் பேச்சுக்குக் கேட்கவேண்டுமா ? வீரா என்று அனுமன் அழைத்தது அன்பரை வெல்லமுடியாத பலவீனமுடைய இராமனைக் கேலி செய்ய.என் கிட்டே உன் வீரம் செல்லுமா ? உன் வீரத்தை இராவண கும்பகர்ணரிடம் வைத்துக்கொள் என்று அர்த்தம் அந்த வீர! என்ற வார்த்தைக்கு.பூலோகத்தில் இருந்து இராமன் வசித்த மண்ணை முகரவும் இராம நாமம் கேட்டு மயிர்க்கூச்செறியவும் இராமன் ஆராதித்த அரங்கநாதனை சேவித்திருக்கவும் முடிவுசெய்த அனுமனை இராமனாலேயே மனம் மாற்ற முடியவில்லை.தன்னைவிரோதித்த கெளரவர்களை அழித்த கிருஷ்ணன் தன்னிடம் அன்பாயிருந்த பாண்டவர்களுக்குத் தோற்றுத்தான் பொய் பேசியும் கபடம் செய்தும் சபதம் மீறியும் கெட்ட பெயர் எடுத்தான்.நண்பர் அன்புக்குத் தோற்று தேர்ப்பாகன் ஆனான். ‘நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத் தொடர்ந்தாரணம் முழங்க பஞ்சவர்க்குத்தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!நாராயணா என்னா நாவென்ன நாவே! ‘என்றபடி கழுத்தில் ஓலை கட்டிக்கொண்டு ஒரு பூனைக்குட்டி போல தூது நடந்தான்.இராமன் சுக்ரீவன் அன்புக்குத் தோற்று விதியல்லாத வழியில் வாலிவதம் செய்து பலர் வாயில் விழும்படி சர்ச்சையில் மாட்டிக்கொண்டான்.இதெல்லாம் அவன் தோற்றுச்செய்த செய்கைகள் அல்லவே ?அன்பர்களையும் தோழர்களையும் அவன் ஜெயித்ததாகச் சரித்திரமேயில்லையே!

காதலில் தோற்று மீண்டும் இன்னொரு பதிவு செய்யப்போகும் கண்ணனே!நீ கூடாரை மட்டுமே வெல்பவன் என்ற சிறப்புடைய அந்தச்சிறப்புக்காகவே கூட மாட்டோம் என்று விலக்காத பசுக்கூட்டங்களைக் காப்பாற்றி மேய்க்கும் தொழில் ஏற்ற கோவிந்தன் ஆனதல்லவா கிருஷ்ணாவதாரம் ?என்பது தொனிக்க ஆண்டாள் ‘கூடாரை[மட்டும்]வெல்லும்சீர்க்கோவிந்தா! ‘என்றாள்.

பக்தர்களுக்குப் பகவான் செய்யும் நன்மை நாட்டிலுள்ளார் போற்றும்படி அபரிமிதமாக இருக்கும்.இராவணனால் அனுப்பப்பட்ட இரு ஒற்றர்கள்[சுக சாரணர்] இக்கரைக்கு வந்து வானரப்படையின் வலிமையைக் கண்டுகொண்டு இராவணனிடம் போய்ச்சொல்லும்போது ‘உன் முடி சித்திக்கிற தெய்வத்துக்கும் முடிகொடுக்கும் பெருமை பெற்ற இராமன் உன் தம்பி விபீஷணனுக்கு லங்காராஜ்ய பட்டாபிஷேகம் செய்தாகிவிட்டது. இனி நீ கெட்டாய்! ‘என்று இராவணன் உயிருடன் இருக்கும்போதே தைரியமாகச் சொல்லி இராமனைப் புகழ்ந்திருக்கிறார்கள்.அவ்வளவு விமரிசையானது பகவான் தன் அடைக்கலத்துக்குச் செய்யும் பரிசில்.நாடு புகழும் பரிசில் அது. எதிரித்தரப்பு ஒற்றனே புகழ்ந்திருந்தால் நாடு புகழக் கேட்பானேன்!

அப்படித்தான் சத்யா பாமை மடியில் கிருஷ்ணன் தலை வைத்துப் படுத்திருந்தான்.அதே இடத்தில் திரெளபதி மடியில் அர்ச்சுனன் தலை அழுந்தப்படுத்திருந்தபடி தன் காலை கிருஷ்னண் கால் மேல் வாகாகப் போட்டு அனுபவித்துப் பேசிக்கொண்டிருந்தான். அந்த சமயம் சஞ்சயன் அங்கு வர உள்ளிருக்கும் அன்னியோன்னியத்தைக் கலைக்காமல் இருந்தபடி சஞ்சயனை உள்ளே வரப் பணித்தான் கிருஷ்ணன்.அர்ச்சுனனிடம் சொல்லவும் சொன்னான். ‘இங்குள்ள உறவைப் போய்ச் சொல்லட்டும் துரியோதனனிடம். அவன் தெரிந்து கொள்ளட்டும் தனக்கு வரப்போகிற தோல்வியை ‘என்று பிரகடனம் செய்தான் கிருஷ்ணன், அன்பனுக்குத் தான் தரும் ‘நாடு புகழும் பரிசை ‘.சுதாமாவுக்குக் கொடுத்த பரிசு நாடறியும் அல்லவா ?

அப்படி நாட்டார் புகழும்படி எனக்குப் பரிசாக கைவளை,தோள்வளை,தோடு,புறங்காதின் சிறு தோடு,கால் கொலுசு,மற்றும் பல அணிகளைத்தா.நீ உடுத்துக் கழித்த பீதகவாடை தா.இவ்வளவு நாளும் உன்னைப்பிரிந்து நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றிருந்த வைராக்கியம் விடுத்து இன்று அணிவோம் உடுப்போம் சாப்பிடுவோம் என்றிருக்கிறேன். என்பது ஆண்டாள் வெளிப்பாடு.

கூடார் என்பவர் பகைவர் தாம் என்பதில்லை.பகவானை அறியாதவர்கள்,அறிந்தும் பயப்படுகிறவர்கள்,அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள்,அறிந்தும் பகவானை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள் என்று கூடார் நான்கு வகைப்படுவர். அவர்கள் அனைவரையும் ஜெயித்து விடுகிறான் பகவான்.பக்தர்களிடம் மட்டும் தோற்கிறான்.

நாட்டார்கொண்டாடும்படி தன்னைத்தோற்றுவித்த பக்தனுக்கு விரும்பிப் பரிசு வழங்குகிறான். அனுமானுக்கு இந்திரன் தந்த முத்துமாலையைப் பிராட்டி பரிந்துரைக்க இராமன் பூட்டினாற்போல.அப்படி ஒரு பரிசிலை பிரம்மாலங்காரம் போல தனக்கு செய்விக்கும்படி ஆண்டாள் வேண்டிக்கொள்கிறாள்.[நகைக்கடை ஆசை பரம் வரை பாய்கிறது.This is passion,I say,Real passion for everything]கைவளை,தோள்வளை,தோடு,கர்ணபூஷணம்,கால்கொலுசு இன்னும் பலப்பல.பிறகு கூறை வேண்டும்,திருப்பரியட்டமாய் அவன் உடுத்திக் களைந்தது.பின் நெய்ப்பொங்கலைச்சொன்னாள்.நம்பி திருவழுதி வளநாடு தாசர் கேட்டார் ‘நெய் படாதோ ? ‘என்று.பட்டர் பதில் சொன்னார். ‘இவர்கள் வாயில் சோறு தொங்கினாலன்றோ நெய் தொங்குவதற்கு ?பிரிந்து பட்ட துயர் தீர கூடித் தொட்டிருக்கை தான் நோக்கமே தவிர பாலோ சோறோ நெய்யோ சுவையோ இவர்களின் புத்திக்கு எட்டாது ‘என்றார்.

இளித்தவாயன் தான் சொன்னதெல்லாம் செய்ய சரியானவன் என்பதால் கோவிந்தனைக் கூப்பிட்டாள். ‘இட்டமான பசுக்க ‘ளை மேய்ப்பவன்.கன்று மேய்த்தினிதுகந்த என்றபடி காலிமேய்க்கவல்லாய் என்றபடி பேசாத ஜந்துக்களைக்காப்பாற்றும் நீர்மை எல்லாருக்கும் பரவசமாகும்படி கண்ணன் எடுத்த யுக்தி.[ஜாலிக்கு அது ஒரு சாக்கு]பசு மேய்க்க ஒன்றும் செய்யவேண்டியதில்லை.அதன் பின்னால் போனால் போதும்.அப்படியே பசு மேய்க்கப்போனதாக முக்கிய சந்தர்ப்பங்களில் சாக்கும் சொல்லலாம்.குழலும் ஊதலாம்.முக்கியமானவர்களைச்சந்திக்கலாம்.எனவே ‘ஆவி காத்திராதே உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும்படி ‘ஒரு பறை என்ற சாக்கு கோபாலரைத்தொட்டு எனக்குக்கிடைத்தது என்றாள் ஆண்டாள்,உன்னைப்பாடிப்பறை கொண்டு என்ற வரிகளில்.அதனால் வந்த சன்மானம் நான் சூடிக்கொடுத்த மாலைகள் போல உயர்ந்து இருக்க வேண்டும்.வாழ்வர் வாழ்வெய்தி என்றாற்போல பலப்பலவே யாபரணம்; ‘காரை பூணும்,கண்ணாடி காணூம்தன் கையில் வளை குலுக்கும் ‘என்றாற்போல் நான் அலங்கரித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கண்ணாடிக்கிணற்றில் பார்த்துக்கொள்ள அலங்காரம் வேண்டும்.வரிவளையால் குறைவிலமே,மேகலையால் குறைவிலமே எண்ணில் பலகலனும் ஏலுமாடையும்….என குறைவின்றி ஆடையுடன் எனை அலங்கரி உன் கையால் தொட்டு.இவ்வளவு நாளும் சீதை நகைகளைத் துணிக்கிழிசலில் கட்டி விசிறியெறிந்ததைப்போல எதுவும் அணியாமல் இருந்தேன்.இன்று நீ அணிவித்து அணியப்போகிறேன் என்றாள்.

கீழ்ப் பாசுரத்தில் சாருப்யம் என்ற பகவத் சாம்யம் சொல்லப்பட்டது. அதன்பின் விரஜை என்கிற தேவலோக நதியில் 500 அப்சரஸ்கள் ஜீவனை நீராட்டி பஞ்சாலாங்க்ருதம் என்கிற விதத்தில் மாலை,மை.மணத்தூள்,ஆடை,ஆபரணம் கொண்டு அலங்கரித்து அக்கரை சேர்வித்து ஷாட்குண்யன்னம் என்கிற பரமான்னத்தைப் புசிக்க வைக்கிறார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.சாயுஜ்யம் சேர்கிற உயிர்களுக்கு இது பெருமாளாலேயே செய்யப்படும் என்பது எதிர்பார்ப்பு.ஜீவனுக்கு பரமன் உணவாகவும் பரமனுக்கு ஜீவன் உணவாகவும் ஒருவருக்கொருவர் போக்கியமாவார்கள்.லோகாயதமான கூடலும் இதுவே.

கோயில்களில் உத்சவங்களை நடத்தி எல்லாரையும் வரவழைப்பது இந்தக் கூடியிருந்து குளிர்ந்து அனுபவத்தைக் கோடி காட்டவே. அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: மோட்சத்தில் முக்தனான ஜீவன் தான் பகவானுக்கு அன்னம் போக்யப்பொருள் என்றும்,பகவான் தனக்குஅன்னம்போக்யப்பொருள்என்றும்சொல்லிக்கொள்கிறான்.முக்தஆத்துமாவினால் எல்லாக் கைங்கர்யமும் செய்வித்துக்கொள்வது பகவானுக்கு சுகமாகவும் பகவானால் எல்லாம் பெருமைப்படுத்தப்படுவது முக்தனுக்கு சுகம் எனவும் சொல்லப்படுகிறது.இதுவே ஆண்பெண் உறவின் இரகசியமும் அல்லவா ? இதில் அநுயோகம் என்ற அந்தர்யாம்யாராதனம்நடந்தது என்றும் கொள்ளத்தகும். ‘உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு,தொடுத்த துழாய் மலர்சூடுமித்தொண்டர்களோம்…. நெய்யிடை நல்லதோர் சோறும் கையடைக்காயும் கழுத்துக்குப்பூணும்காதுக்குக்குண்டலமும்…. ‘என்றபடி சாயுஜ்யம் அனுபவித்ததையே கூடியிருந்து குளிர்ந்து என்று சொன்னாள் ஆண்டாள்.

தத்துவார்த்தமாக பறை என்ற புருஷார்த்தத்தோடு,சூடகம் கேட்டது காப்பு என்ற பகவத் கவசம் என்றும்,தோள்வளை என்றது துவாதச முத்திரை எனப்படும் திருவிலச்சினை[திலகம் அல்லது நாமக்குறி]என்றும் தோடு என்றதுதிருமந்திரம் என்றும் செவிப்பூ என்றது த்வயம் என்ற ராமமந்த்ரம் என்றும் பாடகம் என்றது பகவத்கீதை[நடைக்கு இலக்கணம்-காலிலணிவது]என்றும் தத்துவப்படும்.

கிருஷ்ணாம்ருத நீராட்டம் என்றார்களே ஆரம்பம் முதல் .. அது முடிந்து முழு சாயுஜ்யம் கிடைத்து ஆண்டாள் தன் லட்சியத்தில் வெற்றி பெற்றாள்.

ஒவ்வொருபாசுரமும் அடுத்த கட்டத்துக்குப்போனதை வைத்து முதல் கட்டம் நல்லபடி முடிந்ததை சூசகமாகப்புரிந்து கொள்கிறோம்.கீழ்ப் பாசுரத்தில் பறை முதலிய பொருட்களைக் கேட்டாள். அடுத்து ஆடை அலங்காரத்தைக்கேட்டதை வைத்து முன்னால் கேட்டதெல்லாம் கிடைத்து விட்டது என்றறிந்தோம். அதே போல் தான் இந்தப்பாசுரமும்.

கதை முடியவில்லை.இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது ஆண்டாளுக்கு.


28.கறவைகள் பின் சென்று…. —- எத்தனையோ விதத்தில் தன் காதலைச்சொல்லி தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி திரும்பிப்போய் விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து மனசால் ஒரு கோபியாக கண்ணனைக்கிட்டி படிப்படியாக அவனை பலவந்தம் செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள்.

இந்தப்பாசுரத்தில் இழையும் ஆற்றாமையையும் desperate முயற்சியாக முன் வைக்கும் இறங்கின குரலின் தீனமும் இது வரை சொல்லாத ‘இறைவா! ‘என்ற விளியும் கவனித்து நோக்கத் தக்கவை.

சாரூப்யம் ஆயிற்று சாயுஜ்யம் ஆயிற்று இனி கிளம்பிப் போகலாமே என்று கண்ணன் சொல்ல துடித்துப்போனாள் ஆண்டாள்.இனிப் போவதா ?இங்கேயே இருக்கத் தான் வந்தேன் என்றாள். அதற்கான சுக்ருதம் என்ன உன்னிடம் ? தகுதி என்ன இருக்கிறது உனக்கு ? சொல்கிறாயா குறித்துக் கொள்கிறேன் என்றான் கண்ணன்.அதெல்லாம் எதுவும் கிடையாது. அதெல்லாம் முன்பே விவரமாகச் சொல்லிவிட்டேனே!என்னிடம் சித்தோபாயமன்றி சாதனோபாயம் எதுவும் கிடையாது.என்றாள்.கண்ணன் சொன்னான்.அப்படி யாரும் நற்கருமம் செய்யாதவர் கிடையாது.நீங்கள் இடையர்கள் வர்ணாஸ்ரம தர்மமாய் பசு சம்ரட்சணம் செய்திருப்பீர்களே,அதைச் சொல்லுங்கள்,எவ்வளவு நாள் செய்திருப்பீர்கள்,எவ்வளவு பசு மேய்த்திருப்பீர்கள்என்று கேட்டான்.ஒரு இலக்கம் குறித்துக் கொண்டு அதற்கேற்ப இவ்வளவு நாள் சாயுஜ்யம் என்று ஆண்டாளுடைய ஸ்வர்க்க வாசத்தை வரைமுறைப் படுத்த பதிவட்டையை எடுத்தான். நான் பசு சம்ரட்சணை செய்தது சுக்ருத பலனுக்காக அல்ல. தவப்பயனுக்காக அல்ல. பிழைப்புக்கு.உண்போம் என்ற வார்த்தையால் கறவைகள் பின் சென்றது வெறும் வயிற்றுப்பிழைப்புக்காக. அது புண்ணியத்தில் சேராது என்பதைக் குறித்தாள் ஆண்டாள்.கறவை பின்னே காடு போனோம் என்றீர்களே ஆசாரநியமனம் பெற்று வானப்ரஸ்தாச்ரமம் மேற்கொள்வது தர்மானுஷ்டானுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.தபஸ்விகளான முனிவர்கள் காடுகளில் தங்கியல்லவோ புண்ணியம் படைத்தார்கள்!அதைப் பதிவில் நிறுத்தவா ? என்று கேட்டான் கண்ணன்.நான் சென்ற காடு நைமிசாரண்யமோ தண்டகாரண்யமோ அல்ல. ‘எவ்வுஞ்சிலை உருவும் வேடர் கான் ‘நெருஞ்சிற்காடு அது அங்கு முனிவர் யாரும் கிடையாது.ஞானம் தொட்டோ குரு ஆணை தொட்டோ பசுசம்ரட்சணையும் ஆரண்ய வாசமும் நான் செய்யவில்லை.அறிவில்லாமல் நடக்கும் பசு தான் என் குரு.அதன்பின்னே போய் அதன் பின்னே வீடு வந்து சேர்வேன்.காடு சேர்ந்து அதன்வழி வயிற்றுப்பட்டைக் கழிப்பேன்.நின்றபடி சாப்பிடுவேன்.அனுஷ்டானமின்றி பூசையின்றி தானதர்மமின்றி உண்பேன் அவ்வளவே.அதில் புண்ணியத்துக்கு இடமேது ?என்றாள். ‘கறவை பின்னே சென்றதால் தப்பேதுமில்லையே!நானும் காலி பின்னே போனவன் தான்.ஆடி அமுது செய் என்று தாய் வேண்டவேண்ட குளியாமல் மந்திர பூசை விலக்கி நானும் திரிந்தவன் தான்.எது செய்தால் என்ன ?செய்யாவிட்டால் என்ன ? ஞானம் நிறைந்த குலத்தில் பிறந்து வளர்ந்துஆளாகியிருப்பீர்கள்.ஞானத்தைக் கணக்கில் கொள்ளவா ?என்றான் கண்ணன். ‘ஐயோ!கிடையாது. கீழிலும்கீழ்.இடக்கை வலக்கை அறியாத ஆய்க்குலம் என்னுடையது.ஞானம் என்ற பேச்சே கிடையாது. ‘என்றாள் ஆண்டாள்.அப்போது ஏழை ஏதிலி என்று பிற்படுத்தப்பட்ட தகுதியையே குறித்துக் கொள்ளவா ? என்று கேட்டான் கண்ணன். ‘அதுவும் முடியாது. யாரைப்பார்த்து ஏழை ஏதிலி என்று சொன்னாய் ?என் குலத்தில் வந்து நீ பிறந்தபின் உன்னை என் சஜாதியனாகப் பெறும் சுக்ருதம் வந்து சேர்ந்ததே எனக்கு ? பிறகு எப்படி நான் ஏழை,ஏதிலி பலவீன வகுப்புக்காரி ஆவேன் ? என்றாள்.ராமோ தர்மவான் விக்ரக:,கிருஷ்ணம் தர்மம் சநாதனம் என்றபடி புண்ணியமே வடிவாகப்பிறந்தாய் நீ.புண்ணியத்தை நான் பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பாக்கியம் பெற்றேன்.கோபியாக இருந்து.எனவே என்னைப்பார்த்து புண்ணியமில்லையா என்று கேட்காதே என்றாள். ‘என்னம்மா,நீ சொல்வது எதுவும் புரியவில்லையே,ஒரு நிமிடம் புண்ணிய பலம் இல்லை என்கிறாய்,இன்னொரு நிமிடம் நிறைய உண்டு என்கிறாய் ‘…கண்ணன் குழம்பித் தயங்கினான்.ஆண்டாள் தெளிவாகச் சொன்னாள். ‘நான் சரியாகத்தான் முதலிலிருந்து சொல்லி வருகிறேன். எனக்கு சாத்ய சுக்ருதம் இல்லை என்றேன்,சித்த சுக்ருதம் இல்லை என்று எப்போது சொன்னேன் ? நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடித்துச் சொன்னது எந்த தைரியத்தில் என்று நினைக்கிறாய் ?குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்னும்படி நீ எனக்காகவே நீர்மை வடிவெடுத்து வந்திருப்பதை வைத்துத் தான்.என் கர்மஞான பக்தியில் குறையிருக்கலாம்.உன் கருணைக்குக் குறைவுண்டோ ?உனக்கு நான் தேவை என்பதில் சந்தேகம் உண்டோ ?என்று கேட்டாள். ‘அட,அட,அப்படிப்போடு,இப்போது தெரிந்தது ஏன் முதலிலேயே வரவில்லை ? நீங்கள் நாராயணன் மாதவன் வைகுந்தன் என்றீர்கள்.இப்போது தானே நான் கோவிந்த பட்டபிஷேகம் செய்து கொண்டதும் கோவிந்தனானதும் சொல்கிறீர்கள்.சரி,நான் கோவிந்தன் தான், மிகவும் எளியவன் தான்,அதற்காக உங்களுக்குச் செய்தாகவேண்டுமென்று சட்டமா ? என்றான். ‘உறவு மனிதர்களிடம் அயலாரிடம் பேசுவது போல் பேசலாமா ? உனக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் அஞ்ஞானியான என்னாலும் விடமுடியாது சர்வக்ஞனான உன்னாலும் விடமுடியாது.நீ ஒழித்தாலும் ஒழியாது நான் ஒழித்தாலும் போய்விடாது இந்த உறவு.ஒரு நீர்க்குடம் உடைத்துப்போய் விடக்கூடிய உறவா ஜீவ பரம சம்பந்தம் ?நாங்கள் அறியாமையாலும்,பிள்ளைத்தனத்தாலும்,பித்துக்குளித்தனமான அன்பினாலும் தெரியாமல் உன் புகழ் குறைந்த பேர்களான மாதவன் நாராயணன் உம்பர்கோமான் என்றெல்லாம் சொல்லி அழைத்தோம்.புகழ் பெருத்த உன் கோவிந்தன் பெயரை மறந்து விட்டோம். மன்னித்துக்கொள்.அதற்காக கோபித்துக்கொள்ளாதே.என் இறைவனே நீ தா என் புருஷார்த்தத்தை[பறை] என்றாள் ஆண்டாள்.

போச்சு.இன்னும் பறையா ? எவ்வளவு பறை தான் கொடுப்பது ?இன்னுமா ஒரு பறை வேண்டும் ? என்று கேட்ட கண்ணனை அடுத்த பாசுரத்தில் மூன்றாவது முறையாக [நக்கலாக] ஒரு கோவிந்தா போட்டு ‘பறை அல்ல நாங்கள் கேட்டது ‘ என்று இடித்துரைக்கப் போகிறாள் ஆண்டாள்.

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவிப்பெருந்தனைப்புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றுமில்லாத கோவிந்தாஉன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

ஆகிஞ்சன்யம் என்றால்பகவானைத்தவிர அவனைத்தவிர வேறு உபாயமில்லை அவன்தான் உபாயம் என்றறிவது. .உபாயாந்திர ராஹித்யம் தான் ஆகிஞ்சன்யம்.ஒருவனுக்கு வியாதி உண்டானால் அன்னம் பிடிக்காது.அதில் ருசியுமிராது.அதைப்பெற ஒரு முயற்சியும் செய்யான்,அதே போல சம்சாரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிற நமக்கு பகவானிடம் ருசியுமில்லை.அவனை அடைய முயற்சியும் செய்வதில்லை.இங்கே கோபி அனுகரத்தில் இருக்கிற ஆண்டாளுக்குக் காதல் நோய்.வைத்தியனான கிருஷ்ணனை அடைந்திருக்கிறாள்.மருந்தும் அவனே.வியாதி தீர்ந்து அனுபவமும் அவனே. ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே ‘என்று பேயாழ்வார் சொன்னபடி.

