வட்டமேசை

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

குசும்பன்


(புளோரிடாவின் கவர்னர் ஜெப் புஷ் , வெள்ள புயல் நிவாரணத்திட்டமிடலை தமிழ்நாட்டில் நடத்துகிறார்.)

ஜெப்: (வட்ட மேசையாளர்களை பார்வையிடுகின்றார். பின்னர் ஒருவரைப் பார்த்து திடுக்கிட்டு) ப்ளோ மீ டெளன். உங்களை யெஸ்டர்டே பார்த்த மாதிரி இருக்கே. நீங்க அவருக்கு க்ளோனா சூட்டுல இருக்கீங்களா ?

சூட்மணி: நாங்க எங்க இருப்போம்ன்னு எங்களுக்கே அடுத்தவங்க சொன்னாத்தான் தெரியும். ஆமாம் ப்ளோரிடாவுல நிறைய மரங்கள் விழுந்துடுச்சாமே ? உண்மையா ?

ரைஸ்: அட ஆமாங்க யாரோ வெட்டிப்போட்டாப் போல இருக்குதுங்க

சூட்மணி: என்ன அங்கேயும் மரத்தை வெட்டிப் போட்டுட்டாங்களா ? (என்று கூவியபின் நாக்கைக் கடிக்கின்றார்) சரி சரி சொல்லுங்க சட்டு புட்டுன்னு மரக்கன்றுகளை நாங்க சப்ளை பண்றோம். அப்புறம் வெள்ளத்தக் கட்டுப்படுத்துங்க. இல்லேன்னா தொழு நோய் போல தொத்து வியாதிங்க பரவ வாய்ப்பிருக்கு.

ஜெப்: (தொழு நோய் தொத்து நோயா கடவுளே…) ஐயன்மீரே இந்த வெள்ளக் கட்டுப்பாடு பற்றி

தருமா: கற்புள்ள பெண்டிர் வாழும் ஊரில் மழை அதிகமாகப் பெய்யத்தான் வேண்டும். அதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது வெள்ளம் அதிகமென்பது ஏனென்று புரிகிறதா ?

ரைஸ்: (புரியாமல் தலையாட்டுகின்றார்) ஏங்க பம்பாயிலும் கொஞ்ச நாளைக்கு முன்னால வெள்ளம் வந்ததே…

தருமா: கற்போரை கற்போரே காமுறுவர். கற்பென்பது வெறும் இந்துத்வா தத்துவமில்லையென்பதையும், அது உடைமை சார்ந்த உறவென்பதையும் இது நிரூபிக்கின்றது

இல்லை.கணேசன்: கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக எதையும் பேசிவிடக் கூடாது

மாந்தோப்புசாமி: யோவ் இப்ப நீ எந்தக்கட்சி ?

ரம்ஸ்பெல்டு: (ரகஸியமாக தன் டாமிடம்) சொல்லாம கொள்ளாம இப்படியே ஓடிப்போயிடலாமா ?

ஜெப்: ஏங்க யாருமே அஜெண்டாவைப் பத்தி கவலைப்படாம ஏதேதோ பேசறீங்களே. மண்டை காயுதுங்க

வெற்றிகாந்த்: இவங்க யாருமே பாயிண்டைப் பத்தி பேசமாட்டாங்கய்யா. அதுனாலதான் நான் களத்துல இறங்கியிருக்கேன்

(அமெரிக்க டாம் நிமிர்ந்து உட்கார்கின்றது)

வெற்றிகாந்த்: தமிழ்நாட்டுல மொத்தம் ஓடுற நதிகள் 123. துணையாறுகள் 234. கிளையாறுகள் 345. கம்மாக்கள் 456. ஓடைகள் 567. சிற்றோடைகள் 678. ஆனா சம்மர்ல எதிலேயும் தண்ணி இல்ல. நிலைமை இப்பிடி சீர்கெட்டு இருந்தாலும் பாசனத்துறை பதவிக்கு போட்டி போட தமிலன் ஆசைப்படல. ஏன் ? அந்தத் துறையில வருமானம் இல்ல. மந்திரி பதவியைக் கூட பின்கதவு வழியா வாங்குறாங்க. இங்கே நீதி, நியாயம், நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் செத்துப்போச்சி. நான் அண்ணா கிட்ட அரசியல் படிச்சவன். எம்ஜியார் கிட்ட எட்ட நின்னு பாத்தவன். ஜானகியம்மாகிட்ட ஜாக்பாட் அடிச்சவன். காமராஜரோட கலையைத் தெரிஞ்சவன். ஜெ அம்மாவுக்கு ஜே போட்டவன். கலைஞர்கிட்ட கன்னுக்குட்டியாய் நின்னவன். இன்னும்….

(அடப்பாவிங்களா இது வட்டமேசை மாநாடு மதுரை மாநாடில்ல அவருக்கு சொல்லுங்கப்பா…ன்னு மத்தவங்க புலம்ப ஆரம்பிக்கின்றனர்)

(அப்போது ராஜா ராஜானிந்த ராஜா என்ற பாடல் ஒலிக்கின்றது)

கார்ட்டிக்: (வெத்திலை குதப்பும் குரலில்) ஜெப் அவர்களே… இப்ப நான் திருந்திட்டேன். என்னப் பாருங்க. நல்லாப் பாருங்க. இதுக்கெல்லாம் ஒரு வழியிருக்கு. அதை இன்னும் 15 நாள்ல சொல்றேன்.

செண்டிலு: (கனைக்கும் குரலில்) அப்டிப் போடுங்ணே

(இந்த ஆட்டைக்கே நான் வரல்லன்னு ஜெப் கன்னத்தில் கைவைக்கின்றார். அப்போது திடுமென்று ஒரு உருவம் நுழைகின்றது)

ச்சூசாமி: நேக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சி. உங்க ஊருல வெள்ளத்துக்கு காரணம் ஜெயமோகினிதான். அவாதான் குருவாயூருக்கு குட்டி யானை கொடுத்து உங்க ஊருல வெள்ளம் வர வேண்டினாங்கோ. எனக்கு ரகஸிய நியூஸ் வந்தாச்சு. அவாளுக்கும் அல்கொசுதாவுக்கும் லிங்க் உண்டு. என்கிரிப்டட் மெசேஜ் அனுப்பினதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். இதைக் காரணமா வெச்சு ஸ்டேட் கவர்ன்மெண்ட்டை கலைச்சுடுங்கோ. அப்புறமா திருப்பதியிலே நீங்க எல்லாரும் மொட்டை போட்டுண்டேள்னா சுனாமியைக் கூட தடுத்துடலாம்…

(ரைஸ் கலவரத்தோடு தனது தலையைத் தடவிக் கொள்கின்றார். ரம்ஸ் இருக்கும் நான்கு முடியைக் கோதிக் கொள்கின்றார்)

(இன்னும் சிலர் காவடி தூக்குதல், கஞ்சி காய்ச்சி ஊற்றுதல், அலகு குத்தி தேரிழுத்தல், தீ மிதித்தல் போன்ற நவீன நாத்திக முறைகளை அமெரிக்க குழுவுக்கு சிபாரிசு செய்ய, விட்டா உடம்பை ரணகளப் படுத்தாமல் விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் பதறியபடி எழுந்து ஓடுகின்றனர். வெளியே ஏகப்பட்ட கூட்டம். ஊய் ஊய் என்று விசில் பறக்கின்றது)

கஜினிகாந்த் (தகறாறு செய்யும் மைக்குடன் போராடிக் கொண்டே எழுதி வந்ததைப் படிக்கின்றார்) ஜெப் அவர்களே… நான் விழுந்தால் குதிரை. எழுந்தால் யானை. நடந்தால் புலி (ஐயய்யோ பொடாவுல போட்டுறுவாங்களே என்று நாக்கைக் கடித்து) இல்லை இல்லை சிங்கம். ஓடினால் மான். ஆனால் நான் மனிதன் (எக்கோ எபெக்ட்). உங்கள் பிரச்சினைக்கு காரணம் இயற்கை என்றா நினைக்கின்றீர்கள் ? இல்லை இல்லை. பாவங்கள் பெருகும்போது இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. இருப்பினும் ப்ளோரிடாவிலுள்ள நதிகளையும், கால்வாய்களையும் வடக்கே ஓடும் நயாந்தாரா (அடச்சே) நயாக்ரா நதியுடன் இணைத்தால் உங்கள் பிரச்சினை ஜுஜூபியாகிவிடும். இதற்காக இப்போதே நான் ஒரு கோடி செண்ட்கள் கொடுக்கின்றேன் (கரகோஷம் விண்ணைப் பிளக்கின்றது. அமெரிக்க டாம் தப்பியோட வழியின்றி கலங்குகின்றது)

(அப்போது ஒரு பத்திரிக்கையாளர் மைக்கை ஜெப் முன்னர் நீட்டுகின்றார். பிரஸ் மீட் ஆரம்பம்)

நிருபர்: ஜெப் மாநாட்டைப் பத்தி உங்க கருத்து என்ன ?

ஜெப்: (சுதாகரித்து) சத்யமேவ ஜயதே

நிருபர்: அமெரிக்க அதிபரிடம் என்ன சொல்லப் போகின்றீர்கள் ?

ஜெப்: கற்போரை கற்போரே காமுறுவர்

நிருபர்: உங்கள் வெள்ளை அறிக்கையின் சுருக்கம்

ஜெப்: அரோகரா கோவிந்தா கோவிந்தா

(என்னதான் சொல்லு வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரன்தான்யா. என்னாமா பேசுறான் பாரு என்று வியந்தபடி கூட்டம் கலைகின்றது. அமெரிக்க டாமிற்கு கோலி சோடா தெளி(வி)க்கப்பட்டு விமான நிலையம் அனுப்பி வைக்கப்படுகின்றது)

podankho@yahoo.com

http://www.kusumban.blogspot.com

Series Navigation

குசும்பன்

குசும்பன்