அவள் நிறையும் கிறுக்கல்கள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

தேனு


வந்து நிற்கும்
நினைவுகளுக்கெல்லாம்
விடையெனவும் தடமெனவும்
ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில்
அவ்வளவுமாய்
அவள்தான் நிறைந்திருக்கிறாள்..

நாளுக்கொன்றாய்
நாளைக்குமொன்றாய்
விடுபடும் வார்த்தைக்கோர்வைகள்
பலருக்கு கவிதையாகவே
புலப்படுவது
செயப்பாட்டு விந்தையே..

அவைகள் அவளுக்கான
என் கிறுக்கல்கள்தான்
என்பதில் ஆணித்தரமென
நிற்பதிலிருக்கும்
உணர்வுப் போராட்டம்
சொல்லி மாளாது..

வெண்ணிற தாளினமே,
தூது போ!
தனிமையில் சந்தித்து
என் மனதை
விட்டுவா என்னவளிடம்…..

அவளால் மட்டும்
வெறுக்கப்படும்
என் வெற்றுக்கிறுக்கல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து
மரித்துக் கொண்டிருக்கின்றன,
ஆறாம் விரலிலிருந்து விடுபட்டுக்
கரையும்
கண்ணீர் புகையென…

– தேனு

Series Navigation