கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

லதா ராமகிருஷ்ணன்


நிகழ்வு

கவிதையில் அகழ்ந்தெடுத்த ’கண்ணாடிக் கிணறு’ –
கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து அபூர்வம் அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக வளாக சிற்றரங்கில் 13.02.2010 அன்று நடந்தேறிய கருத்துப்பகிர்வுக் கூட்டம்:


ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியச் சிற்றிதழ்களில் பிரதானமாக கவிதைகள் எழுதியும், சிறுகதைகள் மதிப்புரைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியும் கணிசமாகப் பங்களிப்பு நல்கி வருபவர் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி. நான்கைந்து கவிதைத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதி, இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொகுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளடங்கிய முழுத்தொகுதி என இவருடைய படைப்புகள் பல இதுவரை நூல்வடிவம் பெற்றுள்ளன. கவிதைக்கணம் என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இயங்கியவர்.


இவருடைய இலக்கியப் பங்களிப்பிற்கு இதுநாள்வரை போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது. ஆனால், பூமா ஈசுவரமூர்த்தி அதுகுறித்தெல்லாம் ஆதங்கப்படாமல், எழுதுவதே ஆனந்தமாய் ஆர்வங்குறையாமல் தொடர்ந்து இலக்கியவுலகில் இயங்கிவருபவர். இன்று ‘சிற்றிலை’ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பை, ஒத்த சிந்தனை கொண்ட சக எழுத்தாளர்களான கவிஞர் கடற்கரை, ரெங்கையா முருகன், ஐசக் மற்றும் சிலருடன் கரங்கோர்த்து உருவாக்கியுள்ளார். இவ்வமைப்பு சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகளிலும், செயல்பாடுகளிலும் முனைப்பாக இயங்கிவரும் களப்பணியாளர்களை வரவழைத்து உரைநிகழ்த்தச் செய்து, சுற்றுச்சூழல் குறித்த ஆவணப்படங்களை முடிந்தபோது நிகழ்வின் ஒரு பகுதியாகத் திரையிட்டும், சுற்றுச்சூழல் குறித்து அக்கறையோடு எழுதப்பட்டுள்ள நூல்களை ஒரு கூட்டத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் அறிமுகம் செய்தும் தங்கள் கைக்காசைச் செலவுசெய்து மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பரவலாக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கிவருகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் வளாகச் சிற்றரங்கில் சிற்றிலை அமைப்பின் கூட்டம் மாதம் ஒருமுறை சிறப்பாக நடந்தேறிவருகிறது.

இப்பொழுது இலக்கியத்திற்கென்று அபூர்வம் என்ற அமைப்பைத் துவக்கியிருக்கிறார் கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி. இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள கவிஞர் கடற்கரையின் கவிதைத்தொகுதியான கண்ணாடிக்கிணறு குறித்து 13.02.2010 அன்று ஒரு கருத்துப்பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தாளர்களும், கவிஞர்களுமான க.மோகனரங்கன், ஸ்ரீநேசன், எஸ்.சண்முகம் முதலியோர் தோழர் கடற்கரையின் கவியாளுமை, அதன் நிறை குறைகள் குறித்துப் பேசினர். நவீன தமிழ்க்கவிதை குறித்த அன்பும், அபிமானமும், அக்கறையும், நிறைவான அறிவும், ஆர்வமுமாய் அவர்கள் பேசிய பாங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நேர்த்தியான இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றுவந்த நிறைவை மனதில் ஏற்படுத்தியது. நவீன தமிழ்க்கவிதை குறித்து அவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்து நமக்கு மாறுபட்ட பார்வைகள் இருக்க வழியுண்டு. ஆனால், அவர்கள் ஆழமான புரிதலோடும், வாசிப்போடும், மாற்றுக் கருத்துகளையும் கண்ணியமாக முன்வைத்தார்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை. அரங்கில் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் எழுத்தாளர்கள் வ.ஐ.சு.ஜெயபாலன், பிரபஞ்சன், ஆர்.சிவகுமார், வெளி ரங்கராஜன், அய்யப்ப மாதவன், பால் நிலவன் என பல படைப்பாளிகள் இருந்தனர். அவர்களும் சரி, மற்ற இலக்கிய ஆர்வலர்களும் சரி, மெய்யான ஆர்வத்தோடும், அக்கறையோடும் ( அதாவது ‘hidden agenda’ என்று ஏதுமில்லாமல்) கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.


பூமா ஈசுவரமூர்த்தி: கவிதைகள் பற்றிய கலந்துரையாடலில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறோம். அதை நிவர்த்திசெய்யவும், நவீன தமிழ்க்கவிதை, குறித்த ஆக்கபூர்வமான கலந்துரையாடலையும், கருத்துப்பகிர்வையும் சாத்தியப்படுத்தவும் அபூர்வம் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

க.மோகனரங்கன்: கவிதை எழுதும்போதும், வாசிக்கும்போதும் ஒரு தனிமை சூழ்கிறது. இதனால்தான் கவிஞர்கள் கவிதை பற்றி அதிகம் பேசுவதில்லை.

கவிதை பாஷைக்குள் அடங்கும் பரிபாஷை.

நுண்ணுணர்வு கொண்ட சாதாரண வாசகனுக்கு கவிதை ஓரளவு பிடிபட்டுவிடும்.

அச்சிட்ட வரிகளுக்கு இடையே நிகழ்ந்துள்ளவை, நிகழ்ந்திருக்கவேண்டியவை குறித்தே நான் பேச விரும்புகிறேன்.

ஒரு கவிதை தீவிர விஷயத்தை தீவிரத் தொனியில்தான் சொல்லவேண்டுமென்பதில்லை.

கவிதையில் எந்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல. அது எப்படி கவிதானுபவமாக மாறுகிறது என்பதுதான் முக்கியம்.

எந்தவொரு புதுக்கவிஞனுக்கும் மூத்த எழுத்தாளரின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அது ‘சாயல்’ என்று மாறிவிடலாகாது.

இன்று நேர்க்கவிதையே அதிகம் சிலாகிக்கப்படுகிறது. எனில், மறைபொருள் முக்கியம் என்று நம்புகிறேன்.

கடற்கரை தனக்கென்று தனிக் குரலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. பல்வேறு குரல்களையும் முயன்று பார்த்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் இன்று வழக்கொழிந்த செந்தமிழ்ச் சொற்களும், இன்று சகஜமாகப் புழங்கும் எஸ்.எம்.எஸ் போன்ற வார்த்தைகளும் புழங்குகின்றன. இவற்றிற்கிடையேயான தூரமே நம் தமிழ்க்கவிதையின் நெடிய வரலாறாகும். இதைக் கடந்துவரவேண்டியதே இன்றைய கவிஞருக்கு அவசியம்.

எஸ்.சண்முகம்: புதுக்கவிதையின் பிரதானப் போக்காக நான் கருதுவது ‘ஓசைநயமில்லாமை’.

90இன் பிற்பகுதியில் வந்த கவிதைகளில் நிறைய வார்த்தைகள் ஒவ்வொரு வரியிலும் இடம்பெறும். 80இன் பிற்பகுதியில் நான்கு வார்த்தைகளுக்கு மிகாமல் அடுத்த வரிக்குப் போய்விடுவோம்.

ஞானக்கூத்தனின் கவிதைகளில் வரி நீளமாயிருந்தாலும் ஓசைநயம் தொடர்ந்துவரும்.

வசனத்தில் புரட்சி செய்த புதுமைப்பித்தன் கவிதையை மரபாகத் தான் எழுதினார்.

80கள், 90களில் உத்தி பற்றிய பிரக்ஞை அதிகமாயிற்று.

நேசன், ராணி திலக், அய்யப்ப மாதவன், மனுஷ்யபுத்ஹ்டிரன், லஷ்மி மணிவண்ணன் ஷங்கர ராம சுப்ரமணியன், குட்டி ரேவதி முதலியோர் கவிதைகளில் உரைநடை வடிவம் அதிகமாக இருக்கும்.
ப்ரோஸ் எனப்படும் உரைநடை வடிவம் அதனளவிலேயே நவீனத்தன்மை வாய்ந்தது. எனவே தான் தமிழ்க் கவிதையில் உரைநடை வடிவம் வர வர கவிதை மிக நவீனத்தன்மை கொண்டதாகிவிட்டது. இது ஆத்மாநாமிலிருந்து முழுமையாக ஆரம்பித்தது எனலம். நகர வாழ்க்கைச் சிக்கல்கள் ஆத்மாநாம், நகுலன் ஆகியோரின் கவிதைகளில் கூர்மையாக வெளிப்பட்டன.

‘தொலைந்து போதல்’ என்பது நவீன எழுத்தில் தொடர்ச்சியாய் வரும் கரு. கடற்கரையிடமும் இது உள்ளது. உ-ம்: மூளைக்கும், கைமறதிக்கும் இடையே வைத்துவிடலாம்’.

கிராமப்பின்னணியிலிருந்து வருவதால் நகரம் எதிர்மறைப் படிமங்களால் சித்தரிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

’பூனைத் தலையுள்ள நண்பரைப் பற்ரிய கவிதையை இதற்கும், சர்ரியலிஸத் தன்மைக்கும் உதாரணங்காட்டலாம்.

ஜோடிஜோடியாய் இரட்டையராகிக்கொண்டே போதல், ஒன்றையொன்று பிரதிபலிப்பதாய் படிமங்கள் இவர் கவிதைகளில் காண முடிகிறது.

80களில் வந்த இருண்மைப் பண்புகொண்ட பூடகக் கவிதைகள் ஓரளவுக்கு மேல் விளங்காது நாமாக ஏதாவது விளங்கிக் கொள்வோம். 90களில் படிக்க எளிதாகவும், உள்ளே ‘நுட்பமும், சிக்கலும் நிறைந்ததாகவும் கவிதைகள் அமைந்திருக்கின்றன. படிக்கும்போது ‘legible’ ஆக இருப்பது இன்றைய கவிதைகளின் ஒரு சிறப்பம்சம். இவற்றோடு ஒப்பிட முந்தைய நவீன தமிழ்க்கவிதைகளில் ‘readers’ response’ குறைவு. இப்போது அதிகம். காரணம், வாசிக்க எளிமையாக இருக்கிறது. எனவே, வாசக்ர் கவிதைக்குள் ஈர்க்கப்படுவது நிகழ்கிறது.

90களில் வானம்பாடிக் கவிஞர்களின் தாக்கம் அதிகம் என்பதால் அதற்கு எதிர்ப்பாய் நவீன கவிதைகளில் இருண்மை அதிகமாக இருந்தது. பிரக்ஞாபூர்வமாய் உத்திகளைக் கையாளவேண்டியிருந்தது. Narration அப்போழுது இந்த அளவுக்கு இலகுவாக இல்லை. இந்த 20,30 வருடங்களில் நவீன தமிழ்க்கவிதைக் கூறுகள் தாமாகவே internalize செய்யப்பட்டிருக்கின்றன.

இவர் கவிதையில் ‘மான் கண்ணுக்குள் புகுந்து வெளிவருகிறது. இது உருவகமா, குறியீடா? என்னைப் பொறுத்தவரை இது ஒரு ‘sign’.

தமிழ்க்கவிதைக்கு நெடிய வரலாறு இருப்பதும், அதன் பரிமாண வளர்ச்சியே இன்றைய தமிழ்க்கவிதை என்பதும் எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை நவீன தமிழ்க்கவிதைக்கும் நெடிய வரலாறும், பல்வேறு நிலைகளும், கட்டங்களும் உண்டு என்பதும்.

90களில் நேரடியான அரசியல் கூற்றுகள் கம்மி. ஒப்புநோக்க, இப்போது அதிகம். கடற்கரையின் கவிதைகளிலும் இத்தகைய கூற்றுகள் இடம்பெறுகின்றன.

இவர் கவிதைகளில் போல, போயின என்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இதைத் தவிர்க்கலாம்.

ஸ்ரீநேசன்: ஒரு கவிதை நல்ல கவிதை என்று புரிகிறது. ஆனால், எப்படி என்று விளக்க இயலுவதில்லை.

இது க.நா.சு வின் நூற்றாண்டுவிழா. க.நா.சு வின் கவிதைகள் உரைநடைக் கவிதைகளுக்கான முன்னோடி. ந.பிச்சமூர்த்தியின் கவிதை முழு உரைநடைத் தன்மை கொண்டவை என்று சொல்லவியலாது. பசுவைய்யாவின் யாரோ ஒருவனுக்காக, ஆத்மாநாம் கவிதைகள், நகுலன் கவிதைகளைக் குறிப்பிடலாம்.

மொழிபெயர்ப்பின் தன்மை தான் உரைநடைக் கவிதையின் வடிவமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மனதை பாதிக்காமல் எழுதும் கவிதை நன்றாக இருப்பதில்லை. அத்தகைய நல்ல கவிதை வரும் தருணத்திற்காய் எவ்வளவு வேண்டுமானாலும் காத்துக்கொண்டிருக்கலாம்.

கடற்கரை பழைய பாணியிலும், புதிய பாணியிலும் கவிதை எழுதியுள்ளார். அடவியில் வந்த இவருடைய கவிதைகள் அடர்செறிவானவை.

தேவதச்சனுக்கு அடுத்ததாய் அடுக்குத்தொடர் அதிகமாக இவர் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

நகுலனையோ, ப்ரமிளையோ எளிதாகக் காப்பியடிக்க முடியாது. தேவதச்சனை அப்படி நகலெடுத்துவிட முடிகிறது.

இந்த 40 வருடங்களில் தான் நாம் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டுவருகிறோம்.

தொகுப்பில் எனக்குப் பிடிக்காத கவிதைகள் இருக்கின்றன. சன் தொலைக்காட்சித் திரைப்படம் குறித்து மிகச் சிறப்பாகவே கவிதையெழுதியிருக்கிறார். ஆனால், எனக்கு அக்கவிதை முக்கியமில்லை.

’க்ராஃட்’ ஆக எழுதப்பட்ட கவிதையும் இந்தத் தொகுப்பில் உண்டு. இதில் அனுபவமில்லாமல் சிறப்பாக எழுத முடியும். ஆனால் எனக்கு அனுபவம்தான் முக்கியம்.

பழமை-புதுமை அதில் வரும் முரண்களையெல்லாம் கடற்கரை நிறைய கவிதைகளில் பேசியிருக்கிறார்.

மாற்றம் வளர்ச்சிக்குரியதா, பாதிப்பா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், பழகிய தடங்கள் மறையும்போது ஏற்படும் வலி தான் இங்கே பகிரப்படுகிறது.

நாகரீக மனிதனின் பிளவுண்ட நிலையும் நிறைய கவிதைகளில் பேசப்படுகிறது.

காரைக்கால் அம்மையார், ஆண்டாள், பிரதோஷம் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். தொன்மங்களை நிறையக் கையாண்டிருக்கிறார். ஆனால், அவர் சார்ந்த இசுலாமியர் இனம் குறித்து பதிவு இல்லை.

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை கொண்டவராதலால் கடற்கரை இயற்கையின் பல்பரிமாணங்களை, தாவரங்களை கவிதைக்குள் கொண்டுவருதல் ஆகியவற்றைத் தனது கவிதைகளில் கையாண்டிருக்கிறார்.

ஒரு முறை மரம் பேசியது என்னிடம். மரங்கள் நம்மிடம் பேசும். அது உணர்வார்த்தமானது. ஒருவித மனநிலையே.

கண்ணாடிக் கிணறு என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை ஐந்து கூறுகளாகப் பகுக்கலாம். தீராநதி இதழ்களில் வெளியான இவருடைய நேர்காணல்களும், பிறவேறு எழுத்தாக்கங்களும் இவரைச் சிறந்த கட்டுரையாளராக இனங்காட்டின. இந்தத் தொகுப்பு இவரைக் கவிஞராக மீண்டும் அழுத்தமாக இனங்காட்டியிருக்கிறது! இந்தத் தொகுப்பை பழங்குடிகளுக்காக சமர்ப்பணம் செய்துள்ளார்.

கவிஞர் கடற்கரை: என் கவிதைகளை எழுதி முடித்ததுமே அவற்றின் தரம் பற்றி எனக்குத் தீரா சந்தேகமும், திருப்தியின்மையும் ஏற்பட்டுவிட்கிறது.

என் கவிதைகளை மிகவும் பிரக்ஞாபூர்வமாகத் தான் எழுதுகிறேன். வரிக்கு வரி யோசித்து வார்த்தைகளை மாற்றியபடியே தான் எழுதுகிறேன். எழுதியதை ஒரு வருடம் கழித்துக்கூட வெளியிடுவதுண்டு.

மிக நுண்மையான மூன்று விமர்சகர்கள் என் கவிதைகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது.

தேவதச்சனிடம் பல விஷயங்களைப் பற்றிக் கருத்துப்பரிமாற்றம் நிகழ்த்திவருகிறேன். எனவே அந்தத் தாக்கம் கவிதையில் இருப்பது இயல்பு. ஒன்று தேவதச்சனோடு பேச வேண்டும், அல்லது கவிதை எழுத வேண்டும் என்று யாரேனும் கூறினால் கவிதை எழுதுவதை நிறுத்திவிடுவேன்!

ஒருமுறை தேவதச்சனிடம் கூறினேன்: வயதானவர்களெல்லாம் தாவரங்களாக மாறிவிடுகிறோம். ஆம், துளசிச்செடி போன்றதையெல்லாம் ஒரு மனிதனாகத் தான் பார்க்கிறோம்.

எனக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை, இயல்பாகப் பார்க்க முடியவில்லை. இந்த நிலை எல்லோருக்கும் பொதுவானதுதானா தெரியவில்லை. வெளியே வீதியில் மழை பெய்யும்போது அறைக்குள் இருக்கும் என்னால் அந்த ஈரத்தை உணர முடிகிறது. அறைக்குள் மழைபெய்வதாகவே உணர்கிறேன்.

இனிய நண்பர் பூமா ஈசுவரமூர்த்தியின் முழுக்கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது அதைப் பற்றி ஒரு வார்த்தையும் நான் எழுதவில்லை. அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் என் மீதும் கவிதை மீதும் கொண்ட அன்பு காரணமாய் இந்த விமர்சனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அவர். கூட்டம் இருக்காது என்று நினைத்தேன். இத்தனை பேர் அன்போடு வந்து இறுதிவரை அமர்ந்து இத்தனை கவனமாகக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறீர்கள். நிறைவாகவும், நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்