பெரியபுராணம் — 26

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

பா. சத்தியமோகன்


[ஏனாதிநாத நாயனார்:-
சோழ நாட்டில் உள்ள ஊர் எயினனூர். அவ்வூரில் ஈழ குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர்.
திருநீற்றினிடத்து அன்பு செலுத்துவதும் மன்னர்க்குப் படைக்கலப் பயிற்சி அளித்தலும்
அவரது தொழில்.
அவர், தம் தொழிலால் வரும் பொருளைச் சிவனடியார்க்குப் பயன்படுத்துவார்.
ஈழ குலத்திலே அதிசூரன் என்பவன் ஒருவன் இருந்தான்.
அவனது தொழிலும் படைக்கலப் பயிற்சி அளிப்பதே ஆகும். அத்தொழிலில் ஏனாதி நாதர்க்கு
வருவாய் அதிகம் வந்ததால் அதிசூரன் அவர் மீது பொறாமை கொண்டான்.
அதனால் அவன் அவர் மீது படையுடன் போர் செய்ய வந்தான்.
போரில் வெல்பவரே போர்ப் பயிற்சி அளிக்கும் உரிமை பெற்றவர். எனவே
போருக்கு வருக! என்று அழைத்தான். ஏனாதி நாதரும் போருக்குச் சளைக்கவில்லை.
போருக்குப் புறப்பட்டார் படையுடனே! அதிசூரன் தோற்று ஓடினான்.
வீர்ச்த்தால் ஏனாதி நாதரை வெல்ல முடியாது. அவன் வஞ்சனையால் வெல்ல எண்ணினான்.
மறுநாள் அவன் தன்னுடன் தனியே போர் செய்ய வருமாறு ஓர் ஏவலன் மூலம்
சொல்லி அனுப்பினான்.
அதிசூரன் நெற்றியில் திருநீறு பூசிச் சிவனடியார் கோலத்துடன் போருக்கு வந்தான்.
முதலில் அவன் தன் நெற்றியைக் கேடயத்தால் மறைத்திருந்தான். பின் கேடயத்தை
விலக்கித் தன் திருநீறு அணிந்த நெற்றியைப் புலப்படச் செய்தான். அப்போது ஏனாதிநாதர்
இவர் இன்று சிவனடியார் ஆனார். எனவே இவர் கருத்துக்கு இசைய அவர் என்னைக்
கொல்ல ஆயுதம் இன்றி நிற்பேன்! என நினைத்தார்.
பின் ஆ! நான் ஆயுதம் இன்றி நின்றால், இவர் நிராயுத பாணியான என்னைக்
கொன்றார் என்ற பழியுண்டாகும்! எனவே நான் படைக்கலம் ஏந்திப் போர் செய்வதைப்
போல் நிற்பேன்! என்று எண்ணி நின்றார். அதிசூரன் தான் எண்ணியதை எண்ணிய
வண்ணமே செய்து முடித்தான்.
திருநீற்றுக்காக உயிர் அளித்த ஏனாதி நாதர் சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.
ஏனாதிநாத நாயனார் புராணம்
608.
புலிக்கொடியை இமயமலை மீது ஏற்றி
அந்த எல்லை வரை காவல் செய்யும்
குளிர் முத்துக்கள் கட்டிய வெண் கொற்றக் குடையும்
வெற்றி மாலையும் உடைய சோழர்களின் நாட்டில்
வண்டு ஒலிக்கும் பூஞ்சோலை சூழ்ந்த வயல்களுடைய மருதத்தின்
குளிர்ந்த பண்ணை சூழ்ந்து எண்திசையும் சிறப்பு பரவிய
பழமையான ஊர்தான் எயினன் ஊர்.
609.
குளிர் வயலில் நாணல் கரும்போடு மென் கரும்பும் தாழ
கதிர்ச்சாலி என்ற நெற்பயிர் ஓங்கி வளரும் இயல்புடன்
அதனால் வாழும் பெருங்குடி மக்கள் தழைத்து நிலைபெற்ற
அவ்வழகிய நகரில் ஈழக்குலச்சான்றாரே ஏனாதி நாயனார்
(ஏனாதி – படைத்தலைவர்க்கு மன்னர் வழங்கும் பட்டம்)
610.
அந்த ஏனாதி நாதர்
பழமையான திருநீற்றுத் தொண்டினை வழிபடும் நன்மையில்
நிலைத்து நின்ற தன்மையிலே என்றும் நலம் குன்றாதவர்
மன்னர்க்கு வெற்றி தரும் வாள்படை பயிற்றும் தொழிலில்
விஞ்ச முடியாத தலைமை பெற்றவர்.
611.
வாளைப்பயிற்றுவித்து வந்த ஊதியம் யாவற்றையும்
நாள்தோறும் பெரு விருப்புடன் பொருந்திய கடமையிலே
தம் அடிமுடி ஆட்கொள்ளும் சிவபெருமானின்
அடியார்க்குப் பயன்படுத்தி வந்தார்.
612.
பகைவர்களும் போற்றும் நல்லதுறையில்
இகழப்படாத செயலே ஒழுகி வந்த நாளில்
விடுபடாமல் தொடரும் தொழில் உரிமைத் தாயத்தில்
அதிசூரன் என்பவன் ஒருவன் இருந்தான்.
613.
அந்த அதிசூரன் தன்னைவிட வாள்படைத் தொழில் கற்றவர்கள்
உலகில் யாருமில்லை எனப் பெருமிதம் உடையவனாக
தன்னை மதிப்பவனாக விளங்கினான்.
614.
தன் தொழில் குறைவுபடுமாறு
தங்கள் குலத்தொழிலான வாள்பயிற்சியில்
ஆசிரியத் தொழிலால் வரும் ஊதியம் குறைந்து
ஏனாதிநாதருக்கே மேம்பட்டதால்
அவரிடம் பகைமை பூண்டான்.
615.
கதிரவன் மேலே எழ தன் ஒளி குன்றும் நிலவு போல
பொறாமை மேற்கொண்ட அந்த அதிசூரன்
தன் சுற்றத்தையும் மற்ற ஊராரையும் ஒன்று கூட்டி
ஏனாதிநாதர் மேல் போர் செய்யத் துணிந்து எழுந்தான்.
616.
தோள் வலிமை கொண்ட வலிய ஆண்மை கொண்ட
சுற்றத்தைத் துணையாகக் கொண்டு
போர் மன்னரின் கூட்டத்துடன் சென்று
வாள் பயிற்றும் தொழில் தாயத்தை அதில்
வலியவரே கொள்ளத் தக்கவர் எனக்கூறி
மூண்ட சினத்துடன் நின்று அழைத்தான்.
617.
சிவந்த கொடிய கண்ணுடைய புலி கிடந்த குகையில் சென்று
போருக்கு அறை கூவி அழைக்கும் சிறுகண்குறுநரி போல்
தன் படைத்துணையுடன் பொங்கிப் புறத்தில் வளைந்து
போர் குறித்து நின்றான் அதிசூரன்
அவ்விதம் அழைத்த ஒலி கேட்டு –
618.
போருக்கு என்னை அறை கூவி அழைத்தவர் யார் ? என
ஆண் சிங்கம் போல் கிளர்ந்து எழுந்து
கச்சு கட்டிய உடையை இடையில் இறுகக்கட்டி
வீரக்கழலையும் கூர்வாளையும் கேடயத்தையும்
கையில் கொண்டு போர் முனைக்கு புறப்பட்டார் ஏனாதிநாதர்.
619
ஏனாதிநாதர் புறப்பட்ட சமயத்தில்
போர்த்தொழில்கள் கற்கின்ற
வலிய பெரிய சிறந்த காளையர்கள்
வெவ்வேறு இடத்தில் உள்ளவர்கள்
வாள் கொண்ட சுற்றத்தார்கள் – வீரப்படைகள் –
அதைக் கேட்டு ஓடி வந்து
போரில் வெல்ல முடியா அரிய வீரரின் இருபுறமும் சேர்ந்தார்கள்.
620.
வந்து அழைத்த அதிசூரன்
வெற்றியுடைய ஆண்புலி போன்ற நாயனார் முன் –
வாள்கலை பயிற்றுவித்து நல்லதாய உரிமை எனதே!
இந்த வெளியிடத்தில் நமது படை இரண்டும் போரிட்டு
வெற்றி கொள்பவனே வருவாயைப் பெறட்டும் என்றான்.
621.
இவ்வாறு பகை உரைத்து அதிசூரன் சொன்னதும் ஏனாதிநாதர்
நன்று ! உனக்கு வேண்டினால் அவ்வாறே செய்வேன் என
உள் மகிழ்ந்து சென்றார் அவர் சொன்ன செருக்களத்திற்கு
இருபடைகளும் சினந்து அணிவகுத்து எதிரெதிர் போர் செய்தன.
622.
மேகக் கூட்டத்தினை முன்னால் கொண்டும்
மின்னல் கூட்டத்தை தம் இடையிடையே கொண்டும்
வானிலும் மண்ணிலுமாக வன்மையுடை இடி
எதிர் எதிரே செல்வது போல
பெரிய கேடயமும் வாளும் தரித்து
காக்கைகள் நிறைந்த போர்க்களத்தில் போரிட்டனர்.
623.
கால்களில் வீரக்கழல் கட்டிய வீரர்கள்
கைகளில் தம் உடலை மறைக்கும் ஒளி வட்டமும் வாளும் முளைத்திட
இருபுறமும் போரிட்டனர்
வேற்படையுடன் வேற்படை நீண்டு மோதின
நாகவீரர்களின் நாக்குகள் பாதாள உலகை விட்டு நிலவுலகில் பொருந்த
மேலே நீள்வது போல் தோன்றின.
624.
கொடிய கண்களுடைய வலிய வில்வீரர்கள்
வேறொரு இடத்தில் போரிட
தங்கள் தங்கள் வில்களிலிருந்து உந்திய அம்புகள்
ஒன்றையொன்று எதிர்க்கின்ற செயல்
பொங்கும் சினத்தில் மூண்ட தீயினிலிருந்து
கிளம்பும் புகை மண்டலம் –
வளைத்துச் சிவந்த கண்களின் சினத் தீயிலிருந்து
சிந்திச்சீறும் பொறிகள் போவதைப் போலிருந்தன.
625.
தங்களுக்கு விதிக்கப்பட்ட நாள் எல்லையுடன்
சீறிப் போர் செய்ய வல்ல வீரர்கள் கொண்ட போர்க்களத்தில்
வாள்களுடன் பற்றிய நீண்ட கைகள் துண்டாகித் துடித்தன
மார்பில் வேல்கள் குளித்தன !
பாய்ந்து அறுத்த தோள்களுடன் அம்புகள் தரையில் வீழ்ந்தன
வீரர்களின் உடலில் தாக்கி அழுத்திய கேடயங்கள்
அத்தோலுடன் பதிந்தன.
கால்களில் கட்டிய வீரக்கழல் அறுந்தன
அணிந்த மாலைகளுடன் தலைகள் துண்டாயின.
626.
இருபக்கப் படைகளிலும் எதிரெதிர் நின்று போர் செய்தலால்
குருதியின் நதிகள் பரந்து ஓடின
குறைபட்ட உடல்கள் எங்கும் அலைந்தன
போர்ப்படை வீரர்களின் அறுபட்ட துண்டங்கள் சிந்தின
வெளிவந்த குடல்களுடன் கூடிய உடல்கள் நிரம்பின
அச்சம் கொள்ளும்படி கழுகுகள் நெருங்கின
வார் அறுபட்ட துடிகள் புரண்டன.
627.
நீண்ட தொலைவு விரைந்து எதிர்த்து
போர் செய்த வீரர் இருவரில் ஒருவன்
தன்னைத் தொடர்ந்த பகைவனின்
கால்களைத் தொடையுடன் வெட்டினான்
வெட்டப்பட்டு வீழும் அவன் கீழே விழுமுன் வாள் வீசும்போது
மார்பும் இடையும் அறுந்துபோக வெட்டியவனும் இறப்பான்
இவ்வாறு இறப்பவர் போர்க்களமெங்கும் பலர்.
628.
கூர்முனை வேலுடன் பாய்பவர் எதிர் எதிரே
நீட்டிய பலகையையும் மார்பையும்
ஊடுருவிச் செல்லுமாறு குத்திக் கெண்டனர்
தம் தம் உயிர்கள் நீங்கிய பின்பும் நின்று
ஆண்மையில் சமமாக இருவரும் ஒத்தனர்
இறந்த இத்தகு வீரர்கள் போர்க்களத்தில் பலப்பலர்.
629.
பொன் பூண் இட்ட தம் வில்லை வளைத்தவர்
புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பைப் போல எய்தனர்
மாற்றார் எய்த அம்பினால் தன் வில் அறுந்தாலும்
போரை நிறுத்தாமல் வாள் வீசியவர்களோ –
வளம் நீங்கிய பின்னும் கொடுக்கும் வள்ளலை ஒத்திருந்தனர்.
630.
வன்மையுடைய போர்வீரர்களின் உயிரிழந்த முகம்
மலர்ந்தே இருந்ததால்
காக்கைகள் உயிருள்ளன எனக் கருதி –
இறகு விரித்து அணுகாமல் பறந்தன
வீரர்களின் ஒளி வீசும் கண்கள்
கருங்கொல்லர் உலைப் புகையின் தீ போல் சுடர்விட்டன.
631.
திண்ணிய படைவீரர்களின்
பிணம் விழுகின்ற செங்களத்தில்
புண்பட்ட வழி மூலமாக சொரிந்த குடல்களை
பொங்கிப் பறக்கும் கழுகுகள் கொத்திக் கொண்டு
மேலே எழும் போதில்
தம் போர் முயற்சியில் குன்றாமல்
விண்ணில் படரும் காற்றாடி விடும் சிறுவரைப் போலிருந்தன.
632.
இங்ஙனம் நிகழ்ந்த கொடிய போரில்
இருபடையிலும் வாள் வீரர்கள் கொடிய முனையில் இறந்தபின்
இறவாது மிஞ்சிய தமது பல் படைஞர் பின்னிட
தாம் முன்னால் சென்று போர் செய்ய
சினமுடன்எழுந்தார் ஏனாதிநாதர்.
633.
ஏனாதிநாதரின் –
வெம்மைச் சினமுடைய வாள் தீ உமிழ்ந்தது
காலில் வீரக்கழல் ஒலித்தது
நஞ்சு அணிந்த கழுத்துடைய சிவனாரின் அன்பர் அவர்
தம்மை எதிர்த்த மீதமுள்ள வீரர்களின்
சிரத்தையும் தோள் உரத்தையும் பாத வலிமையும்
தனது வேலினால் உழவு செய்தார்!
634.
எதிர்த்து வந்த எல்லோரும் அத்தனி வீரர் வாளில்
கொல்லப்பட்டு இறந்தார்
அதைக் கண்ட மற்ற எதிர்க்காத வீரர்கள்
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்படும் போது
அலைந்து நீங்கி விடும் ஆர்வம் முதலான குற்றங்களைப் போலிருந்தனர்.
635.
இத்தகைய வெங்களத்தில் மானம் அழிந்த அதிசூரன்
அஞ்சி மீண்ட தனது படைஞர்களைக் கொண்டு
மின்னல் ஒளியை வாளால் வீசும் கொடிய புலி போன்ற
ஏனாதிநாதர் முன் நேராய்ப் போர் செய்தான்.
636.
பொன்மாலை அணிந்த ஏனாதிநாதரின்
கூரிய வாள் ஒளி மட்டுமே தெரிந்தது
சாரிகை சுற்றி வரும் அவர் தெரியவில்லை
தலை துண்டாகும் கணத்தில் அதிசூரன்
தன் படையுடன் புறமுதுகிட்டு ஓடினான்
637.
புறமுதுகிட்டுப் போன அதிசூரன்
போரில் தோற்றதால் மான உணர்வு மிகவும் தாக்க
மண்ணில் படுத்தான்; கண் உறங்கவில்லை
ஓர் இரவு முழுதும் சிந்தித்தான், அலமந்தான்
ஈனமிகு வஞ்சனையால் வெல்வேன் என எண்ணினான்.
638.
நீண்ட இரவு கழிந்து விடியற்காலத்தில்
தீயவனான அதிசூரன்
நாட்டு மக்களைக் கொல்லாமல்
போர் செய்வோம் நாம் ஒரு தனியிடத்தில்
எவருக்கு வாள் கற்பிக்கும் உரிமை என அங்கு
முடிவு செய்யலாம் வா எனச் சொல்லி ஆள் அனுப்பினான்.
639.
இவ்வாறு கேட்டதும் ஏனாதிநாதனார்
அவ்வாறு செய்வது அழகியது என ஏற்று
கையிலே வாள் எடுத்து அமர் செய்ய
அவன் நினைத்த அப்போர்க்களத்தில்
கொடிய வாளுடைய வலியவன் வருக என மேற்கொண்டார்.
640.
சுற்றத்தார் யாவருக்கும் சொல்லாமல்
தானே ஒளி பொருந்திய வாளையும்
அழகிய கேடயமும் கொண்டு புறப்பட்டு வெளி வந்து
அதிசூரன் சொல்லி வருமாறு கேட்ட அக்களத்தில்
அவன் வருகை எதிர் நோக்கித் தனியே நின்றார்.
641.
தீங்கு புரிய அழைத்த தீயோன் அதிசூரன்
திருநீறு தாங்கிய நெற்றியுடையோரை எந்த இடத்திலும்
ஏனாதிநாயனார் தீங்கிழையார் என அறிந்தவன்
ஆதலால் திருநீறு முன்னம் பூசாமலிருந்தான் எனினும் –
642.
அதிசூரன் வெண்ணீற்றை நெற்றி முழுதும் பொருந்த புறத்தில் பூசி
உள் நெஞ்சில் வஞ்சனை என்ற கறுப்பு கொண்டான்
வண்ணச் சுடர் உடைய வாளையும்
மணிகள் பதித்த கேடயத்தையும் கையில் கொண்டான்
புண்ணிய போர்வீரரான ஏனாதிநாதருக்கு
சொன்ன இடம் சென்றான்.
643.
வெற்றி பொருந்திய சிங்கம்
தன் உணவுக்கு விலங்கை முன்னமே எதிர்பார்த்து நின்றதுபோல்
நின்ற ஏனாதிநாதரைக் கண்டான் அதிசூரன்
தன் நெற்றியை வலிய கேடயத்தால் மறைத்தே அந்த
ஒப்பிலா வீரர் எதிரே நெருங்கினான் மறம் செய்ய.
644.
வலிமையுடைய காளை போன்று எதிர்த்தவனைக் கொல்ல
ஏனாதிநாதர் தக்க சமயம் தெரிந்து
காலை எடுத்து வைத்துச் செல்கின்றபோது
தன் நெற்றியை மறைத்திருந்த கேடயம் விலக்க
கீழானான அதிசூரன் நெற்றிமேல் வெண்ணீறு கண்டார்.
645.
கண்டவுடனே ஆ! கெட்டேன்! முன்பு இவர் நெற்றி காணாத
வெண்திருநீற்றின் பொலிவைக் கண்டேன்
வேறு இனி என்ன! அண்டப்பிரானுக்கு சீரடியார் ஆனார்
என்று மனதில் கொண்டு
இவர் தம் கொள்கைக்குறி வழி நிற்பேன் என்று —
646.
கைவாளுடன் கேடயத்தையும் கைவிட்டு நிற்க நினைத்தார்
எனினும் அவ்விதம் செய்யவில்லை
நிராயுதரைக் கொன்றார் எனும் பழி எய்தாமை இவர்க்கு வேண்டும் என
கைவாளுடன் கேடயப்பலகையுடன்
போர் செய்வது போல வெறுமனே நேர் நின்றார்.
647.
அவ்விதம் நின்ற தொண்டர் திருவுள்ளம் யார் அறிவார் !
முன் நின்ற அதிசூரனும் தான் கருதியதை முடித்தான்
இத்தன்மை அறிவாரான இறைவர் அவர்க்கு அருள
மின்னல் நின்ற செஞ்சடையுடன் தாமே வெளி நின்றார்.
648.
இறைவனின் திருவருளை இனியும் போற்ற என் உளது!
பகைவரின் கைவாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரான நாயனாரை
என்றும் தன்னுடன் பிரியாமல் இருக்க அன்பு அருளி
இறைவியை ஒரு பாகம் உடைய இறைவனார்
பொன்னம்பலம் அடைந்தார்.
649.
தம் பெருமான் சாத்துகின்ற திருநீற்றையே சார்பு கொண்ட
எம்பெருமான் ஏனாதிநாதர் திருவடி இறைஞ்சி
தேவதேவரான திருக்காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் அறிந்தவாறு உரைப்போம்.
(ஏனாதிநாத நாயனார் புராணம் முற்றிற்று )
(திருவருளால் தொடரும்.. )
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்