நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மரப்பாவைபோலவொரு மண்ணுருவஞ்செய்து

வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டித்

திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்தபொழுதே

தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே

– பாம்பாட்டி சித்தர்

‘இல்லை..எனக்கு மரணமில்லை. உன் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை..தள்ளி நில்! ‘

பெர்னார் குளோதன் பிதற்றலைக் கேட்டு, அவனருகே நித்திரைகொண்டிருந்த மாறன் எழுந்து உட்கார்ந்தான். நண்பர்கள் இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து திரும்பும் வழியில் நெடுங்காட்டில் கைவிடப்பட்டுக் கிடந்த சத்திரமொன்றில், சற்றே ஓய்வெடுத்திருந்தார்கள்.

‘என்ன பெர்னார், பகற் சொப்பனமா ? ‘, மாறன்.

‘ஆமாம் அப்படித்தான் சொல்லவேணும். வைத்தீஸ்வரன்கோவில் சோசியர் படித்த நாடிசோதிடத்தின் நீடிப்பாகக் கனவுகள். அவர் கர்மகாண்டமென்று படித்த எனது முற்பிறவி சம்பவங்கள், இட்டுக்கட்டிய கதைகள்போற் தெரிந்தன. கடந்தகாலத்தைச் சொன்னவர், வருங்காலத்தைக் கூற தயக்கமேன் ? பூர்வ ஜன்மத்தில் செய்யபட்ட காரியங்களை அனுசரித்து வாழ்க்கையை நடத்தவேண்டுமென்றும், அதன்பொருட்டு வருங்காலத்தில் நிகழவிருக்கும் அபாயங்களை தவிர்ப்பதற்காக பக்தி சிரத்தையுடன் செய்யவேண்டிய பரிகாரங்கள், ரட்சைகளென்று, அவர் தெரிவித்த யோசனைகளைக் கேட்க எனக்கு அலுத்துவிட்டது. ‘

‘மனித வாழ்க்கை பயத்தாலானதென்பதை, ஆள்கின்றவர்களும், மதகுருமார்களும், வைத்தியர்களும், சோசியர்களும் சராசரி சனங்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துவைத்துள்ளார்கள். அறியமுடியாத சங்கதிகளை அறிய முயலும் மனித சுபாவத்தின் ருசியைப் புரிந்துகொண்டு வருங்காலம் என்கிற தேன்பாகில் நனைத்து நிமித்திகர்கள் பரிமாறும்போது, அப்பாவி மனிதர்களென்ன, ஆனானப்பட்ட மனிதர்களே தலை புடைக்கக் குழம்பிக் கிடப்பதில் ஆச்சரியங்கள் இல்லை. தெய்வானையை நீர் மணப்பதால் எதிர்கொள்ளவிருக்கிற ஆபத்து என்னவென்று ஏற்கனவே அறிந்ததுதான். எனவே வைத்தீஸ்வரன்கோவில் சிதம்பரக் குருக்கள் சோசியத்தின் காரணமாக வீணான கற்பனைகளை வளர்த்துக்கொள்வதென்பது அவசியமல்ல. அவர் சொன்னது பலிக்குமென்றாலும், அதனைச் சந்திக்கின்ற தைரியம் உனக்கிருக்கிறது. ஆனாலும் வேறொரு காரியத்தினால் உன் உயிருக்கான உபாதையை நீயாய்த் தேடிக்கொள்கிறாயோ என்கிற சமுசயம் எனக்குண்டு. பிரெஞ்சுத்தீவுக்கு வேண்டிய தொழிலாளர்களை அழைத்து செல்லவேணுமென்று, புதுச்சேரி வந்ததாக அரசாங்கத் தரப்பில் சொல்லப்பட்டது வாஸ்த்துவமே என்றாலும், அவ்வாறு அனுப்பிவைத்தது உனக்கும் தெய்வானைக்குமான திருமணத்தைத் தடுப்பதற்காக மற்றவர்கள் கையாண்ட உபாயமென்றும் இங்கே பேச்சுவந்தது. நீரோ, தெய்வானையின் பிறப்பு ரகசியங்களை அறியவேணுமென்று இத்தேசத்திற்கு வந்ததாக எங்களிடத்திற் பிரஸ்தாபித்தீர். போதாதென்று, கும்பெனியின் உள்விவகாரங்களை அறிந்த மனிதர்களிடத்திலே, சிலதினங்களாக, மற்றுமொரு நியாயம் கற்பிக்கப்பட்டு உலவிவருகின்றது. ‘

‘மாறன்!.. நீ என்ன சொல்ல வருகிறாயென்பது, எனக்கு விளங்காமலில்லை. இவையெல்லாம் வெற்று ஊர்ப்பேச்சுகள். அவை உண்மையல்ல. நீ என்னை நம்பவேண்டும். நட்பின் சுவாசமே நம்பிக்கையில்தான் அடங்கி இருக்கிறது மனித வாழ்க்கை பயத்தாலானதென்பதை ஒரு சிலர் புரிந்துகொண்டிருப்பதாகச் சித்தே முன்னே சொன்னாய், அவர்களுள் வதந்தி கர்த்தாக்களும் அடங்குவர். வீண் பேச்சுகள் எதற்கு ? என்னுடைய பிரச்சினைகளில் வாணியைக் குறித்த சங்கதிகள் அறிய மறந்து போனேன். அவள் தற்சமயம், குடந்தையில் கோயிற்பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தாயே, மறுபடியும் அவளைச் சந்திக்கும் உத்தேசமுண்டா ? ‘ பெர்னார் குளோதன், உரையாடலின் போக்கைத் திசை திருப்புவதாக மாறன் உணர்ந்தான்.

‘எனக்கெனச் சில எல்லைகள் இருக்கிறதெனக் குறிப்பால் உணர்த்துகிறாய், நல்லது. வாணியைக் குடந்தைக்குச் சென்று சந்திக்கின்ற உத்தேசம் இருக்கிறதென்பதும் உண்மைதான். நான் புறப்படுகிறேன். வாய்ப்பிருக்குமாயின், நீர் தெய்வானையுடன், தீவுக்குக் கப்பலேறுவதற்கு முன்பாகக் காரைக்கால் பட்டணம் வருவேன் ‘.

கடைச்ிச் சொற்களில், நாவெழாமல் அடங்கிப்போனது. கண்கள் கலங்க மாறன் நின்றான். அவனது கண்களைச் சந்திக்கிற திராணியின்றி, பெர்னார் தன் பார்வையை விலக்கிக்கொண்டான்.

‘மாறன்! நான் ஏதாவது வருந்தும் படியான வார்த்தைகளை விட்டேனா ? திடாரென்று, புறப்படுவதாக அறிவிக்கிறாயே ? நெடுங்காடு வந்தவன், அருகாமையிலிருக்கும் காரைக்கால் பட்டணம் வரை வந்துபோவதில் உள்ள சிரமங்கள் என்ன. உனது திடார் மனமாற்றத்திற்கானக் காரணங்களை அறியலாமா ? ‘

‘பெர்னார்! உம்மை துலுக்கர் படையுடன் நடந்த சண்டையொன்றில், முதன் முதலாகச் சந்தித்தேன். அன்றைய தினம் தொடங்கி இன்றைய தினம்வரை, ஏற்றுக்கொண்ட உத்தியோகத்திற்கு விசுவாசமாகவே நடந்து கொண்டிருக்கிறேன். எந்த விக்கினமும் நேரமால் தாங்கள் காரைக்கால் பட்டணத்திலிருந்து புறப்பட்டு பிரெஞ்சுத்தீவுக்குப் போய்ச்சேரவேணுமென்கிற சஞ்சலம் என் மனதிலிருக்கிறது. ‘ என்று சொல்லிமுடித்த மாறனை ஆவேசத்துடன், பெர்னார் குளோதன் இறுக அணைத்துக்கொண்டான்.

