கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



காலையில்தான் மீனாட்சிக்கு ஃபோன் வந்தது. கல்யாணி இன்று மௌன விரதம் இருக்கப் போகிறாளாம். கேட்டதிலிருந்து மீனாவுக்கு திகைப்பு , ஆச்சரியம் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் உண்டாயிற்று. காரணம் என்னவென்றால் தேர்தலும் , கள்ள ஓட்டும் போல ; அரசியல் வாதிகளும் ஊழலும் போல கல்யாணியையும் , பேச்சையும் பிரித்துப் பார்க்க முடியாது. அக்காவான மீனாவுக்குத்தான் தெரியும் அவள் பேச்சின் நீளம் , அகலம் மற்றும் உயரம்.

சிறு வயதிலிருந்தே கல்யாணி அப்படித்தான். எந்த சிறு விஷயத்துக்கும் பெரிதாக அலட்டிக் கொள்வதும் , அதை மேலும் பெரிது படுத்தி பேசிக் கொண்டே இருப்பதுமாக இருப்பாள். கல்யாணம் ஆகி குழந்தைகளும் பிறந்த பிறகு அவளுக்கு கவலைப்பட அதிக விஷயங்கள் கிடைத்தன. பெண் ஒரு முறை தும்மினால் போதும் , நேற்று எலுமிச்சை சாதம் செய்ததினால் தானோ என்னவோ குழந்தை தும்முகிறாள் என்று ஆரம்பித்து , பதினைந்து நாள் முன்னால் குடித்த கூல் டிரிங்க் வரை அலசி ஆராய்வாள். அதோடு நின்றால் பரவாயில்லையே ஒற்றைத் தும்மலை , தீராத ஜலதோஷமாகக் கற்பனை செய்து , அந்த ஜலதோஷம் ஜுரமாக மாறி அதுவே மலேரியா , டைபாய்டு என்று பல பரிணாமங்கள் எடுத்து , கடைசியில் இவளுக்குக் காய்ச்சல் வரும் போலாகி விடும். இதன் நடுவே கணவனுக்கு திட்டு வேறு கூல் டிரிங்க் வாங்கிக் கொடுத்ததற்காக. இந்த அமளிக்கெல்லாம் மத்தியில் குழந்தை பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பாள்.

” கல்யாணி கொஞ்ச நேரம் பேசாம தான் இரேன்” என்று எத்தனையோ தடவை மீனா சொல்லியிருக்கிறாள். “அது எப்டிக்கா பேசாம இருக்க முடியும். நான் ஒண்ணும் அனாவசியமாப் பேசலையே? என் கவலைகளைத் தானே வாய் விட்டு சொல்றேன். அதையெல்லாம் மனசுக்குள்ள பூட்டி வெச்சா எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். அவ்ளோ கவலை எனக்கு” என்பாள். கல்யாணிக்கு என்னவோ தனக்கு மட்டும் கவலைகள் குவிந்து கிடப்பாதாகவும் மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்வதாகவும் ஒரு எண்ணம்.

கல்யாணியின் கணவன் ஒரு சாது. தன் மனைவி செய்வது எல்லாமே சரி என்ற எண்ணம் அவனுக்கு. “எங்க மேல உள்ள அக்கறையில தானே கல்யாணி இப்பிடி கவலைப் படறா” என்று பெண்டாட்டிக்குச் சப்பைக்கட்டு கட்டும் ரகம். எட்டாவது படிக்கும் அவள் மகன் தான் அவளைத் திட்டுவான் “ஏன் இப்படி தேவையில்லாமக் கவலைப் பட்டு எங்களைப் போட்டு படுத்தறே? என்பான். அவன் அப்படிப் பேசி விட்டதற்காக கல்யாணி ஒரு பாட்டம் கவலைப் படுவாள்.மீனாவுக்கு வெகுநாளாக ஒரு சந்தேகம் . கல்யாணி தனியாக இருக்கும் போது என்ன செய்வாள்? ஒரு வேளை பைத்தியம் மாதிரி தனக்குத் தானே பேசிக் கொள்வாளோ என்று. ஆனால் இல்லை அவள் தனியாய் இருக்கும் நேரம் மிகவும் குறைச்சல். அக்கம் பக்கத்தவரோடோ , குறைந்த பட்சம் வீட்டு வேலை செய்பரோடோவாவது பேசிக் கொண்டிருப்பாள் என்று தெரிய வந்தது.

