யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா·பிரெடெரிக் மின்வியெல் பிரான்சு நாட்டின் வடபகுதியான பிரெத்தாஞ் பிரதேசத்தைத் சேர்ந்த லொரியான் நகரத்தில் பிறந்தவர், செங்கீரைப் பருவம் தொடங்கி தண்டுக்கீரையாகும் வரை- பிரான்சிலிருந்தவர். பச்சைத் தமிழர் என்பதுபோல பச்சை பிரெஞ்சுக்காரர். ஆனால் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி, இனி நீ பிரெஞ்சுக்காரனில்லை என்று பிரான்சுநாட்டின் தற்போதைய வலதுசாரி அரசு அறிவித்துவிட்டது. எதிர்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமானது, மனிதருள் வேற்றுமை பாராட்டும் குணம் என கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பிரடெரிக் செய்த குற்றம்? ஹாலந்து நாட்டிற்குச் சென்ற அவர் 1997 ம் ஆண்டிலிருந்து தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்ந்தார், அந்த ஒருவரை ஐந்து வருடங்களுக்குப்பிறகு, அதாவது 2003ம் ஆண்டில் முறைப்படி பதிவு திருமணமும் செய்துகொண்டார். ஹாலந்து அரசு தனது நாட்டின் பிரஜையை மணந்தவருக்கு, அந்நாட்டின் சட்டப்படி குடியுரிமையை வழங்கிவிட்டது. பிரெஞ்சு அரசாங்கமும் தனது 26-07-2006 குடியுரிமைச் சட்டம் 21-2 உட்பிரிவின் படி, பிரெஞ்சு குடியுரிமையுள்ள ஒருவர் சில நிபந்தனைகள் பேரில் தனது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ குடியுரிமை கோர அனுமதிக்கிறது: பிரெஞ்சு குடியுரிமை வேண்டுகிற நேரத்தில் தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் (1) பிரான்சிலென்றால் குறைந்தது நான்காண்டுகள் (2) வெளிநாடுகளிலென்றால் குறைந்தது ஐந்தாண்டுகள். அதன்படி டிசம்பர் மாதம் 2003 அன்று திருமணம் செய்துக்கொண்ட பிரெஞ்சு பிரஜையான ·பிரடெரிக் தான் திருமணம் செய்துகொண்டவருக்காக குடியுரி¨மையைக் கேட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் மனுவைப் பரிசீலித்த அரசு, சம்பந்தப்பட்டவருக்கு அதாவது மனுதாரர் மணமுடித்த நபருக்குக் கொடுக்கவேண்டிய பிரெஞ்சு குடியுரிமையை மறுத்ததோடு, மனுதாரருடைய பிரெஞ்சு குடி உரிமையும் பறித்துக்கொண்டது. நடந்தது இதுதான். மனுதாரராகிய ·பிரெடெரிக் ஓர் ஆண், அவர் ஹாலந்தில் ஒரு பெண்ணை மணந்திருந்தால் பிரெஞ்சு அரசின் சட்டப் படி, அவரது மனைவிக்குக் குடியுரிமைக் கிடைத்திருக்கும், மணந்திருப்பது மற்றொரு ஆணை. எனவே அவரது துணைவருக்குக் கொடுக்கவேண்டிய குடியுரிமையை மறுத்ததோடு அல்லாமல் பிரான்சு நாட்டின் நியதிகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு – விதிப்படி- பிரெஞ்சு அரசாங்கம் ·பிரடெரிக்குடைய குடியுரிமையையும் பறித்துக்கொண்டது.

அரசாங்கத்தின் இம்முடிவுக்கு எதிர்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளென என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் குடியேற்றத்துறை அமைச்சகம், இப்பிரச்சினையை மீண்டும் முறைப்படி பரிசீலிக்க இருப்பதாகவும், ஹாலந்து நாட்டிற்கும்- பிரான்சுக்குமான உறவின் அடிப்படையில் சில விதிகளைத் தளர்த்தி 2009ஆம் ஆண்டு மீண்டும் ·பிரடெரிக்குக்குக் குடியுரிமை வழங்கப்படுமென்றும் உத்தரவாதம் அளித்திருக்கிறது. ·பிரெடெரிக் மின்வியெல், அரசின் இம் முடிவு தனக்குத் திருப்தி அளித்திருப்பதாகவும், ஒரினத் திருமணத்தை அங்கீகரிக்கும் ஹாலந்து நாட்டின் சட்டத்தை பிரெஞ்சு அரசு மதிக்கவேண்டுமென்றும், கேட்டுக்கொண்டிருக்கிறார். கூடுதலாக, நான் கத்தோலிக்கர் பிரிவினைச் சார்ந்தவன், வலதுசாரி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சார்க்கோவுக்கு ஓட்டுப்போட்டவனென்று, புலம்பல் வேறு. சர்க்கோ என்று அழைக்கப்படுகிற சர்க்கோஸி தற்போதைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பிரெஞ்சு மக்களின் ஏகோபித்த வெறுப்புக்கு ஆளாகியிருப்பவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கிற மேற்கத்திய நாடுகளிடையே பல விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் உண்டு. ஜூலை 26, 2006 தேதியிட்ட பிரெஞ்சு குடியுரிமைச் சட்டத்தின் 21-2 உட்பிரிவு அதற்கொரு நல்ல உதாரணம். பிரெஞ்சு சட்டம் ஓரினத் திருமணத்தை ஏற்பதில்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் ஹாலந்து உட்பட ஸ்பெயின், இங்கிலாந்து, பெல்ஜியம் முதலான நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு அளித்த தொலைக்காட்சி பேட்டியொன்றில்(செப்-2006), “ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையேயான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ளவேண்டும், அவர்களின் திருமண ஒப்பந்தங்களை நாம் முறைபடுத்துவதன் மூலம், சமூகம் மற்றும் வருமானவரி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றார். தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதியாக வந்த பிறகு, அவரது அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளாமலிருக்கிறது. வலதுசாரிகளான அவரது கட்சியினரும் அதற்கு ஆதரவானவர்களல்ல. இதற்கிடையில் பசுமை அமைப்பினர் நிருவாகத்தின் கீழிருந்த நகரசபை ஒன்றின் மேயர், இப்படித்தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையே திருமணத்தை நடத்திவைக்க, அத்திருமணம் சட்டப்படி செல்லாதென்று பிரெஞ்சு நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும் பிரான்சில் 60 சதவீத மக்கள் ஓரினச்சேர்க்கை மனிதர்களுக்கிடையான திருமணத்தை ஆதரிப்பதாகக் சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைக் காரணங்காட்டி பிரெஞ்சு குடியுரிமையை தனது சொந்த மண்ணைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கம் மறுக்க, களவாய் உழைத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு உழைப்பதற்கான உரிமத்தை வழங்கி – அப்படி வழங்காதுபோனால் அவர்கள் செய்கிற வேலைகளை செய்ய பிரெஞ்சுகாரர்கள் முன் வரமாட்டார்களென்பதால்- மற்றொரு பக்கம் அரசாங்கம் தனக்கேற்பட்டப் பழியைக் துடைத்துக் கொள்ள முயன்று வருகிறது. இப்போதைக்கு அரசு பறித்த பிரெஞ்சு குடியுரிமையை மீண்டும் 2009 திரும்ப அரசு ஒப்படைக்குமென்பது ஆறுதல்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரான்சில் அந்நியர் குடியேறுவதைத் தடுக்க பிரெஞ்சு அரசு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்துவந்த போதிலும், மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு அந்நியர்கள் வாழ்கிற நாடுகளில் ஒன்றென பிரான்சைக் கருதலாம். அவ்வாறே பிரெஞ்சுக்குடியுரிமைகளுக்கான சட்டங்களும் அத்தனைக் கடுமையானதல்ல. 1999லிருந்து-2004வரை ஐந்து ஆண்டுகளில் குடியேற்ற மக்களில் (ஆசியர்கள், ஆப்ரிக்கர்கள், ஆப்ரிக்க அராபியர்கள்…)பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 410 000 என்று சொல்லப்படுகிறது. இதில் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களும் அடக்கம். இந்தியத் தமிழர்களில் 99 சதவீதம் பிரெஞ்சுக் காலணியாகவிருந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள். இவர்களில் ஒரு சில குடும்பங்கள் 1881 சிறப்பு ஆணையின்கீழ் வெகுகாலத்துக்கு முன்பு பிரான்சுக்கு குடியேறிவர்கள், இவர்கள் பல தலைமுறைகளாக தாங்கள் தமிழர்கள் என்பது உட்பட எல்லாவற்றையும் மறந்து வாழ்பவர்கள். அடுத்து பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் தனது காலனிகளை ஒப்படைத்தபோது, பிரெஞ்சு குடியுரிமையை சுவீகரித்து வந்தவர்கள்.

இந்திய அரசாங்கம், நாட்டிற்கு வந்து போகிற இந்திய வம்சாவளியினருக்கென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறது, அதாவது நீ அரிசியைக் கொண்டுவா, நான் உமியைக் கொடுக்கிறேன் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம் என்பது அக்கொள்கைக்கான எழுதப்படாத விதி. 2005 ஆம் ஆண்டு, அந்நிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டிய பார்வஸி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியப் பிரதமர் இரட்டைக்குடியுரிமையைப்( Dual Citizenship) பற்றி அறிவித்தார். ஆனால் இந்தியக் குடியுரிமைத் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தம் திருப்தி அளிக்கும்படியில்லை. இப்போது Overseas Citizenship of India என்ற சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சொல்வதென்றால் கடல் கடந்த இந்தியர் அல்லது அயல்நாட்டு இந்தியர். 1955ம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட மசோதாவில் (ஜூன் 28,2005), இப்புதிய விளக்கத்தின்மூலம் இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளதைப்போல இந்திய அரசு பாசாங்கு செய்திருக்கிறது. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பிறவற்றில் பல ஆண்டுகளாக வசித்துவரும் இந்திய வம்சா வளியினருக்கு, அவர்களுடைய குடியேற்ற நாடுகளின் சட்டங்கள் அனுமதிக்குமென்றால் OCI அத்தாட்சியுண்டு. பிற நாடுகளில் உள்ளதைப்போன்று இரட்டை குடியுரிமையாக நினைத்துக்கொண்டு OCI வரத்திற்குச் சந்தோஷப்பட முடியாது: முன்பெல்லாம் வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள எங்களைப்போன்றவர்கள் இந்தியா வருவதென்றால் மூன்றுமாதம், ஆறுமாதம், ஒரு வருடமென்று விசா வாங்கவேண்டியிருக்கும், இப்போது ஆயுள் முழுக்க விசா வாங்காமல் வந்துபோகலாம், அது சம்பந்தப்பட்ட துறையை இந்திய பாஷையில் கண்டுகொள்ளவேண்டிய நிர்ப்பந்தங்கள் இனியில்லை, பெரிய சௌகரியமென்றால் இதுதான். அடுத்து நிதி, தொழில், கல்வித் துறைகளில் (விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் நீங்கலாக) சலுகைகள் என்றபேரில் சில காரட்டுகளைக் கையில் பிடித்திருக்கிறார்கள், நாங்கள் ஓடிவருகிறோம்.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 8

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


“ச்சே வெட்கக்கேடு”, என்று எரிச்சலுடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, முகத்திலுங்கூட எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான எலிஸபெத் பதாந்த்தேர் கோபத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. “எல்லாத்தையும் இடிச்சு தரைமட்டமாக்கியாச்சு, பெண்ணுரிமை இன்றைக்குக் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது, இதற்கு மேலே என்ன நடக்கணும்”, என்று. எதிர்க்கட்சியான இடதுசாரி சோஷலிஸ்டுகள் சத்தம் போடுகிறார்கள். “நமது நடைமுறைச் சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால், இம்முடிவினை ஏற்கவே முடியாது”, என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரி கட்சியின் தலைவர் பத்ரிக் தேவெஜ்ஜான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது கட்சியோ, வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராகத் தங்கள் சட்ட அமைச்சர் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறது. பிரச்சினை: திருமண ஒப்பந்ததத்தில் இட்டக் கையொப்பத்தின் மை உலர்வதற்கு முன்பே, ஒரு புதுமணத் தம்பதியரின் கோரிக்கையை ஏற்று பிரான்சு நாட்டின் வடபகுதி நகரமான லீல்(Lille) நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லாது என்று அறிவித்திருக்கிறது.

இத்தனை ரகளைக்கும் காரணம், ஒரு பொய். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம், என்று சொல்வதுண்டு. புரை தீர்ந்த நன்மை பயக்குமென்று, பிரான்சுலே இளம்பெண்ணொருத்தி அவள் திருமணத்துக்காக சொன்னதென்னவோ ஒரு பொய்தான், நடந்து முடிந்த கல்யாணமும் இல்லைண்ணு ஆயுப்போச்சு. ஊருல உலகத்துலே நடக்காததா? யாரும் சொல்லாததா? அப்படியே தெரிய வந்தாலும், பிரான்சுலே இருக்கிறோம், இதைப்போய் பெரிசுபண்ணிக்கிட்டு, என்று சொல்லி நாளைக்குப் புருஷனைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம். கடைசியில், இப்படி ஒரே அடியாக அறுத்துவிடுமென்று அவள் நினைத்திருக்கவில்லை. நடந்தது இதுதான்: “நான் க்ளீண் ஸ்லேட், தப்பு தண்டா எதுவும் பண்ணலையென” தனது கன்னித்தன்மைக் குறித்து திருமனத்திற்கு முன்னே மணப்பெண், பிள்ளையாண்டானிடம் சொல்லியிருந்தாள். திருமணமும் நல்லபடியா முடிஞ்சுது, அதற்கான நேரமும் வந்தது. மாப்பிள்ளை களப கஸ்த்தூரி பூசி, தாம்பூலம் தரித்துப் பள்ளியறைக்கு முஸ்தீபாக வந்தவர், கொஞ்சூண்டு சமர்த்து, கண்டுபிடிச்சுட்டார். தாம் தூமென்று குதிக்கவில்லை, ஆனாலும் தீர்மானித்தவர்போல, இங்கே பாரும் பிள்ளாய்! இனி எனக்கும் உனக்கும் சரிப்படாது, சுமுகமா டூ விட்டுக்குவோம், என்ன சொல்ற, என்று கேட்டிருக்கிறார். பெண்ணுக்கும் மனசாட்சி உறுத்தியிருக்கிறது, தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம் என்றிருக்கிறாள். இருவருமாகக் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களும், ஆமாண்டியம்மா பிள்ளையாண்டான் சொல்றதிலே தப்பே இல்லை, நம்ம சிவில் சட்டம் 180 வது பிரிவு அப்படித்தான் சொல்லுது, திருமணத்திற்கு முன்னே ஆணோ பெண்ணோ இருபாலரில் ஒருவர், மற்றவருக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மணம் செய்திருந்தால், அத் திருமணம் சட்டபடி செல்லாது”, என்று அறிவித்துவிட ஆளுக்கொரு திசைக்காய் சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷத்துடன் பிரிந்ததாகத்தான் செய்தி.

தம்பதியர் இருவரும் இஸ்லாமியர். கடந்த 2006ம் ஆண்டு கோடைகாலத்தில் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் முடிந்த கையோடு, அவர்களுக்கிடையே பிணக்கு வந்திருக்கிறது. தேன் நிலவின்போது இருவருக்குமான முதல் இரவில், தனது நம்பிக்கைக்கு மாறாகவும், இளம்பெண் அளித்திருந்த உத்தரவாதத்துக்கு மாறாகாவும், திருமணத்திற்கு முன்பே அவள் கன்னித்தன்மையை இழந்திருப்பதை, மாப்பிள்ளை அறிந்திருக்கிறார். மறுநாளே நடந்த திருமணத்தைச் செல்லாதென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தில் இளம்பெண், தான் பொய் சொன்னது உண்மை, எனவே திருமணத்தைச் செல்லாது என்று அறிவிப்பதில் தனக்குப் பூரண உடன்பாடு உள்ளதுபோல நடந்துகொண்டிருக்கிறாள். நீதிமன்றமும், ஒரு பொய்யான நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இத்திருமணம் நடந்துள்ளது. இளம்பெண், தான் திருமணமாகாதவள், கன்னித் தன்மையை இழக்காதவள் என்ற சொற்களே, சம்பந்தப்பட்ட பெண்ணை மணப்பதென்ற ஆணின் முடிவுக்குக் காரணம், பிரெஞ்சு திருமணச் சட்டம் பிரிவு எண் 180ன் படி(திருமணத்திற்கு முன்னே ஆணோ பெண்ணோ இருபாலரில் ஒருவர், மற்றவருக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மணம் செய்துகொள்ளுதல் கூடாது) இத்திருமணம் செல்லாதென்று அறிவித்தது. திருமணம், இருவரின் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமையவேண்டும்., நடந்த திருமணத்திற்கோ பொய்யே அஸ்திவாரமாக அமைந்துவிட்டதென்று வழக்குத் தொடுத்திருக்கிற கணவனின் முறையீட்டில் நியாயமிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது, தவிர குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் வேறென்ன வேண்டும் என்கிறார்கள்; பெண், ஆணின் நம்பிக்கைக்குக் கேடு விளைவித்ததின் அடிப்படையிலேயே திருமணம் ரத்து செய்யபட்டிருக்கிறதேயன்றி, அவள் திருமணத்தின்போது கன்னித்தன்மையுடன் இருந்தாளா இல்லையா என்பதின் அடிப்படையிலல்ல என்று தீர்ப்பில் தெளிவாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “திருமணத்தை செல்லாதென்று அறிவிப்பதிமூலம், அதற்கு(திருமணத்திற்கு)ப்பின் சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக நேர்ந்த எல்லா கசப்பான அத்தியாயங்களும் இல்லையென்றாகின்றன, அதாவது மொத்தத்தில் இவர்களிருவருக்கும் திருமணமே நடக்கவில்லை என்பது தீர்ப்பு தரும் உண்மை. விவாகரத்து என்றால், திருமணத்திற்குப் பின் நடந்த அசம்பாவிதங்களைக் கணக்கில்கொள்ளவேண்டும்: திருமணத்தையே மறுக்கிறபோது விவாகரத்து என்ற வழக்குக்கான முகாந்திரமே இல்லை.யென”, விவாகரத்துகோரி வழக்கு தொடுத்திருக்கலாமே, ஏன் திருமணத்தைச் செல்லாதென்று அறிவிக்க வழக்குத் தொடுக்கவேண்டும் என்ற கேள்விக்கு தம்பதியருடைய வழக்குரைஞர்கள்கள் தந்த பதில்.

இத் தீர்ப்புக்கெதிராக கட்சிபேதமின்றி பிரான்சில் பலரும் ஆவேசப்படுகிறார்கள் என்பது வெளிப்படை.. நாட்டின் ஜனாதிபதி நிக்கோலா சர்க்கோஸிக்கு நெருக்கமான, ஆளும் கட்சியின் செய்தியாளர், மக்களின் அடிப்படை உரிமையை இத்தீர்ப்பு பாதிப்பதால் மேல் முறையீடு செய்வது அவசியமென்று கூறியிருக்கிறார். அரசாங்கத் தரப்பில், தீர்ப்புக்கு எதிராக முதற்குரல் கொடுத்தவர் மகளிர் நலம் மற்றும் மகளிர் உரிமைக்கான இணை அமைச்சர் வலேரா லேத்தார், தீர்ப்பைக்கேட்டு தான் கொதித்துப் போனதாகத் தெரிவித்தார், எதற்காக உங்களுக்கு இவ்வளவு கோபம் என பத்திரிகையாளர்கள் கேட்க, ” பின்னே, இப்படியொரு வழக்கும் அதற்கொரு மோசமான தீர்ப்பும் நான் அறிந்து இந்த மண்ணிலில்லை. செய்தி அறிந்ததிலிருந்து, இக்கட்டான இந்த நிலைமைக்கு நம்மை சிக்கவைத்தது எதுவென்று நாள் முழுக்க யோசிக்க வேண்டியிருந்தது. நம்முடைய குடிமுறைச் சட்டம்(Civil Code) தவறாக புரிதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நமது குடியரசின் தார்மீகமான மதிப்பீடுகளை உயர்த்தும் வகையிலேயே சட்டங்கள் இயற்றப்பட்டு அதனைச் செயல்படுத்தியும் வருகிறோம். இக்குடியுரிமைச் சட்டத்தில் ஒரு பெண்ணின் கன்னித்தன்மையும் சேர்ந்துகொண்டது எப்படியென்பதுதான் எனக்குள்ள கேள்வி. சரி ஒர் ஆணிடம் திருமணத்திற்கு முன் இப்படியான கேள்வியுண்டா, அவன் உத்தமனென்றால் அதை நிரூபிப்பது எப்படி. ஆக ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம். ஒரு பக்கம் ஆணுக்கு நிகர் பெண்னென்று சொல்லி எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம், இன்னொரு பக்கம் சட்டத்தை மதிப்பதாகச் சொல்லிகொண்டு, பெண்களின் உரிமைகளுக்குக் கொள்ளிவைக்கிறோம், உரிமை என்பது பெண்சம்பந்தபட்டது அல்ல, ஓர் உயிர் சம்பந்தப்பட்டது, உடல்சம்பந்தப்பட்டது, மனம் சம்பந்தப்பட்டது, நமது அரசியல் சட்டத்தில் சிமோன் வெய் (பெண்ணியல்வாதி, பல முறை அமைச்சராக இருந்தவர்) கூறியதைப் போல மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்., சீற்றத்துடன் வார்த்தைகள் வருகின்றன. பெண்ணியல்வாதிகள், இனவாதத்திற்கு எதிரானவர்கள், வலதுசாரிகள் இடதுசாரிகளென ஒருத்தர் பாக்கியில்லாமல் கண்டனக் குரலெழுப்பியிருந்தார்கள், ஒரே ஒருவரைத் தவிர. அவர் பிரான்சு நாட்டின் சட்ட அமைச்சரும் இஸ்லாமியருமான ரஷீதா தத்தி என்ற பெண்மணி., அவர் “நடந்தத் திருமணத்தை ரத்து செய்ததன் மூலம் நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது, இனி அவர்கள் மறுமணம் செய்துகொள்வதில் தடையேதுமில்லை, குறிப்பாக சம்பந்தப்பட்ட இளம் பெண்ணிற்கும் அவளுடைய திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதில் விருப்பம் இருந்திருக்கிறது, அப்படியில்லையெனில் இவ்வழக்கில் இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கமாட்டாள்”, என்றார். ஆனால் அவர் சார்ந்த அமைச்சரவை சகாக்களும், பிரதமரும், ஜனாதிபதியும் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தடாலடியாக இப்போது, கன்னித் தன்மை பிரச்சினை அடிப்படையில் லீல் நகர நீதிமன்றம் எடுத்த முடிவு நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பிரச்சினை, வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரது பிரச்சினை அல்ல, நாட்டின் பிரச்சினை, எனவே மேல்முறையீடு செய்வதென்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரெஞ்சு மக்கள் பலரும், இத் தீர்ப்பிற்கு எதிராக ஏதேனும் செய்தாக வேண்டுமென்பதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகள், பெண்ணுரிமையாளர்கள், அரசியல்வாதிகள் சட்ட வல்லுனர்கள் பலருக்கும் இப்புதிய தீர்ப்பு முன்னுவமைத் தீர்ப்பாக(Jurisprudense) மாறிவிடுமோ என்று பயம், அதன் விளைவாக நாளைக்கு நாட்டில் பல திருமணங்கள் சட்டப்படி செல்லாமற்போவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டென்பது அவர்கள் வாதம். எதிர்காலத்தில் அதிலும் மேற்கத்திய சூழலில் இதைப்போன்று என்ணற்ற வழக்குகள் வருவதற்கு வாய்ப்புண்டென்றும், திருமண பந்தத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று கருதுகிறார்கள். வழக்கிற்குப் பின்னே திருமனத்திற்கு முன்பாக, இழந்த கன்னித்தன்மையை மறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கிற பிரான்சு நாட்டு இஸ்லாமியப் பெண்களின் எண்ணிக்கை, தீர்ப்பிற்குப் பின்னே திடீரென்று கணிசமாக உயர்ந்திருப்பதாகப் பிரெஞ்சு தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடைய (இஸ்லாமிய) மத நம்பிக்கையினைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது தெளிவு, பிரெஞ்சு குடிமுறைச் சட்டத்தின் பிரிவு எண் 180 ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நீதித்துறையின் முக்கிய பொறுப்பினை வகிக்கும் ஒருவர் எப்பொழுது நீதிமன்றம், வழக்குத் தொடுப்பவரின் நம்பிக்கை சார்ந்த கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பிரச்சினையை அனுமதித்ததோ, அப்பொழுதே அது மதச்சார்பின்மையின்று விலகிப்போனதாகத்தான் கொள்ள வேண்டுமென்கிறார். Ni Putes ni Soumises (Neither Prostitues nor Submissives) என்ற அமைப்பு நாடு தவறான திசையில் பயணிக்க இருப்பதைத்தான், இத்தீர்ப்பு தரும் எச்சரிக்கை என்கிறது. ·பதெலா அமாரா, நகராட்சித்துறை அமைச்சர், இவருமொரு இஸ்லாமிய பெண்மணி, லீல் நகர நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு Fatwa என்றதோடு, இத்தீர்ப்பினைக் கேட்க, ஆ·ப்கானிஸ்தானில் இருப்பதைப்போல உணர்வு, அங்குதான் காந்தகாரில் தலிபான்கள் இப்படியெல்லாம் தீர்ப்பினை வழங்கக் கேள்விப்பட்டிருக்கிறேனெனக் கடுமையாகவே விமர்சித்திருக்கிறார்.

பிரெஞ்சு நீதிமன்றம் குடிமுறைச் சட்டத்தின் அடிப்படையில் பொய்யின் அஸ்திவாரத்தில் உருவாக்கப்பட்டத் திருமண பந்தம் செல்லாது என்று அறிவித்திருப்பது இங்கே விவாதத்திற்குரியதல்ல. மாறாக பெண்ணுக்கான கன்னித்தன்மையை மாத்திரம் கணக்கில் எடுத்துக்கொண்டவர்கள், சம்பந்தபட்ட ஆணின் ஒழுக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்தவில்லையே என்பதுதான் பெண்ணியல்வாதிகளுக்குள்ள கோபம் வருத்தம் எல்லாம், அதை அசலான ஆண்களும் ஆதரிக்கிறார்கள். கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டதாகச் சொல்லி செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது கொடும்பாவி கொளுத்துவது போன்ற காமெடிகளை ரசித்த நமக்கு, மேற்கத்தியரின் மனப்பான்மையை ஆதரிப்பதென்றால் சங்கடமாகத்தான் இருக்கும். பண்பாடென்பது இனம் சார்ந்ததல்ல பகுத்தறியும் மனம் சார்ந்தது. கற்பு நிலை என்று சொல்லவந்தார், இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம் என்று சொன்னது வால்ட்டேரோ, ரூஸ்ஸோவோ அல்ல, பாரதி.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாதவிச்ச வாய்க்குத் தண்ணீர் கேட்டு வந்தவர்களுக்கு விருந்தும் வச்சு ஆனைமேல அம்பாரி நடத்தின கதையா எல்லாம் நடந்திருக்கிறது. மைக் செட் போட்டு, மேளதாளமும், சரவெடியும் மாத்திரந்தான் ஏற்பாடு செய்யலை, மற்றபடி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உரியவகையில் கொண்டாடி இருக்கிறார்கள். இடம்: பாரீஸ் மாநகரம் 20வது arrondissement, சென்னை அகராதிப்படி பாரீஸ் மாநகராட்சியின் இருபதாவது வட்டம், பிரான்சுவாஸ் டொல்ட்டோ என்றொரு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த இருபத்து நான்கு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அதாவது 26-5-2008 அன்று கான் நகரத்தில் நடந்து முடிந்த திரைப்படவிழாவில் கலந்துகொண்டு திரும்பியிருந்தார்கள். ஆனானப்பட்ட திரையுலக ஜாம்பவான்களெல்லாம் விழா மாளிகை வாசலில் விரித்திருக்கும் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கான வரம் கிடைக்காதா என்று தவமிருக்க, திரைப்படத் தேர்வுகுழுவினர் இவர்களுக்கு கம்பளத்தில் நடக்க வாய்ப்பினை அளித்ததோடு, கைகளில் இவர்கள் நடித்திருந்த அல்ல வாழ்ந்திருந்த திரைப்படத்திற்காக உலகின் மிக அரிய திரைப்பட விருதெனக் கருதப்படும் 2008க்கான ‘தங்கக் கீற்றினை’க்(Palm d’Or) கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறன்று (பிரான்சு) கான் நகரத்தில் நடந்து முடிந்த 61வது திரைப்படவிழாவில், அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான சான்ப் பென் தலைமையில் கூடிய தேர்வுக் குழு பிரெஞ்சுத் திரைப்படமான ‘Entre les murs’ (நான்கு சுவர்களுக்குள்)என்ற பிரெஞ்சுத் திரைப்படத்திற்குக் கான் திரையுலக பிரதான விருதான ‘தங்கக் கீற்றினை’ அறிவித்தது. 1987க்குப் பிறகு உயரிய இப்படவிருதினைப்பெற பிரெஞ்சு படவுலகம் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கான் திரைப்பட விருதுகள் அசலான பிரம்மாக்களுக்கு வழங்கப்படுவது. சுண்டல்போல வரிசையில் நிற்கிறவர்களுக்கெல்லாம் வாரி வழங்கப்படும் பிலிம்பேர் அவார்டோ, கலைமாமணி பட்டயமோ அல்ல.

பிரான்சுவா பேகொடோ (Francois Begaudeau) மேலே சொல்லப்பட்ட பிரான்சுவாஸ் டொல்ட்டோ உயர்நிலைப்பள்ளியின் பிரெஞ்சு மொழி ஆசிரியர். கல்வி வட்டாரத்தில், அவ்வப்போது அவர் எழுதும் கட்டுரைகள் வரவேற்பைப் பெற்றிருந்தன. நாவல் ஒன்று எழுதவேண்டுமென்று நினைத்தார். எதை எழுதலாமென யோசித்தபோது உத்திகள், மொழி, வாசகர், பதிப்பாளர் என்கிற எழுத்தாளனைப் பயமுறுத்தும் சங்கதிகள் பற்றிய கவலைகளை ஒதுக்கினார். தனது வகுப்பறையென்ற நான்கு சுவர்களுக்குள் நடப்பதை வெளியுலகோடு பகிர்ந்து கொள்ள நினைத்தவர், பாசாங்கற்ற மொழி, நடிக்காத மனிதர்கள், மிகைபடுத்தாதக் காட்சிகளென்ற செயல் திட்டங்களுடன் தனக்கும் தனது மாணவர்களுக்குமான உறவின் நெகிழ்வை, நெருடலை, சச்சரவுகளை, சமாதானங்களை, முரண்களை, இனிய தருணங்களை அழகாய் என்பதைவிட அசலாய் வெளிப்படுத்தியிருந்த அந்நூலுக்குப் பெயர் ‘Entre les murs’. சொல்லபட்டிருப்பது அவரது அவரது வாழ்க்கையென்றாலும், நம்முடைய வாழ்க்கை என்பதுபோலத்தான் வாசிக்கின்ற நாம் உணருகிறோம். ஓர் எழுத்தாளன் வெற்றி எண்ணிக்கைச் சார்ந்தது அல்ல, அவன் எழுத்து சார்ந்தது என்பதற்கு பிரான்சுவா பெகொடோ மற்றொரு உதாரணம். வகுப்பறை, ஆசிரியர், நிறத்தால் இனத்தால் வேறுபட்ட மாணவர்கள், அவர்கள் பெற்றொர்களென முற்றிலும் மாறுபட்ட உலகம். இந்தியாவின் அத்தனை மாநில மாணவர்களும் சேர்ந்து படிக்கிற சென்னை மாநகராட்சி பள்ளியொன்றின் வகுப்பறை என்று ஒரு சௌகரியத்துக்காக நீங்கள் வைத்துக்கொள்ளலாம். முதல் நாளன்று பள்ளி தொடங்குவதற்கு நேரமிருக்க, காப்பி குடிக்கலாமென நினைத்து காப்பிப்பாருக்குள் நுழைவதும், நேரம் விரயமாக அவசரகதியில் காப்பியை கையிலெடுத்து கொதிக்கக் கொதிக்க விழுங்குவது, சன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தியபடி மாணவர்களைக் கண்காணிப்பது; போதிய மதிப்பெண்களில்லை என்பதற்காக இரண்டாவது வருடமும் மாணவன் ஒருவனை அதே வகுப்பில் நிறுத்திவைக்க, பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு எடுத்த முடிவை அறிந்த தாய் நிலைகுலைந்து போவதென அசலான வாழ்க்கையை நாவலில் பதிவு செய்திருப்பதைப்போலவே திரைப்படத்திலும் அதனை வெளிப்படுத்தியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

லொரான் காந்த்தே (Laurent Cantet) என்ற பிரெஞ்சு இயக்குனர் 2006 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் பிரான்சுவா பேகொடோவைச் சந்தித்து ‘Entre les murs’ (நான்கு சுவர்களுக்குள்) நாவலைத் தாம் திரைப்படமாக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இயக்குனருக்கு நாவலில் வருகிற வகுப்பறை சம்பவங்களுக்கே முக்கியத்துவம்கொடுத்து அழுத்தமாக சொல்லப்படவேண்டுமென்ற அவா. தனது உள்ளக்கிடக்கிடக்கையையும் ஒளிக்கவில்லை, தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் படப்படிப்புக்கான கல்வித் ஸ்தாபதனத்தை தேர்வு செய்வதில் இருவருக்கும் அபிப்ராய பேதம். நாவலில் இடம் பெற்ற பள்ளியிலிருந்து மாற்றலாகி பிரான்சுவா பேகொடோ இப்போது அங்கிருந்து சற்று தூரத்திலிருந்த வேறொரு அரசுப் பள்ளியில் பணிபுரிய தொடங்கியிருந்தார். பழைய பள்ளிக்கு மீண்டும் திரும்பி படபிடிப்பு நடத்துவதை ஏனோ அவர் விரும்பவில்லை. புதிய பள்ளியின் தலைமை ஆசிரியரை விசாரிக்க, நாவலில் இடம்பெறுகிற பள்ளியின் தர வரிசையிலேயே அப்பள்ளியும் அமைந்திருப்பதோடு, பிற காரணிகளும் பழைய பள்ளிக்கு ஒப்பவே இருந்தன: பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கர்கள், ஏழ்மை நிலை, கல்வியறிவில் பின்னடைவு..இப்படி. ஆக நாவலில் வருகிற பள்ளிக்கு, இப்புதிய பள்ளியும் கச்சிதமாகப் பொருந்தியது. நாவலாசிரியரான பிரான்சுவா பேகொடோவையே கதையில் வருகிற பள்ளி ஆசிரியராக இயக்குனர் நடிக்கவைத்தார், ஆகப் படத்தின் ஹீரோ அவர்தான். படத்தின் நாயகி வகுப்பறை. பிற நடிகர் நடிகைகள் பள்ளி மாணவர்கள். இவர்கள் தொழில்முறை நடிகர்களல்லர் என்பது ஒரு பக்கம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இன, நிற அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பது மற்றொரு பக்கம். ஆக பேகொடோ தனது நாவலில் குறிப்பிட்டுள்ள உண்மை அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தும் வகையிலேயே திரைப்படமும் எடுக்கப்பட்டது.

இத்திரைப்படம் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை பிரான்சில் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு பதவியேற்ற வலதுசாரி அரசாங்கம், சீர்திருத்தம் என்ற பேரில் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க தீர்மானித்திருக்கிறது. முக்கிய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுவரை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஊர்வலம் போகட்டும், நான் இறங்கிவரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்த பிரான்சின் கல்வி மந்திரி சவியே தர்க்கோஸ், Entre les murs திரைப்படம் ஆசிரியர்களின் கடும் உழைப்பைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அடுத்து இத்திரைப்படம் அரசாங்கத்தின் வெளிநாட்டினர்மீதான புதிய கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்யும்வகையில் அமைந்துள்ளது. படத்தில் நடித்திருக்கும் சில ஆப்ரிக்க மானவர்களின் பெற்றோர்கள் பிரான்சில் வசிப்பதற்கான உரிய உரிமம் இல்லாதவர்கள். தங்களைக் பிரெஞ்சு அரசு நாட்டைவிட்டு வெளியேற்றக்கூடாது என்று போராடிவருபவர்கள், அவர்களது பிள்ளைகளுக்கும் அதுதான் விதி என்ற நிலைமை. இந்நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள், பிள்ளைகளை மனதிற் கொண்டாவது அப்பெற்றோர்களை நாட்டைவிட்டு அனுப்பக்கூடாதென்று, அரசை வற்புறுத்தி வருகிறார்கள், பள்ளி ஆசிரியர்களும் தங்கள் மாணவ்ர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். திரைப்படத்தின் நாவலாசிரியரும் பள்ளி ஆசிரியருமான பிரான்சுவா பேகொடோவும், படத்தின் இயக்குனர் லொரான் காந்த்தேவும், அத்தகைய பரிதாபத்திற்குறிய மாணவர்களைத் தங்கள் படத்தில் நடிக்கவைத்து உலக அரங்கில் பிரெஞ்சு அரசாங்கத்தின் வெளி நாட்டினர் கொள்கையை இன்றைக்கு கண்டனத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அரசாங்கம் தற்போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பிரச்சினைகளைத் தார்மீக உணர்வுடன் கவனிக்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இத்தனை இக்கட்டை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய Entre les murs படத்தின் தயாரிப்பாளர் வேறுயாருமல்ல, அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு தொலைகாட்சி நிறுவனம்.

பெரும்பாலான பிரெஞ்சுத் திரைப்படங்களைப்போன்றே இத் திரைப் படமும் நாவலை அடிப்படையாகக்கொண்டு, அதன் அகப்பாட்டுக்கு உட்பட்டு வரிபிசகாமல் எடுக்கப்பட்டதென்கிறபோதிலும், பிற திரைப்படங்களில் காணக்கிடைக்காத உண்மையின் கனிவான பார்வைக்கு, தேர்வுக் குழுவினர் மனதைப் பறிகொடுத்ததில் ஆச்சரியமேதுமில்லை. கதையில் இடம்பெறும் பள்ளி மாணவர்களே திரைப் படத்திலும் பங்கேற்றனர். வசனமெழுத நட்சத்திர ஓட்டலில் ரூம் போடவில்லை. வகுப்பறையில் இயல்பாய் எதிரொலிக்கும் உரையாடல்களையே திரைப்படத்திற்கும் பயன் படுத்திக்கொண்டனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வகுப்பறையை மைய்யமாகக் கொண்டு சொல்லப்பட்டிருப்பதற்காக ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தவர்கள் இத்திரைப்படத்திற்கு The Class பெயரிட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான போலிவுட், கோலிவுட் பிரம்மாக்கள் சீச்சி இந்தப்பழம் புளிக்குமென கான் திரைப்படவிழாவைக் குறித்துப் புலம்பிக்கொண்டிருக்க, சிங்கப்பூரிலிருந்து தமிழ்க் குறும்படமொன்று My Magic என்ற பெயரில் போட்டியின் தேர்வில் அனுமதிக்கப்பட்டிருந்தது மகிழ்ச்சி தரும் செய்தி. தவிர வழக்கம்போல இவ்வருடமும் தகுதிச் சுற்றுக்கு தேர்வான ஒரு பிரெஞ்சுப் படம் (la Frontiere de l’aube) குறித்து பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர், சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர் பார்க்கவேண்டியர்களைப் பார்த்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, இடம்பெற்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு. நம்மூர் பிரம்மாக்கள் இந்தப் பிரெஞ்சுத் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு முயற்சித்துப் பார்க்கலாம்.

கான் திரைப்பட விழா நடக்கும் மாளிகையின் கதவு திறக்குமா எனப் பலர் ஏங்கிக் கொண்டிருக்க, அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி கடந்த பிப்ரவரிமாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டில் 61வது திரைப்பட விழா நடந்த அதே மண்டபத்தில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி என்ற பெண் ஐந்தாவது உலகக் கேரம் போட்டியில் மகளிர் பிரிவில் முதலாவதாக வந்து சாம்பியன் பட்டத்தை வென்ற செய்தி பழங்கதையாகிவிட்டது. எதிர்காலத்தில் இந்த இளவழகியை நடிகையாக பாவித்து கான் பரிசை வென்றுவந்ததாக எழுதக்கூடிய அபாயம் தமிழில் நிறையவேயுண்டு. கான் திரைப்பட விழாவில் இவ் வருடம் ‘தங்கக் கீற்று’ பரிசுபெற்ற திரைப்பட பங்களிப்பாளர்களும் சரி, 2008க்கான மகளிர் கேரம் விளையாட்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்ற இளவழகியும் சரி, சராசரி மனிதர்கள், முன்னது உண்மை, பின்னது உழைப்பு. பல நேரங்களில் சிபாரிசுகள் வெற்றிக்கு உதவுவதில்லை.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஒலிம்பிக் விளையாட்டின் வரலாறு ஆதி கிரேக்கர்களின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது, உணர்விலும், பங்கேற்ற விதத்திலும் அந்த நாள் கிரேக்கர்கள், இன்றைய ஒலிம்பிக் நடைமுறைகளினின்று பெரிதும் மாறுபட்டிருக்கின்றனர். இன்றைக்கும் பங்கேற்கும் நாடுகளுக்கு அந்நாடுகளைச் சேர்ந்த வீரர்களால் பெருமை என்பது உண்மையேயெனினும், அக்காலத்தில் மதச் சடங்கென்ற பேரில், கடவுளுக்கான காணிக்கை மற்றும் வழிபாடுகளுள் ஓர் அங்கமாக அது இருந்து வந்திருக்கிறது. தனிமனிதர் வெற்றி தனிமனிதர் சாதனை என்ற உணர்விலிருந்து, தங்கள் சார்ந்த சமுதாயத்தின் மகிழ்ச்சி, கூட்டுச் சாதனை என்ற உணர்வு பெரிதாகப் போற்றப் பட்ட காலம். தவிர உடல் பயிற்சி என்பது கிரேக்கர்களுக்கு முக்கியம்: பலம்வாய்ந்த உடல், மனதை நன்றாக வைத்திருக்குமென்ற நம்பிக்கை. ரோமானியர்கள் இதனையே Mens sana in corpore sano” என்று சொல்ல ஆரம்பித்தார்கள், அதாவது ‘a sound mind in a sound body’.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

என்று தமிழில் திருமூலர் சொல்லவும் படித்திருக்கிறோம். இலியாடில் வருகிற புகழ்பெற்ற ஓட்டப்பந்தயமும், கவிஞர் ஹோமெர் வர்ணணைக்கு உட்பட்ட பரிசுப்பொருட்களையும் நினைவிருக்கிறதா, மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இலியாடில், போட்டி என்பது ஓட்டத்திற்கு மாத்திரமல்ல, கவிதைக்கும் இசைக்குங்கூட நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் தோற்றம், கர்த்தாக்கள் குறித்த புராணக் கதைகளுக்கும் குறைவில்லை. பெலோப், ஹெர்க்குலீஸ் இருவரையும் தொடர்பு படுத்திக் கதைகளுண்டு.

முதல் ஒலிம்பிக் கி.மு. 776ல் நடைபெற்றதாக வரலாறு. ஜேயுஸ் கடவுளின் பேரால் நடத்தப்பட்ட ஆரம்பகால போட்டியில் எலிஸ், பைஸா நகரத்து வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆலயத்தின் பின்புறம் வளர்க்கப்பட்ட ஆலிவ் மரத்தின் இலைகளில் தயாரிக்கப்பட்ட வளையங்கள் கீரிடமாகச் சூட்டப்பட்டன. வீரர்கள் அவற்றைத் தலையிலணிந்தபடி திடலில் சுற்றி வந்திருக்கிறார்கள். நாளடைவில் மற்ற கிரேக்கர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் வழங்கப்பட்ட ரோமானியக் குடியுரிமை, கிரேக்கர் அல்லாதவர்களையும் போட்டியில் பங்கு பெற வைத்தது.

இன்றைய ஒலிம்பிக் போட்டியை நினைவுறுத்தும் ஆரம்ப கால பந்தயங்களில் பன்னிரண்டு நாடுகள் கலந்து கொண்டிருக்கின்றன. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் நிறுத்திவைக்கபட்ட இப்பந்தயம், மீண்டும் 1896ம் ஆண்டிலிருந்து புத்துயிர் பெற்றதெனலாம். 1916, 1940, 1944 உலகப்போர்கள் காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகள் கிடப்பில் போடப்பட்டன. 1948லிருந்து மீண்டும் ஒலிம்பிக் பந்தயம் தொடங்கப்பெற்று நான்காண்டுகளுக்கொருமுறை நடந்து வருகிறது.

1964ல் ஜப்பான், 1988ல் தென்கொரியா, 2008ல் சீனா என்று, ஒலிம்பிக் விளையாட்டினை நடத்தும் பெருமையை மீண்டும் ஆசியா பெற்றிருக்கிறது. பல துறைகளிலும் வளர்ந்து வரும் நாடென்ற வகையில் சீனாவுக்கென்று இருபத்தொன்பதாவது ஒலிம்பிக் விளையாட்டினைத் தேர்வு செய்ததில் நியாயமிருந்தது. ஒலிம்பிக் விளையாட்டினை உலக நாடுகள் பங்கேற்கும் விழாவென்று சொல்லிக்கொண்டாலும், இதுவரை ஐரோப்பியர்கள் அல்லது ஐரொப்பிய வம்சாவளிகளுக்கே அதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் கிடைத்து வந்திருக்கின்றன. ஆக சீனாவில் முதன்முறையாக ஒலிம்பிக் விளையாட்டு என்பது வரவேற்கக்கூடியதே.

ஒலிம்பிக் விளையாட்டில் உலக அரசியலும் அவ்வப்போது எதிரொலிப்பதுண்டு. 1972ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி ம்யூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தின்போது பாலஸ்தீனிய தீவிரவாதிகள், பதினோரு இஸ்ரேல் ஒலிம்பிக் வீரர்களை படுகொலை செய்தனர். 1976ம் ஆண்டு கனடாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 36 ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்கவில்லை. அப்போதைய இனவாத வெள்ளையர் பிடியிலிருந்த தென் ஆப்ரிக்க நாட்டிற்கு தனது ருக்பீ பந்தாட்டக் குழுவை நியூசிலாந்து அனுப்பிவைத்ததை ஆப்ரிக்க அரசுகள் ஏற்கவில்லை. நியூசிலாந்து, ஒலிம்பிக்கில் பங்கேற்பதை அவர்கள் எதிர்த்தனர். 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில், சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான ஆக்ரமிப்பிற்கு ஆட்சேபம் தெரிவிக்கிற வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கலந்துகொள்ளவில்லை. 1952ல் முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட சோவியத் யூனியன் தன் பங்கிற்கு 1984ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த போட்டியில் இடம்பெறாமல் விலகிக்கொண்டது.

சீனாவுக்குத் திபெத்தால் பிரச்சினை, ஒலிம்பிக்கினை முன் வைத்து. மற்றபடி சீனாவால்தான் திபெத்துக்குப் பிரச்சினை என்பது உலகறிந்த செய்தி. இன்றைய திபெத்தின் பரிதாபமான நிலைக்கு ஆங்கிலேயர்களுக்கும் நிறைய பங்கிருக்கிறது. திபெத்தியர் இனம், மொழி, கலாசாரத்தால் சீனர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். திபெத்திய வரலாறு ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திபெத்தும்- சீனாவும் மங்கோலியர் ஆட்சிக்கு உட்பட நேர்ந்ததை இன்றைய பிரச்சினைக்கு ஆரம்பமெனலாம். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தலாய்லாமாவின் நிர்வாகத்தில் திபெத் இருந்து வந்திருக்கிறது. திபெத்திய நிர்வாகத்தை ஒரு மடாதிபதியின் நிர்வாகமென்றே எடுத்துக்கொள்ளவேண்டும், புத்தமத துறவிகளே எல்லாமாக இருந்தனர். திபெத்தையும் லாமாக்களின் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ள Tuesday Lobsang Rampa* எழுதியுள்ள நூல்களை அவசியம் (படித்திராத நண்பர்கள்) வாசிக்க வேண்டும், அவற்றுள் Third Eye மிக முக்கியமானது. அதிலும் புத்தமடத்தில் சேர்ந்து தனது பால்ய வயதில், லாமாக்களால் அவருக்கு மூன்றாவது கண் திறக்கப்படுவதைக் குறித்து எழுதியிருந்ததை வாசித்தபோது, ஏன் இதை எழுதுகிறபோதுகூட உடல் நடுங்குகிறது. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் திபெத்தியர்களின் தலைவிதியை பிரிட்டிஷாரும் சோவியத் யூனியனும் பங்குபோட்டுக்கொண்டு கிழித்ததுபோக, 1908ல் பிரிட்டிஷ் துருப்புகள் திபெத்தைவிட்டுப் புறப்பட திபெத்தியர்களுக்குத் சீனாவால் தலைவலி ஆரம்பித்தது. 1950லிருந்தே திபெத்திற்கு இரண்டு அரசாங்கம். ஒன்று சீனா, மற்றொன்று தலாய்லாமா தலைமையில் இந்தியாவிலிருந்து கொண்டு திபெத்தியர்கள் நடத்தும் அரசாங்கம். திபெத்தை உரிமைகோர சீனாவிற்கு பத்து காரனங்களென்றால் திபெத்தியர்களுக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் வரலாற்றடிப்படையில் இருக்கின்றன. திபெத்தியர்களின் கலாச்சாரவளத்தை திட்டமிட்டே சீனா அழித்து வருகிறது. திபெத்தியர்களின் எதிர்ப்பினை சீனர்கள் ஈவிரக்கமின்றி அடக்கிவருகிறார்கள். லாமாக்களுக்கு விசாரணையின்றி மூன்றிலிருந்து இருபதாண்டுகள்வரை சிறைதண்டனை விதிப்பது சர்வசாதாரணம்.

ஒலிம்பிக் தீபம் தொடரோட்டமாக கொண்டு செல்லப்பட்ட இடங்களிலெல்லாம், திபெத்திய ஆதரவாளர்கள் இடையூறுகள் செய்தார்கள். கடைசியாக எவெரெஸ்ட் உச்சிக்கு முதன் முறையாக ஒலிம்பிக் தீபத்தை கொண்டு சென்று போங்கடா புண்ணாக்குகளா என்று சொல்லும் வகையில் படமெடுத்து சீனர்கள் மேற்கத்திய பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தனர். ஆசியாவின் தாதாவாக இருக்கும் சீனாவிடம் மேற்கத்திய அரசுகளும் சரி, உலகில் ஜனநாயகத்தைத் தன்னை விட்டால் காப்பாற்ற நாதியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் சரி திபெத்துக்காக உரத்தக் குரலில் வக்காலத்தெல்லாம் வாங்கப்போவதில்லை. மாட்டார்கள். எளியாரை வலியார் அடித்தால், வேடிக்கைத்தான் பார்க்க முடியும் விலக்கியா வைக்க முடியும். திபெத்தியர்களாலும், பர்மியர்களாலும் இங்கே யாருக்கு என்ன லாபம். சொந்த நாட்டில் மனித உரிமைக்காக நீட்டி முழக்கமிடும் மேற்கத்திய தலைவர்கள், சீனத் தலைவர்களைப் பார்க்கப்போகிறபோது வாலை சுருட்டிக்கொள்கின்றனர், தைலாபுரம் தோட்டத்தில் எதுவென்றாலும் பேசலாம். கருணாநிதியைப் பார்க்கப் போகிறபோது, பா.ம.க. தலைவர்கள் பவ்யமாக குழைந்து பேசுவதில்லையா அதுபோல. கடுஞ்சொல் தயவைக் கெடுக்குமென்று மேற்கத்தியர்களுக்குத் தெரியாதா என்ன?

மே பன்னிரண்டாந் தேதி சீன நாட்டில் இயற்கை வேறொன்றை எழுதிவைத்திருந்தது. அதைத் தொடர்ந்து கடந்தத் திங்கட்கிழமை சீனாவின் இன்னொரு முகத்தைப் பார்க்கமுடிந்தது. கையறுநிலையில், சொந்த பந்தங்களையும், வாழ்வாதாரங்களையும் இடிபாடுகளுக்கிடையே தேடிச் சோர்வுறும் மக்களை, பூகம்பப் பேரழிவிற்குப்(2) பின்னே தொடர்ந்து பார்த்துவந்த நமக்கு, பலியான உயிர்களுக்கும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் மௌன அஞ்சலிசெலுத்தவென்று, கட்டுப்பாட்டுடன் கலந்துகொண்ட சீனமக்களின் திடங்கொண்ட முகம் அளித்த வாழ்க்கைப் புரிதல் அது. பொருளும், ஆயுதமும் கொடுத்திருந்த வல்லமையும் பெருமிதமும், சிற்சில நொடிகள் பூகம்பத்தில் ஆட்டம் கண்டிருக்கிறதென்ற உண்மையும் அதில் ஒளிந்திருந்தது.

திபெத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கும், ஒலிம்பிக் தீபத்திற்கு உலகமெங்கும் ஏற்பட்ட இடையூறுகளுக்கும், தலாய் லாமாவே காரணமென்று சீனத் தலைவர்கள் குற்றம் சாட்ட, அவர் பலமுறை மறுத்திருக்கிறார். இப்போது நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தலாய் லாமா மீது சீனத் தலைவர்கள் குற்றச் சாட்டினை வைப்பதற்கு முன்பாக அவர் முந்திகொள்ளவேண்டும், நடந்து முடிந்த பூகம்பத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லையென எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஓர் அறிக்கை விடவேண்டும். அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் மேற்கத்திய தலைவர்கள் திபெத்தின் நலன்கருதி அப்படியொரு புத்திமதியைக் அவருக்குக் கூறியிருப்பார்களென்றே நினைக்கிறேன்.

—————————————————————————————————–
1. http://www.lobsangrampa.org/
2. http://www.chine-informations.com/actualite/photos-du-tremblement-de-terre-en-chine-de-mai_9421.html


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஒகேனேக்கல் பிரச்சினையைத் தீர்த்தாகிவிட்டது. இதுபோன்ற பிரச்சினைகளில் தேசிய கட்சிகள் மௌனம் சாதிப்பது தெரிந்ததுதான், உண்மையில் அவர்கள் தேசியக் கட்சி என்ற லேபிளில் இயங்குகிற பிரதேச கட்சிகள், மற்றபடி தேசமாவது மண்ணாங்கட்டியாவது. காங்கிரஸ¤ம், பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்டுகளும், மாநில கட்சிகளுக்குப் போட்டியாக: தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடக பாரதிய ஜனதா, கேரள மார்க்ஸிஸ்ட்டென எதிர்காலத்தில் பிரதேச கட்சிகளென்ற கழுதையாகலாம், காலப்போக்கில் சேலம் காங்கிரஸ், பண்ருட்டி பாரதிய ஜனதா, ஊத்துக்குளி மார்க்ஸிஸ்ட் கட்சியென்று கட்டெறும்பாகவும் தேயலாம். நாடு, மக்கள் நலமென்று பேசும்- தேசமுழுதும் அறியப்பட்ட உண்மையான தலைவர்கள் இன்றில்லை. இங்கே நடிகர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். அத்தனை நடிகர்களும் மேடையேறி (ஒக்கனேக்கல்லுக்காக அல்ல பெங்களூரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால்) உண்ணாவிரதமென்று பாவலாபண்ண வழக்கம்போல மரக்கிளைகளிலும் கட்டிடங்களிலும் தொற்றிக்கொண்டு ஒரு கூட்டம். தமிழ் நாட்டின் ஆபத்பாந்தவர்களும், பாந்தவிகளும் நிற்க; நடக்க; மைக் பிடித்து வீரவசனம் பேச; சிலர் கடனேயென்று உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களில் விஸ்தாரமாகக் காட்டினார்கள், நமக்கு வாயெல்லாம் பல்லு, தமிழர்களுக்கு தண்ணீர் காட்டியாகிவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே, கர்நாடகத் தேர்தல் முடியும்வரை ஒக்கனேக்கல் திட்டத்தை அமைதிக்காப்போம் என்ற பெயரில் நிறுத்தியாகிவிட்டது, கர்நாடாகாவில் காங்கிரஸ் ஜெயிக்கணுமில்லையா? என்ன இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தால் சொந்தங்களுக்கு எதிராக மேடையேறவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்காதே என்று கர்நாடகாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்த்திரை நடிகர்கள் வருந்தும்படி ஆகியிருக்காது, கர்நாடக மாநிலத் தேர்தல் முடிந்த கையோடு எதுவும் நடக்கலாம், திபெத்தியர்கள் சீனாவிடம் நியாயம் எதிர்பார்ப்பதும், தமிழ்நாடு அண்டை மாநிலங்களில் நியாயம் கேட்பதுமொன்றுதான், கம்யூனிஸ்டு காம்ரேட்டுகளைக் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பார்கள்.

நமது இந்தியத் தோழர்களை கைத் தொலைபேசியில் பிடிக்க முடியுமென்றுதான் நினைக்கிறேன். கியூபா தோழர்களுக்கு கடந்த மாதத்தில்தான் அதற்கான வாய்ப்பினை அளித்திருக்கிறார்கள், பிடல் காஸ்றோவிற்குப் பிறகு பட்டத்திற்கு வந்த அவரது சகோதரர் கருணையோடு பிரச்சினையைப் பரிசீலித்ததாகச் ‘கிரான்மா'(கியூபாவின் அதிகாரபூர்வமான செய்திப் பத்திரிகை)சொல்கிறது. க்யூபாவில் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் அனைவருமே ·பிடல் காஸ்ட்றோவின் பந்து மித்திரர்கள் என்பது ஊரறிந்த சேதி, அவர்களில் ஒரு சிலருடைய வீட்டுப் பிள்ளைகள் க்யூபா கால் பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று அவர்களது பரம வைரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போயிருக்கிறார்கள். மைதானத்தில் வீரர்களின் தலையை எண்ணிப் பார்க்க க்யூபா தரப்பில் விளையாட வந்தவர்களில் பலர் காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அமெரிக்காவின் சாண்ட்விச்சிசிடமும், கொகாகோலாவுக்கும் இனி ஆயுள்பரியந்தம் அடிமை என்று பிதற்றுகிறார்களாம். அமெரிக்கா போன பிள்ளைகளோட போனில் பேசக்கூட நமக்கு முடியலையே என்று தோழர்கள் புலம்ப, ராவுல் (Raul- Fidel Castroவின் சகோதரர்- க்யூபாவின் புதிய அதிபர்) மொபைல் போன் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார் (அரசாங்கத்தின் தயவில் இயங்குகிற தொலைபேசிகள் ஒழுங்காக இயங்காததோடு, ஒட்டுக்கேட்கப்படுகிறதாம்). ·பிடல் காஸ்ட்ரோவுடைய பந்து மித்திரர்கள் தயவில் சாதாரண கியூபா வாசியும் இப்போதைக்கு கைத்தொலைபேசி உபயோகிக்கலாம். வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலாச்சா? வெறுங்கையில் எப்படி முழம்போடுவது? அதற்கு பைசா வேண்டுமே, அமெரிக்காவில் வாழும் க்யூபா மக்கள், உதவத் தீர்மானித்திருக்கிறார்களென்று செய்தி.

மீண்டும் ஒக்கனேக்கல் பிரச்சினைக்கு வருகிறேன், இனித் திட்டம் முழுதாக நிறைவேறுமென்று நினைக்கவில்லை. கர்னாடகமோ தமிழ் நாடோ, இதில் பாதிக்கப்படுவது உண்மையில் அப்பாவி மக்கள். அங்கேயும் பந்த் இங்கேயும் பந்த்; அங்கேயும் ஊர்வலம் இங்கேயும் ஊர்வலம்; அங்கேயும் கல்லெறி, இங்கேயும் கல்லெறி. வி.ஐ.பி.க்களுக்கு கவலைகளில்லை, அவர்கள் பெங்களூரில் இருந்தாலென்ன, சென்னையிலிருந்தாலென்ன- அவர்கள் இந்தியர்கள்- பாதுகாக்கப்படவேண்டியவர்கள். நடுத்தரவர்க்கமும், அன்றாடகாய்ச்சிகளும் தமிழன், தெலுங்கன், மலையாளி, பீகாரி என்கிற பிரதேச அடையாளத்துக்குரியவர்கள், அடுத்தவீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபமென்று தமிழில் பழமொழியுண்டு, புதுமொழி அண்டை மாநிலங்களில் நதிகள் ஓடினா, தமிழனுக்கு இலாபம் வெள்ளம். கர்நாடகத் சட்டசபைதேர்தல் முடிந்தகையோடு, பேச்சுவார்த்தை, நடுவர் மன்றமென தமிழ்க் கிளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன இலவுகள்.

மதம், மொழியென்று பிரிவினைகொண்ட மக்களிடையே பிரச்சினைகள் மேற்கத்திய நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய உதாரணம் பெல்ஜியம். இங்கே மூன்று பிரதேசங்கள்:1. டச்சு மொழி பேசும் ·பிளேமிஷ் மக்களைக்கொண்ட ·பிளாண்டெர்ஸ் பிரதேசம் 2. பிரெஞ்சுமொழி பேசும் மக்களினத்தைக்கொண்ட வலோனிய பிரதேசம், இங்கே ஜெர்மானிய மொழி பேசும் சிறுபான்மையினருமுண்டு 3. பிரெஞ்சு- டச்சுமொழிகளென்று இரண்டையும் பேசும் மக்கள் கலந்து வசிக்கிற, பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல் பிரதேசம். ·பிளாண்டெர்ஸ், வலோனியா ஆகிய இரண்டு பிரதேசங்களிலும், இனம் மொழி அடிப்படையிலான தனித் தனி அரசாங்கங்கள் இருக்க, மத்தியில் கூட்டாட்சி. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ·பிளேமிஷ் மக்கள் பெரும்பானமையினராக இருந்தபோதிலும், பிரெஞ்ச் பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டே அவர்கள் இருந்துவந்தனர். இருபதாம் நூற்றாண்டிலிருந்து விழித்துக்கொண்ட ·பிளேமிஷ்மக்கள், தங்கள் மொழி தங்கள் இனம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 1962, 1970 மற்றும் 1980ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசன சட்டதிருத்தங்கள், மொழிவாரி அடிப்படையிலான பிரதேசங்கள் அமையக் காரணமாயின.

இன்றைக்குப் பெல்ஜியத்தில் ஓரளவு இந்தியாவை ஞாபகபடுத்தும் நிர்வாக அமைப்பு. இதில் பிரச்சினை என்னவென்றால், தேசிய சிந்தனைகொண்ட கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்துவிட்டன. அந்தந்த பிரதேசங்களிலும் மொழி, இனவாத கட்சிகளே தேர்தலில் வெற்றி பெறுகின்றன. அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறுவதில்லை. 1958லிருந்தே மத்தியில் கூட்டணி ஆட்சி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குத் தங்கள் தங்கள் பிரதேச நலமே பிரதானம். எப்பொழுது வேண்டுமானாலும் அரசாங்கத்திற்குத் தரும் ஆதரவைக் கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொள்ளலாம் என்ற நிலை. பலமுறை நெருக்கடிக்கு ஆளாகி உரியகாலத்திற்கு முன்பே அரசாங்கம் பதவி விலகியிருக்கிறது. இறுதியாக நடந்து முடிந்த மத்திய பிரதிநிதித்துவ சபையில் ·பிளாண்டர்ஸ் பிரதேசத்து அடிப்படைவாதக் கட்சியான CD&V வெற்றிபெற்றது, கட்சித்தலைவர் ஈவ் லெட்டெர்ம் கொஞ்சம் சா·ப்ட்டான வட்டாள் நாகராஜ், அடித்து நொறுக்கும் வழக்கமெல்லாம் அவருக்கில்லை. ஆனால் வடக்கு(பெல்ஜியத்தின் வடபகுதியிலுள்ள பிரெஞ்சு பேசும் வலோனியா பிரதேசம்)வளர்கிறது தெற்கு(பெல்ஜியத்தின் தென்பகுதியிலுள்ள ·பிளாண்டெர்ஸ் பிரதேசம்) தேய்கிறதென்ற திராவிட பாரம்பரியம். ·பிளாண்டர்ஸ் பிரதேசத்தைப் பெல்ஜியத்திடமிருந்து பிரித்தாக வேண்டுமென்று குரல் கொடுத்தவர், அவர் கட்சி ஆளுகின்ற ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்தில், டச்சு மொழி தெரியாதென்றால் உள்ளெ நுழைய முடியாது, அதாவது இந்தியாவில் கன்னடம் மட்டுமே தெரிந்த ஆசாமி சென்னையில் வசிக்க முடியும் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த ஒருவர், பெங்களூருவில் வாடகைக்கு வீடுபிடிக்கலாம், ஆனால் பெல்ஜியத்தில் பிரெஞ்சும்- டச்சும் அரசாங்க மொழிகளென்றாலும், ·பிளாண்டெர்ஸ் பிரதேசத்திற்குள் டச்சுமொழி தெரியாதவர்களுக்கு இடமில்லையென ஈவ் லெட்டர்ம் கட்சியினர் ஆளும் ·பிளாண்டர்ஸ் பிரதேச இனவாத அரசாங்கம் அறிவித்திருந்தது.

மத்திய பிரதிநிதித்துவ சபைக்கான தேர்தல் வந்தது, அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சி என்ற வகையில் பெல்ஜிய நாட்டை ஆளுவதற்கான வாய்ப்பு CD&V க்கும் கட்சியின் தலைவரான ஈவ் லெட்டர்முக்கும் வாய்த்ததென்றாலும், அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிரிகளிடம் கைகோர்க்கவேண்டிய கட்டாயம், அரிசி ஆழாக்கிலிருந்தாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டுமில்லையா? பிரெஞ்சு பேசும் வலோனியப் பிரதேசத்தினரோ கதவடைத்தனர். அரசியல் சாசன விதிப்படி அமையவிருக்கும் அரசாங்கத்தையும் தடுக்கவும் முடியாது, இருதரப்பாருக்குமிடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. கடந்த ஒன்பதுமாதங்களில் இரண்டு முறை ஈவ் லெட்டர்ம் தலைமையிலான கூட்டணி அரசு, பால்காய்ச்சிய கையோடு பதவி விலகிவிட்டது. மூன்றாவது முறையாக அவரை ஆட்சி அமைக்கும்படி பெல்ஜியப் பேரரசின்(?) மன்னர் இரண்டாம் அல்பெர் கேட்டுக்கொள்ள, ஈவ் லெட்டர்மை பிரதமராகக்க்கொண்ட கூட்டணி அரசு பதவி ஏற்றிருக்கிறது. ஈவ் லெட்டர்மின் கடிவாளம், அவரது கட்சியின் கையிலிருக்கிறது. அவர்கள் பெல்ஜிய மத்திய அரசு, ·பிளாண்டர்ஸ் பிரதேசத்திற்கு இதுவரை இழைத்த அநீதிகளை நேர்செய்ய சலுகைகள் எதிர்பார்க்கிறார்கள், அதற்காகத்தான் எங்கள் கட்சியின் தலைவரைப் (ஈவ் லெட்டர்ம்) பிரதமர் பொறுப்பேற்க அனுமதித்திருக்கிறோம் என்கிறார்கள், இயாலாதெனில் ·பிளாண்டர்ஸ் தனிநாடாகப் பிரிந்தாகவேண்டும் என்கிறார்கள். ஈவ் லெட்டெர்ம் எதிர்ப்பாளர்கள் மத்திய கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்பதற்குமுன்பு பெல்ஜியத்தின் தேசியகீதத்தைத் அவர் பிழையின்றி பாடட்டும் என்கிறார்கள். பிரெஞ்சு மொழியிலிருக்கிற தேசிய கீதத்தைப் பிழையின்றி பாடுவதற்கு அவருக்கு வரவில்லையாம். அவரோ பெல்ஜியத்தின் தேசியகீதத்தை எங்கள் டச்சு மொழியில் பிழையின்றி பாட வலோனிய பிரெஞ்சு மக்கள் முன்வருவார்களென்றால், நானும் பிரெஞ்சு மொழியிற் பிழையின்றி பாடத் தயாரென்று அறிவித்திருக்கிறார்.

ஒக்கனேக்கலுக்கும், பெல்ஜியத்துக்கும் என்ன சம்பந்தமென்று கேட்கறீங்க, அப்படித்தானே? வெள்ளைக்காரன் தங்கள் மக்கள் நலனிற்காக, சொந்த நலனை அவசியமெனில் விட்டுக்கொடுப்பான். நாம எப்படி? அதை நீங்கதான் சொல்லணும்.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா1941. பெயர் மிஷா, ஏழுவயது யூதச் சிறுமி, பள்ளிக்குச் சென்று திரும்பிவந்து பார்க்க பெற்றோர்கள் நாஜிகளால் சிறைபிடிக்கபட்டு முகாமுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் அந்த யூதர்களுக்கான வதைமுகாம் இருப்பதாகச் சொல்கிறார்கள். தனது பெற்றோரை எப்படியாவது சந்திக்க வேண்டுமென்று துடிக்கிறாள். அவர்களைத் தேடி பெல்ஜியத்திலிருந்து புறப்படுகிறாள், முதலில் உக்ரெய்ன், ஜெர்மனி, போலந்து…என்று கடந்து வதைமுகாமைக் கண்டுபிடித்தாக வேண்டும். வழியெங்கும் இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம், மேற்கிலிருந்து கிழக்காக 3000 கி.மீ பயணித்தாக வேண்டிய கட்டாயம். ஒத்தாசைக்கு நம்பகமற்ற பழைய திசைகாட்டி.

உணவையும், உடைகளையும் திருடினாலன்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதென்பதுபோல நெருக்கடிகள், திருடுகிறாள். மனித மிருங்கங்களிடமிருந்து தப்பித்தாலன்றி உயிர்பிழைக்க முடியாதென்பதுபோல ஆபத்துகள், தப்பிக்கிறாள். ஓநாய்கள் கூட்டத்தில் ஒருத்தியாக வாழவேண்டிய கட்டாயம், வாழ்ந்து நம்மை வியப்பிலாழ்த்துகிறாள். துள்ளித்திரிந்து, குடைபிடித்ததுபோல கால்பாவி, விளையாட்டாய் சலசலக்கும் உடல்மொழி சிணுங்கலில் அடிநாதமாக சிறுமியின் உடலிலும் மனத்திலும் கசிகின்ற வலியும், வேதனையும், துன்பமும், மகிழ்ச்சியும், குறும்பும், சிரிப்பும் ஓர் மழைக்கால சிலுசிலுப்பு. அவ நம்பிக்கைக்கள் கேள்விகளாக உருப்பெற்று கால்கள் புதைய பனிப்பாலையில், கடுங்குளிரில், உடலை முன் வளைத்து நடக்கிறபோதும் சரி, அடர்த்தியான காட்டில் ஓநாய்களுடன் ஒருத்தியாய் வலம்வந்து குதூகலிக்கும்போதும் சரி மிஷாவாக நடிக்கிற சிறுமி மத்தில்து கொ·பார்ட், இயல்பாய் பாத்திரத்திரத்திற்குப் பொருந்தி நம் அன்பையும் அனுதாபத்தையும் சம்பாதித்துக்கொள்கிறாள். வாலைத் தாழ்த்தி உடல்குறுக்கி, சிறுமியை அணைப்பில்கொள்ள முனைவதுபோல நெருங்கி அன்பைவெளிப்படுத்தும் காட்டிலுள்ள ஓநாய்களிடம் மனிதருக்கு வேண்டிய குணமும்; அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் என்ற நான்கின் வெளிப்பாடாக நாட்டிலுள்ள மனிதர்களிடம் விலங்குகளின் குணத்தையும் பார்க்கிறோம்.

‘ஓநாய்களுடன் வாழ்ந்து உயிர்பிழைத்த அனுபவம்(1)’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பினைப்பெற்ற திரைப்பட அனுபவத்தையே மேலே தந்திருக்கிறேன். இக்கதை இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஒரு யூதச் சிறுமிக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவமென்று சொல்லப்பட்டது. மூலக்கதையைச் சம்பவத்தின் சூத்ரதாரியான சிறுமியே வளர்ந்து பெரியவளானதும் உண்மைக் கதை என்ற பெயரில் எழுதியிருந்தார், வெளிவந்த ஓரிருமாதங்களிலேயே அத்தனைப் பிரதிகளும் விற்று தீர்ந்தன, பதினெட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் விற்பனையில் சாதனை புரிந்தது. நூலை வாசித்தவர்களும் சரி, அதைத் திரைப்படமாகப் பார்த்தவர்களும் சரி உருகிப்போனார்கள். நூல் வாசிப்பில் நிழலாக சிறுமியின் அனுபவங்களை உணரமுடிந்தவர்களுக்கு, திரையில் தத்ரூபமாக காட்டப்பட்ட அசலான காட்சிகளில் மனதைப் பறிகொடுத்து கண்கலங்கியிருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள்: முதலாவது, இக்கதை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டதென்கிற நம்பிக்கை. இரண்டாவது மனித மனங்களுக்கு சொந்த சந்தோஷங்களைக் காட்டிலும் அடுத்தவர் துக்கங்கள் விருப்பமானவை, என்ற அசலான காரணம்.

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று படித்திருக்கிறோம். ஆனால் மேற்கத்திய பதிப்பகங்களுக்கு வறுமையைக் காட்டிலும், இளமைக்காலத்தில் பட்ட வேறுவகை துன்பங்களில் சுவாரஸ்யம் இருக்குமென்றால் அதைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஒரு முறை பிரான்சிலுள்ள புகழ்பெற்ற பதிப்பகத்தைத் தேடி வந்த நபர், தான் இளமையிற் பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்லி அதை விபரமாக எழுதியிருக்கிறேன், பதிப்பிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார், கதையைக்கேட்ட பதிப்பாளர் உருகிப்போனாராம், அதிலும் அந்நபர் ஆப்ரிக்க அரச குடும்பமொன்றின் வாரிசென்று சத்தியம் செய்ய, பதிப்பாளர் மனம் கொஞ்சம் கூடுதலாகவே இளகியிருக்கிறது. நல்ல காரியத்தைச் செய்யவென்றே சிலரிருப்பார்கள். அவர்களிலொருவர், “எதற்கும் உண்மையென்னவென்று அறிந்த பிறகு, காரியத்தில் இறங்கலாம்”, என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். பதிப்பாளர் தமது பத்திரிகையாளர்களை அனுப்பி விசாரிக்கவும் அப்படியொரு ஆளே இல்லையென்று பதில் வந்திருக்கிறது. மார்கெரித் துராஸ் என்பவர் சமீபத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், 1996ம் ஆண்டு இறந்தார். பிரெஞ்சு மொழி அகாடெமியில் அங்கம் வகித்தவர். அவரது படைப்புலகம் என்பது சொந்த வாழ்க்கையின் மறுபதிப்பு என்றே பெரிதும் நம்பப்பட்டது. வாசிக்கிற எவருக்கும் அவரது சொந்த வாழ்க்கை இலக்கிய வடிவம் பெற்றதாகத்தான் நினைப்பு, ஆனால் அவரது சுயவரலாற்றை எழுதிய ழான் வல்லியே (Jean Vallier) உண்மை என்ற பேரில் துராஸ் நமது நம்பிக்கைகளுக்கு மாறாக நிறைய கட்டுக்கதைகளைச் சேர்த்திருப்பதாகச் பிரெஞ்சு இலக்கிய திங்களிதழொன்றிர்க்கு அளித்த செவ்வியில் கூறியிருக்கிறார்.

‘ஓநாய்களுடன் வாழ்ந்து உயிர்பிழைத்த அனுபவம்’ நூல்வடிவில் வந்தபோது சந்தேகங்கள் எழவில்லை. ஆனால் திரைப்படமாக வந்தபிறகு பல கேள்விகள் எழுந்தன. ஓநாய்கள்பற்றிய அறிவியலில் போதிய அளவு ஞானங்கொண்ட மருத்துவரொருவர், நூலை எழுதிய ‘மிஷா டெ·பொன்ஸ்கா’ சொல்லியிருக்கிற பல தகவல்களை அறிவியல் ரீதியாக மறுக்கிறார். ஒநாய்கள் இயல்பிலேயே மூர்க்க குணம்கொண்டவையென்றும், அவைகளோடு அதிக நாட்கள் வாழ்ந்து உயிர்பிழைத்திருப்பதென்பது கற்பனைக்கு உதவலாமேயொழிய உண்மைக்கு உதவாது என்றார். தவிர நூலில் சொல்லியிருப்பது போன்று சிறுமி பறவைகளைக் கடிப்பதும், எலும்புகளை மெல்வதும் அபத்தம், நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொன்னார். இதற்கிடையில் நூலாசியருக்கும் அவரது அமெரிக்க பதிப்பாளருக்கும் வெகு நாட்களாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அப்பதிப்பாளர் பெண்மணியின் நதிமூலத்தைத் தேடியிருக்கிறார். நூலாசிரியர் பிறந்ததேதி 1937 என்று தெரிய வந்திருக்கிறது. இப்புதிய ஆதாரத்தின்படி இரண்டாம் உலகப்போரின்போது உண்மைக்கதை சிறுமிக்கான வயது நான்கேயன்றி அவர் எழுதியிருப்பதுபோல ஏழு அல்ல. தவிர உக்ரெய்ன் காடுகளில் ஓநாய்களுடன் அச்சிறுமி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட காலங்களில் பெல்ஜிய மழலைப் பள்ளியொன்றில் பாபா பிளாக் ஷீப் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். இப்படிப் பூதங்கள் புறப்பட்டுக்கொண்டிருக்க, பெல்ஜியத்திலிருந்த யூத அமைப்பு தம் பங்கிற்கு சிலவற்றை மறுக்கிறது. உதாரணமாக பெல்ஜியத்தில் யூதர்களை சிறைபிடித்ததும் வதைமுகாமிற்கு அனுப்பியதும் 1942ம் ஆண்டு ஆகஸ்டுமாதமேயன்றி நூலில் குறிப்பிட்டிருப்பதுபோல 1941ல் அல்ல என்கிறார்கள். இறுதியாக நூலாசிரியரான பெண்மணியும், “தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிக்கணும்”, என்பதுபோல “நீங்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல என்னுடைய உண்மையான பெயர் மிஷா டெ·பொன்ஸ்கா இல்லை மோனிக் தெ வீல், நான் எழுதியைதை உண்மையென்று நம்பிய உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெற்றோர்கள் சொந்தபந்தங்களென எல்லாவற்றையும் இழந்து தெருவில் நின்ற நா¡ன்கு வயது சிறுமியின் நிலைமையை எண்ணிப் பார்த்தீர்களெனில் நிலைமை விளங்கும். எனது வேதனைகளுக்கு நிவாரணம் தேடிக்கொள்ளவே இப்படியொரு புனைவினை கற்பிதம் செய்தேனேயன்றி வேறு காரணங்களில்லை” என்று கண்ணீர் சிந்துகிறார். பெண்களுக்குப் பொய்சொல்லும் சாமர்த்தியம் குறைவென்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாகவே எழுத்தாளனுக்கும், பேச்சாளனுக்கும் சொல்வன்மை போதும். அரசியல்வாதிக்கு இரண்டுமே தேவையில்லை அதிகாரமிருந்தால் போதும், அவன் சொல்வதனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. கடந்த காலத்தில் திருடுவதற்கென்று வீடு புகுந்திருப்பான், தலைவரானபிறகு தலைமறைவு வாழ்க்கையென்று சுயவரலாறு எழுதுவான். பல சுயவரலாறுகள் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்டவை. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால், மெய்போலும்மே மெய்போலும்மே! ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி படையெடுப்பதும், பொய்யை உண்மையாகச் சித்தரித்து எழுதுவதும் ஒன்றுதான். சம்பந்தப்பட்ட நமது மனசாட்சிகளன்றி வேறொருவர் விரல்காட்டுவதற்கான சாத்தியங்களே இல்லை. சுயவரலாறுகள் என்று எழுதப்படுபவையும், சொந்த அனுபவங்களென நினைவுகூறப்படுபவையும், பல நேரங்களில் மிகைபடுத்தப்பட்ட புனைவுகளாக, தெருக்கூத்துகளில் நள்ளிரவுகளில் திரைவிலக்கி குதிக்கிற அரிதார கூத்தாடிகளை நினைவுபடுத்துவதுண்டு, விடிந்த பிறகு அம்முகங்களைப் பார்க்கவேண்டுமே!


1. Survivre Avec les Loups (A memoire of the Holocaust )

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாஎன்ன இருந்தாலும் அந்தக்காலம் போல வருமா? என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கிற பெருசுகளை திருப்தி பண்ணனுங்கிறதுக்காகவே நடந்திருக்கணும். நாள் 24-4-2008, சம்பவம் நடந்த இடம் பிரான்சு நாட்டின் மேற்கிலுள்ள உலகப் புகழ்பெற்ற மர்செய் துறைமுகப்பட்டினம். 1930லிருந்து -1960 வரை அமெரிக்காவின் நிழல் உலகத்தை ஆட்டிப்படைத்ததில் மர்செய் விருமாண்டிகளுக்குப் பெரும்பங்குண்டு. சிரியா, துருக்கி, இந்தோ- சீனவிலிருந்து மார்·பினை இறக்குமதிசெய்து அதை ஹெரோயினாக புடம்போட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து தாதாக்களுக்கெல்லாம் இலக்கணம் கற்பித்த போல்கர்போன்(Paul Carbon) விட்ட அம்பில் அமெரிக்கா தூக்கமின்றி தவித்ததும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்ஸன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரான்சு தீவிர நடவடிக்கையெடுத்து தாதாக்களை களையெடுத்ததும் வரலாறு. எழுபதுகளில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட பிரெஞ்சு கனெக்ஷன் திரைப்படத்தை எப்போதாவது பார்க்கநேர்ந்தவர்களுக்கு (மர்செய்) ஸ்தல மகிமை புரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை என்பது மாதிரி, ஸ்தல பெருமையைக் காப்பாற்ற அப்போதைக்கப்போது ஏதாவது நடக்கத்தான் செய்கிறது.

இந்தியச் செய்தித்தாள்கள் இப்போதெல்லாம் தங்கள் நிருபர்களைச் செய்தி சேகரிக்கவென்று எங்கும் அனுப்பவேண்டாம் என்று நினைக்கிறேன்: சாலைவிபத்து, பா.மா.கா எதிர்ப்பு, வைகோ அறிக்கை, தே.தி.மு.க. கேள்வி, அ.தி.மு.க. ஆர்பாட்டம், மார்க்ஸிஸ்டுகள் போராட்டம், முதல்வர் கையெழுத்தென்று தலைப்புகளில் அவ்வப்போது சில சொற்களையும், தேதிகளையும் மாற்றிக்கொண்டால் போதும் நாளிதழ் ரெடி. இதற்கு முந்தைய வியாழக்கிழமை அதாவது 24-04-08 அன்று தமிழ் தினசரியொன்றில் மேற்கண்ட வழக்கமான புலம்பல்களுக்கிடையே தசாதாவரம் கேசட் வெளியீட்டுக்கு ஜாக்கிசான் வருகை என்றொரு சுவாரஸ்யமான செய்தி. நிருபர்களிடம் அமிதாபச்சனா யார்? சென்னை தண்ணீரா? வேண்டாம், என்று அவர் திருவாய் மலர்ந்ததாகத் தகவல். அடுத்த மாதம் ஹாங்காங்கில் கொஞ்சம் மாற்றிக் கேட்டா¡ல், கமலஹாஸனா யார்? தமிழ் சினிமாண்ணு ஒன்றிருக்கா? என்று அவர் மறுபடியும் ஆச்சரியப்படக்கூடும். தேவையா? திரைப்படப் பாடல் வெள்¢யீட்டிலெல்லாம் ஒரு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அதிசயம் உலகில் வேறெங்காவது நடப்பது சாத்தியமா என்பது இருக்கட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் சத்தியமாக நடக்காது. ஆனால் பிரான்சில் மர்செய் புறநகரில் கடந்த 24-04-08 நடந்ததாகப் படித்த சம்பவம் அதைவிடக் கொஞ்சம் சுவாரஸ்யமானது:

இரவு எட்டுமணி. விட்டகுறை தொட்டகுறைண்ணு குளிர்காலம் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாதம், எழுநூறு மீட்டர் நீளமுள்ள கூட்ஸ் இரயிலில் வழக்கம்போல தனியொரு ஆளாக எஞ்சின் டிரைவர், கைகளை அதன்போக்கிலே அலையவிட்டபடி அமர்ந்திருந்தார். பாதையில் பிரச்சினையில்லை என்பதன் அடையாளமாக சமிக்ஞை விளக்குகள் பச்சை வண்ணத்தில் கண் சிமிட்டுகின்றன. புறப்படுவதற்கு முன்னால் அலுவலகத்திற்குச் சென்று தேவையான தகவல்களை ( விதிமுறைகளில் உள்ள புதிய மாற்றம், கடைசி நிமிடத்தில் பாதையில் ஏதேனும் மாற்றமிருந்தால் அதைப்பற்றிய தகவல்கள், ஓட்டவிருக்கும் இரயில் எஞ்சின் குறித்த தகவல்கள், டேஷ்போர்டு பற்றிய ஆவணங்கள்) ஒரு முறை புரட்டிவிட்டு, கையில் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டிருந்தார். இன்னும் முப்பது கி.மீ தூரம் ஓடினால் வேலை முடிந்தது, வழக்கம்போல அலுவலகத்தில் கையிலிருப்பதை ஒப்படைத்துத்துவிட்டு, ஸ்டேஷனின் காத்திருக்கும் சமீபத்திய காதலியை ஆரத்தழுவி அவசரமாய் ஒர் இருபது சதவீத காதலை வெளிப்படுத்திவிட்டு மற்றதை உறங்காமலிருந்தால் பின்னிரவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். இரண்டு வாரமா எதிர்பாத்துக்கொண்டிருக்கேன், என்னை மறந்திடாதய்யாண்ணு, சின்னவீடு கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியிருத்த சந்தோஷம் மனசிலும் உடம்பிலும் எக்குத்தப்பா என்னென்னவோ பண்ணுது. வண்டியின் வேகம் நிதானத்திற்கு வந்திருந்தது. தூரத்தில் நிலவொளியில் தண்டவாளத்தில் நிழலாய் ஏதோ கிடக்கிறது, மனப்பிராந்தியோ என்று ஒதுக்கினார், ஆனால் நெருங்க நெருங்க பொதியாய்க் கிடந்த நிழலுக்கு, வடிவம் கிடைத்திருந்தது. மரக்கட்டைகளும், உலோகங்களும், தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கின்றன. மூளை விடுத்த எச்சரிக்கையை, கைகள் புரிந்துகொண்டு எஞ்சினை நிறுத்த ஒரு சில வினாடிகள் பிடித்தன. எஞ்சினை விட்டு இறங்கிய ஓட்டுனர் அதே அவசரத்துடன் எஞ்சினுக்குள் ஏறி கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. காரணம் தண்டவாளத்துக்கருகே காத்திருந்த கொள்ளையர் கும்பல். ஷோலே காலத்து கொள்ளையர்பாணி. தகவலைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(?) காத்திருந்தார். வந்த கும்பல் மளமளவென்று காரியத்தில் இறங்கியது. முதலாவது கண்டெய்னரின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; இரண்டாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள் ஒன்றுமில்லை; மூன்றாவதின் பூட்டை உடைத்தார்கள், கதவைத் திறந்தார்கள், ஒன்றுமில்லை; நான்காவது; ஐந்தாவது…ம்; இதென்னடா சோதனைண்ணு இஷ்டப்பட்டத் தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஆறாவது கண்ட்டெய்னரின் பூட்டை உடைத்து கதவைத் திறந்ததில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்படி இருக்கவேண்டிய எலெக்ற்றானிக் பொருட்கள் இல்லையாம், இரவு நேரத்தில் கடவுள்மார்களின் நித்திரையைக் கலைத்ததின் பலனோ என்னவோ, இங்கே பரியை நரியாக்கிய கதையாக எலெக்ற்ரானிக் பொருட்களுக்குப் பதிலாக அத்தனையும் தலையணை உறைகள்-ஏமாற்றம். தகவல் கிடைத்து போலீஸ¤ம் வந்துவிட, காரில் ஏறி கொள்ளையர் கூட்டம் பறந்திருக்கிறது. நம்ம கூட்ஸ் டிரைவர் ஒரு மணி நேரம் கழித்து வண்டியை எடுத்துபோய் நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தி, மற்ற அலுவல்கலையும் முடித்துவிட்டு காதலியைத் தேடி அலுத்துபோனது குறித்து வேண்டுமானால் ஒரு கதையாக்கலாம். ஆனால் கொள்ளையர்கள் எதிர்பார்த்த கூட்ஸ்வண்டி அடுத்த அரைமணி நேரத்தில் எலெக்ற்றானிக் பொருள்களுடன் அவர்கள் காத்திருந்த பாதையிலேயே போயிருக்கிறது.

