குகைச் சித்திரங்களின் அவுலியா
ஹெச்.ஜி.ரசூல்

மீசான்கல்லில் பொறிக்கப்பட்ட
சிதிலங்களான வட்டெழுத்துக்களில்
மையத்தாங் கொல்லை மறுக்கப்பட்ட
துயரமான வரலாற்றினோடு
ஒரு அவுலியாவின் வாழ்தல் தொடர்கிறது.சமாதியின் வருத்தங்கள்
தைக்காதெருக்கள்தோறும் படர்கின்றன.
உயிர்சமாதி ஆனவரை
தோண்டிப்பார்க்கப் புறப்பட்ட
ஒரு கடப்பாரையின் முனை
எழுத்துக் கூட்டி
பேனாவாக எழுதத் துவங்கியது.அர்ஷின்வெளியில் அலைந்த
அபாபீல் பறவைகள்
சுடுமண்கற்களை பூமிநோக்கி வீசிஎறிந்தன.
ஒவ்வொரு கற்களும் பிளிறி
யானையாகி திரண்டெழுந்தது.
தூரிகைவண்ணங்கள் சிதற
குகைசித்திரங்களில்
அவுலியாவின் மங்கலான உருவம்
குழந்தை ஒன்றை
அரவணைத்துச் செல்வது தெரிந்தது
வெட்டவெளியில் தனிமைமீற
முதுகில் குத்திட்டு நின்றது
கூர்நுனி வேட்டை அம்பொன்று
——————————————-
அவுலியா – முஸ்லிம் ஞானி