சு ன ா மி

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

இந்தக் கதைக்கு கடைசி வரி இல்லை.

சுற்றிலும் மனுசாள் அங்கங்க கெடக்காங்க. என்னா ஜனமடியம்மா. எப்பிடியெப்பிடியோ உடம்பு துவண்டு திருகி என்ன கோலம் இது. என்னால எழுந்துக்கிட ஏலவில்லை. என்னாச்சி தெரியாது. என் உடம்புல தெம்பே கிடையாது. மூளையே மரத்துட்டது போல. எழும்ப நெனைச்சாலே சுத்தியடிக்குது உள்ள. நடுக்கம். ஒரே நாத்தக்காடு. என்ன இப்பிடின்னு யோசிக்கக்கூட கூடலியே. தாக்குப்பிடிச்சி எப்பிடியும் நான் எழுந்துக்கிடணும். இது எந்த இடம் தெரியல்ல. திடுதிப்புனு திரும்பவும் ஒரு அதிர்ச்சி என்னைக் கீழ விழுத்தாட்டுது. அத்தனைக்கு, முன்னைப்போல இல்லை இது.

ஆமாமா… நான் வீட்டுக்கு வெளியால படுத்திருந்தேன். அப்ப இப்பிடித்தான் ஆட்டிச்சி. ஒரு உருட்டு, நம்மளை வெச்சி யாரோ பகடையாடறாப்ல. சர்ர்னு அந்தப் பக்கம் போனதே தெரியாது. திரும்ப சிறு உருளல் பின்பக்கமா. அட நான் மட்டுமா ? கூட சுத்திவர எல்லாமே ஆடுதடி. மனுசமக்கள் புல்பூண்டு உயிர்-உள்ளது அத்தது… எல்லாத்துக்கும் ஒரே சமயம் சாமி வந்தாப்ல. என் மேல யப்பாடி எங்கூட்டு மரம், சரசரன்னு முறியிற… செத்தம்டா சாமி – ஒரு அடையாளந் தெரியாத அலறல் அலறி… ஆனா யய்யா அதாண்டி அதிர்ஷ்டன்றது. அந்த மரம் சர்ரியா எம்மேல மார் குறுக்கால… மரத்திண்டின் அடியால நான்.

எங்கூடு ஒத்தச் செங்கல். ரயில் உருட்டல் போல அதை யாரோ பெரிய சொளகுல சலிக்காப்ல. அதைப் பாத்திட்டே இருந்தேன். ஓரளவு வெளிச்சம் வந்த நேரந்தான. மரம் என்ன, சொவரே சரசரன்னு சரியுது. பொத்து பொத்துனு விழுது. ஆட்டல் நிக்கவேயில்ல. மூச்சு இரைக்க திகிலோட பாக்கேன். தோள்ப்பட்டைல ஒரு செங்கல் குத்து விழுது. என்னென்னவோ சத்தம். யானை மளக்னு முறிச்சி முழுங்கறாப்ல. பொல பொலன்னு செங்கப்பொடி. கண்ணுபூரா துாசி. வலிக்கு அலறவும் கூடல்ல… கண்ணு திறக்க வரல்ல. எரிஞ்சி கொளுத்துது… உடம்புல எங்க எங்கியோ விழுது கல்லுகள். எம்மேல. பக்கத்ல. ஆமா. மரம் மட்டும் இல்லாட்டி என் கதி அதோகதிதான். மொதல்ல மரம் விழுந்து பின்ன கட்டடம் நொறுங்கின அளவுக்கு நான் தப்ச்சேன். எய்யா நான் பொழச்சிக்கிட்டேன். மருதை வீரன் துணை.

இதான் பூகம்பம். லேசா ஆட்டிச்சி. ஆட்ன ஜோர்ல முழிப்பு வந்து பதறி எழுங்குள்ளாற கதையே முடிஞ்சாச்சி. நான் பிழைச்சிட்டேன், நான் பிழைச்சிட்டேன்னு ஒரு பெருங்குரல் உள்ள… அது சட்னு அடங்கிச்சி. ஆமா, எம் மவள், பிள்ளைங்க… உள்ள என்ன ஆனாங்க. பெரியவன் சிவாஜி. ரெண்டாப்பு. விரல் சூப்புவான் இன்னமும். அதுக்குள்ள கைப்பிள்ளை வேற. பெரியாளுக தப்ச்சிட்டதா கணக்கு வெச்சிக்கிட்டாலுங் கூட மீனாச்சி – அதுங் கதி என்ன. -ந்தா நீ இப்பதான் சூதானமா இருக்கணும்டியம்மோவ்.

