This entry is in the series 20040909_Issue

ஸ்ரீமங்கை


—-

மிகநீளம் இப்பாதை…
நடக்கநடக்க ,முட்டிகள் தேய்ந்து
நீர்கோத்து வீங்க, பாதங்களினடியில்
போனபாதையின் தடங்கள்…

திரும்பிப்பார்த்தாலே வலி கவ்வுமென,
முன்னேயே நோக்கிநடக்குமாறு
முன்பயணிகளின் அறிவுறைகள்
சாலையோரங்களில் சிந்திக்கிடக்க,
துணையாக கனவுகள் மட்டும் என் சிந்தைகளில்…

இரவுகளில் இளைப்பாறுதல்களைத் தேடிக் கனாக்காணும்
என் கனவுகளோவெனில்,வெறுமைகளில் விம்மி,
கண்களினடியில்
சேர்ந்து,குமிழ் குமிழிகளாய் இமைகளில்
ததும்பும்..

கற்பனைக் கப்பல்கள் கரைசேருமுன்னே,
பெருமூச்சுகளால் பாய்கள் புடைத்து
அறியாமூலைகளுக்குப் திசைதிரும்பிப் பயணப்படும்.

நிதர்சனங்களின் வலிகளுக்கு
மருந்தாக எதிர்நோக்கியிருந்த
இராக்கனவுகள் தினவுகளாய் நாளங்களில் துடிக்க,
பகல்களே போதுமென
முன்னே நடக்கிறேன்.

எனினும் …
என்றேனும் ஒருநாள்
வளைந்து வளைந்தேறும் இப்பாதையினின்று
கீழ்நோக்குகையில்,ஓர் புன்னகை பாதையோரம்
சிதறிக்கிடப்பது தெரியாமலா போய்விடும். ?

அதைக்காணவேனும்…
முன்னோக்கி நடக்கிறேன்…
முண்டுகளாய் வீங்கியிருக்கும்
முட்டிகளில் தள்ளாடி,
வலிகளைச் சுமந்தவாறு…

அன்புடன்
ஸ்ரீமங்கை

kasturisudhakar@yahoo.com

Series Navigation