தமிழ் விடுகதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

தேவமைந்தன்



தமிழக நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்றும் காலங்காலமாய் ஒருவர் ஒலிப்பிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது.
தேய்வு மறைவு அறியா இந்த நாநவில் மொழிகளைப் ‘பண்ணத்தி’ என்று அழைத்தனர் பழந்தமிழ் இலக்கணிகள். விடுகதைகளைப் ‘பிசி’ என்றும் பழமொழிகளை ‘முதுமொழி’ என்றும் பகுத்து அழைத்தனர்.

கேள்வியினால் வளரும் அறிவு என்பதுபோல், சொல்லியும் கேட்டும் வளரும் விடுகதை என்னும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்ட ஆசைப்பட்டனர் பலர். அவர்களுள் பூர்ணிமா சகோதரிகள் [1963], ரோஜா முத்தையா [காரைக்குடி 1963,1965], பண்டிதர் ஜே.கே.வேதமுத்து [1971,1975], பி.ஜி.எஸ்.மணியன் [1974] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பாசிரியராக விளங்கி 1975ஆம் ஆண்டில் வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்து பதிப்பித்தார்.
புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆய்ந்து நூலாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.
முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளை, பாலியல் தன்மை வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை தன்னனானே பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அண்மையில் அதை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964 ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற தம் நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மேலே குறிப்பிட்டாற்போல் புதுச்சேரி விடுகதைகளை முனைவர் அ. கனகராசு அவர்களும், கொங்கு விடுகதைகளை முனைவர் தி. பெரியசாமி அவர்களும் மிகவும் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர்.

“விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர்” என்று அறிஞர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் கூறிவிடுகிறார். ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது ‘நொடிவிடுத்தல்’ என்று சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. “எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!” என்பர். ஏற்புடைய விடை கூறுவதற்கு ‘நொடி விடுவித்தல்’ என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். “கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி” என்று முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.(கொங்கு விடுகதைகள், ப.iii)

மிகச் சிறந்த விடுகதைகள் சில
1. குழந்தைச் சுமை:
தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று “வருத்தம் இலாத சுமை – அது என்ன?” என்று கேட்டோமானால் உடனே ‘குழந்தைச்சுமை’ என்ற விடை வரும்.
கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, “காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?” என்று கேட்டால் அந்த விடை கிடைக்கும்.
புதுச்சேரிச் சிற்றூர்களில் “சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது – அது என்ன?” என்று கேட்டால் ‘குழந்தை’ என்ற விடை வரும்.
இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ”சின்ன மச்சான் குமிய வச்சான்” என்பது பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.

2. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு:
புதுச்சேரிச் சிற்றூர்களில் வழங்கப்படும்,
“பச்சைப் பச்சை டாக்டர்
எங்க டாக்டர்
குண்டு குண்டு டாக்டர் எங்க டாக்டர்
வெள்ள வெள்ள டாக்டர்
எங்க டாக்டர் – அது என்ன?”
என்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பைக் குறிப்பதாகும்.
கொங்கு நாட்டுச் சிற்றூர்களில்,
“ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு இவளெக் கட்டி
கொஞ்சி விளையாடக்
கொழுந்தியாளக் கட்டி”
என்று இது குறிப்பிடப் பெற்றாலும், புகையிலையோடு இம்மூன்றும் போடப்பெற்றால் என்ன ஆகும் என்பதற்கு,
“ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு மகளெக் கட்டி
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையா*ளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து
நாசமாப் போயிட்டாங்க – அது என்ன?”
[*நங்கையாள் = அண்ணனுக்கு மனைவி; கணவனின் அக்காள்; மனைவியின் அக்காள்]
வேறொரு இணைப்பு விடுகதை உள்ளது.
புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
“ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட் லேலோ – அது என்ன?”
என்று கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சுட்டப்பெறுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
“உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது – அது என்ன?”
என்ற விடைக்குரியதாகிறது.
தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
“சின்ன சிறுக்கியும்
சின்ன பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்த்தவர்க்குச்
சென்னப் பட்டினம் பாதி – அது என்ன?”
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக்கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முதன்மை இருந்திருக்கிறது.
இன்னும் விரிவாகவும் பாலியல் விடுகதைகள் தொடர்பாகவும்[பாலியல் விடுகதைகள் 2,3ஆம் எண்ணிட்ட புத்தகங்களில் மட்டும் உள்ளன] இந்தப் பழமொழிகளைக் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் புத்தகங்களைப் பாருங்கள்:
1. டாக்டர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை- 600 113.
2. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள்
வாழ்வியல், அம்பிகா பதிப்பகம், பெரிய காலாப்பட்டு, புதுச்சேரி- 605 014.
3. முனைவர் தி. பெரியசாமி, கொங்கு விடுகதைகள், தன்னனானே பதிப்பகம், 14, முதல்
குறுக்கு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.

karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்