கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு,

60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை மீட்க [அதாவது சாட்சியங்களை அழிக்க] அங்கே அவர்கள் சென்றார்கள் என வேதசகாயகுமார் கேள்விப்பட்டு கூறியதாக மிகுந்த மனப் பதட்டத்துடன் இரவு பத்து மணிக்கு தொலைபேசி வந்தது. மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்ட வதந்தி இது என்பதை பின்னர் அறிய முடிந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவர்களது பொதுஜனத் தொடர்பு. இதை ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்கள் ஒரு பெரிய பலமாகக் கூறுவார்கள். உதாரணமாக, 27.12.2004 அன்று சேவாபாரதியின் மருத்துவ சேவை குழு உடனடியாக பாதிக்கப்பட்ட ஆனால் கவனத்தில் உடனடியாக வராத பகுதிகளான மணக்குடி மக்கள் வைக்கப்பட்டிருந்த தென்தாமரை குளம் பகுதியின் பனிமய மாதா ஆலயத்திலும், அதனை ஒட்டியுள்ள மருங்கூர், வழுக்கம் பாறை, ராஜாவூர் ஆகிய இடங்களிலும் சென்று பணியாற்றினர். இந்த மருத்துவ குழுவில் பணியாற்றிய நண்பரான டாக்டர்.எஸ்.லெனின் ஒரு தீவிர இடதுசாரி குடும்பத்தில் பிறந்தவர். என் பள்ளி தோழர். ஆர்.எஸ்.எஸ் மீது அவர் கடுமையான விமர்சனங்கள் உடையவர். பின்னர் கோவையில் ஆயுர்வேத கல்லூரி ஒன்றில் படித்த போது ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதியின் மூலம் சங்க சேவா விஷயங்களைக் குறித்து அறிந்து ஹிந்துத்வ இயக்கங்களின் சேவா காரியங்களில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பவர். அவர் அன்று மிகுந்த அதிசயத்துடன் என்னிடம் பின்னர் கூறினார், ‘நாகர்கோவில் நகர ஆர்.எஸ்.எஸ் தலைவரான டாக்டர்.ஸ்ரீனிவாஸ கண்ணன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கால்களை கழுவி மருந்து போடுகிறார். அவரது இரு புதல்விகளும் இவ்வேலையில் துணை புரிகின்றனர். இது குறித்து ஒரு பதிவு கிடையாது. ஒரு புகைப்படம் கிடையாது. ஆனால் இவர்கள் செய்யும் சேவைக்கு ஏதோ ஒருவிதத்தில் நிச்சயமாக மதிப்பு இருக்கும். ‘ சங்க ஸ்வயம் சேவகர்களுக்கு நன்றாக தெரியும் சேவா கைங்கரியத்தில் எவ்வித பாகுபாடும் செய்யக்கூடாது என்று. என்றாலும் ஒவ்வொரு முறை சங்க ஸ்வயம் சேவகர்களின் சேவை நடத்தப்பட்டுள்ள போதும் அவர்கள் வகுப்புவாதத் தன்மையுடன் செய்வதாக புரளி கிளப்பப்பட்டு வந்துள்ளது. சங்கத்தில் கேட்டால் ‘அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள்; அவர்களுக்குபதில் சொல்வது நமது வேலையல்ல ‘ என்று சொல்லிவிடுவார்கள். இம்முறை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அரசியல்வாதிகள் இவர்களிடம் ஆர்.எஸ்.எஸ் பூச்சாண்டியை நன்றாகவே காட்டியுள்ளனர். இந்நிலையில் ஆர்,எஸ்.எஸ் காரர்கள் இவர்களிடம் வந்து தொண்டு செய்வதை எவ்வாறு விளக்குவது ? 26 மற்றும் 27 இல் குளச்சல் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் உடல்களை அப்புறப்படுத்தினர். 60 உடல்கள் ஏவிஎம் கனாலில் இருந்து மட்டும் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் மீட்கப்பட்டன. குளச்சல் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்ட போது அங்கிருந்த கத்தோலிக்க பங்கினை சார்ந்த ஜேம்ஸ் என்பவர் வந்து ‘எங்கள் ஆட்களால் முடியவில்லை அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு குலைந்து போகிறார்கள். உங்கள் பையன்களை அனுப்புங்கள் ‘ என்று கேட்டார். ஸ்வயம் சேவகர்கள் அந்த பணியிலும் ஈடுபட்டார்கள். இது தவறுதலாக ஒரு தனியார் தொலைகாட்சியிலும் தலைகாட்டி விட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து இந்த செய்தி மிகச்சிறியதாக பெரும் விவரங்கள் ஏதுமின்றி இதர உடல்களுடன் 60 உடல்கள் என்கிற புள்ளிவிவரமும் வந்தது. அன்றைய இரவு திரு.ஜெயமோகனின் தொலைபேசி ‘அரவிந்தன் ஆர்.எஸ்.எஸ்.காரங்க 60 பேர் இறந்திருக்காங்களா ? ‘ பின்னர் அவர் முழு விவரமும் சொன்னபோது அதிர்ந்து போனேன். அதிர்ஷ்டவசமாக கல்குளம் தாசில்தார், குளச்சல் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஜேம்ஸ், அகஸ்மாத்தாக தனியார் தொலைகாட்சியில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சீருடையுடன் சவ அடக்க சேவைகளினை செய்தது காட்டப்பட்டது ஆகியவை இல்லையெனில், இந்த வதந்தி விரைவில் ஒரு தகவல் வடிவம் பெற்று வகுப்புவாத பாசிஸ சக்திகளுக்கு எதிரான தகவலாக பதிவும் செய்யப்பட்டிருக்கும். இந்த அருவெறுப்பான வதந்திகளுக்கு இன்னமும் சில பரிமாணங்கள் உண்டு. அவை குறித்து இப்போது எழுதுவது சரியல்ல.

அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்