நல்லூர் இராஜதானி நகர அமைப்பு! அத்தியாயம் பதினொன்று

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

வ.ந.கிரிதரன்



இதுவரை நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை, நகர அமைப்புப் பற்றிய தகவல்களையும் பார்த்தோம். ஏற்கனவே இருந்திருக்கக் கூடிய நல்லூர் இராஜதானி பற்றிய தகவல்களைச் சிற்சில இடங்களில் கோடிட்டுக் காட்டியிருந்தேன். இப்பொழுது அவற்றையெல்லாம் மீண்டும் முழுதாகப் பார்ப்போம். இந்த நகர் அமைப்பை நான் ஆய்வதற்காக எடுத்துக் கொண்ட மிக முக்கியமான ஆரம்பப்படியாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். நகரின் சந்தைப் பகுதி நகரைன் மையத்தில் அமைந்திருந்தது என்பதுதான் அது.

சந்தையும், நகர் மையமும், பிரதான வீதிகளும்!

பொதுவாக சந்தையென்பது பிரதான வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பதுதான் இயற்கை. சந்தையின் வெற்றிக்கு இது முக்கியம். பெளத்தர்களின் பழம்பெரும் நகர்களிலொன்றான அநுராதபுரம் தொடக்கம் பண்டைய நகரங்கள் பலவற்றில் சந்தையானது நகரின் இரு பிரதான வீதிகள் சந்திக்கும் பகுதிகளில் அமைந்திருந்ததை அறியக் கூடியதாகவுள்ளது. இதனால்தான் நல்லூர் இராஜதானியின் மையப்பகுதியாகவும் சந்தையிருந்திருக்க வேண்டுமெனற முடிவுக்கு வந்தேன். இந்த என் முடிவுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் இச்சந்தைப் பகுதியை மையமாக வைத்துப் பார்க்கையில் நகரில் காணப்படும் ஒழுங்கு இருக்கிறது.

அடுத்ததாக நல்லூர் இராஜதானியானது இரு பிரதான் வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்ற முடிவுக்கு வந்தேன். இதற்காதாரமாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

இராஜதானிக்கு மேற்கு, வடக்கு வாசல்களிருந்ததை வரலாற்று நூல்கள், குறிப்புகள் புலப்படுத்துகின்றன. தமிழகத்தில் தலைமறைவாகவிருந்துவிட்டு, மீண்டும் படையெடுத்து வந்த கனகசூரிய சிங்கையாரியனைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறும்: “….கனகசூரிய சிங்கையாரியன் மதுரையிற் சேர்ந்த பொழுது பாண்டிநாட்டைப் பகுதியாய் ஆண்ட சிற்றரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட, அவன் சகல ஆயுதங்களுடனேயே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, மேற்கு வாசல் வழியாக நுழைந்தான்” (வைபவமாலை; பக்கம்:47) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு வாசலென்பது நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசலே என்பது வெள்ளிடமலை. இம்மேற்கு வாசலைப்பற்றிப் பறங்கிகளின் படையெடுப்புப் பகுதியிலும் கூறப்பட்டுள்ளது. “…யுத்தம் வாசற்புறத்தே நல்லூர்க் கோட்டையின் கோவிலுக்கு முன்னதாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள்” (வைபவமாலை; பக்கம் 70). இந்த யுத்தத்தைப் பற்றிப் போர்த்துகேயரின் குறிப்புகளும் விபரமாக விளக்குகின்றன. Conquest of Ceylon நூலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அண்மையில் நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாயில் அமைந்திருந்ததும், யுத்தம் நிகழ்ந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்லூர் இராஜதானியின் மேற்கு வாசல் பற்றியும், அவ்வாசல் வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கண்மையில் இருந்துள்ளது பற்றியும், அதற்கண்மையில் நடைபெற்ற யுத்தங்கள் பற்றியும் விபரிக்கின்றன. அதே சமயம் இம்மேற்கு வாசலுக்கு அண்மையில் ஆனைப்பந்தி என்னுமிடம் காணப்படுவது அங்கு தமிழரசரின் ஆனைப்படைகளின் தங்கிமிடமொன்று இருந்ததை உணர்த்துவதாகவுள்ளது. இதுபோல் நல்லூர்க் கோட்டைக்கு வடக்கு வாயிலொன்று இருந்த விபரமும், அதற்குப் பாதுகாப்பாகச் சிவாலயமொன்று இருந்த விபரமும் வைபவமாலயில் வரும் சுபதிட்ட முனிவர் கதையில் கூறப்பட்டுள்ளன: “…அவ்வாலயங்களில் வடமதில் வாயில் காப்பாக நின்ற சிவாலயம் ஒன்று மாத்திரமே சிவகடாட்சம் பெற்ற ஒருவனால் முதன் முதல் நிறைவேறும்” (வைபவமாலை; பக்கம் 53-54). இது இராஜதானியின் வடக்கு வாசல் பற்றியும், அவ்வாசல் சட்டநாதர் ஆலயத்திற்கண்மையில் அமைந்திருந்தது பற்றியும் அறிவிக்கிறது. மேலும் நகரின் கிழக்குப் பகுதியில் காணப்படும் காணிப்பெயர்களான ‘கோட்டைவாசல்’, ‘கோட்டையடி’ என்பவை அப்பகுதியில் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்தின. மேற்கு வாசலுக்குப் பாதுகாப்பாக வீரமாகாளியம்மன் கோயிலும், வடக்கு வாசலுக்குப் பாதுகாப்பாகச் சட்டநாதர் ஆலயமும் இருந்ததை வரலாற்று நூல்கள் குறிப்பிடுவதால் கிழக்கு வாசலுக்குப் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமிருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். மேற்படி ‘கோட்டை வாசல்’, ‘கோட்டையடி’ ஆகிய காணிப்பெயர்களும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கண்மையிலிருப்பதும் அதனையே உறுதி செய்கின்றன. நகரின் நான்கு திக்குகளிலும் பாதுகாப்பாக நான்கு ஆலயங்களான வீரமாகாளியம்மன் கோயில், சட்டநாதர் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், மற்றும் கைலாசநாதர் ஆலயமாகியவற்றைச் சிங்கைப் பரராசேகரன் அமைத்திருந்தான் என்பது வரலாற்று நூல்கள் தகவலகாகவுள்ளது. இதன்படி நல்லூர் இராஜதானியின் தெற்கு வாசலும் அதற்குப் பாதுகாப்பாகக் கைலாயநாதர் கோயிலும் இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன்.

இவ்விதமாக முடிவெடுத்த பின்னர் இராஜதானியானது நான்கு வாசல்களைக் கொண்டிருந்ததனால், நகரானது நான்கு வாசல்களையும் இணைக்கும் வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு என்று இரு பிரதான வீதிகளால் பிரிகப்பட்டிருக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். இவ்விதமாக நகரானது இருபெரும் பிரதான வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்ற முடிவுக்கு வந்தபின்னர் சந்தையானது இவ்விரு பிரதான் வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருந்தது என்ற முடிவுக்கு வருவது எளிதாயிற்று. நகரமானது நான்கு வாசல்களையும் இரு பிரதான வீதிகளையும், நான்கு வாசல்களுக்குப் பாதுகாப்பாக நான்கு ஆலயங்களையும் கொண்டதாக அமைந்திருந்தது என்ற முடிவுக்கு வந்ததும் மேலும் சில பிரச்சினைகள் தோன்றின. தற்போது காணப்படும் ஆலயங்களெல்லாம் போர்த்துகேயரால் இடிக்கப்பட்டு மீளக் கட்டப்பட்டவை. நல்லூர் இராஜதானியின் காலகட்டத்தில் இவற்றின் உண்மையான இருப்பிடமெவையாக இருந்திருக்கக் கூடும்?

முன்பே குறிப்பிட்டதைப் போல முத்திரைச் சந்தையென அழைக்கப்படும் பகுதியே நகரின் மையப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இவ்விதம் முத்திரைச் சந்தையே நகரின் மையத்திலிருந்ததென்ற முடிவுக்கு வந்ததும் இப்பகுதியிலிருந்து வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் கிழக்கிலும், சட்டநாதர் ஆலயம் மேற்கிலும் அமைந்திருந்ததும், இவற்றின் தூரங்கள் முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருந்ததும் அவதானிக்கப்பட்டது. இவற்றிலிருந்து பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன: சட்டநாதர் ஆலயத்தினதும், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தினதும் தூரங்கள் அண்ணளவாகச் சமமாயிருப்பதால் இவை அவையிருந்த பழைய இடங்களில் அல்லது அவற்றிற்கண்மையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லூர் கந்தசாமி கோயில் மீண்டும் குருக்கள் வளவில் அமைக்கப்பட்டதால் இதனை மையமாக வைத்து ஏனைய கோயில்களான வீரமாகாளியம்மன் கோயில் மற்றும் கைலாசநாதர் ஆலயமாகியன அமைக்கப்பட்டன போலும்.

நல்லூர் இராஜதானி நகர அமைப்பின் வடிவம்!

மேலும் சட்டநாதர் ஆலயத்தினதும், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தினதும் தூரங்கள் முத்திரைச் சந்தைப் பகுதியிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருப்பதாலும், முத்திரைச்சந்தைப் பகுதியை மையமாக வைத்துப் பார்க்கையில் காணப்படும் நகர அமைப்பில் காணித்துண்டுகளின் பெயர்களில் காணப்படும் ஒழுங்கும் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பானது வட்ட வடிவானதாக அல்லது சதுர வடிவானதாக இருந்திருக்கலாமென்ற ஐயத்தினை ஏற்படுத்தின. ஆயினும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய தகவல்களிலிருந்து சதுர வடிவமே பெரும்பாலும் கருத்துமுதல்வாதிகளான இந்துக்களால் பாவிக்கப்பட்டது அறியப்பட்டது. அத்துடன் இந்துக்கள் இப்பிரபஞ்சத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளினாலும் உருவகித்ததும் அவதானிக்கப்பட்டது. அதே சமயம் பெரும்பாலான பெளத்த கட்டடங்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தும் அவதானிக்கப்பட்டது. பெளத்தர்களின் தாதுகோபங்கள் வட்டவடிவில் அமைக்கப்பட்டன. அவர்களின் புனித நகர்களிலொன்றான அநுராதபுரத்தின் பண்டைய நகர அமைப்பானது வட்டமானதொரு ஒழுங்கில் வட்டவடிவமான தாதுகோபங்களால் சூழப்பட்டிருந்ததை ரோலன் டி சில்வா என்னும் சிங்களப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் விளக்கியிருந்ததையும் ஏற்கனவே பார்த்தோம். தோற்றத்தினையும், அழிவினையும், இரவையும் பகலையும் இவ்விதமாக ஒருவித வட்டவடிவில் நகரும் காலத்தைப் பொருள்முதல்வாதிகளான பெளத்தர்கள் வட்டவடிவினைப் பாவிப்பதன்மூலம் வெளிப்படுத்தினார்களென்பது ஆய்வாளர்கள் பலரின் முடிவென்பதையும் அறிந்தோம். எனவே பிரபஞ்சத்தை ஒருவிதமான வெளி நேர அமைப்பாகவே (நவீன பெளதிகம் கூருவதைப் போல்) கருத்துமுதல்வாதிகளான இந்துக்கள் விளங்கி வைத்திருந்தார்களென்பதுவே தர்க்கச் சிறப்புமிக்கதென்பதையும் அறிந்தோம். அத்துடன் பண்டைய இந்துக்களின் நகரங்கள் பல சதுர (அல்லது இயலாத பட்சத்தில் செவ்வக) வடிவாக அமைக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். இத்தகைய காரணங்களினால் நல்லூர் இராஜதானி நகர அமைப்பின் வடிவமும் சதுரமாகவே இருந்திருப்பதற்கே அதிகளவான சாத்தியக் கூறுகளிருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் பண்டைய இந்துக்களின் நகரங்கள் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டே அமைக்கப்பட்டிருந்ததும் அவதானிக்கப்பட்டது. இன்றைய நல்லூர் நகரின் முத்திரைச் சந்தைப் பகுதியினை மையமாக வைத்துப் பார்க்கையில் நான்கு திக்குகளிலும் காணப்படும் காணிப்பெயர்கள் மற்றும் வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள் ஆகியனவும் இதனையே புலப்படுத்துவதை வெளிக்கள ஆய்வுத் தகவல்களும் வெளிப்படுத்தின.

இந்துக்களின் பண்டைய கட்டடக்கலை நூல்கள் கூறும் தகவல்களின்படி பிராமணர்கள், சோதிடர்கள் போன்றோர்க்குரிய பகுதி வடக்கும், வடமேற்கும் என்பதும், அரசர்க்குரிய பகுதி கிழக்கும் என்பதும் அறியப்படுகின்றது. நல்லூரில் நடத்திய வெளிக்கள ஆய்வுகள் தரும் தகவல்களின்படியும் வடமேற்குப் பகுதியில் அந்தணருக்குரிய குருக்கள் வளவு, அரசவைக் கவிஞருக்குரிய அரசகேசரி வளவு ஆகிய காணிப்பெயர்களைக் கொண்ட காணிகளிருந்ததும் அவதானிக்கப்பட்டது. அத்துடன் வடமேற்குப் பகுதியில் அரசருக்குரிய பல காணித்துண்டுகளிருப்பதும் உதாரணமாக பண்டாரக்குளம், பண்டாரமாளிகை வளவு, சங்கிலியன் வீதி, சங்கிலியன் தோப்பு ஆகியன இருப்பது பகுதியில் அவதானிக்கப்பட்டன. அத்துடன் வடகிழக்குப் பகுதியில் நல்லூர்க்கந்தசாமி ஆலயமும் (தற்போது கிறிஸ்தவ ஆலயமிருக்கும் பகுதியில்), பகர வடிவான யமுனாரி என்னும் தீர்த்தக் கேணியும் காணப்பட்டதையும் அவதானித்தோம். மேற்படி நல்லூர்க் கந்தசாமி ஆலயமானது மிகப்பெரிய ஆலயமாக மதில்களுடன் விளங்கியதைப் போர்த்துகேயரின் வரலாற்று நூல்கள் கூறின. இன்றும் யமுனாரிக்கண்மையிலுள்ள வீதியில் காணப்படும் கட்டடச்சிதைவுகளைச் கலாநிதி க.குணராசா போன்றோர் மேற்படி கந்தசாமி ஆலயத்தைச் சேர்ந்ததாகக் கருவதையும் பார்த்தோம். மேற்படி கந்தசாமி ஆலயம் பெரியதொரு நிலப்பரப்பில் வடகிழக்கில் காணப்பட்டதால் போலும் அப்ப்குதியில் அரசருக்குரிய பகுதிகள் அதிக அளவில் காணப்படவில்லை போலும். அதே சமயம் மேற்படி வடகிழக்குப் பகுதியில் காணப்படும் காணித்துண்டொற்றிற்கு (பருத்தித்துறை வீதியை அண்மித்த, ‘கராஜ்’ காணப்படும் பகுதி) ‘பாண்டியமாளிகை வளவு’ என்றிருப்பதும் அவதானிக்கப்பட்டது.

பொற்கொல்லர் போன்ற தொழில்களைச் செய்பவர்கள் வாழும் பகுதி நகரின் தென்கிழக்குப் பகுதியில் இருக்க வேண்டுமென்பதைப் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை நூல்கள் பல கூறின. இதனை உறுதி செய்வது போல் நல்லூரின் தென்கிழக்குப் பகுதியில் (முத்திரைச் சந்தையை மையமாக வைத்துப் பார்க்கையில்) பல காணிப்பெயர்கள் உதாரணமாக சாயாக்காரத் தெரு.. போன்ற தொழிலாளர்க்குரிய காணிப்பெயர்கள் விளங்குகின்றன. இதுபோலவே போர்வீரர்கள், அரண்மனை ஊழியர்கள் போன்றோர் தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதைப் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை நூல்களும் , வெளிக்கள ஆய்வுத் தகவல்களும் (இராசகுலத்தான் வளவு போன்ற காணிப்பெயர்கள்) உறுதிப்படுத்துகின்றன. சந்தையைப் பொறுத்தவரையில் வடகிழக்குப் பகுதியிலேயே அமையவேண்டுமென இந்துக்களின் கட்டடக்கலை நூல்கள் கூறுகின்றன. நல்லூர் ராஜதானியின் மையத்திலிருந்த முத்திரைச்சந்தையும் நகரின் நான்கு பிரதான வீதிகளின் சந்திப்பில் , வடகிழக்குப் பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டும். தென்கிழக்குப் பகுதி தொழிலாளருக்குரியதாக விளங்கியதால் மேற்படி அனுமானம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. மேற்படி சந்தையைப் பற்றிப் போர்த்துக்கேயரின் நூல்களிலொன்றான Early Christianity in Ceylon (17th Centuray Narrative) கூறுவதையும், இச்சந்தையின் நடைமுறைகளை அரசன் தனது மாளிகையிலிருந்து பார்க்கக்கூடியதாகவிருந்ததை மேற்படி நூல் விபரித்திருப்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேற்படி சந்தையில் தமிழரசர் காலத்தில் சந்தையில் விற்கப்ப்டும் துணிகள் அரசாங்க முத்திரையிடப்பட்டே விற்கப்பட்டு வந்தனவென்பதை யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாணச் சரித்திரம் போன்ற நூல்கள் வாயிலாகவும் அறிந்துள்ளோம். “..தமிழரசர் காலத்திற்போலவே அரசாட்சி முத்திரையில்லாத துணிகள் விற்கப்படமாட்டா. முத்திரை குத்துவதற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது..”(யாழ்ப்பாணச்சரித்திரம்; பக்கம் 48).