கடலுக்குப் பக்கமான இடந்தான். புஸ்சு புஸ்சுனு பெருஞ்சத்தம். எத்தனை நேரம் நான் கிடந்தேன். இப்ப எப்பிடி முழிப்பு கண்டது தெர்ல. கடல் சத்தம் யாரோ கேலியடிச்சிச் சிரிக்காப்ல. மயக்கம் தெளிஞ்சிட்டது. ஓரளவு நான் அத்தனைக்கு சிக்காதது பெரிய விசயந்தான். ஒரு ஆவேச எதிர்ப்புணர்ச்சி. நடந்தது நடந்தாயிட்டது. மகமாயி தாயி அதெல்லாம் அவ பாத்துக்குவா. எம் மகள் மக்களையும் அவ வசம் ஒப்படைக்கிறேன். தாயி. தயை செய். காப்பாத்து. குடும்பத்தோட மொட்டை குடுக்கறேன்.

எங்கியோ அழுகைக்குரல். ஆகா மனுசாள் மிச்சம் இருக்காங்க. அழுறதுக்கும் உசிர் வேண்டியிருக்கு. அவங்களை என்னால பாக்க முடியாது. நானே சிக்கிக்கிட்டு கெடக்கேன். அது ஆம்பளையா பொம்பளையான்னே தெரியாத ஒரு அழுகை. பயப்படப்டாது. பயந்தான் மனுசனின் முதல் சத்ரு. நானே கொஞ்சம் பயந்தாளுதான். ஆனா இப்ப எங்கருந்து இப்டியொரு தெம்பு வந்ததோ எனக்கே தெரியல்ல. அதெல்லாம் பொழச்சிக்குவேடி நீ. உன் மனுச மக்களை கண்ணால நீ பாக்கத்தான் போற. அந்தக் குரலுக்கு பதில்போல எங்கியோ ஒரு முனகல். அங்கங்க ஆளுக கெடக்காங்க போல. மச்சான் மயினிகளா பொறுமையா நிதானமா இருங்க. எப்பிடியும் மத்தாளுங்க வருவாங்க. நம்மத் துாக்கி விடுவாங்க.

நம்ம வீட்டுப் பக்கம் சத்தத்தையே காணம், திடுக்குனுது. மகா…ன்னு பல்லைக் கடிச்சேன். டியேய் நீ அழப்டாது. பிறத்தியாளைச் சொல்லிட்டு நீயே அழுதா பைத்தாரத்தனம். அந்த மருத வீரனை நம்புறியா நீ ?… நம்புறேன் நம்புறேன் நம்புறேன்-னு அடிச்சிக்கிட்டது மனசு. மகமாயி துணை. அவ பாத்துக்குவா எல்லாத்தையும். இப்பவே பாத்திட்டுதான் இருக்கா. மத்தாளுகள் தப்பிச்சிருப்பாங்கட்டி.

என்னா ஒரு இது, வெளிய வரன்னு நான் முயற்சிக்கிற அளவில் நிறையத் தரம் அந்த ஆட்டல் ஆரம்பிச்சிருது. விடறாப்ல இல்லை. மார்கழிக் குளிர் போல தரையே ஆடுது. இன்னும் மேல மேலன்னு என்னென்னவோ விழுமோன்னு ஒரு பெரும் பயம். எதோ ஒரு நாய். அடில அதும் கெடக்கு போல. காள்காள்னு அதன் நாராசம் வேற. சுத்தமாச் சத்தம் கேக்குது. அது மாட்டல போல. பயந் தாளாத கத்தல் அது.

நான் எப்பிடியும் பிடியுருவிக்கிறணும். பெரிய விசயந்தான் அது. என் கால்ப்பக்கம் வசமா ஒரு கீறல். விண் விண்னு ரத்தத் தெறிப்பு. கால் இத்தா தண்டி வீங்கிக் கிடக்கு. எழுந்துக்கிட்டாலும் நடக்கேலுமா தெரியாது. எலும்பு கிலும்பு… சரி அதப்பத்தி யோசிக்கண்டாம். பொழச்சமே அதைப்பாருடி. இந்தளவு நிதானம் எனக்கே ஆச்சரியம். மகமாயி துணை. பெரிய அழிவுதான். வீடுவாசல் எல்லாம் போச்சு. பொழச்சது மறு சன்மம். கொஞ்சமா நகர முடியுது முடியுது. விடப்டாது. நெஞ்சுமேல மரம். நச்சாப்ல இடது பக்கம் ஒரு செங்கக் குத்து. என்னாடி இது. பாம்பு வாழறாப்ல.

அந்தக் கல்லு அசையுதா ? அசைக்கணும். அசைச்சாகணும். தோள்ப்பட்டையால அதை அசக்கி… முடியல்ல. முடியணும். முடியணும். கையி அது கெடக்கு நீளமா. விரல் மாட்டல. ஆனா முழங்கை மேல ஒரு கல்லுக்கும்பல் கிடக்கு. யாரோ வெடி வெச்சாப்ல இப்டி சரிஞ்சிட்டுதே மகமாயி. மிக மெல்லிசா ஒரு முனங்கல் கேக்குது, இப்ப கேக்குது. அது நம்ப சிவாஜி மாதிரிதான் தெரிது. பக்கத்லதான் கெடக்கானாங் காட்டியும். மருதயம்மா. பிள்ளையப் பாத்துக்க. எனக்குத் தெம்பக் குடு. நான் முழிச்சி அதாச்சி அரைமணி ஆயிருக்கலாம். கண்ணு நெதானப் படலாச்சு. நேரே வானத்தின் சிறு துண்டு தெரிது. வெயில் அடிக்குது. தேடி ஆளுகள் வரப்டாதா. என்னாச்சி. ஆனா விடாத ஆட்டம். என்னா குலுக்கல். தாயக்கட்டம் விளையாட டம்ளருக்குள்ள தாயக் காயைக் குலுக்குறாப்ல. பூமியே வெடிப்பு கிடிப்பு கண்ருக்குமா ?

அவன் முனகல்தான் எனக்குத் தெம்பு. ஆமா அவனைக் காப்பாத்த நான் பொழச்சிக்கிட்டேன். பச்சப்பிள்ளையில்லா. பாவம். கால்ல படாம மோளத் தெரியாது. ஒரு டம்மி துப்பாக்கி வெச்சிருக்கான். ஆயி உன்னைச் சுடறேன்னு உத்தரவு வாங்கிக்கிட்டு ஆசையா சுடுவான். அவன் சுடுறதுக்காவது நான் உசிரோட இருக்கணும்.

அவனும்.

அட கை நகருதுட்டி. நல்ல சகுனம். விட்றாதே. சோழியைத் துாக்கி கபக்னு பிடிக்காப்ல அந்தக் கல்லை நான் மேலாப்ல அசைச்சிக் கீழிறக்க… முடியல்லியே. முடியணும். முடியணும். மகமாயி. எனக்கு முடியணும். திக்கத்தவருக்கு தெய்வமே பலம். சிவாஜி. இந்தா வர்றேன். என்னவோ நான் வசதியாக் கெடக்காப்லயும் அவந்தான் திண்டாடுறாப்லயும். கட்டில்ல துாக்கத்ல சிரிப்பாச் சிரிப்பான். தன்னைப்போல உருண்டு விளிம்புக்கு வந்து, விழுவான் பொத்னு. முன் பல்லு பேத்துக்கிட்டவன். பூகம்பம் வேற. ஆயி வந்திர்றேண்டி கண்ணு. அதெல்லாம் நாம எல்லாருமே பிழைச்சுக்குவம்.

கல்லு பெரிய மனசு பண்ணி நகண்டாப்லதான். நடுவுல பாம்பாய்க் கிடந்தது கை. ஆனா கைமேல எதும் பளு இப்ப இல்ல. போதும். மகமாயி ஆத்தா. கருணையே கருணை. இப்ப கால் அசையுதா பாப்பம். விடப்டாது. சிவாஜி சிவாஜின்னு மனசு பொங்குது. நல்ல பிள்ளை அது.

ஆயி உனக்கு என்ன கொண்டாந்திருக்கேன் பாரு. ஐய என்னாத்துக்குடா கிழவிக்கு. நீ தின்னு – நான் தின்னுட்டேன். இது ஒனக்கு – என் ராசா! நீ பெரியவனாயி என்னா செய்வே… நிஜத்துப்ாக்கி வாங்கி…. /என்னைச் சுடுவே. இல்லியா ?

நேரக் கணக்குல்லாம் அத்துப் போச்சு. நான் திரும்பத் திரும்ப என்னையே உள்ள அசக்கிக் கிட்டேன். உடம்பு எப்டி எப்டியோ சிக்கிக்கிடக்கு. கல்லுகள். இடிபாடுகள். ஒரு கல்லை உடம்பு உணர்ந்து அதை நகட்டினா அதும் மேல்க்கல்லு சரிஞ்சி உடம்பு வேற மாதிரி மாட்டிக்குது- சித்த அகலமா நகண்டேன். கட்ன புடவை டர்ர்னிச்சி. எம்பாடே வம்பாடாக் கெடக்கு. உதவி ஒத்தாசைன்னு யாரையும் எதிர்பார்க்க முடியாது போலுக்கு. அவக எப்ப வந்து எப்ப தப்பிக்க. அது சரி, யார் யாரு மிச்சம் பாக்கின்னே விளங்கலியே. கலிகாலம். பிடிச்சி ஆட்டுது.

நான் வெளியால வந்துட்டேன்டி மகமாயி. உடம்புல இத்தனை கீறல்னில்லை. கண்ணு எரிச்சல். தலை கலஞ்சி ஒரே மண்ணு. உசிரோட என்னைப் புதைச்சாப்ல ஆச்சே. எழுந்து நின்னா உடம்பே ஆடுது. பூகம்பம் நின்னிருக்கும் போல. ஆனா இது உடம்பசதி. குடிக்க எதாச்சிம் தேவை. அதை அப்றம் பாப்பம். சுத்தி முத்திப் பாத்தா. ஹா! இதாண்டி அழிவு. பேரழிவு.

உலகம் முடிவுக்கு வந்திட்டதா. குத்துகுத்தா குத்துகுத்தா விழுந்து கெடக்கு. நாடகப் பந்தல் கலைச்சாப்ல. சாரம் சாரமாக் கெடக்கு. மயான காண்டம். நம்மூட்டு வாசல் வேம்பு சாஞ்சிட்டது. முருங்கை அது சாது மரம். சிறு காத்துக்குமே புட்டுக்கும். கை முறிஞ்சாப்ல கிளை உள்ப்பள்ளம் பாரிச்சி நிக்குது. கல்க்குவியல். கல்லா மரமா தகரமா கூரையா சுத்தியும். தெருவே குப்பைக்காடு. மணி வீட்டு நாயி அந்தச் செங்கல்குத்தில் ஏறி உள்ள எட்டி முகந்து முகந்து பாக்குது. நன்றி விசுவாசமுள்ள சென்மம்லா.

இத்தன விருத்தியா அறிவு எனக்கு வேலை செய்யிது. வேடிக்கை பார்த்து நிக்கப்டாதுன்னு கட்டுப் படுத்திக் கிட்டேன். பிழைச்ச மனுசாள். பிழைச்சவரை லாபம். மருமகன் வந்து கேட்டா பதில் சொல்லோணும் நான். சூரங்குடில கடலைக்கடை எப்டியிருக்கோ. அங்க நிலவரம் வில்லங்கம் இல்லாதிருக்கணும். நம்ம கதையப் பாப்போம். எங்கூடு எது மத்தவர் இல்லம் எது அடையாளம் காண முடியல. எங்கூடு கல்லுக் கட்டடம். தகரக் கூரை. ஒத்தச் செங்கல் – அந்தோணிது மேல்க்கூரை எங்கூட்டு உச்சில கெடக்கு… எங்க தகரம். காத்துக்குத் துாக்கினாப்ல வளைஞ்சி எகிறி நிக்கி. தொப்பித் துாக்கல்.

உடம்பு பூரா மண்ணு. வலி. என்னைய ஆராச்சும் தாங்கிட்டா நடக்க செளரியம். ஒரு குச்சி தேடாத உடம்பு. ஆளே சரிஞ்சிக்கிட தேடறாப்ல ஆச்சி. இடக்கால் வீக்கம். பெத்தம் பெரிய சுருட்டு, தீவட்டி மாதிரிக் கெடக்கு கால். என்னா கனம். கன்னிக் கெடக்கு. அதை அப்டி ஒரு அளுத்து அளுத்தி மத்த காலைச் சித்த துாக்கி ஆட்டினேன். உதறினேன். கிர்ர்னு அப்டியே நிலை தடுமாறி மயக்கடிச்சி தலைசுத்தி விழ… ஒரு கல்லுக் குத்துல பிடிச்சிக்கிட்டேன்.

யார் செத்தா யார் பொழச்சா பாக்க முடியாத நேரம். நாம பொழச்சதே மறு சென்மம். விதி இது. கொடும் விதி. ஊர்த் துக்கம்லா. பொழச்சவாளைப் பாரு. நாம பண்ணுன பாவமா அதிர்ஷ்டமா இது தெரியல. மகமாயி நான் இப்ப என்ன செய்யணும். நின்னு சுத்து முத்தும் பாக்கேன். தள்ளாட்டுது குடிகாரனாட்டம். எங்கியாச்சும் சத்தம் கித்தம் வருதா ?

அந்த நாயி அது உடம்புலயும் மண்ணு. உதறி வருது என்னைப் பாத்து. பசி போல. வாலை லேசா ஆட்டி என் மூஞ்சியப் பாத்து நிக்கி. அட மூதேவி. நானே பஞ்சப் பனாதை. என்னைப் பாக்குறதப் பாரு. அந்த முனகல் – சிவாஜிதான். மத்தாளைப் பத்தி தெர்ல. முனங்குறான். கெட்டிக்காரப் பயல். ஆயுசும் கெட்டிதான். முனங்கினா அடையாளந் தெரியும்னு நினைக்கிறானா ? என்னால எம்மாடி இத்தனை கல்லையும் துாக்கி, இனி அடியால அவனைத் தேடணும். என்னால நடக்கவே முடியல. நிக்கவே முடியல. மகமாயியம்மா. எனக்குத் தெம்பைக் கொடு.

அப்பதான் அது நடந்தது. பெருஞ்சத்தம் பின்னாலருந்து. அது சத்தமா என்னன்னு நினைக்குங்குள்ளாற அப்டியே தண்ணி, நிறையத் தண்ணி என்னை அலாக்கா வாரித் துாக்கி ஒற்றத் தள்ளு. ஒரு விரல்சொடுக்கற நேரங்கூட இல்லை. ஆளைத் தள்ளுதா இழுக்குதா, ரெண்டுமா நடக்குறாப்ல. அத்தனை வேகம். ஆனை நாக்காய் ஒரு உள்சுருட்டல். மளுக். நான் மயங்கிட்டிருக்கிறேன்.

நேரக் கணக்கு பிசகியாச்சி மறுபடி. எனக்கு என்னாச்சி தெரியாது. உருண்டு கண்ணைத் திறந்து பாத்தா மேல மெலிசான வெளிச்ச வானம். நான் குப்புறக் கெடந்தேன். கல்லு கில்லுல்லாம் இல்லை. இது வேற இடம். என் உடம்புல என்னென்னமோ நாத்தம். துணியெல்லாம் அழுக்கும் பிசுக்குமா உடம்போட ஒட்டி. எழுந்து உக்காந்தேன். உடம்பு கிடுகிடுன்னு ஆடுது. ஆமா, அலை எந்திரிச்சி ஊருக்குள்ள கொந்தளிச்சிருக்கு. இப்டியெல்லாங்கூட ஆகுமா ? நான் கடல் கரைவெளியில கெடக்கிறேன். எங்க ஊர்தானோ, வேற ஊரோ ? எப்படி எப்ப நான் ஒதுக்கப் பட்டேன். தெரியாது. லேசா தண்ணி கால்ப்பக்கம் பணிஞ்ச நாய் உரசுறாப்ல. அங்கங்க ஜனம் விழுந்து கெடக்கும் போல. கோரமாத் தெரிது. எத்தனைக்கு மூச்சு இருக்கு, எத்தனை அவுட்டோ தெர்ல. உலகத்தில் இப்டியும் ஆவுமா ?

நான் பொழச்சி மனுஷமக்கள் இல்லாட்டி என்னா இருக்கு பெறகு ? கண்ணு தன்னைப்போல அழுது. வெளிர் இருட்டு. இப்ப அந்த ஆட்டம் இல்லை. பூகம்பம் அடங்கிட்டதா ? எனக்கு இனியும் தெம்பு இல்லை. எழக்கூட காலை அசைக்கவே முடியல. இடதுகால் இனி பயன்படாதுன்றாப்ல பயம் வந்தாச்சி. திரும்ப எப்ப அலை கொந்தளிக்…. ஆஆஆ மகமாயி காப்….

—-

storysankar@rediffmail.com

s shankaranarayanan 2/82 mugappair west chennai 600 037

ph/res 91.044.26258289 91.044.26521944

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்