‘இறைவா! ‘என்றும் ‘குறைவொன்றும்இல்லாதகோவிந்தா! ‘என்றும் இரு விளிகளை வைத்தாள் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில்.ஒரு மனு எழுதும்போது குழப்பமாக address செய்து விட்டோமானால் அந்தந்தந்த அதிகாரி ‘it does not pertain to me ‘ என்று நிராகரித்து விட முயற்சி செய்வான்.எந்தக்காரணத்தாலும் தள்ளப்படமுடியாத படிக்கு விண்ணப்பத்தை முன் வைப்பதில் தான் சாமர்த்தியமே இருக்கிறது. அப்படி ஆண்டாள் இறைவா என்று அழைத்த பின் ஆதிமூலமே என்று அழைத்த யானைக்கு உதவ ஓடியதைப்போல ஓட வேண்டியதாயிற்று கண்ணனுக்கு.இல்லாவிட்டால் தான் ஆதிமூலம் அல்ல என்றோ இறைவன் அல்ல என்றோ ஒப்புக்கொடுத்ததாகிவிடும் அல்லவா ?இறைவா என்ற வார்த்தைக்கப்புறம்கண்ணனுக்கு சாக்கு போக்கோ விதி முறை தட்டிக்கழித்தலோ எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.

வேறு வழியின்றி ‘ஆம் நான் இறைவன், குறைவில்லாதபடி குணபூர்த்தி கொண்ட எளிமையேவடிவான கோவிந்தன்.திரெளபதி ‘இதயவாசியே! ‘என்றழைக்காமல் ‘துவாரகா வாசி ‘என்று அழைத்ததால் அதை மெய்ப்படுத்த எனக்கு துவாரகையிலிருந்து ஓடி வர வேண்டியதாயிற்று.நேரமாகிவிட்டது புடவை கொண்டு வர. நீங்களும் என்னை கோவிந்தா என்று முதலிலேயே அழைக்காமல் என் சிறு பேர்களை நாராயணா,மாதவா,வைகுந்தா,என்றெல்லாம் சொல்லி வந்ததால் அந்தப் பெயர்களுக்குரிய அந்தஸ்து கெத்து மெத்தனம் எல்லாம் கொண்டு நான் இயங்கவேண்டியதாயிற்று.பக்தன் படி பகவான் என்பது உங்களுக்குத் தெரியாதா ? ‘ என்று ஏதோ ஒரு விதமாக இறங்கி வர வேண்டியதாயிற்று.அப்போதும் ‘பறை ‘என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அதற்கே verbal meaning வைத்து ஆண்டாளின் ஆத்ம நிவேதனத்தை ஏற்காமல் குறுகின கால அனுபவத்தோடு அவளைத் திருப்பி அனுப்ப இன்னொரு முயற்சி செய்தான் கண்ணன். [முன்னால் ‘ஏற்றகலங்கள் ‘பாசுரத்தில் ‘பெரியாய் ‘ என்றாள்.அப்போதும் ‘இறைவா என்றதில் இருக்கிற அழுத்தம் பெறப்படவில்லை.] ‘பித்தர் சொன்னதும் பேதை சொன்னதும் பத்தர் சொன்னதும்பன்னப்பெறுவதோ ? ‘என்பது தொனிக்க ‘அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர்அழைத்தனவும் சீறியருளாதே ‘என்றாள்ஆண்டாள்.[அன்பு,பிள்ளைத்தனம்,அறியாமை மூன்றும் இருப்பதைக்கவனிக்க]மன்னித்துக்கொள்.என்றாள். உனக்கும் எனக்குமான உறவை முறித்துக் கொள்ள எனக்குமுடியாது அதை விடு,உனக்கு முடியுமா சொல் என்பது தொனிக்க ‘உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது ‘என்றாள்.

‘நோற்ற நோன்பிலேன் ‘, ‘குலங்களாகிய ஈரிரண்டிலொன்றிலும் பிறந்திலேன் ‘நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன் ‘, ‘மனத்திலோர் தூய்மையில்லை ‘ என்றெல்லாம் புலம்பாமலேயே கம்பீரமாகவே ஆண்டாள் எப்படி தன் ஆகிஞ்சன்யத்தைக் கச்சிதமாக ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா ‘ என்ற வார்த்தையிலேயே தெளிவாக்கி விடுகிறாள் என்பதே இங்கு சிறப்பு. ‘புகலொன்றில்லாத அடியேன் என்றும் நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் என்றெல்லாம் கீழிறங்காமல் ஆனால் அதே வகையிலான தன் அன்பு சார்ந்த கீழ்ப்படிதலை தெரிவிக்கும் முகமாக ‘இறைவா ‘ என்ற வார்த்தையும் சொல்கிறாள்.Master என்று Milton அழைத்தது போல அழைத்தபின் தான் subject என்பது தன் கம்பீரம் குறையாமலே பெறப்பட்டது அல்லவா ?

பூஜா விதிகளைக் கீழ்ப்பாட்டில் சொன்னோம் .அதில் பிழை பொறுக்கும்படி க்ஷமை வேண்டுவது என்று ஒரு கிரமம் உண்டு. தெரியாமல் செய்த பிழைகளைப் பொறுக்கும்படி மன்னிப்பு வேண்டுதல். அது இந்தப்பாசுரத்தில் வைக்கப்பட்டது.

அதி உத்தமமான 28ம் பாசுரம்இப்படிமுடிவடைந்தது.கிடுக்கிப்பிடி போட்டு கிடைக்கவே முடியாத பேற்றை நிரந்தரமாக அடையும் கடைசிப்படியில் நிற்கிறாள் ஆண்டாள். வாழ்வா இல்லை சாவா என்கிற நிலையில் மிக அற்புதமான இருபத்தொன்பதாம் பாட்டைச் சொல்லப்போகிறாள்.மார்கழிக்கு இருபத்தொன்பதே நாள் தான்.முப்பதாவது பாசுரம் பலஸ்ருதி என்று சொல்லப்படும் சம்பிரதாயப்பாட்டு தான்.

எனவே சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.இங்கு நானும்மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தெரிந்து தெரியாமல் செய்த தப்புகளுக்கு. இது வெறும் சம்பிரதாயமல்ல.சின்ன deviationகளை என் மனசு சொன்னபடி நான் செய்த போது உளைச்சல் ஏற்பட்டது.உதாரணத்துக்கு கடைசி ஐந்து பாட்டுக்களைகோபிகள் கூட்டமாக இருக்கும் படத்தை மனசிலிருந்து விலக்கி ஆண்டாள் மட்டும் இருப்பதான படத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றதில்.மனக் குவிப்புக்காகவும் உருக்கத்துக்காகவும் அப்படி கருதச் சொன்னேன்.அப்படியே மனோதர்மப்படி சில தன்னேற்றங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் செய்தேன்.நோக்கம் நல்லது தான்.புரிதலுக்காக செய்தேன். என்னை முன்நிறுத்த அல்ல.

வாய்ப்புக்கு நன்றிகளுடன்,

மாலதி[சதாரா]


29.உனக்கே யாம் ஆட்செய்வோம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் அத்தலை உரிமையைச் சொன்ன ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே யாம் ஆட்செய்வோம் ‘என்று இத்தலைக் கடமையை அறுதியிட்டு முடித்தாள். உரிமை ஒவ்வொன்றுக்கும் கடமை உண்டு. நாட்டுக்காகட்டும் வீட்டுக்காகட்டும் சமூகத்துக்காகட்டும் எதைப்பெறுகிறோமோ அதே விலையுள்ள ஒன்றைத் தருகிறோம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு,நாராயணனே கொடுப்பான் நமக்கே கொடுப்பான்,நாமும் ஆட்செய்வோம் அவனுக்கே செய்வோம்.எற்றைக்குமேழேழ்பிறவிக்கும் செய்வோம்.இனிய தாம்பத்தியத்திலும் அதே தானே விதி ?அவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ அவ்வளவு அவளுக்கும் ஈடுபாடாகும். சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்

பொற்றாமரையடியே போற்றும்பொருள் கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக்கொள்ளாமல் போகாது

இற்றைப்பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமேயாவோம் உனக்கே யாமாட் செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.[திருப்-29]

காலங்காலையில்,அதிகாலையில்வந்தேன்.உன்னடி,பொன்னடி, தாமரையடிதேடிவந்தேன்.அழகானதும் புனிதமானதும் ஆன அடிகள் பொன்னானது மணமும் கமழ்ந்தாற்போல ஒரே சமயத்தில் அழகும் மதிப்பும் கொண்டதாயிற்று.அப்படி உன்னை வந்தடைந்ததற்கு நோக்கத்தை நீ தெரிந்துகொள்.மிக வருந்தி வந்தேன்.ஒரு நாள் வாய்த்து சத்துவம் கூடி ,விவேகம் வாய்த்து செய்வன செய்யாதன புரிந்து உன் நிலை அறிந்து பத்து படி தாண்டி,ஆசிரியன் அருளும் பிராட்டி கருணையும் பெற்று நெறி பிறழாமல் கைங்கர்யவழி மேலேறி சாரூப்யம் சாயுஜ்யம் எய்தி பிழை பொறுக்கும்படி சரணாகதியைச்செய்து இப்போது பரமபக்தியை நிரந்தரமாகப் பெற்றுவிட நிற்கிறேன்.உன் நாள் தொடங்குமுன் உன்னைப் பிடித்து விட வேண்டுமென்று விடியற்காலை வந்தேன்.இன்னமும் காலைக்குருத்து தான் கிளம்பியுள்ளது.[அந்தப் பெண்கள் பேச்சுக்குப் பேச்சு நடு ராத்திரி என்று குறிப்பிட்டது சரிதான் போலிருக்கிறது.29வது பாட்டில் சிற்றஞ்சிறு காலை என்றால் 6 முதல் 15 பாட்டில் எந்தக் காலையாக இருந்திருக்கக் கூடும் பாருங்கள்]

இரவெல்லாம் தூங்காமல் காலை எப்போதாகும் என்று காத்திருந்து ஓடி வருகிறேன். இரவெல்லாம் தரியாமல் துயருற்று எப்போது விடியும் என்று காத்திருந்து வருகிறேன்.உன் காலை அட்டவணை ஆரம்பிக்குமுன் உன்னைப் பிடிக்கவென்று ஓடி வருகிறேன்.வந்தேன் உன்னைப்பணிந்தேன்.சிறு பெண் வெளிக்கிளம்ப முடியாத விடியலில் நீ வந்து என்னை ஆச்ரயிக்கும் முன் நானே வந்தேன்.உன்னைப்பணிந்தேன்.சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச்சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்.கேட்டுக் கொள்ள உனக்கு சிரமமாக இருக்கிறதா ?

நீ கேட்டாக வேண்டும்.நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவிருந்து பிறவியற்றாருக்கு மட்டும் முகம் கொடுக்கும் பரமபதத்தில் வந்து நின்றேனா நான் ? இல்லையே!

பிறவிக்கு மிக மிக பயப்பட்டு உன்னையே கால் கட்டுவாருள்ள நிலத்துக்கு பாற்கடல் பள்ளியருகே வந்து நின்றேனா ?இல்லையே!

நீயும் பிறந்து இருக்கச் செய்தே இக்ஷ்வாகு குலத்தில் ஆசார ப்ரதாநர் புகுந்து நியமிக்கும் அவதாரகாலத்தில் வந்து நின்றேனா ?இல்லையே!

வாலால் உழக்குக்குப்பசு மேய்த்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்தில் நீ என்ன செய்யப்பிறந்தாயென்று விசாரிக்கலாகாதா ?பெற்றம் மேய்த்துண்ணும்குலத்தில் பிறந்து நீ….நான் சொல்ல வருவதைக் கேட்டுக் கொண்டாக வேண்டும்.

[வாலால் உழக்குக்குப் பசு மேய்க்கை..யாவது-ஒரு பசு மேய்க்கைக்குக் கூலி ஒரு உழக்கு நெல் என்று இடையர் கூலி பேசி வைத்துக்கொண்டு பல பசுக்களை மேய்த்து வந்து கூலி பெறும் காலத்தில் இத்தனை பசுக்களைமேய்த்தோம் என்று கணக்கு சொல்லத்தெரியாமல் தாங்கள் மேய்த்த பசுக்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொரு வாலையும் தொட்டுக்காட்டி ‘இதற்கு ஒரு உழக்கு ‘, ‘இந்த வாலுக்கு ஒரு உழக்கு ‘என்று சொல்லி கூலி பெறுகை.தயிர்க்காரிகள் போட்டு வைத்து இவ்வளவு ஆழாக்கு என்று கணக்கு செய்வது முன்னேறின காலம் போலும்.அறிவு கேட்டுக்கு இடைக்குலம்எல்லைநிலமென்கை.அறியாதார்க்கானாயனாகிப்போய் என்ற பெரிய திருமொழி கருதத் தக்கது]

என் குற்றேவலை நீ கொள்ள வேண்டும்.[அத்தோடு ஏதோ பறை என்றீர்களே! அது வேண்டாமா ? என ஞாபகம் பண்ணின கண்ணனுக்கு ஆண்டாள் பதில் சொன்னாள்.] ‘இற்றைப்பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா,எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமே யாவோம் உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று ‘ பறை பறை என்று அசலாருக்குப் புரியாதிருக்க வென்று பூடகமாக என் அபிலாஷையை உனக்கு உரத்துச் சொன்னேன்.அதை அப்படியே ‘பறை ‘யென்றேஎடுத்துக்கொண்டாயா ?கோவிந்தா,மாட்டிடையன் புத்தி பேருக்கேற்றாற்போல் உனக்கு அப்படியே இருக்கிறது.மாடு மேய்க்கும் இடையனாகவே பெண்மனசைப்புரிந்து கொள்ளும் வல்லமையில்லாமல் இருக்கிறாயே!காதலில் எல்லாவற்றையும் அப்படி அப்படியே சொல்வார்களா ?ஒளிவு மறைவு வைக்க மாட்டார்களா ? நான் பறை என்றதற்கும் அழுத்தம் கொடுத்ததற்கும் அதுவல்ல பொருள்.எப்போதைக்குமான உன் உறவையும் நெருக்கத்தையுமே நான் கேட்டேன்.மற்ற விஷயம் எதிலும் எனக்கு ஆர்வமில்லை.பின்னும் என் மனசு திரும்பாதபடி நீ தான் பார்க்க வேண்டும் என்றாள்.

காலம் உள்ளவரைக்கும் ஏழேழு நாற்பத்தொன்பது பிறவிகளிலும் உன்னோடே பிறந்து உன்னோடே வாழ்ந்து உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்.உன்னைப்பிரியாமல் இருக்க வேண்டும்.எப்போதும் உறவாக வேண்டும்.என்றாள்.

நீ வைகுந்தம் கோயில் கொண்டு இருக்குமிடத்திலும் ,பின்னும் ‘எம்மாண்புமானான் ‘என்னும்படிஅவதாரமெடுத்துத் திரியுமிடத்திலும் உன்னோடே இருக்க வேண்டும்.எல்லாவித பந்தமும் உன்னோடேயாகவேண்டும்.எல்லாஉறவும் நீயேயாக வேண்டும்.நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு வேண்டும்.அசலூரில் வளரப்போகப் புலம்புமுறவு உண்டாக வேண்டும்.நீ ‘உடன் வராதே நில் ‘என்று சொல்லிக் காட்டுக்குக் கிளம்பினால் நீர் பிரிந்த ஜந்து போல் துடிக்கும் உறவு வேண்டும்.நீ பாம்பின் வாயிலே விழுந்தாய் என்றால் பிணம் படும்படியான பாந்தவ்யம் வேண்டும்.கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவு வேண்டும்.எங்கள் வீட்டிலேயிட்ட ஆசனத்தை ஊன்றிப்பார்க்குமுறவு வேண்டும்.பெற்ற தாய் நீ பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ என்றிருக்க வேண்டும் உறவில் சேர்ந்தபின்பும்பத்து மாதப்பிரிவு,பதினாலாண்டு பிரிவு,பதினாறாண்டு பிரிவு என்பதெல்லாமின்றி உற்றோமேயாவோம்.ப்ராதா,பர்தா ச பந்துஸ்ச பிதாச மம ராகவ என்று லட்சுமணன் சொன்னபடி எல்லாம் நீயே யாக வேண்டும்.நான் உன்னையன்றி இலேன் கண்டாய்,நீ என்னை அன்றி யிலை,என்றபடி.சேலேய் கண்ணியரும் பெருஞ்செலவமும் நன்மக்களும் மேலாத்தாய்தந்தையரும் அவரேஎன்று சொன்னபடி.

சின்னி கிருஷ்ணனை பெத்த பெருமாள் என்று சொன்னது தவறு.அந்தப்புற வாசலில் விழுந்து படுகாடு கிடப்பவனைநாட்டுக்குடையவனாக ஏத்திச்சொன்னது தப்பு என்று கீழ்ப்பாசுரத்தில்[பவிசு பாராட்டாத,ஜம்பம் பண்ணிக்கொள்ளூம்குணக்குறைவில்லாத தன்மை சொல்லவென்று] குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்று சொன்னேன்.இன்று பறையை பறை என்றே புரிந்து கொண்டு பெண்கள் பேச்சின் ஆழமும் அர்த்தமும் புரியாதது போல் நடிக்கும் புத்திக்குறைவைக்குறிப்பிட அதே கொவிந்தன் பேரை இன்னொருமுறை சொன்னேன்.நண்பரிடம் தோற்கும் சீர்படைத்த கோவிந்தபட்டபிஷேகம் செய்து கொண்ட கோபாலனை முன்னால் சோன்னது பிறிதொரு அர்த்தத்தில்.

கடையாவும் கழிகோலும் கையிலே பிடித்த கண்ணிக்கயிறும் சுற்றுத்தூளியாலே தாசரிதமான திருக்குழலும் மறித்துத் திரிகிறபோது திருவடிகளிலே கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர்முத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேடத்தை ‘கோவிந்தா ‘என்றழைத்தாள் ஆண்டாள்.

கர்மஞானபக்தியோகங்களைச்செய்வதில்குறைவுண்டாகும்.சாதனத்துக்கு தக்கபடி பலன் அளவுபடும்.அல்பமான அநித்தியமான பலனே கிடைக்கும்.சாதனத்தில் தடை வரும்.சாதன பூர்த்தி செய்யாவிடில் பாபம் வரும்.முயற்சிக்குறைவும் இச்சைக்குறைவும் தொய்வும் அவ்வப்போது ஏற்படும்.பகவானே உகந்து செய்யும் சித்தோபாயத்தில் குறை என்பதே கிடையாது.எனவே தான் அதை நம்பினாள் ஆண்டாள்.அதே சமயம் அந்த அபரிமிதத்துக்குப் பாத்திரமாகும்படி தன்னை வடிவமைத்துக் கொள்வதும் முக்கியம் என்பதால் தனக்கு எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான உடனிருப்பைக் கோருகிறாள்.

To be with God forever,to be with good and noble things forever,to be with eternal love for ever….என்பதையே ஆண்டாள் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமேயாவோம் உனக்கே யாம் ஆட்செய்வோம் என்றாள்.

நாராயணனோடு,உத்தமனோடு,பத்மநாபனோடு,மாயனோடு, தாமோதரனோடு,ஹரியோடு,கேசவனோடு,தேவாதி தேவனோடு,மாதவனோடு,வைகுந்தனோடு,முகில்வண்ணனோடு, மனத்துக்கினியானோடுபங்கயக்கண்ணனோடு,உம்பர்கோமானோடு..காலம் காலமாக வாழ்வது சாதாரண விஷயமா ?அவன் குணங்கள் தாம் எத்தனை எத்தனை ?வலி என்ன! திறல்என்ன!செப்பம் என்ன!பெருமை என்ன!இறைமை என்ன! அவனுடன் இருப்பதே பலன்.வேறெது வேண்டும் ?அவன் அருகாமையில் கண்ட மால் மயக்கமே போதுமே அவனிடம் மயங்கிக் காலம் கழிக்க!மனதுக்குப்பிடித்த மணாளனை விட வேறு எது பிரியமானதாக இருக்க முடியும் ஒரு பெண்ணுக்கு ?

நான் கேட்டதைக் கொடுத்தருள் என்று ஆண்டாள் சொன்னாள்.கேட்டது அப்படியே கிடைத்தது.தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதே தேவ சாம்ராஜ்யத்தின் விதி அல்லவா ?

நாராயணனே நமக்கே என்றதில் பரம் கொண்ட கடப்பாட்டை ஞாபகப்படுத்தியது போலவே யாம் உனக்கே…உற்றோமே யாவோம் என்றதில் தன் செயல்பாட்டையும் வரையறுத்துச் சொல்லி விட்டாள்.நல்லதும் கெட்டதும் உயர்வும் தாழ்வும் எதுவும் சேர்த்தியில் அனுபவிக்கப்போகும் கணவன் மனைவிக்குக் கஷ்டம் என்ற ஒன்றே இராதல்லவா ?

துரத்தித் துரத்திக் காதலித்து உடைமையாக்கிக் கொண்டு உரிமையை என்றைக்குமாகத் தக்க வைத்துக்கொண்ட ஆண்டாளின் சாதுரியம் அபூர்வமானது கம்பீரம் இழக்காத அவளுடைய பிரார்த்தனை மிக இங்கிதமானது.முப்பதே பாட்டுகளில் அவள் வைத்த கருத்துகள் எல்லாராலும் ஏற்கப்படக்கூடியவை.எல்லாரும் பின்பற்றத்தக்கவை.குறைந்த பட்சம் ரசிக்கத் தக்கவை.

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச்சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்றின்புறுவரெம்பாவாய்.[திருப்-30]

பால் கடலில் அமுதெடுக்க தேவருக்கு உதவுவது போலத் தனக்கு மஹாலட்சுமியை சிரத்தையுடன் மீட்டுக் கொண்ட அந்த மாதவனை, காதல் பெண்களைக் கண்டுபிடித்து தனக்காக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த சுருண்ட கேசம் கொண்ட கண்ணனைப் பளீரென்று முகமுடைய கோபிகள் வேடத்தில் போய் அழகான பறையோடு ஆண்டாண்டுக்குமான உயர் உறவையும் வாங்கிவந்த விஷ்ணுசித்தன் மகள் ஆண்டாளின் நெறியை,அவள் அனுபவித்து விவரமாக எழுதிவைத்த 30 பாசுரங்களாலான திருப்பாவையைத் தொடர்ச்சி விடாமல் படித்துப் புரிந்து கொண்டவர்கள் திருமால் கருணையால் என்றும் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவர்.அந்த நிம்மதியில் மற்ற எல்லாமே அடங்கும்.இது தான் திருப்பாவையின் முடிவுரை.

கன்றுக்கிரங்கி பால் கொடுத்த பசு கன்று இல்லாதபோதும் கன்றின் உடலைப்பாடம் பண்ணிச் செய்யப்பட்ட தோல் கன்றைக்கறப்பவன் இறுக்கிக்கொண்டு பால் கறக்க அப்போதும் இரங்கிப் பால் பொழிவது போல கோபியை அனுகரித்து ஆண்டாள் செய்த நோன்பை ஏற்று அவளுக்குக் கொடுத்த பேற்றை ஆண்டாள் காலம் தாண்டினபின்னும் அவள் சொன்னதைச் சொல்லும் மக்களுக்கும் இன்னும் வரப்போகும் பின் சந்ததிக்கும் கொடுப்பான் என்பதாகப் பெரியவர்கள் பொருள் சொல்கிறார்கள்.

மிக உயர்ந்த பக்தியும் அழகியல் உணர்வும் உடைய ஆண்டாள் திருவரங்கம் சென்று திருக்கல்யாணம் செய்து கொண்டாள் என்று லெளகிகப் பதிவுகள் சொல்கின்றன. அது அறிவு ஜீவிகளான நமக்கு விவரப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.காதல் ஒன்று தானே முக்கியம் ? அது ஏற்கப்படுவது முக்கியம். ஒரு பதிவு ஆண்டாளின் வாக்கியத்தில் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது.அவள் சாதாரணப் பெண்களைப்போல நேர்ந்து கொண்டாள் தன் காதல் வெற்றிக்காக.

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ

என்று பிரார்த்தனை செய்தவள்[நாச்சியார் திருமொழியில்] திருவரங்கத்தில் போய் கருவறையுடன் கரைந்து விட்டாள்.போதுமா வேண்டுதல் ? நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா சக்கரைப்பொங்கலும். பிரார்த்தனையை யாரும் முடிக்கவேயில்லை. நெருடல் தாங்காமல் எம்பெருமானார் இராமானுஜர் நேர்ச்சியைச் செலுத்திவிட்டு திருவில்லிபுத்தூர் போய் ஆண்டாள் சன்னிதியில் நின்றார். ‘எம் அண்ணாரே ‘ என்று உருகி அழைத்தாள் ஆண்டாள். அப்படித்தான் பெரும்பூதூர் மாமுனிக்குப்பின்னானாள் ஆண்டாள். வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும் தைலக்காப்பும் பிரியாவிடை சேவையும் சாட்சி ஒரு தமிழ்ப்புலமைக்குக் காலம் அளிக்கும்[கடவுள்கொள்கை தாண்டின எல்லாம் மீறின]கெளரவத்துக்கு.


மாலதி [சதாரா] [முடிந்தது]

Series Navigation

மாலதி

மாலதி