மேலும் நல்லூர் இராஜதானியைச் சுற்றிவர கோட்டை மதிலிருந்தது. இத்தகைய மதிலின் உட்புறமாக நகரைச் சுற்றிவரப் பாதையொன்று இருந்திருக்கக் கூடியதற்கும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை /நகர அமைப்பு நூல்களின் தகவல்களின் அடிப்படையில் சாத்தியக்கூறுகளுண்டு.

இவற்றையெல்லாம் ( பண்டய இந்துக்களின் நகர அமைப்பு / கட்டடக்கலை நூல்கள் மற்றும் வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் அடிப்படையில்) வைத்துப் பார்க்கையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்வகையில் இருந்திருக்க வேண்டுமென்பது பற்றியதொரு முடிவுக்கு வர முடிகிறது. நகரானது சுற்றிவர மதிலினால் சூழப்பட்டிருந்தது. நகரின் நான்கு திக்குகளிலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு கோட்டை வாசல்களிருந்தன. இந்தக் கோட்டை வாசல்களை இணைக்கும் வகையில் நகரின் இரு பிரதான வீதிகள் வடக்கு- தெற்காகவும், கிழக்கு-மேற்காகவும் அமைக்கப்பட்டிருந்தன. மேற்படி பிரதான வீதிகளிரண்டும் சந்திக்கும் பகுதியில், சந்திப்பின் வடகிழக்குப் பகுதியில் நகரின் பிரதான சந்தையான தற்போதுள்ள முத்திரைச் சந்தை அமைந்துள்ள பகுதியில் அமைந்திருக்க வேண்டும். இவ்விதம் நகரானது மேற்படி இரு பிரதான வீதிகளாலும் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையே தற்போதுள்ள முத்திரைச்சந்தையென்னும் பகுதியினை மையமாக வைத்துப் பார்க்கையில் நகரில் தென்படும் ஒழுங்கு புலப்படுத்துகின்றது. இவ்விதம் பார்க்கையில் வடகிழக்கில் அரசருக்குரிய , தெய்வத்துக்குரிய பகுதிகளும், வடமேற்கில் அரசர், அந்தணர், மந்திரி மற்றும் அரசகவி போன்றோருக்குரிய பகுதிகள் காணப்படுவதும், தென்கிழக்குப் பகுதியில் தொழிலாளர்க்குரிய பகுதிகள் காணப்படுவதும், மற்றும் தென்மேற்குப் பகுதியில் போர் வீரரகள் மற்றும் அரண்மனை ஊழியர்கள் போன்றோருக்குரிய பகுதிகள் காணப்படுவதும் இப்பகுதியில் தற்போதும் காணப்படும் காணிப்பெயர்கள் மற்றும் சரித்திரச் சின்னங்கள், வீதிப் பெயர்கள் வாயிலாக அறியப்பட்டது. இவற்றையெல்லாம் ஏற்கனவே எமது வெளிக்கள ஆய்வுத்தகவல்கள் பகுதியில் விரிவாகவே பார்த்துள்ளோம். அத்துடன் நகரின் நான்கு திக்குகளிலும், கோட்டை வாசல்களுக்குப் பாதுக்காப்பாக நான்கு கோயில்கள் (சட்டநாதர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் ஆலயம் மற்றும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் ஆகியன) இருந்ததையும் தற்போதுள்ள நகல்களான ஆலயங்கள் மூலமாகவும், வரலாற்று நூல்களில் காணப்படும் தகவல்கள் வாயிலாகவும் அறிந்தோம். இவையெல்லாம் நல்லூர் இராஜதானியானது இராஜதானியாகவும் அதே சமயம் ஆலயநகராகவும் விளங்கியதைப் புலப்படுத்தி நிற்கின்றன.

அத்துடன் நல்லூர் இராஜதானி கோட்டை மதில்களுடனும், நான்கு வாயில்களுடனும், அவற்றிற்குப் பாதுகாவலாக ஆலயங்களுடனும் விளங்கியதை வரலாற்று நூல்கள், பண்டைய இந்துக்களின் கட்டட மற்றும் நகர அமைப்புக் கோட்பாடுகள், மற்றும் எமது வெளிக்கள ஆய்வுகளின்போது அவதானிக்கப்பட்ட காணிப்பெயர்கள், வரலாற்றுச் சின்னக்கள் அடிப்படையில் உய்த்துணர்ந்தோம். அத்துடன் மேற்படி நல்லூர் இராஜதானிக் கோட்டைக்குப் பாதுகாவலாகக் கொழும்புத்துறையிலும், பண்ணைத்துறையிலும் (தற்போது கொட்டடி என்றழைக்கப்படும் பகுதி பண்ணைத்துறைக்கண்மையில் காணப்படுகிறது. இது கோட்டையடி என்பதின் திரிபாகவே படுகிறது. அவ்விதமிருக்கும் பட்சத்தில் பண்ணைத்துறையில் அமைந்திருந்த கோட்டையானது இப்பகுதியிலேயே அமைந்திருக்க வேண்டுமென்று படுகிறது. )மற்றும் கோப்பாயிலும் மேலும் மூன்று கோட்டைகள் இருந்ததையும் வரலாற்று நூல்கள், காணப்படும் காணிப்பெயர்கள் மூலமாக அறிய முடிகிறது. மேலும் நல்லூர்க் கோட்டைக்கும் மேற்படி கோட்டைகளுக்குமிடையிலான பிரதான வீதிகள் ஆங்காங்கே படைவீரர்களின் முகாம்களைக் கொண்டு விளங்கியதையும், பண்ணைத்துறையில் தரையிறங்கிய போர்த்துக்கேயப் படைகள் நல்லூர் இராஜதானியின் பிரதான கோட்டையினை நோக்கிப் படை நகர்வுகளை மேற்கொண்ட போது மேற்படி போர் வீரர்களின் நிலைகளில் பலத்த எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்ததையும் போர்த்துக்கேயரின் Conquest of Celyon விரிவாகவே விபரிக்கும். இவ்வாய்வு நல்லூர் இராஜதானியின் பிரதான கோட்டையினைப் பற்றியே ஆராய்வதில் கவனத்தினைச் செலுத்தியதென்பதை இத்தருணத்தில் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. கோப்பாய்க் கோட்டைபற்றி சுவாமி ஞானப்பிரகாசர் கோப்பாய்ப் ப்ழைய கோட்டை என்னுமொரு கட்டுரையொன்றினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதிலவர் கோப்பாய்ப் பழைய கோட்டை இருந்ததாக அறியபப்டும் பகுதி பற்றி விளக்குவார். திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருகுச் சொந்தமான The Old Castle என்றழைக்கப்படும் காணியிலேயே தம்ழி மன்னர்களின் கோப்பாய்க் கோட்டை இருந்ததாக அவர் குறிப்பிடுவார். அதற்காதாரமாக அப்பகுதியினைச் சுற்றியுள்ள பகுதி ‘கோட்டை வாய்க்கால்’ என்றழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுமவர் அதுவே மேற்படி கோப்பாய்க் கோட்டையின் அகழியாக இருந்திருக்கக் கூடுமென்பார். அப்பகுதியிலும், மேற்படி கோட்டை அமைந்திருந்ததாகக் கருதப்படும் காணியிலும் காணப்படும் கட்டடச்சிதைவுகள் கோப்பாய்க் கோட்டையின் சிதைவுகளாகவிருக்கக் கூடும். இது பற்றிய அகழ்வாராய்வுகள் போதிய அளவில் நடத்தப்பட வேண்டும். சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ள மேற்படி ‘பழைய கோட்டை’ பகுதி இன்று பல காணித்துண்டுகளாகப் பிரிவு பட்டுப் போயிருப்பதையே எண்பதுகளில் அப்பகுதிக்குச் சென்றபோது அறிந்து கொள்ள முடிந்தது. நம்மவருக்குக் காணியில் இருக்கும் ஆர்வம், காணப்படும் ப்ழமையின் சின்னங்களைப் பேணுவதிலில்லை என்பதற்கு மேற்படிக் கோப்பாய்க் கோட்டையின் இன்றைய நிலையும், நல்லூர் இராஜதானியின் இன்றைய நிலையும் புலப்படுத்தும்.

இதுவரையில் ஈழத்துத் தமிழ் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி இராஜதானியாகப் புகழ்பெற்று விளங்கிய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதமிருந்திருக்க வேண்டுமென்பது பற்றி இயலுமானவரையில் வரலாற்றுத் தகவல்கள், காணிப்பெயர்கள், காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள், கட்டடக்கலை மற்றும் நகர அமைப்புப் பற்றிய பண்டைய இந்துக்களின் நூல்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையிலும், மேற்படி அறிவின் விளைவாக உண்டான தர்க்கரீதியிலான ஞானத்தின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு வந்தோம். எவ்விதம் வந்தோமென்பதை இவ்வத்தியாயத்தில் விபரித்திருந்தோம். எதிர்காலத்தில் சந்தர்ப்பமேற்படின் மீண்டும் விரிவாக இவ்வாய்வு நூல் புதுக்கி எழுதப்படும். இவ்விதமாக ஈழத்துத் தமிழ் இராஜதானிகளிலொன்றான நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி விபரிக்கும் முதனூலென்ற பெருமையினை இந்நூல் பெறுகின்றது. இந்நூலின் அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் கூறுவதுபோல் ‘பின்னொருகாலத்தில் ,சுதந்திரக்காற்று வீசும் சூழலில் வாழப்போகின்ற இளந்தலைமுறை ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஓர் ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமையுமென்று நிச்சயமாக நம்புகின்றேன்.

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்:

யாழ்ப்பாண வைபவமாலை – குல சபாநாதன் பதிப்பித்தது.
யாழ்ப்பாணச் சரித்திரம் – முதலியார் செ.இராசநாயகம்.
யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி – கலாநிதி செ.நடராசா.
தமிழகம்: ஊரும் பேரும் – ரா.பி.சேதுப்பிள்ளை.
தமிழ் மனையடி சாத்திரம்.
Conquest of Ceylon- Queros F. Vol 1 & 4.
Tamils and Ceylon – C.S.Navaratnam
The Kindom of Jaffan – S.Pathmanathan.
Urban and Regional Planning – Rame Gowda.
Urban Geography (Thesis) – Prof. Jeryasingam.
Early Christianity in Ceylon – Fr.Rev.Peris, Fr. Meersman.
Living Architecture: Indian – Andreas Volwahsen.
Monumental Art and Architecture of India – K.Sundaram.
The Arts and Crafts of India and Ceylon – Ananda Coomarasamy.

நில அளவைத் திணைக்கள வரைபடங்கள்:
Jaffna Town Planning Assesment Surveys sheet no: A2/45/4W, A2/45/3E

The Kings of Jaffna during Prtugeese Period (Article) – Swami Gnanappirakasar.
யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் பற்றிய கருத்தாய்வு – கலாநிதி செ.நடராசா (கட்டுரை, தமிழோசை 11-11-1993, கனடா).
ஈழமும், இந்து மதமும் – பொலநறுவைக் காலம்- கலாநிதி சி.க.சிற்றம்பலம் (சிந்தனை ஆடி 1984).
யாழ்ப்பாணம் என்ற பெயர் தோன்றிது எவ்வாறு? – ம.க.அ.அந்தனிசில் (வீரகேசரி 9-10-1990)
யாழ்ப்பாணத்துப் பெரிய கோயில் – கலாநிதி க.குணராசா (வீரகேசரி 15-08-1993)
வையாபாடல் – கலாநிதி செ.நடராசா (தமிழோசை, 15-12-1993, கனடா).
யாழ்ப்பாண இராச்சியம் – கலாநிதி சி.க.சிற்றம்பலம் (ஈழமுரசு, கனடா 25-2-1994, 11-03-1994)

பழந்தமிழர் கட்டடக்கலையும் நகர அமைப்பும் – நா.பார்த்தசாரதி.
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் (புலியூர்க் கேசிகன் பதிப்பித்தது).
தமிழர் தெய்வங்கள் – நடன. காசிநாதன்.
பழங்காலத் தமிழர் வாணிகம் – மயிலை. சீனி. வேங்கடசாமி.
ஈழத்து வாழ்வும், வளமும் – பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை.


Series Navigation

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து தொடர்ச்சி: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

வ.ந.கிரிதரன்


காவிரிப்பூம் பட்டினம்!
மேலும் மதுரை தவிர தமிழர் வரலாற்றில் தடம் பதித்த இன்னுமொரு முக்கியமான நகரம் காவிரிப்பூம்பட்டினம். சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய துறைமுகப் பட்டினமிது. சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் ‘புகார்’ என்றும், ‘பூம்புகார்’ என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் ‘காவிரிப்பூம்பட்டினமென்றும்’ அழைக்கப்பட்டது. பழைய பெளத்த நூல்கள் இந்நகர் கவீரபட்டனமென அழைக்கப்பட்டதாக மயிலை சீனி. வேங்கடசாமி கருதுவார் (நூல்: ‘பழங்காலத் தமிழர் வணிகம்’; பக்கம் 81). ‘காகந்தி’ என்றும் இதற்கொரு பழைய பெயர் இருந்ததாகவும் அவர் கருதுவார். அக்காலகட்டத்தில் (கி.பி.2ஆம் நூற்றாண்டளவில்) வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), ‘சாவகத்திலிருந்து’ம்( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள். ‘கமரா’ என்று ‘பெரிளுஸ்’ என்னும் கிரேக்க நூல் கூறுவது காவிரிப்பூம்பட்டினத்தின் சுருக்கமென்றும், கிரேக்க தாலமி குறிப்பிடும் ‘சபரிஸ்’ என்பது காவியின் திரிபென்றும் மேலும் மயிலை சீனி.வேங்கடசாமி கருதுவார். மேலும் வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் ‘கடல் ஆடும் காதையில்’ வரும் ‘கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்’ என்னும் வரிகளும் மற்றும் ‘இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில்’ வரும் ‘கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும் புலப்படுத்துகின்றன. பட்டினப்பாலையும் மேற்படி புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்த மக்கள் பற்றி ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப், புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்,முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ (பட்டினப்பாலை; 21-218) எனக் கூறும். சீததலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தன்பங்கிற்கு இம்மக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ‘பரந்தொருங் கீண்டிய பாடை மாக்கள்’ என்று கூறும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் ‘பட்டினப்பாலை’யிலும், இளங்கோவின் ‘சிலப்பதிகாரத்திலும்’ , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் மலிந்து கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவு எடுத்த காதை’, ‘கடல் ஆடு காதை’ போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் மலிந்து காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும் ….
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்” (பட்டினப்பாலை 185-193).

மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன (‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). ‘காலின் வந்த’ என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். ‘காலின் வந்த கருங்குறி மூடை’ என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். ‘வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்’ என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் (‘குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்’) , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் (‘தென்கடல் முத்து’), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் (‘குணகடல் துகிர்’), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் (‘கங்கை வாரியும் காவிரிப் பயனும் …. ஈழத் துணவும் காழகத் தாக்கமும்’) இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.

ஆனைப்பந்தியில் நிற்கும் ஆனைகள் அசைவதைப்போல் இத்துறைமுகத்தில் வந்து தங்கிய பாய்மரக் கப்பல்கள் கொடிகளுடன் அசைந்தனவாமெனப் பட்டினப்பாலை மேலும் கூறும்:

“வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும்” (பட்டினப்பாலை 172-175).

உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் ‘கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்’ வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.

சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவு எடுத்த காதையில்’ ஆசிரியர் இளங்கோ புகார் நகர் ‘மருவூர்ப் பாக்கம்’, ‘பட்டினப்பாக்கம்’, நாளங்காடி’ என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார். புகாரின் மருவூர்ப்பாக்கத்தைப் பற்றிக் கூறும் சிலம்பு அங்கு காணப்பட்ட மாளிகைகள் பற்றி, யவனர்களின் இருப்பிடங்கள் பற்றி, வணிகத்தின் பொருட்டுப் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் குடியிருப்புகள் பற்றி, விற்பதற்காக அங்கே குவிந்து கிடக்கும் பொருட்கள் பற்றி, பல்வேறு தொழிலாளர்கள், சிறு விற்பனையாளர்கள் செய்யும் தொழில்கள், விற்கும் பொருட்கள், மற்றும் அவர்கள் வாழும் வீதிகள் பற்றி, இசைக்கலைஞர்கள் பற்றி அவர்தம் இருப்பிடங்கள் பற்றியெல்லாம் விரிவான தகவல்களைச் சிலம்பு தரும்:

“வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்” (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 7-39).

இது போல் பட்டினப்பாக்கம் பற்றிய தகவல்களைப் பற்றியும் சிலம்பு விரிவாக விபரிக்கும்:

கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும், (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 40-58).

மேற்படி பட்டினப்பாக்கம் நாளங்காடிக்கு மேற்கே அமைந்திருந்தது. அரசனின் அரண்மனை, அரச வீதிகள், தேரோடும் வீதிகள், செல்வம்மிக்க வணிகர்களின் மாட மாளிகைகள், அவர்க்குரிய பெருந்தெருக்கள், அந்தணர்கள் வாழும் மனைகள் அமைந்த தெருக்கள், உழவர், மருத்துவர், காலக் கணிதர் தம் தொழிலுக்கேற்ப வாழும் தெருக்கள், முத்துக் கோப்பவர் போன்றோர், மன்னர் முன் நின்று வணங்கும் சூதர்கள், இருந்து வணங்கும் மரகதர், நாழிகை கூறும் நாழிகைக் கணக்கர், கணிகையர், குற்றேவல் செய்யும் ஏவல் மகளிர், புகழ்பாடும் வைதாளிகர், தோல், துளை, உருக்குக் கருவிகள் வாசிப்போர், குதிரைப்பாகர், யானைப்பாகர் போன்ற பலவேறு மக்கள் வாழுந்தெருக்களை உள்ளடக்கி விளங்கியது பட்டினப்பாக்கம். இவ்விரு பகுதிகளையும் இரு பெரு வேந்தர்களின் போர்முனைகளாக விபரிக்கும் இளங்கோ, இவ்விரு பகுதிகளுக்கும் கடைத்தெருவான நாளங்காடியினை மேற்படி போர்முனைகளுக்கிடையிலுள்ள இடைநிலமாக விபரிப்பார். அத்துடன் சித்திரா பெளர்ணமியில் மன்னனின் நல்வாழ்வுக்காக அங்கிருந்த காவற்பூதத்திற்குப் மறக்குடி மகளிர் பலிகொடுத்ததையும் எடுத்துரைப்பார்:

இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 61-75).

மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை “மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் ” ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).

இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும் (வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், பூத சதுக்கம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம்’) பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விபரிக்கும்.

“உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர் 125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,” ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 114-140).

மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் மலர்வனம், உய்யாவனம், சம்பாதி வனம், சுவேர வனம் மற்றும் உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை கூறும். அத்துடன் நகரில் சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:

“அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் ” (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).

இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, ‘நாடு காண் காதை’; 14: ‘இந்திர விகாரம் ஏழுடன் போகி’; மணிமேகலை; ‘இந்திர விகாரம் என எழில் பெற்று’).

ஸ்தபதி வை.கணபதியின் ‘நகரமைப்புக் கலை’ ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: “மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் ‘குடும்ப பூமி’ என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூம்புகார் நகரிலும் இவ்வமைப்பு இருந்திருப்பதைக் காண முடிகிறது” (பக்கம் 164). இது மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.

இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுமெனச் சுட்டிக் காட்டும் மயிலை சீனி. வேங்கடசாமி ‘ஆனால் இப்பட்டினம் அடியோடு முழுகிவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி.10ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்…. பிறகு இப்பெரிய பேர்போன் பட்டினம் சிறப்புக் குன்றி சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது’ என்பார் (‘பழங்காலத் தமிழர் வணிகம்; பக்கம் 89).

இது தவிர பொருநைக் நதிகரையில் அமைந்திருந்த கொற்கை, தாமிரபரணிக் கரையில் அமைந்திருந்த காயல் மற்றும் மாமல்லபுரம் ஆகிய துறைமுக நகரங்களெல்லாம் காலப்போக்கில் மண் தூர்ந்து ஈழத்தின் மாந்தையைப் போல் தம் முக்கியத்துவத்தை இழந்தன.

இவற்றைவிட இன்னுமொரு துறைமுகப் பட்டினத்தையும் கட்டாயம் இங்கு குறிப்பிட வேண்டும். அது பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த மருங்கூர் பட்டினம். இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ நூலில் முக்கியத்துவம் தந்து குறிப்பிடுவார். நக்கீரர், மருதன் இளநாகனார் போன்றோரின் அகநானூற்றுச் செய்யுள்களில் இந்நகர் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. காவிரிப் பூம்பட்டினம் எவ்விதம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அவ்விதமே மருங்கூர் நகரும் ஊணூர், மருங்கூர் பட்டினமெனப் பிரிவுகளுடன் விளங்கியதைச் சுட்டிக் காட்டுவார் மயிலை சீனி.வேங்கடசாமி. மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும் (உப்பங்கழிகளையும்), செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர் ‘விழுநிதி துஞ்சும் நீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, எல்லுமிழ் ஆணவம்’ (அகம்: 227:19-21) என்று குறிப்பிடுவார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (‘கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்’ – அகம்; 227: 18). ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு, கடல் ஓதம் காலைச் சொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுவார் மயிலையார் மேற்படி கட்டுரையில். மேலும்
மதுரைக் காஞ்சி குறிப்பிடும் நெல்லூர் அல்லது சாலியூர் மருங்கூரும் ஊணூரும் சேர்ந்த ஊரையே குறிக்குமென்றும் கூறுவார் மயிலையார் மேற்படி கட்டுரையில். அத்துடன் தாலமி குறிப்பிடும் சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூரேயென்றும் அவர் குறிப்பிடுவார் (மயிலை சீனி.வேங்கடசாமி; ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ பக்கம் 95-96). இவை தவிர காஞ்சி, உறையூர், வஞ்சி ஆகியன ஏனைய புகழ் மிக்க நகர்களாக விளங்கியவை. இவற்றில் காஞ்சி இன்றும் புகழ்பெற்று விளங்குமொரு நகர். உறையூர் புகார் நகருக்கு முன்னர் புகழ் பெற்று விளங்கிய பழம்பெரு நகர்.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

வ.ந.கிரிதரன்


மதுரை மாநகர்!

தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமானது மதுரை. கி.மு.விலிருந்து, முதற் சங்கம், இடைச் சங்கம் , கடைச் சங்கம் எனப் பல காலகட்டங்களைக் கடந்து பின்னர் நாயக்கர் காலத்திலும் புகழ்பெற்று விளங்கி இன்றும் தமிழர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் நகரமிது. இன்றைய ஆலயநகரமான மதுரை திருமலை நாயக்கரின் மதுரை. பாண்டியர்களின் காலகட்டங்களிலெல்லாம் தலைநகராக விளங்கிச் சிறந்த மதுரை பின்னர் நாயக்கர் காலகட்டத்தில் சிறிதுகாலம் திருசிரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது. அதனை மாற்றி மீண்டும் மதுரையையே தலைநகராக்கி, புது மண்டபம், தெப்பக்குளம், அரண்மணைகளெனக் கலைச் செல்வங்களால் நிறைத்தவர் திருமலை நாயக்கர். பண்டைய மதுரையின் அரன்மணை இன்றைய மதுரையில் காணப்படும் ‘அந்திக்கடைப் பொட்டலருகே’யுள்ள கடைவீதீயிலிருக்கும் பழைய கோட்டைப் பகுதியாயிருக்கக் கூடுமெனக் கருதுவார் ‘பழந்தமிழர் கட்டடக்க்லையும் நகரமைப்பும்’ நூலில் நா.பார்த்தசாரதி. மேற்படி நூலில் மதுரை நகரம் பற்றிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரையினை சங்கால நூல்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் எழுதியிருக்கின்றாரவர். பாண்டியரின் மதுரை எவ்வளவு தொன்மை வாய்ந்ததென்பதர்குப் பல சான்றுகளுள. கி.மு.4 அல்லது 5ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகக் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாசங்கள் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றன. இலங்கையின் மகாவம்சமும் கி.மு.478இல் விசயன் பாண்டியகுமாரியொருத்தியை மணந்ததைக் கூறும். கி.மு.3இல் வாழ்ந்த அசோகமன்னனின் கற்றூண் கட்டளைகளில் மூவேந்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பல்வேறு காவியங்களும் இலக்கிய நூல்களும் மதுரையைச் சிறப்பித்துக் கூறுகின்றன. ‘மாட மதுரை’, ‘மதுரை மூதூர்’, ‘மணி மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘ஓங்கு சீர் மதுரை’, ‘மண மதுரை’ எனப் பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். ‘மதுரைப் பெருநன் மாநகர்’ என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில். ‘மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர் மதுரை’ என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். ‘தமிழ் கெழு கூடல்’ எனப் புறநானூறும், ‘பாடு தமிழ் வளர்த்த கூடல்’ என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினை எடுத்துரைக்கும். திருளையாடற்புராணம் ‘.. மதி தபழு சுதை யிலகு புதுமைதரு நிதிதிகழு மதில்தழுவு மதுரை நகர்’ என்றும், ‘அலகில் வண்புகழுடைய மதுரை’ எனவும், ‘நகர்கட் கெல்லாம் பயனா நகர் பஞ்சவந்தன் மதுரை நகர்’ என்றும் புகழும். இவ்விதமாகச் சிறப்புற்று விளங்கியது பாண்டியர்களின் தலைநகராக அன்று விளங்கிய மதுரை மாநகர்.

சங்கத்தொகை நூல்களிலொன்றான பரிபாடல் மதுரை நாகர் பற்றிப் பின்வருமாறு கூறும்:

‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்- பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம் இந்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே’

மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை. அத்துடன் அதன் தெருக்களெல்லாம் அம்மலரின் இதழ்களைப் போலவௌம், மன்னனின் அரன்மணை அம்மலரின் நடுவிலுள்ள பொகுட்டையும், நகரத் தமிழ் மாந்தர் அம்மலரின் தாதுக்களையும், அதனை பரிசில் பொருட்டு நாடிவரும் புலவர் பெருமக்கள் தாதுண்ண வரும் வண்டுகளையும் ஒத்து விளங்கியதாக மேற்படி பாடல் கூறும்.

மதுரையின் தோற்றம் பற்றித் திருவிளையாடற்புராணத்தில் பல புராணக் கதைகளுள. அதன்படி பண்டைய மதுரை மாநகர் இருந்த பகுதியில் முன்னர் கடம்ப வனத்துடன் கூடிய மணலூரென்னுமோரூர் இருந்ததாகவும், அதனைத் தலைநகராகக் கொண்டு குலசேகரப் பாண்டியனென்னும் மன்னன் ஆட்சிபுரிந்து வந்ததாகவும், அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் கடம்பவனத்தை அழித்து நகரமாக்கப் பணித்ததாகவும், அதன் பொருட்டு அம்மன்னன் அவ்வனத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடிப் பின்னர் காட்டை அழித்து நகரை உருவாக்கியதாகவும் அறிய முடிகிறது. நகரை உருவாக்கும் சமயம் சித்தர் வடிவில் வந்த சிவபெருமான் நகரமும், ஆலயமும், கோபுரமும் சிற்பநூல்களின் விதிப்படி, சிவாகமங்களின் வழிப்படி அமைய வலியுறுத்தி மறைந்ததாகவும், அதன்படி மதில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், அகழிகள், ஆகியவற்றுடன் மீனாட்சி அம்மன ஆலயம் போன்றவை அமைக்கப்பட்டதாகவும் திருவிளையாடற் புராணம் கூறும். இவ்விதமாக அமைக்கப்பட்ட நகரானது அரசவீதிகள், அந்தணர் வீதிகள், வணிகர் தெருக்கள்,வேளாளர் தெருக்கள், கடைவீதிகள், பலர் கூடிபேச அம்பலங்கள், மாடமாளிகளைகளை உள்ளடக்க்கிய பெருந்தெருக்கள், ஆனை மற்றும் குதிரைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், கல்விக் கூடங்கள், பொய்கைகள், பூங்காக்களெல்லாம் கொண்டு விளங்கியதையும், நகரின் வடகிழக்குத் திசையில் மன்னனின் அரன்மணையையும் கொண்டு விளங்கியதையும் மேற்படி திருவிளையாடற்புராணத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நான்மாடக் கூடல், ஆலவாய் மற்றும் மதுரா நகரெனப் பல்வேறு பெயர்களில் மதுரை அழைக்கப்பட்டத்தற்குக் காரணங்களைத் திருவிளையாடற்புராணம் கூறும். சிவனின் சடைமுடியிலுள்ள சந்திரக்கலையின் மதுரமயான அமுதம் நகரைத் தூய்மையாக்கியதால் அந்நகருக்கு மதுரா நகரென்னும் பெயர் ஏற்பட்டதாம். இதுபோல் ஒருசமயம் வருணன மதுரா நகரை அழிக்கும் பொருட்டு ஏழு மேகங்களையும் நகரை நோக்கி ஏவி விட்டபோது பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானால் அத்தாக்குதலையெதிர்த்து ஏவி விடப்பட்ட நான்கு மேகங்களும் நகரின் நான்கு எல்லைகளிலும் நான்கு மாடங்களாகி வருணனின் தாக்குதல்களை முறியடித்ததாகவும் அதனாலேயே நகர் நான்மாடக் கூடலென அழைக்கப்பட்டதாம். இவையே பின்னர் திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என அழைக்கப்பட்டதாக கலித்தொகையில் நச்சினார்க்கின்யர் கூறுவார்.

இதுபோல் மதுரை ஆலவாய் என அழைக்கப்படுவதற்குமொரு கதையினைத் திருவிளையாடற்புராணம் கூறும். அதன்படி வங்கியசேகரனென்னுமொரு பாண்டியன் மக்கள் தொகை பெருகிய மதுரையை விரிவுபடுத்த முனைந்தான். அதற்காக அவன் சிவனிடம் தன் முன்னோர்களால் வரையறுத்த பழைய நகர எல்லைகளைத் தெரியப்படுத்துமாறு வேண்டினானாம். அதற்காகச் சித்தராக அவன் முன்னால் தோன்றிய சிவபெருமான தன் கையிலிருந்த பாம்பினைப் பார்த்துப் பாண்டிய நாட்டின் எல்லையினையும் மதுரை நகரத்தையும் மன்னனுக்குக் காட்டுமாறும் பணித்தானாம். அப்பொழுது அந்த அரவம் தான் எல்லையினைக் காட்டியதும். அதுமுதல் நகரம் தன்பெயரால் அழைக்கப்பட வேண்டுமென வேண்டிக் கொண்டதாம். சித்தரான சிவனும் அதற்கிசைய அந்தப் பாம்பானது கீழ்த்திசையிலிருந்து தன் வாலை நீட்டி நகரைச் சுற்றிச் சென்று வாலைத் தன் வாயில் வைத்து எல்லைகளை உணர்த்தியதாம். அதன்படி மன்னனும் நகர மதில்களை எழுப்பினானாம். தெற்கில் திருப்பரங்குன்றமும், வடக்கே இடபக் குன்றமும், மேற்கில் திருவேடகமும், கிழக்கில் திருப்பூவண நகரும் எல்லைகளாக அமையும் வண்ணம் மதிலின் வாயில்களை அமைத்தானாம். இந்த மதிலே ஆலவாய் என அழைக்கப்பட்டதாம். அரவத்திற்குச் சித்தர் கொடுத்த வாக்கின்படி அதுமுதல் நகரும் ஆலவாய் நகரென அழைக்கப்பட்டதாம். இவையெல்லாம் மதுரை நகருக்கு மேற்படி பெயர்கள் வந்ததற்கான காரணங்களைப் பற்றித் திருவிளையாடற் புராணம் கூறும் தகவல்கள்.

இவை தவிர மதுரை மாநகர் பற்றிப் பல்வேறு தகவல்கள் சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி போன்ற இலக்கிய நூல்களில் மலிந்து காணப்படுகின்றன. அகழிகள் காவற்காட்டுடன் விளங்கின (‘அருமிளை உடுத்த அகழிசூழ்’ சிலம்பு- புறஞ்சேரி இறுத்த காதை; 183). நகர் அகநகர், புறநகரெனப் பிரிந்து கிடந்தது.

‘புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ளநீர்ப் பண்ணையும், விரிநீர் ஏரியும்,
காய்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை;
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து -என்’ (புறஞ்சேரி இறுத்த காதை 190-195)
எனக் கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறநகரைச் சென்றடைந்ததைச் சிலம்பு வருணிக்கும். புறநகருக்கும், அகநகருக்குமிடையில் கட்டுவேலியுடன் கூடிய காவற்காட்டுடன் வளைந்து கிடந்தது மதுரையின் அகழி. யானைகள் செல்வதற்காக புறநகருக்கும் அகநகருக்குமிடையில் நிலத்தின் கீழ் அமைந்திருந்த சுருங்கைப் பாதையினூடு கோவலன் நகரினுள் சென்றதைச் சிலம்பு பின்வருமாறு வருணிக்கும்:

‘இளைசூழ் மிளையொடு வளவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்
பெருங்கரை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக் – ( ஊர் காண் காதை; 60-65).
மேற்படி ‘கடிமதில் வாயிலை’க் ‘காவலிற் சிறந்த அடல்வாள் யவனர் காத்து நின்றனர் (ஊர் காண் காதை; 66-67). மேற்படி சிலம்பின் ஊர்காண் காதை மதுரை மாநகரின் அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான வீதிகளைப் பற்றியும் (செல்வர்கள் மற்றும் அரசர்களுக்குரிய வீதிகள், கணிகையர்கள் வாழும் வீதிகள், வேற்றரசுகளும் விரும்பும் செல்வச் சிறப்புடைய அங்காடி வீதிகள், இரத்தினக் கடைத்தெரு, பொற்கடைத் தெரு, துணிக்கடைத்தெரு:அறுவை வீதி, மிளகு மலிந்து கிடக்கும் கூல வீதி) எனப் பல்வேறுபட்ட வீதிகளைப் பற்றியும் கூறும். அத்துடன் அங்கு ‘நூலோர் சிறப்பின் முகில்தோய் மாட’ மாடங்களுடன் கூடிய மாட மாளிகைள் இருந்ததையும், சுடுமண்ணினால் வேயாது பொற்றகடுகளால் வேயப்பட்ட, ‘சுடுமண் ஏறா வடுநீடுங்கு சிறப்பு’ மிக்க மனைகளில் கணிகையர் வாழ்ந்ததையும் மேற்படி ஊர் காண் காதையிலிருந்து அறிய முடிகிறது. இவ்விதமாக ‘பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும், அந்தியும் (முச்சந்தி), சதுக்கமும் (நாற்சந்தி), ஆவண வீதியும் (கடைத்தெரு), மன்றமும், கவலையும் (பல தெருக்கள் ஓரிடத்தில் பிரியுமிடம்), மறுகும் (தெரு)’ எனப் பல்வேறு வகையான தெருக்களில் கோவலன் அலைந்து திரிந்ததாகக் கூறும் ‘ஊர் காண் காதை’யிலிருந்து அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான தெருக்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது.

இவ்விதமாக விளங்கிய மதுரை நகரின் அகநகரில் காணப்பட்ட அகலத் தெருக்கள் பற்றியும், தேரணி வீதிகள் பற்றியும், தோரண வாயில்கள் பற்றியுயும் திருவிளையாடற் புராணத்தின் திருநகரச் சிறப்புப் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.

மதுரைக் காஞ்சியிலும் மதுரை பற்றித் தகவல்கள் பல மலிந்து கிடக்கின்றன. மதில்மேல் பெரிய மலைமுகடுகள் போல் பொறிகளுடன் விளங்கிய மாடங்களிருந்ததையும், கோட்டை வாயில் வையை ஆற்றையொத்து உயிரோட்டமுடன் விளங்கியதையும் அது பின்வருமாறு விபரிக்கும்:

‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்’ (மதுரைக் காஞ்சி 351-156).

மேலும் மதுரை நகரின் தெருக்களில் காணப்பட்ட வீடுகள் தென்றல புகுந்து செல்லும் சாளரங்களையுள்ளடக்கி இருந்ததையும் அது ‘ வகைபெற எழுந்து வான மூழ்கிச் , செல்காற் றிசைக்கும் பல்புழை நல்லில், யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெரு’ என்கிறது.

[இவ்வத்தியாயம் இன்னும் தொடரும் ]

ngiri2704@rogers.com

Series Navigation

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! – அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

வ.ந.கிரிதரன்


[இந்த அத்தியாயம் முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது]. பண்டைய தமிழர்கள் தரைவழியாக மற்றும் கடல்வழியாக பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது. யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களைப் பற்றி ‘பயனற வறியா யவனர் இருக்கையும் / கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் / கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ எனவும், ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ எனவும் சிலம்பும், ‘மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப் / புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் / முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ எனப் பட்டினப்பாலையும் கூறும். கிரேக்கர்களையும் , ரோமர்களையும் யவனர்களென சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்களென மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார். வணிகத்தின் பொருட்டுத் தமிழகம் வந்த யவனர்கள் வணிகத்தில் மட்டுமின்றி வேறு சில தொழில்களையும் செய்ததையும் அறிய முடிகிறது. மதுரையின் கொற்கைத் துறைமுகம் தமிழ் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. கோட்டை மதில்களுடன் விளங்கிய மதுரையின் கோட்டை வாயில்களை யவன வீரர்கள் காத்து நின்றதை ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்து / அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ எனச் சிலம்பும், ‘மந்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை / மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து / வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என முல்லைப் பாட்டும் கூறும். இதுதவிர யவனர்கள் தச்சுத் தொழிலும் சிறந்து விளங்கியதை மணிமேகலையின் ‘யவனத் தச்சர்’ பற்றிக் கூறும் வரிகள் தெரிவிக்கும். புதுச்சேரிக்கண்மையில் அரிக்கமேடு என்னும் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாரய்ச்சிகள் யவனர்கள் கண்ணாடி மணிகளைச் செய்வதில் சிறந்து விளக்கியதை எடுத்துக் காட்டும்.

கி.மு.இரண்டாம் ஆண்டிலிருந்தே தமிழ் வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணிபம் செய்ததை அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டு கூறும். தமிழர்களைப் பொறுத்தவரையில் பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடலில் விரைவாகப் பயணிக்கும் அறிவினைப் பண்டைய காலத்தில் யவனர்களுக்கு முன்னரே அறிந்திருந்ததாக அறிய முடிகிறது. இதன் காரணமாக யவனர்கள் கரையோரமாக நீண்டகாலக் கடற்பிரயாணம் செய்துதான் தமிழகத் துறைமுகங்களை வந்தடைந்தார்கள். கி.பி.முதல் நூற்றாண்டலவில்தான் அவர்கள் இவ்வறிவினைப் பெற்று நடுக்கடலினூடு பருவக்காற்றின் உதவிகொண்டு முதன்முதலாக முசிறித் துறைமுகத்திற்கு வந்ததாக அறிய முடிகிறது. தமிழர்களின் கடல் கடந்த வாணிபம் காரணமாகப் பண்டைய தமிழகத்தில் பல துறைமுகப் பட்டினங்கள் புகழ்பெற்று விளங்கின. தமிழகத்தின் கிழக்குக் கரையில் புகழ்பெற்று விளங்கிய பட்டினங்களாக வங்காளக் கடலில் கொல்லத்துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), தொண்டி, மருங்கை (மருங்கூர்ப் பட்டினம்), கொற்கை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்துறைமுகப் பட்டினங்களெல்லாம் பிறகாலத்தில் மறைந்து விட்டன. இதே சமயம் தமிழகத்தின் தெற்குக் கரையில் கன்னியாகுமரியில் குமரி துறைமுகப் பட்டினமாகவும், புண்ணிய நகராகவும் புகழ்பெற்று விளங்கியது. இது தவிர பண்டைய தமிழகத்தின் மேற்குக் கரையில் அரபிக் கடலில் மங்களூர், நறவு, தொண்டி, முசிறி போன்றவை விளங்கின.

மதுரை பண்டைய தமிழகத்திலும் புகழ்பெற்று விளங்கிய முக்கியமான நகர். மதுரை இராஜதானியாக, ஆலய நகராகப் புகழ்பெற்று விளங்கியதை தமிழ் இலக்கிய நூல்கள் விளக்குகின்றன. நான்மாடக்கூடல், ஆலவாய் எனப் புகழ்பெந்று விளங்கிய மதுரை மூன்று பக்கங்களிலும் வையையை அகழியாகவும், மதிலையொட்டி இன்னுமொரு அகழியையும் கொண்டு விளங்கியது. . மதுரையைப் போல் அன்றும் இன்றும் புகழ்பெற்று விளங்கும் நகர் காஞ்சி. பண்டையச் சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர், சேரரின் தலைநகராக விளங்கிய வஞ்சி ஆகிய நகர்கள் காலப்போக்கில் தம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

இத்தகைய நகர்கள் பற்றி இனிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன் தென்னிந்திய ஆலய நகரங்களுக்கும், வட இந்திய ஆலய நகரங்களுக்குமிடையில் நிலவும் வேறுபாட்டினையும் அறிந்து கொள்வோம். வாஸ்துபுருஷக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை தென்னிந்தியக் கோட்பாடுகள் தத்துவார்த்தரீதியில் வட இந்தியக் கோட்பாடுகளிலிருந்து சிறிது விலகியிருப்பதை அறிய முடிகிறது.
தென்னிந்தியக் கோட்பாடுகளின்படி பிரதான ஆலயம் அமைந்துள்ள மையப்பகுதி ஆதி, அந்தமற்ற, உருவற்ற பிரம்மாவுக்குரியதாகவும், இதனைச் சுற்றி மதிலினைக் கொண்டதாகவும், இதனையடுத்து ஏனைய தெய்வங்களுக்குரிய பகுதியினைக் கொண்டதாகவும், அதற்கடுத்து மனிதர்களுக்குரியதாகவும், அடுத்து பேய்கள்,பூதகணங்களுக்குரியதாகவும் அமைந்திருப்பதை அறிய முடியும். வட இந்திய வாஸ்து புருஷ மண்டலக் கோட்பாடுகள் படைப்பைப் பற்றிக் கூறினால் தென்னிந்தியக் கோட்பாடுகளோ படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் நிலவும் ஒழுங்கைப் பற்றிக் கூறுவதை அறியமுடிகிறது. இன்றைய மதுரை மற்றும் ஸ்ரீரங்க நகர்களின் அமைப்பு இதனைத்தான் புலப்படுத்துகின்றன. இனிச் சிறிது விரிவாகப் பண்டைய தமிழர்களின் துறைமுக மற்றும் ஆலய, கோ நகர்களைப்பற்றிப் பார்ப்போம்.

[ இவ்வத்தியாயம் இன்னும் தொடரும் ]
ngiri2704@rogers.com

Series Navigation

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்!

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

வ.ந.கிரிதரன்


இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, அம்மண்ணில் நிலவி வந்த சாதிக்கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமே இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் முக்கிய பாத்திரத்தை வகித்தன. மண்ணின் அமைப்பு முறைக்கேற்ப நிலத்தை மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். ‘யங்கள’: நீர், நதி, வளமற்ற வறண்ட நிலத்தை இது குறித்தது. ‘அநோபா’: நீர் வளம் மிகுந்த , குளிர்ந்த சுவாத்தியம் மிக்க, வளம் மலிந்த மண்ணைக் கொண்ட நிலத்தை இது குறித்தது. ‘சாதனா’: ‘யங்கலவு’க்கும், ‘அநோபா’வுக்கும் இடைப்பட்ட சாதாரண வகையான நிலத்தை இவ்விதம் அழைத்தனர். மண்ணின் நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை, இவையெல்லாம் எவ்விதம் இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் பங்காற்றின என்பது பற்றி, மேற்கு நாட்டவரான Andras Volwahsan என்பவர் Living Architecure: Indian என்ற நூலில் பின்வருமாறு கூறுவார்.

“மண்ணின் நிறம், மணம், ஒலி, சுவை, அது தரும் உணர்வு இவையெல்லாம் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டன. மண்ணின் நிறம் அம்மண்ணில் குடியமர்த்தப் பொருத்தமான சாதி மக்களை இனங்காட்டியது. வெள்ளை , சிவப்பு, மஞ்சள். கறுப்பு ஆகியவை முக்கியமானவை. வெள்ளை நிற மண் பிராமணர்களுக்கும், சிவப்புநிற மண் சத்திரியர்களுக்கும், மஞ்சள் நிற மண் வைச்யர்களுக்கும், கறுப்பு இந்ற மண் சூத்திரர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. மண்ணின் சுவைக்கும் சாதியமைப்புக்குமிடையிலும் தொடர்பிருந்தது. இனிமையான மண் பிராமணர்களுக்கும், காரமண் வைசியர்களுக்கும், கசப்பான மண் சூத்திரர்களுக்கும், உவர்ப்புமிக்க மண் சத்திர்யர்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. தட்டும்பொழுது நரிகள் ஊளையிடுவதைப் போலவோ, நாய்கள் குரைப்பதைப் போலவோ அல்லது கழுதைகள் கத்துவதைப் போலவோ ஒலியெழுப்பும் மண்ணினைத் தவிர்க்க வேண்டும்”- [Living Architecure; பக்கம் 44].

நில அமைப்பின் சாய்வும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது வட-கிழக்கை நோக்கிச் செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே நகரம் அமைக்கப்பட வேண்டும். தெற்கு நோக்கிய சாய்வு மரணத்தையும், தென்மேற்கு நோக்கிய சாய்வு துன்பத்தையும், மேற்கு நோக்கிய நாய்வு வறுமையையும், பயிர் அழிவையும், வடமேற்கு நோக்கிய சாய்வு போரையும் கொண்டுவருமென இந்துக்கள் நம்பினார்கள். பள்ளமான தாழ்ந்த பிரதேசத்தில் நகரங்கள் அமைக்கப்படுவதானது ஆபத்தினைக் கொண்டு வரும்.

இவ்விதமாக நகர் அமைப்பதற்குரிய நிலம் தெரிவு செய்யப்பட்டதும் 32 வகைகளில் காணப்படும் வாஸ்துபுருஷ மண்டலத்தில் பொருத்தமான வகை சோதிடத்தில் நிபுணத்துவம் பெற்ற குருக்களினால் தெரிவு செய்யப்படும். நகரம் சதுரவடிவில் (இயலாத பட்சத்தில் செவ்வக வடிவில்) அமைக்கப்படும். சிலவகையான கட்டடக்கலைச் சுவடிகள் தரும் தகவல்களின்படி பூரனமான சதுர வடிவான நகரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரியதென்றும், ஏனைய சாதியினரைப் பொறுத்தவரையில் செவ்வக வடிவான நகரங்களிலேயே வாழ வேண்டுமெனவும் அறியமுடியவதாக மேற்படி நூலில் நூலாசிரியர் எடுத்துக் காட்டுவார். இவ்விதமாகப் பொறுத்தமான வாஸ்து புருஷ மண்டல அமைப்பு தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்படும் நகர அமைப்பு பின்வருமாறு காணப்படும்.

1. நகரைச் சுற்றி மதில் அமைக்கப்படும்.

2. வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட பல சிறு சிறு சதுரங்களை உள்ளடககிய பெரிய சதுரமாக நகர் காணப்படும்.

3. நகரமானது வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் அகன்ற இரு இராஜ வீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.

4. இவ்விதம் அமைக்கப்படும் இராஜபாட்டையானது நகரின் தன்மைக்கேற்ப அளவில் வேறுபடும். உதாரணமாக மாநகர்களைப் பொறுத்தவரையில் இந்த இராஜபாட்டை 12 மீட்டர்கள் அகலமுடையதாகவும், சாதாரண நகரங்களைப் பொறுத்தவரையில் 10 மீற்றர்கள் அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும் நகரமாயின் 8 மீற்றர்கள் அளவுடையதாகவுமிருக்கும்.

5. நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும். இராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக இப்பாதையிருக்கும்.

இதுதவிர நகரின் எந்த வகையான திசையில் எந்த வகையான மக்கள் வாழலாம் என்பது பற்றியும் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் கூறுகின்றன. இவையெல்லாமே வாஸ்துபுருஷ மண்டல விதிகளினடிப்படையில் பல்வேறு தொழில்களையும், சாதிகளையும் உள்ளடக்கிய நகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன. மிக எளிமையான நகர அமைப்புத் திட்டப்படி பிராமணர்கள் நகரின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து, தொழில் செய்து வரவேண்டும். இதுபோல் சத்திரியர்கள் கிழக்கிலும், தென்கிழக்கிலும், வைஷியர்கள் தெற்கிலும், சூத்திரர்கள் மேற்கிலும் வசிக்க வேண்டும்.இது முடியாதவிடத்து, குறைந்தது குடியிருப்புகள் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டடிருக்க வேண்டும். மேற்படி உபபிரிவுகள் சம்பந்தமான இன்னுமொரு விதியின்படி பிராமணர்கள், சோதிடர்கள், காவல்துறை தலைமையகம், அரச அதிகாரிகள் போன்றோர் வாழுமிடங்கள் வடக்கிலும், வடமேற்கிலும்,பொற்கொல்லர்கள் போன்ற தொழிலாளர்கள் வாழும் பகுதிகள் தென்கிழக்கிலும், சிறையதிகாரிகள் , போர்வீரர்கள், இடையர்கள், மீனவர்கள் போன்றோர் வாழுமிடங்கள் தென் மேற்கிலும், சந்தை வடகிழக்கிலும்,அரண்மனைகள் போன்றவை கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இந்துக்களின் நகர அமைப்புத் துறையில் சாதி வகித்த பங்கினைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றன.

பண்டைய இந்திய நகர வகைகள்:

இவ்விதமாக வாஸ்துபுருஷ விதிகளுக்கேற்ப கிராமங்கள், நகரங்கள் மற்றும் கோநகரங்கள் அமைக்கப்பட்டன. தண்டகம்,, சர்வதோபாத்ரா, நந்தியாவர்த்தம், பத்மம், சுவாஸ்திகம் பிரஸ்தரம், காமுகாண்ட, சதிர்முகா, பிரகீர்ணம், பராகம், ஸ்ரீபிரதிஷ்டம்… இவ்விதமாகப் பல்வேறு வகைகளில் இவை விளங்கின. இவற்றில் சில சிறிய நகரங்கள், கிராமங்களுக்குப் பொருத்தமாகவிருந்தன. உதாரணமாக தண்டகம் வகையினைக் கூறலாம். நீளக்கோல் (தண்டம்) போன்று நீண்ட வீதிகளை வ்டக்காகவும், கிழக்காகவும் நடுவில் நான்கு சந்துக்களைக் கொண்டு விளங்கிய இத்தகைய சிறிய நகரங்கள் அல்லது கிராமங்கள் இரு பிரதான வாயில்களைக் கொண்டு விளங்கின. நந்தியாவர்த்த போன்ற வகை நகரங்கள் ஆலயத்தை மையமாகக் கொண்டு விளங்கின. வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என, மையத்தில் சந்திக்கும் இரு பிரதான வீதிகளுடன், மதில்களும் கொண்டு விளங்கிய வகைகளில் முக்கியமானது சுவாஸ்திகா வகை. இதுவே எல்லாவகைகளிலும் பிரபல்யமானது. ஊரின் கிழக்கு , மெற்குப் பகுதிகளில் வடக்கு நோக்கிய வீதிகளின் எண்ணிக்கை மூன்று, நான்கு, ஐந்து ,ஆறு அல்லது ஏழாகவிருப்பின் அவ்விதமாக அமைக்கபப்டும் நகரங்கள் அல்லது கிராமங்கள் பிரஸ்தரம் என அழைக்கப்பட்டன. பிரகீர்ண அமைப்பில் கிழக்கு நோக்கி நான்கு வழிகளும், வடக்கு நோக்கி எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு வழிகளில் வீதிகள் காணப்பட்டன. பராகத்தில் வடக்கு நோக்கிப் பதினெட்டிலிருந்து இருபத்திரண்டு வழிகளும், கிழக்கு மேற்காக ஆறு வழிகளும் அமைந்திருந்தன. நந்தியாவர்த்தப் பூவினையொத்துச் சிறுசிறு வீதிகளையும்,சந்துக்களையும் ஊரின் உட்புறமாகக் கொண்டிருந்த நந்தியாவர்த்த வகை ஊர்களில் கிழக்கு-மேற்காக ஐந்து வழிகளும், வடக்கு நோக்கிப் பதின்மூன்றிலிருந்து பதினேழு வழிகளும், அத்துடன் நான்கு திசைகளிலும் பிரதான வழிகள் காணப்பட்டன. தாமரைப் பூவினையொத்த பத்மம் வகையிலான அமைப்பினில் கிழக்கு-மேற்காக ஏழு வழிகளும், தெற்கு-வடக்காக மூன்றிலிருந்து ஏழுவரையிலான வழிகளும் காணப்பட்டன. பண்டைய மதுரை மாநகர் தாமரை வடிவமைந்திருந்ததைப் பரிபாடல் விளக்கும். பண்டைய நகரங்களிலொன்றான கலைகளில் சிறந்து விளங்கிய காஞ்சி நகர் தண்டியலங்காரத்தில் தோகை விரித்தாடும் மயிலுக்கு ஒப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் நா.பார்தடஹ்சாரதி தனது ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ என்னும் ஆய்வு நூலில் மயூரம் என்றொரு பிரிவும் நகர அமைப்பு வடிவங்களில் இருந்திருக்கலாம் என்பார்.

இவை தவிர வேறுவகையான சில வகைகளும் காணப்படுகின்றன. இத்தகைய வகையான நகரங்கள் குறிப்பிட்டதொரு சாதிக்கு மட்டுமேயுரியதாக விளங்கின. உதாரணமாகக் கேட்டாவைக் குறிப்பிடலாம். இந்தவகை நகரத்தில் சூத்திரர்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டனர். இந்த்துக்களின் சாதிவழிச் சமுதாயத்தில் தாழ்ந்த படியில் இருந்த காரணத்தினால் சூத்திரர்கள் பூரணத்துவமற்ற மனிதர்களாகக் கருதப்பட்டனர். இதனால் இவர்கள் மட்டுமே வாழ உருவாக்கப்பட்ட நகரங்களும் பூரணத்துவமற்றவையாகவே அமைக்கப்பட்டன. எந்தவித முக்கியமான மையப்பகுதியையும் கொண்டிராத வகையில், முக்கியதுவம் குறைந்த நிலையில் இத்தகைய நகரங்களின் அமைப்பு காணப்பட்டது. சமுதாயத்தில் முக்கியத்துவமற்ற படியில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலையை மேற்படி நகரங்களின் நகர அமைப்பு வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் இந்துக்கள் பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவங்களிலேயே கட்டடங்கள், நகரங்களை அமைத்தாலும் வட்டவடிவிலும் சில சமயங்களில் அமைக்கத்தான் செய்தார்களென்பதை Andras Volwahsan தனது Living Architecure: Indian நூலில் சுட்டிக்காட்டுவார். அதற்காக மண்டுக மண்டல அடிப்படையில் அமைந்த வட்ட வடிவ நகர் அமைப்பு வடிவங்களைச் சுட்டிக் காட்டுவார். இருந்தாலும் பொதுவாக பெரும்பாலும் பண்டைய இந்துக்கள் பாவித்த வடிவங்கள் சதுரங்கள் அல்லது செவ்வகங்களாகவேயிருந்தன.

இந்துக்களின் நகர அமைப்புக் க்லையில் சமயம், சாதி போன்றவற்றைன் பங்களிப்பை அல்லது பாதிப்பைப் பண்டைய இநதுக்களின் கட்டடக்கலை மற்றும் நகரமைப்புக்கலை பற்றிய நூல்கள் வழங்கும் தகவல்கள், மற்றும் காணப்படும் பழமையின் சின்னங்கள், காணிப்பெயர்கள் ஆகியன தற்போதும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்விதமாக நகர அமைப்புக்கலையினை சமயம், சமுதாயத்தில் நிலவிய சாதி அமைப்பு, காலநிலை, நில அமைப்பு, பாதுகாப்பு எனப் பல்வேறு காரணிகள் பாதித்தன. சங்ககாலத்தில் தமிழர் ஊரமைப்பானது எவ்விதம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய நில அமைப்புகளால் வேறுபட்டு விளங்கின என்பதைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடியும். மேலும் ஆரம்பத்தில் நகரங்கள் அமைக்கப்படமுன்னர் ஆரியக் குழுக்களினால் அமைக்கப்பட்ட கிராமங்களின் அமைப்பு முறை பற்றியும் அறிய முடிகிறது. பெரியதொரு கிளைவிட்டுப் பரந்ததொரு மரத்தினை மையமாக வைத்துக் கிராமங்கள் அமைக்கப்பட்டன. அம்மரங்களின் கீழமர்ந்து அக்கிராமத்து முதியவர்கள் ஊர்ப்பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள், தீர்ப்புக் கூறினார்கள். மேலும் இப்பிரபஞ்சமும், இங்கு காணப்படும் அனைத்தும் எதனை மையமாக வைத்துச் சுழல்கின்றனவோ அந்த ஒழுக்கினையே அம்மரங்கள் பிரதிநிதிப்படுத்துவதாகவும் அன்றைய இந்துக்கள் கருதினார்கள் என்பதையும் மேறப்டி நூல்கள் விளக்குவதாக அறிய முடிகிறது.

ஸ்தபதி வை.கணபதி இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேட்டில் ;ஊரமைப்புக்கலை’ பற்றியொரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் மயமதத்தினொரு பிரிவான சிற்பநூல் நகரமைப்புப் பற்றியும் விவரிப்பதாக அவர் கருதுவதை நா.பார்த்தசாரதியின் ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ சுட்டிக் காட்டும். இவ்விதமாக மயமத அடிப்படையிலமைந்த ஊரமைப்பானது அதன் சுற்றளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. 20,000தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் (ஒரு தண்டமென்பது நான்கு முழங்களை அல்லது பதினொரு அடிகளைக் குறித்தது)., 40,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 60,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 80,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 1,00,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் எனக் கிராமங்கள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டன. இவ்விதமான கிராமங்களின் இருபதினொரு பாகத்தில் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன. எஞ்சியவற்றில் விளைநிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், விருட்சங்களுக்கு, தோப்புக்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவ்விதமாக நகர அமைப்பானது கிராமம், கேடம், கர்வடம், துர்க்கம், நகரம் ,கோநகரெனப் பரிணாம வளர்ச்சியுற்று வந்ததை மேற்படிக் கட்டடக்கலை/நகரமைப்பு நூல்கள் குறிக்கின்றன. இவ்வத்தியாயத்தில் பண்டைய இந்துக்களின் நகர அமைப்புக் கலைபற்றியும், வகைகள் பற்றியும், அதில் சாதியின் பாதிப்புப் பற்றியும் பார்த்தோம். இனிவரும் அத்தியாயத்தில் பண்டைய இந்துக்களின் குறிப்பாகத் தமிழர்களின் தென்னிந்திய நகரங்கள் பற்றிச் சிறிது பார்ப்போம்.

[தொடரும்]

ngiri2704@rogers.com

Series Navigation

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘

முத்திரைச் சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும்போது தற்போதைய நல்லூர்ப் பகுதியில் காணப்படும் ஒருவிதமான ஒழுங்கு நிறைந்த அமைப்பு பழைய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு முறையைக் குறிப்பாக உணர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதே சமயம் நல்லூர் இராஜதானியின் மேற்கு, வடக்கு வாசல்களைப் பற்றி வரலாற்று நூல்கள் கூறுவது நினைவுக்குவரவே, இராஜதானியின் கிழக்கு, தெற்கு வாசல்களைப்பற்றி ஏதாவது தகவல்களைத் தற்போது காணப்படும் நல்லூர் நகர அமைப்பில் அறிய முடியுமா என முயன்றபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணித்துண்டொன்றிற்குப் பெயர் ‘கோட்டைவாசல் ‘ என்பதாகும். தென்கிழக்குப் பகுதியிலுள்ள இன்னொரு காணித்துண்டின் பெயர் ‘கோட்டையடி ‘ என அழைக்கப்படுகிறது. வெயிலுகந்த பிள்ளையார் கோயிலிற்கண்மையில் ‘கோட்டைவாசல் ‘ என்ற பெயருள்ள காணித்துண்டொன்று காணப்படுவது அப்பகுதியில்தான் நல்லூர் இராஜதானியின் கிழக்குவாசல் இருந்திருக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. இதுபோல் ‘கைலாசநாதர் ‘ ஆலயத்திற்கண்மையில் ஏதாவது ‘கோட்டையை ‘ ஞாபகப்படுத்தும் காணித்துண்டேதாவதிருக்கிறதா என ஆராய்ந்தபோது முயற்சி வெற்றியளிக்கவில்லை. அப்போதுதான் சிந்தையிலொரு பொறி பறந்தது. முத்திரைச்சந்தைதான் நல்லூர் இராஜதானியின் முக்கியமான மையமாக இருந்திருந்தால், நிச்சயமாக இராஜதானியின் இருபெரும் வீதிகளான வடக்கு-தெற்கு, கிழக்கு-மேறு வீதிகளிரண்டும் சந்தைக்கண்மையில்தான் ஒன்றையொன்று சந்தித்திருக்க வேண்டும். அப்படியென்றால் வடக்கிலிருந்து முத்திரைச்சந்தையை நோக்கிவரும் வீதி (தற்போதிருப்பதைப்போல் நல்லூர் ஆலயம் நோக்கி வளையாமல் நேராகச் சென்றிருக்க வேண்டும். இதே போல் மேற்கிலிருந்து முத்திரைச் சந்தை நோக்கி வரும் வீதியும் நேராகச் சென்றிருக்க வேண்டும். தற்போது காணப்படும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கருகாகச் செல்லும் வீதி கிறித்தவ ஆலயத்திற்கண்மையில் வளைந்து வந்து பருத்தித்துறை வீதியைச் சந்திக்கிறது. ஆனால் அந்த வீதி நேராக வந்திருக்கும் பட்சத்தில் சரியாக முத்திரைச் சந்தையை ஊடறுத்து மேற்காகச் சென்றிருக்கும் சாத்தியம் அவதானத்திற்குரியது. [பொதுவாக பண்டைய நகரங்கள் பல சந்தையை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இலங்கையின் பண்டைய நகர்களிலொன்றான அனுராதபுரம் எவ்விதம் சந்தையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருந்ததென்பதை ரோலன் டி சில்வாவின் பண்டைய அனுராதபுர நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகள் புலப்படுத்துவன.]

எமது வெளிக்கள ஆய்வில் இன்னுமொன்றையும் அறிய முடிந்தது. முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாக சமமான தூரத்தில் வெயிலுகந்த பிள்ளையர் ஆலயமும், சட்டநாதர் ஆலயமும் இருப்பதை அறிய முடிந்தது. கிடைக்கப்பெறும் வரலாற்று, வெளிக்கள ஆய்வுத்தகவல்களை வைத்துப் பார்க்கும்போது நல்லூர் இராஜதானி ஒருவித ஒழுங்கான வடிவில் இருந்திருக்க வேண்டுமென்றே படுகிறது. பண்டைய இந்துக்களின் கட்டட மற்றும் நகர அமைப்புக்கலைக் கோட்பாடுகள் இத்தகையதொரு ஒழுங்கிற்கு எவ்விதம் காரணமாகவிருந்திருக்கக் கூடுமென்பதை நாம் பின்னர் அவை பற்றி ஆயும்போது அறிந்து கொள்ள முயல்வோம். ஆக, முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்தில்தான் நான்கு கோயில்கலுமே இருந்திருக்க வேண்டுமென்றே படுகிறது.

போத்துகேயர் காலத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்களில் நல்லூர்க்கந்தன் ஆலயம் ஏற்கனவே ஆலயமிருந்த பகுதியில் கிறித்தவ ஆலயம் கட்டப்பட்டு விட்டதால், குருக்கள்வளவு என்னும் பகுதியில் மீண்டும் அமைக்கப்பட்டது. இதனை மையமாக வைத்துத்தான் பின்னர் கட்டப்பட்ட கைலாசநாத ஆலயமும், வீரமாகாளியம்மன் ஆலயமும் அமைக்கப்பட்டன போலும். ஏனென்றால் இவ்விரு ஆலயங்களுமே இன்றுள்ள கந்தன் ஆலயத்திலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருக்கின்றன. இன்னுமொரு ஆச்சரியமென்னவென்றால் மேற்படி தூரமானது முத்திரைச் சந்தையிலிருந்து வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம், சட்டநாதர் ஆலயம் ஆகியன அமைந்துள்ள தூரங்களுக்கு ஏறக்குறையச் சமமாகவிருக்கின்றதென்பதுதான். இவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பின்னர் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை பற்றி ஆயும்போது இன்னும் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

முத்திரைச்சந்தையானது நல்லூர் இராஜதானியின் மையப்பகுதியாக இருந்திருக்கலாமென்பதை ஏற்றுக்கொண்டு பார்க்கையில் மேற்படி சந்தையிலிருந்து நான்கு திக்குகளிலுமிருந்த ஆலயங்கள் ஓரளவு சமமான தூரத்தில் இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால் தற்போது காணப்படும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும், சட்டநாதர் ஆலயமும் முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருப்பதைப் பார்க்கும்போது இடிக்கப்பட்ட அவ்வாலயங்கள் மீண்டும் அமைக்கப்பட்டபோது பழைய இடத்தில், அல்லது அதற்கண்மையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் போல் படுகிறது. இதற்கு வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமிருக்கும் பகுதிக்கண்மையிலுள்ள கோட்டை வாசல் மற்றும் கோட்டையடி ஆகிய காணித்துண்டுகளின் பெயர்களிருப்பது ஓரளவுக்குச் சாதகமாகவுள்ளது. அதே சமயம் இன்றுள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தை மையமாக வைத்து, ஓரளவு சமமான தொலைவில், மற்றைய இரு ஆலயங்களான கைலாசநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் ஆகிய ஆலயங்கள் இருப்பதைப் பார்க்கும்போது, அவை மீண்டும் கட்டப்பட்டபோது புதிதாக அமைக்கப்பட்டிருந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன போலும்.

இன்னுமொரு விடயத்தையும் வெளிக்கள ஆய்வின்போது அறிய முடிந்தது. ஆனைப்பந்தி போன்ற போருடன் சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழர்களின் போர்க்கடவுளான கொற்றவையின் ஆலயமான வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வயல்கள் மலிந்த செம்மணியை அண்மித்த பகுதியில் உழவர்களின் காவற் தெய்வமான வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இராஜதானியின் பாதுகாப்பிற்காக ஏனய இரு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் இராஜதானி பற்றிய வெளிக்கள ஆய்வுத்தகவல்களை, விளைந்த ஊகங்களைப் பண்டைய இந்துக்களின் நகர் அமைப்புக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது மேலும் பல உண்மைகளை அறிய முடிகிறது.

[தொடரும்]

Series Navigation

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

வ.ந.கிரிதரன்


தமிழ் அரசர்கள் தங்களது இராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக் காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம். நல்லூர்க் கோட்டையைப் பற்றி

யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை, போத்துக்கேய மற்றும் கோகில சந்தேஸ (குயில் விடு தூது) போன்ற சிங்கள நூல்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் தலைமறைவாகவிருந்துவிட்டு, மீண்டும் படையெடுத்து வந்த கனகசூரிய சிங்கையாரியனைப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு கூறும்:

‘….கனகசூரிய சிங்கையாரியன் மதுரையிற் சேர்ந்த பொழுது பாண்டிநாட்டைப் பகுதியாய் ஆண்ட சிற்றரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட, அவன் சகல ஆயுதங்களுடனேயே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து, மேற்கு வாசல் வழியாக நுழைந்தான் ‘ (வைபவமாலை; பக்கம்:47)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேற்கு வாசலென்பது நலூர்க் கோட்டையிம் மேற்கு வாசலே என்பது வெள்ளிடமலை. இம்மேற்கு வாசலைப்பற்றிப் பறங்கிகளின் படையெடுப்புப் பகுதியிலும் கூறப்பட்டுள்ளது.

‘…யுத்தம் வாசற்புறத்தே நல்லூர்க் கோட்டையின் கோவிலுக்கு முன்னதாகவிருந்த வெளியையே இடமாக நியமித்துக் குறித்த நாளிலே யுத்தத்தை ஆரம்பித்துப் பதினொரு நாளாக நடத்தினார்கள் ‘ (வைபவமாலை; பக்கம் 70).

இந்த யுத்தத்தைப் பற்றிப் போர்த்துகேயரின் குறிப்புகளும் விபரமாக விளக்குகின்றன. Conquest of Ceylon நூலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அண்மையில் நல்லூர்க் கோட்டையின் மேற்கு வாயில் அமைந்திருந்ததும், யுத்தம் நிகழ்ந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லூர்க் கோட்டைக்கு வடக்கு வாயிலொன்று இருந்த விபரமும், அதற்குப் பாதுகாப்பாகச் சிவாலயமொன்று இருந்த விபரமும் வைபவமாலயில் வரும் சுபதிட்ட முனிவர் கதையில் கூறப்பட்டுள்ளன:

‘…அவ்வாலயங்களில் வடமதில் வாயில் காப்பாக நின்ற சிவாலயம் ஒன்று மாத்திரமே சிவகடாட்சம் பெற்ற ஒருவனால் முதன் முதல் நிறைவேறும் ‘ (வைபவமாலை; பக்கம் 53-54).

நகரின் கிழக்கு அல்லது தெற்கு வாயில்கள் பற்றிய குறிப்புகளை வரலாற்று நூல்களிலிருந்து என்னால் பெற முடியவில்லை. போர்த்துக்கேயரின் நூல்கள் போன்ற வரலாற்று நூல்களை இந்த விடயத்தில் மீண்டுமொருமுறை நுணுகி ஆராய வேண்டுமென்பது எனது அவா. அதன் மூலம் மேலும் பல உண்மைகள் கிடைக்கக் கூடும்.

சந்தை பற்றிய தகவல்கள்!

போர்த்துக்கேயரின் நூல்களிலொன்றான Early Christianity in Ceylon (17th Centuray Narrative) நல்லூர் இராஜதானியிலமைந்திருந்த சந்தை பற்றியும், இச்சந்தையின் நடைமுறைகளை அரசன் தனது மாளிகையிலிருந்து பார்க்கக்கூடியதாகவிருந்ததையும் கூறுகின்றது. இச்சந்தையே முத்திரைச் சந்தையாகவிருக்க வேண்டும். தமிழரசர் காலத்தில் சந்தையில் விற்கப்ப்டும் துணிகள் அரசாங்க முத்திரையிடப்பட்டே விற்கப்பட்டு வந்தனவென்பதை அறியக் கூடியதாகவிருக்கின்றது.

‘..தமிழரசர் காலத்திற்போலவே அரசாட்சி முத்திரையில்லாத துணிகள் விற்கப்படமாட்டா. முத்திரை குத்துவதற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது.. ‘(யாழ்ப்பாணச்சரித்திரம்; பக்கம் 48).

இதனால்தான் முத்திரைச் சந்தை என்னும் பெயர் தோன்றியிருக்கலாம் போற்படுகின்றது.

யமுனா ஏரி!

தற்போது நல்லூர்ப் பகுதியில் அரிதாகக் காணப்படும் பழமையின் சின்னங்களில் ஒன்றான யமுனாரிபற்றியும் பல்வேறுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. தமிழ் மன்னர்கள் நீராடப் பாவித்த கேணி இதென்பர் ஒரு சாரார். மறுசாராரோ பெரிய கந்தசாமி ஆலயத்திற்குரிய தீர்த்தக் கேணியென்பர். இக்கேணியை முதலாவது சிங்கையாரியராசன் கட்டியதாக வைபவமாலையார் கூறுவார். முதலியார் இராசநாயகமோ கனகசூரிய சிங்கையாரியனின் புத்திரர்களில் ஒருவனான சிங்கைப் பரராசசேகரன் என்பவனே கட்டியமைத்தான் எனக் கூறுவார்.

இந்த யமுனா ஏரி பழைய கந்தசாமி கோவிலிருந்த இடத்திற்கு அண்மையில் இருப்பதாலும், இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனா நதியினின்றும் கொண்டு வரப்பட்ட நீரைப் பெய்வித்ததால் யமுனாரி என்று அழைக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதாலும், தீர்த்தக் கேணியற்று பெரிய முருகன் கோயிலொன்று இருப்பதற்குச் சாத்தியம் குறைவாகவிருப்பதாலும் இந்த யமுனாரி அரச குடும்பத்தினரால் நீராடப் பாவிக்கப்பட்டது என்பதிலும் பார்க்கப் பழைய கந்தசாமி ஆலயத்திற்குரிய தீர்த்தக் கேணியாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமுடையதாகப் படுகிறது. ‘ப ‘ கரவான இக்கேணி மிகவும் அழகானது. பின்னாளில் அந்நியர் ஆட்சிக் காலங்களில் அவர்களால் நீராடப் பயன்பட்டிருக்கலாம். அதனால்தான் போலும் ஜே.பி.லூயி போன்றோர் இக்கேணியானது தமிழ் அரச குடும்பத்தினரால் நீராடப் பயனபட்டது எனக் கருதினர் போலும்.

நகரமைப்பில் மக்களிருக்கைகள்!

நல்லூர் இராஜதானியில் மக்கள் புரியும் தொழில்களுக்கேற்ப அவர்களுக்குரிய இருக்கைகளும் அமைந்திருந்தன என முதலியார் இராசநாயகம் போன்றோர் கூறுவர். கனகசூரிய சிங்கையாரியனால் மீளக் கைப்பற்றப்பட்ட நல்லூர் புதுக்கியமைக்கப்பட்டதைப் பற்றி யாழ்ப்பாணச் சரித்திரம் பின்வருமாறு கூறும்:

‘..நல்லூர் பல்வளங்களாலும் செறிவுற்றிருத்தலைக்கண்டு அதனாலேயே புதுக்குவான் விழைந்து, இராச வீதிகளும், அரன்மணைகளும் அவற்றைச் சூழந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும் , நறுமணங்கமழும் செவ்விய மலர் பொலிந்திலங்குஞ் சிங்கார வனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொல்ழிபுரி மக்களிருக்கைகளும் பல்வகை அணிநலஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், தட்டார், இரத்தின வணிகர், புலவர், இசைநூல் வல்ல பாணர் இவர்களுக்கு வெவ்வேறிருக்கைகளும்… ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம்) இவ்விதமாக நகர அமைப்பு காணப்பட்டது. இதில் எவ்வளவு தூரம் உண்மையிருந்தது என்பதைப் பின்னர் இந்துக்களின் நகர் அமைப்புக் கோட்பாடுகளைத் தற்போதைய நல்லூரில் காணப்படும் வீதி, மற்றும் காணிப்பெயர்களை ஆராயும்போது கண்டு கொள்ளலாம்.

நகரில் காணப்பட்ட கட்டடங்கள்!

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் கோகில சந்தேஸமென்னும் (குயில் விடு தூது) சிங்கள் நூலில் (இது சப்புமல் குமாரயாவின் யாழ்ப்பாண வெற்றியைப் புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்பட்டது) நகரில் அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களைப் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.

‘..யாபாபடுனவிலே சிறந்த உயர்ந்த கட்டடங்கள் நிரை நிரையாக உள்ளன. பொன்மயமான கொடிகள் இவற்றினை அலங்கரிக்கின்றன. குபேரனின் தலைநகரான அழகாபுரியுடன் இது ஒப்பிடற்பாலது.. ‘ (யாழ்ப்பாண் இராச்சியம்; கலாநிதி சி.க.சிற்றம்பலம்).

நல்லூர்க் இராஜதானிக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் இருந்ததைப் போர்த்துக்கேயரின் குறிப்புகள் கூறி நிற்கின்றன. இவை கோப்பாய், பண்ணைத்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பண்ணைத்துறைக்கு அண்மையில் காணப்படும் கொட்டடி என்பது கோட்டையடி என்பதன் திரிபாகவே படுகின்றது. இக்கோட்டைகளை நல்லூர் இராஜதானியுடன் இணைக்கப் பிரதான வீதிகள் இருந்ததையும், இவ்வீதிகள் நெடுக ஆங்காங்கே காவலரண்கள் இருந்தமையும் போர்த்துக்கேயரின் நூல்கள் கூறுகின்றன. பறங்கிகள் நல்லூர் இராஜதானிமேல் தொடுத்த போர்பற்றிய விபரஙக்ளை நேர்முக வர்ணனை போன்று குவேறாஸ் குருக்களின் Conquest of Ceylon விபரிக்கின்றது.

—-

Series Navigation

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

வ.ந.கிரிதரன்


நல்லூர் இராஜதானியில் அமைந்திருந்த ஏனைய பகுதிகளைப் பற்றி நூல்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம். நல்லூர் இராஜதானியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசாமி கோயிலைப் பற்றிய பல முரண்பாடான தகவல்கள் சரித்திர நூல்களில் காணப்படுகின்றன. கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலே சர்ச்சைக்குக் காரணம். ‘ ..இலக்கிய சகாப்த மெண்ணூர், றெழுபதா மாண்ட தெல்லை,அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகவாகு,நலமிகும் யாழ்ப்பாண நகரி,கட்டுவித்து நல்லைக்,குலவிய கந்தவேட்குக், கோயிலும் புரிவித்தானே.. ‘

இப்பாடலில் வரும் எண்ணூற்றெழுபதை சுவாமி ஞானப்பிரகாசர், வ.குமாரசாமி போன்றவர்கள் கி.பி.1248 ம் ண்டைக் குறிக்குமெனக் கருதுவார்கள். மேற்படி பாடலில் உள்ள எண் என்பது யிரத்தைக் குறிக்குமெனவும் யிரத்துடன் நூற்றெழுபதைக் கூட்ட வருவது சகவருடம் 1170 என்பதும் இது கி.பி.1248ஐக் குறிக்கும் என்பதும் இவர்களது கருத்து. டானியல் ஜோன் என்பவரின் கருத்துப்படி சகவருடம் எண்ணூறெழுபது என்பது கி.பி.948ஐக் குறிக்கும் என்பதாகும். முதலியார் இராசநாயகத்தின் கருத்துப்படியும் சகவருடம் 870 என்பது கி.பி.948ஐக் குறிக்கும். இதில் வரும் புவனேகபாகுவை ரிய மன்னனின் மந்திரியாகவும், நல்லைக் கோயிலைக் கட்டியவனாகவும் கைலாயமாலை, யாழ்ப்பாணவைபவமாலை போன்ற நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. னால் நல்லூர்க் கோயில் கட்டியத்தில் அதனைக் கட்டியவன் சிறிசங்கபோதி புவனேகபாகு எனக் குறிப்பிடப் பட்டிருப்பதை மறைத்து விட முடியாது. இந்தச் சிறிசங்கபோதி புவனேகபாகு என்பவனே கி.பி.1450இலிருந்து கி.பி.1467வரை நல்லூரை இராசதானியாக்கி அதிலிருந்து அரசாண்ட சப்புமல்குமாரய என்பவனாவான். கந்தையா குணராசாவின் கருத்துப்படி இந்த இரண்டு புவனேகபாகுகளையும் உண்மைகளாகக் கொண்டு அதற்கொரு விளக்கம் காணப்படிருப்பதை அறியக் கூடியதாகவுள்ளது. முதல் புவனேகபாகுவை இவர் ஒரு தமிழ்ப் பெயராகவே முடிவு செய்கின்றார்.

‘..நல்லூர் கந்தசாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு (தமிழ்ப் பெயர் வீரவாகு போல) என்பதற்கு வேறிரு தாரங்களுமுள்ளன.. ‘ (வீரகேசரி 15-08-1993).

‘எவ்வாறாயினும் கி.பி.948ம் ண்டில் புவனேகவாகு என்பவரால் முதன் முதலில் நல்லூர்க் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது எனக் கொள்ளலாம். இவரை ஓர் அமைச்சரென வரலாற்று நூல்கள் சில குறிப்பதால் சோழ அரசனின் அரசப் பிரதிநி அல்லது அமைச்சர் அவர் எனக் கொள்வதில் தவறில்லை ‘ (வீரகேசரி; 15-08-1993) என்ற முடிவுக்கு வந்தபின் க.குணராசாவினால் இரண்டு புவனேகபாகுவுகளுக்கு இடையில் சமரசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன்படி இருவேறு புவனேகபாகுவுகளால் இருவேறு காலங்களில் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தன் லயம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டு மூன்றாவது முறையாகக் கட்டப்பட்டது என்ற முடிவுக்கே இறுதியாக இவரால் வர முடிகிறது. இவரால் குறிப்பிடப்படுகின்ற வரலாற்று நூல்கள் உண்மையில் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்றவையே. இந்நூல்களில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் பல வரலாற்று நெறியின்றி அமைந்துள்ளன என்பது முதலியார் இராசநாயகமுட்படப் பல வரலாற்றாய்வாளர்களின் முடிவாகும். இந்தப் பிரச்சனையில் முதலியார் இராநாயகத்தின் முடிவே தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

‘..புவனேகபாகு முதலரசனாகிய செகராசனுடைய மந்திரியெனக் கைலயாயமாலையும், அவனே நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினானென வைபவமாலையும் கூறும். னால் புவனேகபாகு நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினானென்னும் கேள்வி வழக்குவரை உண்மையாகலாம். கேள்விப்பட்ட கைலயாயமாலையார் நூலெழுத முன்னூறு வருடங்களுக்குள் வாழ்ந்த புவனேகபாகுவை இன்னாரென அறிய முடியாமலோ, அன்றிச் சிங்களவரென்பதை மறைத்து விட வேண்டுமெனக் கருதியோ, யாதினாலோ அவனை செகராசனுடைய மந்திரியென அலங்கரித்து விட்டார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு எனப் புகழ்ந்து கூறுவது கேட்கப்படுவதால் அதனை மறைக்க எவராலும் முடியாது. ‘ (யாழ்ப்பாணச் சரித்திரம்: பக்கம் 252).

இது இவ்வாறில்லாமல் கந்தையா குணராசா கூறுவது போல இரு புவனேகபாகுகளால் இருவேறு காலங்களில் நல்லூர் முருகன் கோயில் கட்டப்பட்டது உண்மையாயிருந்தால் அது ச்சரியமானது. ஏனெனில் இருவருக்கும் புவனேகபாகு என்ற ஒரே பெயர் ஏற்பட்டது (அதுவும் இருவேறு இனங்களைச் சேர்ந்த) சாதாரணமாக ஏற்படக் கூடிய நிகழ்வல்ல. அதற்கான சாத்தியம் அரிதானதே.

—-

Series Navigation

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!

நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளருக்குரிய பகுதிகள், குருக்கள், போர் வீரர், வணிகருக்குரிய இருப்பிடங்கள், நகரைச் சுற்றியமைந்திருந்த மதில், நகரைச் சுற்றி அமைந்திருந்த ஏனைய கோட்டைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

பிரபலமான முருக ஸ்தலமாக விளங்கிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைப் பற்றிப் போர்த்துகேயரின் நூல்களான Conquest of Ceylon, Early Christianity in Ceylon போன்ற நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. Conquest of Ceylon நூலினை எழுதிய குவேறாஸ் சுவாமிகளின் (Queroz) குறிப்புகளின்படி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக விளங்கியதையும், இக்கோயிலைச் சுற்றி நெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நூல்களின்படி மேற்படி கந்தசுவாமி ஆலயம் தற்போது காணப்படும் கிறித்தவ ஆலயமுள்ள பகுதியிலேயேயிருந்தது என்பதையும் அறியக் கூடியதாகவுள்ளது. யமுனாரிக்குச் செல்லும் ஒழுங்கையில், அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் இப்பெரிய கோயிலின் மதிலினைச் சேர்ந்ததென்பதேயென்று கலாநிதி கந்தையா குணராசா கூறுவார் (வீரகேசரி 15-08-93).

யாழ்ப்பாண வைபவமாலை முதலாவது சிங்கையாரியராசன் நல்லூரில் இராதானியை அமைத்தது பற்றிப் பின்வருமாறு கூறும்.

‘..சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு, நாலுமதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும், பூங்காவும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில் யமுனாநதித் தீர்த்தமும் அழைப்பித்துக் கல்ந்துவிட்டு, நீதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனாவீரர் இருப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியிற் பிரமகுல திலகரான கெங்காதர ஐயரும், அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும் மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோவில், தையல்நாயகியம்மன் கோவில், சாலைவிநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ்செய்து வாழ்ந்திருந்தான்… ‘ (யாழ்ப்பாணவைபவமாலை; பக்கம் 27).

யாழ்ப்பாண வைபவமாலையின் ‘உதயதாரகை ‘ ‘ப் பிரதியின்படி ‘தென்றிசைக்குக் கைலை விநாயகர் கோவிலையும் ‘ மேற்படி மன்னன் அமைத்ததாக அறியக் கிடக்கின்றது. மேற்படி வைபவமாலையாரின் கூற்றில் மிகுந்துள்ள வரலாற்று நெறியின்மையைப்பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். சிங்கையாரியன் நல்லூரையல்ல, சிங்கை நகரையே முதலில் தலைநகராக்கினான் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும்.

முதலியார் இராசநாயகத்தின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘ நல்லூர் இராஜதானியைப் பற்றிப் பின்வருமாறு கூறும்:

‘..கனகசூரியன் தன் புத்திரர்களுடனுஞ் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் வந்து, விஜயபாகுவுடன் போர் புரிந்து அவனைக் கொன்று தான் அரசனாகி நல்லூரிலிருந்து அரசாண்டான். தன் பழைய ராஜதானியாகிய சிங்கைநகர் அழிந்து காடாய்ப் போந்தால், நல்லூர் பலவளங்களாலுஞ் செறிவுற்றிருத்தலைக் கண்டு அதனையே புதுக்குவான் வளைந்து, இராசவீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படைக் கொட்டாரங்களும், நறுமணங்கமழும் செவ்விய மலர் பொலிந்திலங்கும் சிங்காரவனமும், பட்டாலும் பருத்தி நூலாலும் நுண்ணிய தொழில் புரமக்களிருக்கைகளும், பலவகை அணிநலஞ் சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக்காரர், தட்டார், இரத்தின வணிகர், புலவர், இசை நூல்வல்ல பாணர், இவர்களிற்கு வெவ்வேறிருக்கைகளும், உயர்குடி வணிகர் வாழ் மாளிகை மறுகுகளும், வேதமோதுமந்தணர் மந்திரங்களும், உழுவித்துண்ணுங் காணியாளரோங்கிய மாடங்களும், மருத்துவர், சோதிடர் வாழும் வளமனை வீதிகளும் உழுவித்துண்போருக்குதவி பூண்டு உழுதுண்டு வாழ்வார் குடிகளுமாகிய இவைகளை வேறுவேறு தெருக்களிலமைப்பித்து ‘இந்திரன் நகரோ, குபேரன் நகரோ ‘ எனக் கண்டார் வியப்புறக்கவின் பொலிந்திலங்கும் நல்லூரை நல்லூராக ஆக்கினான்.. ‘( யாழ்ப்பாணச் சரித்திரம்; பக்கம் 76-77).

கனகசூரிய சிங்கையாரியனின் புத்திரனான சிங்கைப் பரராசசேகரன் காலத்து நல்லூரைப் பற்றி முதலியார் இராசநாயகம் பின்வருமாறு கூறுவார்:

‘…கனகசூரியனுக்குப் பின் அவன் முதற் குமாரன் சிங்கைப் பரராசசேகரன் என்னும் நாமத்தோடு கி.பி.1478இல் அரசனானான். இவனே சிங்கையெனும் பெயரி முதன் முதல் தலைப் பெயராக அமைத்தவன். இவன் தந்தையினுஞ் சிறந்தவனாய் நக்ரிற்கு வடபாலில் சட்டநாதர் திருத்தளியையும் தென் திசையில் கைலாயநாதர் கோயிலையும் குணபாலில் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும் குடதிசையில் வீரமாகாளியம்மன் திருபதியையும் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையினுமணிபெற விளங்க வைத்தான். கந்தசுவாமி கோயில்றகண்மையில் ஓர் ஏரி அமைப்பித்து, யமுனா நதியின் திவ்விய தீர்த்தத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள்ளே பெய்வுத்து, அதனை யமுனையேரி (யமுனாரி) எனப்பெயர் தந்தழைத்தான்.. ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம்; பக்கம் 77).

நல்லூர் இராஜதானியைப் பொறுத்தவரையில் பல்வேறு ஆவணங்களை நுணுகி ஆராய்ந்த முதலியார் இராசநாயகம் வந்தடைந்த முடிவே ஏற்கக் கூடியதாகவுள்ளது. செண்பகப்பெருமாள் என்ற சபுமல் குமாராயாவின் படையெடுப்பின்போது சிங்கைநகர் உட்பட யாழ்நகர் முழுவதுமே அழிந்துவிட, அவன் நல்லூரில் புதிய இராஜதானியை அமைத்தான். கோட்டையில் ஏற்பட்ட அரசுரிமை காரணமாக அவன் விஜயபாகு என்பவனை நல்லூரில் பொறுப்பாக நிறுத்திவிட்டுச் சென்ற சமயம், முன்னர் செண்பகபெருமாளிடம் தோற்றுத் தமிழகம் சென்றிருந்த கனகசூரிய சிங்கையாரியன் தன்னிரு புத்திரர்களான பரராசசேகரன், செகராரசேகரனுடன் மீண்டும் படையெடுத்து வந்து, விஜயபாகுவிடமிருந்து முன்னர் இழந்த இராச்சியத்தை மீளக் கைப்பற்றிக் கொண்டது வரலாற்று நிகழ்வு. இவன் காலத்திலும், இவனது மகன் காலத்திலும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பைப் பொறுத்தவரையில் பலமுக்கிய மாற்றக்களைக் கண்டது. நல்லூர் இராஜதானியாகியபின்னர் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளை, சிங்கைநகரும் நல்லூரும் ஒன்றென நினைத்துக் குழம்பியதால் தான் போலும் கைலாயமாலையாரும் அதனை ஆதாரமாகக் கொண்டு வைபவமாலையினைப் படைத்த மயில்வாகனப் புலவரும் சிங்கை நகரை இராஜதானியாக்கிய ஆரியமன்னன் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளாக எண்ணிவிட்டனர் போலும். அதிகமான வரலாற்றாய்வாளர்களும் முதலியார் இராசநாயகத்தின் கருத்தினை ஏற்றுக் கொள்வதாலும், வைபவமாலையாரின் கூற்றில் காணப்படும் வரலாற்று நெறியின்மையினை முதலியார் இராசநாயகத்தின் கருத்தே சீர் செய்வதாலும், அதுவே எனக்கும் சரியாகப் படுகிறது. இந்த அடிப்படையிலேயே நல்லூர் இராஜதானி பற்றிய வரலாற்றுத் தகவல்கலைச் சரியானதாக ஏற்றுக் கொண்டு கவனத்தை ஏனைய தகவல்களின்பாற் திருப்புவோம்.

—-

Series Navigation

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

வ.ந.கிரிதரன்


அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. ‘…யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம் ‘. ( ‘யாழ்ப்பாண இராச்சியம் ‘, கலாநிதி சி.க.சிற்றம்பலம்; ஈழமுரசு 25-06-1994). மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பநே ‘, ‘யாப்பா பட்டுநேயே ‘ பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்.

‘..வண. ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு.எஸ்.டபிள்யு.குமாரசுவாமியவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையெனவும் இது போன்ற கதைகள் வையாபாடலிலும், தஷிண கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவி வீரராகவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர் கட்டி வைத்தாரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப்படவில்லையெனவும், சிங்களவர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பநே ‘, ‘யாப்பா பட்டுநே ‘யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவுங் கூறுவர்.. ‘( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘, செ.இராசநாயகம்; பக்கம் 253).

முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துகள் மேலுள்ள கருத்துக்கு முற்றுமெதிரானது. யாழ்ப்பாணப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே ‘ என்பதே இவர்களது கருத்து.

‘…சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட ‘யாப்பாபட்டுநே ‘யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். ‘யாப்பாபட்டுநே ‘க்கும், நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தாரென்பது விந்தையே. யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஊர்களையுங் காணிகளையுந் தமிழர் தமிழ்ப் பெயராக்காது விட்டது அதினும் விந்தையே. இனிப் ‘பட்டுந ‘ என்பது சிங்கள மொழியா ? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச் சிறுவருமறிவாரே. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுந் தமிழ்ப் பெயரையே ‘யாப்பாபட்டுநே ‘யென்ச் சிங்களவர் சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும்.. ‘ (யாழ்ப்பாணச்சரித்திரம் ‘-முதலியார்.செ.இராசநாயகம்; பக்கம் 254).

இப்பிரச்சினைபற்றிய கலாநிதி க.செ.நடராசாவின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர் இது பற்றி நல்லதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்.

‘….சிங்களப் பெயராகக் கருதப்பட்ட ‘யாப்பாபட்டுன ‘ என்பது ‘யாபா ‘ என்ற பதமும், ‘பட்டுன ‘ என்ற பதமும் இணைந்த சொற்கூட்டாகும். ‘பட்டுன ‘வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக நகரத்தைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். அச்சொல் தமிழிலே சங்ககால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை…

..யாவா என்பது யாபா என மருவி வந்தது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்கள வடிவமுமன்று. ஏனெனில் சிங்கள இலக்கியங்களில் ஜாவாவை யாபா என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை…அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டே சிங்களப் பெயரான ‘பாப்பாபட்டுநெ ‘ என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும். ‘ ( ‘யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் ‘ – கலாநிதி.க.செ.நடராசா; ‘ ‘தமிழோசை ‘ 11-11-1993).

மேற்படி கட்டுரையில் க.செ.நடராசா தந்து முடிவிற்காதாரமாக இன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார்.

‘..மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூரை அதன் சிங்கள மொழி பெயர்ப்பு என்று கருதப்படும் ‘யாபனே ‘ என்ற பதத்தால் வழங்காது ஏன் ‘நல்லூருவ ‘ என்று வழங்கி வழங்கி வருகின்றார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகி விடும்… எனவே ‘யாபனே ‘ என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறூம் பெயரின் சிங்களத் திரிபென்றே கொள்ள வேண்டும்… ‘ ( ‘தமிழோசை ‘; 11-11-1993).

மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல.சபாநாதன் பதிப்பித்தது) அந்தகக் கவி வீரராகவனென்னும் யாழ்ப்பாணன் யாழ்பாடிப் பரிசு பெற்றதால் ஏற்பட்ட பெயரே யாழ்ப்பாணம் என எடுத்துச் சொல்லும்.

‘..அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு… ‘ ( ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘; பக்கம் 25).

மயில்வாகனப் புலவர் கூறும் ‘செங்கடகநக ‘ரென்பது சிங்கை நகரைக் குறிக்குமென்பதே முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும்.

‘..சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ அவருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, ‘செங்கடகநகர் ‘ என்று வைபவமாலையில் மாற்றி விட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் ‘செங்கடகநகர் ‘ என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று. ‘ ( ‘யாழ்ப்பாணச்சரித்திரம் ‘; பக்கம் 29).

‘..பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்து அரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைநகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் ‘செங்கடக நக ‘ரெனத் திரிந்திருக்க வேண்டும் ‘ ( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘; பக்கம் 235).

‘யாழ்ப்பாண சரித்திரம் ‘ என்ற மற்றுமொரு நூலினைத் தந்த ஆசிரியர் ஆ.முத்துதம்பிப்பிள்ளை என்பவரின் கருத்துப்படி கி.மு.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கனென்ற மன்னன் அந்தகனான யாழ்ப்பாடி என்பவனிற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமே யாழ்ப்பாணம் என்பதாகும். அதற்காதாரமாக அவர் தனிப்பாடற் திரட்டில் கானப்படும் பின்வரும் பாடலைக் காட்டுவார்:

‘..நரை கோட்டிளங்கன்று

நல்வளநாடு நயந்தளிப்பான்

விரையூட்டு தார்ப்புயன்வெற்

பீழமன்னனெ தேவிரும்பிக்

கரையோட்ட மாக மரக்கலம்

போட்டுனைக் காணவந்தாற்

திரை போட்டிருந்தனை யேலேல

சிங்க சிகாமணியே.. ‘

இப்பாடலின் யாப்பைக் கொண்டு இது கி.பி.3 ஆம் நூற்றண்டிற்குப் பிற்பட்டதென்று க.செ.நடராசா கருதுவார். இலனக்கையின் வடபுறத்துலிருந்து மணற்றிடரினைத் திருத்தி வளமாக்கியவன் விபீடணனிடம் யாழ்வாசிக்குமொருவனே என்பதை வையாபாடல் கூறும். ம.க.அந்தனிசிலும் இதுபற்றி நல்லதொரு கட்டுரையினை வீரகேசரியில் எழுதியுள்ளார். அதில் அவர் மூவகைப் பாணர்களில் ஒருவரான யாழ்ப்பாணர் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணமாயிற்று என்று சொல்வார்.

‘,,தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாம். தமிழரின் பழைய இசைக்கருவிகள் மூன்று. அவை யாழ்,குழல், முழவு என்பன. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும்….அவ்வாறு தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சொல்லபப்ட்டிருக்கும் யாழ்ப்பாணர் என்னும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது. ‘ ( ‘வீரகேசரி; 9-12-1990).

*1இது பற்றி முதலியார் குலசபாநாதனும் கருத்துத்தெரிவித்துள்ளார்.

‘..யாழ்ப்பாணம் எனும் பெயர் 15-ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூலிற்றான் முதன் முதற் காணப்படும். 14-ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் ‘யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே ‘ எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமுளர். எங்னனமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பெரடியாகப் பிறந்ததெனுங் கொள்கை வலியிழந்துபடும். ‘ [முதலியார் குலசபாநாதன் பதிப்பித்த ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘; பக்கம் 24 , அடிக்குறிப்பு.]

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுக்கே வர முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான ‘பாப்பாபட்டுநே ‘ என்பதிலிருந்து வந்த பெயரே யாழ்ப்பானம் எனப்திலும் பார்க்க , யாழ்ப்பாணம் என்ற தூய தமிழ் சொல்லின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே ‘ என்பதே பொருத்தமுடையதாகப் படுகின்றது. ‘பாப்பாப் பட்டுநேக்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை ‘ என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றே ஏற்கக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் அவரே பிறிதோரிடத்தில் சுட்டிக் காட்டும் ‘..மேலும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லீம் பிரயாணிகளும் ‘ஜப்பா ‘, ‘ஸுப்பா ‘வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்… ‘( ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘; பக்கம் 255) என்ற கூற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.

மேலும் கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலும் யாழ்ப்பானத்திஅயும் நல்லூரையும் பிரித்துக் கூறுவதும் கவனிக்கத் தக்கது.

‘..மார்ப்பனாம் புவனேகவாகு

நலமிகும் யாழ்ப்பாண நகரி

கட்டுவித்து, நல்லைக்குலவிய

கந்தவேட்குக் கோயிலும்

புரிவித்தானே… ‘

இவற்றிலிருந்து இறுதியாக நாம் வரக் கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இரு வேறு வேறான இராஜதானிகள். இரு வேறான நகரங்கள். ‘யாப்பாப்பட்டுநே ‘யென்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத் திரிபே. நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘யாப்பாப்படுனே ‘யினின்றும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்ததென்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது.

—-

Series Navigation

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

வ ந கிரிதரன்


( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.)

ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு நூல்கள் பற்றி நானறிந்த வரையில் எனது ‘நல்லூர் ராஜதானி: நகர அமைப்புக் கலை ‘ , தமிழக ஸ்நேகா / கனடா மங்கை பதிப்பக வெளியீடாக டிஸம்பர் 1996இல் வெளிவந்த நூல்தவிர வேறெந்த நூலும் இதுவரையில் வரவில்லை. அந்த வகையில் ‘நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு ‘ நூலுக்கு ஒரு முக்கியத்துவமும் தகுதியும் உண்டு. இந்தத் துறையில் ஆய்வு செய்ய விளையும் மாணவர்களுக்கு முதனூலாகவும் உதாரணப் பிரதியாகவும் நிச்சயம் இந்த நூலிருக்கும். நான் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் ‘கட்டடக் கலையின் வரலாறு ‘ என்னும் பாடத்திற்காக இறுதியாண்டில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையினை மேலும் விரிவாக்கி எழுதிய ஆய்வுக் கட்டுரைத் தொடரே மேற்படி நூலாக வெளிவந்தது. ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பின் ‘ அடுத்த பதிப்பு வெளிவரும் சமயத்தில், இந்நூலினை மேலும் அதிகமான விளக்கச் சித்திரங்களுடன், கனமான ஆய்வுடன் வெளியிடும் எண்ணமுண்டு.

இந்நூலின் முன்னுரையில் கூறியிருப்பது போல் எனக்கு நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டுமென்னும் ஆவல் ஏற்பட்டதற்குப் பல காரணங்களுண்டு. சிறு வயதில் நான் படித்த நாவல்கள் குறிப்பாகக் கல்கி , ஜெகசிற்பியன் போன்றவர்களின் நாவல்கள் தமிழர்களின் அன்றைய தலைநகர்களான தஞ்சாவூர், காஞ்சி போன்றவற்றின் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரிக்க வைத்தன. நல்லூர் ராஜதானியைப் பொறுத்தவரையில் அண்மையில் புகழ்பெற்று விளங்கிய நகர். இருந்தும் இந்நகர் பற்றிய போதிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப் படவில்லை. நல்லூர் இராஜதானி புகழ்பெற்று விளங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகழ் பெற்ற தலைநகர்களாக விளங்கிய நகர்கள் அநுராதபுரம், யாப்பகூவா போன்ற தென்னிலங்கை நகரங்கள். அவை பற்றியெல்லாம் விரிவான நூல்கள், ஆய்வுகள் வெளிவந்திருக்கும் போது நல்லூர் இராஜதானியின் நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது. யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், போர்த்துக்கீசரின் குறிப்புகள் போன்றவற்றில் நகர் பற்றிய தகவல்கள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவை தவிர ஆய்வுகள் ஏதும் இதுவரையில் வெளிவந்திருக்கவில்லை எனது இந்த நூல் தவிர. மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலத்தில் ‘பாரம்பர்யக் கட்டடக் கலை ‘ (Traditional Architecture) பற்றி நிமால் டி சில்வா என்னும் சிங்களப் விரிவுரையாளர் விரிவுரைகள் நடாத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரோலன் டி சில்வாவின் ‘பண்டைய அநுராதபுர நகர் அமைப்பு ‘ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை எமக்கு ஒரு விரிவுரையில் அறிமுகப்படுத்தினார். அதுவும் எனக்கு நல்லூர் இராஜதானி நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை ஏற்படுத்தியது. அச்சமயம் கட்டடக் கலை இறுதியாண்டில் பயின்று கொண்டிருந்த நண்பர் தனபாலசிங்கம் தானும் இந்நகர் பற்றி ஆய்வு செய்ய விரும்பியதாகவும் போதிய தகவல்களைப் பெற முடியாத நிலையில் அவ்வெண்ணத்தினைக் கைவிட நேர்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதுவும் எனக்கு நல்லூர் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரித்தது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில், வடபகுதியில் காணப்படும் பழமையின் சின்னங்கள் ஆதரிப்பாரற்றுக் கிடக்கும் நிலை பற்றி அறியத் தரும் முகமாகச் சில கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு ‘ பத்திரிகையின் வாரமலரில் எழுதினேன். ‘நல்லூர் ராஜதானி ‘ ‘, ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ‘, ‘பழைமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் ‘ என்னும் தலைப்புகளில் ஈழநாடு பத்திரிகை அவற்றினை பிரசுரித்திருந்தது. அக்காலகட்டத்தில் தகவல்களைப் பெறும் முகமாக , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்றில் விஞ்ஞான பிரிவில் பயின்று கொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர் கா.இந்திரபாலவைச் சந்தித்தேன். அவர் சுவாமி ஞானப்பிரகாசரின் ‘கோப்பாய்க் கோட்டை ‘ பற்றிய கட்டுரை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாக அது பற்றிக் ‘கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம் ‘ என்னும் கட்டுரையினை வீரகேசரியில் எழுதினேன். அதற்குச் சன்மானமாக அவர்கள் முப்பத்தைந்து ரூபா அனுப்பியிருந்தார்கள். மேலும் இவ்வாய்வு சம்பந்தமாக அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராகவிருந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைச் சந்தித்தேன். அவர் தன்வசமிருந்த ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘யினைத் தந்துதவினார். அக்காலகட்டத்தில் ‘பழைமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் ‘ பற்றி ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த எனது கட்டுரையில் யாழ் சந்தையில் அமைந்திருந்த ‘கங்கா சத்திரம் ‘ போன்றவற்றைப் பேணூதலின் அவசியம் பற்றிக் குறிப்பிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்த சிறிது காலத்தின் பின் அச்சத்திரத்தினை யாழ்மாநகரசபையினர் உடைத்து விட்டனர். அக்காலகட்டத்தில் முழங்காவில் பகுதியில் அமைந்திருந்த ‘பல்லவராயன் கட்டுக் ‘ காட்டுப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் இடிபாடுகளைத் தேடி அலைந்து திரிந்தது மறக்க முடியாத அனுபவம். இதே சமயத்தில் நல்லூர் பற்றி அதிகம் எழுதிய ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர் கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்). இவரது ‘நந்திக்கடல் ‘ வரலாற்று நவீனம் ஈழத்திலிருந்து வெளிவந்த வரலாற்றுப் புதினங்களில் குறிப்பிடத்தக்கது

வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் திருமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், விடயங்கள் உள்ளன. இவை பற்றியும் ஆய்வுகள் விரிவாக நடத்தப்படவேண்டும் என்பதுமென் அவா. ஈழத்தில் திராவிடர்களின் நகர் அமைப்புக் கலை பற்றிய வரலாற்றின் பரிணாம வளர்ச்சியினை அறிந்து கொள்ளுதற்கு நகர் அமைப்புக் கலையில், கட்டடக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர்கள், வரலாற்றறிஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுடன் இணைந்து விரிவான ஆய்வுகள் எதிர்காலத்தில் செய்வார்களென நான் திடமாக நம்புகின்றேன். இதுவரை காலமும் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றுப் பட்டதாரிகள் மட்டுமே நகர் அமைப்புக் கலை அல்லது கட்டடக் கலை பற்றிய போதிய அடிப்படை விடயங்கள் பற்றிய அறிதலோ புரிதலற்று தம் வழியில் ஆய்வுகளை மேற்கொண்ட காரணத்தினால் தான் திராவிடர்களின் நகர் அமைப்புக் கலை பற்றியோ, அல்லது கட்டடக்கலை பற்றியோ விரிவாக ஆய்வு ரீதியில் தமது கவனத்தைப் போதிய அளவில் செலுத்தவில்லையென நான் கருதுகின்றேன். அந்நிலை மாறுவதற்கு அனைத்துப் பிரிவினரும் ஆய்வுகளில் பூரண பங்களிப்பினை வழங்க வேண்டியதன் தேவை முக்கியம்.

பேராசிரியர் கா.இந்திரபாலா இந்த விடயத்தில் விதிவிலக்கானவர். அவர் ஈழத்துத் திராவிடக்கலை பற்றிக் கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றார். அவரும் கூட ஈழத்துத் தமிழ் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இராஜதானிகள் பற்றிய விரிவான நகர் அமைப்பு பற்றியெதுவும் எழுதவில்லை. ஏனைய வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களால் வரலாறு பற்றிய ஆய்வுகளைச் செய்ய முடிந்ததே தவிர அதற்கு மேல் அவர்களாலும் செல்ல முடியவில்லை. பொ.ரகுபதி போன்ற தொல்லியர் துறை ஆய்வாளர்களும் அகழ்ந்தெடுத்ததைத்தான் ஆய்வு செய்தார்கள். போதிய ஆதாரங்கள் இல்லாத விடயத்தில் கை வைக்கத் துணியவில்லை. இந்த விடயத்தில் ஈழத்தில் பட்டம் பெறும் கட்டடக் கலைஞர்களின் பட்டப்படிப்பிலுள்ள முக்கிய குறைபாடுகளிலொன்று அவர்களுக்குத் திராவிடக்கட்டடக்கலை பற்றியெதுவும் விரிவாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பட்டதாரிகள் பட்டம் பெற்று வரும் பொழுது திறமையான வரைபடஞர்களாகத்தான் வெளிவருகின்றார்களே தவிர கட்டக்கலைத் துறையிலோ, அல்லது நகர அமைப்புத் துறையிலோ அவற்றின் பலவேறு காலகட்ட பரிணாம வளர்ச்சியினை நன்கு புரிந்து கொண்ட ஆழ்ந்த புலமை மிக்கவர்களாகவோ வெளிவருவதில்லை. அவர்கள் தங்களது பட்டப்படிப்புக்குத் தேவையான ஆய்வுகளுக்குரிய கருப்பொருட்களாக ஏற்கனவே இருக்கும் கோட்டைகள், மாளிகைகள், மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றைத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். இந்நிலை மாறி ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தெளிவற்றுக் கிடக்கும் விடயங்களை தெளிவுபடுத்தும் விடயங்களை மையமாக வைத்து, உதாரணமாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களின் நகர அமைப்பு, காணப்படும் சிதைவுகளின் , வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் நிலவிய கட்டடக்கலை போன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகளைச் செய்ய முன்வரவேண்டும். சித்தியடைவதை மட்டுமே சிந்தனையாகக் கொண்டு ஆய்வுக்குரிய விடயங்களைத் தெரிவு செய்வதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். நல்லூர் இராஜதானி பற்றி நான் ஆராய விளைந்ததற்கு இதுவுமொரு முக்கிய காரணங்களிலொன்று. தமிழ்ப்பகுதிகளிலுள்ள பல்கலைக்கழங்களில் கட்டடக்கலை பற்றிய பட்டப் படிப்பினை ஆரம்பிக்க முயற்சிகளெடுக்க வேண்டும். திராவிடக்கட்டக்கலை/ நகர அமைப்பு பற்றிய ஆய்வுகள் அதிகரிப்பதற்கிது உதவும். மேலும் முன்பே குறிப்பிட்டுள்ளதுபோல் கட்டடக்கலை/நகர அமைப்புத் திட்டமிடும் வல்லுனர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் ஈழத்தமிழர்களின் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலை பற்றிய பல ஆய்வுகளைத் துரிதமாக்க முடியும். இது ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் கூடப் பொருந்தும். அங்கும் பண்டைய தமிழர்களின் இராஜதானிகள் அல்லது புகழ்பெற்ற புராதன நகர்கள் பற்றிய விரிவான ஆய்வுகளேதும் வந்ததாக நானறிந்த வரையில் தெரியவில்லை. திராவிடக்க கட்டடக்கலை பற்றிக் கூடத் தமிழில் பிரெஞ்சு அறிஞரான ழுவோ துப்ருயல் முயன்ற அளவுக்கு வேறு யாரும் முயன்றதாகத் தெரியவில்லை. பிரபல நாவலாசிரியர் மறைந்த நா. பார்த்தசாரதி தமிழர்களின் நகர் அமைப்புக் கலை பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்படும் தகவல்கள் அடிப்படையில் பொதுவானதொரு நூலொன்றினை எழுதியிருக்கிறார்; ஆனால் வேறு யாரும் ஏதாவதொரு நகர் பற்றி விரிவாக ஆய்வு பூர்வமாக எழுதியதாகத் தெரியவில்லை. இந்நிலை மாற வேண்டும். இத்தகையதொரு சூழலில்தான் இந்த ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ என்னுமிந்த நூலுக்கொரு முக்கியமுண்டு. காணப்படும், வீதி/காணிப் பெயர்கள், சரித்திர சின்னங்கள், பண்டைய இந்துக் கட்டடக்கலை/ நகர அமைப்பு பற்றிய ஆய்வுகள், வரலாற்று நூல்கள்/குறிப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்ந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக எழுதப்பட்டுள்ள முதனூலென்ற பெருமை இதற்குண்டு. இந்நுலினை வாசிப்பவர்கள் இதிலுள்ள குறை நிறைகளை எமக்கு அறியத்தருவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த ஆய்வு விரிவாக்கப்பட்டு மேலும் கனமாக நீங்கள் உதவி செய்தவர்களாகின்றார்கள்.

அத்தியாயம் ஒன்று: நல்லூரும் சிங்கை நகரும்!

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலைநகராக விளங்கிய நகர்களாக ‘சிங்கை நகர் ‘, நல்லூர் ஆகியவற்றைக் கூறலாம். நாக அரசர்களின் காலகட்டத்தில் கதிரமலை என அழைக்கப்பட்ட கந்தரோடை ராஜதானி அந்தஸ்தினை வகித்து வந்தது. அதன்பின் அந்த நிலையினை அடைந்தவை மேற்கூறப்பட்ட சிங்கை நகர், நல்லூர் ஆகிய நகர்களே. வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மேற்படி சிங்கைநகர், நல்லூர் பற்றிய விடயத்தில் ஒரு குழப்பநிலை நிலவுவதை அவதானிக்க முடிகிறது. ஒரு சாரார் சிங்கை நகரும் நல்லூரும் ஒன்றேயெனெக் கருதுகின்றார்கள். மறுசாராரோ நல்லூரும் சிங்கை நகரும் ஒருவேறு காலகட்டங்களில் இராஜதானிகளாக விளங்கிய இருவேறு நகர்களெனக் கருதுகின்றனர். கலாநிதி சி.க.சிற்றம்பலத்தின் கருத்துப்படி நல்லூரும் சிங்கை நகரும் ஒன்றே.

‘பொதுவாக நல்லூரே சிங்கைநகரென அழைக்கபப்ட்டு வந்தது எனலாம்.. ‘(கட்டுரை: யாழ்ப்பாண இராச்சியம்; ஈழமுரசு(கனடா) 25-02-1994).

‘..குவேறா சுவாமிகளின் சான்றுப்படி கரையிலிருந்து நல்லூருக்கு வரும் வழியில் சுங்குநயனார் (chungainayanar) அதாவது சிங்கைநகர் எனும் பலமான அரணுள்ள இடம் பற்றிக் குறிப்பு வருகின்றது. இதுவே தமிழ் நூல்களிலும்ம் கோட்டகத் தமிழ்ச் சங்கத்திலும், தமிழகக் கல்வெட்டிலும் வரும் சிங்கைந்கர் அல்லது நல்லூராகும்… ‘(ஈழமுரசு, கனடா, 11-03-1994).

முத்துக்கவிராசர் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டின் முடிவில் அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாயமாலையும் முதலாவது சிங்கை ஆரியன் நல்லூரைத் தலைநகராக அமைத்த வரலாற்றைக் கூறும். சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துப்படி நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு வேறான இரு நகரங்கள்.

‘யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்ததென்பர் வரலாற்றாசிரியர்கள். அம்மன்னர் செகராசசேகரன், பரராசசேகரன் என்ற பட்டப்பெயர்கள் ஒருவர் பின் ஒருவர் ஒருவராகச் சூடிக்கொண்டு சிலகாலம் சிங்கை நகரிலிருந்தும் பின்னர் நல்லூரிலிருந்தும் அரசு செலுத்தினர்.. ‘(க.செ.நடராச்வின் ‘ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சி ‘, பக்கம் 6).

‘பராக்கிரமபாகுவின் கபடசிந்தையை அறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்ப்போய் விட்டமையினால் நல்லூரிலே கி.பி.1450இல் ஒரு புது நகரெடுப்பித்துச் ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரசு செய்து வந்தான்.. ‘(முதலியார் இராசநாயகத்தின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘, பக்கம் 75).

கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவரோ சிங்கையாரியராசன் (முதல் ஆரியராசன்) நல்லூரிலேயே தனது அரசிருக்கையை ஸ்தாபித்ததாகக் கூறுவார்.

இவ்விதமாக நல்லூர் பற்றியும் சிங்கைநகர் பற்றியும் நிலவுகின்ற இருவேறான கருத்துக்களில் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம், க.செ.நடராசா போன்றோர் கருதுவது போன்று நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு நகரங்கள் என்பதே ஏற்கக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு ஆதாரங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

1. கேகாலையில் கொட்டகமா என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது.

‘..கங்கணம் வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயயக்கை மேற்றிலதம் பாரித்தார்- பொங்கொலி நீர்ச்சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள் மடமாதர்தாம்… ‘.

இவ்வெண்பாவில் ‘பொங்கொலிநீர்ச் சிங்கைந்கராரியர்.. ‘ என சிறப்பித்துக் கூறப்படுவதுபற்றி முதலியார் செ.இராசநாயகம் பின்வருமாறு கூறுகின்றார்:

‘..இச்சிங்கைநகர் அடியடியாகப் பலவாரியச் சக்கரவர்த்திகளுக்கு மகோன்னதவிராசதானியாகவதற்கு முதன் முதலடியிட்டவன் இவ்வுக்கிரசிங்கனே. ‘பொங்கொலி நீர்ச் சிங்கை நகர் ‘ எனச் சிறப்படை கொடுத்து விதந்தோதப்பட்டிருப்பதால், சிங்கை நகர் பொங்கியெழும் திரையொலியையுடைய சமுத்திரக் கரையோரமென்பது நிதர்சனமாயிற்று. அவ்வாறமைந்துள்ளவிடம் வல்லிபுரக் கோயிலைச் சார்ந்த கடலோரத்தில் மணற்றிடரிற் புதைந்து ஆங்காங்கு கிடக்கும் அனேக பாரிய கட்டடங்களாலும் வலியுற்று வெலிவுற்று உறுதி பெற்றொளிர்கின்றவென்க.. ‘

(யாழ்ப்பானச்சரித்திரம் 235-236). சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தும் இதுவே.

2. புகழ்பெற்ற முஸ்லீம் பயணியான இபின் பதூத்தா தனது குறிப்புகளில் ஆரிய மன்னனை ‘இலங்கையின் சுலதானெனவும் ‘, பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். வலிய கடற்படையையை வைத்திருந்த ஆரியமன்னர்கள் தலைநகரான சிங்கைநகரைத் துறைமுகத்திற்கண்மையில் தான் வைத்திருக்க வேண்டும். இவ்வகையில் நல்லூரைவிட வல்லிபுரமே துறைமுகப் பொலிவு மிக்கதொரு நகர்.

கைலாயமாலை நல்லூரினை ‘நல்லைமூதூர் ‘ என அழைக்கின்றது. நல்லூரின் தொன்மையினை இது சுட்டிக் காட்டுகிரது. முதலாம் இராசேந்திர சோழன் காலத்திலேயே நல்லூர் ஓர் ஆலயமமைந்த புனித ஸ்தலமாக விளங்கியதை அறிய முடிகின்றது. யாழ் கோட்டையிலிருந்து பெறப்பட்ட முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றைப் பற்றிய ஆய்வுகளை ஏற்கனவே கலாநிதி கா.இந்திரபாலா நடத்தியுள்ளார். இது பற்றிக் கலாநிதி சி.க.சிற்றம்பலம் பின்வருமாறு கூறுகின்றார்:

‘…இக்கல்வெட்டில் தானத்தை அளித்தவராக சாந்தன் காணப்படுகின்றான். நல்லூரிலமைந்த இந்துக் கோயிலுக்கு இவன் அளித்த மிருகங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன… ‘ ( ‘சிந்தனை ‘- யாழ் பல்கலைக்கழகக் கலைபீட வெளியீடு; ஆடி 1984, பக்கம் 121).

ஏற்கனவே புகழ்பெற்று விளங்கிய தொன்மை வாய்ந்த நல்லூரைச் சிங்கைநகரென அழைத்திருப்பார்களாவென்பது சந்தேகத்துக்குரியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது நல்லூரும், சிங்கைநகரும் இருவேறான நகரங்களென்பதே ஏற்கக் கூடியதாகப் படுகின்றது.

—-

ngiri2704@rogers.com

Series Navigation