எச்சம்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ரா. கணேஷ்


ஈமெயிலில் தொடங்கி
இன்டெர்னெட்டில் தொடர்ந்து
விவாகரத்தில் முடிந்தது
அவர்களின் திருமணம்

காதருந்த காலணிகளாய்
ரேகை தொலைத்த விரல்களாய்
காகம் இட்ட எச்சம் போல
இரண்டு குழந்தைகள் மட்டும்
மிச்சமாய்….
கனவாய் போன பந்தத்தின்
சாட்சியாய்….

-ரா. கணேஷ்
ganeshadhruth@yahoo.co.in

Series Navigation

ரா.கணேஷ்

ரா.கணேஷ்

எச்சம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

எம்.ரிஷான் ஷெரீப்“அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் “.

வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.

குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.

பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம் தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.

வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள் , முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.

கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து ” என்னாச்சுப்பா? ” என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.

உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான்.குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.

குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.

அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.

அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.

அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எரிந்துகொண்டேயிருந்தன.

கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.

மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.

தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.

‘வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை’ என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.

அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது.தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.

அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட… தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.

குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.

வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.

குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள் ? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.

கண் திறந்து பார்த்த அப்பாவிடம் ” உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா? ” எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.

” அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம் ”

இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் ‘தூ’ எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.

மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.

” அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும் ”

அப்பா சொல்வதைக் கேட்டவாறே,

” இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே…இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க ? ” என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


rishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

எச்சம்!

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


பனியுதைக்கும் அதிர்வில்
விறைத்தொதுங்கிய உணர்வும்
இளமைக்கு விடைகொடுக்கும் உடலும்,
இழப்பினது கனவுகளுமாக
இந்தக் குளிர் காலம்.

சற்று முன்
நிலாவின் ஒளியை
நுகர்ந்த என் மனது மெளனித்துக் கிடக்கிறது!

மாலை நேரத்துப் பொலிவுகளை
சிறார்களின் துள்ளலிலும்,
சிரித்தொதுங்கும் ‘அம்மாக்களின் ‘
விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை!

இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு
எந்தப் பொலிவுமில்லை!
இது
கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில்
மெளனித்த காலத்தின் அதிருப்தியாய்
மனதைக் கிளறிவிடும்

கார்த்திகையில் விளக்கிட்டு
தேவாரம் பாடிய மனதும்,
வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய
எனது தீபமும்
நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு.
அந்த மனதின்
நினைவுத் தோப்பில்
தீராத வடுவாய்
நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம்.

தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும்
பேசவெழுந்த நாவின் முனகலும்
குருதியின் அதிர்வில்
நிலைமறுத்திருக்கு
என் தேசத்து முற்றத்தில்.

இருண்டவெளியின்
நெடும்பாதையில்
தேசத்தை நோக்கிய
நெஞ்சு
வனப்பிழந்து கிடக்க,

பார்த்துப் பழகிய பூமியும்
பாய்விரித்தப் படுத்த முற்றமும்
பாட்டுச் சொன்ன குயிலும்,
பக்குவமாய் கட்டிய வீடும்
பால் குற்றிய ஆலமரமும் தொலைத்து
சிலநொடியில்
முளையெறிந்த ‘தேசக் கனா ‘
என்னைப்
பரதேசம் அனுப்பியது ஒரு காலம்.

இன்றோ
விழித்திருக்கையில் மரணமும்
தூக்கத்தில்
ஆத்தையும்,அடுப்படியும்
பிடரிக்குள் வருகின்றன.

உடல்வியர்க்கும்
சூடான வானத்தையும்
சுகமாய்த் திரியும் மெல்லிய தென்றலையும்,
மேனியெங்கும் பட்டுவிலகும் வண்டுகளையும்
கால்வலிக்கத் துணைவந்த
தோழமையையும்-
தோளில் தொங்கிய துணிப்பையையும்
எங்கோ தொலைத்துவிட்டேன்!

–ஈ-ஈ–@

எவருமறியா
இந்தப் பொழுதுகளின்
‘எச்சில் இரவுகள் ‘
எதற்கெடுத்தாலும் வெருட்டிக் கொண்டிருக்கு.

குளிர் ஒரு புறமும்,
புறத்தியான் என்பதாய்ப்
புகல் தேசமும்
பால்யப் பருவத்து
மார்கழித் ‘திருவெம்பாவை ‘யையும்
திருநீற்று நெற்றியையும்
சங்கின் ஒலியையும்
உணர்வின் ஒரு மூலையுள் துரத்துகிறது.

ஆத்தைபிடித்து புதிய அடுப்பும்
அப்பன் சூடடித்த சிவப்பரிசியும்
தையில் பொங்க,
அண்ணன் சுட்ட வெடிகளும்,
பூந்திரிகளில்
பூத்த எங்கள் மனமும்( பன்மையொழிந்த ஒருமை 😉 .)
அன்றைக்குத் ‘தம்பி ‘,தங்கை,
அக்கா,அண்ணன் உறவிருந்த தடயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கு!

ஸ்ரீஸ்ரீஸ்ரீ~

கனவு வாழ்வு
குருதியுறையும்
குளிர் பொழுதில்
தொண்டைக் குழியில்
சிக்கித் தவிக்கும் போசனத்து எச்சமாக…
ப@

:-0

ப.வி.ஸ்ரீரங்கன்
22.11.2005

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்