பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

சி. ஜெயபாரதன், கனடா


முன்னுரை: சென்ற வாரத் திண்ணை [மார்ச் 11, 2004] அரசியல் கட்டுரையில் திருமதி மஞ்சுளா நவநீதன் தினமலரில் பால்மய வீதியைப் பற்றி வெளிவந்த விஞ்ஞானத் தகவலில் பெயர் தவறொன்றைக் காட்டி யிருந்தார். ஹப்பிள் விண்ணோக்கி படம்பிடித்த காலக்ஸிகளைப் பற்றித் தினமலர் வெளியிட்ட செய்தி சரியானதுதான் என்பது எனது கருத்து. நாமறிந்த வரையில் பூமி ஓர் அண்டம். காலக்ஸியை அண்டம் என்று குறிப்பிட வேண்டும் என்று எழுதி யிருக்கிறார், மஞ்சுளா. கோடான கோடிப் பரிதிளைக் கொண்ட ‘விண்சுருள் தீவு ‘ [Galaxy] நமது பால்மய வீதி! பிரம்மாண்டமான அந்த விண்மீன் தீவை ஓர் அண்டம் என்று குறிப்பிடலாமா என்பதுதான் கேள்விக்குரியது! அண்டம் என்றால் அகராதியில் முட்டை, உலகம், வெளி என்ற அர்த்தங்கள் உள்ளன. அகிலத்தில் உலவிவரும் பால்மய வீதி, அதில் நீந்தும் நமது பரிதி மண்டலம், அதனுள்ளே சுற்றிவரும் ஒன்பது கோள்கள் ஆகியவற்றின் பண்புகளைப் பற்றி விஞ்ஞான நூல்கள் என்ன கூறுகின்றன, அவற்றை எப்படித் தமிழில் தனித்து விஞ்ஞானச் சொற்களில் விளக்கலாம் என்பதைக் காட்ட முற்படுகிறது, இக்கட்டுரை.

அண்டங்கள், விண்மீன்கள், விண்மீன் தீவுகள் கொண்ட பிரபஞ்சம்

நாம் வாழும் பூமி ஒரு சிறு அண்டம் [Planet]. பொரி உருண்டை போல் உள்ளதால் அதை ஓர் அண்ட கோளம், அல்லது கோள் என்று கூறலாம். கோள வடிவில் இல்லாமல் முட்டை வடிவு, வக்கிர வடிவு அண்டங்களும் பரிதியைப் பூமிபோல் சுற்றி வருகின்றன. அண்டம் எனப்படும் அகிலப் பிண்டத்துக்குச் [Matter] சூரியனைப் போன்று சுய ஒளி கிடையாது! புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ ஆகிய அனைத்து அண்டங்களும் சுயவொளி அற்ற வெறும் பிண்டங்கள்!

பூமியைப் போல் திடப் பிண்டம் உருண்டு திரண்ட கோளன்று வியாழன். வியாழன் ஒரு வாயுக் கோளம். கொண்டுள்ள வாயுவின் கொள்ளளவு, அழுத்தம், உஷ்ணம் ஆகிய மூன்றும் குன்றி யுள்ளதால், பரிதியைப் போல் வியாழன் வெப்ப அணுக்கரு இயக்கத்தைத் [Thermonuclear Reaction] தூண்டித் தொடர்ந்து எரிந்து ஒளியூட்ட முடியவில்லை. பரிதியைச் சுற்றும் அண்டங்கள் யாவும் சூரிய ஒளியை ஏற்றுத்தான் எதிரொளிக்கின்றன. சுய ஒளி வீசும் சூரியனைப் போன்ற வாயுக் கோள்களை ‘விண்மீன்கள் ‘ அல்லது நட்சத்திரங்கள் (Stars) என்று குறிப்பிடுகிறோம்.

பூதக்கோள் வியாழன் பூமியைப் போல் 300 மடங்கு கனமானது! சூரியன் வியாழனைப் போன்று 1000 மடங்கு நிறை கொண்டது! பரிதி தனது மூர்க்கமான ஈர்ப்பியல் வலுவால் ஒன்பது அண்டக் கோள்கள், கோடான கோடி அண்டக் கற்கள், எரிகற்கள், பில்லியன் கணக்கான வால்மீன்கள் ஆகியவற்றைத் தன்னாட்சி மண்டலத்தில் கட்டுப்படுத்தி வருகிறது.

அகில நகர்ச்சிப் பூங்காவில் ஒளியின் வேகமே உச்ச வேகமாக [விநாடிக்கு 186,000 மைல் வேகம் அல்லது 300,000 கி.மீடர்/செகண்டு] ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நிரூபித்துக் காட்டினார். 250,000 மைல் தூரத்தில் உள்ள நிலாவின் எதிரனுப்பு ஒளி, பூமியை அடைய [250,000/186,000 =1.34 விநாடி] 1.34 விநாடி எடுக்கிறது. அதாவது சந்திரன் 1.34 ஒளிவிநாடி [1.34 Light second] தூரத்தில் உள்ளது! அதுபோல் ஒளி பரிதியிலிருந்து பூமிக்கு வர 8 நிமிடம் எடுக்கிறது. அதாவது சூரியன் பூமிக்கு 8 ஒளிநிமிடத் [8 Light minute] தொலைவில் உள்ளது. பரிதி மண்டலத்தின் பிற அண்டங்கள் ஒளிநிமிட முதல், ஒளிமணித் [Light min to Light hour] தூரங்களில் பூமிக்கு அப்பால் சுற்றி வருகின்றன. விண்வெளியில் கண்ணுக்குத் தெரியும் விண்மீன்கள், தொலைநோக்கியில் காணும் விண்மீன்கள் ஆகியவற்றின் நீண்ட தூரங்கள் யாவும் ஒளியாண்டில்தான் [(Light year) Distance Light travels in a year] குறிப்பிடப் படுகின்றன!

பரிதி ஒரு வாயுக்கனல் கோளம் (90% ஹைடிரஜன், 8% ஹீலியம், 2% கனமூலகங்கள்). பூமியைப் போல் மூன்றில் ஒரு மில்லியன் கனமும் [Mass], மில்லியனுக்கு மேற்பட்ட கொள்ளளவும் [Volume] கொண்டது, சூரியன்! பிரம்மாண்டமான இந்தப் பரிதி நமது பால்வீதியில் ஒரு சிறு சாதாரணமான விண்மீனாகக் கருதப்படுகிறது. விண்வெளியில் ஆயிரம் ஆயிரம் விண்மீன்கள் நேராகக் கண்களில் தென்படுகின்றன. தொலைநோக்கிகள், குறிப்பாக ஹப்பிள் மூலமாக மில்லியன் கணக்கில் விண்மீன்கள் காணப்பட்டு வருகின்றன. ஒரு சில நூறாயிரம் மில்லியன் விண்மீன்களைக் கொண்டது ஒரு காலக்ஸி [Galaxy] என்று பெயர் பெறுகிறது. பரிதியும், பரிதி மண்டமும், பரிதியைப் போல் 200 பில்லியன் விண்மீன்களைப் பெற்றுப் பிரம்மாண்டமான சுருள் வடிவத் தீவு, நமது பால்மய வீதி! பால்மய வீதியும் ஒரு காலக்ஸியே! காலக்ஸிகளைப் பால்மயத் தீவுகள் [Milky Islands] என்று நாம் குறிப்பிடலாம்.

காலக்ஸிகளில் உள்ள அனைத்து விண்மீன்களும் பரிதியைப் போல் சுய ஒளி வீசுபவை. ஆனால் அவை பல ஒளியாண்டு தூரத்தில் இருப்பவை! ஒர் ஒளியாண்டு என்பது 6000 பில்லியன் மைல் தூரத்தைக் குறிக்கும்! சுருள் ஆழி வடிவில் தோன்றும் நமது காலக்ஸியின் அகற்சி 100,000 ஒளியாண்டு தூரம்! [1 kpc =kilo parsec =3260 Light years] அந்தச் சுழியில் நமது பரிதி, நடு மையத்துக்கு அப்பால் 30,000 ஒளியாண்டு தூரத்தில் 2/3 அல்லது 3/4 பங்கு விளிம்பை நோக்கித் தள்ளி உள்ளது! வான மண்டலம் தெளிவாகத் தெரியும் இரவில், தொடுவானை நோக்கிப் பார்க்கும் போது விளிம்பில் உள்ள விண்மீன்கள் வீசும் மங்கிய ஒளியே ‘பால்மய வீதி ‘ [Milky Way] என அழைக்கப் படுகிறது.

பிரம்மாண்டமான விண்மீன்களின் தீவான, நமது பால்மய வீதியை ஓர் அண்டமாக கருதுவது சரியா ? பூமி ஓர் அண்டம்! நிலவு ஓர் அண்டம்! சனிக்கோள் ஓர் அண்டம்! பரிதி ஓர் அண்டமாகாது! அதுபோல் ஆயிரம் கோடிப் பரிதிகளைக் கொண்ட பால்மய வீதியும் ஓர் அண்டமாகாது! பரிதியைப் போன்று, கோள்கள் சுற்றும் பரிதி மண்டலத்தைப் போன்று, கோடான கோடி விண்மீன்களின் சுற்று மண்டலங்களைக் கொண்ட, நமது பால்மய வீதி விண்மீன்களின் ஒரு கூட்டுத் தீவு [An Island of Stars]! காலக்ஸிகள் படர்ந்து பரவிய விண்வெளித் தீவுகள்! விண்மீன் தீவுகள்! பல பில்லியன் விண்மீன் தீவுகளைக் கொண்டு விரிந்து செல்வது, பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சம்!

விண்மீன்கள் கூடிச் சுற்றிவரும் இந்த விண்வெளித் தீவுகளைத்தான் ‘காலக்ஸிகள் ‘ என்று பெயரிட்டுள்ளார்கள். ஒவ்வொரு காலக்ஸியிலும் கோடான கோடி பரிதிகள் பல ஒளியாண்டு தூரத்தில் நகர்ந்து வருகின்றன. காலக்ஸித் தீவுகளில் சில தீவுகள் இணைந்து [Clusters of Galaxies] காலக்ஸி மந்தைகளாய்க் காணப் படுகின்றன. அப்பெருந் தீவுகளைப் ‘பெருமந்தைகள் ‘ [Superclusters] என்று அழைக்கலாம். பரிதியை அண்ட கோள்கள் சுற்றி வருவது போல், பிரபஞ்சத்தில் காலக்ஸியும் சுற்றி வருகிறது. பரிதி மண்டலத்தைச் சுமந்து கொண்டு சுற்றிவரும், பால்மய வீதியின் சுழல்வீதி வேகம் [Galactic Orbital Speed] விநாடிக்கு (200-300) கி.மீடர் [மணிக்கு (1-2) மில்லியன் மைல்]. அந்த வேக வீதத்தில் பால்மய வீதி ஒருமுறைச் சுற்றை முடிக்க 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது!

பால்மய வீதி, காலக்ஸி ஆகியவற்றை ஓர் ‘அண்டம் ‘ என்று குறிப்பிடுவதைக் காட்டிலும், ‘விண்வெளித் தீவு ‘, ‘விண்மீன் தீவு ‘ அல்லது ‘பால்மயத் தீவு ‘ என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.

****

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா