பெண்ணின் உடையும், உணர்வுகளும்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ராமசந்திரன் உஷா


புராணங்கள், இதிகாசங்கள் முதல் விக்கிரமாதித்தன் கதைகள் வரை பெண்கள் இரண்டே வகை. அவள் பெய் என்றால் மழை

பொழியும். நில் என்றால் சூரியன் நிற்கும், எமனும் உயிரை திருப்பிக் கொடுப்பான். இன்னொரு வகை, பெண் எப்போதும் பல

ஆண்களை நினைப்பாள். நல்லவன் கிடைத்தாலும் அவனுக்கு துரோகம் செய்வாள். அவளுக்கு திருப்தி என்பதே கிடையாது. அதனால்

அவளை பத்திரமாய் பாதுகாப்பது ஆணின் கடமை. அதாவது முதலில் தந்தை, உடன் பிறந்தோர் பிறகு கணவன், பிள்ளைகள்!

ஆனால் சாதாரண பெண்கள், ஆணைப் போல அவளும் ஒரு மனித பிறவிதான். பாலுணர்வு என்பது இருபாலோருக்கு இருக்கும் பொதுவான உணர்வு. ஆணின் அழகும் பெண்ணை கவரும், மன உணர்வுகளை தட்டி எழுப்பும் என்பது அழகாய் மறைக்கப்பட்ட உணர்வு. ஆனால் நாகரீகம் கருதி காலக்காலமாய் பெண் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்ள பழகிவிட்டாள். அதையும் மீறி வெளிப்படுத்திக் கொண்ட வெகு சில பெண்களை சமூகம் தவறான பட்டம் தருகிறது. ஆனால் இந்த பட்டம் ஆணுக்கு தருவதில்லை. அன்றைய மகாபாரத அர்ஜூனன் இருந்து இன்றைய ஜானகி ராமன் மற்றும் ஜெயமோகன் கதைகள் வரை ஆண் கொள்ளும் காமம், ஆண்மையின் வெளிபாடாய், வெகு சாதாரணமாய் கொள்ளப்படுகிறது. கதைகளில் ஆண் மேல் மோகம் கொள்ளும் பெண் பாத்திரங்கள் தொழில் பெண்ணாய் சொல்லப்படுகிறார்கள். அதை தவறு என்றே கொள்ளப்படுகிறது. பணமோ. பொருளோ அதற்காக உடலை விற்கும் பெண்கள் வேறு, அடக்க முடியாத பாலுணர்வால் ஆண்களை கவர முற்படும் பெண்கள் வேறு என்பதை நம் கதாசிரியர்கள் மறந்துவிட்டார்கள்.

அன்றைய பாகவதர், எம்.ஜி.ஆர், முதல் இன்றைய கமலஹாசன், சரத்குமார், சல்மான்கான் வரை தன் உடல் அழகை காட்டி நடிக்கும் ஆண் நடிகர்கள், பெண் ரசிகர்களை குறி வைத்து ஆடை குறைப்பு காட்சிகளை வைத்து எல்லா வயது பெண்களையும் கவருகிறார்கள். சல்மான் கான் சட்டையில்லாமல் அல்லது கொசுவலையில் தைத்த சட்டை அணிந்து தன் மார்பழைகை காட்டும் காட்சியும், சரத்குமார் தன்னுடைய முண்டாவை காட்டும் காட்சியும், தன் அழகை இளமையை வெளிப்படுத்தும் பாடல் வரிகளைக் கொண்ட கமலஹாசனும் எதற்காக ஐயா ? எம்.ஜி. ஆர் அரசியலின் வெற்றியும், இந்த தாய்மார்களின் ஓட்டு வங்கியின் கைங்கர்யம் தானே ? பெண்கள்

பேச்சில் ஆண் அழகு பேசப்படுவதும், பள்ளி, கல்லூரிகளில் உடல் அழகைக் காட்டும் கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும், உடல் பயிற்சி கூடங்களில் பெண்கள் வந்துப் போவதும் மெல்லிய பாலூணர்வின் வெளிப்பாடே!

தலை முடியை, உடலை மறைக்கும் புர்க்காவை பற்றி பேசும் பொழுது, எட்டு வயது சிறுமியின் தலை முடியை ஒரு பெண் ரசிப்பதுப் போல் ஆண் ரசிப்பது என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை ? அழகான முகம், நிறம், கூந்தல் என்பது இயற்கையின் அற்புதம். இது சிலருக்கு சரியாய் அமையும் பொழுது, ஆணோ, பெண்ணோ எதிர்பாலோரை பார்ப்பதை ஏன் வக்கிரமாய் நினைக்க வேண்டும் ?

உடை என்பது, கண்ணியம் என்று சொல்லும் பொழுது, நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உடையை விட, பாடி லேங்வேஜூம்,

பேச்சும் தான் ஒருவன் அல்லது ஒருத்தியின் மன உணர்வுகளை சரியாய் வெளிப்படுத்தும். பார்க்கும் பார்வையிலேயே ஆணின்

மன விகாரத்தை சிறுமியாய் இருக்கும் பொழுதே, பெண்களால் உணர முடியும். இது ஆணுக்கும் பொருந்தும்.

சுடிதாரோ, புடைவையோ எப்படி அணிகிறோம் என்பதில்தான் இருக்கிறது. மடிசார் என்ற கண்ணியமான உடையை

திரைப்படத்தில் இடுப்பைக் காட்டி, லோ ஹிப்புடன், முக்கால் முதுகு காட்டும் ரவிக்கையுடன் , இந்த உடையில் நடிக்க விரும்பாத

நடிகையே கிடையாது.

ஆணோ பெண்ணோ உடை என்பது ஸ்மார்ட் என்று சொல்லப்படும் தன்நம்பிக்கையுடன் கூடிய அழகை வெளிப்படுத்தும் விஷயம். ரசிப்பது

தவறில்லை. இதை தடுக்கவும் முடியாது, தடுக்கவும் வேண்டியதில்லை. அருவருப்பாய் தன் காம உணர்வுகளை எல்லா ஆண்களும்

வெளிப்படுத்துவதில்லை. குழுவாய் நாலு பேர்களுடன் சேர்ந்து வம்பு செய்வதும் எவள் ஏமாந்த அப்பாவியோ அவளை சீண்டிப்

பார்ப்பதும்தான் சில ஆண்களின் வீரத்தனம். அனாவசியமாய் மேலே விழுந்தால், மோதி மிதித்துவிட நம் பெண்களுக்கு கற்றுக் கொடுப்போம். நான் சென்னையில் இருந்தப் பொழுது, புர்க்கா அணிந்த பெண்ணைப் பார்த்து சில பொறுக்கிகள், நாம இவளுங்கள பாக்கக்கூடாது. ஆனா இவளுங்க நம்ம பார்க்கலாம் என்று வக்கிரமாய் கமெண்ட் அடித்ததைக் கேட்டு இருக்கிறேன்.

வீட்டில் பெண் குழந்தைகளுக்கு எப்படி நல்லது கெட்டது சொல்லி தருகிறோமோ, அதேப் போல ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

குரலை உயர்த்தினால் போதும் இந்த வெத்து வீரர்கள் ஓடி விடுவார்கள். அதிலும் தாவணி அணிந்த பெண்ணை வம்பு செய்வார்களே

தவிர ஜீன்ஸ் அணிந்த பெண்களை ஓர கண்ணால் பார்த்து ஒதுங்கிவிடுவார்கள். தூணிற்கு புடைவை சுற்றினாலும் ஜொல்லுவிடும்

ஆண்களை திருத்தப்பட வேண்டுமே தவிர எங்களுக்கு எப்படி உடை அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்காதீர்கள். இதைவிட வீட்டு படி தாண்டாதே என்று சொல்வதும் ஒன்றுதான்.

தோழியர் வலைப்பதிவு

http://womankind.yarl.net/

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா