சுனாமியால் விளைந்த சிந்தனைகள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

சத்தி சக்திதாசன்


ஓங்காரமாய்ச் சீறியெழுந்த சுனாமி அலைகளினால் சீரழிந்த எம்முதிரத்து உறவுகளின் உயிர்கள் , உடமைகள் ,

கணக்கிலடங்காதவை. இந்த அனர்த்தம் எம்மனதினிலே எழுப்பிய சிந்தனைகள் ஆயிரம். கடற்கரையின் வெண்மணற்பரப்பினிலே தமை மறந்து மகிழ்ந்திருந்த மனிதர் , கடலைதனிலெ தவழ்ந்து பசிதணிக்கக் கடலுணவு கண்டெடுத்து தன் வாழ்வோட்டும் ஏழை மீனவத் தொழிலாளி , வாழ வழியற்று அன்றாட உழைப்பைக் கொண்டு ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் கடற்கரைவாசிகள் என அந்தச் சுனாமியின்

கோரப்பசிக்கு இரையாகியவர் எண்ணிக்கையிலடங்காதவர்.

இந்த வேதனையான நிகழ்வுக்கு விடையறியாமல் தவிக்கும் உள்ளங்கள் எத்தனையோ . இயற்கையால் விளைந்த அனர்த்தங்கள் எத்தனையோ கண்டதுண்டு ஆனால் இத்தகைய ஒரு மாபாதாகச் செயலை நாம் இதுவரை கண்டதில்லை என்றே சொல்லலாம்.

இது ஏன் நடந்தது ? எப்படி நடந்தது ? என்ற கேள்விகளைக் கேட்டு அதற்கு விடையறிய முடியாமல் அதன் மூலம் மனித வாழ்க்கையின் அடிப்படையான ஆன்மீகச் சிந்தனையின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு நிலையை இந்த நிகழ்வு கொடுத்துள்ளது.வாழ்க்கையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தினசரி

வாழ்க்கையையே ஒரு போராட்டமாகக் கொண்டிருந்த அந்த வீர மக்களின் வாழ்க்கையை அழித்துப் பார்த்து என்னதான் ஆனந்தம் கொண்டதோ அந்தச் சுனாமி.

ஒன்று மட்டும் உண்மை இந்தச் சுனாமி உலக மக்களையெல்லம் ஒருமுறை உலுப்பி விட்டது . எதுவிதமான முன்னறிவித்தலுமின்ரி , இயற்கை தான் நினைத்த மாத்திரத்தில் மக்களின் எதிர்காலத்தையும் , உலகவரைபடத்தையுமே மாற்றக் கூடிய வல்லமை படைத்தது என்றவோர் அனுபவத்தை அனைவருக்கும் புகட்டி விட்டது. ஆனால் அதற்கு நாம் விலையாகக் கொடுத்ததோ விலைமதிப்பற்ற மண்ணின்

மைந்தர்களின் உயிர்கள்.

ஆனால் இங்கும் வேதனைக்குரிய விடயம் அரசியல் முக்கியமான ஒரு இடத்தை எடுத்துக்

கொண்டதுதான். சிந்தித்துப் பார்த்தோமானால் அரசியல் சாதாரண மக்களின் வாழ்க்கையோடு அறிந்தோ , அறியாமலோ , விரும்பியோ , விரும்பாமலோ பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதுதான் உண்மை எனலாம்.

ஏனென்று பார்த்தோமானால் ! உலகின் பணக்காரநாடுகள் என்று பெயர் வாங்கிக் கொண்ட நாடுகள் அனைத்தும் தத்தமது நாடுகளில் மக்களின் மனநிலையின் பிரதிபலிப்பின் விகிதாசாரத்தின் படிதான் தமது உதவி வழங்களையும் நடத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை.

உதாரணத்திர்கு பிரிட்டனை எடுத்துக் கொள்ளுவோம் . உடனடி நிவாரணமாக 15 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்களை வழங்குவதாகக் கூறியவர்கள் , பிரித்தானிய மக்களின் ஏகோபித்த தார்மீக ஆதரவைக் கண்டதும் அதைக் கொண்டு தமது அரசியல் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முகமாக , தொகையைக் கூட்டிக் கொண்டே போனார்கள் . அதேபோலத்தான் அமெரிக்காவும் போன்று தெரிகிறது. இதற்கு விதிவிலக்கென்றால் இந்தியா ஒன்றென்றுதான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும் ஒரேஒரு முன்னேற்ரம் சிறிது ஆறுதலளிக்கிறது. தொலைக்காட்சிகள் உடனடியாகத் தமது

நிருபர்களை பாதிக்கப்பட்ட பரப்புக்களுக்கு அனுப்பி அந்தப் பரிதாபகரமான நிகழ்வுகளை எம் கண்முன்னே காட்டியது , மக்களின் துரித நடவடிக்கைகளுக்கு வழிகோலியது என்றுகூடச் சொல்லலாம்.

உலக மக்களின் ஒருமித்த ஒற்றுமையான ஆதரவு , மனிதத்துவம் நாட்டு எல்லகளைத் தாண்டி , இன,

நிற,மத வேறுபாடுகளையும் கடந்து மேலெழுந்து நின்றதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது.

பலகாலமாக எமது தாய்மண்ணை விட்டு வெளியேறி அந்நியமண்ணைச் சொந்தமாகக் கொண்டு வாழும் பலருக்கு , வாழ்க்கைச் சுமைகள் நிமித்தம் அந்தந்த நாட்டு மக்களின் மீது வெறுப்பு ஏற்படுவது சகஜம். ஆனால் இப்படியான ஒரு நிகழ்விலே எமது நாட்டு உறவுகளுக்கு தமது பைகளிலே கைகளை ஆழமாய்

விட்டு உதவி புரிந்தபோது , நாமும் இந்தச் சமுதாயத்தில் ஒரு அங்கம் எனப் பெருமை கொள்ள வைத்தது.

எமக்குள் எத்தனையோ வேற்றுமைகள் தலைவிரித்தாடுகின்றன. சில நியாயமானவை , சில அர்த்தமற்றவை , சில ஆதாரமற்றவை . ஆனால் இத்தகைய ஒரு பாரிய இழப்பு ஏற்படும்போது அவைகளோடு ஓப்பிடும் வகையில் மற்றவை அனைத்தும் உருவற்று மறைந்து விடுகின்றன.வாழ்க்கையின் உண்மையன நிலையாமை எனும் தத்துவம் அப்போதுதான் புலப்படுகிறது.

‘கலங்காதே தோழனே நானிருக்கிறேன் ‘ என்று சொல்லும் அந்தச் சொல்லில் , சொந்தங்கள் அடையும் ஆறுதல் ஒன்றுதான் கொடூரச் சுனாமியின் கோரத்தை ஓரளவு தணிக்கும் பலம் வாய்ந்தது.

2000ம் ஆண்டு மிலேனியம் எனும் அந்த அதிசயத்தைப் பார்க்கக் கொடுத்துவைத்தவர்கள் என்று பெருமைப்ப்ட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு , இப்படியோர் அனர்த்தத்தையும் அனுபவிக்க வேண்டிய

பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டது வேதனைக்குரியதே .

அடுத்தொரு வேதனை , கிடைக்கும் நிவாரண உதவி , ஈழத்தமிழ் மக்களைச் சரியான வகையில் சென்றடையவில்லை என்பது . அத்தோடு சம்பவம் நடந்து சிலதினங்களுக்கு பின்னாலேயே , ஈழத்தின்

தமிழ்ப்பகுதிகளில் நடந்த அனர்த்ததின் அளவு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது என்றொரு ஆதங்கம்.வெந்த புண்ணிலே வேல் போன்றதொரு நடவடிக்கையே இதுவாகும். உலகம் முழுவதும் ஒன்று

திரண்டு , ஒருமுகமாக பாதிக்கப்பட்ட மக்களை , சரிந்த அவர் வாழ்க்கையை தூக்கி நிருத்த முயற்சிக்கும் போது , நமது கண்ணே நமது கையைக் குத்துவதைப் போன்றதொரு உணர்வு நெஞ்சை நெருடுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அறிய முடியா ஓரு விரக்தி மனங்களிலே ஏற்படுகிறது . இன்ரு தொலைக்காட்சியில் ஈழத்தைப் பற்றிக் காண்பிக்கையில் , ஒரு சிறுவனைக் காட்டினார்கள். கவலை

தோய்ந்த முகத்துடன் கூர்மையான விழிகளினால் எமை உற்று நோக்குவது போல் தென்பட்டது . அந்தப் பார்வையில் ஒரு ஏக்கம் தோங்கியது ‘உறவுகளைப் பலி கொடுத்து அனாதரவாக , அனாதையாக

நிற்கிறேனே ! என்னை ஜாதி , இனம் , மொழி பார்த்தா சுனாமி தாக்கியது ? ‘ என்று கேட்பதைப்

போலிருந்தது.

தமிழ்நாட்டுச் சகோதரர்கள் உறவுகளின் உயிர்களைப் பறிகொடுத்து விட்டு பதறிய காட்சிகள் மனதை உருக்கிக் கசக்கியது . கரையோரத்தில் வாந்ததைத் தவிர , கடலில் தம் தொழிலை மேர்கொண்டதைத்தவிர , அந்த நேரத்திலே அந்த இடத்தில் இருந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையுமே இழைக்காத அந்த உடன்பிறப்புக்கள் தம் உயிரை கடலின் கனநேர களியாட்டத்திற்கு பலி கொடுத்த

நிகழ்வு நெஞ்சங்களை விட்டு அகல மறுக்கின்றன.

புரிகிறது நண்பர்களே !

இத்தகைய கொடூர சம்பவங்களுக்கு காரணமாய் குற்றம் கூறக்கூடிய வகையில் எம்முன்னே இருப்பது இயற்கையெனும் அந்த நிலமடந்தை மட்டும் தானே ! நிச்சயமாய் இத்தகைய நிகழ்வுகள் இறை

நம்பிக்கை எனும் கோட்பாட்டின் மீது கேள்விக்கணைகளைத் தொடுப்பது தவிர்க்க முடியாதவொரு செய்கையே ! அது மட்டுமின்றி ஆன்மிகவாதிகளின் நடத்தைகள் சந்தேகத்தை தூண்டுபவையாக

அமைந்திருக்கும் காலகட்டத்தில் , தெய்வநம்பிக்கை கொண்டோரின் மனம் சஞ்சலப் படத்தான் போகிறது.

அழிவுகள் திரும்பப் பெறமுடியாதவையே , இழப்புக்கள் ஈடு செய்யப்படமுடியாதவையே , ஆறுதல் என்பது நேரடி அனுபவம் இல்லாதவர் உதடுகளிலிருந்து வரும் போது , வெறும் பேச்சாகவே தென்படும். புலம் பெயர்ந்தவர்கள் திடமாக மண்னின் உறவுகளின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக இருந்து , காலத்தால் அவர்கள் சோகம் கழுவப்படும் எனும் நம்பிக்கையை அவர் மனங்களில் விதைத்து , சாதாரண

உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ எனும் கொள்கையை மனதில் இருத்தி

எதிர்காலத்தை நோக்குவது தான் எம்மால் இப்போது செய்யக்கூடிய நிச்சயமான உதவியாகும்.

—-

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்