A Mighty Wind (2003)

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

மாது


கல்யாணம், கிடா வெட்டு, கஞ்சி ஊத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, கருமாதி – நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நிகழ்ச்சிக்குள் மூழ்காமல் சற்றே ஒதுங்கி நின்று நிகழ்வுகளை கவனியுங்கள். ஒரு பார்வையாளனாக இருங்கள். வம்பு பேசும் அத்தை, அடுத்தவன் மனைவியை ரகசியமாய் ரசிப்பவர், விட்டு விட்டு அழுதுக் கொண்டிருக்கும் குழந்தை, சிடு சிடு கணவன், வெள்ளிச் சொம்புக்காகச் சண்டை போடும் வருங்கால மாமியார், கண்ணாம்பூச்சி விளையாடும் சிறுவர், பெருத்த குசுவை அடக்கி விட்டு அசடு வழியும் பெரியவர், எச்சில் இலைக்காக காத்துக் கொண்டிருக்கும் நாய்கள், நாயிடம் வம்பிழுக்கும் காக்கை, தனக்கு வேண்டப்பட்டவர் வந்திருக்கிறாரா என்று தேடும் கண்கள் இப்படி எத்தனையோ கதாபாத்திரங்களைக் காண நேரிடும். நீங்கள் சற்று கற்பனை மிக்கவராக இருந்தால், ‘நாய்ப் பிழைப்பு ‘ என்ற சிறுகதையோ, ‘குழந்தை, தாய், தந்தை ‘ என்ற குறுநாவலோ, அல்லது பெரு நாவலில் ஒரு அத்தியாயமோ உருவாகலாம். ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, அந்நிகழ்ச்சியின் பின்னால் சென்று, நிகழ்ச்சிக்காக நடக்கும் ஆயத்தங்களையும், நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒவ்வொருவரின் குணாதியசங்களையும், நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ள மெல்லிய நகைச்சுவையையும் வெளிக்கொணரும் படியாக உங்களால் ஏதாவது செய்ய முடியுமா ? முடிந்தால் – கையைக் கொடுங்கள் – உங்களுக்கு கேலிப்படக்காரர் (mocumentarian) ஆவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

A Mighty Wind ஒரு கேலிப்படம் (mockumentary). (அமெரிக்க) நாட்டுப்புற இசைக்குழுக்களின் (folk singers) மேலாளர்/ நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் இறந்து விடுகிறார். சில நாட்டுப்புற இசைக்குழுக்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதே அவருக்கு செய்யும் முறையான அஞ்சலி என்று முடிவு செய்கின்றனர் அன்னாரது மக்கள். மூன்று நாட்டுப்புற இசைக்குழுக்களை ஒருங்கிணைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதுவே படத்தின் கதை. இந்த இசை நிகழ்ச்சிக்கு நடக்கும் ஆயத்தங்களையும், ஒவ்வொரு இசைக்குழு உறுப்பினர்களின் குணாதியசங்களையும் (கிறுக்குத்தனங்களையும்), இசைக்குழுக்களின் பூர்வீகங்களையும், நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கோர்வையாக கோர்த்து (கேலிப்)படமாக்கியிருக்கிறார் க்ரிஸ்டொஃபர் கெஸ்ட் (Chritopher Guest).

நகைச்சுவை வசனங்கள் என்று தனியாக ஒன்று இல்லாமல் படம் முழுதும் சிரிக்க வைத்திருப்பது இயக்குநரின் திறமை. அதற்காக நடிகர்களை ஒரு சிட்டிகை மிகையாக நடிக்கவிட்டு, அடிப்படையில் உள்ள நகைச்சுவையை மேலே கொண்டு வந்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். படத்தின் காட்சிகளில் தொன்னூறு சதவிகிதம் கதாபாத்திர க்ளோசப் காட்சிகளாக இருந்தாலும் இயக்குநரால் காட்சிகளை விறு விறுப்பாக தர முடிந்திருக்கிறது. இதைப் போன்ற படங்களுக்கு எளிமையான வசனங்கள் பலம்.

படத்தில் வரும் எல்லா நடிக நடிகைகளும் தங்கள் காட்சிகளை செம்மையாகச் செய்திருக்கின்றனர். எனக்குப் பிடித்த சில கதாபாத்திரங்கள் – (அதி) முன் ஜாக்கிரதை முத்தண்ணாவான நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர், சற்றே மறை கழண்ட மிட்ச் (Mitch) என்னுப் பாடகர் (Eugene Levy), மிட்ச் என்னும் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே (அசட்டுக்) காதலை கண்களில் காட்டும் அவரது சக பாடகி, தன் அசட்டு ஜோக்குகளுக்கு தானே சிரித்துக் கொள்ளும் ஒரு குழுவின் மேலாளர், கிராமிய இசை நிகழ்ச்சிக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதற்கு கிராமிய இசை பற்றி ஒன்றுமே தெரிந்திருக்க தேவையில்லை என்று பிதற்றும் இரண்டு மக்கள் தொடர்பு (P.R) அதிகாரிகள்.

A Mighty Wind முழுக்க முழுக்க குணச் சித்திர நடிகர்களால் ஆன படம். சிறந்த குணச்சித்திர நடிகர்களைக் கொண்டு படத்தை தயாரிப்பதில் சில ஆதாயங்கள் உண்டு. பார்வையாளர்களிடம் நடிகர்களைப் பற்றி எந்தவித முன் எதிர்பார்ப்பும் இருக்காது ( ‘இவர் அமெரிக்காவை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவார் ‘, ‘இவர் பறந்து பறந்து சண்டை போடுவார் ‘, ‘இவர் கடி ஜோக் அடிப்பார் ‘). யூஜீன் லெவி (Eugene Levy) போன்ற நடிகர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை போல் இருப்பார்கள் (the man next door). நீங்கள் அன்றாடம் கடைகளிலும், உணவுக் கூடங்களிலும், தியேட்டர்களிலும் சந்திக்கும் நபர்களைப் போன்ற தோற்றம். இவர்களுக்கு கதாபாத்திரமாக நடிக்காமல் கதாபாத்திரமாக மாறுவது எளிதான செயல். மிட்ச் கதாபாத்திரமாக மாறியிருக்கிறார் லெவி.

நீங்கள் இதுவரை அமெரிக்க நாட்டுப்புற இசை கேட்டதில்லை என்றாலும் கேட்பதில் அவ்வளவு ஆர்வமில்லை என்றாலும் உங்களை சிறிதளவேனும் மாற்றி அந்த இசையைக் கேட்க வைக்கும் ஆற்றல் இந்த படத்திற்கு இருக்கிறது. கிடார், செல்லோ (cello), பான்ஜொ (banjo) போன்ற எளிமையான கருவிகளின் துணையுடன் துள்ளலாகக் கதை சொல்லும் தன்மையுடன் அமைந்த அமெரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் காதுகளுக்கு இனிமை/எளிமை.

நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அவற்றில் உள்ள நகைச்சுவையை வெளிக்கொணரும் வகையில் கேலிப்படம் இயக்கும் கெஸ்ட்டின் திறமைக்கு அவருடைய மற்றொரு படமான ‘Best in Show ‘ மற்றுமொரு சான்று (நாய்ப் போட்டி நிகழ்ச்சியை மையமாக வைத்து எடுத்தது). வாய்ப்பு கிடைத்தால் இரு படங்களையும் பார்த்து ரசியுங்கள் (சிரியுங்கள்).

A Mighty Wind – கிச்சு கிச்சு மூட்டும் தென்றல்.

oo0oo

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது