வந்தால் சொல்லுங்கள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

புதியமாதவி


பொங்கல்..
என் நினைவுகளின் இனிமையில்
இன்னும் மிச்சமாய்
இனிக்கிறது பொங்கல்

தமிழனின் திருநாளை
தமிழ்மண்ணில் தரிசிக்க
நடக்கிறது கால்கள்
செம்மண் கோலத்தில்
சிரித்த பூசணிப்பூக்கள்
கரும்புத் தோட்டங்கள்
பனங்கிழங்குகள்
மஞ்சள் மாவிலை
வாழையிலையில் வரிசையாய் கிழங்குகள்
புத்தரிசி புதுப்பானை
எதைஎதையோ தேடி
அலைகின்றேன் தமிழ்மண்ணில்..

‘பொங்கல் தமிழர் திருநாள் ‘
ஒலிபெருக்கி முழக்கங்கள்
யார் யாரோ வருகின்றார்
பட்டிமன்றங்கள்
பார் அதிரும் முழக்கங்கள்
எட்டிப்பார்க்கின்றேன்
என் பொங்கல் இங்கில்லை.

நதிகளை நம்பி
காத்திருந்த ஓடைகள்
வயல்களைத் தேடி
வாழ்க்கையை முடிக்கின்றன.
விதைநெல்லைப் பொங்கலிட்ட
வெங்கலப்பானைகள்
கடைநெல்லுக்காக
காத்திருக்கின்றன.
கடைவீதியில்
தவணைமுறையில்
தமிழனின் கனவுகள்
விற்கப்படுகின்றன.
சின்னத்திரையில்
விளம்பரத்தில்
சிரிக்கிறது
‘பொங்கள் வால்ட்து ‘.
பொங்கல் வருகிறது! போகிறது!
தமிழன் திருநாள் வருகின்றதா ?
வந்தால் சொல்லுங்கள்
அன்று-
வாழ்த்துரைக்கும் என்கவிதை.
—-

அன்புடன்,

புதியமாதவி, மும்பை.

Series Navigation