பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

சின்னக்கருப்பன்


பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது.

நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே. மான்ஸாண்டோ என்ற பன்னாட்டு விதை நிறுவனம் விதைகளையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரு சேர மொனோபாலியாக உற்பத்தி செய்து உலகெங்கும் உள்ள விவசாயத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து அமெரிக்க விவசாயிகள் தோல்வியடைந்துகொண்டிருக்கும் போரை நடத்திகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் மான்சாண்டோவுக்காக தன்னுடைய விவசாயிகளையே கொலை செய்துகொண்டிருக்கிறது. மான்சாண்டோவுக்காக அயல்நாடுகளின் அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெளிவாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெளிவாக தன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பாஜக தொலைநோக்கு சிந்தனைக்காக நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே என்பது என் கருத்து.

தமிழ்நாட்டில் நசிந்துகொண்டு வரும் விவசாயம் தனி கவனம் பெற வேண்டியது. விவசாயத்துக்காக தனி பட்ஜெட் என்ற கருத்தும் வரவேற்கத்தக்கதே.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும் என்று நவீன பொருளாதாரத்தில் மிக அதிகமாக பங்கு பெற்று வரும் பெண்களின் உரிமைகளை காக்க முதல் முறையாக ஒரு அரசியல் கட்சி அவர்களது உரிமைகளை பாதுகாக்க தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது ஆச்சரியமான வரவேற்க தக்க ஒன்று.

இலவசமாக மிக்ஸி கிரைண்டர் கொடுப்பதிலிருந்து மாறுபட்டு, இலவசமாக தொழிற்கல்வி கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கும் பாஜக மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து மாறு பட்டு நிற்கிறது. ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும் என்று அவர்களுக்கு வாழ்க்கையில் தொடர் வருமானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

பாஜகவை பற்றி வைக்கப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளுக்கு சரியான பதிலையும் சந்தோஷமான பதிலையும் தனது தேர்தல் அறிக்கையில் வைத்திருக்கிறது.

1) மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2) இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3) இந்து சமுதாயத்தை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர்களாக பணிபுரிய வழிவகை செய்யப்படும்.

இந்த தேர்தலில் என்னுடைய ஆதரவை பாஜகவுக்கு தெரிவித்துகொள்கிறேன்

நன்றி தினமணி

சென்னை, மார்ச் 26: லேப்-டாப், சானிட்டரி நாப்கின், பசுமாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என பாரதிய ஜனதாக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன் வெளியிட்டார். அகில இந்தியச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
# இலவசங்கள்:
* அரசு பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் வழங்கப்படும்.
* ஆண்டின் தொடக்கத்திலும், தேர்வுகள் நடக்கும்போது பேனா, பென்சில் போன்ற எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 5 வயது வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
* ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 10 ஆயிரம் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்.
* ஏழைப் பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
* படிப்பை பாதியில் கைவிடும் 15 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.
* ஆண்டுக்கு ஒருமுறை புனிதப் பயணம் மேற்கொள்ள பயணச் சலுகை வழங்கப்படும்.
* ஏழைக் குடும்பங்களுக்கு பசு மாடு இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* ஏழை பெண் குழந்தைகள் பருவமடையும்போது இலவசமாக உடைகளும், ஒரு மாதத்துக்கு சத்தான உணவும் வழங்கப்படும்.
* இலவச மின்சாரம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கும் விரிவுபடுத்தப்படும்.
# சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு:
* சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்படும்.
* சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
* தொடக்கப் பள்ளி முதல் நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.
* அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.
* 6-ம் வகுப்பு முதல் இலவசமாக யோகா, தியானம் கற்றுத் தரப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெற்குறிச்சி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை பயிற்சி மையம் அதே இடத்தில் அமைக்கப்படும்.
* மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாவட்ட அரசு மருத்துவமனைகள் தனியார் உதவியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
# பாலியல் தொந்தரவுகளுக்கு தண்டனை:
* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
* ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சியும், நிதி உதவியும் செய்து தரப்படும்.
* இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தனித் துறை ஏற்படுத்தப்படும்.
* மாவட்ட, தாலுகா அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
# இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்:
* இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைபிடிக்கப்படும்.
* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* விவசாய பம்புசெட்டுகளுக்கு ஓராண்டுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
* தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒரு பகுதியாக தமிழக நதிகள் குறுகிய காலத்தில் இணைக்கப்படும்.
* பாஜக ஆளும் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
* விவசாய உற்பத்தி பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். நெல், கரும்பு போன்ற விளை பொருள்களுக்கு பணவீக்கத்துக்கு தகுந்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
# மரபணு மாற்ற விதைகளுக்கு தடை:
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும்.
* கால்நடை தீவனத்தின் விலை உயர்வுக்கேற்ப பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்.
* எத்தனால் உற்பத்தி செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
* மணல் கொள்ளை தடுக்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
* உலகெங்கும் வாழும் தமிழர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
* சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அந்நிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
* தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத சூழல் உருவாக்கப்படும்.
* தென் தமிழகத்தின் வளர்சிக்காக குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படும்.
* அரசு நிர்வாகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
* ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் அரசின் சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றப்படும்.
* போலி குடும்ப அட்டைகளைத் தடுக்க மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.
* பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே பாஜகவின் லட்சியம்.
* இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் இருக்கும்வரை விவசாயிகளின் நலன் கருதி கள் இறக்க அனுமதி அளிக்கப்படும்.
* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற மத அமைப்புகளுக்கு உள்ளதுபோல குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து கோவில் சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
* கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
# நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி:
* அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் இந்து கோவில்களில் சமபந்தி விருந்து நடத்துவது நிறுத்தப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.
* கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
* ராமர் பாலம் தேசிய வரலாற்று சின்னமாக அறிவிக்கப்படும்.
* மாற்றுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Series Navigation