சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர்


மனிதன் என்பவன் இயற்கையி;ன் ஓர் உறுப்பினன் ஆவான். இயற்கைக்கும் தமக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை நாடோறும் உற்று நோக்கி இயற்கையில் காணப்படுகிற பருப்பொருள் மற்றும் கட்புலனுக்கு உட்படாத பொருள்களின் தன்மைகளை நுகர்வு அடிப்படையிலும் ஓர் இனம்புரியாத புதிர்நிலை உணர்வு அடிப்படையிலும் அதனூடான உறவை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவே விரும்பியதை சங்கப் பாடல்கள் நன்குணர்த்தும். மேலும், தொல் பழங்குடிச் சமூகம் சிறுசிறு இனக்குழுக்களாகப் பிரிந்தும் இயைந்தும் வாழமுற்பட்டனர். புராதனப் பொதுவுடைமைச் சமூகம் சிதைந்து தனியுடைமைச் சிந்தனை இனக்குழுக்களிடையே உணவிற்காகவும் பெண்களுடனான உறவிற்காகவும் முகிழ்த்தபோது முதலில் சண்டையில் ஆரம்பித்து பிறகு பரிமாற்றம் எனும் நிலையில் முடிவுக்கு வந்தது. இப்பரிமாற்றம் நாளடைவில் பொருள்கள் நிலையிலிருந்து குலமகளிர் நிலைக்குப் பரிணாமம் பெற்றிருந்தது கண்கூடு.

இதனடிப்படையில் பல்வேறு சடங்குகள் சமூகங்களிடையே உருவாக்கப்பட்டன. மணமுறையும் உருவ வழிபாட்டு நம்பிக்கைகளும் இச்சடங்கின் பாற்பட்டு பலவித இனக்குழுக்களிடம் இவை வேர்விடத் தொடங்கின. பயன்பாடு மற்றும் புதிர்மை நோக்கில் உருவ மற்றும் அருவப் பொருள்கள் பண்டைச் சமூகச் சடங்கிற்குரியவையாகின. மேலும், சடங்கினைச் செவ்வனே நிறைவேற்ற வழிபாடு உறுதுணையாக விளங்கியது. இவ் வழிபாடு மேம்பட இயற்கையுடனான இணைப்புக் கண்ணோட்டம் பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளுள் மிகுந்த செல்வாக்கு பெற்றதும் புவிமேற்பரப்பி;ல் புலப்படும் புவியியல் கூறுகள், தாவர, விலங்குகள், வான்பொருள்கள் முதலியன குலக்குறிகளாக (வுழவநஅள) அடையாளப்படுத்தப்பட்டன. பி;ற்காலத்தி;ல் சமயம் மற்றும் சாதிப்பாகுபாடுகள் உருவாக இக்குலக்குறி வழிபாடே அடித்தளமாக அமைந்தது.

“குலக்குறி என்பது விலங்கையோ பறவையோ ஒரு பொருளையோ தங்கள் குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக அல்லது வணக்கத்திற்குரியதாக அல்லது மூதாதையர்களாகக் காண்பது என்ற வழக்கத்தைக் குறிக்கும்” என மு. கலியாணி குமாரும், “ஓர் இனக்குழு மனிதன் தனக்கு இணையாக, தன் கூட்டத்து மக்களுள் ஒருவராகக் கருதி ஒரு விலங்கையோ, பறவையையோ, தாவர வகையையோ அணுகி நடந்து கொள்வானேயானால், அது நிச்சயம் அது குலக்குறிப் பண்பாட்டிற்கே உரிய இயல்புகளில் ஒன்றாகவே இருக்க வேண்டும். கூட்டத்தின் குலக்குறி விலங்காக, பறவையாக, தாவரமாக உள்ள ஒன்றினுக்கு இடையுறு நேர்ந்தாலோ இழப்பு நேர்ந்தாலோ தன் கூட்டத்தினரில் ஒருவருக்கு எப்படி ஓடோடிச் சென்று உதவுவானோ அதனைப் போலவே அக்குலக்குறி விலங்கிற்கும் உதவ வேண்டும் என்பது நியதி.” என ஆ. தனஞ்செயனும் எடுத்துரைப்பர். ஆகவே, தோழமை உணர்வுடன் உறவுபாராட்டப்படுகிற ஓர் இனக்குழவினைச் சுட்டும் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருளே அவ் இனக்குழவின் குலக்குறி அடையாளம் ஆகும். இத்தகு, குலக்குறி அடையாளங்கள் சங்க இலக்கியத்தில் விரவிக் காணப்படுகின்றன. தற்காலத்தில் புழங்கிவரும் வேம்பு, பசு, நாக வழிபாடுகள் எல்லாம் பண்டைக் குலக்குறி எச்சங்களாகும். அதுபோல், சங்ககாலக் குலக்குறிகள் என்றதும் புன்னை மரச்சகோதரி (நற்;:172)யும், வாள்சுறா முள் வழிபாட்டுச் (பட்டின:86-87) சடங்கும் எல்லோரது நினைவிலும் காட்சியாய் பரந்து விரியும் இச்ழலில் மேலும் சில குலக்குறிகள் பற்றி அறிவது நலம் பயக்கும்.

தவிர, மனிதப் பண்பேற்றம் செய்யப்பட்டு சகோதரத்துவம் உறவு பாராட்டிய இன்னிழல் வழங்கும் மேட்டுநிலப் புன்னை (அகம்:20)யானது திதியன் எனும் குறுநில மன்னனின் காவல் மரமாக விளங்கியதையும் போர்க்களத்தில் அன்னி என்பான் அதனை வெட்டி வீழ்த்திப் பேருவுவகையுறறுப் புகழப்பட்டதை, “அன்னிக் குறுக்கைப் பறந்தலைத் திதியன் ஃ தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி ஃ புன்னை குறைந்த ஞான்றை பயிரியர் ஃ இன்னிசை ஆர்ப்பினும் பெரிதே” (மேலது:45) என்னும் பாடல் வழி அறிய இயலும். அக்காலத்தே ஒவ்வொரு அரசர்களும் ஒரு மரத்தோடு இணைத்தே குறிக்கப்படுவர். அம் மரம் காவல் மரம் என்று சுட்டப்பட்டு அரசு ஒப்ப கருதப்படும். அதுபோல் மூவேந்தர்களின் காவல் மரங்களாக ஆத்தி, பனை, வேம்பு ஆகியன புறநானூற்றுப் பாடல்கள்(43,45) வழி அடையாளப்படுத்தப்படுகின்றன. போர்க்களத்தில் பகை அரசர்கள் அவரவர்க்குரிய காவல் மரத்தை மற்றவர் வெட்டிச் சாய்ப்பதைக் குறிக்கோளாய்க் கொள்வர். ஏனெனில் காவல் மரம் வீழ்த்தப்படுதல் என்பது உளவியல் ரீதியாக பகைவனை வலிமையிழக்கச் செய்து அவனை ஒடுக்கி அழிப்பதற்கு ஈடாகும். அத்தயை காவல் மரத்தைக் காத்து நாட்டை இயற்கைப் பேரழிவிலிருந்தும் காக்க வேண்டிய தலையாயக் கடமை அரசனுக்கு அன்று இருந்தது ஈண்டு எண்ணத்தக்கது. ஏனெனில் மழைவளம் மரத்தை நம்பியே உள்ளது. மேலும், இக்காவல் மரம் ஓர் அரசனின் வீரத்தையும் மானத்தையும் (புறம்:36) எடுத்தியம்ப வல்லது. அதற்கு ஊறு விளைப்போர் மறைமுகமாக அதற்குரிய அரசனுக்கு ஊறு விளைவித்ததற்கு ஒப்பானவராவார். இதனை பெண் கொலை புரிந்த நன்னன் வரலாற்று வழி (குறுந்: 292,73) உய்த்துணர இயலும். ஆக, காவல் மரமாவது அரசத் தன்மை மிக்கது. அத்தகைய திறம் கொண்டதாக இங்கே புன்னை காட்டப்பட்டுள்ளது.

அது போல, சங்க இலக்கியங்கள் முதல், கரு, உரிப் பொருள்கள்; பொதிந்து விளக்கிக் கூறும் பண்டைத் தமிழர் வாழ்வியல் கருவூலமாகும். இடம், சூழல், பொருளுக்கேற்ப இவற்றை இவ்விலக்கியங்கள் வகுத்துப் பேசும். பழந்தமிழர் வாழ்வு இறயற்கையோடு இயைந்தது என்பதை இவை புலப்படுத்தவல்லன. இவற்றுள் முதல்பொருளில் நிலமும் பொழுதும் அடங்குவன. இப் பொழுதானது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். மேலும், பெரும் பொழுதை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்றும,; சிறுபொழுதை மாலை, யாமம், வைகறை, ஏற்பாடு, நண்பகல் என்றும் வகைப்படுத்திக் காண்பது வழக்கம்.

இவற்றுள் இளவேனில் காலமென்பது சித்திரை வைகாசி மாதங்களைக் கொண்டது. நண்பகல் இதன் சிறுபொழுதாகும். இவ்விரு பொழுதுகளிலும் சூரியன் தன் கதிர்களைப் பரப்பி பூமியை சுட்டெரிக்கும். இவ் உயிர்க்கோளத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் தாங்கவொணா துன்பமளிக்கும் இவ் இளவேனிலை தோழியொருத்தி விரும்பியிருந்தவர்க்கு அல்லது புரியாது நல்லது புரியவல்ல என்னைப் போலவே சக தோழியாகக் கருதுமாறு தலைவியிடம் உரைப்பதை, “நயந்தார்க்கு நல்லைமன் இளவேனில் எம்போல ஃ பசந்தவர் பைதனோய் பகையெனத் தணித்து நம் ஃ இன்னுயிர் செய்யு மருந்தாகி” (பாலைக்கலி:32) என்னும் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
தவிர, மரங்களர்ந்த காடு உண்மையுரைத்து திருத்த வல்ல உறவினரைப் போல் உன் போக்கினைத் தடுக்க வல்லதாக, “மெய் கூறுங் கேளிர் போல நீ செல்லும் ஃ கானம் தகைப்பச் செலவு” (பாலைக்கலி:2) என்று பிரிவிடை ஆற்றுபவனை செலவழுங்கக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல். இது போல் தான் வாழும் நிலத்தை மானுட உறவாகக் கருதுவதும் அதற்கு எவ்வித இடையூறும் நேராதவாறு காக்க நினைப்பதும் தமிழர் மரபாக இருந்து வந்ததை, “வருபுனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் ஃ தன் பரங்குன்றத்து அடி தொட்டாய் என்பாய் ஃ கேளிர் மணலின் கெழுவும் இதுவோ” (பரி:8) என்பதில் பொய்ச்சூள் உரைப்பவனைக் கடிந்து ஷஉறவினராக விளங்கும் இம்மண் மீதான உன் அன்புரிமை இவ்வளவு தானா| வென வினா தொடுக்கிறாள் ஒருத்தி.

மண்ணும் மரமும் மனித வாழ்வில் இரண்டறக் கலந்தவை. பயன்பாடு மிக்கவை. அத்தகைய மண்ணை தாய், தந்தையராக உருவகித்துப் போற்றுவதும் (புறம்: 117), தன் எல்லா பாகங்களையும் விலங்கு மற்றும் மனித இனத்திற்கு ஈந்து வளர்ந்து செழிக்கும் மரத்தினை இனக்குழு ஒவ்வொன்றும் தமக்குரிய குலக்குறியாகக் கொண்டு தெய்வீகத்தன்மையுடன் வணங்கப் பெறும் என்பதையும், “திருமருது ஓங்கிய விரிமலர்க் காவின”; (அகம்: 36) என்னும் பாடலில் மருதமரம் வழிபாட்டிற்குரிய ஒன்றாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில், சுற்றுச்சூழலைப் பேணுவதில் மரம் இன்றியமையாத பங்கு வகிப்பதை அக்கால மாந்தர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். ஆதலால் தான், மரம் புனிதமாகக் கருதப்பட்டது. இப் புனிதமரத்தை தனித்தன்மையுடன் காப்பதில் ஒவ்வொரு குடிமகனும் சிறந்து விளங்கி மண்ணையும் மக்களையும் வளப்படுத்துதல் தம் முழுமுதற் பணியென்பதையும் உணரச் செய்தனர். இதுபோல், போர்க்களத்தில் வெற்றியை ஈடடிழத்தருவதில் முதன்மை வகிக்கும் குருதிதோய்ந்த வேலானது மற்றுமொரு குலக்குறியாக நோக்கப்படுவதை, “பருந்துபட ஃ வேத்து அமர்க் கடந்த வென்றி நல்வேல் ஃ குருதியோடு துயல்வந் தன்னநின் ஃ அரிவே யுண்கண் அமர்த்த நோக்கே” (அகம்:27) என்பதிலிருந்து உணர முடியும். தவிர, வேல் தெய்வம் இறந்தப் பொருளாக காலந்தோறும் நினைக்கப்பட்டு துதிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் ஓர் இனக்குழுவின் அடையாளமாகவும் விளங்கிவருகின்றது.
அதுபோல, மலையானது புதிர்மை நிறைந்ததாகவும், கடவுளர் குடிகொண்டிருக்கும் இடமாகவும,; அரசக்குறியீடாகவும,; காவல் அரணாகவும் காணப்படுகிறது. காவல் மரத்திற்கு ஈடாக மலை அக்காலத்தில் கருதக் காரணம் அதன் இயற்கையமைப்பும் வளமும் ஆகும். எனவே தான் தமிழ்நிலத்தை ஐவகைப்படுத்தி மலையும் அதன் வளமும் சார்ந்த பகுதிகளைக் குறிஞ்சி நிலமென்றும் அந்நிலத்திற்குரிய கடவுள் முருகப்பெருமான் என்றும் எடுத்துக் கூறுவதன் நோக்கம் மலைவளமும் மனிதர்களால் தொன்றுதொட்டு காக்கப்பட வேண்டிய ஒன்றென புலப்படும்.

“தன்கடல் பிறந்த முத்தின் ஆரமும் ஃ முனைதிரை கொடுக்கும் துப்பின் தன் மலைத் ஃ தெறல் அரும்மரபின் கடவுள் பேணி” (அகம் : 13) “அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் ஃ கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்” (அகம்: 22) முதலான பாடல்கள் மலை குலக்குறி வழிபடு பொருளாக விளங்குவதை அறிய இயலும். மேலும், மலையைப் போற்றுதல் என்பது அரச வாழ்த்தின் பாற்படும். அரசனின் பெருமை, வலிமை, அருமை போன்றவற்றை பறைசாற்றுவதாக மலை அவ் அரசனின் குலக்குறியாகக் காணப்படுகிறது.

“சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக் ஃ குணில்பாய் முரசின் இரங்கும் அருவி ஃ நாளியிரும் சிலம்பின் சீறூர் ஆய்கண் ஃ வாயில் தோன்றி வாழ்த்தி நின்று ஃ நின்னுநின் மலையும்பாட இன்னாது ஃ உகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்” (புறம்:143) என்று வையாவிக் கோப்பெரும் பேகனிடம் அவனையும் அவன் மலையையும் வாழ்த்திப்பாடிய கபிலர் அவன் நல்லூர் பரத்தையுடன் கொண்டிருக்கும் மயக்கத்தைத் தெளிவித்தும் அவன் மனைவியுடன் மீளக்கூடி வாழவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பேகன் ஆட்சி புரியும் பகுதியான திருஆவினன்குடி (பழனி)யானது தமிழ்க்கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் நிலமாதலால் மலை வாழ்த்து மக்களின் வாழும் கடவுளராகத் திகழும் மன்னனோடு இயைந்துப் பாடப்பெறுதல் என்பது உள்ளக்கிடக்கை மரபாக புலவர்களிடம் பெருகி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, மாண்டு போன மன்னனின் குலக்குறியாக விளங்கும் மலை, அது முன்னர் தம்முடன் நட்பு நலம் மற்றும் ஓம்பல் பண்பு முதலியனவற்றை நினைந்து அப்புலவர்கள் கையறு நிலை கொள்வதை, “நட்டனை மன்னோ முன்னே இனியே ஃ பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்றுநீர்வார் கண்ணேம் தொழுதுநின் பழிச்சிச் ஃ சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே” (புறம் : 113) என்றும்,

“யாணர் அறாஅ வியன்மலை யற்றே ஃ அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை ஃ பெரிய நறவில் கூர்வேல் பாரியது ஃ அருமை அறியார்” (மேலது:116) என்றும் வருத்தம் தோயக் கூறுவதிலிருந்து மலை தாம் நயந்த மன்னனின் குலக்குறி அடையாளமாக குறிப்பிடபடுவதை உணர இயலும். குலக்குறிகள் எப்போதும் எவ்வித இயற்கை மற்றும் மனித ஆக்கப் பேரிடர்களுக்கு ஆட்படாது ஓர் இனக்குழு பாதுகாப்பதற்கு பின்னால் ‘குறி நாசம் குலம் நாசம்’ எனும் நம்பிக்கை ஆழ வேரோடிக் கிடந்தது. சங்க இலக்கியப் பனுவல்களில் காணப்படும் இக் காப்புச் சிந்தனை குறித்து, தாவரம், விலங்கு, பறவை முதலிய உயிரினங்களைத் தமது குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உறுப்பினராகவோ, இயற்கை இறந்த சக்திகள் குடியிருக்கும் பொருளாகக் கருதி அவ்வியற்கைக் கூறுகளைப் புனிதத் தொகுதியாகவோ அணுகும் கண்ணோட்டங்களை இலக்கியப் பிரதிகள் வெளிப்படுகி;னறன” என்பார்
ஆ. தனஞ்செயன். இதற்கேற்ப, இவை வெறும் இலக்கியப் பனுவல்களோ, மிகைக் கற்பனைகளோ என்றெண்ணி சாதாரணமாக இவற்றைப் புறந்தள்ளி விட முடியாது. இவையனைத்தும் அக்கால மாந்தர்களின் கூரிய மதி நுட்பத்தையும் மனத் திட்பத்தையும் பிற்கால அறிவியல் உலகிற்கு எடுத்துக்காட்டும் கலங்கரை விளக்கங்களாக அமைந்தவை. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டிற்கான மூலம் சங்ககாலக் குலக்குறியியல் சிந்தையே ஆகும்.

இஃதன்றி, பழந்தமிழர் வாழ்வியல், அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளுள் களிறு முக்கிய பங்காற்றி வந்துள்ளது. உயிரியல் திரளில்; அறிவில் மேம்பட்ட சமூக விலங்காகத் திகழும் மனிதனுக்கு அடுத்தபடியாக களிறு விளங்குவதாலும் மலைக்கு ஒப்ப மிகுந்த புதிர்மை கொண்டதாக இருப்பதாலும் அரசக்குறியாக இது நோக்கப்படுகிறது. போர்க்களத்தில் பகை அரசர்களைக் கொன்று களிறேறி வருதலானது அரச வாகையைக் குறிப்பிடுவதாக உள்ளது.

“அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய” (புறம் : 126) “வடவாயின் ஃ வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை ஃ மறப்போலப் பாண்டியர் அறத்திற் காக்கும் ஃ கொற்கைஅம் பொருந்துறை முத்தின் அன்ன” (அகம் : 27) “மயங்கமர் மாறட்டு மண்வெளவி வருபவர் ஃ தயங்கிய களிற்றின் மேல் தகைகாண விடுவதோ” (பாலைக்கலி:31) என்னும் பாடல் வரிகள் வாயிலாக போரின்போது அரசனுக்குப் பேருதவியாற்றும் ஆண் யானை மனிதகுல உறவாகவும், அதனைத் திரையாகப் பெறுதலும் அதன் மேல் பெருமிதத்துடன் ஏறிவருதலும் அரச வாகையாகப் போற்றப்படுவதை அறிய முடிகிறது. மேலும், புலவர்கள் தாம் பெற்ற பரிசில்களை களிற்றின் மீது ஏற்றிவந்து தம் குடும்பத்தினருடனும் சுற்றத்தாருடனும் பகிர்ந்துண்டு சமூக மதிப்புடன் வாழ்வதைத் தம் புலமைத் திறத்திற்குத் தக்க சான்றாகக் கொள்வர். இதனை,

“நாடொறு நன்கலம் களிற்றோடு கொணர்ந்து ஃ கூடுவிளங்கு வியனகர்ப் பரிசில் முற்று அளிப்ப” (புறம்: 148) “யாம்சில ஃ அரிசி வேண்டினம் ஆகத் தான்பிற ஃவரிசை அறிதலின் தன்னும் தூக்கி ஃ இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர் ஃ பெருங்களிறு நல்கியானே” (மேலது: 140) என்னும் பாடலால் அறிய இயலும். ஆக, பரிசில் பலவற்றோடு களிறு ஈதலும் இரத்தலும் முறையே அரசர் புலவர் ஆகியோரின் கொடை உள்ளத்தையும் கவி ஆற்றலையும் உணர்த்த வல்லன. தாவர வகையில் வேம்பும் விலங்கு வகையில் களிறும் தனித்தன்மை மிக்கவை. பயன்பாட்டு முறையிலும் இவ்விரண்டும் அதிகம் மனிதனுக்கு உதவ வல்லவை. ஆதலால் தான், ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்;;, இறந்தாலும் ஆயிரம் பொன’; என்பார்கள். ஒரு யானையைப் பரிசிலாகப் பெறுவதையே பெரும்பேறாகக் கருதிவாழும் பரிசிலர்க்கு யானைக் கூட்டத்தையே உவந்து அளிப்பதை இயல்பாகக் கொண்டு விளங்கும் வேள் ஆய் அண்;டிரனின் கொடைத்திறனை, “ஆஅய் நின்னாட்டு ஃ இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ ஃ நி;ன்னுநின் மலையும் பாடி வருநர்;க்கு ஃ இன்முகம் கரவாது உவந்துநி அளித்த ஃ அண்ணல் யானை எண்ணில் கொங்கர்க் ஃ குடகடல் ஒட்டிய ஞான்றைத் ஃ தலைப் பெயர்த் திட்ட வேலினும் பலவே” (மேலது: 130) என்று ஏணி;ச்சேரி முடமோசியார் வியந்து பாராட்டுகிறார். சமூக மதிப்பை தம் குலத்திற்கு நல்கும் யானை இங்கு மனிதரை விஞ்சிய நிலைக்கு உயர்த்தப்பட்டு அண்ணல் என்று அழைக்கப்படுகிறது. அதன் மூலமாக அவ் அரசரின் உயரிய குணமும் போற்றப்படுகிறது.

முடிவாக, சங்க இலக்கியப் பிரதிகள் வெளிப்படுத்தும் குலக்குறி அடையாளங்களான புன்னை, மருத மரங்கள,; இளவேனில், காடு, மண், மலை, ஆண் யானை ஆகியன மனிதப் பண்பேற்றம் செய்யப்பட்டு நெருங்கிய மனித குல உறவாகவும், புனிதத் தன்மை மிக்கதாகவும் காணப்படுகின்றன. மேலும், இவை இயற்கைச் சூழலியத்தைப் பேணிக்காப்பதன் அவசியத்தையும் உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றன. இக்குலக் குறி அடையாளங்கள் தொன்று தொட்டு இனக்குழு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களாகவும் வாழ்வியல் நெறிமுறைகளாகவும் திகழ்ந்து வருவதை அறிய இயலும். பழந்தமிழரது இயற்கை வழிப்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு அடிப்படையாக இவை விளங்கினாலும் ஆன்மீகம் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் உருவாக பிற்காலத்தில் அடித்தளமிட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உசாத்துணை நூல்கள்
1. கலியாணிகுமார். மு. ‘குலக்குறி வழிபாடு’ தமிழியல் ஆய்வுத் தொகுப்பு, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, 1996.
2. கைலாசபதி.க. பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
3. தனஞ்செயன். ஆ. ‘பண்டைத் தமிழரின் இயற்கை பற்றிய இணைப்புச் சிந்தனைகளில் வெளிப்படும் குலக்குறி எச்சங்கள’;, சமூக விஞ்ஞானம் – காலாண்டு ஆய்விதழ் – 27.
4. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.

Series Navigation

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர்

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர்