தாகம்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்


கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது.
அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை.
தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது.

அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில்
கனன்று கொண்டிருந்தது. முட்டிக்கால்களிலும் முணுமுணுவென்று இனம் புரியாத ஒருவித வலியென்றால், மார்பகங்களிலும் கூட நெறிகட்டிக்கொண்டாற்
போல் வலியில் விம்மியது. தலைவலியும் கட்டியங்கம் கூறுகிறாற்போல் விண் விண்ணென்று தெறிக்கத்தொடங்கியது..

கண்களை அசக்கினாலும் தீப்பறந்தது. உடம்பு முழுவதும் மழுவாய்க் கொதிப்பதை தாரிணியால் உணரமுடிந்தது. ஆனாலும் தொண்டை ஒரு முழுங்கு
தண்ணீருக்காகத் தவித்தது. அந்த வரட்சிதான் தன்னை மறந்து எழவைத்தது. ஆனால் இரண்டெட்டுக்கூட நடக்கமுடியவில்லை. கண்ணை இருட்டிக்கொண்டு
வரவே தலை குப்புற மீண்டும் கட்டிலிலேயே விழுந்து விட்டாள். சில நிமிடங்களுக்கு ஆகாயத்தில் நீலப்பூக்கள் பறந்தன. வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப்பறந்தன.
சவமாய், ஜடமாய், எவ்வளவு நேரம் தான் கிடந்தாளோ?
திடீரென்று அடிவயிறு குழைந்த உணர்வில் நரம்புகள் சிலிர்த்தன.இப்பொழுது நினைவு திரும்பிவிட்டது. கூடவே உடலில் ஒவ்வொரு கூ்றுகளும் வலிக்கத்தொடங்கிவிட்டது.வயிற்றுவலி இப்ப்பொழுது தாளவே முடியாமற் போய்விட்டது. தாரிணிக்குத் தன் உடலே தனக்கு அந்நியமானாற்போல்
விரக்தியின் எல்லயில் வெறுத்துப்போய்க் கிடந்தாள்.

சரீரம் முழுவதும் காந்திய அனலின் வெப்பத்தினால், மீண்டும் நா வரண்டது..தாகம் அ நியாயத்துக்கு அவளை வாட்டியது.
அழவே கூடாது என்ற வைராக்கியத்தையும் மீறி, இமையோரம், வெந்நீராய் வழிந்து தலையணையை நனைத்தது.மாதந்தோறும் வரும் மரணாவஸ்தைதான்,
என்றாலும் இப்பொழுதுதெல்லாம் தாரிணியால் தாங்கவே முடியவில்லை.பூப்பெய்திய பெதும்பை பிராயம் முதல், இன்றைய நடுத்தர , அகவையிலும்,
மாதவிடாய்த்தொல்லை ஒருத்தியை இப்படியும் வாட்டுமா? எல்லாப்பெண்களுக்கும் மூன்று நாட்கள், மிஞ்சிப்போனல் ஆறு நாட்கள்தான், என்றால் இவளுக்கு மட்டும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு இயற்கை அவளை பிழிந்தெடுக்கும். உடலின் சக்தி முழுவதையும் பறி கொடுத்து,உதடு உலர்ந்து,வெளிறிப்போய்,
ரத்தசோகையாலேயே, லோ ப்ரஷர், , முதலில் இவளுக்கு வணக்கம் கூறியது.

அடுத்து மாதாமாதம் சக்தியின் விரயத்தால், இதயம் பலவீனமாகி, ‘இதய நோய்’ ஆசையோடு தாரிணியை அண்டிக்கொண்டது..இதற்குப்பிறகு, நாடித்துடிப்பின் வேகம் கூட அடிக்கடி கண்ணாமூச்சி ஆட விழைந்தது.ஆகவே சதா மயக்கம்,தலைசுற்றல்,என எப்பொழுதுமே மசக்கைக்காரிகளைப்போல், பலவீனத்தின் அடிமையாகிப்போன
துர்பாக்கியம்தான் அவளால் ஒத்துக்கொள்ளவே முடியாத வேதனை, .
உபாதை பட்டுப்பட்டே, வயிற்றுவலியே அவளுக்கு திகட்டிவிட்டது, என்று கூடக் கூறலாம்.

அதனாலேயே தாரிணி இப்பொழுதெல்லாம் மருத்துவர்களையே மதிப்பதில்லை..அது என்ன?எப்பொழுது சென்றாலும் ”’எனிமிக்’ ”காக இருக்கிறாய்,
என்று சொல்லிச் சொல்லியே, நி்றைய அயர்ன் , கால்சியம் மாத்திரைளை வழங்குவது, அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
”ட்ரிப்ஸ்’ ஏற்றுவது? எவ்வளவுதான் ஒருத்தியால் பொறுத்துக்கொள்ள முடியும்?

போகும் உயிர் எப்பொழுதாயிருந்தாலும் போகத்தான் போகிறது.. அதற்கென்ன சிங்காரம் வேண்டிக்கிடக்கிறது..திடீரென்று குழந்தைகள் நினைவு வந்தது.
பள்ளி சென்ற கண்மணிகள் வீடு திரும்பும்போதே அம்மா என்று அழைத்துக்கொண்டு தானே வீடு திரும்புவார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கவேண்டாமா?
குபுக்’ கென்று அவளையும் அறியாமல் அழுகை வந்து விட்டது.. எப்பொழுதுமெ இல்லாமலொரு ஆவேசம் உடலுக்குள் புகுந்தாற்போல் அமானுஷ்ய
வேகத்தோடு, சக்தி, அனைத்தையும் திரட்டிக்கொண்டு கட்டிலின் தலை மாட்டைப்பற்றிக்கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள் தாரிணி.

ஒரு கணம் கண்களை மறைத்த இருட்டின் படலம் விலக சில வினாடிகள் பிடித்தது.உனக்காயிற்று ,எனக்காயிற்று .,என்ற ஆக்ரோஷத்தில்
அடிவயிற்றைப் பிடித்துக்கொ்ண்டு மெல்ல எழுந்து நின்றபோது,ஓரளவு சமாளிக்கமுடியும் என்ற தைரியம் பிறந்தது.சுவரைப் பிடித்துப் பிடித்து நடந்தவளால் , ஆயாஸமா? ஊஹூம் , இல்லை, அதீத களைப்பில், இதயம் ’படபட‘ வென்று அடித்துக் கொண்டது.. நாலெட்டு நடப்பதற்குள்,
நெஞ்சுக்கூடு படீரென்று அறை வாங்கினாற்போல் வலிக்கத்தொடங்கியது..தாரிணி பொருட்படுத்தவில்லை. எப்படியோ அடுக்களையை அடைந்தவள்
தண்ணீர் கூஜாவை நெருங்கியதாகத்தான் எண்ணினாள்.

அதற்குமேலும் இந்தப் பாரத்தைத் தாங்க இயலாது என்பதுபோல், கால்கள் நடு நடுங்க பாதாதிகேசமும் இற்று விழுந்தது. அப்படியே மேஜையைப்
பற்றிக்கொண்டதால், கீழே விழவில்லை. கொதிக்கும் எண்ணைய்க் கொப்பறை்யாய், அடி வயிற்றில் ஒவ்வொரு தசை நாளங்களும்,இப்பொழுது
கொன்று தின்னத் தொடங்கிவிட்டது.உதட்டைக் கடித்து, சமாளிக்க முயற்சித்ததில், பற்களின் அழுத்தத்தில்மெல்லிய உதட்டில் ரத்தம் கசிந்தது தான் பலன்.
நெஞ்சைப் பிளந்து எழுந்த விம்மலால் கண்கள் நிரம்பி வழிந்தபோது, கண்ணக் கொட்டிக் கொட்டியே கண்ணீரை விழுங்கினாள்.

திடீரென்று ’ காயத்ரி’ மந்திரம் பழக்க தோஷத்தால் நாவில் ஸ்மரிக்க, பறறிக்கொண்டு வந்ததே கோபம் . கோபாமா ,இல்லையில்லை,
வந்ததே சண்டாளம் இவளுக்கு,–கடவுளாம் , கடவுள்,பெண்மையை ஏன் படைத்தாய்,?
பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை, அரிவை, தெரிவை ,பேரிளம்பெண்,என ஏழு கூறுகளாய்ப் பிரித்ததில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனல் ஆண்பாலுக்குக் கொடுக்காத, படைக்காத,துன்பத்தை,பெண்மைக்குமட்டும் வழங்கியதில் ஏனிந்த பாரபட்சம். ஓர வஞ்சனை செய்பவர் எப்படி
பரம் பொருளாக இருக்க முடியும்? இவருக்குப் பூஜையாம், ஆராதனையாம்.?

இதோ ஒரு வாய்த் தண்ணீருக்கு இப்படித் தவிக்கிறேனே? உடல் உபாதையில் இப்படித் துடிக்கிறேனே? எங்கே போனாராம் இந்தக் கடவுள்?
ஹா, அம்மாடி, அய்யோ,சிந்திக்கக் கூட இயலாமல்,அசதியும், ஆயாசமும்,அப்படி ஆட்டிப் படைக்கிறது. அப்படியே மடிந்து உட்கார முயற்சித்தவள்,
அடுத்த கணம் ,அப்படியே, தரையில் சரிந்து விட்டாள். சில்லென்று, தரையின் ஸ்பரிசம்தான் எவ்வளவு சுகம். மயக்கமா? தூக்கமா?
நினைவுகள்,கனவுகள்,எலாமே,தடம் புரண்டு தாலாட்டும் சுகத்தில், வேறு உலகில் சஞ்சரிக்கிறாள்? ஆஅனால்,

இந்த சுகம் கூட நீடிக்கவில்லை. திடீரென்று இரண்டு கால்களும் அசைக்கமுடியாமல், நரம்புகள்,சுருட்டிச் சுருட்டி இழுக்கிறது. பிராணவலிதான்.
இந்தவலிதான், மயக்கத்திலிருந்து, அவளை உலுக்கி எழுப்புகிறது. கையை ஊன்றி எழ முயற்சித்தால், முடியவில்லை. இப்பொழுது சில்லென்ற ஸ்பரிசம்
சுகிக்கவில்லை. உடல் முழுவதும் குளிரால் கிடு கிடுக்கிறது . சரீரம் வெக்கைக்கு பரிதாபமாய் ஏங்குகிறது.,
ஆ, திடீரென்று மேனி முழுவதும் இதென்ன வியர்வைக் குளியல்,,–
மார்பில் ஊசியாய்க் குத்துகிறது. தலையில் கடு கடுவெனக் கொட்டுகிறது.. இடுப்பில் ரம்பம் போட்டு அறுக்கிறது.. கால்கள் இரண்டும் ”பிளவை”
நோய்வயப்பட்டாற்போல் பரிதவிக்கிறது.
தாகம், தாகம், என்ன ஆவலாதி இது, ,இதுதான் மரணதாகமா? ஒரு வாய்,—— ஒரே—- ஒரு ———-வாய், ஊஹூம் இல்லை,
இல்லை,ஒரு மிடறு, ,
ஊஹூம் ;ஒரே ஒரு முழுங்குத் தண்ணீர் கிடைத்தாலும் போதுமே,, வரட்சியில், தவிப்பில், எல்லாமே மறந்து போகிறது.

கிணு கிணு, வென்று அது என்ன அலறல். தொலைபேசியா? ஊஹூம் ,இல்லை, இல்லை,, காலன் தான் பாசக்கயிறோடு அழைக்கிறான்.
மீண்டும் நினைவுகள் நீர்க்குமிழிகளாய் வட்டமிடுகிறது.

எங்குமே புகைமண்டலம். வானத்து ஊர்தியிலிருந்து, அது என்ன அமுதசுரபியோடு அருகே வருவது யார்? தேவதூதனா?

பூவிலும் மென்மையாய் அவளைப்பற்றித் தூக்குவது யார்? ஆதுரத்துடன் அவளை அணைத்து, தேவாமிருதம் புகட்டுவது யார்?
ஆ? இது என்ன? தேவாமிருதம் சுடுகிறதே? ஆனாலும் என்ன இதம்? என்ன சுகம்? உறிஞ்சி ஒரே இழுப்பில் குடிக்கும் வேகமிருந்தாலும் , மெல்ல மெல்லவே
குடிக்கமுடிகிறது. உள்ளே சென்ற அமிர்தத்தின் சக்தியில் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவ,
மெல்லக் கண்களைத் திறந்த தாரிணி ஒரு அற்புதத்தைக் கண்டாள்.

அவள் அருமைக் கணவர் சுதாகரின் அரவணைப்பில் இருந்தாள்..தேவதூதனாக வந்தது கணவரா?
அமுத சுரபியில் தேவாமிர்தம் என அருந்தியது சூடு மைலோவா? எப்படித்தெரிந்தது? பலமுறை தொலைபேசியில் அழைத்தும்
எடுக்காததால் பதறியடித்து ஓடி வந்தேன்.,
’ஆருயிரே, என்னவரே’, என மனசு சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கிறது, அத்துணை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் காட்டாற்று வெள்ளமாய் பீரிட்டெழுகிறது.
தன் இயலாமை, உடல் வலி, அத்தனையையும் கணவரின் நெஞ்சில் இறக்கியவளாய், , உடம்பு குலுங்க, விடைத்து விடைத்து அழுதாள் தாரிணி.
‘என்னால் தாங்க முடியவில்லை. இந்த உபாதையை என்னால் தாங்கவே முடியவில்லையே,’ என்று விம்மி அழுகிறாள்.
செத்துப்போகிறேன், நான் செத்துப் போகிறேன்., என்று தேம்பித் தேம்பி அழுகிறாள்… ஒரு ஆச்சர்யம்,
இவள் துடித்தழுதும் சுதாகர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே. அழுது ஓயட்டும் என்று காத்திருக்கிறாரா??
ஆ, அம்மாடி,, பளீரென்று அடிவயிற்றில் குண்டூசிக்குத்தல்,, சகலமும் சவுக்கடி பட்டவளாய்க் கண்விழித்தால்,, ஆ, என்ன இது,
அருமைக் கணவரை காணோம்,. மார்போடணைத்து மைலோ ஊட்டிய கணவரைக் காணோம்.?
அப்படியானால், நினைவு தப்பிய நிலையில், மயக்கத்திலேயே, நிகழ்வுப் படலத்தின் நிகழ்வுப் பனுவல் தானா, இத்தனை நேரமும் தான் அனுபவித்தது.?
கிணு கிணு’ வென்று, அலறல். அசரீரியாய், நாராசமாய்,, சுனாதமாய், அபஸ்வரமாய் ஒலிக்கிறது.தொலை பேசிதான் என்றறிந்தும்
அவளால் அசையக் கூட முடியவில்லை, இன்னேரத்துக்கு அழைப்பவர் நிச்சயம் அவள் கணவர் தான்,,?
அலங்கோலமாய் தரையில் விழுந்து கிடந்த தாரிணியின் இமையோரம் நனைந்து வழிகிறது.

அசைக்கக்கூட தெம்பில்லாமல், இடுப்புப் பிரதேசத்தின் குருதிப் பிரவாகம்,
இப்பொழுது இதயத் துடிப்பையே மெதுவாக்குகிறது. பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்ப மதியம் ஆகலாம், மாலையும் ஆகலாம், .
தாரிணி காத்திருக்கிறாள்..மீண்டும் கிணு கிணு வென்று தொலைபேசி ஒலிக்கிறது.
தாரிணி காத்திருக்கிறாள்..கணவர் வருவார்.. அதுவரை நினைவு தப்பக் கூடாது. அழவேண்டும், அவரைப் பற்றிக் கொண்டு அழவேண்டும். .
மயக்கமும் விழிப்புமாய் தாரிணி காத்திருக்கிறாள்..

முற்றும்.


kamaladeviaravind@hotmail.com

Series Navigation

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

தாகம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

சக்தி ராசையா


” ”

‘எப்போதும் உனக்கு அவசரம் தான்.நின்று ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்’
என்னும் அம்மாவின் வார்த்தைகள் காதில் தேய்ந்து ஒலித்தது.
 
 

அவாவுக்கு என்ன தெரியும்…ஒவ்வொரு நாளும் இந்த பேரூந்தில போய் வந்தா  இப்படி சொல்லிக் கொண்டிருக்க மாட்டா என புறுபுறுத்தபடி 
பேரூந்து நிறுத்தம் நோக்கி ஒட்டமும் நடையுமாகி  விரைந்தேன்.
 
’29சி போயிருச்சா ?’ என பக்கத்தில் நின்றவரிடம் விசாரித்துக் கொண்டு மணி பர்த்தால்…
“ஐயோ…… நேரம் போகுதே… பேரூந்து இன்னும் வந்தபாடு இல்லை..
இனி அதில இடம் பிடித்து போய் சேர்வதிற்குள்
உயிர் போய் விடும்..”என பக்கத்துப் பொண்ணும் புலம்ப தொடங்க  பேரூந்து வந்தது சேர்ந்தது.
 
கூட்டம் கொஞ்சம் அதிகம் ,இன்றைக்கு இடம் கிடைச்ச மாதிரி தான்……
ஒருமாதிரி உள்ளே ஏறியாச்சு..என் நிறுத்தம் போய்ச்சேர எப்படியும் 1.30 மணித்தியாலத்திற்கும் மேலாகும் .
எப்படியாவது ஒரு சீட் கிடைச்சா போதும் என நினைத்துக்கொண்டு உள்ளே பார்த்தால் நிரம்பி
வழிகிறது..பஸ் நகர நின்று கொண்டே பயணத்தில் பல பேருடன் நானும்.
பசி வேற…கொஞ்சமாவது சாப்பிட்டு வந்திருக்கலாம்.ம்ம்ம்..கூட்ட நெரிசல் வேற..
 
 

எரிச்சல் ,வெறுப்பு,கோபம் என்ன எல்லாம் சேர்ந்து கலந்து இருக்கிறது..அலுவலகம் போய் யார் மேலேயோ எரிந்து விழப்போறேனோ தெரியாது….
சிறிது நேரத்தில் ஒரு இடம் கிடைக்க கொஞ்சம் ரிலாக்ஸாக முடிந்தது..ஜன்னல் ஓர காட்சிகள்
எப்போதும் என் கண்களுக்கு சுவாரசியமானது,ஆனால் இன்று மனம் எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை.
 
 

கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் குறைய தொடங்கியது.. .ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் நிலைத்திருந்தபடி….
சிலர் பத்திரிகைகளுடனும்,சிலர் கைபேசியில் பேசியபடி,பாட்டு கேட்டபடி…என.
நானும் ஒரு புத்தகத்தை எடுத்து  படிக்க ஆரம்பிக்க,பசி வயிற்றை குடைந்தது.புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.ஒருமாதிரி
என் நிறுத்தம் வர இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
போகும் வழியில் ஒரு குளிர்பானக்கடை..என் பசியை இப்போதைக்கு தணிக்க இதை விட்டால் வேறு வழியில்லை.
மதியம் சாப்பாடு இரண்டுக்கு மேல் ஆகும்.
வெளியில் நின்றபடியே ஒரு பழச்சாறுக்கு சொல்லிவிட்டு ,என் கைபேசியை நோண்டிக்கொண்டிருக்கையில்,
“பாப்பா” என்னும் குரல் தலையை நிமிர்த்திப் பார்க்க செய்தது.. தன் முதுமையின் வடுக்களை தோலில் தொலைத்துவிட்ட,ஏழ்மையின் அடையாளங்களோடு ஒரு பாட்டி..
‘பாப்பா ஒரு ரஷனா’ வாங்கிக்கொடு…பாப்பா.. என.
 
பரிதாபத்தோடு தலையாட முன்பே..எங்கிருந்துதான் ஒரு சாத்தான் மனதிற்குள் புகுந்தாதோ,
‘எதாவது வாங்கிக் கொடு என்று கேட்டால் கூட பரவயில்லை….அவாவுக்கு ரஷனா வேணுமாம்..’
 என புத்தியில் ஓட..,கை சில்லரையை தேட தொடங்கியது..
“ஏய் கிழவி உன்னை எத்தனை தடவை சொல்லுறது இங்க நிற்காதே என்று..காலங்காத்தால வந்து கழுத்தறுக்கிறீயே
ஒடிப்போ இங்கேயிருந்து.. என்னும் அதட்டலில்..நகர்ந்து  மறைந்து போனார் அந்த பாட்டி.
அவருக்காக தேடிய
சில்லரை கையில் கனக்க, குடித்த குளிர்பானம், சுடுதண்ணீராய் வயிற்றுக்குள் கொதிக்க தொடங்கியது..
ஒவ்வொரு நாளும் அந்த பகுதியில் என் கண்கள் அந்த வயதான பாட்டியை தேடும்..’பிஸா’வுக்கும் ‘வெகர்’ருக்கும் கடையில் நிற்கையில் இப்போதும் என் காதுகளில் “பாப்பா ஒரு ரஷனா வாங்கிக் கொடு” எனக் கேட்டபடி…….
 


snehidhi15@yahoo.co.in

Series Navigation

சக்தி ராசையா

சக்தி ராசையா

தாகம்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

பவளமணி பிரகாசம்


சொம்புக்குள் கடல் சுருங்குமா ?
கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா ?
பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா ?
அலையும் ஆவி அமைதியைத் தேடுமா ?
வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா ?
அது மணக்கின்ற மல்லிகை செண்டா ?
செங்கன்னல் சாற்றின் கல்கண்டா ?
சேற்றில் சிக்கிய தாமரை தண்டா ?
பூங்கூட்ட தேனறிந்த சிறு வண்டா ?
பக்கவாட்டில் நழுவுகின்ற நண்டா ?
தர்க்கமும் தத்துவமும் இனி வேண்டா-
தாகம் தீரும் தருணம் தானே வந்திடாதோ ?
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

தாகம்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

சுந்தர் பசுபதி


சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்

சரியா…..சரியா…சரியா…. ? ?

பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்…

கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ …
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!

***
sundar23@yahoo.com

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி