This entry is in the series 20110327_Issue

சபீர்



நல்ல டைனோஸர்
மிளகாச் சட்னி கேட்காமல்
இட்லி உண்டது
படுக்கச்செல்லுமுன்
பால் குடித்தது
‘மூச்சா’ வந்தால்
டாடி டைனோஸரை எழுப்பியது

தொப்பி யணிந்து
பள்ளி சென்றது
பள்ளிக்கூட
உணவு இடைவேளையில்
அம்மா தந்துவிட்ட
சிற்றுண்டி உண்டது

கருப்புக் காரை
விரட்டியது
கணக்கு சாரை
மிரட்டியது

சுலைமானுடனும் ஷாருக்குடனும்
விளையாடியது
பலூன் பாலுவிடம்
‘கட்டி’ விட்டது
சுஷ்மிதா திருடிய
ஷார்ப்பெனெரை
பிடுங்கித் தந்தது

மம்ஸார் பார்க்கில்
கிரிக்கெட்டில்
ஷாருக்குக்கு நாட் அவுட் சொன்னது

மேலும்
நல்ல டைனோஸர்
எழுந்ததும் பல் துலக்கியது
சுவரில் கிறுக்காமல்
காகிதத்தில் எழுதியது
உடை ஈரமானால்
உடனே மாற்றியது

…மகன் உறங்கியதும்
மேலும்
கேவலப் படுவதிலிருந்தும்
தப்பியது டைனோஸர்!

Series Navigation