அப்படிப் பட்ட கல்யாணி மௌன விரதம் இருக்கிறாளாமே? காரணம் என்னவாக இருக்கும்? மீனாவுக்கு ஆவல் தாங்கவில்லை. கல்யாணியின் வீட்டுக்குக் கிளம்பினாள். அங்கே சென்ற பிறகு மீனாவுக்கு சிரிப்புத்தான் வந்தது. குழந்தைகள் பள்ளிக்குப் போயிருந்தனர். கல்யாணியின் கணவர் மட்டும் அன்று லீவு போட்டு விட்டு மனைவிக்கு ஒத்தாசையாக(?) இருந்தார். “இன்று கல்யாணி மௌன விரதம்” இருக்கிறாள் என்று ஃபிளெக்ஸ் வைக்காத குறை. சின்னதும் பெரியதுமாக அட்டைகளில் “இன்று நான் மௌன விரதம்” எழுதப் பட்டிருந்தது . அது போதாதென்று அவள் பக்கத்தில் புதிதாக வாங்கிய சிலேட்டு , குச்சி தவிர ஒரு கத்தை பேப்பர் , பென். இவை புடை சூழ உலகிலேயே மிகக் கடினமான தியாகத்தை செய்து கொண்டிருக்கும் ஒருத்தி போல முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்வதாள் கல்யாணி. வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“இப்ப எதுக்குடி திடீர்னு மௌன விரதம் ?” என்றாள் மீனா. கேட்பதற்காகவே காத்திருந்தாற்போல கையைக் காலை ஆட்டி அபிநயம் பிடிக்கத் துவங்கினாள். கையை நெஞ்சில் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்ப்பது போல் காண்பித்தாள். “டாக்டர் சொன்னாரா? ” இது மீனா. இல்லையென்பது போலவும் இல்லாமல் ஆமாம் என்பது போலவும் இல்லாமல் மையமாகத் தலையசைத்தவள் கையைப் பூவைப் போல்க் காண்பித்து டரக்கென்று மேலே கொண்டு போனாள். என்ன இது சம்மந்தா சம்மந்தம் இல்லாமே கேக்கறா என்று நினைத்த மீனா , ” ஏண்டி பூ ஒசரத்துல பூத்திருக்கா? அதப் பறிக்கணுமா? என்றாள் பொறுமையாய். அவளை ஒரு முறை முறைத்த கல்யாணி , இல்லையென்று தலையசைத்து விட்டு மீண்டும் அதையே அழுத்தமாக செய்து காட்டினாள். மீனாவின் பொறுமை போனது. ” எனக்கு ஒண்ணுமே புரியல்லே , எழுதித்தான் காமியேன்?” என்றாள். அதற்கும் தலையசைத்து மறுத்த கல்யாணி கணவனை நோக்கி கையை வீசிக் காட்டினாள்.

அதைப் புரிந்து கொண்ட அவள் கணவன் “கல்யாணி என்னை சொல்லச் சொல்றா” என்றவர் தொடர்ந்தார், ” போன வாரத்துல ஒரு நாள் கல்யாணி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் காமிச்சோம். அவர் டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமா இருக்கறதாவும் ஒடனே கன்ட்ரோல் பண்ணாட்டா பெரிய பிரச்சனை ஆகிடும்னும் சொன்னார் , இல்லையா கல்யாணி? ” என்று மனைவியைப் பார்த்தார் அவர். பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினாள் கல்யாணி. என்னதான் மருந்து மாத்திரை சாப்பிட்டும் , உப்பில்லாப் பத்தியம் இருந்தும் பிரஷர் இறங்கவேயில்லை. க்லயாணி ரொம்பக் கவலைப் பட ஆரம்பிச்சுட்டா ” என்றவரை இடை வெட்டி ” அவ இப்படிக் கவலைப் படறதாலேதானே அவளுக்கு BPயே வந்துருக்கு. அதை நெனச்சுக் கவலைப்பட்டாளாக்கும் ரொம்ப சுத்தம் ” என்றாள் மீனா. அவளை சும்மா இருக்கும்படி சைகை காட்டிய கல்யாணி கணவனைத் தொடரும் படி பணித்தாள். ” அப்போதான் எங்கூட ஆபீஸ்ல வேலை செய்யற ஒருத்தர் , வாரத்துல ஒரு நாள் மௌன விரதம் இருந்தா , BP நல்லா குறையும்னு சொன்னார். சரி அதைத்தான் செய்து பாக்கலாமேன்னு கல்யாணியும் இந்த வாரம் வெள்ளிக் கெழமையிலருந்து ஆரம்பிச்சுட்டா. அவதான் உங்களுக்கு ஃபொன் பண்ணி வரச் சொன்னா. நான் ஆபீஸ்ல பெர்மிஷன் தான் போட்டுருக்கேன். இப்போ கெளம்பிடுவேன் , நீங்க கூட இருந்து ஒங்க தங்கையப் பாத்துக்கங்க” என்றவர் என் பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டார்.மீனாவுக்கு மனதுக்குள் ஒரு தைரியம். கல்யாணி தான் பேச மாட்டாளே அதனால் காது வலி மற்றும் தலைவலியிலிருந்து தப்பித்து விடலாம் என்ற நினைப்புடன் தங்கையின் பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள்.

பிறகு தான் ஆரம்பித்தது சோதனைகள். கல்யாணியின் அக்கம்பக்கத்தவர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். எல்லாருக்குமே கல்யாணியின் மௌன விரதம் என்பது ஒரு செய்தியாக இருந்தது. வந்த ஒவ்வொருவரிடமும் கல்யாணி முத்திரைகள் காட்டிப் பேச அதை மீனா மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று. சரியாக அபிநயம் பிடிக்க கல்யாணி ஒன்றும் பத்மா சுப்ரமணியம் இல்லை. மேலும் அதைச் சரியாக மொழி பெயர்க்க மீனா ஒன்றும் சைகை பாஷை படித்தவளும் இல்லை. பின்னே குழப்பத்திற்குக் கேக்கணுமா? அவள் ஒன்று செய்ய , இவள் ஒன்று புரிந்து கொள்ள , அதை அவள் மறுக்க என்று குழப்பம் நீடித்தது. வந்தவர்கள் வேறு மொழிபெயர்ப்பதில் இறங்கியதால் அந்தக் குழப்பம் வேறு சேர்ந்து கொண்டது. அது போதாதென்று கல்யாணி மௌன விரதம் இருப்பதற்கான காரணத்தை மட்டுமே மீனா கிட்டத் தட்ட ஒரு பதினைந்து தடவையாவது சொல்லியிருப்பாள். சினிமாக்களில் வருவதைப் போல பேசாமல் டேப்ரிக்கார்டரில் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொண்டு அதை வருபவரிடமெல்லாம் போட்டுக் காட்டினால் என்ன? என்ற நிலைக்கு வந்து விட்டாள் மீனா. இதனிடையே வந்தவர்களுக்கு டீ சப்ளை வேறு. ” ஏண்டி கல்யாணி நீ மௌன விரதம் தானே இருக்கே? டீ போட்டா என்ன? அதுக்குமா விரதம்?” என்றாள் மீன எரிச்சலுடன். இரண்டு கையையும் பெரிதாக ஆட்டி, வாய் மேல் விரலை வைத்து , நெற்றிப் பொட்டைத் தொட்டுக்காட்டி இன்னும் என்னென்னவோ செய்தாள் கல்யாணி. “ஐயையோ ! அம்மா தாயே! நீ ஒண்ணும் செஞ்சு காண்பிக்காதே , நானே எல்லாருக்கும் டீ போட்டுத் தர்றேன். நீ மௌன விரதம் இருக்கறதுல என் தொண்டத் தண்ணி வத்திடும் போல இருக்கு” என்றாள் மீனா.

சிலேட்டில் எதையோ கிறுக்கி நீட்டினாள் கல்யாணி. அதில் “இப்ப புரியுதா மௌன விரதம் இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு? பேசற ஒனக்கே இவ்வளவு டயர்டா இருக்கே , நான் பேசாமே உக்காந்திருக்கேனே எனக்கு எப்படி இருக்கும்” என்று எழுதியிருந்தாள். அதைப் படித்ததும் மீனாவுக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை. இதை மேலும் துருவினால் நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்வது போல என்று நினைத்த மீனா சும்மா இருந்து விட்டாள். உள்ளூர “எனக்குத் தேவைதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

மழை வரும் போல் இருக்கிறது மொட்டை மாடியிலிருந்து துணிகளை எடுத்து வா என்று ஒரு தடவை , கேஸ் வாடை வருது அடுப்பு அணைச்சிருக்கான்னு பாக்க ஒரு தடவை என்று மீனாவை வேலை வாங்கினாள் கல்யாணி. மௌன விரதம்னா வேலை கூடவா செய்யக் கூடாது என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் சொன்னவற்றைச் செய்தாள் மீனா.

கொஞ்ச நேரம் யாரும் வரவில்லை. மீனாவுக்கு தெம்பு கொஞ்சம் வந்தது. இந்த நேரத்தை தன் தங்கைக்கு அறிவுரை சொல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்தாள் மீனா. ஏனென்றால் இப்போது பேசினால் கல்யாணி இடைவெட்டிப் பேச்சை மாற்ற முடியாது.இது போன்ற சந்தர்ப்பம் பிறகு வாய்க்குமோ என்னமோ? என்று கருதிய மீனா , கல்யாணியைப் பார்த்து ” கல்யாணி நான் ஒங்கிட்டக் கொஞ்சம் பேசலாமா? ” என்றாள். தலையை அசைத்துச் சம்மதம் கொடுத்தாள் கல்யாணி கண்களில் கேள்வியுடன். ” இதோ பாரு கல்யாணி , நீ அனாவசியமா பல கவலைகள் படறே. அதான் ஒனக்கு BP வந்துடுச்சு. வேறு எதப் பத்தியும் கவலைப் படாமே , வேறு எந்த சிந்தனையும் இல்லாமே மனச அமைதியா வெச்சுக்கறதுக்குத் தான் மௌன விரதம் இருக்கச் சொல்றாங்க. நீ என்னடான்னா இன்னிக்கும் எல்லாக் கவலையும் பட்டுக்கிட்டு , எல்லா விஷயங்களிலும் தலயிட்டுக்கிட்டு இருக்கே. நீ இப்படி மௌன விரதம் இருக்கறதால என்ன பிரயோஜனம் சொல்லு? ” என்றாள் மென்மையாக.

கல்யாணி சற்று நேரம் சும்மா இருந்தவள் , மீனாவை நோக்கி “நீ ஏன் இப்படியெல்லாம் பேசறே? என்று சைகையில் கேட்டாள். மீனாவும் சளைக்காமல் “இப்ப எதுவும் கேக்காதே நான் சொன்னதக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இன்னிக்குக் காலையிலருந்து இப்போ வரை நீ எவ்ளோ கவலைகள் பட்டுருக்கேன்னு யோசி. உனக்கே புரியும் நீ எவ்வளவு அனாவசியமாக் கவலைப் படறேன்னு. இன்னும் அரைமணி நேரம் எடுத்துக்கோ நல்லா யோசி!. அரைமணி முடிஞ்சப்புறம் நீ என்ன சொல்ல நெனக்கறியோ அதை எனக்கு எழுதிக் காட்டு , சரியா? ஆனா இந்த அரை மணி நேரம் நீ கண்டிப்பா எதுவும் எழுதக் கூடாது , சைகையும் பண்ணக் கூடாது , எதுவும் படிக்கவும் கூடாது. நானும் எதுவும் பேச மாட்டேன்” என்று கூறிய மீனா பக்கத்தில் இருந்த ஒரு மாதப் பத்திரிகையை கையில் எடுத்துக் கொண்டாள்.

மீனாவுக்கு உள்ளூரப் பெருமை . “என்னுடைய மனோதத்துவ முறை பலிக்கப் போகிறது. கல்யாணி தன்னை உணர்ந்து கொள்ளப் போகிறாள். எவ்வளவோ நன்றி சொல்வாள். இதெல்லாம் ஒரு விஷயமா? கூடப் பிறந்தவளுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி? எப்படியோ என்னுடைய கெட்டிக்காரத்தனத்தால் கல்யாணி திருந்தினால் சரிதான்” இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவள் மணி பார்த்தாள் அரை மணி நேரம் ஆகி விட்டது. கல்யாணியின் அருகில் சென்றாள். கல்யாணி தான் எழுதிய பேப்பரைக் கையில் கொடுத்தாள்.

வாசிக்க ஆரம்பித்தாள் மீனா. “அக்கா நீ ஏன் இப்படி பேசறேன்னு யோசிச்சுப் பாத்தேன். நான் உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன். உன்னை நான் வரச்சொல்லி இருக்கக் கூடாது. பாவம் நீ! வந்தவங்க எல்லாருக்கும் டீ போட்டு , துணி எடுத்துட்டு வந்துன்னு உன்னை ரொம்ப வேலை வாங்கிட்டேன். நீ வீட்டுக்குப் போய் அங்க வேற சமைக்கணும். அந்தக் கோபத்துல தான் நீ இப்படியெல்லாம் பேசறே. நீ இனுமே எங்கூடப் பேச மாட்டியாக்கா? அவ்ளோ கோபமா எம்மேல? இந்த அரைமணி நேரமும் ஒன்னை எப்படி சமாதானப் படுத்தறதுன்னு தான் யோசிச்சிக்கிட்டுருந்தேன். என்ன யோசிச்சாலும் , உன்னை சமாதானப் படுத்த வழி தெரியல்லே. நீ எங்கூடப் பேசுவியா?”

படித்துக் கொண்டிருந்த மீனாவுக்கு தலை சுற்றியது. கல்யாணியின் BP மீனாவுக்கும் வந்துவிடும் போலாகி விட்டது.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்