உலகமெங்கும் விலையேற்றம் இன்றைக்கு விபரீத பரப்பில் கால் வைத்திருக்கிறது. நடுத்தரவரக்கம் ஏழைகளாகவும், ஏழைகள் தரித்திரர்களாகவும் உருமாற்றம் பெறுவதற்கு உலகமயமாக்கம் தன்னாலான கைங்கர்யதைச் செய்துவருகிறது. மேற்கண்ட மர்செய் கொள்ளை முயற்சியைப் படித்தபோது உலகமயமாக்கலை நினைத்துக்கொண்டேன், அதுகூட அப்படித்தான். இப்படி எதையோ எதிர்பார்த்து கொள்ளை அடிக்கவந்தவர்கள் ஏதேதோ கதவுகளைத் திறந்துப்பார்த்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கிறார்கள், சரி ஆறாவது கதவு? கடைசியில் சொல்கிறேன். முதன் முதலில் உலகமயமாக்கல் என்ற சொல்லை உருவாக்கியவர்களின் மனதில் வேறு கனவுகள் இருந்தபோதிலும் உலகில் ஒரு மூ¨லையில் இருக்கிற மனிதனின் அறிவும், செயல்பாடுகளும், மறுகோடியில் இருக்கிற மனிதனின் தேவைகளுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்ளக்கூடுமென்று உத்தரவாதம் அளித்தனர். அதன் இயங்கு துறைகளென்று அரசியல், பொருளாதாரம், கலை பண்பாடென்று சித்தரிக்கப்பட்டது. உண்மையில் உலகமயமாக்கல் மூலம் தாங்கள் சிம்மாசனத்தில் அமரலாம் என்று மனப்பால்குடித்த மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் கன்னத்தில் கைவத்துக்கொண்டு சோர்ந்திருக்கின்றனர். இதில் இலாபம் பெற்றது சீனா. உலகமயமாக்கல் மூலம் உலகச்சந்தையை வளைத்துபோடலாம் என்று கனவுகண்ட மேற்கத்திய மற்றும் அமெரிக்க பணமுதலைகள், கம்யூனிஸ போர்வையில் சீனாவென்ற ஒற்றை முதலாளித்துவம் விஸ்வரூபமெடுக்குமென்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே சீனாவின் உற்பத்திக்கூலி அதாவது அதிற் பங்கேற்கும் மனித சக்திக்கான ஊதியம் உலக அளவில் மிகக்குறைவானது. இந்தியாவில் ஏரியில் தூர் வாரவேண்டும் என்றால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடத்தும் மக்களைப் பார்க்கிறோம். ஆனால் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை வெளியேற்றவேண்டிய கட்டாயத்தில் உருவாகும் சீன நாட்டின் Three Gorges அணைக்கு எதிராக ஒரு காக்கை குருவி கூட அங்கே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பேருதான் கம்யூனிஸ சுதந்திரம். சீனாவில் அரசாங்கம் தீர்மானித்ததுதான் ஊதியம், கொடுப்பதுதான் கூலி, தவிர எல்லா கம்யூனிஸ்டு நாடுகளையும் போலவே வளர்ந்து வரும் நாட்டின் சுபிட்சங்களை அனுபவிக்கிறவர்கள் ஏழை சீனர்கள் அல்லர், கட்சித் தலைமையின் உறவினர்கள். சீன அரசாங்கத்திடம் பொதுவுடமை பேரால் குவிந்திருந்த தேசியச் சொத்துக்களை, முதலாளித்துவ கட்டமைப்புக்கு எழுதிகொடுத்தபோது சீன அரசே ஒரு இராட்சத முதலாளியாக அவதாரமெடுத்தது. தவிர பசுத்தோல் போர்த்திய புலியின் இப்புதிய அவதாரம், இதுவரை அரசின் பொறுப்பில் வைத்திருந்த மக்களுக்கான நலத்திட்டங்களைச் சுலபமாக அலட்சியப்படுத்த முடித்தது, தவிர மக்களின் வாழ்வாதாரத்திற்குச் செலவிட்ட தொகையும் மிச்சமானதால் பெரும் மூலதனங்களைக் குவித்துக்கொண்டு, புது பெருச்சாளி பழைய பெருச்சாளியை மிரட்டுகிறது. இன்றைக்கு உலக அளவில் அந்நிய முதலீட்டில் முதலாவது நாடாக சீனா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. G7 நாடுகள் மூலதனங்களை ஆற்றில் போடலாமா? கடலில் கொட்டலாமா? என அலைந்துகொண்டிருக்க, நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், மேற்கத்திய மற்றும் அமெரிக்க தொழிற்சாலைகளின் தலைவிதிகளையும் தீர்மானிப்பவையாக இன்றைக்கு ஆசிய நாடுகள், அதிலும் புற்றீசல்போல உலகச்சந்தையை மொய்க்கும் டூப்ளிகேட் சீனப்பொருட்களோடு விலையில் போட்டியிட இயலாமல் மேற்கத்திய தொழில்கள் முடங்கிவருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. விலைவாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30லிருந்து 40 சதவீதம் கூடியிருக்கிறது. உணவுப்பொருட்களை யாசகமாகப் பெற தொண்டு நிறுனங்களில் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது.

சரி.. அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ கொள்ளையர் திறந்த ஆறாவது கதவைப்பற்றி சொல்லலையே. அது வேறொன்றுமில்லை, குறைந்த ஊதியத்தில் இந்தியா மற்றும் சீனா உடபட உலக நாடுகளில் கிடைக்கும் மனித சக்திகளால் ஓரளவு இலாபம் பார்ப்பது. ஆனாலும்…ம். உலகமயமாக்கல் சொப்பனத்திற் கண்ட அரிசி சோற்றுக்காகாதென்றுதான் நினைக்கிறேன்.


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Liberte? -Oui, Egalite? – Oui, Fraternite?…….

செவ்வியொன்றிற்கு எமெ செசேர் அளித்தப் பதிலைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன். பிரான்சு நாட்டில் சுதந்திரமும் சமத்துவமும் இருக்கிறதென்றாவது ஓரளவு திருப்திபட்டுக்கொள்ளலாம் ( அவர் Oui- ஆம்- என்று சொல்லியிருந்தாலும் அதனை உச்சரித்தவிதமும், பார்வையில் தெறித்த எரிச்சலும் வேறாக இருந்தது) ஆனால் சகோதரத்துவம் என்ற சொல்லுக்கான பொருள் இங்கே கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வந்ததற்கான பொருள். எமெ செசேர் சமகால பிரெஞ்சு கவிஞர்களில் மிகமுக்கியமானவர், மிகை யதார்த்தவாதி, கவிஞர் ஆந்த்ரே பிரெத்தோனுக்கு நெருங்கிய நண்பர். Negritude என்ற சொல்லைப் படைத்தவர். உலகெங்குமுள்ள கறுப்பினமக்களின் ஏகோபித்த சுதந்திரமூச்சு. கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்றான மர்த்தினிக் பிரதேசத்தில் -அவர் பிறந்த இடத்தில் உயிர் பிரிந்தபோது, பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், எதிர்கட்சி பிரமுகர்கள், படைப்பாளிகள், பிறதுறை சாரந்த விற்பன்னர்கள்ளென பலரும் கண்ணீர் சிந்தினர், நாடுமுழுக்க துக்கம் அனுசரிக்கப்பட்டது. வழக்கம்போல சிந்திய கண்ணீரில் முதலைகளுக்கும்(எங்குதானில்லை) பங்குண்டு- யார் மனிதர் எவை முதலையென்பது பரம்பொருள் அறிந்த ரகசியம் – ஆமென்.

நாகரீகத்திலும் பண்பாட்டிலும் வளர்ந்திருப்பதாக மனித இனம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நூற்றாண்டிலும், ஆதிக்கமும், அதிகாரமும்- திக்கற்ற பல மனித சமூகங்களின் மண்ணோடும், உணர்வோடும் இசைந்த வாழ்வியல் நெறிகளை, விழுமியங்களை ஓசையிடாமல் அழித்துவருகின்றன என்பது உலகமறிந்த உண்மை. அவை காப்பாற்றப்படவேண்டுமெனக் குரல் எழுப்புகிறவர்களும் இல்லாமலில்லை. கவிஞர் எமெ செசேர், ஒடுக்கப்பட்டவரினம், தம் மரபுகள் குறித்ததான மதிப்பீட்டில் நியாயமான அணுகுமுறையை வற்புறுத்தியவர். ஆக அவரது கவிதை, மற்றும் அரசியல் பங்களிப்பென்பது அவர் பிறந்த மண் சார்ந்தது, அதன் பண்பாட்டு உணர்வுகளால் வடிவமைக்கப்பட்டது. ‘நான் ஒரு கறுப்பன், கறுப்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்’, என்றவர்.

“எனது நீக்ரோகுணம்
ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக்
காதில் வாங்காதவொரு ஜடமோஅல்ல
எனது நீக்ரோகுணம்
குருட்டு பூமியில் விழுகிற அமில மழையுமல்ல
எனது நீக்ரோ குணம்
உயர்ந்த கோபுரமுமல்ல
பெரிய தேவாலயமுமல்ல
அது பூமியின் செங்குருதியிற் தோயும்
அது வானில் கஞ்சாப்புகையில் மூழ்கும்
பொறுமையினாலுற்ற பொல்லாங்குகளை
இனங் கண்டிடும்…” (Le cahier d’un retour au pays natal)
எனத் தொடரும் இக்கவிதை அவரது மிக முக்கியமான படைப்புகளிலொன்று.

எமெ செசேரைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர் பிறந்த மர்த்தினீக் பிரதேசத்தினைப் புரிந்துகொள்ளவேண்டும். மர்த்தினீக் பிரான்சு நாட்டிற்குச் சொந்தமான நான்கு கடல்கடந்த பிரதேசங்களில் ஒன்று, இதர பிரதேசங்கள்: குவாதுலூப், பிரெஞ்சு கயானா, ரெயூனியோன். இவற்றை நேற்றுவரை DOM-TOM(1) என்று அழைத்து வந்தவர்கள் சமீபகாலமாக DOM-ROM (2)ou DROM என்றழைக்கிறார்கள். பெயரிலும், அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்த மாற்றங்கள், அம்மண்ணின் பூர்விகக் குடிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றியதா என்றால் இல்லை. இங்கே வருடமுழுக்க சூரியனுண்டு மக்களின் வாழ்க்கையில்தான் சூரியனில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழ் காலனிகளாக இருந்தவை, பிற காலனி நாடுகள் விடுதலை அடைந்தபோதும், கறுப்பின மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இப்பிரதேசங்களை விடுவிக்காமல் பிரான்சு அரசு சொந்தமாக்கிக்கொண்டதற்கு முக்கிய காரணம் பூளோக ரீதியிலான அவற்றின் அமைப்பு. பிரதான பிரதேசத்திற்கு(Metropole)(3) அரசியல், பொருளாதாரம், ராணுவம் என பல முனைகளிலும் இலாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியபெருங்கடலென்று சிதறிக்கிடக்கிற பல்லாயிரக்கணக்கான மைல்களைக்கொண்ட கடற்கரைப் பிரதேசங்களைப் பயன்படுத்திக்கொண்டு அணு ஆயுத சோதனைகள் நடத்தவும், வலிமை மிக்க கடற்படையை அமைத்துக்கொள்ளவும், உலக நாடுகளின் அரசியலை அருகிலிருந்து மோப்பம் பிடிக்கவும் முடிகிறது. பொருளாதார இலாபங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் சுற்றுலாத் துறையை மட்டும் நம்பி ஜீவிக்கிற நாடுகள் பல. அவற்றிற்குப் போட்டியாக இருக்கும் இப்பிரதேசங்கள்(DROM), பிரான்சு நாட்டுக்கு கொடுப்பது அதிகம், கொள்வது குறைவு. உலகமெங்கும் சுதந்திரம் சுதந்திரம் என்ற குரல் கேட்கிறதே, இங்கே என்னவாயிற்று என்ற சந்தேகம் எழலாம், “வெள்ளைக்காரனே தேவலாம்”, என்று சொல்ல இந்தியாவிற் கேட்கிறேன். அப்படியான மன நிலையிற்தான் இவர்களைப் பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருக்கிறது. நிறைய பிரெஞ்சுக்காரர்களை அதாவது வெள்ளைத்தோல் மனிதர்கள் இப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்- பெரும் முதலாளிகள் இவர்கள்தான், ஓய்வு நேரங்களில் அவர்கள் அரசியலும் பார்க்கிறார்கள், உள்ளூர் மக்கள் அவர்களுக்குத் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தலைவர்களும் உண்டு. தீமிதிக்கிற காவடி எடுக்கிற இந்திய வம்சாவளியினரையும் சேர்த்து பல்வேறு இனத்தவர்கள் கலந்து வாழ்கிறார்கள், உணர்வால், பண்பாட்டால் வேறுபட்ட மக்களை மேய்க்கச் சுலபமாக முடிகிறது. உதாரணமாக பிரெஞ்சுக் கயானாவில் தென் அமெரிக்காவிலுள்ள அத்தனை இனத்தவர்களும் இருக்கிறார்கள், ரெயூனியனை எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், வட இந்தியர்கள், தமிழர்கள், இந்திய முஸ்லீம்கள்- பிறபகுதிகளிலும் அதுதான் நிலைமை, கூடுதலாக வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தவிர பிரான்சு அரசு நிர்வாகப் பிரதேசங்களையும் தந்திரமாக கலைத்துப் போட்டு ஆள்கிறது. ஆப்ரிக்க இனத்தவரான பூர்வீகமக்களுக்குக் குடியும் கூத்தும் வேண்டும், தங்குதடையின்றி கிடைக்கிறது, இப்பிரதேசங்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதெல்லாம் கண்துடைப்பே. பிரான்சிலுள்ள இதரப் பகுதிகளோடு ஒப்பிடுகிறபோது இங்குள்ள அவலம் விளங்கும்: ஐம்பது விழுக்காட்டிற்குக் கூடுதலான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். மருத்துவ அடையாள அட்டையான -Carte Vitalஐ – மர்த்தினீக் வாசி அறிந்ததில்லை. பிராதான பிரதேசத்தில் ஏழைகளுக்கான மருத்துவச் செலவு(Couverture Medicale Sociale) முழுக்க முழுக்க அரசு சார்ந்தது, இப்பிரதேச மக்களுக்கு பட்டைநாமம். பிரெஞ்சு மெட்ரோபோலில் (Mainland) குறைந்த பட்ச தனி நபர் ஊதியம் 1300 யூரோ என்றால், இங்கே 600 யூரோ…உணவுப் பொருட்களுக்கான விலைகள் சராசரி Dom-Tom வாசியால் தொடமுடியாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரதேசங்களைச் சேர்ந்தமக்கள் அரசியல் சாசனப்படி பிரெஞ்சு குடிமக்கள், ஆனால் மெட்ரோபோலுக்கு அதாவது பிரதான பிரான்சு நாட்டுக்குள் நுழைகிறபோது அவர்களும் வேறு நாடுகளிலிருந்து பிரான்சுக்குப் பிழைக்கவந்த மக்கள்போலவே நடத்தப்படுகிறவர்கள்.

பிரெஞ்சு காற்பந்தாட்ட முன்னணி வீரர்களில் ஒருவரான லிலியாம் துராம் ஒரு முறை சொன்னது, ” எங்கள் பிரதேசத்தில் இருக்கிறபோது பிரெஞ்சுக் காரன் என்ற நினைவுடன் இருந்தேன், ஆனால் மெட்ரோபோலுக்கு வந்ததும் அந்நியனாக உணருகுகிறேன்”.

——————————————————————————————————-
1. Departement d’outre-mer – Territoire d’outre-mer.
2. Depaartment Region d’outre-mer
2. Metropole – Mainland

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா