‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

மு.இளங்கோவன்


திண்ணையில் வெளியான ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி,சென்ற திண்ணையில்(25.04.08) சடாயு கருத்துகளையும் அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அவருக்கு அவர்வழியில் விடைதருவது எனக்கு உகந்தது அல்ல.எனினும் கிறித்தவர்கள்,திராவிட இயக்கத்தவர்கள் செய்த தமிழ்ப்பணிகளையும்,தமிழின முன்னேற்றப் பணிகளையும் குறைத்து மதிப்பிட்டுள்ள சடாயுவுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மனுதருமம்,கடவுள்,சமயம்,சாதி இவற்றின் பெயரால் மக்களிடையே வேற்றுமைகளை விதைத்து அரசர்களுக்கு அறிவுரை கூறுவது என்ற போர்வையில் தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் என்பதையும்,தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் என்பதையும் பரிதிமாற்கலைஞர் நூல்கள் வழி அறிக.

‘பார்ப்பார்க்கல்லது பணிபறியலையே’ என்பது ஒரு சங்க இலக்கியவரி.

ஆரியம் தமிழகத்தில் கலக்காதபொழுது தமிழ் தமிழாக இருந்தது.தமிழர் தமிழராக இருந்தனர்.பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர்.
பல்வேறு சூழ்ச்சிகளால் கல்வி,மருத்துவ,நாகரிக வசதியின்றி வாழ்ந்தவர்களையும் சாதியின்பெயரால் பிளவுப்படுத்தி ஒதுக்கிவைத்திருந்த மக்களையும் தங்களுக்குச் சமமாக மதித்து,கல்வி,மருத்துவ வசதிகள் தந்து தங்கள் கோயில்களில் வழிபாட்டிற்கு அழைத்துச்சென்ற கிறித்தவ,இசுலாமிய மதத்தாரின் பணிகளை ஒருதலைச் சார்பாகப் புறக்கணிப்பது நடுநிலையாளர்களுக்கு அழகல்ல.

உழைக்கும் மக்களைச் -சூத்திரர்களாக்கி வேசிமக்கள் எனவும் இவர்கள் கல்வி கற்கக் கூடாது எனவும் குறிப்பிட்டு இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே.அம்மந்தரம் இன்றும் மணவீடுகளில் பார்ப்பனப் புரோகிதனால்

‘சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ தூயஸ்தே
மனுஷ்ய ஜாஹ’

ஒலிக்கப்படுவதை எடுத்துக்காட்டிய இயக்கம் திராவிட இயக்கம்தானே.சமூகநீதிக்கி வித்திட்டது திராவிட இயக்கம்தானே.

இவ்வாறு சமூகத்தில் உள்ள இழிவுகளைத் துடைத்தெறிய முயன்ற இயக்கத்தை நடுநிலை உணர்வுடையவர்கள் தவறாகக் குறிக்கமாட்டார்கள். அது வரலாறு.வரலாற்றை மாற்றுவது இயலாது.
திரித்த வரலாற்றை உரியவர்கள் எடுத்துக்காட்டுவது எந்தவகையில் தவறாகும்.

முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், பெரியார் சிந்தனைகள்,அம்பேத்கர் நூல்கள்,பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை,The Civilized Demons – The Harappans in Rigveda -BY Malati J. Shendge(1977) நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

மு.இளங்கோவன்


muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்