கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

பித்தன்


திரு.அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன்.

புதிதாக ஒன்றும் இல்லை. இதுவரை அவர் எழுதிய எதிர் வினைகளையே சுருக்கியிருக்கிறார். குறிப்பாக 2 கருத்துக்களையே வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒன்று, சமஸ்கிருதம் தேவையான மொழி என்று யாரோ எப்போதோ சொன்னவைகள். (விவேகானந்தர், நாராயண குரு, அம்பேத்கார் etct..etc..)

இரண்டாவது, பெரியாரின் கருத்துக்கள் மோசமானது என்பது, கூடவே வேற்று மத காழ்ப்புணர்ச்சி. அவ்வளவுதான்.

(இப்போது முதல் கட்டுரையின் அடிப்படையிலிருந்தே மிக விலகிவிட்டார். [சமஸ்கிருதம் பற்றிய] )

சமுதாயக் காரணங்களுக்காக தான் சம்ஸ்கிருதம் வேண்டுமெனில் நியாயமான ஒரு காரணத்தையாவது கூறுங்கள் என்று கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. ஒரு காரணமும் கூறவில்லை. அம்பேத்கார் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னர் என்று எதையாவது சொல்லிக்கொண்டிருப்பது. எவர் சொல்லியிருந்தால் என்ன, இப்பொது என்ன தேவை வந்து விட்டது என்று ஒரு நியாயமான காரணத்தைக் கூறட்டும். பிறகு அதைப்பற்றி ஆராய்ந்து முடிவு செய்யலாம். அவர்கள் கால கட்டத்தில் என்ன காரணங்களுக்காக சொன்னார்கள் என்று நாம் யூகம் தான் செய்யமுடியும். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. இந்திய துணைக்கண்டம்தான். அதில் பலவேறு நாடுகள். தமிழ் பேசுவதால் தமிழர்கள் என்று ஒத்துக்கொண்டாலும், பாண்டிய நாட்டினர், நாங்கள் சோழ நாடு என்று கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஒற்றுமையாக இருந்திருக்கிறோம்! சுதந்திரத்தின் போது, படேல் முயற்சியால் இணைந்து உருவான நாடுதான் இந்தியா. எனவே அதற்குமுன் சொன்ன காரணங்கள் இப்போதும் பொருந்தவேண்டிய அவசியமில்லை. இப்போது சமஸ்கிருதம் படிக்கவேண்டிய கட்டாயமோ, காரணமோ கூட இல்லை. சமஸ்கிருதம் இல்லாமலே, ஏன் எந்த ஒரு பொதுவான மொழியும் இல்லாமலேயே இந்தியா என்றும், இந்தியர்கள் என்றும் ஒற்றுமையாகத் தான் இருந்து கொண்டிருக்கிறோம். பின் என்ன கருமத்திற்கு சமஸ்கிருதம் தேவை என்று சொல்லித் தொலைத்தால் பரவாயில்லை. அதைவிட்டு விட்டு புலம்பிக்கொண்டிருந்தால் என்ன செய்ய ?

‘தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் பரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ‘ என்று எழுதியிருக்கிறார். இந்த ஒரு சான்றே போதும் அது தமிழர்களுக்கானது இல்லை என்று அறிய. தமிழர்களின் வேள்வியாக இருந்தால் ஏனய்யா, ‘அந்தணர் வேள்வி ‘ என்று பிரித்து எழுதவேண்டும் ? தமிழர் வேள்வி மட்டுமல்ல, அந்தணர் வேள்வியும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லியிருப்பதே, வேள்வி மட்டுமல்ல, அந்தணர்களும் தமிழர்கள் இல்லை என்று தெளிவாக சொல்லியிருப்பதற்கான சான்று. நன்றி. என் கருத்துக்கு சான்றாகவே அவர் பாடல்களை எடுத்துக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். எப்படி, இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார் என்று விளங்கவில்லை!

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலோ, எந்த இனத்தவரோ சம்ஸ்கிருதத்தை பேசுகிறார்களா ?

இல்லை. எனவே அது-சொல்லப்போனால்- எந்த இந்திய மாநிலத்தவருக்குமானதல்ல. என்று கூறியிருந்தேன். ஒரு விளக்கமும் இல்லை. ஏனெனில் அதுதான் உண்மை.

ஆரிய, திராவிட கருத்துக்களை ஒத்துக்கொள்ள மாட்டாராம். ஆனால் ‘ஆரிய இனம் என்பதற்கு அறிவியல் அடிப்படை இல்லை ‘ என்று யாராவது ஒரு ஐரோப்பியர் சொன்னால் அதை மட்டும் ஒத்துக்கொள்வாராம். செலக்டிவ் அம்னீஷியா எப்படி முத்தி விட்டது பாருங்கள்! ‘ஐரோப்பியர்கள் வந்து சொல்லவேண்டுமா. சதவிகித அடிப்படையில் இனப் பரவலைப் பார்த்தாலே தெரிகிறதே, அந்தணர்கள் விரவி வந்தவர்கள் என்று ‘, என்றும் கூறியிருந்தேன். அதற்கு ஒரு விளக்கமோ, பதிலோ இல்லை. பழைய பல்லவியாக ஐரோப்பிய இனவாதம் என்று புலம்பல்கள். கிறிஸ்தவ மதத்தினரின் மேல் அவதூறுகள். அவர்கள் மதத்தை அவர்கள் பரப்புகிறார்கள். இதிலென்ன கீழ்த்தரம். ‘தெருவோர மூன்றாந்தர கிறிஸ்தவ பிரசாரகர்கள் ‘ என்று சொல்லும்போதே அவர் மனத்திலுள்ள, வக்கிரங்களும், பிறமத வெறுப்புக்களும் தெரிந்துவிடுகிறது.

சங்கராச்சாரிகளும், இராமானுஜர்களும் கூட தெருத் தெருவாக பிரசாரம் செய்தவர்கள்தான் என்பதை மறந்துவிட்டார் போலிருக்கிறது. இப்படி, வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பவர்களுக்கு, பெரியார் புரியாததில் ஆச்சரியமில்லை.

கிறிஸ்தவ பிரசாரகர்களின் கருத்தை விற்றுப் பிழைத்தார் என்று பெரியாரைப் பற்றி சொல்கிறார். பெரியார் சொன்னது இந்து மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளைப் பற்றியே. அவைகளை மற்ற மதத்தினர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

எனவே பெரியார் சொன்னதைத்தான் மற்றவர்கள் விற்றுப்பிழைக்கிறார்கள். மேலும் இப்படியேல்லாம் அவதூறு வரக்கூடாதென்றுதான் தி.க. அரசியலிலேயே ஈடுபடுவதையும் அவர் தடுத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால், மிக எளிதாக ஆட்சிக்கு வந்திருக்கலாம். சமூகத்தொண்டு புரிபவர்கள் ஆட்சி, அதிகாரம் எதையும் விரும்பாதவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்னோடி.

சமஸ்கிருதம் படிக்க, இப்போது அவசியமான காரணங்களைத் தெரிவிக்கும்வரை, சமஸ்கிருதம் யாரும் படிக்கத் தேவை இல்லை என்பதோடு, அது எந்த மாநிலத்தவருக்குமான மொழியுமில்லை என்ற நிலைப்பாடே இருக்கும்.

****

போனவாரத்திற்கு முந்தைய வாரம் ஒருவர், தீவிரவாதத்திற்கும், சமூக குற்றவாளிகளுக்குமான வேறுபாடு பற்றிக் கேள்வி எழுப்பியிருந்தார். போன வாரம் எழுத முடியவில்லை. இப்போது கூட குறிப்பாக சில விளக்கங்களை மட்டும் தர முனைகிறேன். முதலாவதாக, சிலுவைப்போரில்லையா, எப்படி இஸ்லாம் மட்டும் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக நான் சொல்கிறேன் என்பது. என் கட்டுரைகளை ஒழுங்காக படியுங்கள் ஐயா. ‘நவீன காலத்தில் ‘ என்று இதற்காகத்தான் நான் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அறைகுறையாகப் படித்து விட்டு புலம்பாதீர்கள்.

சரி, இனி சற்று விரிவாக. தீவிரவாதம் எது ? தீவிரவாதி யார் ? சமூகக் குற்றவாளி யார் ? போர்கள் தீவிரவாதம் இல்லையா ? கொலை தீவிரவாதமில்லையா ? என்னைப் பொறுத்தவரை எல்லாவிதமான வன்முறைகளும் தீவிரவாதம்தான்.

காந்தியின் அஹிம்சையே என் கருத்து. (நான் சொல்வது பாசாங்காக தெரிபவர்கள், காதை மூடிக்கொள்ளவும்!).

எல்லா வன்முறையும் தீவிரவாதமெனில், போர்கள், குற்றவாளிகள், தீவிரவாதிகள் என்று எப்படி பிரிப்பது ?

இரண்டு நாடுகளுக்கிடையேயான சண்டைகள், ஒரு இடத்தைப்/நாட்டைப் பிடிப்பதற்கு ஏற்படும் சண்டைகள் போர்களாக கருதப்பட்டு வந்துள்ளது. இது எளிதாக விளங்கிகொள்ளக் கூடியது. சிலுவைப் போர்களை இந்த வகையில் சேர்க்கலாம்

குற்றவாளிக்கும், தீவிரவாதிக்குமான வித்தியாசம், கண்டுகொள்ள கொஞ்சம் கடுமையானது. நுட்பமானது. சொத்து தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்கிறார்கள். அந்த செய்கையும் வன்முறைதான். என்றாலும் அவர்கள் தீவிரவாதிகளாக கருதப்படுவதில்லை. எந்த காரணமுமில்லாமல், பாராளுமன்றத்தில் குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகளாகக் கருதப்படுகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், சட்டம் தன் வேலையை ஒழுங்காக செய்தால், அதன் மூலம் தண்டிக்கப்பட முடியுமானால் அவர்கள் சமூகக் குற்றவாளிகள்தான். சட்டம் ஒழுங்காக வேலை செய்தும், பிடிபடாமல், தண்டிக்கப் படமுடியாமல், ஒளிந்துகொண்டு, கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரவாதிகளாகக் கருதப்படுகிறார்கள். நீங்கள் சொன்ன எல்லா காட்சிகளும் – பாதிரியாரைக் கொன்றது, மசூதியை உடைத்தது உட்பட – எல்லா சம்பவங்களையும் சட்டம் ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் தடுத்திருக்கலாம் அல்லது அதற்கு காரணமானவர்களைத் தண்டித்தாவது இருக்கலாம். ஆனால், தாவூத் இப்ராஹிம்களையும், பின் லேடன்களையும், காஷ்மீரில் அன்றாடம் குண்டு வைத்துக்கொண்டிருப்பவர்களையும், சட்டம் ஒழுங்காக வேலை செய்தாலும் தண்டிக்க முடிவதில்லை.

அவர்கள் எல்லோருக்கும், ஆதரவளித்து, ஆயுதங்கள் அளித்து, ஒளியவைத்துக்கொண்டிருப்பது யார் என்று நான் சொல்லத்தேவையில்லை. நான் முன்பே சொன்னதுபோல நம் நாட்டில் சட்டம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதே காரணம். அது ஒழுங்காக வேலை செய்ய நாம் எல்லோரும் பாடுபடவேண்டும்.

தலிபன்கள் புத்தர் சிலையை உடைத்ததற்கும், இந்துத்வா வெறியர்கள் மசூதியை உடைத்ததற்கும் ஒரு வித்தியாசமுமில்லை. பிறமத காழ்ப்புணர்ச்சிதான் காரணம். அதைதான் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னான விளைவுகளை நான் சொல்லவில்லை. மத சகிப்புத்தன்மை இருந்திருந்தால் இரண்டுமே நடந்திருக்காது என்பதே என் வாதம். தலிபன்களை யாரும் கேட்கவில்லை என்பதை ஒரு வாதமாக சொல்லாதீர்கள். காட்டுமிராண்டிகளாக இராணுவ ஆட்சி செய்துகொண்டிருப்பவர்களிடம் போய் யார் கேட்கமுடியும். பாபர், கோவிலை இடித்திருந்தால், அப்போதே கேட்டிருக்கவேண்டும் என்ற வாதத்தைப் போன்றது இது. மன்னராட்சியில் மன்னரைக் கேட்க முடியுமா ? கேட்கக்கூடிய நிலமையில் பாபர் இருந்திருந்தால், அவர் நாட்டைப் பிடித்து ஆட்சிசெய்திருக்க முடியுமா ? மேலும் புத்தர் சிலையை உடைத்ததை யாரும் கேட்கவில்லை என்று சொல்வது ஒத்துக்கொள்ளக்கூடியதல்ல. மத சகிப்புத்தன்மை இருந்தால் பிற மதத்தினரின் மனம் புண்படாதபடி நாமாகவே நடந்துகொள்வோம். நடந்து கொள்ளவேண்டும்-அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி – என்பதே என் கருத்து.

****

ஜெயமோகன் மற்றும் காஞ்சனா தாமோதரன் அவர்களின் இலக்கிய நிலைபாடுகள் பற்றிய ஸ்ரீதரனின் கட்டுரை அருமை.

ஜெயமோகனுக்கான என்னுடைய முந்தைய கட்டுரை, ஒரு பாமர வாசகனின் கருத்தோட்டத்தில், சாதாரணமாக எழுதப் பட்டது. இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக, நல்ல நடையில் எழுதப்பட்டிருக்கிறது. வாசிப்பு என்பது மறுப்பதிலிருந்தே தொடங்குகிறது என்ற ஜெயமோகனின் கருத்தை மிக அழகாக மறுத்திருக்கிறார். கருத்தியல்களை ஆராய இலக்கியம் மட்டும்தான் ஊடகமா என்றும் கேட்டிருக்கிறார். இலக்கியத்தை ஜெயமோஹன் சொல்வதுபோல் கடுமையாகத் தான் அணுகவேண்டுமா என்ற கேள்வியும் இயல்பாகவே நமக்கு எழுகிறது. விவேகானந்தரின் கருத்துக்களும், பெரியாரின் கருத்துக்களும், ரஜனீஷ் கருத்துக்களும் எனக்குப் பிடித்திருக்கின்றன. ஒன்றையொன்று இவை எதிர்த்துக்கொண்டிருந்தாலும், என் வாசிப்பில் எந்த இடையூறும் இல்லை. உண்மையான வாசிப்பு விருப்பு வெறுப்புக்களைக் கடந்தது என்பது தான் உண்மை. தனி மனித வேறுபாடுகளை, வெறுப்புக்களை வாசிப்பில் புகுத்துவதால் தான், வாசிப்பு மறுப்பதிலிருந்தே தொடங்குகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இலக்கியவாதிகளின் பார்வையிலேயே, அவர்களின் மோசமான நடவடிக்கைகளுக்கு சப்பை கட்டு கட்டுவதாகவே ஜெயமோஹனின் கட்டுரை இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். ‘ஜெயமோகனின் தன் போக்குகளுக்குக் காரணம் சொல்வதுபோன்று அவர் கட்டுரை இருக்கிறது ‘ என்று கூறுவதன் மூலம், ஸ்ரீதரனும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. ‘கருத்தியல்வாதம் தனிப்பட்ட சண்டையில் இறக்கிவிடும்போது சண்டையில் கவனம் செலுத்துவதைவிட கருத்தியல் முரணை ஆய்வது திறமானது. இரண்டையும் குழப்பிப்பார்ப்பது தீர்க்கமாகாது ‘ என்று ஸ்ரீதரன் எழுதியிருப்பது, ‘உங்கள் கருத்துக்கள் போதிய பலத்தில் இல்லாததால் தான் அதற்கு பலம் சேர்க்க நீங்களே சண்டை போடுகிற நிலை வருகிறது. ‘ என்று நான் குறிப்பிட்டிருந்ததின் நீட்சியாகவே காட்சியளிக்கிறது.

‘ஒரு படைப்பைப் வாசிக்கும்போது அதை மற்ற படைப்புக்களுக்கு மேலோ அல்லது கீழோ வைத்துதான் வாசிக்கிறோம் ‘ என்ற ஜெயமோகனின் கருத்து ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல. ஒன்றை வாசிக்கும்போதே மற்றதோடு ஒப்பீடு செய்ய தொடங்கிவிட்டால் அந்த வாசிப்பே முழுமையில்லாமல் போய்விடும். ‘கருத்தியல் தளங்களில் சின்னது, பெரியது, சிக்கலானது, எளிதானது என்பதற்கான முழுமையான அளவுகோல் இல்லை. எனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட வேண்டியவைகள்தான் ‘ என்றும், ‘உண்மையான ஞானத்தேடலில் சக எழுத்தாளரிடம் பொறாமையோ எரிச்சலோ வராது ‘ என்றும், ஸ்ரீதரன் சொல்லியிருப்பது ஜெயமோகன் போன்றோரின் சிந்தனையை தூண்டட்டும்.

****

ஸ்ரீதரனின் கட்டுரைக்கும் உடனடி கேலியாக ஒரு கடிதம் வரும் என்றும் எதிர்பார்க்கலாம். (அனேகமாக திரு. சோதி பிரகாசத்திடமிருந்து!). முகம் தெரியாத யாரையோ, ‘சுரேஷின் நண்பரே வெளியே வாருங்கள் ‘ என்று அழைக்கிறார் அவர். கருத்துக்களோடு கருத்துக்களை மோதவிடத் தெரியாமல் முகம் தேடும் இன்னொரு அவலம். தமிழகத்தில் ஒரு பத்தாயிரம் எழுத்தாளார்களாவது இருப்பார்கள். குழுக்களில் இணைந்து, குழுக்களாகப் பிரிந்து கேவலமாக சண்டையிட்டு

அவதூறுகளைப் பரப்பி, முகம் பார்த்து திட்டி போரடித்துவிட்டது போலிருக்கிறது. எனவே புதிதாக யாராவது முகம் தெரியாதவர்கள் கிடைப்பார்களா என்று ஒரு எதிர்பார்ப்பு. குழு மனப்பான்மை எவ்வளவு வேரோடியிருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். அவரது ‘திறனாய்வுக் கூட்டம் ‘ கட்டுரையே இன்னுமொரு உதாரணமாக இருக்கிறது.

ஜெயமோகன் மட்டும் ஞான பிழம்பாக அவருக்கு காட்சி தந்திருக்கிறார் போலும்! மற்ற எழுத்தாளர்கள் எல்லாம், தேவையற்றவர்கள் போலும். விட்டால் ஜெயமோகன் தான் அடுத்த சங்கராச்சாரி என்று காலில் விழுந்துவிடுவார்கள் போலிருக்கிறது. அல்லது அடுத்த கடவுள் என்றே சொல்லி கோவில் கட்டினாலும் கட்டிவிடுவார்கள். (நடிகைக்கே கோவில் கட்டிய நாட்டிலிருப்பவர்கள் நாங்கள், இலக்கியவாதிக்கு கோவில் கட்டக்கூடாதா என்று கேள்வி கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.) ஜெயமோகன் சொல்லிவிட்டால் அதற்கு மறு வார்த்தையே கிடையாது. அவர் கருத்தை மறுத்து யாரும் எதையும் எழுதிவிட கூடாது. அவர் முகம் தெரிந்தவராக இருந்தாலும் சரி, முகம் தெரியாதவராக இருந்தாலும் சரி, அவர் எதை எதை எழுதியிருக்கிறார் என்று முதலில் ஒரு பட்டியலைப் போடவேண்டும். ஏனெனில், ஒரு கருத்துக்கு மறு கருத்துக் கூறவோ, மறுத்துக் கூறவோ கூட, இன்னின்ன படைப்புக்களை படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்று தகுதி வைத்திருக்கிறார்கள்!! ஒன்றுமே எழுதாதவரா, ‘வாயே திறக்காதே. ஒன்றுமே எழுதாமல் ஜெயமோகன் எழுதுவதை விமர்சிக்க வந்துவிட்டாயா ? என்ன தகுதி இருக்கிறது(!) ‘ என்று திட்டுவார்கள். எழுதி அவர்கள் நிர்ணயித்த தகுதிகள் (அதாவது என்ன எழுதினாலும் ஜெயமோகன் எழுத்தைத் தவிர மற்ற எல்லாமே தகுதியற்றவை என்பதுதான் ரகசியமே!) இல்லாவிட்டலும் திட்டு. ‘வெளியே வந்து முகதரிசனம் காட்டு, அர்ச்சனை வாங்கிக் கொள். ‘ அந்த தகுதி இருந்துவிட்டாலோ, தொலைந்தீர்கள். இன்னும் அதிக பட்ச வசைகள் கிடைக்கும்!! ‘நீ என்ன எழுதி கிழித்துவிட்டாய். நீ என்ன எழுதியிருந்தாலும், அது எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருந்தாலும் அது ஒன்றும் இலக்கியமில்லை. எங்கள் ஆதர்ச எழுத்தாளர் எழுதியிருப்பது ஒன்றுதான் இலக்கியம்! ‘ etc etc.. ‘

இதில் வேடிக்கை என்னவென்றால், வைரமுத்துக்களும், அப்துல் ரகுமான்களும் கலைஞரை போற்றுவது பொறுக்காமல்,

தனி நபர் துதிபாடலை எதிர்ப்பவராகக் காட்டிக்கொள்ளும் ஜெயமோகனுக்குத் தான் இப்படிப் பட்ட துதிபாடிகள் அதிகமாக இருக்கிறார்கள்! அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையை செய்கிறார். நல்ல படைப்புக்களை உருவாக்குகிறார். இந்த துதிபாடிகளால்தான் அவருக்கும் இன்னும் கஷ்டங்களும் கெட்ட பெயர்களும் வருகிறது என எண்ண தோன்றுகிறது. தனிநபர் துதியை எதிர்த்து கலைஞரையும் வைரமுத்துக்களையும் சாடுவதற்கு முன்னால், ஜெயமோகன் தன் காலில் விழுந்து துதிபாடுபவர்களை முதலில் கவனித்தால் நன்றாக இருக்கும்!

விமர்சனங்களுக்கும் இலக்கிய திறனாய்வுக்கும் வித்தியாசமிருக்கிறது. ஒரு படைப்பை படித்தவுடன் உங்களுக்கு தோன்றுவதை சொன்னால், அல்லது உங்கள் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எனக்கு ஒரு கருத்து தோன்றினால் அது விமர்சனம். யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அதற்கு ஒரு தகுதியும், புண்ணாக்கும் தேவையில்லை.

மாறாக இலக்கிய திறனாய்வு என்பது, தமிழில் முதுகலை பட்டத்திற்கோ, முனைவர் பட்டம் வாங்கவோ முயல்பவர்கள் செய்வது போன்ற முறையான ஒப்பீடு. இன்னின்ன காரணங்களால், இது மற்றப் படைப்புகளிலிருந்து இங்ஙனம் வேறுபடுகிறது. இந்த கருத்தோட்டம் சரி. இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது இப்படி விளக்குவதாக இருக்கிறது என்று ஆய்வு செய்து விளக்குவது. இதற்கு அந்த படைப்பு எதிர்நோக்கும் பகுதிகளைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாம். அது நியாயமான எதிர்பார்ப்பு. அதை விட்டுவிட்டு சாதாரண விமர்சனத்துக்கெல்லாம் ‘என்ன தகுதி இருக்கிறது ? ‘ என்று வினவுவது முட்டாள்தனம். மரத்தடி இணைய தளத்தில் ஜெயமோகனிடம் ஒருவர் கேட்கிறார், ‘ஒரு படைப்பை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் ? ‘ என்று. அதற்கு அவரின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது, ‘ஒரு படைப்பை திறனாய்வு செய்ய.. ‘

கேட்பது விமர்சனம் பற்றி, அவர் பதில் திறனாய்வு பற்றி. ஒன்று ஜெயமோகனுக்கு விமர்சனத்துக்கும் திறனாய்வுக்குமான வித்தியாசம் தெரியவில்லை. அல்லது அவர் தன் படைப்புக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கவேண்டும். விமர்சனத்தை திறனாய்வாக்கியதன் மூலம் பெரும்பானமையான வாசகர்களின் விமர்சனங்களை ‘தகுதி இல்லை(!!) ‘ என்று எளிதாக ஒதுக்கிவிட முடியுமல்லவா. சிந்திக்க வேண்டிய விசயமல்லவா.

– பித்தன்.

piththaa@yahoo.com

Series Navigation