ஒ போடாதே, ஒட்டுப் போடு

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஞாநி எழுதியுள்ளது இன்றைய சூழலில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறவே உதவும். தேர்தல் முறையில், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் மாற்றம் வேண்டும். அது நீண்ட கால செயல் திட்டமாக இருக்கக்கூடும். வாக்காளர் இன்று தீர்மானிக்க வேண்டியது எந்தக் கூட்டணியை ஆதரிக்கிறோம் என்பதே. இதில் எதையும் தேர்ந்தெடுக்கமாட்டேன் என்றால் அது யாருக்கு சாதகமாக முடியும் என்பது வெளிப்படை. வாக்காளர் ஆதரவு குறைவாக இருந்தாலும் கூட ஒரு கூட்டணி வெற்றி பெற இது உதவும். 40% வாக்காளர்கள் ஒட்டுப் போட்டால் அதில் 50 % அதாவது மொத்த வாக்காளர்களில் 20% தெரிவு செய்தவர் வெற்றி பெறுவார். இதுதான் யதார்த்தம்.

இந்தியாவில் தேர்தல் முறையில் பல குறைகள் இருந்தாலும் வாக்காளர் தேர்தலில் பங்கேற்பதற்கு ஒரு முக்கிய காரணம் தங்கள் தெரிவினை வெளிப்படுத்த. எந்த வேட்பாளரையும் தெரிவு செய்ய விருப்பம் இல்லை என்ற நிலையிலும் கூட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தெளிவாக்குவதற்காகவே ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லது, மிக நல்லது, சிறப்பானது என்ற கேள்விக்கு இப்போது இடமில்லை, மாறாக படு மோசம், மோசம் இந்த இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற நிலைதான் இப்போது உள்ளது. சில தேர்தல்களில் வாக்காளர்கள் மிகத் தெளிவாக தங்கள் தெரிவினை முன் வைத்துள்ளனர். 1977 ல் வட மாநிலங்களில் காங்கிரஸ் பெருவாரியாக தோற்றது, அதற்கு முக்கிய காரணம் எதிர்கட்சிகள் ஒரணியில் திரண்டு ஒரு புதிய கட்சியை உருவாக்கியதே. அதே போல் 1967ல் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை விட திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு ஒட்டுகள் சிதறாமல் இருந்ததே. மேலும் கூட்டணிகள் கிட்டதட்ட சம பலத்தில் உள்ள கேரளாவில் எந்தக் கூட்டணியும் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றியதில்லை. மேற்கு வங்கத்தில் ஒரு வலுவான கூட்டணி இடதுசாரி கூட்டணிக்கு எதிராக இல்லாத போது இடதுசாரி கூட்டணி 1977 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. விகிதாரமுறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டால் இந்த முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்க கூடும். ஆனால் அவ்வாறு இல்லாத போது யார் வேண்டாம் என்பதே தெரிவாக உள்ளது

.

1977 தேர்தலில் காங்கிரஸ் தென்னிந்தியாவில் பெரும் வெற்றி பெற்றது, ஆனால் பத்தாண்டுகளுக்குள் அத்தகைய வெற்றியை எல்லாத் தேர்தல்களிலும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. 1967 தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரசின் இடம் கேள்விக்குள்ளானது.ஆனால் காங்கிரசல்லாத கட்சிகள் ஒரு நிலையான ஆட்சியை தர இயலவில்லை.இப்போது பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தொடர்ந்து ஆறாண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் காங்கிரஸ் அல்லாத கூட்டணி வலுவாக இருக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. கூட்டணி ஆட்சி என்பதை காங்கிரசும் ஏற்கவேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலை தீடிரென ஏற்படவில்லை. மாறாக தொடர்ந்து பல தேர்தல்களில் பல அணிகள் உருவாகி, மறைந்து, சில கட்சிகள் தொடர்ந்து பிளவுபட்டு, புதிய கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபித்து – இப்படி பல மாற்றங்களின் வெளிப்பாடுதான் இன்றைய கூட்டணி அரசியல். இதில் இரண்டுமே மோசம் எனவே எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது அரசியலை புரிந்து கொள்ள முடியாதவர்களின் வாதமாக இருக்கலாம். இந்திய அரசியலைப் புரிந்து கொண்டவர்கள் இதை வேறுவிதமாக அணுகுவார்கள்.

காங்கிரஸுக்கு எதிராகப் போடப்படும் ஒட்டுகள் யாருக்கு ஆதரவாக முடியும் என்பதை யோசிக்க வேண்டும். ஒட்டுகள் சிதறுவதன் மூலம் எந்தக் கூட்டணி அதிக அளவில் பயன் அடையும் ?. முதன்மையான தெரிவு இது, இரண்டாம் தெரிவு இது என்று வாக்காளர் முடிவினை பதிவு செய்யும் சாத்தியமில்லாத போது யாரையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஒரு நல்ல நிலைப்பாடாகத் தோன்றலாம். அது சரியான நிலைப்பாடுதானா என்பதே கேள்வி.

இன்று உள்ள அணிகளில் எந்த அணியை ஆதரிப்பது நீண்ட காலப் போக்கில் நல்லது என்பதை விட எதை ஆதரிப்பது குறைவான ஆபத்தானது என்றேதான் யோசிக்க வேண்டும். பா.ஜ.க தலைமையிலான கூட்டணியை நிராகரிப்பதே முக்கியமானது என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்தும் போது காங்கிரஸ்/திமுக தலைமையிலான கூட்டணியை விமர்சித்து எழுதலாம். ஆனால் யாரையும் ஏற்காதே என்றால் அந்த நிலைப்பாட்டினால் என்ன பயன் ஏற்படும். தேர்தல் முறையில் மாறுதல் தேவை என்பதற்கான முயற்சிகள் தேவை. அவை இன்றைய தேர்தல் முறையில் குறைப்பாடுகளை களைய உதவ வேண்டும், நிராகரிக்க அல்ல. இத்தகைய முயற்சிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தேர்தல் குறித்த புரிதலும். ஒரு மேம்போக்கான புரிதல் ஞாநி முன்வைக்கும் நிலைப்பாட்டிற்கே இட்டுச் செல்லும். கடந்த 15/10 ஆண்டுகளில் இந்திய அரசியல், தேர்தல் அரசியல், தேர்தலில் வெளிப்படும் தெரிவுகளின் சமூகப் பின்புலங்கள் குறித்து விரிவான ஆய்வுகளும், விவாதங்களும் நடைபெற்றுள்ளன. (1)

இந்தியாவில் தேர்தல்கள் புதிய கருத்துகள், சமூக சக்திகளின் செல்வாக்கினை அறியும் ஒரு வழியாகவும், முன்பு விளிம்பில் இருந்த கட்சிகள், குறிப்பிட்ட சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மைய நீரோட்டத்தில் பங்கேற்கவும் ஒரு வாய்ப்பாக உள்ளது. உதாரணமாக பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பத்தில் தலித்துகள் கட்சி என்று இருந்தாலும் இன்று அதைத் தாண்டி வந்துள்ளது. தேர்தலில் தன் பலத்தினை நிரூபித்த்தன் மூலம்தான் அது தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடிந்த்து. இதே போல் ஹிந்த்துவத்தின் வளர்ச்சி, பிற்படுத்தப்படுத்த ஜாதியினர் அரசியல் ரீதியாக பெரும் செல்வாக்குப் பெறுவது போன்றவை தேர்தல்கள் மூலம் புலனாகின்றன. எனவே தேர்தல்கள் வெறும் அரசியல் சார்ந்த, பதவிக்கான போட்டி மட்டுமல்ல. மாறாக சமூக மாற்றம், அதிகார பகிரிவு குறித்தவையும் கூட. ஞாநி இதை புரிந்து கொள்ளவில்லை. எனவேதான் அவருக்கு நீண்ட கால செயல்பாட்டிற்கான முயற்சி எது, இன்று செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த தெளிவு இல்லை. இது கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிகிறது. நீண்ட கால செயல்பாட்டிற்கான முயற்சிகள் முக்கியம், அதே சமயம் இந்தத் தேர்தலில் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதும் முக்கியம். தேர்தலை புறக்கணிக்கும், தேர்தலில் யாருக்கும் ஒட்டு போடுவதில்லை போன்ற நிலைபாடுகள் இன்று பா.ஜ. கூட்டணிக்கே சாதகமாக முடியும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு போடப்படும் ஒட்டு பா.ஜ.க் கூட்டணி முன்னிறுத்தும் அரசியலுக்கு எதிரான ஒட்டு. எனவே இந்த தேர்தல் ஒரு கருத்துக்கணிப்பும் கூட. தேர்தலை ஒட்டி விழிப்புணர்வு ஏற்பட பிரச்சாரம் செய்வது, வாக்களர்கள் தேவையான தகவல்களை பெற உதவுவது போன்ற பணிகள், தேர்தல் முறையில் மாற்றம் குறித்த முயற்சிகள், விவாதங்கள் தேவை. ஆனால் அதை விட முக்கியமான பணி இன்றைய தேர்தலில் எந்த அரசியல் கூட்டணியை ஏற்க முடியும் என்பதை தெளிவாக்குவதே. தேர்தலுக்குப் பின் பா.ஜ.கவுடன் அரசில் பங்கேற்க தி.மு.க, பா.ம.க முன் வரலாம். அதே சமயம் பெருவாரியான மக்களின் தேர்வு தமிழ்நாட்டில் பா.ஜ.க, அதிமுக கூட்டணியை நிராகரிப்பது என்றால் அது இந்த இரண்டு கட்சிகளையும் யோசிக்கவாது தூண்டும். தேர்தலில் யாருக்கும் ஒட்டில்லை என்ற நிலைப்பாட்டினால் இது சாத்தியமில்லை. எனவே தங்கள் தெரிவினை உறுதி செயவ்தன் மூலம் வாக்களர்கள் எந்த அரசியல் நிலைப்பாடுகளை நிராகரிக்கிறோம் என்பதையாவது தெளிவாக்க முடியும்.

எனவே ஞாநி முன்வைக்கும் நிலைப்பாடு சரியானது அல்ல.

(1) உதாரணமாக Seminar Feb 2004 இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளை காண்க.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation