வன்முறை

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


நான் ஏன் அவன் கடவாய் பற்கள் வெளியே தெரிந்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி நீளமும், 3 இன்ச் விட்டமும் கொண்ட கடினமான கருவேலங்கட்டையால், ஓங்கி அடித்தாலும் உடைந்து விடாத அளவிற்கு கடினமான கைகளை பெற்றிருக்கும் எனக்கு, ஒரு ஊத்தைவாய் நாயின் கோரைப் பற்களை அடித்து நொறுக்குவது இயலக்கூடிய காரியம்தான். எனக்கு வன்முறையின் மேல் விருப்பம் இல்லை என்று சொல்லிவிடும் பட்சத்தில் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துவிடும் என்கிற தருணத்திலும், அதை நான் கூறவிரும்பவில்லை. அவனை நான் தண்டித்துவிடும் பட்சத்தில் அலாதி அடைவேன். அவனை நான் தாக்கிவிடும் தருணத்தில் உச்சம் கொள்வேன்.

என்னால் குறைந்தபட்சம் பாராட்ட மட்டுமே முடியும். அவன் புகைவிடும் அழகின் தனித்தன்மையை கண்டு, ஆனால் அவன் வேறொரு முகத்தை தேர்நதெடுத்திருக்க வேண்டும். புகையை ஊதித்தள்ள. அதற்கு அவனுக்கு நேரமும் இருந்தது. என் முத்திற்கு அந்த நெடி ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு 25 வயது யானை மதம்பிடித்த தருணத்தில் அமைதியாய் இருந்தது கண்டு அவள் அதிர்ச்சியுற்றதாய் தெரியவில்லை.

நான் ஜீசசிடம ;கூறினேன் (மனதிற்குள்ளாக)

கடவுளே 77 முறை மன்னிததாகிவிட்டது. நான் மட்டும் பீட்டராக இல்லாவிட்டால்……..

மொத்தத்தில் அவன் உதடுகளுக்குப் புரியவில்லை.

அவன் விரல்களுக்குப் புரியவில்லை.

அவன் செய்கைகளுக்குப் புரியவில்லை.

ரத்தத்துளிகளுக்கு என்ன தெரியும். அடித்தால் தெரித்து விழுவதைத் தவிர. நிச்சயமாக அவன் எலும்பு முறிவு வைத்தியத்துக்கு அயல்நாடுதான் செல்ல வேண்டும். தாடை அமைப்பை சரிசெய்யும் அளவுக்கு திறமை வாய்ந்த மருத்துவர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் உடனடி சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் அவனுக்கு மயக்கம் தெளிய வாய்ப்புண்டு.

————————————

இதற்காக நீங்கள் 2 நாட்கள் இதே இடத்தில் காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பாரேயானால், அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காது. அவர் தன் வீட்டு நாயிடம் வணக்கம் சொல்வதில்லை என்பது சாதாரணமான விஷயமாக இருக்கலாம். அவர் தன் வீட்டு நாயிடம் எங்கே போவார் என்று சொல்வதில்லை. அந்த நாய்க்கு குட் மார்னிங் கூட கூறுவதில்லை. ஏனெனில் அதற்கு இவையெல்லாம் புரியப் போவதில்லை. ஆனால் எனக்கு குட்மார்னிங் என்றால் என்னவென்று மிக நன்றாகப் புரியும் என்று சத்தியம் செய்து தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்காகவாவது அவர் இவ்வாறு கூறியிருக்கலாம்…

‘இங்கே நீங்கள் காத்திருங்கள் 2 மணி நேரம் கழித்து இன்டர்வியூ ஆரமபிக்கும்” என்று

அங்கு ஒரு நாய் சங்கிலி கூட இல்லை. எடுத்து மாட்டிக் கொள்வதற்கு.

அங்கு தொங்கவிடப்பட்டிருக்கும் தண்ணீர் குவளை, நீ நக்கி குடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுவது போல் இருந்தது.

2 மணி நேரம் கழித்து அதே கேள்விகள்

1. நீ யார்?
2. எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?

அவர் ஏன் கடினமான சென்னைப் போக்குவரத்தில் தனது பிரேக் இல்லாத டூவீலரில் பயணிக்கக் கூடாது.

ஆம் அன்று அவர் வண்டியில் பிரேக் இல்லை

அது சற்று சிரமமான காரியமாக இருந்தது. அதை அறுத்தெடுப்பது அப்படியொன்றும் லேசான காரியமாக இல்லை.

நிஜமாகவே தரமானதாக இருந்தது அந்த கம்பி.

————————————————

உலகில் சிறந்த உயிரியல் நிபுணர்களையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய விஷயம், ‘ ஒரு இந்தியனுக்கு இவ்வளவு உமிழ்நீர் சுரக்குமா? என்பதாகத்தான் இருக்கும். அவர்களுக்கு பாக்கு என்கின்ற வஸ்துவை மட்டும் சிறிது கொடுத்துவிட்டால் போதும். பௌர்ணமியன்று முழுநிலவை பார்க்கும் நாய்களால் ஊளையிடுவதை எப்படி கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதோ, அதுபோல பாக்கை போட்டுக் கொண்டு உமிழ்நீரை உழிழ்வதை இந்தியர்களால் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாது. நாற்பது. நாற்பத்தைந்து கிலோ எடையே கொண்ட ஒருவன் லிட்டர் கணக்கில் உமிழ்வது ஒரு உயிரியல் வியப்பு.

எப்பொழுதுமே அவர்கள் கூச்சப்படுவதேயில்லை. ஒரு நோயாளியாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்னால் உதவியிருக்க முடியும். திறந்தவிடப்பட்ட தண்ணீர் குழாயிலிருந்து, இடைவிடாமல் கொட்டுவது போல, உமிழ்நீரானது வாயிலிருந்து வெளிவந்து கொண்டேயிருந்தால் அவன் நோயாளி இல்லை என்று நான் எப்படி முடிவெடுப்பது. அவனது பற்கள் புதைத்தெடுத்த பிணத்தின் பற்களைவிட அதிகமாக சேதமடைந்திருந்தது. அதன் நிறம் காலியான கிரீஸ் டப்பாவின் அடிப்பாகம் போல, அல்லது தார் டின்னின் கரடுமுரடான அடிப்பாகம் போல தன் இயல்பை தொலைத்திருந்தது. எனக்கென்னவோ பற்கள் வெள்ளை நிறம் கொண்டவை என்று அவனிடம் கூறும் பட்சத்தில் அவன் சிரித்து விடுவான் என்றே தோன்றியது. அவனால் மனிதனின் பற்களானது வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் என்பதை அடுத்த ஜென்மத்தில்தான் அனுபவப் பூர்வமாக புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. இவனைப் போன்று ஊருக்கு 4 பேர் இருந்தால் போதும். பற்பசை தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை இழந்து, வியாபாரத்தில் தோல்வியடையும் நிலைக்கு கண்டிப்பாக தள்ளப்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பெரும்பாலும் இவர்களுக்கு பூச்சிப் பற்கள் தோன்றுவதில்லை. பூச்சிகளுக்கும் சுவாச உறுப்புகள் உண்டு என்பதை உயிரியல் விஞ்ஞானிகள் சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளலாம். அந்தப் பூச்சிகள் ஒரு துர்நாற்றம் பிடித்த வாய்க்குள் எவ்வளவு நேரம் தான் மூச்சைப் பிடித்துக் கொண்டு தாக்குபிடிக்க முடியும் .அவைகளுக்கும் உயிர்வாழ ஆசையுண்டு, உயிர்வாழ்வதற்கு உரிமையும் உண்டு. அப்பூச்சிகள் தங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்வதில் அக்கறை எடுத்துக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

அன்று அந்த திரையரங்கினுள் இருட்டறையில் கிஞ்சித்தும் கூச்சமின்றி 2 நிமிடத்துக்கு ஒருமுறை என முறைவைத்து, அனேகமாக எனக்கு பின்புறம், ஒரு உமிழும் சப்தம் வெகு நேரமாக கேட்டுக் கொண்டிருந்தது. இடைவேளை நேரத்தில் ஐஸ்கரீம் சாப்பிடும் ஆவலோடு குழந்தையின் குதூகலத்தோடு இருக்கையை விட்டு எழுந்த என் கண்கள் ஏன் அநிச்சையாக பின்னே திரும்பின என்று எனக்கு புரியவில்லை.

அந்த கோரத்தைப் பார்த்துத் தொலைத்தேன்.

5 டி.பி. நோயாளிகள், இறக்கப்போகும் கடைசி நிமிடத்தில் கின்னஸ் சாதனை படைத்துவிட்டு செத்து விடலாம் என்கிற ஆர்வத்தில் யார் அதிகமாக எச்சில் துப்புகிறார்கள் எனப் போட்டி நடைபெற, அதில் 5 நோயாளிகளும் தங்கள் முழு திறனைக் காட்டிவிட்டு இறந்து விட. கடைசியாக அந்த இடம் உலக மக்களுக்கு சின்னத்திரை மூலம் காண்பிக்கப்பட்டால் எப்படியிருக்குமோ? அப்படியொரு அருமையான காட்சி அது.

மதியம் உணவருந்தும் பொழுது சாம்பாருக்குப் பிறகு ஊற்றிக் கொண்ட ரசமானது மிக நன்றாக இருக்கிறது என 2 முறை கையில் ஊற்றி குடித்தது இப்பொழுது எனக்கு நியாபகம் வந்தது. காரணம் அந்த ரசம் இரைப்பையிலிருந்து, உணவுக்குழாய் வழியாக தொண்டை வரை வந்து எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் இரைப்பையிலேயே போய் தஞ்சமடைந்து விட்டது. அது வாந்தி வருவதற்கான முன்னெச்சரிக்கை. இதற்குமேல் அந்தக் கோரக்காட்சியை பார்க்க வேண்டாம் முட்டாளே என அந்த விஷயம் எனக்கு எச்சரிக்கை மணி அடிப்பது போல இருந்தது.

ஜீசஸ் தனது மலைப் பிரசங்கத்தின் போது, இவ்வாறு கூறினாராம்.

‘உன் நண்பனை மன்னிப்பதில் என்ன இருக்கிறது. உன் எதிரியையும் மன்னிப்பாயாக. அதுதான் உண்மையான அன்பு.”

ஒருவேளை நான் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தால் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது சண்டை போட்டிருப்பேன். எப்படி என்னால் ஒரு முறைவைத்து எச்சில் துப்பியவனை மன்னிக்க முடியும்.

கடவுளே 77 முறை மன்னித்தாகிவிட்டது. நான் சத்தியமாக பீட்டர் இல்லை. என்னை நம்புங்கள்……..

நான் எம்.ஜி.ஆராக மாறினேன்.

அவன்; நம்பியாராக ஆகிப் போனேன்.

திரையரங்கில் படம் இடைவேளைக்குப்பின் போடப்படவில்லை.

காரணம் கேட்டால் படம் ஓட்டுவதற்கு திரை என்று ஒன்று இருக்க வேண்டுமாம்.

நான் பாதியைத்தான் கிழித்தேன். மீதியை அவனல்லவா கிழித்தான்.

இந்த போலீஸ்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்க்கும் என்று தெரியவில்லை.

காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று கவர்ச்சி உடையில் உட்காரவைத்து பின்பு வழியனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பாவம் இந்த நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் காவல்துறையில் பணியாற்றியிருப்பார்களோ என்னவோ?

————————————

5 சுயமுன்னேற்ற நூல்களை ஆர்வத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து படித்தவனைப் போல ஆவேசமாக முன்னேறத் துடிப்பவனின் வேகத்தோடு, இடையில் வந்து தனது ஹீரோஹோண்டா பைக்கை சொருகினான் அந்த இளைஞன். நல்லவேளை எனது டூவீலருக்கும் அந்த காருக்கும் இடையே 30 சென்டிமீட்டர் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளிக்குள் எவனும் நுழைய முடியாது என்கிற எனது நெப்போலிய நம்பிக்கையை உடைத்து தகர்த்து எரிந்துவிட்;ட அந்த இளைனை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க நான் ஒன்றும் இடிந்து போன சுவர் அல்ல.

அவனது முதுகில் இருக்கும் அந்த பையை நான் நீல் ஆமஸ்ட்ராங்கின் முதுகில் பார்த்திருக்கிறேன். அவன் தனது தலையை சுற்றி இரும்பு உறை (தமிழில் ஹெல்மெட்) அணிந்திருந்தான். அது கொளுத்தும் வெயிலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக இருக்கலாம். அல்லது தனது முகத்தின் நிறத்தை பாதுகாப்பதற்காக இருக்கலாம். அல்லது கருப்பு கண்ணாடிக்கு அந்தப் பக்கமாக இருந்து கொண்டு அழகான பெண்களை திருட்டுத் தனமாக ரசிப்பதற்காக இருக்கலாம். அல்லது நூறடிக்கு ஒருமுறை சிக்னலை போட்டு வைத்து வெறுப்பேற்றும் அரசாங்க ஊழியரை பார்த்து கொண்டே கடந்து செல்லும் போது தன் அடையாளம் மறைக்கப்படுவதற்காக இருக்கலாம்.

வினாடிக்கு ஒருமுறை அந்த ஆக்சிலேட்டரை முறுக்க வில்லையென்றால் தன்னால் உயிர்வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டவனாய், ஆவேசத்துடன் முறுக்கிக் கொண்டிருந்தான். அவன் வண்டியிலிருந்து வெளிப்படும் புகை என் மூக்கு துவாரத்தை துளைத்து எடுத்துக் கொண்டிருப்பதை கூட நான் பொருத்துக் கொள்வேன். ஆனால் ஓசோன் படலத்தில் அந்த புகையால் ஏற்படப் போகும் ஓட்டையை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஓசோன் என்ன அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா அவனுக்கு. அவனிடம் சென்று

‘பிறருக்கு துன்பம் இளைக்காமல் உங்கள் வேலையை செய்யுங்கள். தயவு செய்து அதிகமாக புகை வெளியேறும் படி ஆக்சிலேட்டரை முறுக்காதீர்கள்”

என்று கூறினால், அவன் என்ன செய்வான். என் மேல் காரித்துப்பிவிடுவானோ என்கிற பயம்தான் என்னை பாடாய் படுத்துகிறது. அதனால் தான், அந்த ஒரே காரணத்துக்காகத்தான் நான் இவ்வாறு செய்ய நேர்ந்தது.

அவனைப் பார்த்தால் நீச்சல் தெரிபவனைப் போல்தான் காணப்பட்டான். நல்ல நீச்சல் வீரனைப் போல வாட்டசாட்டமாகத்தான் இருந்தான். ஏன், சுத்தமான நீரில்தான் நீச்சல் அடிக்க வேண்டுமா? கருப்பான திரவத்தில் நீச்சல் அடிக்கக் கூடாதா? உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் எதில் நீச்சல் அடித்தால் தான் என்ன?

நான் எவ்வளவு பெருந்தன்மையானவன் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை அவனை பின் தொடர்ந்தேனே தவிர, எந்த ஒரு இடத்திலும் தள்ளி விடவில்லை. ஏதோ பாவப்பட்டு ரோட்டோரம் காணப்பட்ட கூவத்தில் ஓரம்கட்டி இடித்துவிட்டேன். நல்லவேளை பெரிதாக அவனுக்கு எந்தவித அடியும்படவில்லை. என் பெருந்தன்மையை புரிந்து கொள்ளாத அவன் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டினான். அநத கெட்டவார்த்தை, என் முகத்தில் அவன் புகையை அடித்த போது நான் கூறிய கெட்டவார்த்தையை விட மோசமானது அல்ல.

கடவுளே அவனது பாவங்களை மன்னிப்பீராக.

Series Navigation

வன்முறை

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

மண்குதிரை


வன்முறை
வெளியே எங்கும் செல்லவில்லை

சில தூக்கமருந்துகளோடு கழிகிறது

இந்த

24மணி நேரமும்

வெயிலில் இயங்கிக்களைத்த

இவ்வுலகம்

நிலவில் மயங்கிக் கொண்டிருந்ததாம்

வழக்கம் போல்

வேறென்றும்

நிகழவில்லை

என் இல்லாமையால்

உருவாக்கிவிட முடியவில்லை

எந்த வன்முறையையும்


jeyaraamasamy@gmail.com

Series Navigation

வன்முறை

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

ப்ரியம்வதா


கறுப்பும் சிவப்புமாய்
ஒன்றோடொன்று இடித்தபடி
சின்னஞ்சிறு குளம்புகள்
மிதிக்கப்பட்டு
மந்தையாய் ஓடும்போது
இடையனின் சிறுகுச்சி
அவ்வப்போது உடல் உரசுவது
ஓட்ட ஒழுங்கிற்கோ,
ஒழுக்க விலகலின் தண்டனைக்கோ –
குட்டியாட்டுக்குப் புரிவதேயில்லை.
என்றாலும்
அன்றாட வாழ்க்கையின்
பழகிப்போன அங்கமாக
ஆகிவிட்டது இடையனின் கைக்கோல்.
கொழுகொழுத்து வளர்ந்தபின்
கசாப்புக்கடைக்காரனின் கையில்
வெட்டரிவாளின் கூர்மையைப்
பார்க்கும்வரை புரிபடவேயில்லை
சிறுகோலில் ஒளிந்திருந்த வன்முறை


umakmohan@yahoo.com.

Series Navigation

வன்முறை

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

செல்வநாயகி


****
ஆரம்பித்துவிட்டன பூக்கள்
எப்போதும்போலவும்
இதற்கெனவே காத்திருந்தனவுமாக
எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து
ஒரு சத்தமற்ற மோதலை

பேயாட்டத்தினின்றும்
விடுவித்துவிடும் கவனத்தில்
இடம்மாற்றி வைக்கப்பட்டும்
தப்புவதில்லை பூந்தோட்டம்
பெருங்காற்றின் கைகளில் இருந்து

இயலும்வரை போராடுகின்றன செடிகள்
எதிரெதிராக வளைந்தும்
மற்றொன்றின் நிமிர்தலில் குனிந்தும்
பூக்களின் சேதத்தை
தவிர்த்தலின் பொருட்டு
ஆனாலும்
மோதித் தொலைக்கின்றன பூக்கள்
செடிகள் தன்னிலைக்குத் திரும்புகையிலேனும்

சாதுக்களுக்குள்ளும் நுழைகிறது சிலசமயம்
உபயோகமற்று அழிந்தாலும்
மோதலை வெறுக்காத குரூரம்

உரமிட்டுவிட்டு நீர்பாய்ச்சும்போதும்
களையெடுத்தபின்பு ஓய்வெடுக்கும்போதும்
சிந்தித்தபடியே இருக்கிறான் தோட்டக்காரன்
பூக்கள் மோதமுடியாவண்ணம்
கட்டிவைக்க ஒரு கயிறோ
பூந்தோட்டம் கண்டவுடன்
வேகம் குறைத்துக்கொள்ளும் காற்றோ
வேண்டிப்பெறும் வழியை

அதுவரை தொடர்ந்துகொண்டுதானிருக்கும்
மோதலில் மடிந்துபோதல் பூக்களுக்கும்
சூடிக்கொள்ள நினைக்கும்நாளில்
பூக்கள் இல்லாதுபோதல்
தோட்டக்காரன் மனைவிக்கும்.
****
snayaki@yahoo.com

Series Navigation