தனிமை

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

பாலாஜி.ச.இமலாதித்தன்


கண்களுக்கு புலப்படும்
எல்லைகளுக்குள் யாதுமற்ற
வெறுமைகளால் மட்டுமே நிரம்பி
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
நடு வரப்போர
ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்…!

….

Series Navigation

பாலாஜி.ச.இமலாதித்தன்

பாலாஜி.ச.இமலாதித்தன்

தனிமை

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

சு.சுபமுகி


1.
என் தனிமை
எனக்காக விதிக்கப்பட்டதோ
ஒரு வேளை
இது நானே உருவாக்கிக் கொண்டதோ
புரியவில்லை.
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறது
இந்த தனிமை
தனிப் பிரதேசத்திலும்
ஜனநடமாட்டத்திலும் கூட
என்னை தனியனாய் மாற்றிவிடுகிறது
இந்த தனிமை
வரமா? சாபமா?
தனிமை பற்றிய கேள்வியில் முழ்கி
புரியாமல் நிற்கின்றேன்
தனியாய்.

2.
எனது உள்ளத்தின் முரண்பாடுகள்
குறுக்கும் நெடுக்குமாய் அலைகிறது
எனக்குள்ளேயே.

நான்கு சுவர் மட்டுமே
என்னைச் சுற்றி- ஆயினும்
நால்வகைப் போர் நடக்கிறது

ஒருவரிக்குள் அடைக்கப் பார்க்கின்றேன்
முயன்றும் கூட தோற்கிறேன்
காரணம்
நான் அடைத்து வைக்க நினைப்பது
என் கற்பனையை மட்டுமல்ல
என் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தான்

3.
சில சமயங்களில் சூன்யமாகிப் போகிறேன்
எனக்கு நானே
புரியா விடைக்குள்
தெளிவான வினாவுடன்
காத்திருக்கிறேன்

சில சமயங்களில் புரியாமல் போகும்
மற்றவர்களுக்கு
என் கவிதைகள்
சில நேரங்களில் எனக்கும் தான்

என் பக்கத்து நாற்காலி
காலியாகத்தான் உள்ளது
என் உள்ளமும்.

கண்ணாடியில்
என் முகம் காணத் தயங்குகிறேன்
என் தனிமையை
அது அடையாளம் காட்டிவிடுமோ என்று.

குளிர்ந்த காற்றை விட
தெளிந்த வெப்பம்
மேலானதுதான்
என் தனிமைக்கு.

என் இதழ்கள்
சிரிப்பை வெளிப்படுத்தக்கூட
தயங்குகின்றன.
என் அழுகையும் உடன் வருமோ
என்ற பயத்ததால்.

எனது பேனாவின் நுனியில் நிற்கின்றேன்
தயங்கியபடி
எனக்கான வார்த்தைகளை தேடி.

எனது கவிதைகள் கூட விரும்பவில்லை
எனது இறுக்கத்தை.

-சு.சுபமுகி(மாணவி)

அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

Series Navigation

சு.சுபமுகி

சு.சுபமுகி

தனிமை..

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்


அடிவான இளஞ்சிவப்பு மெல்ல மெல்ல மறைந்து சென்றது. மேற்கு வானம் நன்கு கறுத்திருந்தது. வானத்தின் அமுதம் இன்னும் சிறிது நேரத்தில் மழையாய் பொழியக் காத்திருந்தது. மெல்லிய தென்றல் இதமாக அவளது மேனியை வருடிச் சென்றது. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் ஓர் ஆரம்பம் என என்றோ படித்த ஞாபகம் அவளுக்கு. ஜீரணிக்க முடியாத சில உண்மைகள் சில நேரம் நம்ப மறுத்த பல விடயங்களை நியாயப்படுத்தி யுள்ளமை அவளுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நித்திரைகொள்ள எண்ணும் போதெல்லாம் அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிப்பது நிம்மதி ஒன்றுதான்.

‘ ‘ ‘

இருபது வருடங்களுக்கு முன் அவளுக்கு வயது எட்டு. மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நிப்லாவுக்கு தான் தனிமைப்படுத்தப்படப்போவது தெரிந்திருக்க நியாயமில்லை. அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய வயதுமில்லை அவளுக்கு. அடுத்த ஆண்டு முதல் தன்னை விடுதி ஒன்றில் தனது தந்தை சேர்ப்பித்து படிக்கவைக்கப் போகிறார் என்பதை அவரது கதைகளிலிருந்து சாடை மாடையாகத் தெரிந்துகொண்டாள். அன்றிலிருந்துதான் அவள் தனிமையின் கொடுமையையும் தன் இறந்துபோன தாயின் பிரிவுத் துயரையும் அன்னைக்கு அன்னையாய் தந்தைக்குத் தந்தையாய் ஒரேயொரு செல்வத்தை தனிமரமாக நின்று சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் தன் தந்தைமீது ஏற்படும் சிறு வெறுப்பையும் உணரத் தொடங்கினாள். இது வெறுப்பா அல்லது விரக்தியா என அவளுக்குத் தெரியவில்லை.

விதியின் விளையாட்டு விடுதி வாழ்க்கையாக சுமார் பத்து வருடங்களைத் தொலைத்துவிட்டு அவளை உயர்தர இறுதிப் பரீட்சைக்கு ஆயத்தமாக்கி காத்துக் கொண்டிருந்தது. தனது இந்தப் பத்து வருட விடுதி வாழ்க்கையில் அவள் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள் ஏராளம். அவை அவளது மிகுதி வாழ்க்கையை ஓட்டிச் செல்ல போதுமானவையாக இருந்தன. தன் தகப்பன் தனக்காகப் படும் கஸ்டங்களையும், சிரமங்களையும், கரிசனையையும் கண்டு அவள் பெருமைப்பட்ட நாட்கள்தான் ஏராளம்.

தன் தகப்பனும் ஏதோ வகையில் தன்னைப்போல் வாழ்க்கையில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது இளமையில் ஏதோ வகையில் விரக்திப்பட்டு அவற்றைக் காட்டிக் கொள்ளாது வாழும் ஒரு சராசரி மனிதனாக ஏன் இருக்கக்கூடாது என்று அவள் நினைப்பதுண்டு. தனக்காகவே அவர் வாழ்வது போல் அவள் பலதடவைகள் உணர்ந்தாள். தானும் தன்பாடும் என்று வாழ்வது போலும் தோன்றியது. அதேவேளை ஏதோ ஒன்றைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வது போலும் தோன்றியது, அல்லது ஏதோ ஒன்றைத் தனக்கு மறைப்பது போலும் தோன்றியது நிப்லாவுக்கு.

‘ ‘ ‘

அன்றுதான் தனது தகப்பனின் முகத்தில் பேரானந்தம் என்று சொல்வார்களே அதைக் கண்டநாள் நிப்லாவுக்கு. அது அவளது உயர்தரப் பரீட்சை முடிவு வெளியான நாள். தான் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி இருப்பதை அவர் மூலம் அறிந்த அவளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆயினும் உள்ளே ஏதோ ஒன்று முகாரி பாடிக்கொண்டிருந்ததையும் அவளால் உணராமல் இருக்க முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் விடுதி வாழ்க்கையையும் தனிமையையும் பாடிக் கொண்டேயிருந்தது.

காலம் உருண்டோடியது. ஐந்து வருடப் படிப்பில் நான்கு ஆண்டு காலம் ஓடிவிட்டன. ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறாள் நிப்லா. அதன் ஆரம்ப முதல் இறுதிவரை அவள் பம்பரமாகச் சுழன்று ஈற்றில் வெற்றிவாகையுடன் ஒரு வைத்தியராக வெளியேறு கிறாள். இப்போது அவள் டொக்டர் நிப்லா. மீண்டும் அவளுக்கு வைத்தியசாலை விடுதி – பழகிப் போன ஒன்று, தனிமையைப் போல். இரண்டாண்டுகள் எப்படியோ கடந்துவிட்டன.
ஒருநாள், ஷடொக்டர், நிப்லா| என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறாள். ஓர் அந்நிய முகம். ஆனால் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. ஷஎஸ்| தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பதிலுக்கு நிமிர்ந்து பார்த்தாள். மீண்டும் ஷஹலோ| என்றான். காந்தத்தின் எதிர்முனைவுகள் ஒன்றையொன்று ஈர்ப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது முதன்முறையாக. பதிலுக்கு அவளும் ஷஹலோ| என்றாள். தன்னையும் அறியாமல் முதன்முறையாக அவள் தடுமாறுவது அவளுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது. அந்தத் தடுமாற்றம் தடைக் கற்களை யெல்லாம் நீக்கி இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணமாக முடிவுற்றது, இன்றுகூட அவளுக்கு நம்பமுடியாத ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது.

அஸீம் – நிப்லா திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. அஸீம் நல்லவன். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளன். மனித மனங்களை மதிக்கும் பண்பாளன். பழகத் தெரிந்தவன். நிப்லாவுக்குக் கிடைத்த ஒரு சொத்தாகவே அஸீமை அவள் கருதினாள். இருந்தும் தனக்குள்ள பெரும் குறை அவளை வெகுவாகப் பாதித்திருந்தது. அதுவும் விதியின் விளையாட்டுத்தான் என எண்ணி ஆறுதல் அடைந்தாள் நிப்லா.

தன் தந்தைக்குத் தான் பிள்ளை. தன் கணவனுக்கும் தான் பிள்ளைதான். ஆனால் தனக்கொரு பிள்ளை இல்லையே என அவள் ஏங்கித் தவிக்கிறாள். தன் கணவனின் மாசற்ற அன்பு, இரக்கம், பரிவு மற்றும் வயதுபோன தன் தந்தையின் அரவணைப்பு அவ்வப்போது ஆறுதலாக இருப்பினும் தற்காலிக ஆறுதல்களில் தங்கி வாழ்வது எப்படி என்பதுதான் அவளது கவலை எல்லாம். விடுதி வாழ்க்கை, தனிமை, கவலை எனத் தன் வாழ்க்கையை ஓர் இருட்டறைக்குள் மட்டுப்படுத்தி வாழப் பழகிப்போன நிப்லாவுக்குத் தன் தொழிலிலும் ஈடுபாடு குறைந்துவருவதை அவளால் உணராமல் இருக்கவும் முடியவில்லை.

வழக்கம்போல் தன் தந்தையின் மடியில் சாய்ந்து நிம்மதியற்ற நித்திரை கொள்ள ஆயத்தமாகிறாள் நிப்லா. நித்திரை கொள்ள எண்ணும் போதெல்லாம் அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிப்பது நிம்மதி ஒன்றுதான்.

அவளது கணவன் பதவியுயர்வு பெற்று பயிற்சிக்காய் நான்கு வருடங்கள் வெளிநாடு செல்லவிருக்கும் செய்தி இன்னும் சிறிது நேரத்தில் வந்து அவளை இன்னும் நான்கு வருடங்கள் தனிமைப்படுத்தப் போவதை உணராதவளாக அவள் மெல்ல மெல்ல தன் இமைகளை மடித்தாள்.

விதி தன் அடுத்த விளையாட்டைத் தொடங்கிவிட்டது, பாவம் நிப்லா.

– மருதமுனை எஸ் ஏ. ஹப்பார்.
இலங்கை.
abdulgaffar9@gmail.com

Series Navigation

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

தனிமை

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பாஷா


கோட்பாடுகள்,வரையறைகள்
விதிகள் இவைகளாலான
மாயப் பெட்டிக்குள்
அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது
அகண்ட அண்டத்தையும்
சங்கிலியாய் இனணக்கும்
அன்பும்….

சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி
சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென
சாயமாறிப்போனது நட்பு
தோழமை எப்பொழுதும்
தொடரும் தெருநாயின் கண்களோடு
தேங்கிவிட்டது!

காற்றில் அலையும்
காய்ந்த சருகாய்
அலைபாயும் காதல்
பணத்தின்மேல் பவனிவரும் பாசம்
தெருக்களிலும் திண்ணைகளிலும்
பிச்சைபாத்திரமேந்தும் பெற்றோர்….
அழ மறுத்தது
கண்ணீர் வற்றியதாலல்ல
இதயம் ஈரம்தொலைத்து
இரும்பாகிப்போனதால்!

பிறக்கும்போது மட்டுமல்ல
மரிக்கும்போது மட்டுமல்ல
வாழும்போதும்
தனிமை மட்டுமே
நிரந்தரம்!

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா

தனிமை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

நாவாந்துறை டானியல்ஜீவா-


தனித்து விடப்பட்ட
தீவில் நான்
ஒரு வசந்தத்தின்
தேடலுக்காக….

உண்மையான
உலகத்தைத்தேடி
பொய்யான முகங்களிற்குள்
புதைந்து போனேன்.

சொல்லிதயங்களெல்லாம்
நல்லிதயங்களில்லாதல்
நளிந்தும்….
மெலிந்தும் போனேன்.

விரக்தி என்னிடம்
விடாப்பிடியாய்;
என் கூடவா ….
தங்கிவிடப் போகிறது.

அதுவரை
கவிதையோடு
கைகுலுக்குவேன்
வாழ்தலுக்காய்
விழிப்பாயிருந்து
பூமியை
பண்போடு நேசிப்பேன்.

என்னில்
எதைச்சுமத்தினாலும்
யேசுவைப்போல்
சிலுவை சுமப்பேன்.

கண்களில் கண்ணீர்
வடிந்தாலும்
என் உடல் காயப்பட்டு
ஊரெங்கும் வீசுகின்ற
காற்றில் பதிவானாலும்
கனத்தால்
என் தோல்கள்
வலி எடுத்தாலும்
என்னொருவரிடம்
என் சுமையை
இறக்காமல் இருப்பேன்.

தென்றல் தாலாட்ட
மறந்தாலும்
மேகம் என்னைப்பார்த்து
மட்டம் தட்டினாலும்
சூரியன் கொஞ்சம் கூட
இரக்கமின்றி
சுட்டெரித்தாலும்
வெண்ணிலா
என்னை வெறுத்தாலும்
நான் வாழ்தலுக்காக
வரித்துக் கொண்ட
கொள்கையில்
வரிகூட விலகாமலிருப்பேன்.

பூருவம்….
வெருவின்றி
இடியோடு வந்திறங்கினாலும்
சுக்கிலமிக்கவன்
சாக்கடையாகன்.

புயல் வந்து
என் தேகத்தை
பயம்கொள்ள வைக்க
நினைத்தாலும்
கூளான் அல்ல
குப்பறப் படுப்பதற்கு@
வைரமான கரும்பாறை.

மின்னுக்குள்
என் உயிர்
பொசுகும் வரை….
வாழ்க்கையை நேசிப்பேன்
அது எப்படியிருந்தாலும்
பரவாயில்லை.

daniel.jeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஜீவா

நாவாந்துறைடானியல்ஜீவா

தனிமை

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

கவிநயா


வழக்கம் போல் அன்று காலையும் ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. ஆனால் இன்று அவசரமாக எழுந்திருக்க வேண்டாம். நினப்பே சுகமாக இருக்க, போர்வையை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டாள், லலிதா. இல்லையென்றால், அவளுக்கென்று இருக்கும் நேரம், காலை ஐந்தரை முதல் ஆறரை வரைதான். எழுந்து, பல் துலக்கி, வாசல் தெளித்து, கோலம் இட்டு, சின்னதாக ஒரு வாக்கிங் போய் விட்டு வந்து, குளித்து முடிப்பதற்கும், காலை நேரப் பரபரப்பு தொற்றிக் கொள்வதற்கும் சரியாக இருக்கும். இன்றைக்கு அவள் இஷ்டம்தான். அவள் இந்த இரண்டு நாட்களை எதிர் பார்த்து ஏற்கனவே போட்டு வைத்திருந்த ப்ளானை மனசுக்குள் ஒரு தரம் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள். இருந்தாலும், தினமும் எழுந்து சுறுசுறுப்பாய் இருக்கப் பழகிய உடம்பு படுக்கையில் கிடக்க மறுத்தது. பாதி படித்திருந்த ‘பொன்னியின் செல்வன் ‘ அழைத்தது. இனி எழுந்திருக்க வேண்டியதுதான்.

நிதானமாக காலை வேலைகளை முடித்து விட்டு, ஒரு கையில் ஏலம் மணக்கும் டாயுடனும், மறு கையில் பொன்னியின் செல்வனுடனும் சாய்வு நாற்காலியில் சாய்ந்த போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருமைக் கணவனை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். எல்லோரும் சொல்வது போல நான் அதிர்ஷ்டக்காரிதான் என்று எண்ணம் ஓடியது. அன்பே உருவான கணவன் விவேக்; தங்க விக்கிரகங்கள் போல் வகைக்கு ஒன்றாக இரண்டு குழந்தைகள்; மீனு 5 வயது; கண்ணன் 2 வயது. அவர்கள் மூவரும் நேற்றுத்தான் பாண்டிக்குப் போனார்கள்.

காரில் ஏறும் முன், ‘அம்மாவுக்கு டாடா சொல்லுடா, கண்ணா ‘, என்றான் விவேக். காரில் போவதிலேயே குறியாக இருந்த கண்ணன், ‘ம்மா, தாத்தா ‘, என்றான், மழலையில். ‘கண்ணா, அப்பாகிட்ட சமத்தா இருக்கணும், சரியா ? ‘, என்று அவனை இறுக அணைத்து முத்தம் பதித்தாள். அவள் கண்கள் இலேசாகக் கலங்கியிருப்பதைப் பார்த்த விவேக், ‘ஏய், என்னடா இது, கடைசி நிமிஷத்துல மனச மாத்திக்கப் போறியா ? ‘ என்று கிண்டலடித்தான். இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்காக அவள் எப்படிக் காத்திருந்தாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். பேசினால் அழுது விடுவோமோ என்று, இல்லை என்பதாகத் தலையை மட்டும் அசைத்தாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘ஈஸ்ட் கோஸ்ட் ரோடு ஜாலியா இருக்குன்னு நீங்க பாட்டுக்கு தூங்கிடாம, பாத்து டிரைவ் பண்ணுங்க ‘, என்றாள் புன்முறுவலுடன். ‘அம்மா, அப்பா தூங்காம இருக்கிறதுக்காக, நான் அப்பாவோட பேசிக்கிட்டே போவேன் ‘, என்று அவளுக்கு தைரியம் சொன்னது, மீனுக்குட்டி. ‘எம் பொண்ணு இப்பவே எவ்வளவு பொறுப்பா இருக்கா பாரு ‘, பெருமிதத்துடன் மீனுகுட்டியை அணைத்துக் கொண்டான், விவேக். அந்த விநாடியில் தானும் அவர்களுடனே போய்விட்டால் என்ன என்று தோன்றி விட்டது, லலிதாவிற்கு. அதைப் புரிந்து கொண்டவன் போல், ‘சரி, நாங்க கிளம்பறோம், லல்லி. அப்பதான் நேரத்தோட போய்ச் சேர முடியும் ‘, என்ற விவேக், குழந்தைகள் காரில் ஏற உதவினான். ‘நீ பத்திரமா இருந்துக்கோ. நாங்க ஞாயிற்றுக் கிழமை வந்துடுவோம் ‘, என்றபடி கிளம்பி விட்டார்கள். சென்னையிலிருந்து பாண்டி போக நான்கு மணி நேரமாவது ஆகும்.

லலிதா, பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பு வரை ஒரு பாங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனு பிறந்தவுடன் வேலையை விட்டு விட்டாள். அடுத்த மூன்று வருடங்களிலேயே கண்ணனும் பிறந்த பின், அவளுக்கு மூச்சு விடவே நேரமில்லாமல் போய் விட்டது. எப்போதும் குழந்தைகளுடன் சரியாக இருந்தது. புத்தகங்கள் படிப்பது, கை வேலைகள் செய்வது, கவிதைகள் எழுதுவது, என்று அவளுக்குப் பிடித்த எதையுமே செய்ய நேரம் கிடைக்கவில்லை. இடைவெளியே இல்லாமல் இருக்கவும் எரிச்சலும், கோபமும், இயலாமையும் அதிகமாயின. நல்ல வேளை, விவேக் புரிந்து கொள்ளும் கணவனாக இருந்ததினால், கோபத்தைக் குழந்தைகளிடம் காட்டாமல் கணவனிடம் பேசினாள். இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள். ஒரு வாரக் கடைசியில் விவேக் குழந்தைகளைக் கூட்டி கொண்டு பாண்டியில் இருக்கும் தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்வது, அந்த இரண்டு நாட்களும் லலிதா எந்தத் தொந்திரவும் இன்றி அவளுக்கு விருப்பமானபடி பொழுதைக் கழிப்பது என்று. அதைத்தான் இப்போது செயலாக்கி இருக்கிறார்கள். மாமியார் மாமனார் கூட எனக்கு அருமையானவர்களாய்க் கிடைத்திருக்கிறார்கள்; அவர்களும் புரிந்து கொண்டு இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தார்களே என்று இப்போது நினைத்துக் கொண்டாள், லலிதா.

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகமும் முடிந்து விட்டது. நான்காம் பாகம் மாடியில் இருந்தது. இந்தக் கல்கிதான் என்ன அழகாக எழுதுகிறார்! அந்தக் கால தஞ்சையையும் பழையாறையையும் அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அவர் காவிரியைப் பற்றி எழுதியிருக்கும் அழகைப் படிக்கையில், நாமும் அந்தக் காலத்திலேயே பிறந்திருக்கலாமே என்ற ஏக்கம் வரும். அத்துடன் அவர் கதைகளில் இழையோடும் இயல்பான நகைச்சுவை! கல்கியை மிகவும் சிலாகித்தவாறே நான்காம் பாகத்தைப் புரட்டிக் கொண்டே படிகளில் இறங்கியவள் ஒரு படியைத் தவற விட்டு விட்டு விட்டாள். அவ்வளவுதான், தடதடவென்று தலை குப்புற படிகளில் உருண்டாள்.

கண் விழித்துப் பார்க்கையில் இருள் கவிந்து விட்டிருந்தது. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. பிறகுதான் தான் வெகு நேரமாக அப்படிக் கிடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். சற்றே கையை ஊன்றி எழுந்திருக்க முயல்கையில் எங்கெங்கோ வலித்தது. எழுந்து நடப்பது நடக்காத காரியம் என்பது புரிந்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது, லலிதாவிற்கு. இந்த நாள்தான் எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்தது ? கடைசியில் இப்படியா ஆக வேண்டும், அதுவும் தனியாக இருக்கும் சமயம் பார்த்து ? நல்ல வேளையாக அவள் தோழி சாந்தி இரண்டு வீடுகள்தான் தள்ளி இருக்கிறாள். அவளைத் தான் கூப்பிட வேண்டும். நானே வரவழைத்துக் கொண்டதுதானே இந்த நிலைமை, எந்த நேரத்தில் தனிமையில் இனிமை காணத் திட்டமிட்டேனோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு தன்னிரக்கத்தால் மீண்டும் கண்ணீர் பெருகியது. ஒருவாறாகச் சமாளித்தபடி, ஹாலில் இருக்கும் ஃபோனை நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்தாள்…

meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா

தனிமை

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பவளமணி பிரகாசம்


தனிமை என்பதோர் கொடுமையோ ?
தனிமை என்றென்றும் இனிமையோ ?
சுமையாய் காலம் தோன்றுமோ ?
சுகமாய் கற்பனை ஈர்க்குமோ ?
வெஞ்சிறையாய் என்னை பொசுக்கிடுமோ ?
வெட்டவெளியில் சிறகை விரிப்பேனோ ?
கூடிப் பேச யாருமில்லா வெறுமையோ ?
குறை கூற ஆளில்லா நிம்மதியோ ?
இலக்கின்றி மணித்துளியை நகர்த்தவோ ?
இடரின்றி விரும்பியதை நாடவோ ?
அலுப்பும் சலிப்புமாய் களைப்புறவோ ?
அலுவல் ஏதுமின்றி இளைப்பாறவோ ?
எட்டத்து உறவை எண்ணி ஏங்கவோ ?
எதுவும் எட்டுகிற நேரத்தை வியக்கவோ ?
சூன்யமானதே உலகமென்றிடவோ ?
சுட்சுமமாய் விளங்கிட இத்தனை ஞானமோ ?
தத்தளித்து மனம் அமைதி இழக்குமோ ?
தத்துவ விவாதத்திலே களிக்குமோ ?
நத்தையாய் ஓட்டுக்குள் ஒடுங்கவோ ?
பட்டாம்பூச்சியாய் பறந்து திரியவோ ?
தொல்லையாய் சுவாசிப்பதே ஆகுமோ ?
எல்லையில்லா சுதந்திரம் கிட்டுமோ ?
வட்டத்துக்குள் வருந்திடவோ ?
கட்டுக்கள் களைந்தனவோ ?
முள்ளாய் குத்தும் வலியிதுவோ ?
கொள்ளை இன்பம் கொடுப்பதுவோ ?
வரும் இறுதி நாளை எண்ணி மருளவோ ?
வந்து போன நாளை நினைவில் ருசிக்கவோ ?
நிந்தித்து பொழுதை தள்ளவோ ?
சிந்தித்து மகிழ்வை அள்ளவோ ?
இதுவோ ?அதுவோ ?எதுவோ ?
சாந்தி ஒன்றேதான் இலக்கோ ?

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

தனிமை

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

அனந்த்


தனிமை…..
மனிதன் வாழ்வில் வரக்கூடாத அச்சக் கனவு

நீ
எட்டிநின்று விளையாடி எக்களிக்கிறாய்
என்றல்லவோ எண்ணியிருந்தேன்…

நான் திகைத்து நிற்கையில்
கைகொண்டு கண்பொத்துவாய் எனக் காத்திருக்கையில்
என் வாழ்வின் ஊற்றுக்கண்ணைப் பொத்திவிட்டாயே

தொட்டு விளையாடிய நாட்கள்
விரைவாகவே
காலத்தின் தொண்டைக் குழிக்குள் குதித்துவிட்டன

தெரிந்திருந்தால்
உன்னை என்றோ நான் விழுங்கி
உன்னை என்னுள் ஆக்கியிருப்பேன்…

இன்று
நானும் என் உள்ளரிப்பைப் புரியாமல்
ஊமையாய் என்னை உற்றுப் பார்க்கும் கணினியுந்தான்…

Series Navigation

அனந்த்

அனந்த்