‘மாறன்! உன் நல்லெண்ணத்திற்கும், சினேகிதத்திற்கும் என்ன செய்யப்போகிறேன். உன் சகோதரியின் திருமணத்திற்குக்கூட, உரிய பொருளுதவி செய்யாமற் போனதற்காய் வருத்தம் இருக்கிறது. தற்சமயம், கைச்செலவுக்குக்கூட, காரைக்கால் நண்பனொருவன் தயவை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கும் தெய்வானைக்கும் ஆயுள் கெட்டியென்றால் அவசியம் உன்னை மீண்டும் புதுச்சேரியில் வைத்து சந்திப்போம். இப்போது நீ புறப்படு. ‘

சினேகிதர்கள் இருவரும், ஒருவர் மற்றவர் பிடியிலிருந்து விடுபட்டு விலகி நின்றனர். ஒருசில நாழிகைகள் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். பின்னர் திரும்பிப் பாராமல், கட்டிவைத்திருந்த குதிரையை அவிழ்த்துப் பெர்னார் மாத்திரம் தாவி அதன் முதுகில் ஏறி உட்கார்ந்தான். மீண்டும் ஒரு முறை நின்றுகொண்டிருந்த மாறனைத் திரும்பிப் பார்த்தவன், குதிரையை வயிற்றில் எத்த, காரைக்கால் திசைக்காய் அது பாய்ந்தது. வெகு நேரம் குதிரையும் பெர்னார் குளோதனும் புள்ளியாய் முடியும்வரை, பார்த்தவண்ணம் அசையாமல் நின்றிருந்தான்.

நெடுங்காடு ராமையாப்பிள்ளை மகன் நல்லசிவம்பிள்ளைக்குக் காரைக்கால் கோட்டையில் உத்தியோகம். உத்தியோகவிவரம் வேணுமென்றால், கோட்டைக்கு வடபுறம் வெடிமருந்துக் கிடங்கு மட்டும் போகவேண்டும். அங்கே சூரிய உதயத்துக்கு ஆரம்பித்து, அஸ்தமனம் வரை ‘டொக் ‘, டொக் ‘ கென்று அம்மி பொளிவது மாதிரியான சத்தம் வரும். அதற்கிசைவாக இலுப்பைக் காய்களைக் கலயத்திற்போட்டு குலுக்குவதுபோல இருமிக்கொண்டும், தலையில் முண்டாசும், புடைத்த மார்பெலும்புகளுமாக ஐந்தாறுபேர் முழங்கை அளவு இரும்பு உலக்கையும் குடுக்கையுமாக காரியம் ஆற்றுவார்கள் – தீக்குடுக்கை இடிக்கிற வேலை. நல்லசிவம் காரைக்கால் கோட்டைக்கு வந்ததென்னவோ சேவகம் பார்க்கத்தான். எவனோ ஒருத்தன், என்னவோ கோள் சொல்ல, வெடிமருந்துக் கிடங்கிற்கு அனுப்பிப் போட்டார்கள். இதோன்னாலும் ஆடி பொறந்தா ஒரு வருஷம் ஆகிப்போடும். இங்கிருந்து வேற எடத்துல உத்தியோகம் கிடச்சா தேவலாம். தொரமாருங்க வளவிலே சேவகமென்றாலும் மோசமில்லை. இங்கே பொழுதன்னிக்கும் கந்தகத்தை மோந்து மோந்து, பாரியாள் விருத்தாம்பா வைக்கிற வெந்தயக் குழம்புல கூட கந்தக மணம்.

விருத்தாம்பாள் நல்லசிவம் தம்பதிகளில் மூத்த பெண்குழைந்தைக்கு அம்மை போட்டிருக்கிறது. கொப்புளங்கள் நீர்கோர்த்து ஈக்கள் மொய்க்கின்றன. உடல் அனலாய்க் கொதிக்கிறது. அடிக்கடி நீர் பிரிகிறது. வைத்தியர் கூட ஊரில் இல்லை; அவர் பொண்ணுக்குத் தலைப்பிரசவ நேரத்திலே அம்மை போட்டிருக்கிறதென்கிற சஞ்சலத்துடன் கொத்தட்டைவரைக்கும் பயணபட்டிருக்கிறாராம். காலமே, ‘ஏய்யா வீட்டில நிக்கக்கூடாதா ? இண்ணைக்கும் கோட்டைக்குப் போகத்தான் வேணுமா ? ‘ என்று இவனிடம் கேட்டுப்போட்டு, உதட்டைக் கடித்துகொண்டு விருத்தாம்பாள் உட்கார்ந்துவிட்டதைக் காணச் சகியாமல் புறப்பட்டு வந்துபோட்டான்.

அரை நாழிகைக்கு முன்னே, இவனோடு வேலைபார்க்கும் மரைக்காயன் கோவணத்தை அவிழ்த்துகொண்டு கடற்கரை திசைக்காய் ஓடி திரும்பியதையும், கோட்டை நிழல், கிழக்கே புங்க மரங்களைத் தொட்டிருந்ததையும் வைத்து, பின்னேரம் இரண்டு மணி இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டான். இன்னும் குறைந்தது இரண்டு நாழிகையாவது குடுக்கைகளில் கந்தகத்தையும், வெடி உப்பையும் வைத்து கெட்டிக்கவேணும். எதிரே அம்பாரமாய்க் கிடந்த தீக்குடுக்கைகளைப் பார்க்க எரிச்சல் வந்தது. வெடிமருந்து கிடங்கருகே தெரிந்த அறையொன்றில் பெண்ணொருத்தி கீழண்டை சாளரத்தைத் திறந்துவைத்து கொண்டு வெகு நேரமாய் உட்கார்ந்திருக்கிறாள். இதற்குமுன்னர் அவளைக் கண்டதில்லை. நேற்று சாயந்திரம் தன் வளவிற்கு திரும்ப இருந்த நேரத்திலும், இவ்விடத்திலே வைத்துக் கண்டதுதான்.

தெய்வானை, காரைக்கால் கோட்டையில் கப்பித்தேன் தெக்குபிளாமுக்கென ஒதுக்கப் பட்டிருந்த குடியிருப்பில் வடபாகத்திலிருந்த அறையொன்றில் கிழக்கே சன்னலொட்டி உட்கார்ந்திருந்தாள். மேற்கிலிருந்த சூரியனின் ஒட்டுமொத்தக் கதிர்களும் ஓசையின்றி அரசலாற்றில் விழுந்து கிழக்கு திசைநோக்கி வெள்ளிப் பாதரசமாக நீள்கிறது. ஆற்றினையொட்டி இரு கரைகளிலும் அடர்த்தியாய் சதுப்பு நில மரங்கள் இடுப்புக்கீழே நிர்வாணத்தை நினைவுபடுத்திக்கொண்டு, சோம்பல் முறிக்கின்றன. பார்வையின் விளிம்பில் இவளறிந்த நீலக்கடல், எப்போதும்போல இரைகிறது.

தெய்வானையின் தாயார் காமாட்சி அம்மாள் அடிக்கடி கடலுக்கும் உடலுக்கும் பேதமில்லை என்பார். உடல் கடலென்றும், உடலில் ஏற்படுகின்ற உபாதைகளை கடல் அலைகளுக்கும், பெண்களைச் சுழற் காற்றுக்கும், காமத்தை ஆகாயத்தில் பறக்கும் புறாவுக்கும், இந்திரிய சக்திகளை தெப்பத்திற்கும், துக்கத்தைத்தாண்டி ஏறுவதை கடல் எல்லையாகிய கரைக்கும் மாணிக்கவாசகர் ஒப்பிடுவாரென்பதும், தாயார் காமாட்சி அம்மாள் சொல்லக் கேட்டதுதான். அலைகளை இந்திரியங்களின் கொந்தளிப்பு என்பதை எவர் மறுப்பது ? சுருண்டுவிழும் அலைகளில், இவள் துரும்பாய்க் கிடக்கிறாள். துரும்பு நுரையில் மிதப்பதும், கரையில் ஒதுங்குவதும், காற்றில் பறப்பதும், துகளாய், எருவாய், மண்ணில், நீரில், காற்றில் மாயப்பொடியாய் தானெடுத்த அவதாரத்தின் கடன்களை, நேற்று, இன்று நாளையென கால வர்த்தாமானங்களை நிர்ணயித்துக்கொண்டு பூர்த்தி செய்கிறது.

இவளை தெய்வானை என்றார்கள், தேவயாணி என்கிறார்கள்: பெயரில் என்ன இருக்கிறது ? அல்லது என்ன சொல்ல முடியும். இரண்டும் இவள் பெண்ணென்பதில் உடன்படுகின்றன. இருபெயருக்குமே சுக்கில துளி ஒன்றுதான். கருப்பை ஒன்றுதான். கருப்பையின்கண் நேர்ந்த பெருந்தீ, பெருங்காற்று, பேரோசை, பெருவெள்ளம், பெரும்புழு முதலிய உற்பாதம் தப்பி, சுரோணிதக் காற்றின் அடிபடல், யோனி நெருக்குண்டல் முதலிய அவஸ்தைகளில் தப்பிய இத்தேகத்தினை தெய்வானையென்றாலும், தேவயானியென்றாலும் மூலம் ஒன்றே. அலைபடவும் அகப்படவும், மறக்கவும் நினைக்கவும், வாடவும் துளிர்க்கவும், நினைவு தெளிந்த நாட்கள் முதல் நீலக்கடல் வாழ்க்கையாகிவிட்டது. நீலக்கடல் வழியாய் வரவேண்டுமென்று எதிர்பார்த்த பெர்னார் குளோதனை இன்றைக்கு நிலக்கடலின் வழியாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வடபுறத்தில் வெடிமருந்து தீக்குடுக்கைகளைக் கெட்டித்துக்கொண்டிருக்கிறவன் எழுப்பும் சத்தம், கடந்த சில நாழிகைகளாக, குளம்பொலியாகக் காதில் விழுந்து இவளை ஏமாற்றுகிறது. சினத்துடன் அவளது பார்வை தீக்குடுக்கை கெட்டிக்கும் சிப்பந்தியின்மீது விழுந்தபோது அவன் பார்வையும் இவள் மீது விழுந்திருக்க வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘தெய்வானை! ‘

‘பிரபு! நீங்களா ? ‘

‘ஆம் கண்ணே! நானேதான். வா.. அருகில் வா ‘

தெய்வானையின் கண்கள் ஆச்சரியத்தில் இமைக்க மறந்தன. ஒடிவந்த தெய்வானை அவன் மார்பில் விழுந்தாள். சற்று முன்புவரை வறண்டிருந்த கண்களில் நீர்கோர்த்துக்கொண்டு தளும்பி உடைபட்டு, கதகதவென்று பரவுகிறது. பெர்னார் குளோதன், அவளது அவதார புருஷன் இவளது உயிர் உய்யும்பொருட்டு வந்திருக்கிறான். ஏழுகுதிரைகளைப் பூட்டிய தேரில் நிற்கும் சூரியன் புறப்பட்டு வந்ததைப்போல தேக காந்தி. சூரியன் உதயமாகிவிட்டால் பட்சிகள் கூட்டைவிட்டு பறந்துபோவதற்கு முரணாக, இங்கே தெய்வானை என்கிற பெண் பறவை, நிற்கிற ஆடவனின் மார்புக் கூட்டில் தலைவைத்துச் சந்தோஷப்படுகிறது. அவள் உடலில் அநேக காரியங்கள் பரபரத்துக்கொண்டு மொட்டவிழ்க்கின்றன. மனதையும் உடலையும், அவன் சந்நிதானத்திற் கிடத்தி மெளனம் காக்கிறாள். குருவிடத்திலே உபதேசங்கள் எதிர்பார்த்து அடக்காமாய்க் காத்திருக்கும் சிஷ்யை ஒருத்தியைப் போல. அவனிடத்திலிருந்து உறங்கிக் கிடந்த இந்திரிய தத்துவங்கள் தாமே பிரகாசித்துக்கொண்டு, வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்துவிட்டன. இவள் மெளனமாக அடங்கிக் கிடக்கிறாள். குறைகளை எழுப்பாமல், சஞ்சலங்களை முறையிடாமல் சாந்தமாக அடங்கிக் கிடக்கிறாள். அன்பால், காதலால், பக்தியால் தன்னை மறந்து இறைமையிடம் ஐக்கியப்பட்டு ஆனந்திக்கும் ஆன்மாவைப் போலக் கிடக்கிறாள். ஒரு கேள்வி கேட்கவேண்டுமென்று தோன்றவில்லை. மெல்ல மனதிற் தலைகாட்டுகிற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்கிற பேச்சு இல்லை.

அவளை மெல்ல விலக்கியவன், சாளரக் கதவுகளை சாத்திவிட்டுத் திரும்பினான். அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினான். தெய்வானை மாய உலகில் சஞ்சரிப்பதாக நினைத்தாள். வாய் மூடிக்கிடந்தாள், வாய் திறந்தாலும் வார்த்தைகள் கோர்வையாய் வருமோவென்று சந்தேகம். தேனில் விழுந்த ஈயைப்போல, தெளிவில்லாத போதையில் மயங்கியிருந்தவள், விடுபட்டவளாய்ச் சிரமத்துடன் விழிகளை உயர்த்தி, நேரிட்டுபார்த்து, இமையாமல் இருந்தவளை, அவன் இறுக அணைத்தான். இவள் பதறிக்கொண்டு விடுபட்டாள். தெய்வானைக்கு மயக்கம் தெளிந்தது, விலகியவள் கட்டிலைவிட்டு எழுந்தாள். ஒரு கணம் திகைத்தாள், உடலில் பதட்டமும் நடுக்கமும் கழுத்தை நீட்டின.

‘பிரபு! உங்களுக்கு என்ன நேர்ந்தது. நானும் அரை நாழிகை என்னை மறந்ததென்னவோ வாஸ்த்தவம். ஆனால் நீர் ஒருபோதும் இம்மாதிரியாக நடந்தறியேனே! ‘

‘தெய்வானை! இப்போது என்ன நடந்துவிட்டதென்று உன் சரீரம் இப்படி நடுங்கவேணும். கரைபுரளும் மோகவெள்ளத்தில், உடற் பசியுடன் என்னால் நீந்திவரமுடியவில்லைப் பெண்ணே. நீதான் எனக்கு துணை புரியவேணும். ஆற்றைக் கடந்து எனக்கு பிரசாதம் அளிக்கவேணும். ‘ பிச்சை கேட்பவனைப்போலக் கையேந்திக்கொண்டு, ஈனஸ்வரக் குரலில் வெளிப்பட்ட பெர்னார் குளோதனின் விரகதாபக் குரல் அவளுக்குப் புதிது.

எதிரே நிற்கும் ஆடவனை வியப்புடன் பார்த்தாள். பேரதிர்ச்சியில் திகைத்தாள். தோற்றத்தில் பெர்னார் குளோதனை உரித்துவைத்திருந்தாலும், அவனல்ல இவன் என்று உள்மனம் எச்சரித்தது. இவனது கண்கள் பெர்னார் குளோதனுடையவை ஆனால் பார்வை வேறு. குரல் பெர்னார் குளோதனுடைது, ஆனால் அதில் தந்திரம் இருக்கிறது. சற்றுமுன் அணைப்பிற் கிடந்தபோது, நாசிகளில் வாங்கிய வியர்வை மணம் பெர்னார் குளோதனுக்குச் சொந்தமானதல்ல. இம்மனிதனின் கண்களிற் தகிக்கும் காமத்தை இதற்குமுன் ஒருபோதும் பெர்னார் குளோதனிடம் கண்டதில்லை.

‘நீங்கள் ..நீ யார் ? உண்மையைச் சொல். என் மனதில் வரித்திருக்கிற பெர்னார் குளோதன் நீயில்லை. அவளது கூரிய பார்வை அவனது கண்களை கொத்தி குதறியது. அவன் தோள்களில் விழுந்த தெய்வானையின் இரு கைகளும் சதைகளைக் கவ்விப் பிடித்தன. காட்டு மிருகமே நீ யார் ? யார் ? ஆவேசங்கண்டவள்போலே அவனைக் குலுக்கினாள். அவளது நகக் கூர்மையில் அவனது தோள்பட்டைத் தசைகள் கிழிந்து இரத்தம் கசிந்தது. வலியை ஒளித்துக்கொண்டு, மெல்ல அவளது கைகளை அகற்றினான், போலியாய் முறுவலித்தான்.

‘பெண்ணே, அமைதிகொள் ‘. மூர்க்கதனத்துடன் வந்த குரலில் எச்சரிக்கை இருந்தது. ‘நான் பெர்னார் குளோதன் என்பதில் உனக்கென்ன சந்தேகம். அருகில் வா. சம்போகம் செய்வதற்கென்று பிழைத்திருக்கும் எனது சரீரத்தின் இச்சைகளை பூர்த்தி செய். இரவுவரை என்னால் காத்திருக்க இயலாது, நெருங்கி வா!. ‘ வார்த்தைகளிற் குழைவை காட்டியவனின் விழிகள் கள் குடித்தவன்போல செருகிக்கிடந்தன. ஓட முயற்சித்தவளை எட்டிப்பற்றினான். அவனைத் தள்ளிவிட்டு ஓடியவள், கால் தடுக்கி விழுந்தாள், கதறினாள். ‘என்னை விட்டு விடு ‘ என்று கெஞ்சியவளின் ஆடைகளை உருவியவன், வேட்டைநாயொன்றின் அவசரத்துடன் உடலில் மனம்போன போக்கிலே பற்களைப் பதித்தான்.

‘தெய்வானை..கதவினைத் திற ‘ தடதடவென்று கதவுகள் இடிக்கப்படுகின்றன.

‘இக்குரல் பெர்னார் குளோதன் குரலலல்லவா ? அப்படியென்றால்.. இவன் ? ‘ நெஞ்சை அடைத்தது, கண்கள் இருண்டன.

இடிவிழுந்ததுபோல சத்தம். நல்லசிவம் தீக்குடுக்கை கெட்டிக்கிறபோது தீப்பொறி பறந்து கோட்டையின் மருந்துக்கிடங்கிலே விழுந்திருந்தது. சரவென்று தீப்பாம்புகள் நெளிந்து ஓடின. செண்டை, சேகண்டி சேர்ந்துகொள்ள அக்கினித் தேவதை எகிறி குதிக்கிறாள், உன்மத்தம் பிடித்தவள்போல ஓடித் திரும்புகிறாள். அடுத்தடுத்து பயங்கர ஓசையுடன் நாலா திசைகளிலும் தீப்பிழம்புகள் திகுதிகுவென்று பரவுகிறது. சாளரக்கதவுகள் தெறித்துவிழத் தீக்கங்கொன்று உள்ளே விழுந்தது. வெளியே வெடிமருந்து கிடங்கிலே மனிதர்களின் அபயக்குரல். தூண்களும் உத்திரங்களும் தெறித்து விழுந்தன. வெடித்து சிதறும் தீக்குடுக்கைகளுடன் உடல்களும் கருகிப் பறந்தன. குதிரைகள் கருகி வயிறு வெடித்து நிணம் உருகி, விறைத்துக்கிடந்தன. ஏகமாய்ப் பற்றிகொண்டு, வடபுற கோட்டைச் சுவரும், கோட்டையிலுள்ள வீடுகளும் அரைநாழிகை நேரம் சின்னா பின்னமாய் வெகுதூரம் வெளியிலே சுற்றிச் சிதறி அடித்தது. கோட்டை வாசிகளில் சிலர் தப்பிக்க முயன்று தீக்கிரையானார்கள். ஒரு சில தைரியசாலிகள் கொத்தளத்தின் பேரிலே ஏறிக் கீழே இறங்கி அக்கினியில் குதித்து காலொடிந்து தவித்தார்கள். அவர்களின் கூச்சல் ஒரு சில விநாடிகளில் அடங்கிப்போனது. மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்.*

/தொடரும்./

*ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, தொகுதி ஒன்று, பக்கம் 194

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா