This entry is in the series 20040318_Issue

வை.ஈ.மணி


வியப்பு ஊட்டும் வலிமை பெற்று
இயற்கை ஒட்டி வாழும் விலங்கும்
பறவை மற்றும் பூச்சிகள் யாவும்
அறிவைப் பெற்ற மனிதன் நாணச்
செய்திடும் அரிய சாதனை காணின்
மெய்யெனத் தோன்றும் மானிடன் கீழ்மை

கூரிய பல்லும் கொம்பும் நகமும்
சீரிய குரலும் சிறந்த உணர்வும்
எல்லாம் பெற்றும் நாவின் வலிமை
இல்லா உயிர்கள் இழித்த னவன்றோ ?
பேசும் திறமை பெற்ற மனிதன்
வீசும் சொற்கள் வெல்லும், கொல்லும்

சொல்லிற் கழகு சேர்க்கும் இனிமை
சொல்லில் மென்மை சிறந்தோர் பண்பு
நாக்கை என்றும் காக்கத் தவறின்
வாக்கின் சூடு நெருப்பை மீறும்
வன்சொல் நம்மை வீழ்த்தும் ‘பசு ‘வாய்
இன்சொல் பெற்றோர் ‘பசுபதி ‘ யாவார்.

***
வை.ஈ.மணி
***
ntcmama@pathcom.com

Series Navigation