சக மனிதனுக்கு…
கோகுல கிருஷ்ணன்.

சக மனிதா!
வேண்டுகோள்கள் சிலவுண்டு
சற்றே செவி கொடு.
முட்களை மிதிக்காது
கவனமாக நடக்கும்
உன் பாதங்கள்
மலர்களையும்
மிதிக்காமல் நடக்கட்டும்.
சாலையின் முகத்திலல்ல,
சாக்கடையின்
வயிற்றில் உமிழ்.
வழி கேட்கும்
அந்நிய முகத்துக்கு
தொியவில்லை என்பதையாவது
நின்று சொல்லிப்போ.
ரேஷன் அாிசிக்கோ,
முன்பதிவு செய்யவோ
கால்கள் நொந்து,
காலம் கரைத்துக்
காத்திருப்போர் வாிசையில்
குறுக்கில் நுழையாதே.
உயிர்கள் நாளையும்
உலகில் வாழ
பாலிதீன் பைகள்
பயன் குறை.
நீ ஊதும் புகையால்
மற்றவர் நுரையீரலில்
நிகோடின் சேர்க்காதே.
ஓசை காதில் விழா தூரம்
நண்பன் சென்ற பிறகு
அறைந்து சாத்து கதவை.