மாலதி
எதிர்ப்பு பலமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் பலம் அது பரவலானதில் இருந்தது. அப்படிப்பட்ட எதிர்ப்பின் அவசியம் என்ன என்று சகலமும் வியந்தது. பூமி நகர்கிற படியே நகர்ந்து வந்தால் என்ன ஆகிவிடும் என்ற பார்வை மிகுந்தது. எதிர்ப்பாளிகள் கடுமையாக விமரிசிக்கப்பட்டார்கள்.
அப்படித்தான் ஒரு வர்த்தக ஜன்னல் முன் ஒரு எதிர்ப்பாளி நின்றிருந்தார்.
‘ஒரு பதிவு வேண்டும் ‘என்றார்.
‘குறுகிய காலமா ? நீண்டகாலமா ? ‘
‘விதிகள் எல்லாவற்றையும் விளக்கிவிடுங்களேன். ‘
‘விதிகளைத் தெரிந்து கொள்ளாமலா இங்கு வந்து நிற்கிறீர்கள் ? ‘
‘என்ன விதி பெரிதாக ? உங்கள் காட்டு ராஜாங்கத்தில் ? பதிவு இல்லாமல் வீதியில் நகரலாகாது. வாயில்களுக்குள் கதவுகளுக்குள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதிக்கக் கூடாது. வானத்தைப் பார்க்கக் கூடாது என்கிற விதியில்லையே! அந்த வரை நல்ல காலம். பெரிய ஆறுதல், ஏதாவது ஒரு வரிசையில் காத்திருப்பில் கழித்து விடலாம். அனுமதிக்கப்பட்ட நரக மூலைகளில் ,மன்னிக்கவும் ,நகர மூலைகளில் ஆறு மணி நேரம் தூங்கலாம்.அவ்வளவு தானே ? ‘
‘பதிவில்லாமல் இருப்பதற்கான விதிகளைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் போலும். ‘
‘ஆம், பதிவுக்கான விதிகளை நீங்கள் தாம் சொல்ல வேண்டும் ‘
‘நீங்கள் எதிர்ப்பாளி என்பதாக அறிகிறேன் ‘
‘மன்னிக்க வேண்டும். எது எதிர்ப்பு என்கிற முடிவுக்கே நான் இன்னும் வரவில்லை. தகவல்களை, நடப்புகளைக் கோர்வையாகிப் பார்த்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதற்குள் என்னை எதிர்ப்பாளி என்கிறீர்கள். அந்தப் பட்டமே என்னை இன்னொரு நிர்ப்பந்த விதிக்குள் தள்ளி விடுகிறது. ஒரு எதிர்ப்பாளியிடம் எதிர்பார்க்கப் படும் அடையாளங்கள், என் யோசிப்புகளை வெகுவாக பாதிக்கின்றன ‘
அதற்குள் நிறைய கூட்டங்கள் பதிவுக்குச் சேர்ந்து விட்டன. பலவாகிய ஜன்னல்கள் திறக்கப்பட்டு வித விதமான பதிவுகள் செய்யப்பட்டன. எல்லா ஜன்னல்களின் முன்னும் பெரிய வரிசைகளும் வரிசை மீறின எதிர்பார்த்தல்களும் முண்டியடித்தல்களும் இருந்தன.
எதிர்ப்பாளி நின்றிருந்த பதிவு ஜன்னலுக்கும் கூட்டம் பம்மியது. கூடுதல் கவனம் கொண்ட அந்தப் பதிவாளர் விதிகளடங்கிய புத்தகக்குட்டியைக் கொடுத்துக் கட்டணமும் வசூலித்துக் கொண்டார். எதிர்ப்பாளி ஜன்னலை விட்டு நகர்ந்தார். அந்தப் பெரிய கூடத்தின் ஒரத்து நாற்காலியில் அமர்ந்து புத்தகக்குட்டியைப் பார்வையால் மேய ஆரம்பித்தார்.
0 இலக்கமும் 1 இலக்கமும் ஆரம்ப அடையாளமாகி அதனால் உலகமே இரண்டாகப் பிரிந்திருந்தது.பதிவு மொத்தமுமே ஒரு காப்பீட்டுக் கொள்கையை அடிப்படையாகக்கொண்டிருந்தது.
விரிதல் பொருளாதார நோக்கத்தினின்று வேறுபட்டுக் குவிதல் பொருள் மையக் கோட்பாடு இருந்தது.
வெறும் ஆயுள் காப்பீடாகச் செயல்படாமல் தலைமுறைக் காப்பீடாக ச் செயல்படுவதே அதன் சிறப்பு என்கிறார்கள்.
0 இலக்கத்தவருக்கும் 1 இலக்கத்தவருக்கும் இறுதிக்காப்பீட்டுத் தொகையில் பலமடங்கு வித்தியாசமிருந்தது. அதைப் பற்றி எதிர்ப்பாளிகளே கூடப் பெரிதும் கவலைப் படவில்லை. காப்பீட்டுக் கொள்கையில் யார் இறுதி பற்றிக் கவலை கொள்வார்கள் ? திடாரென்று வரும் இறுதியல்லாத இறுதி குறித்தல்லவா கவலை ? அதற்கான ஆயத்தங்கள் எளிதில் மேற்கொள்ளப் படுவதில்லை. நிறைய அதிர்வு தாங்கிகள் தேவைப் படும்போதுஅவற்றின் ஓரளவு விகிதத்தையாவது காப்பீடு காத்துத் தருமா என்பதே கவனமாயிருந்தது.
காப்பீட்டுக்குத் தினப்படிக் கட்டணமிருந்தது. கட்டணம் 0,1 இலக்கத்தவருக்குச் சமம் என்றே சொல்லப் பட்டாலும் 0 பிரஜைகளுக்கு ஆரம்ப விகிதங்கள் அதிகமாய் இறுதிகளில் குறைந்து வருவதும் 1 பிரஜைகளுக்கு ஆரம்பக் குறைவுகள் வளர்வதும் ஆக திட்டம் நிறைய சிக்கல்களை வைத்திருந்தது.
எல்லாவற்றையும் விட மிகப் பெரிய விநோதம் காத்திருந்தது.தினப்படிக் காப்பீட்டுக் கட்டணம் ,இறுதிகளில் அல்லது விபத்தினால் நேர்ந்த இறுதியல்லாத இறுதிகளில் கிடைக்க இருக்கிற, வாக்களிக்கப் படுகிற, மொத்தத்தொகையின் தொண்ணூற்றொன்பது பங்காக இருந்தது. அதாவது ஒரு வெள்ளி காப்பீட்டுத் தொகைக்கு தொண்ணூற்றொன்பது வெள்ளி தினக் கட்டணம் தரப் பட வேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு காப்பீட்டுத் தொகையைப் பெற ஏறக்குறைய நூறு பங்கு கட்டணத்தைக் கட்டுவது அதிலும் தினப்படி கட்டுவது விசித்திரமாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகி விட்டது. எல்லாவற்றையும் விட அதிசயம் காப்பீட்டுக்காகப் பதிவு செய்து கொள்கிறவர்கள் கட்டணத்துக்கு இணையாக காப்பீட்டுத் தொகையும் தினப்படி கிடைப்பதாக வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்காமலேயே இருப்பது.அந்த ஷரத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாத நிலை எதனால் என்று கேட்டால் காப்பீட்டை இருந்து அடைகிறவர்களே இருப்பதில்லை என்பதாக இருக்கலாம். இறுதியல்லாத இறுதிகளில் காப்பீடு பெறுகிறவர்கள் பெரும்பாலும் இன்னொரு காப்பீட்டுப் பதிவில் கவனமாக இருப்பதாலும் இருக்கலாம்.
எப்போதும் 1 இலக்கத்தவரின் மறு காப்பீடு செலவு குறைந்ததாகவும் எளிதாகவும் இருப்பதற்கான காரணம் அடிப்படை விகித வித்தியாசத்தின் மூலம் தெரிகிறது. 0 இலக்கத்தவரின் மறு காப்பீட்டுக் கட்டணம் இரட்டிப்பாகிறது. விபத்தின் சாத்திய விகிதம் அதிகம் என்பதால் அப்படி விதி என்றது நிறுவனம்.
நிறுவனம் யாருடையது என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. அது ஒருவருடையதா பலருடையதா என்பது தீவிரமான தேடலுக்கான கேள்வியாயிருந்தது.
நிறுவனம் ,1 இலக்கத்தவருக்குச் சார்பானது என்று 0 இலக்கத்தவர் பெரும்பாலும் நினைத்ததும் பொருமியதும் சகஜமாயிருந்தது. அப்படி அது 1 இலக்கத்தவருக்குச் சாதகமானதல்ல என்பதில் 1 இலக்கத்துப் பெரும்புள்ளிகளின் கருத்தொருமிப்பு இருந்தது. அதற்கு ஆதாரமாக ஒரு வாதம் கூட முன் வைக்கப்பட்டது.அதாவது காப்பீட்டுப் பதிவு இல்லாமல் 1 இலக்கத்தவரும் வீதியில் நகர அனுமதிக்கப் படவில்லை என்பதோடு அவர்கள் குறைந்த காப்பீட்டுக் கட்டணத்தை ஆரம்ப வருடங்களிலும் அதிகக் கட்டணத்தை இறுதி வருடங்களிலும் கட்ட வேண்டி வந்ததில் தம் பாதிப்பைத் தெரிவித்திருந்தார்கள். இளமையில் கேட்கப் படுவதையாவது தலையை அடகு வைத்துக் கொடுத்து விட்டிருக்க முடிந்திருக்கும். நரை திரை கண்டபின் எங்களிடமிருந்து எதிர் நோக்கப்படும் எதிர்பார்ப்புகளை எங்களால் நிகர்க்க முடியாத அளவு நாங்கள் களைத்துப் போகிறோம். உண்மையில் இறுதி நாட்களை நாங்கள் தாம் அகதிகளாகக் கழித்து விட நேர்கிறது. அப்படி நேராவிடினும் அதற்கான பயம் எங்களை வாட்டுகிறது என்றிப்படியெல்லாம் அவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார்கள்.
1 இலக்கத்தவர் எப்போதும் மலைகளிலேயே வேலை செய்யவேண்டியிருந்தது பற்றிய பெரிய கோபம் அவர்களிடத்து இல்லை. தினமும் ஒரு வாசனையான ஆவணத்தை அவர்கள் கையொப்பமிடவேண்டியிருந்தது.அதுவும் சமவெளிகளில் இறங்கி.
0 இலக்கத்தவர் எப்போதும் சுரங்கங்களில் வேலை செய்ய வேண்டி வந்தது. முன் குறிக்கப்பட்ட தீர்மானிக்கப் பட்ட எல்லைச் சுரங்கம்.0 இலக்கத்தவர் எவ்வளவு கிழே அழுந்துகிறார்களோ அவ்வளவு உயரத்துக்குப் புகழப்பட்டார்கள். அவர்களும் கூட சமவெளிக்கு வர வேண்டியிருந்தது வாசனையான ஆவணத்தில் கையொப்பமிட.
ஆவணங்கள் 0,1 இலக்கத்தவரின் உதவியாளர்களைத்தீர்மானித்தன. குறிப்பிட்ட ரசாயனத்தில் உதவியாளர்கள் மீண்டும் 0,1 இலக்கத்தவரானார்கள்.ஆவணங்கள் பலவகையில் மதிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டன. கவித்துவப்பட்டன. மத இன நாட்டுச் சடங்குகளினால் புனிதப்பட்டன. புனிதம் கெடுக்கப்பட்டன. தூக்கியெறியப்பட்டன. கிழிக்கப்பட்டன. எல்லாவற்றாலும் கூட அழியாத ஒரு நெருக்கடியாக்கப்பட்டு ,விளைவுகள் தனித்தனியே 0,1 இலக்கத்தவர் மேல் சுமத்தப்பட்டும் போயின.
எல்லாவற்றுக்கும் மேலாக 0,1, இரு இலக்கத்தவரிடை காப்பீட்டுக் கொள்கை பெரிய சச்சரவுக்கான நிலைக்களன் ஆயிற்று.
‘எவ்வளவு அதிகமாக நாங்கள் கட்டணம் கொடுக்கிறோம் ? எங்கள் கெளரவம் ஏன் எங்களுக்குத் தரப்படுவதில்லை ? நாங்கள் ஏன் எப்போதும் கண்ணில் படாத சதுப்புச் சதுரங்களில் ? எங்கள் பங்களீப்புகள் ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை ? ‘ என்று பொங்குவது சாதாரண அம்சம் 0 இலக்கத்தவரிடை. தங்கள் இழப்புகளின் பெறுநர்களாக 1 இலக்கத்தவரைக் கற்பிதப்படுத்திக் காய்ந்தார்கள் 0இலக்கத்தவர்.
1 இலக்கத்தவர் பெரிதும் அலட்டுவதில்லை போல் தெரிந்தாலும் காலியங்கு தளம் சரிகிறபோதெல்லாம் குப்புற அடித்துப் படுத்து விழுந்து போவதும் எல்லா வீழ்ச்சிக்கும் 0 இலக்கத்தவரைக் குற்றம் சாட்டுவதும் வழக்கமாகிவிட்டது அவர்களுக்கு. யாரோ வேண்டுமல்லவா பழி சுமக்க ? நிறுவனத்தைப் பழி சொல்வது அவர்களூக்கு இயலாததாயிருந்தது.
நிறுவனம் யார் கட்டளையால் இயங்கியது என்பதைக் கண்டுபிடிப்பது அனவருக்கும் வேண்டாத வேலையாயிருந்தது.
0,1 இரு இலக்கத்தவருக்குமே வெறுப்புக்குரிய காப்பீட்டு நிறுவனம் யாருக்காக இயங்கி வந்தது என்பதைக் காட்டிலும் அந்த நிறுவனத்துக்காகப் பெரிதும் இழந்து, கட்டிக் கொடுத்து மாய்கின்ற 0,1 இலக்கத்தவர் தவிர்ந்த எந்த ஒரு சுயநலக் கும்பல் , நிறுவனத்தின் லாபங்களை அடைந்து அனுபவிக்கிறது என்று கணிக்க முற்படுவதே ஒரு சுவாரஸ்யமாயிருந்தது, சிந்திக்கும் உயிரிகளுக்கு.
அந்த சுயநலக் கும்பல் பவித்திரமுள்ள 0,1 இலக்கத்தினரை சதா குற்றம் சாட்டுகிறது. பதிவுக்கு வற்புறுத்துகிறது. பதிவு தவிர்த்தவர்களை பிரஷ்டம் செய்கிறது. ஆவணங்களைக் கைப்பற்றி பயமுறுத்துகிறது. சுயநலக் கும்பல் வெறும் 0 அல்லது வெறும் 1 இலக்கத்தவராலானதல்ல.இரண்டுமான இரண்டுக்கும் நடுப்பட்ட ஒரு சுயம் தொலைத்த சந்தர்ப்பவாதிக்கும்பல் அது.
அது காப்பீட்டுக் கட்டணங்களிலிருந்து தப்பி அதே காப்பீட்டுக் குடை நிழலுக்குள் வசதியான ஆடும் நாற்காலிகளைத் தேர்ந்தெடுக்கும் யுக்தி கற்றது. காப்பீட்டுக் கொள்கையில் இருந்த கணு அமைப்பு அதாவது பிராந்தீய மைய அமப்புக் கொள்கையைச் சாதகப் படுத்தி வளைத்துத் தனக்கான கட்டணக் கழிவிற்கு வழி வகுத்துக் கொள்கிறது.
மேற்கண்ட எல்லாமே புத்தகக் குட்டியில் இல்லை. எதிர்ப்பாளி புத்தகக் குட்டியைப் படித்தவாறே மேற்கொண்ட சிந்தனையும் சேர்ந்து விவரப் பட்டது மேல் வந்த விஷயங்கள்.
எதிர்ப்பாளிக்குக் கூர்மையான கோபம் வந்தது. விருட்டென்று எழுந்தார்.
‘கோளாதிபதியை நான் பார்க்க வேண்டும் ‘ என்றார்.
அங்கிருந்த பலத்த மின் மணியை அதிரவிட்டு எதிர்ப்பட்டவரிடம் நியமனத்துக்கான [நேர்காணலின்] நேரக் குறிப்பை வாங்கிப் பார்த்தார்.
நேரக்குறிப்பு அட்டையில் எழுத்துக்கள் ஒளிர்ந்தன.
‘கோளாதிபதி நிறுவனத்தின் நியமன அதிகாரி அல்லர். மார்க்க தரிசனத்துக்கு மட்டும் உதவுபவர். அவ்வளவே. ‘
‘பின் யார் நிறுவனம் குறித்த புகார் கடிதங்களைப் பெறத்தக்கவர் ? ‘
கேட்டார் எதிர்ப்பாளி.
‘அவர் ஒருவரல்லர். பலர் கூடிய ஒரு அமைப்பு ‘ என்றது தானியங்கிப்பொறி நிர்வாகத்தின் சார்பில்.
எதிர்ப்பாளி விடவில்லை. கணினியுடனே வாதங்களை மேற்கொண்டார்.
‘அப்போது அந்த அமைப்பை நான் பார்க்க வேண்டும். பேச வேண்டும் ‘ என்றார்.
‘வருந்துகிறோம். அமைப்பை ஒரு இடத்தில் உங்களால் பார்க்க முடியாது.நீங்கள் உங்கள் புகாரை அனுப்பி வைத்தால் வெவ்வேறு இடத்தில் ஒவ்வொருவராக அமைப்புருவில் இயங்கும் 0,1 இலக்கத்தவரின் கவனத்துக்கு அது போய்ச்சேரும். ‘
‘முடிவான அவர்களின் கருத்து எப்போது தெரியவரும் ? ‘
‘தெரிய வராது. அவர்கள் நேரிடப் பேசவோ எழுதவோ மாட்டார்கள். ஆனால் இயங்கு தளத்தில் மிக மெதுவான சலுகைகளையோ அல்லது கெடுபிடிகளையோ புதிதாகக் கொண்டு வருவார்கள். ‘
‘இதென்ன அநியாயம் ? என் வயது காத்திருக்குமா ? அத்தகு மெது மாற்றங்களுக்கு ? எத்தனை காலம் காத்திருப்பது ?
‘வேண்டாம். பதிவு செய்து கொள்ளுங்கள். காப்பீட்டுக் கட்டணம் உங்களை எல்லா வகையிலும் காப்பாற்றும். ‘
ஆத்திரத்தில் எதிர்ப்பாளி உக்கிரமாக இரைய ஆரம்பித்தபோது இன்னொரு எதிர்ப்பாளி அங்கு வந்தார்.
‘கோபத்தில் உங்களை என் போலவே உணருகிறேன். எனக்கும் ஏகமாய் வருத்தம் இந்த காப்பீட்டு விவகாரத்தில். ‘
‘இந்த ஐந்தாம் பக்கத்து ஆறாம் விதியைப் பார்த்தீர்களா ? வியாபார ரீதியில் எவ்வளவு பெரிய மோசடி ? ‘
‘அது கிடக்கட்டும். உங்களைப் போன்ற 0 இலக்கத்தவர் மெல்லிறகின் வீச்சம் ஒரு மணி நேரம் தாண்டினால் எந்த வாசனைத் தடமாயினும் புழுக்கமாகி சூழலைப் பாதிக்கும் என்பதால் பதிவு எண் உள்ளவர்களுக்கு ஒரு நாற்ற நீக்கி தருகிறார்களே ! பதிவின் மூலம் அதை ஏற்க உங்களுக்கு எல்லாம் அவமானமாயில்லை ? ‘
‘நாற்ற நீக்கிகளால் வரும் நாற்றத்தை என்ன செய்வதாம் ? உங்களைப் போன்ற 1 இலக்கத்தவர் குளிர்காய்தல் தானே செய்கிறீர்கள் நடப்பின் முன்னால் ? உங்களுக்குக் கேலியாகத்தானிருக்கும் எதுவும் ‘
‘தவறு. தவறு. அப்படி நீங்கள் நினைக்கலாகாது. எங்கள் உயரங்களை மிதித்து நாங்கள் மீண்டபின் உங்கள் குளிர்திணைகளே எங்கள் லட்சியமாகிவிடுகிறது. ‘
பழைய எதிர்ப்பாளி புன்னகைத்தார்.
எதிர்ப்பாளிகள் இருவரும் எதிர்ப்பாளிகளாகவே இருந்துவைத்துப் பதிவு செய்து கொண்டனர் அடுத்த வாரத்தின் ஒரு அலுவல் நாளில்.
அதன்மூலம் அவர்களால் ஒரு இணை வாயில்களுக்குள் கதவுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் எல்லா நேரமும் சேர்ந்து தங்க முடிந்தது.
***
மாலதி
***
புதிய கோடாங்கி நவம்பர் 2001 இதழில் பிரசுரமானது.
***
malathi_n@sify.com
- ‘கவி ஓவியம் ‘
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- கடிதங்கள் மார்ச் 18 2004
- A Mighty Wind (2003)
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- யானை பிழைத்த வேல்
- வைரமுத்துவின் இதிகாசம்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- முற்றுப் பெறாத….
- அந்தி மாலைப் போது
- ஏழாவது வார்டு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- நிஜக்கனவு
- நினைவின் கால்கள்
- மேகங்கள்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- வணக்கம்
- முரண்பாடுகள்
- நாற்சந்தியில் நாடகம்
- எங்கே போகிறேன் ?
- உயர்வு
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- இந்தியா இருமுகிறது!
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- கனவான இனிமைகள்
- எதிர்ப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- ஆத்தி
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- கேண்மை
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தேர்வு
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- ….நடமாடும் நிழல்கள்.
- மின்மீன்கள்
- கணக்கு
- அவளும்
- துளிகள்.
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16