கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

ஜோதிர்லதா கிரிஜா


12.1.2005 துக்ளக் இதழில், ‘கடலின் கோபத்துக்கு ஸ்வாமிகளின் கைது காரணமா ?’ என்கிற தலைப்பில் வந்துள்ள கட்டுரை தேவை யற்றது என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், கட்டுரை எழுப்பிய கேள்விக்கு ஒரு பதிலையும் ஏற்கத்தக்க வகையில் அது உள்ளடக்கி யிருந்திருந்தால் இந்தக் கட்டுரைக்கு அவசியம் நேர்ந்திராது!

மூடத்தனங்களின் மொத்த உருவமாக இருக்கும் இந்த நாட்டு மக்களின் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்தும் வகையில் கட்டுரையில் ஒரு வாக்கியமேனும் இருந்திருந்தால், இக் கட்டுரையை நாம் எழுத முற்பட்டிருந்திருக்க மாட்டோம்.

‘மடங்களின் தலைவர்கள் எல்லாரும் கடவுளுக்கு இணையானவர்கள் என்கிற அடி முட்டாள்தனத்தில் ஊறியுள்ள மனிதர்களும், அவர்களிடம் சென்று தங்கள் பிரச்சினைகளைச் சொல்லிப் புலம்பி யழுது முறையிட்டால், அவற்றை அவர்கள் தீர்த்துவைப்பார்கள் என்று நம்பும் மூடர்களும், அவர்கள் ‘ஸ்டைலாய்’க் கையுயர்த்தி ஒரு சிரிப்பும் சிரித்து ஆசி வழங்கினாலே எல்லா நன்மைகளும் கிட்டி விடும் என்று நினைக்கும் அறிவிலிகளும்தான், ‘ஸ்வாமி’ களின் கைதுதான் சுனாமிப் பேரழிவுக்குக் காரணம் என்று நினைப்பார்களே ஒழிய, மற்றவர்கள் அல்லர் என்று அந்தக் கட்டுரையில் ஏதேனும் ஓரிடத்தில் சொல்லப் பட்டிருந்தாலும் நாம் இக்கட்டுரையை எழுதியிருந்திருக்கவே மாட்டோம்.

‘சுனாமி அலை வந்தது ஏன் ? கடவுளின் கோபம் ஏன் ?’ எனும் கேள்விகளும் மக்களிடம் காணப்படுவதாய்க் கட்டுரை கூறுகிறது. உண்மைதான். இப்படித்தான் சில மனிதர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடவுளுக்குக் கோபம் வருமெனில், அது யாரார் மீது வந்திருக்கவேண்டும் ?

‘ஸ்வாமி’களின் கைதுக்கு எந்த வகையிலும் தொடர்பே சற்றும் இல்லாத – கடலோரப் பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாடங்காய்ச்சிகளான – ஏழை எளிய மக்களின் மீதா பாயும் கடவுளின் கோபம் ? இங்கேதானே கைது நிகழ்ந்தது ? இந்தோனேஷியா (சுமத்ரா), அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், ஆந்திரம், கேரளம் கியவை ஏன் பாதிக்கப்பட்டன ?

மக்களை முட்டாள்களாகவே வைத்திருந்தால்தான் தங்களுக்குப் பிழைப்பு நடக்கும் என்பதால், காலம் காலமாக அப்படியே செய்துகொண்டிருக்கும் மதவாதிகளும் அரசியல்வாதிகளும் அல்லவா இம்மூடத்தனத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் ? அதை விட்டு விட்டு, இயற்கையின் நிகழ்வுக்குக் கடவுளை இழுப்பானேன் ?

கடவுளுக்குக் கோபம் வந்தால் இப்படி ‘ஊழித் தாண்டவம்’ ஆடுவார் என்றே வைத்துக்கொண்டாலும், இவ்வுலகத்தில் நடந்துள்ள அநீதிகளுக்காக இவ்வொட்டுமொத்த உலகமும் என்றோ அழிந்து போயிருந்திருக்க வேண்டுமே!

‘ஸ்வாமி’க்கு வக்காலத்து வாங்குவதற்காகச் சில மூடர்கள் ‘சுனாமி’யையும், அது நேரக் காரணர் என்று தாங்கள் நம்பும் கடவுளையும் இழுப்பதைமட்டும் வெளியிட்டு, அது ஓர் அறிவுசார்ந்த முடிவாகாது என்று ஒரு வரி கூட எழுதாததன் வாயிலாக, ‘அந்நம்பிக்கைக்குத் துணை போகிறதோ துக்ளக் ?’ என்கிற ஐயத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

ஏனெனில், ‘சுனாமி அலை வந்தது ஏன் ? கடவுளின் கோபம் ஏன் ?’ எனும் கேள்விகளும் “மக்களிடம்” கானப்படுகின்றன’ என்று கட்டுரையில் கூறப்படுகிறது. “மக்களிடம்” என்று பொத்தாம்பொதுவாக ஏதோ எல்லா மக்களும் அப்படி நினைப்பதாகச் சொன்னதற்குப் பதிலாக – “சில மனிதர்களிடம்” என்று – “அதாவது சங்கரமடத்து அபிமானிகளில் சிலரிடம்” என்று இன்னும் தெளிவாய்க் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பினும் கூட ஒருகால் நாம் இக் கட்டுரையை எழுதியிருந்திருக்க மாட்டோம்! (சங்கரமடத்து அபிமானிகளே கூட இன்று இரு சாராராய்ப் பிளவுபட்டிருப்பதாய்த்தானே தெரிகிறது ?)

இந்துமத நூல்களில் முன்னுக்குப் பின் முரணாக – முற்பகுதியில் சொன்ன நியாயங்களுக்கு மாறான – பல அநீதிக் கருத்துகள் -அவற்றின் பிற்பதிகளில் ஆங்காங்கு உள்ளதால், அனைத்து இந்தியாவிலும் உள்ள சங்கரமடத் தலைவர்களும், வேதங்களை நன்கு அறிந்த ஏனைய விற்பன்னர்களும் ஒருங்கிணைந்து விவாதித்துத் தாம் இடைச்செருகல்கள் என்று நம்பும் அக்கிரம விதிமுறைகளை இந்து மத நூல்கள், சாத்திரங்கள், இலக்கியங்கள் முதலியவற்றிலிருந்து அறவே நீக்கிவிட வேண்டும் என்று காந்தியடிகள் என்றோ சொன்னார். தீண்டாமை இந்துமத அடிப்படை நூல்களில் கிடையவே கிடையாது என்று கூறி, புரி மடத்துச் சங்கராச்சாரியாரைப் பல ண்டுகளுக்கு முன்பே ரிய சமாஜத்தைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் என்னும் வேதவிற்பன்னர் வாதுக்கு இழுத்ததும், ஆனால் தீண்டாமையை தரித்துப் பேசிய அச் சங்கராச்சாரியார் அவரோடு வாதிட முன்வரவில்லை என்பதும் நாம் அறிந்த உண்மைகள்!

‘அக்கிரமங்களும் அதருமங்களும் அதிகமாகும் போது, ஆண்டவன் ஊழிக்க்கூத்து ஆடிக் குற்றவாளிகளை (மட்டும்) அழித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று நமக்கும் அடிமனத்தில் ஓர் சை வரத்தான் செய்கிறது!

இன்றைய ‘ஸ்வாமி’க்கு முன்பிருந்த பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீண்டாமையை ஆதரித்து, காந்தியடிகளுடன் ஒரு சொற்போரே நடத்தினார். தலை மழிக்காத கைம்பெண்களைப் பார்க்கவும் மறுத்தார். ஆனால், அவரே பின்னாளில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஒரு முறை, ‘அரிஜனங்கள் கிறிஸ்துவமதத்தைத் தழுவுகிறார்களே ? இதனால் இந்து மதத்தினர் எண்ணிக்கை குறையுமே ?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘நாம அவாளைத் தீண்டத்தகாதவான்னு ஒதுக்கிவெச்சிருக்கோம். அவா அங்க போய் விழறா. என்ன தப்பு ?’ என்று பரமாச்சாரியார் வினவியதாக ஒரு வார இதழில் நாம் படித்ததுண்டு. (எந்த இதழ் என்பதோ, எப்போது என்பதோ ஞாபகம் இல்லை.) இதன் பின்னர்தான் எங்களைப் போன்றவர்களின் மனத்தாங்கல் சற்றே குறைந்தது எனலாம்.

இதை இங்கே நினைவு கூர்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனிதாபிமானம் இல்லாத தீண்டாமைக்காகவும், இன்னும் பல்வேறு அநீதிகளுக்காகவும் பொங்காத கடல், ‘ஸ்வாமி’யின் கைதுக்காக மட்டும் பொங்கிவிடுமாமா! அதிலும், அத்தோடு சிறிதும் சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களைத் தேடிப் பிடித்து அழிக்குமாமா ? ‘அது அப்படித்தான்’ என்றால், ‘இதுல பிராமணாள் மட்டுமே ஏறலாம்’ என்று ‘ஸ்வாமி’ திருவாய் மலர்ந்ததன் விளைவுதான் இந்தச் சுனாமியோ என்றும் நம்மைப் போன்ற ‘குதர்க்கவாதிகள்’ கேட்கக்கூடுமே ?

—-

Series Navigation