நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

என். விநாயக முருகன்


கைப்பைகள்
———————
நெரிசலான பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளிலும்
வந்தமர்கின்றன
கைப்பைகள் மீதான
கவனம்

பைகளற்ற பயணத்தில்
எப்போதும் தொந்தரவு
செய்கின்றன
அடுத்தவர் சுமக்கத்தரும்
பைகள்

நெரிசலற்ற பேருந்தில்
ரசிக்கவிடாமல் தடுக்கும்
காலிப்பைகளின் கனம்

தேநீர்க்கோப்பைகள்
——————————
கழுவப்பட்டு
சீராக அடுக்கப்பட்டிருக்கும்
காலி தேநீர்க்கோப்பைகளில்
மிச்சமிருக்கின்றன
சிலத்துளி ரகஸ்யங்கள்
சிலத்துளி துரோகங்கள்
சிலத்துளி பிரியங்கள்
சிலத்துளி சோகங்கள்
சிலத்துளி
சந்திப்புக்கான அடையாளங்கள்
இவையென்று எப்போதும்
கழுவப்படாமலேயே

விதி
———
ஆறுச்சக்கர
டேங்கர் லாரியொன்று
வடக்கு நோக்கிச் செல்கிறது.

இருச்சக்கர வாகனக்காரன்
தெற்கு நோக்கிச் விரைகிறான்.

இவர்களை
மோதவிட்டால் என்னை
மோசமான கவிஞன்
என்பார்கள்.

அப்படியே விட்டால்
சாதாரணக் கவிதையென்று
விமர்சிப்பார்கள்.

அவரவர் விதிகளையும்
அவரவர் கவிதைகளையும்
அவரவர்களே எழுதுகிறார்கள்
எ‌ன்று முடிக்கவும்
இஷ்டமில்லை

என்ன செய்வதென்று
தெரியவில்லை
கைகளை பிசைகிறேன்

காலிக் கூண்டு
——————————
எப்போதும்
காலிக் கூண்டில்
அடைப்பட்டுக் கிடக்கும்
பறந்துப்போன
கூண்டுக்கிளியைப் பற்றிய
நினைவுகள்

என். விநாயக முருகன்

Series Navigation

நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


01என்ன செய்ய..?
இன்ன பிற விஷயங்களென்றால்
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால்
பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை வரிகளை
என்ன செய்ய?


O 02குழந்தைக் கேள்விகள்..!
ஏன்
வீடு திரும்ப வேண்டும்? ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன? ஏன்
அம்மா வேலைக்கு போவதில்லை? எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்? வளர்ந்த பின் தான்
வேலைக்கு போகணுமா? சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா? குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள். o


03முகமூடிக் கவிதைகள்

சூழல்கள் வேண்டும் முகங்களைசுலபமாய் தரிக்கும் இவனைப்போல்தானே இருக்கும் இவன் கவிதைகளும்.
o


04புறக்கணிப்பு
இவன் பற்றிய புறக்கணிப்பு
இருக்கட்டும் ஒருபுறம். இவர்களின் குழுச்சண்டையின்
இடையில் சிக்கித் தவிப்பது இரண்டாயிரமாண்டு
தமிழ்க்கவிதை அல்லவா? o

Series Navigation

நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ராம் பால்


பரம்பொருள்..

வெற்றிடமாய் எங்கும் நான்
வியாபித்திருக்க
ஒற்றைப் புள்ளியில் நீ
மையமாய் குவிந்திருக்கிறாய்..

பட்டமாய் நான்
பறந்து கொண்டிருக்க
ஆட்டுவிக்கும்
கயிறாய் நீ..

சண்டை சச்சரவு
என நான் சுற்றித்திரிய
சமாதானமாய்
நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய்…

படைப்பின் பெருமையில்
நான் பூரித்திருக்க
ஒன்றுமே அறியாதது போல்
படைத்துக்கொண்டிருக்கிறாய்…

அதிசயங்களைக் கண்டு
நான் ஆர்ப்பரிக்க
நீயோ அமைதியாக நின்று
அதிசயமாகிறாய்…

நான் முடிவைப்பற்றிய
பயத்திலிருக்க
நீயோ முடியாத முடிவாய்
தொடர்ந்துகொண்டிருக்கிறாய்..

உன்னைத்தேடி நான்
எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்க
என்னுள் நீ
ஒளிந்திருக்கிறாய்…

சலிப்பு..

கடிகார முள்ளோடு
வாள் சண்டை
போட்டு சலித்து…

நீண்டு..
சுருங்கி
நீண்டு..
பின் மறைந்து
போன நிழல்
காணச் சகியாமல்..

புரட்டி புரட்டியே
புத்தகங்களின்
பக்கங்களுக்கும்
வலி வந்து
என் ரேகை கூட
கொஞ்சம் தேய்ந்து..

எலி பிடித்து
வலையில்
விளையாடி
ஓய்ந்து..

வண்ணங்கள்
குழைத்து
காகிதங்களில் வாரி
இறைத்து…

போதும்..
இவைகளெல்லாம்
என்று
சலித்துப் போய்..

பொழுதை
வெட்டியாக
போக்கவேண்டுமென்று
உன்னை விளையாட்டாய்
காதலிக்கப் போய்…

தூக்கம் போய்…
கண்களில் கனவுகள்
குடியேறி..
வானத்திற்கு
வீடு மாற்றி..
வீட்டிற்கு
வெள்ளை அடிக்க
சுண்ணாம்பு
தேடி சலித்துப் போய்…

தனிமை பூதம்..

மயான அமைதியின்
நிசப்தத்தில்..
கரு வண்டுகளின்
ரீங்காரத்தில்..
ஒட்டடை அடைந்த
காற்றாடியின்
சத்தத்தில்…
என்னை
காலவேக வாகனத்தில்
அமர்த்தி
உலகு சுற்றி
பழைய நினைவுகள்
குப்பைகளாகக்
கிளறப்பட்டு
கொத்தி கொரித்து
தின்று
எப்போதோ
வாசம் செய்து
போனவளையும்..
மரணமடைந்த
ஆருயிர் நண்பனையும்..
கில்லி விளையாண்ட
பொழுதுகளையும்..
ஒரு சுற்று
சுற்றி விட்டு
அமைதியில்லாமல்
நிலை கொள்ளா
தவிப்பை உருவாக்கிவிட்டு
என்னை
உற்று உற்றுப் பார்க்கும்
தனிமை பூதம்..

வாடிக்கை மனிதர்கள்…

அரசு அங்காடியின்
நீண்ட வரிசையில்
நிற்கும் பொழுது
ஏறிவிட்ட விலைவாசி பேசும்..

கால தாமதமாய்
வரும்
பேருந்தின் கூட்டம் கண்டு
போக்குவரத்துக் கழகம்
பற்றியும் பேசும்..

ஏறிவிட்ட பேருந்தினுள்
ஜந்துக்களிடையே அகப்பட்ட
இளம்பெண்ணைக் கண்டு
ஓர் நொடி கோபம் கொண்டு
குடும்பம் கண்முன் வர
கையாலாகத்தனத்தை
ஞாயிறு ஹிண்டுவிலும் எழுதும்…

தேர்தலில் குத்த வேண்டிய
முத்திரையை
மனதிற்குள் நினைத்து
எல்லோருமே
அயோக்கியர்கள் என்று
வீட்டிலேயே
முத்திரை குத்தி
தொலைக்காட்சி பார்க்கும்..

ஓய்வு பெறுவதற்குள்
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
ஒரு மனையடி வாங்கி
வீடு கட்டி பார்த்து
ஓய்வாய் நாற்காலியில்
அமர்ந்து
செய்தித்தாள் படித்து
கண் மூடும்..

rambal@operamail.com

Series Navigation

நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

சங்கன்


நன்றியறிவிப்பு
———–

மண்வாசனை,
ஈரப்பதமான காற்று,
முதலாய் நனைந்திட
மொட்டைமாடியில் நான்.


ஓட்டைக்கூரை
———–

பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்;
மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள்.


சம்ஹார சோதனை
—————

என் சாமி பெருசா
உன் சாமி பெருசான்னு
வெட்டிகிட்டு செத்தாங்க
குருதிப்புனல் உண்டாச்சு
ஊர் உலகம் ரெண்டாச்சு
கெட்டவங்கள ஒழிச்ச
சந்தோஷத்தில கமுக்கமா
சிரிச்சிக்குதுங்க
சாமிக ரெண்டும்;
ஆனாலும், செத்த சில
அப்பாவி உசுருக்காக
கலங்குதுங்க
கண்ணுக நாலும்.


கரைகிறேன் நான்
————–

‘மலை உச்சியின் மீதமர்ந்து
தியானிப்பேன் நான்

வீசும் மெல்லிய காற்றில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைவேன் நான்

கரைந்து கரைந்து
பிரபஞ்சமெங்கும்
வியாபித்திருப்பேன் நான்

பிண வாடையுடன் அல்ல;
உயிர் வாடையுடன்,
பல கோடி கண்களுடன்… ‘

என்னும் இறவாநிலை
என் கனவாக,
நனவாக நான்
நடைபிணமாக…

***
May 17 2003
sangan@junglemate.com

Series Navigation

நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

காிகாலன்


கடல்

*****

இயற்கையன்னை செய்த

மீன்குழம்பு –

உப்புதான் கொஞ்சம் அதிகம்!

மூடநம்பிக்கை

***********

கிளி ஜோதிடம் பார்ப்பது

மூடநம்பிக்கை

என்றாலும்

நான் பார்க்கிறேன்..

அந்தக் கிளிக்கு

சிறிது நேரம்

சுதந்திரமும்,

ஒரு நெல்மணியும்

கிடைக்கட்டுமே!

நானும் நாணும்

**************

உன்

புருவ வில்லெடுத்து

நானே நாணாகி

எய்த அம்புபட்டு

உடைந்து விழுந்தது

இதயக் கண்ணாடி.

எட்டிப் பார்…

ஒவ்வொரு துண்டிலும்

சிாிக்கும்

உன் முகம்..!

தியாகம்

*******

தலையில் வைத்த

தீயைத்

தடுக்க முடியாமல்

மெளனமாய் அழுது

உருகி உருகி

உயிர் விடும் –

மெழுகுவர்த்தி.

Series Navigation