முரண்பாடுகள்
எஸ். பாபு

அலைகள் கால்தொடும்போது
துள்ளிக் குதிக்கிற
குழந்தைகள் நிறைந்த
இதே கடற்கரையில்தான்
திரிகிறார்கள் –
சுண்டல் விற்கிற சிறுவர்களும்.
புது மணம் மாறாத
புடவைகளை
வாசல்தோறும் விரித்து
வியாபாரம் செய்கிறவன்
வந்து போகிற
அதே தெருவில்தான் வருகிறான் –
பழைய துணிகளுக்கு
பாத்திரம் தருபவனும்.
பல்லாண்டு வாழ
வாழ்த்தப்பட்டு
பிறந்தநாள் கொண்டாடுபவரின்
புகைப்படம் பிரசுரமாகிற
அதே செய்தித்தாள்களில்தான்
வெளியாகின்றன –
கண்ணீர் அஞ்சலிக் கட்டங்களுக்குள்
இறந்தவர்களின் முகங்கள்.
***
-எஸ். பாபு
***
agribabu@rediffmail.com